வீடு வாங்கியதுமே, வீட்டை எப்படி எல்லாம் அழகுபடுத்தலாம் என ஆசைப்படுவதைப் போலத்தான், கார் வாங்கியதும் அதை அழகுபடுத்திப் பார்க்க ஆசை பிறக்கும். 'என் பக்கத்து வீட்டுக்காரரின் ஸ்விஃப்ட் போல இருக்கக் கூடாது’ என ஸ்விஃப்ட்டையே ஹோண்டா சிட்டியைப் போலவும், வெர்னாவை பிஎம்டபிள்யூ போலவும் அலங்கரிப்பவர்களும் உண்டு. அது, பிஎம்டபிள்யூ காராக இருந்தாலும் தனக்குப் பிடித்த வகையில் காரை கஸ்டமைஸ் செய்பவர்களும் உண்டு. காரின் வெளிப்பக்கத்தை மாற்றுவது முதல் பெர்ஃபாமென்ஸைக் கூட்டுவது வரை... ஒரு காரில் என்னவெல்லாம் செய்யலாம்?
வெளியே/EXTERIOR
01 /பெயின்ட் அடிக்கலாம் வாங்க!
மற்ற கார்களில் இருந்து உங்கள் கார் வித்தியாசமாகத் தெரிய, காரின் வண்ணத்தை மாற்றுவதே சிறந்த ஐடியா. முன்பெல்லாம் தனியாக பெயின்ட் அடித்தால், அது விரைவில் வண்ணம் மங்கி, காரையே பழசாகக் காட்டிவிடும். இப்போது ஒரிஜினல் கார் தயாரிப்பாளர்களின் பெயின்ட் ஷாப்புகளைப்போல, தனியார் பெயின்ட் ஷாப்புகளும் வந்துவிட்டன. 1 லட்சம் ரூபாய் வரை செலவழித்தால் போதும்; காரின் வண்ணத்தை மாற்றிவிடலாம். ஆனால், காரின் வண்ணத்தை மாற்றும்போது, அதை ஆர்.சி.புக்கில் பதிவு செய்ய வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
காரின் வண்ணத்தை மாற்றாமல், வினைல் ஸ்டிக்கர் மூலமும் காரின் நிறத்தை மாற்றலாம். ஆனால், இதில் என்ன பிரச்னை என்றால், சின்ன விபத்து, சிராய்ப்பு என்றால்கூட இந்த ஸ்டிக்கர் கிழிந்து பழைய வண்ணம் பல்லிளிக்கும். நீங்கள் மீண்டும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இந்த வினைல் ஸ்டிக்கருக்கு 70,000 முதல் 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
02 / பாடி கிட் வேண்டுமா?
சின்னச் சின்ன எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸ் மூலம் காரின் தோற்றத்தை மாற்ற விரும்பினால், அதற்கு ஆப்ஷன்கள் ஏராளம். பாடி கிட் அதாவது பம்ப்பர், ஃபெண்டர், ஸ்கர்ட்ஸ் மற்றும் ஸ்பாய்லர் ஆகியவற்றைப் பொருத்துவதன் மூலம் காரின் வெளித்தோற்றத்தை ஸ்போர்ட்டியாக மாற்றலாம். இதற்கு குறைந்த அளவில்தான் செலவாகும். ஸ்பாய்லர்கள் 1,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை விற்பனையாகின்றன. பம்ப்பர் மாற்ற 3,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும். அதேபோல், ஃபென்டர் மற்றும் ஸ்கர்ட்ஸ் 1,000 ரூபாய் முதல் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதுபோன்ற பாடி கிட்ஸ் பொருத்தும்போது, இதனால் காரின் எடை கூடும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறைந்த அளவுதான் என்றாலும், மைலேஜ் மற்றும் பெர்ஃபாமென்ஸில் சின்ன மாற்றங்கள் இருக்கும். அதேபோல், சைடு ஸ்கர்ட்ஸ் பொருத்தும்போது, கிரவுண்ட் கிளியரன்ஸைக் குறைத்துவிடும். இதனால், மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
03 /டெஃப்லான் கோட்டிங் தேவையா?
காரின் மேல் படியும் தூசு - மண் போன்றவற்றால், காரின் நிறம் நாளடைவில் மங்கலாகும். அதைத் தடுக்க பெயின்ட் மீது ஒரு லேமினேட் கவர் போல இருப்பதுதான் டெஃப்லான் கோட்டிங். இது வேக்ஸோ, பாலிஷோ அல்ல. இது பெயின்ட்டுக்கு மேல் ஒரு கவர் போல இருக்கும். காரின் நிறம் மங்காமல் பாதுகாத்துக்கொள்ளும்.
PTFE (Polytetrafluroethylene) கலவையான இந்த டெஃப்லானை கார் பெயின்ட்டின் மீது பூசும்போது, கார் மீது அழுக்குப் படியாமல் பார்த்துக்கொள்ளும். இது வழுக்கும் தன்மையுடையது. அதனால், அழுக்கு ஒட்டாது. இதன் வேதியியல் கலவை, காரின் நிறத்தை மங்கலாக்கச் செய்யும் புற ஊதாக் கதிர்களை (Ultra Violet Rays) கார் மீது படாமல் தடுக்கும். மேலும், துருப்பிடிக்காமலும் பார்த்துக்கொள்ளும். டெஃப்லான் கோட்டிங் செய்ய 2,000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் வரை செலவாகும்.
04 /பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ்
வெளித்தோற்றத்தைப் பொறுத்தவரை இப்போதைய டிரெண்ட், ஹெட்லைட்டுகளை மாற்றுவதுதான். HID எனச் சொல்லப்படும் 'ஹை இன்டென்சிட்டி டிஸ்சார்ஜ்’ ஹெட்லைட்டும், ப்ரொஜெக்ட்டர் ஹெட்லைட்டும்தான் இப்போது அதிக அளவில் விற்பனையாகின்றன. ஹெட்லைட் மாற்ற, குறைந்தபட்சம் 10,000 ரூபாய் செலவாகும். அதேபோல், ஹெட்லைட்டில் 'டே டைம் ரன்னிங்’ லைட்ஸ் இப்போது செம பாப்புலர். இதைப் பொருத்த பிராண்டைப் பொறுத்து 2,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை செலவாகும். இது தவிர, நியான் லைட்ஸ் இப்போது செம ஸ்டைலாக கார் கதவுகளுக்கு அடியில் பொருத்தப்படுகின்றன. கார் கதவைத் திறக்கும்போது, கார் பிராண்டின் லோகோ தரையில் அழகாகத் தெரியும். இதற்கு 2,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவாகும். இந்த ஒட்டுமொத்த விஷயங்களும் ஒரு பேக்கேஜாகவே கிடைக்கிறது. இதற்கு 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை செலவாகும்.
05 /அலாய் வீல்கள்
அலாய் வீல்கள் காருக்கு அழகான தோற்றத்தைத் தருவதுடன், கையாளுமையிலும் முன்னேற்றத்தை அளிக்கக்கூடியது. சீனத் தயாரிப்பு அலாய் வீல்களின் விலை 8,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை. இவை பார்ப்பதற்கு ஸ்டைலாக இருந்தாலும், அதிக நாள் நீடிப்பது இல்லை. பிபிஎஸ் அலாய் வீல்கள் போன்று ஐரோப்பியத் தயாரிப்புகள் கிடைக்கின்றன. நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய தரமான அலாய் வீல்கள். ஆனால், இவற்றின் விலை அதிகம். ஐந்து வீல்களின் விலை 25,000 ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது.
அலாய் வீல் பொருத்தும்போது, அது உங்கள் டயரின் அளவுக்குச் சரியாக ஃபிட் ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். தவறான அளவில் அலாய் வீல்களைப் பொருத்தும்போது, அதிர்வுகள் அதிகமாகும். மேலும், சஸ்பென்ஷனிலும் பிரச்னைகள் வரும். அலாய் வீல் பொருத்த அவ்வளவு பட்ஜெட் இல்லை என்பவர்கள், வீல் கேப் வாங்கிப் பொருத்தலாம். இதில் பெரிதாக டிசைன்களை எதிர்பார்க்க முடியாது. தரமான வீல் கேப் ஐந்து வீல்களுக்கும் சேர்த்து 400 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கிடைக்கிறது.
06 /டயர் பிரஷர் மானிட்டர்
பெட்ரோல் குறைவாக இருந்தால் எச்சரிக்கை செய்யும் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஆயில் குறைவு, இன்ஜின் கோளாறு என எல்லாவற்றையும் டிஜிட்டல் திரையில் வெளிச்சமிட்டுக் காட்டி எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம், கிட்டத்தட்ட எல்லா கார்களிலும் வந்துவிட்டது. ஆனால், எவ்வளவு விலை உயர்ந்த கார் வாங்கினாலும் டயரில் சரியான அளவு காற்று இருக்கிறதா என செக் செய்து சொல்லும் தொழில்நுட்பம் காருடன் வருவது இல்லை.
நெடுஞ்சாலையில் நடக்கும் 50 சதவிகித விபத்துகளுக்குக் காரணம், டயர் வெடிப்பு. டயர்களில் சரியான காற்று இல்லை என்றால், டயர் வெடிக்கும் ஆபத்து இருப்பதோடு, மைலேஜும் குறையும். இப்போது மார்க்கெட்டில் ஆன்போர்டு டயர் பிரஷர் மானிட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றன. 'டயர்ப்ரோப்’ எனும் நிறுவனம் இந்தியாவில் அதிக அளவில் இந்த டயர் பிரஷர் மானிட்டர்களை விற்பனை செய்துவருகிறது. நான்கு சென்ஸார் மற்றும் டேஷ்போர்டு டிஸ்ப்ளே யூனிட்டுடன் விற்பனை செய்யப்படும் இந்த கிட் வாங்கிப் பொருத்திவிட்டால், நான்கு டயர்களிலும் காற்று எவ்வளவு இருக்கிறது என்பதை, கார் ஓட்டும்போது டிஜிட்டல் டிஸ்ப்ளேவில் தொடர்ந்து காட்டிக்கொண்டே இருக்கும். ஒரு டயரில் தொடர்ந்து காற்றழுத்தம் குறைந்துகொண்டே வந்தால், ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும். டயர் பிரஷர் மானிட்டரைப் பொருத்து 8,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை செலவாகும். காசைப் பார்க்காமல் நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள், இந்த மானிட்டரை வாங்கிப் பொருத்துவது நல்லது.
ஆனால், டயர் ரொட்டேஷன் செய்யும்போது ஒவ்வொருமுறையும் இந்த சென்ஸாரை அகற்றி மீண்டும் பொருத்த வேண்டியிருக்கும் என்பது இதன் குறை.
07 /ரிவர்ஸ் பார்க்கிங்
காரில் இண்டிகேட்டர் இருப்பதுபோல, பார்க்கிங் சென்ஸார்கள் இருப்பது நிச்சயம் அவசியம். இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய அபார்ட்மென்ட் வாங்கினாலும் பார்க்கிங் இடம் மிகவும் குறைவுதான். உங்களுக்கென குறிக்கப்பட்ட இடத்தில் காரை இடிபடாமல் நிறுத்துவது மிகச் சவாலான விஷயம். பார்க்கிங் சென்ஸார்கள் இருந்தால் பிரச்னை இல்லை. தரமான ரிவர்ஸ் பார்க்கிங் சென்ஸார்கள் 2,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன. நான்கு சென்ஸார்களை பின்பக்க பம்ப்பரில் பொருத்திவிட்டால் போதும். பார்க்கிங் சென்ஸாருடனே கொடுக்கப்படும் உள்பக்க ரியர் வியூ கண்ணாடியில் இன்னும் எவ்வளவு மீட்டர் தூரம் இருக்கிறது என்ற தகவல் வருவதோடு, பீப் சத்தமும் ஒலிக்கும். பீப் சத்தம் அதிகரிக்க அதிகரிக்கப் பின் பக்கம் ஏதோ பொருள் அருகில் இருக்கிறது என்று அர்த்தம்.
ஒலி மட்டும் போதாது, ஒளியும் வேண்டும் என்பவர்கள், ரிவர்ஸ் கேமரா வாங்கிப் பொருத்தலாம். இப்போது பென்ஸ் காரில் இருக்கும் நைட் விஷன் கேமரா போன்றே வெளிமார்க்கெட்டில் கிடைக்கின்றன. 12,000 ரூபாயில் இருந்து தரமான ரிவர்ஸ் கேமரா வாங்கிப் பொருத்தலாம்.
08 /கார் லாக்
ஊருக்குக் கிளம்பும்போது, வீட்டில் இருக்கும் நகைகளை காரில் கொண்டுசெல்லும் பழக்கம் பலருக்கு உண்டு. கார் திருடுபோனால், அதோ கதிதான். மேலும், இப்போது எல்லா கார்களுமே சாலையில் பார்க்கிங் செய்யப்படுவதால், கார் செக்யூரிட்டி சிஸ்டம் மிக அவசியம். சென்ட்ரல் லாக், அலாரம் லாக்குக்கு அடுத்தபடியாக, இப்போது 'மைக்ரோ விபீபீ’(Micro VBB) எனும் புதிய செக்யூரிட்டி சிஸ்டம் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த செக்யூரிட்டி சிஸ்டம், காரின் கதவு அல்லது காரின் எந்த பாகத்தையாவது யாராவது திறக்க முற்பட்டால், உடனடியாக காரின் உரிமையாளரின் செல்போனுக்கு கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தகவல் வரும். இதன் விலை 15,000 ரூபாயில் இருந்து ஆரம்பம்.
09 /ஃப்ளிப் கீ
ரிமோட் லாக் இருந்தாலும், ஸ்டைலான ஃப்ளிப் கீ-தான் இப்போதைய ஃபேஷன். பட்டனை அழுத்தினால் சாவி வெளியே வரும் இந்த ஃப்ளிப் கீ-ஐ, எந்த கார் சாவியுடன் வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். தரமான ஃப்ளிப் கீ விலை 5,000 ரூபாயில் இருந்து ஆரம்பம்!
உள்ளே/INTERIOR
01 /சீட் கவர்
காரின் உள்ளே ஸ்டைலைவிட நம் வசதிக்கேற்ப ஆக்சஸரீஸ்களைச் சேர்ப்பதுதான் புத்திசாலித்தனம். காரின் ஒரிஜினல் சீட்கள் அழுக்காகாமல் தவிர்க்க, தரமான சீட் கவர்களை வாங்கிப் பொருத்தலாம். விலை குறைவான காட்டன் மற்றும் வெல்வெட் போன்று தோற்றமளிக்கும் சீட் கவர்கள் மார்க்கெட்டில் ஏராளமாக உள்ளன. இதில், காட்டன் சீட் கவர்கள் 1,000 - 2,000 ரூபாய் வரையும், வெல்வெட் கவர்கள் 2,000 முதல் 3,000 ரூபாய் வரையும் கிடைக்கின்றன.
காருக்குக் கம்பீரத்தைக் கொடுப்பது, லெதர் சீட்கள்தான். இந்த லெதர் சீட் கவர்களில் பல வகைகள் உண்டு. 'நாப்பா’ லெதர்தான் விலை உயர்ந்தது. இதன் மேற்புறம் இயற்கையான தோல் போன்று காணப்படும். இருக்கையில் உட்காரும்போது மிகவும் சொகுசான அனுபவத்தைக் கொடுக்கும். சின்ன ஹேட்ச்பேக் காரில் இந்த சீட் கவரைப் பொருத்த 40,000 ரூபாய் வரை செலவாகும். எஸ்யூவி கார்கள் என்றால், 75,000 ரூபாய் வரை ஆகும். தோலுக்கு உறிஞ்சும் தன்மை உண்டு என்பதால், சுற்றுப்புறத்தின் வெப்ப அளவைப் பொறுத்து, லெதர் சூடாவதும் சில்லென்று இருப்பதும் மாறுபடும். அதனால், வெயில் காலத்தில் கார் கொஞ்சம் வெயிலில் நின்றாலும் லெதர் இருக்கைகள் அதிக வெப்பத்தைக் கக்கும். மேலும், லெதர் இருக்கைகளைத் சலவை செய்து மீண்டும் பயன்படுத்த முடியாது.
கார் லெதர் சீட் கவர்களைத் தைத்துத் தர, பிரபலமான கடைகள் இருக்கின்றன. இங்கே, உங்கள் காரின் சீட்டுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் சீட் கவர்களைத் தைத்துக்கொள்ளலாம். இருக்கைகள் மட்டும் அல்லாமல் டோர் பேட், ஆர்ம் ரெஸ்ட் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கும் இந்த லெதர் கவரைப் பொருத்த முடியும். ஆனால், இதற்கு நீங்கள் கூடுதல் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
02 /டேஷ்போர்டு பெயின்ட்டிங்
காருக்கு வெளியே வண்ணத்தை மாற்றுவதுபோல, காருக்கு உள்ளேயும் பெயின்ட் அடிக்கலாம். அதாவது, காரின் டேஷ்போர்டு வண்ணத்தை மாற்றினாலே, காருக்குத் தனி லுக் கிடைத்துவிடும். இப்போது வரும் கார்களில் பெரும்பாலும் பழுப்பு வண்ணம் அல்லது கறுப்பு வண்ணத்தில்தான் டேஷ்போர்டு இருக்கும். ஆனால், ஜாகுவாரில் இருப்பது போன்று சிவப்பு வண்ணம், லம்போகினி காரில் இருப்பது போன்று நீலம் மற்றும் மஞ்சள் வண்ணம் என நீங்கள் விரும்பும் வண்ணத்துக்குப் பெயின்ட் அடிக்கலாம். இதற்கு 10,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய் வரை செலவாகும்.
03 /ஆன்டி ஸ்கிராட்ச் கிட்
சென்னை போன்ற பெரிய நகரங்களில் எந்த ஸ்கிராட்ச்சும் இல்லாமல் கார் வைத்திருப்பது, கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. முன் மற்றும் பின்பக்க பம்ப்பரின் பக்கவாட்டுப் பகுதிகள், வீல் ஆர்ச்சுகள், கதவுகள் போன்ற இடங்களில்தான் ஸ்க்ராட்ச்கள் அதிகம் ஏற்படும். அதிக ஆழம் இல்லாத ஸ்கிராட்ச்களை எளிதாகச் சரிசெய்து விடலாம். ஆனால், பெயின்ட்டையும் கிழித்துக்கொண்டு மெட்டல் பாகம் தெரியும் அளவு ஸ்கிராட்ச் ஆகி இருந்தால், அதைச் சரிசெய்ய அதிக செலவுவைக்கும். மேலும், இந்த ஸ்கிராட்ச்சை அப்படியே விட்டுவிட்டால், துருப்பிடித்துவிடும். பெரிய ஸ்கிராட்ச்களைச் சரிசெய்ய ஆன்டி ஸ்கிராட்ச் கிட் வாங்கலாம். மேலே சொன்னதுபோல ஸ்கிராட்ச் ஆகக்கூடிய இடங்களில் இதை ஒட்டிவிட்டால் போதும். இது ஒட்டியிருப்பது கண்ணுக்குத் தெரியாது. ஸ்க்ராட்ச்சுகள் மட்டும் இல்லாமல், சிறு கற்கள், தூசி ஆகியவற்றில் இருந்தும் இது பாதுகாக்கும். 'ஆட்டோகிராஃபிக்ஸ்’ என்ற பிராண்டுதான் அதிகம் கிடைக்கிறது. இதன் விலை 1,000 ரூபாயில் இருந்து ஆரம்பம்.
04 /காரைத் துடைங்கப்பா!
வெளியே பளிச்சென இருந்தால் மட்டும் போதாது. காருக்கு உள்ளே அழுக்கு, தூசி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காலில் அணியும் செருப்பு, ஷூக்களில் ஒட்டிக்கொண்டு வரும் மண், சேறுதான் காரை அதிகம் அசுத்தப்படுத்தும். காருக்குள் தூசு அதிகம் இருந்தால் அது ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்தும். வாரம் ஒருமுறை வாக்யூம் கிளீனர் கொண்டு காரைச் சுத்தப்படுத்த வேண்டும். காலணிகளில் இருந்து வரும் மண், காரின் தரை மூலைகளில் படிந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு முறையும் சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசென்று வாட்டர் வாஷ் செய்வதைவிட, அவ்வப்போது நாமே வாக்யூம் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். தரமான வாக்யூம் க்ளீனர்கள் 900 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை கிடைக்கின்றன.
05 /ஃப்ளோர் மேட்
காருக்கு உள்ளே அழுக்கு தெரியாமல் காப்பதுதான் ஃப்ளோர்மேட். விலைக்கு ஏற்ற வகையில் க்ளாத், ரப்பர் மற்றும் ஆல் வெதர் ஃப்ளோர் மேட் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
கிளாத், அதாவது துணியால் ஆன ஃப்ளோர் மேட் என்பது, மேல் பக்கம் துணியிலும் பின் பக்கம் ரப்பரிலும் இருக்கும். இதன் விலை 450 ரூபாய். அடுத்தபடியாக முழுக்க முழுக்க ரப்பர் மேட். இதன் விலை 550 ரூபாய். பார்க்க பளபளப்பாகவும், நீடித்து உழைக்கக் கூடியதாகவும் இருக்கும் மேட்டுகள் 'ஆல் வெதர் மேட்.’ இதன் விலை 750 ரூபாயில் இருந்து ஆரம்பம். இது நீரை உறிஞ்சும் தன்மைகொண்டது என்பதோடு, மிகவும் அகலமாகவும் இருக்கும். ஆனால், இங்கே சவாலே உங்கள் காருக்கு அது சரியாகப் பொருந்துகிறதா என்பதுதான். சரியாகப் பொருந்தாத ஃப்ளோர் மேட் உபயோகப்படுத்துவதால், எந்தப் பயனும் இல்லை.
தரம் குறைவான வினைல் ஃப்ளோர் மேட்-ஐ எந்தக் காலத்திலும் பயன்படுத்தாதீர்கள். இத்தகைய ஃப்ளோர் மேட் வழுக்கும் என்பதோடு, காரை ஓட்டும்போது திடீரென பிரேக் பெடல் அல்லது ஆக்ஸிலரேட்டர் பெடலில் சிக்கிக்கொண்டால் பெரிய ஆபத்தில் முடியும்.
06 /கியர் இண்டிகேட்டர்
நாம் எந்த கியரில் செல்கிறோம் என்ற குழப்பம் எல்லோருக்குமே வரும். அந்தக் குழப்பத்தைத் தீர்க்கத்தான் இந்த கியர் இண்டிகேட்டர். ஜெர்மனைச் சேர்ந்த கேஸ்லாக் எனும் நிறுவனம் கியர் இண்டிகேட்டர்களை விற்பனை செய்து வருகிறது. நாம் எந்த கியரில் சென்றுகொண்டு இருக்கிறோம் என்பதை, கியர் லீவரிலேயே உள்ள எல்சிடி டிஸ்ப்ளே மூலம் இது காட்டும். எல்லா கார்களுக்கும் பொருந்தும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும் இதன் விலை 10,000 ரூபாயில் இருந்து ஆரம்பம்.
07 ஹெட் யூனிட்
சிறந்த மியூஸிக் சிஸ்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முதலில் ஒரு நல்ல ஹெட் யூனிட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹெட் யூனிட் என்பது டிஸ்பிளே, சிடியை உள்ளே செலுத்தும் பகுதியாகும். இதில்தான் சிடி, எப்.எம் ரேடியோ, கன்ட்ரோல் வசதிகள் இருக்கும். குறைந்த விலைக்கு ஹெட் யூனிட் வேண்டும் என்றால், அதில் ரேடியோ மற்றும் பென் டிரைவ் இணைக்கும் வசதி மட்டும்தான் இருக்கும். ஒரு ஹெட் யூனிட்டின் குறைந்தபட்ச விலை 2,000 ரூபாய். சிடி சேஞ்சர், எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகள் கொண்ட மாடலின் விலை 4,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபாய்க்கும் மேல் கிடைக்கிறது.
08 /வீடியோ சிஸ்டம்
வீடியோ சிஸ்டத்தை வாங்கும் முன் அதில் டிவிடி ப்ளேயர், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், ஜிபிஎஸ் என நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்துவிட வேண்டும்.
அதன் பிறகு, அதை காரில் எந்த இடத்தில் பொருத்த வேண்டும் என முடிவு செய்யுங்கள். பொதுவாக, முன் பகுதியின் மேற்கூரையிலும் முன்பக்க இருக்கைகளின் தலைப் பகுதியின் பின் பக்கத்திலும் பொருத்துவார்கள். கூடுமானவரை முன் பக்கத்திலோ அல்லது டேஷ் போர்டிலோ வீடியோ சிஸ்டத்தைப் பொருத்துவதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், ஓட்டுநரின் கவனம் சிதறும்.
09 /ஸ்பீக்கர்
மியூஸிக் சிஸ்டத்தின் முக்கிய அம்சமே, லவுட் ஸ்பீக்கர்கள்தான். பொதுவாக, பக்கத்துக்கு ஒன்று என்ற அளவில் இரண்டு லவுட் ஸ்பீக்கர்களே போதுமானதாக இருக்கும். ஆனால், சத்தம் அதிகமாக வேண்டும் என்பதற்காக ஸ்பீக்கர்களின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகலாம். மெல்லிய சத்தம்கூட துல்லியமாகக் கேட்பதற்காக லவுட் ஸ்பீக்கர்களோடு சப்-ஊஃபர்களும் பொருத்தப்படுகின்றன. இவைதான் மியூஸிக் சிஸ்டத்தின் மதிப்பைக் கூட்டும்.
ஸ்பீக்கர் வாங்கும்போது, நீங்கள் அடிக்கடி கேட்கும் பாடல்களின் சிடியையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள். அந்தப் பாடல்களைப் புது ஸ்பீக்கர்களில் கேட்கும்போது ஸ்பீக்கர் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்க உதவும். ஸ்பீக்கர்களை எந்த இடத்தில் பொருத்தப்போகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏற்கெனவே காரில் இருக்கும் ஸ்பீக்கரின் அளவுக்கேற்ப புது ஸ்பீக்கர்களை வாங்குங்கள். அளவு அதிகமான ஸ்பீக்கரைக் கதவில் பொருத்தும்போது, பவர் விண்டோ கண்ணாடிகளை இயக்குவதில் பிரச்னை ஏற்படும். உங்கள் காருக்குள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, எத்தனை சப்ஊஃபர்கள் தேவை என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
குறைவான விலையுடன் சின்ன அளவிலான கோக்ஸியல் (Coaxial) ஸ்பீக்கர்களை காரில் பொருத்துவது சுலபம். அதேசமயம், இதில் சத்தம் அதிகமாகக் கேட்காது. ஸ்பீக்கர்களை டேஷ் போர்டு, கதவுகள், பூட் ஆகியவற்றில் பொருத்த வேண்டும்.
10 /ஆம்ப்ளிஃபயர்ஸ்
ஆம்ப்ளிஃபயரின் பணியே, குறைந்த அளவில் வரும் சத்தத்தை அதிக அளவாக்கி ஸ்பீக்கர்களுக்குத் தருவதுதான். 20 வாட்டில் ஆரம்பித்து 1000 வாட் வரை ஆம்ப்ளிஃபயர்கள் இருக்கின்றன. இதன் விலையும் திறனுக்கேற்ப சில ஆயிரங்களில் இருந்து பல ஆயிரங்களுக்கு அதிகரிக்கும். ஆம்ப்ளிஃபயரின் அளவு, எடை ஆகியவற்றை வைத்தே அதன் தரத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். தரமான ஆம்ப்ளிஃபயர்கள் எடை அதிகமாகவும் அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.
முக்கியமாக, இவற்றைப் பொருத்தும்போது தரமான ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும். மியூஸிக் சிஸ்டம், ஸ்பீக்கர்கள் பொருத்தும்போது, காரின் அழகு குலையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சென்னையில் டெக்னோகிராட், மெட்டல் எஃபெக்ட் போன்ற பிரபலமான கடைகள் மியூஸிக் சிஸ்டம் பொருத்துவதில் சிறந்து விளங்குகின்றன!
11 /ஹார்ன்கள்
பெரும்பாலும், இன்று விற்பனையாகும் சில கார்களில், பேஸ் வேரியன்ட் மாடலில் ரொம்பவே வீக்கான ஹார்ன்தான் கொடுத்திருப்பார்கள். ஹார்னை வைத்தே நம்மால் பின்னே வருவது பஸ்ஸா அல்லது ஆட்டோவா எனக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், இது போல சிங்கிள் ஹார்ன் கொண்ட கார்கள் ஹார்ன் அடித்தால், அது ஒரு கார் ஹார்னுக்கான அம்சங்களுடன் இல்லாமல், ரொம்பவே சிம்பிளாக இருக்கும். இதற்கு மாற்றாக ஆஃப்டர் மார்க்கெட் ஹார்ன்கள் நிறைய கிடைக்கின்றன. ஹெல்லா, பாஷ், ரூட்ஸ், மிண்டா என நிறையத் தயாரிப்புகள் உள்ளன. ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன் கார்களின் டிரேட் மார்க் ஹார்னான 'ட்ரம்பெட்’ வகை ஹார்ன்கள் மிகப் பெரிய ஹிட். ஹேட்ச்பேக் கார்களுக்கான ஹார்ன் 700-900 ரூபாய் வரையும், செடான் கார்களுக்கான ஹார்ன் 700-1,500 ரூபாய் வரையிலும், அதிக ஒலி எழுப்பக்கூடிய எஸ்யூவி கார் ஹார்ன்கள் 2,000- 2,500 ரூபாய் வரையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
12 /நம்பர் பிளேட்
ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்தான் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு வந்துவிட்டாலும், இன்னும் பல மாநிலங்களில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், ஸ்டைலுக்காக இப்போது பலரும் ஹை-செக்யூரிட்டி நம்பர் பிளேட்களைப் போலவே காட்சியளிக்கும் நம்பர் பிளேட்டை விரும்பிப் பொருத்துகின்றனர். இதன் விலை 1,100 ரூபாய் முதல் ஆரம்பம்.
13 /கார் செல்போன் மவுன்ட்
ஆண்ட்ராய்ட் செல்போன்கள் தாராளமாகவும் விலை குறைவாகவும் இப்போது கிடைப்பதால், அதில் உள்ள கூகுள் மேப்ஸ் அப்ளிகேஷனை நேவிகேஷனுக்காகப் பலரும் பயன்படுத்துகிறார்கள். தனியாக ஒரு நேவிகேஷன் சிஸ்டத்தை வாங்குவதைவிட இது விலை குறைவானது என்பதோடு, நம்பகத்தன்மை வாய்ந்தது. ஆனால், மேப்ஸைத் தெள்ளத் தெளிவாகப் பார்க்க செல்போன் மவுன்ட் மிக அவசியம். இவை மார்க்கெட்டில் பல டிசைன்களில் நிறைய கிடைக்கின்றன. விலை குறைவாக இருக்கிறது என்று தரம் குறைந்த பிளாஸ்டிக்குகள் கொண்ட மவுன்ட் வாங்காதீர்கள். இதில் போனைப் பொருத்திவிட்டு ஓட்டும்போது, சின்ன மேடு பள்ளமாக இருந்தாலும் அதிர்வில் உடைந்துவிடும். விலை உயர்வான, தரத்தில் சிறந்த நல்ல செல்போன் மவுன்ட்டின் விலை 1,000 ரூபாயில் துவங்கி, 6,000 ரூபாய் வரை கிடைக்கிறது.
14 /செல்போன் சார்ஜர்/இன்வெர்ட்டர்
நேவிகேஷன், ப்ளூ-டூத் எனப் பல வசதிகளை இப்போது காரில் செல்லும்போது பயன்படுத்துவதால், மிக வேகமாக சார்ஜ் குறையும். இதைச் சரிக்கட்ட நமக்கு இருக்கும் ஒரே வழி, காரில் இருக்கும் 12V பவர் சாக்கெட் வழியாக யூஎஸ்பி சார்ஜர் மூலம்போனை சார்ஜ் செய்வதே. மிகச் சிறிய சிங்கிள் பாயின்ட் சார்ஜரில் இருந்து எந்த வகையான போனையும், டேப்ளெட்டையும் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய மல்ட்டி பின் சார்ஜர்கள் வரை விற்பனையில் இருக்கிறது. லேப்டாப் போன்றவற்றை சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், அதற்கென இன்வெர்ட்டர்களும் விற்பனையில் இருக்கின்றன. இதில் முக்கியமான விஷயம், மிகவும் விலை குறைந்த, தரத்தில் மோசமான தயாரிப்புகள் நிறையக் கிடைப்பதுதான். இவற்றின் சார்ஜிங் பாயின்ட்கள் மிக எளிதாக உடைந்துவிடும். எனவே, ஓரளவுக்குச் செலவு செய்து தரமான சார்ஜரையே வாங்கிப் பயன்படுத்துங்கள். கேப்டேஸ், பிளாக் கேட், ட்ராபிகூல் போன்ற பிராண்டுகள் உள்ளன. இவை 600 ரூபாயில் துவங்கி 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
15/கார் பெர்ஃப்யூம்
ஏ.சி காரில் சில்லென்ற குளிரின் இடையே நறுமணம் பரப்பும் பெர்ஃப்யூம்கள் விதவிதமாக இருக்கின்றன. ஏ.சி கன்ஸோலில் பொருத்தக்கூடியது, டேஷ் போர்டில் வைப்பது, ஸ்பிரே போலத் தெளிக்கக்கூடியது, கயிறு கட்டித் தொங்கவிடுவது எனப் பல வடிவங்களில் வருகின்றன.
ஆம்பி ப்யூர் எனும் நிறுவனம் கார் ஏ.சி கன்ஸோலில் பொருத்தும் பெர்ஃப்யூம்களைத் தயாரிக்கிறது. இதன் விலை ரூ.165. இதன் ரீஃபில் விலை ரூ.99. சுமார் ஒன்றரை மாதம் வரை இது மணம் பரப்பும்.
டேஷ் போர்டில் வைத்துப் பயன்படுத்தக் கூடிய பெர்ஃப்யூம், ஏ.சி-ஐ இயக்கியவுடன் குளிர்ச்சிக்கு ஏற்ப, கார் முழுவதும் வாசனையைப் பரப்பும். இதில், ஜப்பான், சீனத் தயாரிப்புகள் பிரபலம். சீனத் தயாரிப்புகளாக இருந்தால், 100 ரூபாய்க்கே கிடைக்கும். இதில், தரமான ஜப்பானிய பெர்ஃப்யூம்களின் விலை ரூ.400 முதல் ஆரம்பமாகிறது. ஸ்ப்ரே வகை பெர்ஃப்யூம்கள், ரூம் ஃப்ரெஷ்னர் வகையைச் சார்ந்தவை. இவை 50 ரூபாய் முதல் கிடைக்கின்றன. பெர்ஃப்யூம்களில் தற்போது புதுமையான வகை, ஹேங்கிங் பெர்ஃப்யூம்தான். பஞ்சைப் போல இருக்கும் இந்த வகை பெர்ஃபியூம்களின் மணம், ஒரு மாதம் வரை நீடிக்கும். இதன் விலை 150 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது.
16 /மினி ஃப்ரிட்ஜ்
கார்களுக்கான மினி ஃபிரிட்ஜ் இப்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதற்குத் தேவையான மின்சக்தி, காரிலிருக்கும் பவர் சாக்கெட்டில் இருந்து எடுக்கலாம். குறைவான மின் சக்தியே இதற்குப் போதுமானது. 21 லிட்டர் அளவுகொண்ட ஃபிரிஜ் விலை ரூ.7,500.
17/அயான் ஜெனரேட்டர்
ஹாங்காங் நிறுவனமான ஷார்ப் நிறுவனம், போர்ட்டபிள் அயான் ஜெனரேட்டரை விற்பனை செய்கிறது. இதை காருக்குள் வைத்துவிட்டால் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, காளான் போன்ற நுண்ணுயிர்களைக் கொன்றுவிடும். அலர்ஜியால் சிரமப்படுபவர்களின் கார்களில் நிச்சயம் இருக்க வேண்டிய சாதனம் இது. இதன் விலை 4,200 ரூபாய்.
18 /ஆன்டெனா
ரேடியோ கேட்பதற்கு மட்டும்தான் ஆன்டெனாவின் உதவி தேவை என்பது போய், இப்போது அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது. காரில் இருக்கும் கம்பெனி ஃபிட்டிங் ஆன்டெனா பிடிக்காதவர்கள், காரின் தோற்றத்துக்கு ஏற்றவாறு, கூடுதல் அழகு சேர்க்கும் ஆன்டெனாவை வெளிமார்க்கெட்டில் வாங்கிப் பொருத்தலாம்.
வெளிமார்க்கெட்டில் விதவிதமான ஆன்டெனாக்கள் கிடைக்கின்றன. 'மோட்டாரைஸ்டு ஆன்டெனா’ என்றால், காரை ஸ்டார்ட் செய்ததும் தானாகவே மோட்டார் மூலம் அது நீண்டுகொள்ளும். 'கிளாஸ் ஸ்டிக்கிங் ஆன்டெனா’ என்பது காரின் பின்பக்கக் கண்ணாடியில் ஸ்டிக்கர் போன்று ஒட்டப்படுபவை. ஆனால், பார்வைக்கு இது ஆன்டெனா மாதிரி தெரியாது. அதேபோல், மீனின் வால் பகுதி போன்று சின்னதாக காரின் கூரையில் இருக்கும் 'ஃபின் ஆன்டெனா’ வின் விலை 1,000 ரூபாய் துவங்கி 4,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
19 /வுட் ஃபினிஷ்
கார் வாங்கும்போது பிளாஸ்டிக்கால் ஆன டேஷ் போர்டு நம் ரசனைக்குச் சரிப்பட்டுவராமல் இருந்தால், கவலைபடத் தேவை இல்லை. சொகுசு கார்களில் இருக்கும் 'வுட் ஃபினிஷ்’ அதாவது, மர வேலைப்பாடுகளை, நமக்குக் கட்டுபடியாகிற விலையில் காரின் டேஷ் போர்டுக்குக் கொண்டுவர முடியும்.
ஸ்டிக்கர் போல இருக்கும் 'ஸ்டிக் டைப் வுட் ஃபினிஷ்’ இப்போது பரவலாகக் கிடைக்கிறது. விலை, 1,000 ரூபாயில் துவங்கி காரின் டேஷ் போர்டு அளவுக்குத் தகுந்தது போல மாறும். இதுவே மொத்த பேனலையும் மாற்றுவதாக இருந்தால், 3,500 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை செலவாகும்.
20 /ஸ்டைல் ஸ்டீயரிங்
ஸ்டீயரிங் வீல் மாடிஃபிகேஷன் இப்போது அதிக அளவில் செய்யப்பட்டுவருகிறது. ஃபார்முலா-1 கார்களில் இருப்பது போன்ற ஸ்டைலான ஸ்டீயரிங் வீல்கள் இப்போது விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், ஸ்டீயரிங் வீலை மாற்றுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. காரின் ஒரிஜினல் ஸ்டீயரிங்கைக் கழற்றிவிட்டு அதற்கான இடத்தில் சரியாகப் பொருந்தக்கூடிய ஸ்டீயரிங் வீலை மட்டுமே பொருத்த வேண்டும். தவறான சைஸ் ஸ்டீயரிங் வீலைப் பொருத்தினால், காரின் ஓட்டுதல் தரமும் கையாளுமையும் முழுவதுமாகப் பாதிக்கும். சின்ன சைஸ் ஸ்டீயரிங் வீல்கள் ஸ்போர்ட்டியாக இருக்கும் என்பதோடு, பிடித்து ஓட்டுவதற்கும் மிக வசதியாக இருக்கும். ஆனால், நீங்கள் நீண்ட தூரம் காரைத் தொடர்ந்து ஓட்டினால், இந்த சின்ன சைஸ் ஸ்டீயரிங் வீல் கைகளுக்கு வலியை ஏற்படுத்தும். பார்க்கிங் செய்வதும் சிரமமாக இருக்கும். மோமோ, ஸ்பார்க்கோ, ஓ.எம்.பி உள்ளிட்ட தரமான ஸ்டீயரிங் வீல் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இவற்றின் விலை 12,000 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
பெர்ஃபாமென்ஸ்/PERFORMANCE
காருக்கு வெளியேயும், உள்ளேயும் செய்யும் மாடிஃபிகேஷன்களை விட, இன்ஜினில் செய்யும் மாடிஃபிகேஷன் காரின் பெர்ஃபாமென்ஸை மாற்றிவிடும். இது மிகவும் சவாலானது என்பதோடு, அதிக செலவு வைக்கக்கூடிய மாடிஃபிகேஷன்.
மிகச் சிறந்த சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே இன்ஜின் மாடிஃபிகேஷன் செய்ய வேண்டும். உங்கள் காரின் இன்ஜின் சக்தி 75 bhp என்றால், அதை 100 bhp ஆக மாற்ற முடியும்.
01 /ட்யூனிங் பாக்ஸ்
ட்யூனிங் பாக்ஸ் என்பது இன்ஜின் மற்றும் எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டுக்கு இடையே வைக்கப்படுவது. இதை ஆன் செய்து ஆஃப் செய்து பயன்படுத்தலாம். ட்யூனிங் பாக்ஸ் அல்லது பவர் பாக்ஸ் என்பது விலை குறைவானது என்பதோடு, தேவையில்லை என்றால், எளிதில் அகற்றிவிடலாம். ட்யூனிங் பாக்ஸைப் பொருத்துவதால், காரின் வேகம் அதிகரிக்கும். இதை 0-100 வேகத்தை டெஸ்ட் செய்தே தெரிந்துகொள்ளலாம். தரமான ட்யூனிங் பாக்ஸுகள் 15,000 ரூபாய் முதல் 45,000 ரூபாய் வரை விற்பனையாகின்றன.
02 /இசியூ ரீ-மேப்
இசியூ ரீ-மேப் மிகவும் டெக்னிக்கலான விஷயம். இன்ஜின் ரீ-மேப் என்பது எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்டைத் திரும்பவும் ப்ரோகிராம் செய்வது. டெக்னிக்கல் விஷயங்களில் தேர்ந்த சர்வீஸ் சென்டர்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும். இன்ஜினை ரீ-மேப் செய்வதன் மூலம் 100 bhp சக்திகொண்ட காரை 125bhp சக்திகொண்டதாக மாற்ற முடியும். ஆனால், சக்தி அதிகரித்தால், மைலேஜ் குறையும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஹை-ரெவ், பீட்ஸ், டார்க் ஆட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் இதைச் செய்கின்றன. இதற்கு 50,000 ரூபாய் வரை செலவாகும்.
04 /பிரேக்
இன்ஜினின் பவரை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்றதுபோல பிரேக்கையும் மாற்ற வேண்டும். கம்பெனி பிரேக்ஸ் என்பது காரின் ஒரிஜினல் பவருக்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கும். தரமான பிரேக் டிஸ்க் மற்றும் பிரேக் பேடுகளை மாற்றுவதற்கு 50,000 ரூபாய் வரை செலவாகும்.
06 /ஏர் ஃபில்ட்டர்
ஏர் ஃபில்ட்டரைப் பொறுத்தவரை, இன்ஜினில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியது இல்லை. காரிலுள்ள ஏர் ஃபில்ட்டரை எடுத்துவிட்டு, இதைப் பொருத்தினால் போதும். இது போன்ற பெர்ஃபாமென்ஸ் ஏர் ஃபில்ட்டர்களின் விலை 2,000 ரூபாயில் இருந்து 7,000 ரூபாய் வரை ஆகும். இதைப் பொருத்துவதன் மூலம் இன்ஜினின் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.
03 /டர்போ சார்ஜர்
டீசல் இன்ஜின் என்றால், டர்போ சார்ஜரைப் பொருத்தலாம். டர்போ சார்ஜர் என்பது, கூடுதலாகக் காற்றை அழுத்தத்துடன் இன்ஜினுக்குள் செலுத்தி, இன்ஜின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். டர்போ சார்ஜரைப் பொருத்தும்போது இசியூ எக்ஸ்ட்ரா பவர் பூஸ்ட்டைத் தாங்கும் திறன் கொண்டதா, இன்ஜெக்டர்கள் அதற்கேற்ற டீசலைக் கடத்துமா என்பதை எல்லாம் சோதித்துவிட்டுத்தான் டர்போ சார்ஜரைப் பொருத்த வேண்டும்.
டர்போ சார்ஜர்களைப் பொருத்தும்போது குறிப்பிட்ட இடைவேளைகளில் இன்ஜின் ஆயிலை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இன்ஜின் ஆயில் குறைந்துவிட்டால், அது ஒட்டுமொத்த இன்ஜின் செயல்பாட்டையே குலைத்துவிடும். அதேபோல், ஒவ்வொரு முறையும் காரை ஸ்டார்ட் செய்துவிட்டு இரண்டு நிமிடங்கள் ஐடிலிங்கில் வைத்துவிட்டுத்தான் ஓட்ட ஆரம்பிக்க வேண்டும். டர்போ சார்ஜரைப் பொருத்த, 75,000 ரூபாயில் இருந்து 1.50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
05 /சஸ்பென்ஷன்
ஃபன் டு டிரைவ் வேண்டும் என்பவர்கள், சஸ்பென்ஷனில் சில வேலைகளைச் செய்யலாம். இப்போது எல்லா கார்களுமே அலுங்கல், குலுங்கல் இல்லாத பயணத்துக்கு ஏற்ற வகையில் சாஃப்ட் சஸ்பென்ஷன் செட்-அப் இருக்கும். வளைத்து, நெளித்து ஓட்ட வேண்டும் என்றால், ஸ்டிஃப் சஸ்பென்ஷன் செட்-அப் இருக்க வேண்டும். அதே சமயம் ரொம்பவும் ஸ்டிப்ஃபாக இருந்துவிட்டால், மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, மிகவும் இம்சையாக இருக்கும். முழுமையாக சஸ்பென்ஷன் செட்-அப் மாற்றி அமைக்க 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
07 /எக்ஸாஸ்ட் சிஸ்டம்
காருக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதற்குக் காரணம், எக்ஸாஸ்ட்தான். இந்த எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் பல வகைகள் உள்ளன. இது 7,500 ரூபாயில் இருந்து 40,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸை அதிகரிக்கச் செய்யும்.
08 /சிந்தெட்டிக் ஆயில்
சிந்தெட்டிக் ஆயில் சாதாரண மினரல் ஆயில்களைவிட சக்தி வாய்ந்தவை. சிந்தெட்டிக் ஆயில் இன்ஜின் உராய்வை பெருமளவு குறைப்பதால், பெர்ஃபாமென்ஸ் அதிகரிக்கும். சிந்தெட்டிக் ஆயில் polyalphaolefin உள்ளிட்ட பல வேதியியல் கலவையை உள்ளடக்கியதாகும். சிந்தெட்டிக் ஆயிலால் இன்ஜின் ஆயுள்காலமும் அதிகரிக்கும். கேஸ்ட்ரால், மொபில், ஷெல் என பல பிராண்டுகளில் சிந்தெட்டிக் ஆயில் விற்பனை செய்யப்படுகின்றன. கார் வாங்கிய உடனே சிந்தெட்டிக் ஆயிலுக்கு மாறுவது நல்லது அல்ல. 10,000 கி.மீ தாண்டியதும் மாற்றலாம். உங்கள் கார் யூஸர் மேனுவல் எந்த அளவுகொண்ட ஆயிலை நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே அளவு ஆயிலைத்தான் மாற்ற வேண்டும். 500 ரூபாயில் இருந்து 1,500 ரூபாய் வரை சிந்தெட்டிக் ஆயில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
No comments:
Post a Comment