ஃபெராரியாக இருந்தாலும் சரி, நானோவாக இருந்தாலும் சரி. கார் வாங்க டீலரிடம்தான் செல்ல வேண்டும். வாடிக்கையாளர்களையும், கார் நிறுவனங்களையும் இணைக்கும் இணைப்பாளர்கள் டீலர்கள்தான். ஒவ்வொரு டீலர் ஷோரூமும் எப்படி இயங்குகிறது? என்னென்ன மாதிரியான வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் வருகிறார்கள்? எந்தெந்த கார்கள் அதிகமாக விற்பனையாகின்றன என அத்தனை
விஷயங்களையும் அறிந்துகொள்ள... மாதா மாதம் தமிழகம் முழுக்க ஒவ்வொரு டீலர் பாயின்ட்டையும் சுற்றுவது என முடிவெடுத்திருக்கிறோம். அதில், முதலாவதாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மாருதியின் கார்ஸ் இந்தியா (க்ரஸென்ட் ஆட்டோ ரிப்பேர்ஸ் அண்டு சர்வீஸஸ்) என்ற டீலரிடம் இருந்து கணக்கைத் துவக்கினோம். அங்கு திரட்டிய தகவல்கள் இதோ...
இந்த ஷோரூமில் மொத்தம் 30 பேர் வேலை செய்கிறார்கள்.
ஷோரூமின் மொத்தப் பரப்பளவு 6000 சதுர அடி.
ஷோரூமில் பொதுவாகக் காட்சிக்கு வைக்கப்படும் கார்களைத் தவிர, மற்ற கார்களை வைத்திருப்பது இல்லை. டெலிவரிக்கு ஏற்றபடி யார்டில் இருந்துதான் கார்களைக் கொண்டு வருகிறார்கள்.
கார் வாங்கும் எண்ணத்தில் ஷோரூமுக்கு வருபவர்கள், பொதுவாகவே குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன்தான் வருகிறார்கள். இதில் குடும்பத் தலைவர் எதிர்பார்ப்பது மைலேஜ் மற்றும் விலைக்கேற்ற தரம். குடும்பத் தலைவி எதிர்பார்ப்பதோ தனக்குப் பிடித்த நிறத்தில் கார் இருக்கிறதா என்பதும், காரின் உள்பக்கம் அழகாக இருக்கிறதா என்பதும்தான். இளைஞர்களுக்கு இன்ஜின் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும்.
டைம்-பாஸிங்குக்காக ஷோரூம் வருபவர்கள், மழைக்காக ஒதுங்குபவர்கள் என சில ஏடாகூட பார்ட்டிகளும் உண்டு. பேசுவதை வைத்தே உண்மையான வாடிக்கையாளர்களுக்கும், டைம் - பாஸ் பார்ட்டிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள்.
வார இறுதி நாட்களில்தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது. சனிக்கிழமை மாலையும் ஞாயிறு காலையும் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகிறார்கள்.
மாருதி டீலர் என்பதால், சிறிய கார் வாங்க வருபவர்களின் எண்ணிக்கைதான் 95 சதவிகிதம். கிட்டத்தட்ட ஒரே விலையில் மாருதியில் நான்கைந்து கார்கள் இருப்பதால், எல்லா கார்களைப் பற்றிய விபரங்களையும் வாடிக்கையாளர்கள் கேட்கிறார்கள்.
ஷோரூமுக்கு வரும் முதல் நாளிலேயே காரை யாரும் புக் செய்துவிடுவது கிடையாது. இரண்டு மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரம் கழித்து வந்து புக் செய்பவர்கள்தான் அதிகம்.
மாருதி கார்களை வாங்குபவர்கள் பொதுவாக மிடில் கிளாஸ் மக்கள்தான் என்பதால், ஏறத்தாழ 75 சதவிகித கார்கள் ஃபைனான்ஸ் மூலமாகத்தான் விற்பனைஆகிறது.
ஃபைனான்ஸ் விஷயங்களை முடித்துவைக்க எல்லா வங்கிகளோடும் தொடர்பில் இருக்கும் ஒரு ஆலோசகர் ஷோரூமிலேயே இருக்கிறார்.
கடன் வழங்க தனியார் வங்கிகள் பொதுவாக 4 வேலை நாட்களும், அரசு வங்கிகள் 8 வேலை நாட்களும் எடுத்துக்கொள்கின்றன.
'ஏற்கெனவே வீட்டில் ஒரு பெரிய கார் வைத்திருக்கிறேன். குழந்தையைப் பள்ளியில் விடுவதற்குத்தான் இந்த கார்' என்பவர்கள்தான் முழுப் பணத்தைக் கொடுத்து கார் வாங்குகிறார்கள்.
ரிட்ஸ் பெட்ரோல், ஸ்விஃப்ட் டிசையர் போன்ற கார்களுக்கு காத்திருப்பு நேரம் இருப்பதால், எந்தெந்த காருக்கு எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் ஒட்டி இருக்கிறார்கள்.
டெலிவரி பூஜை முடிந்தவுடன் ஷோரூம் ஆட்களே புகைப்படம் எடுத்து அதை வாடிக்கையாளர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பிவைத்துவிடுகிறார்கள். பூஜையை விரும்பாதவர்களுக்கு வெறும் போட்டோதான்!
கார்ஸ் இந்தியா ஷோரூமில் ஆல்ட்டோ, வேகன்-ஆர், ஸ்விஃப்ட், ரிட்ஸ், ஸ்விஃப்ட் டிசையர் ஆகிய கார்களுக்குத்தான் டிமாண்ட் அதிகம்.
ஸ்விஃப்ட், ரிட்ஸ் போன்ற கார்களைவிட ஷோரூமில் ஸ்டாக் உள்ள எஸ்எக்ஸ் 4, வேகன்- ஆர், ஆல்ட்டோ போன்ற கார்களை விற்றால்தான் விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அதிக ஊக்கத் தொகை கிடைக்கும்.
வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களுக்கு மவுசு அதிகம். கீறல் விழுந்தாலும் தெரியாது என்பதால், சில்வர் நிற கார்களும் அதிக அளவில் விற்பனையாகின்றன.
மாருதி ஷோரூமிலேயே ஆக்ஸசரீஸ் நிறைய இருந்தாலும் மியூஸிக் சிஸ்டம் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் ஆகியவை மட்டும்தான் அதிகமாக விற்பனையாகின்றன.
கார் தள்ளுபடி பற்றிய விபரங்கள் நாளிதழ்களில் விளம்பரமாக வந்துவிடுவதால், வாடிக்கையாளர்கள் அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொண்டுதான் ஷோரூம் வருகிறார்கள். தள்ளுபடிக்காக மட்டுமே யாரும் காரை வாங்குவதில்லை.
கார் பார்க்க வரும் எல்லோரும் டெஸ்ட் டிரைவ் கேட்பதும் இல்லை. எல்லோருக்கும் டெஸ்ட் டிரைவ் கொடுக்கப்படுவதும் இல்லை. உண்மையிலேயே கார் வாங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்குத்தான் டெஸ்ட் டிரைவ் கொடுக்கப்படுகிறது.
விசேஷ நாட்களில் அதிகபட்சம் 20 கார்கள் வரை டெலிவரி ஆகின்றன!
No comments:
Post a Comment