கோவையைச் சேர்ந்த நரசிம்மராஜு, சமீபத்தில் நகை வாங்க பஜாருக்குப் போனார். ஒரு கடையில் தங்கம் விலையை விசாரித்தவர், எதற்கும் இன்னொரு கடையிலும் விசாரிக்கலாமே என்று நினைத்து அடுத்தக் கடைக்குப் போனார். முதல் கடை விலைக்கும் இரண்டாம் கடை விலைக்கும் நிறைய வித்தியாசம் தெரியவே, இன்னும் இரண்டு கடைகளில் நுழைந்து விலை கேட்டார். நான்கு கடைகளிலும் நான்கு விதமான விலை இருக்க, தலை சுற்றிப் போனவர் நகை ஏதும் வாங்காமலே வீட்டுக்குத் திரும்பிவிட்டார். இப்போது அவர் கேட்கும் ஒரே கேள்வி, தங்கம் விலை கடைக்கு கடை வித்தியாசப்படுகிறதே, ஏன்?
நரசிம்மராஜுக்கு மட்டுமல்ல, நாலு கடை ஏறியிறங்கி நகை வாங்கிய அனுபவம் கொண்ட பலருக்கும் இதே கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விக்கு என்ன பதில்? கடைக்கு கடை விலை வித்தியாசப்படுவதற்கான காரணம்தான் என்ன? என்பதை அறிய களத்தில் இறங்கினோம்.
முதலில் செப்டம்பர் 7-ம் தேதியன்று சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து பல தங்க நகைக் கடைகளில் ஏறியிறங்கி, அன்றைய தினத்தில் ஒரு கிராம் தங்கத்தை என்ன விலைக்கு விற்கிறார்கள் என்கிற தகவலைச் சேகரித்தோம். அந்த வித்தியாசத்தை நீங்களே கொஞ்சம் பாருங்களேன்!
சென்னை: 2,596 ரூபாய்; 2,536 ரூபாய்; 2,516 ரூபாய்; 2,596 ரூபாய்; 2,596 ரூபாய்.
கோவை: 2,598 ரூபாய்; 2,516 ரூபாய்; 2,576 ரூபாய்.
மதுரை: 2,591 ரூபாய்; 2,591 ரூபாய்; 2,566 ரூபாய்;2,572 ரூபாய்.
திருச்சி: 2,591 ரூபாய்; 2,591 ரூபாய்; 2,596 ரூபாய்; 2,600 ரூபாய்.
சர்வதேச அளவில் தங்கத்தை ஒரே விலைக்குதான் விற்கிறார்கள். ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கான (சுமார் 31 கிராம்) விலை அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஒன்று தான். அதே விலைதான் இந்தியாவிலும். உண்மை இப்படி இருக்க, கடைக்கு கடை தங்கம் விலை வித்தியாசப்படுவது ஏன் என சில நகைக் கடைக்காரர்களிடம் கேட்டோம். அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ:
லண்டன் புல்லியன் மார்க்கெட்!
உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது லண்டன் புல்லியன் மார்க்கெட்தான். இங்குதான் முந்தைய நாட்களின் தங்கத்தின் டிமாண்ட், சப்ளையைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு நிர்ணயிக்கும் விலையைத்தான் உலகெங்கும் தங்கத்தின் பெஞ்ச்மார்க் விலையாகக் கொண்டு விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள்.
பாம்பே புல்லியன் அசோசியேஷன்!
தங்கத்தை இறக்குமதி செய்யும்போது இறக்குமதி வரி செலுத்த வேண்டும். இந்த வரி மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. குஜராத்தில் தங்கத்தை இறக்குமதி செய்ய எந்த வரியும் கிடையாது. இந்த வரி வித்தியாசத்திற்கேற்ப தங்கம் விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசப்படுகிறது. மும்பையில், பாம்பே புல்லியன் அசோசியேஷன் என்கிற அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு தீர்மானிக்கும் விலையைத்தான் இந்தியா முழுக்க உள்ள வியாபாரிகள் பின்பற்றுகின்றனர்.
ஏன் இந்த விலை வித்தியாசம்?
பொதுவாக, நகை வியாபாரிகள் எப்போதும் தங்கத்தை வாங்கி ஸ்டாக் வைத்திருப்பார்கள். இப்படி வாங்கிய தங்கம் குறைந்த விலைக்கு வாங்கியிருந்து, அதை அதிக விலைக்கு வாடிக்கையாளருக்கு விற்கும்போது விலையைக் கொஞ்சம் குறைத்து விற்க வாய்ப்புண்டு. ஆனால், அதிக விலைக்கு தங்கத்தை வாங்கி ஸ்டாக் செய்திருந்தால், விலையைக் குறைக்க வாய்ப்பே இல்லை. பல்வேறு விலைகளில் தங்கத்தை நகைக் கடைக் காரர்கள் வாங்கி இருப்பதால் விலை வித்தியாசப்படுகிறது.
சேதாரமும் செய்கூலியும்!
எந்த ஒரு பொருளையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்றாலும், அதற்கான கூலியைத் தரவேண்டும். டிசைனுக்கு ஏற்ப, நகை செய்பவர்களின் திறமைக்கேற்ப கூலி மாறுபடும். நகை செய்வது நுட்பமான வேலை என்பதால் சேதாரம் ஏற்படுவதையும் தடுக்க முடியாது. டிசைனுக்கேற்பவும் நகை செய்பவர்களின் திறமைக்கு ஏற்பவும் இந்த சேதாரம் மாறுபடும். இதுதவிர, சர்வீஸ் சார்ஜ் என்கிற பெயரில் ஒவ்வொரு கடையும் ஒவ்வொரு கணக்கில் பணத்தை வாங்குகின்றன. இந்த மூன்று விஷயங்களில் இருக்கும் வித்தியாசத்தை வியாபார யுக்தியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் நகைக் கடைக்காரர்கள். நகையின் விலையை பெரிய அளவில் ஏற்றியிறக்க இதை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதன் காரணமாகத்தான் கடை நகைகளின் விலை பாரதூரமாக மாறிவிடுகிறது.
ஃபிக்ஸட் ரேட்!
தங்க நகையின் விலை கடைக்கு கடை மாறி வித்தியாசப்படுகிற சூழ்நிலையில், ஸ்ரீகுமரன் தங்க மாளிகையில் நகைகளுக்கு ஒரே விலை என ஃபிக்ஸட் ரேட் நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து அதன் விற்பனை மேலாளர் கதிரவனிடம் பேசினோம். ''தங்க நகை வியாபாரத்தில் செய்கூலி, சேதாரத்துக்கு வாங்கும் விலையைக் கொண்டுதான் வியாபாரிகள் லாபம் பார்க்க முடிகிறது. ஆனால், இதில் வித்தியாசம் வரும்போது வாடிக்கையாளர்கள் நாம் ஏமாற்றப்படுகிறோமோ என்று நினைக்க வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் கடையில் இருக்கும் சேல்ஸ்மேனுக்கு அவர்கள் விற்கும் நகைக்கு குறிப்பிட்ட கமிஷன் கொடுக்கப்படும். இதனால், வாடிக்கையாளர் தன்னை விட்டு எங்கும் சென்றுவிடக் கூடாது என்ற காரணத்தால் அதிக சேதாரம் சொல்லி உங்களுக்காக 4%, 5% குறைத்துக் கொள்கிறேன் என வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர். இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க வும், வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதற்குமே ஃபிக்ஸட் ரேட் என்ற ஒன்றை வைத்துள்ளோம். எங்கள் கடையில் சிறுகுழந்தை நகை வாங்கினாலும் ஒரே விலைதான்.
நாங்கள் ஒவ்வொரு வகை நகைக்கும் ஒவ்வொரு விதமான சதவிகிதத்தை ஃபிக்ஸ் செய்கிறோம். உதாரணமாக, செயினுக்கு ஏழு சதவிகிதம். தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்த சதவிகிதத்தில் நாங்கள் எந்தவித மாற்றமும் செய்ய மாட்டோம். எடுத்துக்காட்டாக, இன்றைக்கு ஒரு கிராம் தங்கம் விலை 2,586 ரூபாய். இதில் ஏழு சதவிகிதம் எனும்போது 181 ரூபாய். 2,586+181= 2,767 ரூபாய். இந்த விலைதான் செயினின் விலை. இந்த சதவிகிதம் நகைகளின் டிசைனைப் பொறுத்து அதிக பட்சமாக 25% கணக்கிடப்படுகிறது. வாடிக்கையாளர் களிடமிருந்து இந்த ஃபிக்ஸட் ரேட்டுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது'' என்றார்.
ஃபிக்ஸட் ரேட் நடைமுறைக்கு வந்தபிறகு ஒரே கடையில் வேறு வேறு விலை என்பது ஒழிந்துபோகும். ஆனால், கடைக்கு கடை விலை வித்தியாசப்படுவது குறையுமா என்பது கேள்விக்குறியே! என்றாலும், எல்லா கடைகளும் இந்த நடைமுறையை பின்பற்றினால் கடைக்கு கடை பெரிய அளவில் விலை வித்தியாசப்பட வாய்ப்பில்லை என்றே படுகிறது.
No comments:
Post a Comment