‘‘அ வர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக் கூடியவர்’’ என்று ஊரே கொண்டாடிய பொள்ளாச்சி ராமசாமி கடந்த மாதம் இறந்து போனார்.
அவருடைய காரியங்கள் முடிந்து, சொத்துகளை யார் பராமரிப்பது என்ற யோசனை வந்தபோது, குடும்ப வக்கீல் ஓர் உயிலைக் கொண்டுவந்து கொடுத்தார். உயிலைப் பிரித்துப் படித்த குடும்பத்தினர் மனநிறைவோடு ராமசாமியை நினைத்துக் கொண்டனர். யாருக்கும் எந்த மனவருத்தமும் இல்லாமல், எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதமாக உயிலை எழுதியிருந்தார்.
தன்னுடைய மறைவுக்குப் பிறகு யாருக்கும் எந்தப் பிரச்னையும் எழக்கூடாது என்று நினைத்த ராமசாமிக்கு, எண்ணத்தை ஈடேற்ற உதவியாக இருந்தது உயில்!
உயில் என்றால் என்ன? ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்). உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.
உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எழுதிவிடுவது நல்லது. சிவில் கோர்ட்டில் போய்ப் பார்த்தால் எத்தனை வழக்குகள் குடும்பச் சொத்து தொடர்பாக நடந்து கொண் டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு உறவுகளுக்குள் விரிசலை உண்டாக்கி விடும். சொத்துக்களை முறையாகப் பிரித்து உயில் எழுதிவிட்டால் பிரச்னை ஏதுமில்லை.
‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.
உயில் எழுதவேண்டிய அவசியத்தைத் தெரிந்து கொண்டுவிட்டோம். அதை எப்படி எழுதுவது? அதில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ள வக்கீலைத்தான் நாடவேண்டுமா?
ரிஷிகேஷ் ராஜாவிடமே கேட்டபோது, ‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’ என்றவர், உதாரணமாக ஒரு வடிவத்தைச் சொன்னார்.
‘எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.
உதாரணத்தைச் சொன்ன ரிஷிகேஷ் ராஜா, ‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.
உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.
உயில் அமல்படுத்துநராக ஒருவரை நியமிப்பது அவசியம். உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்களை உயில் அமல்படுத்துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.
உயில் எழுதப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் சிக்கல் ஏற்பட்டு கோர்ட் படியேறுகிறார்களே... மூத்த மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார், இளைய மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார். இரண்டுமே ஒரிஜினலாக வேறு இருக்கிறது. அதுபோன்ற சூழலில் என்ன செய்வது?
இதுபற்றி ஒரு வழக்கறிஞரிடம் கேட்டபோது, ‘‘அப்படிப்பட்ட சூழலில் கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் செல்லுபடியாகும். ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால், கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் சட்டப்படி செல்லும்’’ என்றார்.
உயில் இல்லாமல் போனால் தோன்றக்கூடிய நிலை குறித்து வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகி சகுந்தலா சுந்தரம் கூறுகையில், ‘‘உயில் எழுதி வைக்காமல் ஒருவர் இறந்துபோனால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி (அவர் சார்ந்திருக்கும் மதத்துக்கு ஏற்ப) வாரிசுகள் அனைவருக்கும் சொத்து பிரிக்கப்படும். இறந்தவர், தனது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் கூடுதலாக சொத்தைக் கொடுக்க நினைத்திருந்தாலும், உயில் எழுதாவிட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை. சொத்தை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்ய விரும்பி இருந்தாலும் அதுவும் நடைபெறாது’’ என்றார்.
தன்னுடைய கணவர் உயில் எழுதி வைக்காததால் தான் படும் சிரமங்கள் குறித்துச் சொன்ன யுவராணி, ‘‘என்னை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்ட என் கணவர், 1999-ல் இறந்து போனார். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மனைவியும் எனது கணவரது குடும்பத்தினரும், சொத்தில் எங்களுக்குச் சேரக்கூடிய பங்கைக் கொடுக்காமல் மாதம் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்து வந்தனர். பிறகு, அந்தப் பணத்தையும் சரியாகக் கொடுக்கவில்லை. வேறுவழியில்லாமல் 2004-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். என் கணவர் முறையாக உயில் எழுதி, அதில் எங்கள் பங்கைப் பற்றிச் சொல்லியிருந்தால் இத்தனை கஷ்டங்கள் வந்திருக்காது’’ என்றார்.
உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!
சொத்து மட்டும் அல்ல. வீட்டுக் கடன், குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்கான செலவு போன்ற எதிர்கால பணச்சிக்கல்களைப் பற்றியும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் குடும்பத்தினர் அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.
பெரும்பாலான குடும்பத் தலைவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் பொருளாதாரச் செயல் களையும், எதிர்கொள் ளும் பணச்சிக்கல்களை யும் தங்கள் குடும்பத்தி னரிடம் முழுமையாகத் தெரிவிப்பதில்லை. உயில் எழுதாமல் இறந்துபோகிற பட்சத்தில், அவரது குடும்பம் எதிர்பாராத சுமைகளைத் தாங்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும். அதைத் தவிர்க்க கண்டிப்பாக உயில் எழுத வேண்டும்.
இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!
நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.
உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
|
Hello world friends, this is ‘Jeeva General Information & Knowledge Repository’ about general information and knowledge from various fields. If you have the information here you need, read on, know it and get useful. “Knowledge is strength, power and energy. Progress through these in life.”
Wednesday, 1 July 2015
உயில் ஜாக்கிரதை! கவர் ஸ்டோரி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment