Wednesday, 1 July 2015

வரி தாக்கல்... செக் லிஸ்ட்!


'ஓரெண்டு ரெண்டு... ஈரெண்டு நாலு' என்ற வாய்ப்பாடு தொடக்கப் பள்ளியில் படித்ததுதான்... ஆனால், சின்னதாகக் கணக்குப் போடுவது என்றாலும் அந்த வாய்ப்பாடு நிச்சயம் தேவைப்படும். அதுபோலத்தான் வரித் தாக்கல் தொடர்பான செக் லிஸ்ட்டும்! எத்தனை முறை செய்திருந்தாலும் அடிப்படையான விஷயங்களைக் கொஞ்சம் துடைத்துப் பளிச்சிடச் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதற்கான நேரம் இது. கடைசி நிமிடத்தில் அவதி அவதியாக ஓடாமல் நிதானமாக இப்போதே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்!
யாரெல்லாம் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவேண்டும்?
மொத்த வருமானம் 1.5 லட்ச ரூபாயைத் தாண்டினால் (வரி எதுவும் கட்டவில்லை என்றாலும்) வரிக் கணக்குத் தாக்கல் செய்யவேண்டியது அவசியம்.
பெண் என்றால் 1.80 லட்ச ரூபாய்.
மூத்த குடிமக்களாக இருந்தால் 2.25 லட்ச ரூபாய்.
அதேநேரத்தில், மொத்த வருமானம் மேற்கண்ட தொகையை விடக் குறைவாக இருந்தாலும், ஏதாவது வருமானத்துக்கு டீ.டி.எஸ் (TDS) பிடிக்கப்பட்டிருந்தால் வரிக் கணக்குத் தாக்கல் செய்வது அவசியம்.
தேவையான ஆவணங்கள் எவை?
வரிக் கணக்குத் தாக்கல் படிவத்துடன் எந்த ஆவணத்தையும் இணைத்துக் கொடுக்கவேண்டியதில்லை. அதே நேரத்தில், வரித் தள்ளுபடிக்காக செய்த முதலீடு மற்றும் செலுத்திய பணத்துக்கான ஆதாரத்தைத் தயாராக வைத்திருக்கவேண்டும். வருமான வரி அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கேட்கும்போது அவற்றைக் காட்டவேண்டும்.
'பான்' எண்ணை வரிக் கணக்குப் படிவத்தில் குறிப்பிடுவது கட்டாயம்.
80 சி, 80 டி, 80 டிடி. போன்ற பிரிவுகளின் கீழ் முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள்.
ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற இதர வருமானத்துக்கு டீ.டி.எஸ். சான்றிதழ் 16 ஏ.
மாதச் சம்பளக்காரர்கள் என்றால் படிவம் 16.
வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டியைத் திரும்பச் செலுத்தியதற்கான சான்றிதழ்.
வரிக் கணக்கு கணக்கிடுவது எப்படி?
நிதி ஆண்டில் ஆயுள் காப்பீடு பிரீமியம், தொழிலாளர் பிராவிடன்ட் ஃபண்ட், பொது பிராவிடன்ட ஃபண்ட், இ.எல்.எல்.எஸ். முதலீடு, இரு குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், மருத்துவக் காப்பீடு பிரீமியம், நன்கொடை மற்றும் இதர வரிச் சலுகைகளைத் தனியே குறித்துக்கொள்ளவேண்டும். இவற்றை மொத்த வருமானத்திலிருந்து கழித்தால் கிடைப்பது வரிக்கு உட்பட்ட வருமானம்.
இதற்கான வரியை உங்கள் சம்பளத்திலிருந்து அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப ஏற்கெனவே பிடித்திருந்தால் வரி எதுவும் கட்டத் தேவையில்லை. அப்படி இல்லாமல் வரி கட்டவேண்டும் என்றால் வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன், படிவம் 280-ஐ பூர்த்தி செய்து வரித் தொகையை ரொக்கமாகவோ, காசோலையாகவோ ஒரு வங்கியில் செலுத்தி விடவேண்டும். நெட் பேங்க்கிங் வசதி இருந்தால் அதன் மூலமும் செலுத்தலாம். இவ்விதம் பணம் செலுத்தும்போது பிரத்யேக எண்ணுடன் ரசீது ஒன்றைத் தருவார்கள். அந்த எண்ணை வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
எந்தப் படிவத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவேண்டும்.?
மாதச் சம்பளக்காரர்கள் அவர்களின் வருமான ஆதாரத்தைப் பொறுத்து, அதற்கென உள்ள படிவத்தில் தாக்கல் செய்யவேண்டும்.
ஐ.டி.ஆர். - 1 சம்பளம், பென்ஷன், வட்டி வருமானம் மட்டும் உள்ளவர்களுக்கு.
ஐ.டி.ஆர். - 2 சம்பளம், பென்ஷன், வட்டி, மூலதன ஆதாயம், வீட்டு வாடகை போன்ற வருமானம் உள்ளவர்களுக்கு.
ஐ.டி.ஆர். 3 கூட்டு வணிகம் புரியும் தனிநபர்கள் மற்றும் இந்துக் கூட்டுக் குடும்பத்தினருக்கான படிவம்.
ஐ.டி.ஆர். - 4 வணிகம் அல்லது நிபுணத்துவம் மூலம் (டாக்டர், வக்கீல் போன்றவர்கள்) வருமானம் ஈட்டுபவர்களுக்கு.
ரிட்டர்ன் தாக்கல் செய்வது எப்படி?
2008-09-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை மதிப்பீடு ஆண்டு (2009-10) 2009-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்.
வருமான வரிக் கணக்கை ஐ.டி.ஆர். படிவம் (ஆஃப்லைன்) அல்லது இன்டர்நெட் (ஆன்லைன்) மூலம் தாக்கல் செய்யலாம்.
ஆஃப் லைன் முறை
இந்த முறையில் ஐ.டி.ஆர். படிவத்தைப் பூர்த்தி செய்து அருகிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கொடுத்து விடலாம். அல்லது சார்ட்டட் அக்கவுன்டன்ட் மூலம் தாக்கல் செய்யலாம். அல்லது வருமான வரித்துறை அலுவலகத்தில் வரிப் படிவம் பூர்த்தி செய்வதில் உதவி செய்வதற்கு என்று நியமிக்கப்பட்டிருக்கும் டி.ஆர்.பி. (Tax Return Preparer) மூலம் தாக்கல் செய்யலாம். ஐ.டி.ஆர். படிவத்துடன் எந்த ஓர் ஆவணத்தையும் இணைக்கத் தேவையில்லை. சார்ட்டட் அக்கவுன்டன்ட்டுக்கான கட்டணம் 200 ரூபாயில் தொடங்கி சுமார் 2,000 ரூபாய் வரை வருமானம் மற்றும் வருமான ஆதார எண்ணிக்கையைப் பொறுத்திருக்கும்.
ஆன் லைன் முறை
இணைய தளம் மூலம் மூலம் ரிட்டர்ன் தாக்கல் செய்வது இ-ஃபைலிங்.
இம்முறையில் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வருமான வரித்துறையின்new.incometaxindiaefiling.gov.in இணைய தளத்துக்குச் சென்று, உங்களின் பான் எண்ணை 'யூசர்நேம்' ஆக கொடுத்துப் பதிவு செய்துகொள்ளவேண்டும். அதன் பிறகு தேவையான ஐ.டி.ஆர். படிவத்தை டவுன் லோட் செய்துகொள்ளவேண்டும். அதை படிவம் 16-ல் உள்ள விவரங்களைக் கொண்டு நிரப்பி, மேலே கூறப்பட்ட வருமான வரி இணையதளத்தில் 'அப்லோட்' செய்யவேண்டும். அப்போது உரிய இடத்தில் டிஜிட்டல் கையெழுத்தைப் பதிவுசெய்து அனுப்பவேண்டும். உங்களுக்கு வரித் தாக்கல் செய்ததற்கான அத்தாட்சி இ-மெயில் மூலம் அனுப்பப்படும். ஐ.டி.ஆர்- V (ITR- V) டிஜிட்டல் கையெழுத்து இல்லாதவர்கள், நிரப்பப்பட்ட ஐ.டி.ஆர். படிவத்தை பிரின்ட் எடுத்து, அதில் கையெழுத்துப் போட்டு அருகிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கொடுத்து அக்னாலெட்ஜ்மென்ட் வாங்கிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்யவில்லை என்றால் வரிக் கணக்குத் தாக்கல் செய்ததாகவே எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இ-ஃபைலிங் மூலம் ரிட்டர்ன் தாக்கல் செய்யும்போது சில கட்டங்களை/தகவல்களை நிரப்ப நாம் மறந்துவிட்டாலும் அதை கம்ப்யூட்டர் நமக்கு நினைவுபடுத்தும் விதமாக சாஃப்ட்வேரை உருவாக்கியிருக்கிறார்கள்.
இ-ஃபைலிங் செய்ய தனியார் வெப்சைட்களும் இப்போது உதவிபுரிகின்றன. அதற்கெனத் தனியே கட்டணம் வாங்கிக் கொள்கின்றன.
ரீஃபண்ட் பெற என்ன செய்யவேண்டும்?
அதிகமாக வரி கட்டியிருந்தால் அதைத் திரும்பப் பெற, ஐ.டி.ஆர். படிவத்தில் உங்களின் தொடர்பு விவரங்களோடு வங்கியின் பெயர், வங்கியின் 'எம்.ஐ.சி.ஆர்' எண், உங்களின் கணக்கு எண்ணைக் குறிப்பிட வேண்டும். சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யும்பட்சத்தில், அதிகமாகக் கட்டிய வரிக்கு நிதி ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே வட்டி கிடைக்கும்.
கெடு தாண்டிவிட்டால்..!
வரிக் கணக்குத் தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஜூலை 31-ம் தேதி. இதைத் தவற விட்டுவிட்டால் என்ன செய்வது?
நீங்கள் வரி எதுவும் கட்டத் தேவையில்லை என்கிறபோது வரிக் கணக்குத் தாக்கலை அபராதம் இன்றி, 2010 மார்ச் 31-ம் தேதி வரை செய்ய மத்திய வருமான வரித்துறை அனுமதிக்கிறது.
ஜூலை 31-ம் தேதிக்குள் வரியைக் கட்டவில்லை என்றால், அதற்கான அபராத வட்டியுடன் 2010 மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்துகொள்ளலாம். இந்தக் கால கெடுவையும் தாண்டினால்தான் அதிகபட்சம் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். சில நேரங்களில் மூன்று மாதங்கள் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். நியாயமான காரணம் இருந்தால் இவை எதுவும் இல்லாமல் கூட போக வாய்ப்பு இருக்கிறது.
சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்வதன் பலன்..!
சரியான நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால்தான் ரிட்டர்ன் படிவத்தில் ஏதாவது தவறு அல்லது விடுதல் இருப்பது தெரியவந்து அதைச் சரிசெய்து புதிதாகத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. நாள் கடந்து ரிட்டர்ன் தாக்கல் செய்து, அதில் தவறு இருப்பது தெரியவந்தால் புதிதாக ரிட்டர்ன் தாக்கல் செய்ய அனுமதி இல்லை.
சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்திருந்தால்தான், பங்கு முதலீடு மூலமான இழப்பை அடுத்து வரும் நிதி ஆண்டுக்கு எடுத்துச் செல்லமுடியும்.
திட்டமிடுங்கள்..! சரியான நேரத்தில் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுங்கள். பணத்தை மிச்சப்படுத்துவதோடு நிம்மதியாகவும் இருங்கள்.

No comments:

Post a Comment