வ ந்துகொண்டே இருக்கிறது கொடுங்கோடை! மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெயில் கொளுத்தும் கோடை சீஸன் வரவிருக்கிறது. டிராஃபிக் ஜாம் ஏற்பட்டு உச்சி வெய்யிலில் நெடுநேரம் காத்திருக்க நேரிட்டால், ஒரு சிலருக்கு உடம்பில் உள்ள நீர் அனைத்தும் வறண்டு போய் மயக்கம் வரக்கூடும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மோட்டார் சைக்கிளோ அல்லது காரோ ஓட்டிக்கொண்டு போகும்போது தலைச்சுற்றலோ, மயக்கமோ வந்து சாலையில் விழுந்தால் என்னாகும்? இதோ, உதவிக்கு வருகிறார் பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்ரமணியன்.
‘‘ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனமாகஇருக்க வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு பொதுவாக நீண்ட நேரம் சிக்னலில் நின்றாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ வாகனத்தில் செல்லும்போது தலைச்சுற்றல், மயக்கம், பார்வை மங்குதல், தலைவலி, வாந்தி போன்றவை ஏற்படக்கூடும். திடீரென்று ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.
எனவே, இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அந்த இடத்திலேயே வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அதில் இருந்து இறங்கி நிழலான இடத்தில் உட்கார்ந்துவிடுவது நல்லது. காரில் பயணிப்பவர்கள் என்றால், ஏ.ஸி-யை அணைத்துவிட்டு கார் கண்ணாடிகளை இறக்கிவிடுவது உத்தமம். அப்போதுதான் வெளிக்காற்று உள்ளே வரும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை அப்படியே உட்கார்ந்து ஓய்வெடுப்பது நல்லது.
ஓய்வெடுக்கும்போது டீ அல்லது குளிர்பானங்கள் குடிக்கலாம். காபியையும், சோடாவையும் தவிர்த்துவிடுங்கள். சோடாவில் கார்பன் டை- ஆக்ஸைடு வாயு கலந்திருப்பதால் வயிற்றைப் புரட்டி வாந்தி வரும். சோடாவால் புரை ஏறும் வாய்ப்பும் இருக்கிறது.ஆனால், சோடாவை முகத்தில் தெளித்து முகம் கழுவலாம்.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் இது போன்ற சமயங்களில் ‘டென்ஷனைக் குறைக்கிறேன்’ என்று புகைப்பிடிக்கக் கூடாது.
வாகனம் ஓட்டும்போது தலைச்சுற்றல், மயக்கம் என்று வந்தால் அரை மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு உதவிக்கு யாரையாவது அழைத்துக்கொண்டு மருத்துவரைப் போய்ப் பார்க்க வேண்டும்’’ என்கிறார் சுப்ரமணியன்!
No comments:
Post a Comment