கடந்த எட்டு ஆண்டுகளாக, பைக் விற்பனையில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக, அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது ஹீரோ ஹோண்டா. இதற்கு முக்கியக் காரணம், 'ஸ்ப்ளெண்டர்' எனும் மந்திரக்கோல். ஹீரோ ஹோண்டாவின் ஒட்டுமொத்த பைக் விற்பனையில் கணிசமான பைக்குகள் விற்பதும் ஸ்ப்ளெண்டர் பைக்தான். இந்த மாயாஜாலத்துக்குக் காரணம் என்ன?
சிடி 100
ஹீரோ நிறுவனமும் ஹோண்டா நிறுவனமும் இணைந்து 1985-ல் முதன்முதலாக
அறிமுகப்படுத்திய 'ஹீரோ ஹோண்டா சிடி 100' என்ற பைக்தான் இந்த வெற்றிச் சிகரத்தை எட்டுவதற்கான முதல் படி. மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழலை (4 ஸ்ட்ரோக்) மையமாக வைத்து, மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற பைக்காக வடிவமைக்கப்பட்டது சிடி 100.
ஆனால் இதன் தோற்றம், பர்ஃபாமென்ஸ் படு சுமார். மைலேஜ் கிடைத்தாலும் அப்போது போட்டியில் இருந்த 2 ஸ்ட்ரோக் பைக்குகளான இந்த்-சுஸ¨கி ஏஎக்ஸ் 100, எஸ்கார்ட் யமஹா ஆர்எக்ஸ் 100, கவாஸாகி பஜாஜ் ஆகிய பைக்குகளின் பவர், பர்ஃபாமென்ஸ், பராமரிப்புச் செலவு ஆகிய விஷயங்களில் சிடி 100 பின்தங்கியே இருந்தது. ஆனால், போட்டி பைக்குகளைப் பற்றி கவலைப்படாமல் சிடி 100 மாடலில் இருந்து சிடி டீலக்ஸ், ஸ்லீக், சிடி 100 எஸ்.எஸ், சிடி டான் ஆகிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தியது ஹீரோ ஹோண்டா. என்றாலும், சிடி 100 மாடல்களின் சிறந்த அம்சங்களான மைலேஜ் மற்றும் 4 ஸ்ட்ரோக் விஷயத்தை அப்படியே தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது. ஹீரோ ஹோண்டா பைக்குகளில் கிட்டத்தட்ட எல்லாமே பிரஸ்டு ஸ்டீல் டி-போர்ன் ஃபிரேமைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. (டி-போர்ன் ஃபிரேமில் உருவான பைக்குகளில் டேங்க்குக்குக் கீழே வெற்றிடம் இருக்கும். பார்க்க படம்) அப்போது மார்க்கெட்டில் பெரும்பான்மையான பைக்குகளில் டபுள் கிரேடல் ஃபிரேம்தான் பயன்படுத்தப்பட்டது.
ஸ்ப்ளெண்டர் அறிமுகம்!
அப்போதுதான் ஹீரோ ஹோண்டா முதன்முதலாக டபுள் கிரேடல் ஃபிரேமைக் கொண்டு ஒரு பைக்கை உருவாக்கத் திட்டமிட்டது. தனது பைக்குகளில் வழக்கமாக இடம் பெற்றிருந்த சில விஷயங்களைத் தவிர்த்துவிட்டு, புதுமையான பெட்ரோல் டேங்க், ஹெட் லைட் வைஸர், யுட்டிலிட்டி பாக்ஸ், பின்பக்க கௌல் அசெம்ப்ளி, பிளாஸ்டிக் ஃபெண்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு, தனது 100 சிசி இன்ஜினில் சில மாறுதல்களைச் செய்து, 1994-ல் 'ஸ்ப்ளெண்டர்' என்ற புதிய பைக்கை அறிமுகப்படுத்தியது.
ஆனால், இந்த பைக் முதலில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை என்பதுதான் ஆச்சரியம். இருப்பினும், குறைவாக விற்பனையான பைக்குகளின்வாடிக்கையாளர்கள், இதன் பயன்பாட்டை நன்கு உணர்ந்து கொண்டனர். இதன் இமாலய வெற்றிக்கு அதன் வாடிக்கையாளர்கள் வாய் வழியாக வழங்கிய நற்சான்றிதழே விற்பனை சூடுபிடிக்கக் காரணமாயிற்று.
அதிகபட்ச வேகம், அதாவது டாப் ஸ்பீடு குறைவாக இருந்தாலும், பிரமாதமான ஹேண்ட்லிங், கணிசமான மைலேஜ், வசதி, ஸ்டைல் என்று அனைத்துமே இதில் ஒரு சேர அமைந்து, வாலிபர்கள், நடுத்தர வயதினர் என அனைவரையும் கவர்ந்தது. ஹீரோ ஹோண்டாவின் முந்தைய தயாரிப்புகளில் பெரும்பாலான முக்கிய உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை. அதனால், அதன் விலையும் அதிகமாக இருந்தது. ஸ்ப்ளெண்டரில் பெரும்பான்மையான உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன. அதனால், பராமரிப்புச் செலவும் பெருமளவு குறைந்தது.
'எப்படிப் பயன்படுத்தினாலும் மக்கர் செய்யாமல் ஓடிக்கொண்டே இருக்கும் பைக்' என்று இது வாடிக்கையார்களிடம் நல்ல பெயர் எடுத்தது. இதுதான் ஸ்ப்ளெண்டரின் பக்கம் மக்களின் கவனத்தைத் திருப்பியது. இதனால், படிப்படியாக விற்பனை உயர்ந்து உலகின் நம்பர் 1 பைக் என்ற அந்தஸ்தை அடைந்தது.
சூப்பர் கப் இன்ஜின்!
ஸ்ப்ளெண்டரின் வெற்றிக்கு ஆதாரமாக இருக்கும் அதன் இன்ஜினுக்கு ஒரு வரலாறு உண்டு. இந்த இன்ஜின் சொய்ஷீரோ ஹோண்டா என்பவரால் 'சூப்பர் கப்' என்ற பைக்குக்காக வடிவமைக்கப்பட்டது. இவர்தான் ஹோண்டா நிறுவனத்தை உருவாக்கியவர். இந்த இன்ஜின் பல சிசி அளவுகளில், பல நாடுகளில் வெவ்வேறு விதமான பைக்குகளில் பொருத்தப்பட்டு விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன. இந்த இன்ஜின்தான் நம்மூரில் 100 சிசி வடிவமைப்பில் பொருத்தப்பட்டது.
ஸ்ப்ளெண்டரின் வெற்றிக்குப் பிறகு 100 சிசி மார்க்கெட்டில் கடும் போட்டி உருவானது என்றாலும், ஸ்ப்ளெண்டரின் இடத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை.
ஸ்ப்ளெண்டர் பிளஸ்!
2004-ல், அதாவது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஹீரோ ஹோண்டா சில மாற்றங்களுடன் 'ஸ்ப்ளெண்டர் பிளஸ்' என்ற மாடலை அறிமுகப்படுத்தியது. மல்ட்டி ரிஃப்ளெக்டர் ஹெட் லைட் ஹாலோஜன் பல்புடன் வந்த ஸ்ப்ளெண்டர் பிளஸில் டெயில் லைட், இண்டிகேட்டர்கள் மாற்றப்பட்டு இருந்தன. மேலும், ஸ்டிக்கர் டிசைனை முழுமையாக மாற்றியிருந்தது. இவை பெரிய மாற்றங்கள் இல்லையென்றாலும், பெரிய அளவில் எந்தப் புகாரும் இல்லாமல் இன்று வரை மக்களின் பைக்காக இது விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது.
மாற்றங்கள்!
கடந்த சில ஆண்டுகளாக, பைக் மார்க்கெட்டின் அடிப்படையாக விளங்கிய 100 சிசி பைக், இப்போது 125 சிசி-யாக உயர்ந்து வருகிறது. இந்த மாற்றத்தையும் சமாளிக்க ஸ்ப்ளெண்டரின் அடிப்படை டிசைன், வசதிகளைக் கொண்டு 125 சிசி-யில் 'சூப்பர் ஸ்ப்ளெண்டரை' அறிமுகப்படுத்தியது ஹீரோ ஹோண்டா.
இருப்பினும், 100 சிசி ஸ்ப்ளெண்டர் பிளஸ் விற்பனைக் குறையவில்லை. அதனால், ஸ்ப்ளெண்டரின் அடுத்த தலைமுறை பைக்காக 'ஸ்ப்ளெண்டர் என்.எக்ஸ்.ஜி' என்ற மாடலையும் அறிமுகப்படுத்தியது. இப்போது 100 சிசி ஸ்ப்ளெண்டர் பிளஸ் அலாய் வீல்களுடனும், என்.எக்ஸ்.ஜி, செல்ப் ஸ்டார்ட் வசதியுடனும் விற்பனையாகின்றன.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, இப்போது விற்பனையில் உள்ள ஸ்ப்ளெண்டர் பிளஸ§க்கும் ஆரம்ப கால ஸ்ப்ளெண்டருக்கும் இடையே உள்ள மாற்றங்கள் எதுவும் கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாது. இருப்பினும், உள்ளுக்குள் காலத்துக்கு ஏற்ப பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2000-மாவது ஆண்டுக்குப் பிறகு வந்த மாடல்களில் சைலன்ஸர், கியர் பாக்ஸ், கிளட்ச் பிரைமரி டிரைவ் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். அதே போல், ஈ.ஜி.ஆர். வால்வு பொருத்தப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக்கல் ஜெனரேட்டர் துவக்கத்தில் 2 காயில் சிஸ்டத்தில் இருந்து, 4 காயில் சிஸ்டமாக மாறி, இப்போது 6 காயில் சிஸ்டம் வரை கிடைக்கிறது. வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப பழைய ஸ்டிக்கர் கொண்ட ஸ்ப்ளெண்டர் பிளஸ§ம் உண்டு. அதேபோல், ஸ்போக் வீல்களுக்குப் பதில் அலாய் வீல் அறிமுகம் செய்த பின்னர், முற்றிலும் ஸ்போக் வீல் மாடல்கள் நிறுத்தப்படவில்லை.
ஹீரோ ஹோண்டாவின் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணமே, வாடிக்கையாளரின் தேவையைப் புரிந்து கொண்டு காலத்துக்கு ஏற்றது போல தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்ததுதான்!
No comments:
Post a Comment