எந்த பைக் வாங்குவது என்று உங்கள் மனசுக்குள் எழும் கேள்விக்கான விடையை விற்பன்னர்களிடம் போய் தேடுவதா அல்லது உங்களிடமே தேடுவதா? கேள்வி ஊற்றெடுக்கும் அதே இடத்தில்தான் அதற்கான பதிலும் கிடைக்கும் என்பதால், கடந்த
மாதம் உங்களில் பலரை எங்கள் நிருபர்கள் தேடி வந்து... நீங்கள் ஓட்டும் பைக்கின் பர்பாமன்ஸ், மைலேஜ், அது தரும் சக்தி, ரீசேல் மதிப்பு எனக் கேள்விகளால் குடைந்தெடுத்திருப்பார்கள். வாசகர்களாகிய நீங்கள் அளித்த பதில்களே, 'அடுத்து என்ன பைக் வாங்கலாம்?' என்று உங்கள் மனசுக்குள் எழும் கேள்விக்கு இங்கே பதில் அளிக்கிறது.
தினமும் ஆபீஸ§க்கு மட்டும் போய் வர, வியாபார விஷயமாக கரடுமுரடான சாலைகளில் பயணிக்க, நகருக்குள் மட்டுமே ஜாலிக்காக சுற்றிவர என்று மோட்டார் சைக்கிள்களின் பயன்பாடு ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. அதனால்தான் 100சிசி, 125சிசி, 150சிசி, 200சிசி என்று பைக்குகள் வெவ்வேறு திறன்களில் வெளிவருகின்றன. பயன்பாடுகள் மாறுபட்டாலும் மோட்டார் சைக்கிளில் எல்லோரும் எதிர்பார்ப்பது மைலேஜ், பர்பாமென்ஸ், ஸ்டைல் ஆகிய முக்கியமான மூன்றையும்தான். அதனால், இவற்றுக்கு அதிக வெயிட்டேஜ் கொடுத்து, முக்கியமான 10 மோட்டார் சைக்கிள்களை உங்கள் முன் நிறுத்தியிருக்கிறோம்.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி
இது நம்ம ஊர் வண்டி!
பலம்
ஸ்டார் சிட்டி நல்ல மைலேஜ் தருவதோடு, பராமரிப்புச் செலவும் குறைவாக இருக்கிறது. நகரத்துக்கும், கிராமங்களில் பொருட்களை ஏற்றிச் செல்லும் 'ரப் யூஸ்'க்கும் சரியான பைக், ஸ்டார் சிட்டி. இதைப் பயன்படுத்தும் 85 சதவிகிதம் பேர், 'நீண்ட தூரம் பயணம் செல்வதற்கு ஸ்டார் சிட்டி சிறப்பாக இருக்கிறது' என்கிறார்கள்.
பலவீனம்
ரீசேல் மதிப்பில் ஸ்டார் சிட்டி சிறப்பாக இல்லை. சஸ்பென்ஷனிலும் பிரேக்குகளிலும் நிறைய முன்னேற்றங்கள் தேவை. மற்ற 100சிசி வாகனங்களோடு போட்டிபோடும் அளவுக்கு தோற்றமும் இல்லை. பிக்அப் மிகவும் குறைவாக இருக்கிறது. கிளட்ச் பிளேட் அடிக்கடி வேலைவைக்கிறது. பேட்டரியின் திறன் அடிக்கடி குறைந்துவிடுவதால் ஹாரன், இண்டிகேட்டர்கள் போன்றவை அவ்வப்போது வேலை செய்வதில்லை.
ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் +
நம்பகத்தன்மை, நல்ல மைலேஜ் கொண்ட பைக் வேண்டும் என்று யார் கேட்டாலும், எல்லோரும் முதலில் பரிந்துரைப்பது, காலங்களைக் கடந்து வெற்றிக்கொடி நாட்டும் ஸ்ப்ளெண்டர் பைக்கையே.
பலம்
ஸ்ப்ளெண்டரை எந்தக் காலத்திலும் நம்பி வாங்கலாம். இது அதிக மைலேஜ் தருவதோடு, நடுரோட்டில் பிரச்னை என எப்போதும் நிற்காது. முக்கியமாக எல்லா வயதினரும் பயன்படுத்தக்கூடிய வாகனமாக இருக்கிறது. ரீசேல் மதிப்பில் நம்பர் ஒன். சர்வீஸ் சென்டர்கள் அதிகமாக இருப்பதும் இதன் பலம்.
பலவீனம்
மற்ற 100சிசி பைக்குகளுடன் ஒப்பிடும்போது, இதன் உதிரி பாகங்களின் விலை அதிகம். ஸ்ப்ளெண்டரின் குறைகளாக மக்கள் கருதுவது, பார்த்துப் பார்த்துப் பழகிப்போன தோற்றம். பைக்கில் ஸ்டிக்கரிங் சுமாராகத்தான் இருக்கிறது. சைலன்சரின் வாய்ப்பகுதியில் ஓட்டை விழுந்துவிடுவதால், சைலன்சரை இரண்டு ஆண்டுகளில் மாற்றவேண்டி இருக்கிறது. பிரேக் ஷ¨வையும் அடிக்கடி மாற்ற வேண்டிவருகிறது. புதிய ஸ்ப்ளெண்டர் அதிக மைலேஜ் தருவதில்லை.
சுசூகி ஜீயஸ்
'பட்டர் ஸ்மூத்' இன்ஜினைக் கொண்டது ஜீயஸ்!
பலம்
குறைந்த வேகத்தில் செல்லும்போதும் கியர்களை அடிக்கடி மாற்றவேண்டியதில்லை. டிராபிக் நெருக்கடிகளில் ஓட்டும்போது, இது மிகவும் உதவியாக இருக்கிறது. கியர் ஷிப்ட் இண்டிகேட்டர் இருப்பது உபயோகமாக இருக்கிறது.
பலவீனம்
ஜீயஸ்ஸின் குறைபாடுகளாக மக்கள் கருதுவது, பைக்கின் பர்பாமென்ஸைத்தான். இதன் தோற்றமும் கவர்வதாக இல்லை. ஹெட்லைட்டின் வெளிச்சம் குறைவாக இருக்கிறது. மைலேஜும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. 'சுசூகி என்கிற பெயருக்காக மட்டுமே இந்த பைக்கை வாங்கினோம். ஆனால், சுசூகியின் தரம் இதில் இல்லை' என்கிறார்கள்!
ஹீரோ ஹோண்டா கிளாமர்
கிளாமரின் தோற்றம் ஒரு 150சிசி பைக்குக்கு இணையாக கம்பீரமாக இருக்கிறது. பெரிய பைக்கை ஓட்டும் உணர்வைத் தருகிறது. பிக்அப்பும் ஓகே.
பலம்
ஹெட்லைட்டுகள் பிரகாசமான வெளிச்சத்தை அளிக்கிறது. அதிகப் பராமரிப்புத் தேவைப்படாத பைக், கிளாமர். இரண்டு பேர் சௌகரியமாக உட்கார்ந்து செல்லும் அளவுக்கு சீட்டின் வடிவமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது.
பலவீனம்
இன்ஜினின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. செயின் ஸ்பிராக்கெட்டில் அடிக்கடி பிரச்னைகள் வருகின்றன. உதிரி பாகங்களின் விலை அதிகம். கையாளுமை சிறப்பாக இல்லை. பின்பக்க பிரேக் இருந்தும் உபயோகம் இல்லை என்று சொல்லும் அளவுக்குப் பல நேரங்களில் செயலிழந்துவிடுகிறது. கியர் மாற்றுவதும் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. கிளாமர் எப்ஐன் விலை மிகவும் அதிகம்!
பஜாஜ் எக்ஸீட்
125சிசி வாகனங்களில் பஜாஜ் எக்ஸீட் விலை குறைவாகவும் அதிக சிறப்பம்சங்களுடனும் இருக்கிறது.
பலம்
பைக் ஓட்டுவதற்குச் சிறப்பாக இருப்பதோடு, அடிக்கடி கியர் மாற்ற வேண்டிய தொல்லையும் இல்லை. எடை குறைவாக இருப்பதால், ஓட்டுவதற்குச் சுலபம். புதிதாக பைக் ஓட்டக் கற்றுக்கொள்பவர்களுக்கு இது சுலபமாக இருக்கிறது. பேட்டரியின் திறன் குறைந்தால், அதை எச்சரிக்கை செய்வதற்கு அளிக்கப்பட்டிருக்கும் இண்டிகேட்டர் பயனுள்ளது.
பலவீனம்
எக்ஸீட்டின் செயல்பாடு மற்ற 125சிசி மோட்டார் சைக்கிள்களுக்கு இணையாக இல்லை. பிரேக் சிறப்பாக இல்லை. பின்பக்கத் தோற்றம் மிகவும் சுமார். உயரமானவர்களுக்கு இந்த பைக் சௌகரியமானதாக இல்லை.
ஹோண்டா ஷைன்
ஷைன் என்ற பெயருக்கேற்ப, இதன் 'பில்ட் குவாலிட்டி' மிக்க சிறப்பு!
பலம்
நெடுந்தூரம் பயணம் செய்தாலும் களைப்பை ஏற்படுத்தாத வகையில் பைக்கின் வடிவமைப்பு மற்றும் சீட்டுகள் சிறப்பாக இருக்கின்றன. நகருக்குள் ஓட்டுவதற்கும் எளிமையான வாகனம். மைலேஜும் போதுமானதாக இருக்கிறது. டயர் கிரிப் சிறப்பாக இருக்கிறது. டப் அப் டியூப் இருப்பதும் இதன் பலம்.
பலவீனம்
செயின் அடிக்கடி லூஸாகிவிடுகிறது. உதிரி பாகங்கள் மட்டுமல்ல, பைக்கே கறுப்பு நிறத்தைத் தவிர வேறு கலரில் வேண்டுமானால், காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஹோண்டாவின் சர்வீஸ் சென்டர்களும் குறைவு. பைக்கின் கைப்பிடி(ஹேண்டில்) பிடிப்பதற்கு வசதியாக இல்லை. ஹாரனின் சத்தம் குறைவு. ரீசேல் மதிப்பிலும் ஷைன் அடிக்கவில்லை ஷைன்!
யமஹா கிளாடியேட்டர்
கிளாடியேட்டர் மற்ற 125சிசி பைக்குகளைவிட செம ஸ்டைலாக இருக்கிறது.
பலம்
பிக்அப் சிறப்பாக இருக்கிறது. நீண்ட தூரம் பயணம் செய்தாலும் களைப்பை ஏற்படுத்தாத வாகனம். 5ஸ்பீடு கியர் பாக்ஸ் இருப்பது கூடுதல் பலம். இன்ஜினின் செயல்பாடும் திருப்திகரமாகவே உள்ளது. விலையும் ஓகே. புதிய கிளாடியேட்டரில் ஆர்எஸ் வகை பைக் ஸ்டைலாக இருக்கிறது.
பலவீனம்
ரீசேல் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. இன்ஜின் அதிகமாகச் சூடாகிறது. ஹெட்லைட்டின் மேல் இருக்கும் பேரிங் சின்ன விபத்தினால்கூட உடைந்துபோகிறது. புதிதாக வந்திருக்கும் கிளாடியேட்டரில் டோஷிப்ட் கியர் முறை இருப்பது வசதியாக இல்லை. இந்த வாகனத்தில் நம்பர் பிளேட்டை ஹெட்லைட் டூம் மீது வைத்திருப்பது, ரசிக்கும்படியாக இல்லை. பேட்டரிக்கு அருகே இருக்கும் டூல் கிட்டை வெளியே எடுப்பதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது.
ஹீரோ ஹோண்டா ஹங்க்
இன்ஜினின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. மற்ற 150சிசி பைக்குகளில் இருந்து மிகவும் மாறுபட்டு கம்பீரமானத் தோற்றம் தருகிறது ஹங்க்.
பலம்
பஞ்சர் தொல்லைகளில் இருந்து ஓரளவுக்கு காக்கும் டப் அப் டியூப் இருப்பது வசதியாக இருக்கிறது. இதன் மைலேஜ் ஓகே. ஹெட்லைட்டும் ஹேண்டிலும் சிறப்பு. ஹோண்டா யூனிகார்ன் இன்னும் கொஞ்சம் ஸ்டைலாக வேண்டும் என்பவர்களுக்கு ஹங்க் நல்ல சாய்ஸ்.
பலவீனம்
வெறும் டோ ஷிப்ட் கியர் லீவர் மட்டுமே இருப்பதால், கியர் மாற்றுவது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. கிட்டத்தட்ட பல்ஸர் விற்பனையாகும் அதே விலைக்கு விற்பனையாகும்போது டிஜிட்டல் மீட்டர், தானாகவே அணையும் இண்டிகேட்டர்கள் என எந்தவிதமான சிறப்பம்சங்களும் இதில் இல்லை. பின் சீட் மிகவும் உயரமாக இருப்பதால், ஏறி உட்காருவது மிகவும் சிரமம். இளைஞர்களை மட்டுமே குறிவைத்து களமிறக்கியிருக்கிறார்கள். இதன் டாப் ஸ்பீடு, மற்ற 150சிசி பைக்குகளுக்கு இணையாக இல்லை.
டிவிஎஸ் அப்பாச்சி
160சிசியில் ஒரு ரேஸ் பைக். அட்ஜஸ்டபிள் கிளிப்ஆன் ஹேண்டில் பாரை உயரத்துக்கு ஏற்றபடி கொஞ்சம் மாற்றிக்கொள்ள முடிகிறது.
பலம்
ஹெட்லைட்டுகள் மிகவும் பவர்புல்லாக இருப்பதோடு, ஆக்ஸிலரேட்டரைக் கொஞ்சம் முறுக்கினாலே பறக்கிறது. வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பாக இருப்பதோடு, பயமில்லாமல் பைக்கை வேகமாக ஓட்ட முடிகிறது. எப்போது சர்வீஸ் செய்ய வேண்டும் என்பதைத் தெரியப்படுத்த 'சர்வீஸ் ரிமைண்டர்' இண்டிகேட்டர் இருப்பது சூப்பர். சஸ்பென்ஷனும் சிறப்பாக இருக்கிறது. உயரம் குறைவானவர்கள் ஓட்டுவதற்கு வசதியான பைக் இது.
பலவீனம்
கியர்களை மாற்றுவது கொஞ்சம் கடினமாக இருக்கிறது. இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான பைக். உயரமானவர்கள் இந்த பைக்கை ஓட்டுவது சிரமம். இன்ஜினில் பவர் இருக்கிறது. ஆனால், ஸ்மூத்தாக இல்லை.
பஜாஜ் பல்ஸர் 150
ஸ்டைல், பர்பாமென்ஸ், மைலேஜ் என அத்தனை அம்சங்களையும் ஒருங்கே பெற்ற பைக், பல்ஸர்.
பலம்
இதன் பலம் டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர். ஆனால், டிஜிட்டல் மீட்டர்களோடு முதன்முதலில் வெளிவந்த பல்ஸர்களில், மழைக்காலத்தில் தண்ணீர் உள்ளேபோய் பிரச்னைகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள் பல்ஸர் வாடிக்கையாளர்கள். எல்ஈடி விளக்குகள், தானாகவே அணையும் இண்டிகேட்டர்கள் எனப் பல சிறப்பம்சங்களுடன் கிட்டத்தட்ட மற்ற 150சிசி வாகனங்கள் விற்பனையாகும் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுவது இதன் சிறப்பு. பல்ஸர் வருகிறது என்பதை கண்ணை மூடிக்கொண்டு அதன் சத்தத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம். பிக்அப்பும் சிறப்பாக இருக்கிறது.
பலவீனம்
ஹேண்டில் கிரிப் கை வலியை ஏற்படுத்துகிறது. அடிக்கடி செயின் லூஸாகிவிடுகிறது. பல்ஸரைப் பயன்படுத்தும் 90 சதவிகிதம் பேர் இரண்டு ஆண்டுகள் கழித்து செலவு வைப்பதாகவும், தொடர்ந்து ஏதாவது ஒரு பாகத்தை மாற்ற வேண்டிவருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். பல்ஸரை சர்வீஸ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. பஜாஜ் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்வதைவிட, பிரைவேட் மெக்கானிக்குகளிடம் சர்வீஸ் செய்வதைத்தான் பலரும் விரும்புகிறார்கள்!
|
No comments:
Post a Comment