00 சிசி, 125 சிசி, 150 சிசி, 220 சிசி என விரிந்து கிடக்கும் பைக் சந்தையில், மாதந்தோறும் புதுப் புது பைக்குகள் வந்து குவிவதால்...'எந்த பைக் எனக்கு ஏற்ற பைக்?' என்ற கேள்வி இங்கு எப்போதும் புதிதாகவே இருக்கிறது. டிவிஎஸ், பஜாஜ் துவங்கி ஹோண்டா, சுஸூகி, யமஹா என உள்நாட்டு நிறுவனங்களோடு சேர்ந்து, பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியச் சந்தைக்குள் சடுகுடு விளையாடுவதால், எந்த பைக் அதிக மைலேஜ் கொடுக்கும்? எது பர்ஃபாமென்ஸில் கில்லி... என மனசுக்குள் அலை அலையாய் அடிக்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு அடுத்து வரும் பக்கங்கள் பதில் சொல்லும்...
இந்தியாவில் வேறு எந்த பைக்கும் படைத்திராத சாதனையாக, 1 கோடி பைக்குகள் விற்பனையாகி புரட்சி செய்துள்ள பைக் இது!
புதிய ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் இப்போது அலாய் வீல்களுடனும் கிடைக்கிறது. ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், ஸ்ப்ளெண்டர் என்.எக்ஸ்.ஜி என இரண்டு மாடல்கள் வெளிவருகின்றன. இரண்டுக்கும் செல்ஃப் ஸ்டார்ட்டர், ஸ்டிக்கர் போன்ற மாற்றங்களைத் தாண்டி இன்ஜின், கியர் பாக்ஸ் என எதிலும் வித்தியாசம் கிடையாது!
பர்ஃபாமென்ஸ் போதுமா?
97.2 சிசி கொண்ட அதே இன்ஜின்தான். இருப்பினும், காலத்துக்கு ஏற்ப இதில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் சக்தி 7.5 bhp. வேகமாகப் பறக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த பைக் சரியான தேர்வு இல்லை. ஆனால், 40-50 கி.மீ வேகத்தில் அதிர்வுகளோ, முதுகு வலிப் பிரச்னைகளோ எதுவும் இன்றி, வசதியாக அலுவலகம் சென்று வருவதற்கு சரியான பைக்காக இருக்கிறது ஸ்ப்ளெண்டர். கியர் ஷிஃப்ட்டும் ஸ்மூத்! 'கட முடா' பிரச்னைகள் எதுவும் கிடையாது.
சௌகரியமாகப் பயணம் போகலாமா?
ஸ்ப்ளெண்டரின் பெரிய பலமே இதன் எர்கோனாமிக்ஸ்தான்! ஹேண்டில் பாரில் கைகளைச் சரியாகப் பிடித்து, பெட்ரோல் டேங்க்கை அணைத்து கால்கள் வைத்து உட்காருவதற்கு சரியான ரைடிங் பொசிஷன் இதில் உண்டு. இதனால், நீண்ட தூரம் பயணம் செய்தாலும் எந்த அசௌகரியமும் கிடையாது! அதேபோல், நகர நெருக்கடிகளில் சிக்கினாலும் லாவகமாக மீண்டு வருவதற்கு ஏற்ற வகையில் இதன் கையாளுமை சூப்பர்.
மைலேஜ் எவ்வளவு?
40-50 கி.மீ-யில் சீரான வேகத்தில் செல்லும்போது, நகருக்குள் லிட்டருக்கு 68 கி.மீ மைலேஜ் தருகிறது. ஆனால் டிராஃபிக் நெருக்கடியில், மோசமான சாலைகளில் ஓட்டும்போது, நகருக்குள் 57 கி.மீ மைலேஜ் தருகிறது ஸ்ப்ளெண்டர் ப்ளஸ். நகரம், நெடுஞ்சாலை என இரண்டு தரப்பட்ட சாலைகளில் ஓட்டும்போது லிட்டருக்கு 58.2 கி.மீ மைலேஜ் தருகிறது!
அன்றாடப் பயன்பாட்டுக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் சென்று வர சரியான பைக் ஸ்ப்ªளண்டர் ப்ளஸ். அதிர்வுகள் இல்லாத ஸ்மூத்தான இன்ஜின், அற்புதமான கையாளுமை, நல்ல மைலேஜ் ஆகியவை ஸ்ப்ளெண்டரை மற்ற மோட்டார் சைக்கிள்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. மேலும், சர்வீஸ் செலவுகள் வைக்காத பைக் என்ற பெயரும் பெற்றது. ஸ்பேர் பார்ட்ஸுகளின் விலை மற்ற 100 சிசி பைக்குகளைவிட அதிகம் என்றாலும், பிரச்னைகள் பெரிதாக ஸ்ப்ளெண்டரில் வருவது இல்லை! ஆனால், ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கின் விலையை மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் அதிகம்!
ஹீரோ ஹோண்டாவின் நம்பகத்தன்மை வாய்ந்த இன்னொரு 100 சிசி பைக் இது. பேஸன் ப்ளஸ் பைக்கை வாங்கியவர்கள் மீண்டும் இதே பைக்கை வாங்குவதே இதன் நம்பகத்தன்மைக்குச் சான்று.
ஸ்டைல் ஓகேவா?
ஸ்ப்ளெண்டரின் தோற்றம் பிடிக்கவில்லை என்பவர்களை, பேஸன் ப்ளஸ் நிச்சயம் கவரும். இதில், பேஸன் ப்ளஸ் மற்றும் பேஸன் ப்ரோ என இரண்டு மாடல்கள் உள்ளன. இரண்டு மாடல்களுக்கும் கலரில்தான் பெரிய வித்தியாசம்.
என்னென்ன வசதிகள்?
வசதிகளைப் பொறுத்தவரை பேஸன் ப்ளஸில் அலாய் வீலும், பேஷன் ப்ரோவில் டிஸ்க் பிரேக் வசதியும் இருக்கின்றன. டிஜிட்டல் மீட்டர்களோ, ஆட்டோமேட்டிக் இண்டிகேட்டர் வசதிகளோ கிடையாது.
இன்ஜின் பலமா?
ஸ்ப்ளெண்டரில் இருக்கும் அதே 97.2 சிசி இன்ஜின்தான். இது அதிகபட்சமாக 7.5 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 70 கி.மீ வேகம் வரை எந்தத் திணறலும் இல்லாமல் செல்கிறது பேஸன் ப்ளஸ் இன்ஜின்.
சௌகரியம் எப்படி?
கையாளுமை மற்றும் ஓட்டுதல் தரத்தில் இது ஸ்ப்ளெண்டருக்குச் சற்றும் சளைத்தது கிடையாது. நீண்ட தூரப் பயணம் செய்தாலும் இருக்கையும், கைப்பிடியும் எந்த வலியையும் ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
மைலேஜ் எப்படி?
ஸ்ப்ளென்டரைப் போலவே அதிக மைலேஜ் தருகிறது பேஸன் ப்ளஸ். 50 கி.மீ வேகத்தில் சீராகச் செல்லும்போது 70 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. ஆனால், அனைத்து விதமான சாலைகளிலும் ஓட்டும்போது, லிட்டருக்கு 57 கி.மீ மைலேஜ் தருகிறது பேஸன் ப்ளஸ்!
அன்றாடப் பயன்பாட்டுக்கான பைக் பேஸன் ப்ளஸ். 100 சிசி பைக்குகளிலேயே கொஞ்சம் கம்பீரமான தோற்றம் கொண்ட பைக்கும் இதுதான். இன்ஜின், மைலேஜ், கையாளுமை என அத்தனையிலும் அப்படியே ஸ்ப்ளெண்டரை நினைவுப்படுத்துகிறது! டிஸ்க் பிரேக் வசதியும் இதில் உண்டு. இருக்கை - சொகுசாகவும், அலுப்பை ஏற்படுத்தாத வகையிலும் இருக்கிறது. சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் பிரச்னையும் கிடையாது. இதன் பாகங்கள் நீண்ட காலம் உழைக்கும் என்று பெயர் பெற்றவை. ஆனால், பேஸன் ப்ளஸின் விலை மட்டும் கொஞ்சம் அதிகம்!
பிரீமியம் பைக் மார்க்கெட்டில் போராடிக்கொண்டு இருக்கிறது ஹீரோ ஹோண்டா. பஜாஜ் பல்ஸரின் அதிரடியால் பின்னுக்குப் போன ஹீரோ ஹோண்டாவின் 150 சிசி பைக்குகள்... யமஹாவின் வருகையால் மேலும் அமுங்கிக் கிடக்கிறன.
ஹங்க்கின் ஸ்டைல் ஓகேவா?
பிரம்மாண்டமான முரட்டு பைக்காகக் காட்சி தருகிறது ஹங்க். ஆனால், 5 ஸ்போக் அலாய் வீல், ஹெட் லைட்டுடன் இணைந்திருக்கும் இண்டிகேட்டர் விளக்குகள், கவர்ச்சியான டேங்க் ஸ்கூப் என ஸ்டைலுக்கு முக்கியத்துவம் தந்து வடிவமைக்கப்பட்டு இருக்கும் ஹீரோ ஹோண்டாவின் பைக் இது!
வசதிகள் சுமாரா?
வசதிகளைப் பொறுத்தவரை மிகவும் சுமாரான பைக். 150 சிசி பைக்குகள் எல்.ஈ.டி விளக்குகள், டிஜிட்டல் மீட்டர் எனப் பல புதிய வசதிகள் வந்துவிட்ட நிலையில், இன்னும் சாதாரண அனலாக் மீட்டருடன் இருக்கிறது ஹங்க்.
பர்ஃபாமென்ஸ் போதுமா?
ஹோண்டா யூனிகார்ன் மற்றும் ஹீரோ ஹோண்டா சிபிஸீ எக்ஸ்ட்ரீம் ஆகிய பைக்குகளில் இருக்கும் அதே இன்ஜின்தான் இதிலும் இருக்கிறது. பர்ஃபாமென்ஸ் சுமார் என்பதால், பல்ஸருடன் போட்டி போடும் அளவுக்கு இது இல்லை. 14.4 bhp சக்தியைக் கொண்ட ஹங்க்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 107 கி.மீ.
அதிர்வுகள் அதிகமா?
ஹங்க்கில் 80 கி.மீ வேகத்துக்கு மேல் செல்லும்போது அதிர்வுகள் அதிகமாக இருக்கிறது. கைப்பிடி, மற்றும் ஃபுட் ரெஸ்ட்டில் அதிகப்படியான அதிர்வுகள் தெரிவதால், நெடுஞ்சாலையில் ஓட்டும்போது சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மைலேஜ் எவ்வளவு?
ஹீரோ ஹோண்டா ஹங்க் - நகருக்குள் லிட்டருக்கு 46.9 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 50.2 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.
மிரட்டலான பைக்காக இருக்கிறது ஹீரோ ஹோண்டா ஹங்க். ஆனால், தோற்றத்தில்இருக்கும் மிரட்சி... பர்ஃபாமென்ஸிலும், மைலேஜிலும் இல்லை. வசதிகளும் மற்ற பைக்குகளுடன் போட்டி போடும் அளவுக்கு இல்லை என்பதோடு, அதிர்வுகளும் அதிகமாக இருக்கிறது.நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜினும், 50-60 கி.மீ வேகத்தில் சௌகரியமாகப் பயணிப்பதற்கும் சரியான பைக்காக இருக்கிறது ஹங்க். ஆனால், பலத்த போட்டி வாய்ந்த 150 சிசி மார்க்கெட்டில், வலுவிழந்து போட்டி போட பலம் இல்லாமல் இருக்கிறது ஹீரோ ஹோண்டா ஹங்க்.
கரீஸ்மா, கரீஸ்மா ZMR என இரண்டு மாடல்களுடன் வெளிவருகிறது இந்த பைக். ZMR-ல் ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின் உள்பட பல புதிய வசதிகள் உண்டு.
ஸ்டைல் சூப்பரா?
ஃபுல் ஃபேரிங்குடன் வெளிவந்திருக்கிறது கரீஸ்மா. பைக்கை நேராக நின்று பார்க்கும்போது அசத்தலாக இருக்கும் இதன் தோற்றம், பக்கவாட்டில் பார்க்கும்போது கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது. இந்த பைக்குடன் ஃபேரிங் பொருந்தாதது போலவே தோற்றமளிக்கிறது.
புதிய வசதிகள் என்னென்ன?
கரீஸ்மா ZMR-ல் நீளமான வைஸர், டேக்கோ மீட்டர் உள்பட அத்தனையும் டிஜிட்டலில் இருக்கிறது. க்ளிப் ஆன் ஹேண்டில் பார், பின்பக்க டிஸ்க் பிரேக், ட்யூப்லெஸ் டயர் என 200 சிசி செக்மென்ட் பைக்குகளில் உள்ள பல வசதிகளுடன் வெளிவந்திருக்கிறது கரீஸ்மா ZMR. சாதாரண கரீஸ்மாவில் இந்த வசதிகள் எதுவும் கிடையாது.
ஃப்யூல் இன்ஜெக்ஷன் பலன் தருமா?
கிளாமர் மற்றும் ஹோண்டா சிபிஎஃப் ஸ்டன்னர் ஆகிய பைக்குகளில் இருக்கும் பிஜிஎம்-எஃப்.ஐ தொழில்நுட்பத்துடன் வெளிவந்திருக்கிறது கரீஸ்மா ZMR. ஏற்கெனவே இருந்த 223 சிசி இன்ஜினுடன்தான் இந்த ஃப்யூல் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பமும் சேர்ந்திருக்கிறது. ஆனால், பவரில் பெரிய மாற்றங்கள் இல்லை. சாதாரண கரீஸ்மாவுக்கும், ஃப்யூல் இன்ஜெக்ஷன் கரீஸ்மாவுக்கும் வெறும் 0.6 bhp சக்திதான் வித்தியாசம். சாதாரண கரீஸ்மா 0-60 கி.மீ வேகத்தை 4.84 விநாடிகளில் கடக்க... ஃப்யூல் இன்ஜெக்ஷன் கரீஸ்மா இதே வேகத்தை 4.56 விநாடிகளில் கடக்கிறது.
மைலேஜ் எப்படி?
சாதாரண கரீஸ்மா - பொதுவாக லிட்டருக்கு 45 கி.மீ-யும், கரீஸ்மா ZMR 40.2 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.
கரீஸ்மா என்ற பெயரும், தோற்றமும் இன்னமும் இளைஞர்களை ஈர்க்கிறது! ஆனால், சாதாரண கரீஸ்மாவையும், ஃப்யூல் இன்ஜெக்ஷன் கரீஸ்மாவையும் வசதிகளில் வித்தியாசப்படுத்தி இருக்கும் ஹீரோ ஹோண்டா, முக்கியமான விஷயத்தில் கோட்டைவிட்டுவிட்டது. பர்ஃபாமென்ஸில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதோடு மைலேஜிலும் பின்தங்கிவிட்டது கரீஸ்மா ZMR. மேலும், விலையும் எக்கச்சக்கம்! அதனால், கரீஸ்மாவை வாங்குவதென்று முடிவெடுத்துவிட்டால், சாதாரண கரீஸ்மாவை வாங்குவதே நல்லது!
100 சிசி மாஸ் மார்க்கெட்டில் பஜாஜின் துருப்புச் சீட்டு - டிஸ்கவர் 100 சிசி. ஹீரோ ஹோண்டாவின் கோட்டையான இந்த 100 சிசி மார்க்கெட்டில் ஊடுருவி, தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் வீரன் இந்த டிஸ்கவர்.
ஸ்டைல் அனைவரையும் கவருமா?
டிஸ்கவர் என்ற பெயரை, தொடர்ந்து இந்த 100 சிசி பைக்குக்கும் பஜாஜ் வைத்திருப்பதற்குக் காரணமே, பெரிய பைக் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்குத்தான். ஸ்டைலில் உறுத்தல் இல்லாத டிசைனுடன் வெளிவந்திருக்கிறது டிஸ்கவர் 100. முன்பக்க ஸ்கூப், டெயில் விளக்குகள் என அத்தனையும் கம்பீரம்.
வசதிகள் என்னென்ன?
100 சிசி பைக்குகளில், அதிக வசதிகளைக்கொண்ட பைக் டிஸ்கவர் 100. அலாய் வீல், எல்ஈடி விளக்குகள், ட்ரிப் மீட்டர், ரைடு கன்ட்ரோல் சுவிட்ச், ஆட்டோ ஷோக், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் என வசதிகள் பல! ஆனால், டிஸ்க் பிரேக் வசதி மட்டும் இல்லை.
பர்ஃபாமென்ஸ் எப்படி?
94.38 சிசி இன்ஜின் கொண்ட டிஸ்கவர் 100, அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.7 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 5000 ஆர்பிஎம்-ல் 0.8 ளீரீனீ டார்க்கைக் தருகிறது. நான்காவது கியரில் 30 கி.மீ வேகத்தில் சென்றாலும், இன்ஜின் டக்கென்று நின்றுவிடாமல் தொடர்ந்து இயங்குகிறது. 100 சிசி பைக்குகளுக்கு அவசியமான இந்தத் தேவையை, டிஸ்கவர் 100 பெற்றிருப்பது பெரிய பலம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கி.மீ.
அலுப்பு இல்லாமல் பயணிக்கலாமா?
வசதியான இருக்கையும், சரியான உயரத்தில் இருக்கும் ஹேண்டில் பாரும் அசௌகரியத்தை ஏற்படுத்தவில்லை. அதனால், நீண்ட தூரம் பயணிக்கும்போது அலுப்பு தெரியவில்லை.
மைலேஜ் எவ்வளவு?
சீரான வேகத்தில் லிட்டருக்கு 80 கி.மீ மைலேஜ் தந்து ஆச்சரியப்படுத்துகிறது. டிராஃபிக் நெருக்கடிகளில் ஓட்டும்போது, நகருக்குள் 62 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 67.1 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.
டிஸ்கவர் என்ற பெயரும், தோற்றமும் பழையது என்பதால், இந்த 100 சிசி பைக், 'புது பைக்' என சட்டென்று மனதில் பதிய மறுக்கிறது.
ஆனால், 100 சிசி பைக்குக்குத் தேவையான அத்தனை பலமும் இதில் உள்ளன. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், ஆட்டோ ஷோக், அலாய் வீல் என காலத்துக்கு ஏற்ப புதிய வசதிகளும் இதில் சேர்ந்திருக்கின்றன. மைலேஜைப் பொறுத்தவரை ஸ்ப்ளெண்டரை வீழ்த்திவிடுகிறது டிஸ்கவர் 100.
ஸ்டைலான... கொஞ்சம் விலை அதிகமான பைக் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டாலே சட்டென நினைவுக்கு வரும் ஒரே சாய்ஸ் பல்ஸர் 150. பிரீமியம் பைக் மார்க்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய பைக் என்பதோடு, பல புதிய வசதிகளையும் இந்திய பைக் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பைக் இது.
நம்பகத்தன்மை எப்படி?
பல்ஸர் - நம்பகத்தன்மைக்கும், நீடித்த உழைப்புக்கும் பெயர் பெற்றிருக்கிறது, பில்டு குவாலிட்டியிலும் குறை இல்லை. சுவிட்ச், லீவர் மற்றும் பிளாஸ்டிக்குகள் தரமாக இருக்கின்றன.
வசதிகள் என்னென்ன?
டிஜிட்டல் மீட்டர், எல்ஈடி டெயில் லேம்ப், ட்வின் ஸ்பார்க் இன்ஜின், அலாய் வீல், டிஸ்க் பிரேக் என பல வசதிகளுடன் இருக்கிறது பல்ஸர் 150.
பர்ஃபாமென்ஸ் போதுமா?
ஸ்டைலுக்கு ஏற்றபடியே பர்ஃபாமென்ஸில் நிறைவை ஏற்படுத்தும் பைக்காக இருக்கிறது பல்ஸர் 150. 149.1 சிசி திறன்கொண்ட இன்ஜின் அதிகபட்சமாக 14.1 bhp சக்தியை அளிக்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 110 கி.மீ. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்துவதற்குச் சுலபமாக இருக்கிறது. 150 சிசி-க்கு ஏற்ற பர்ஃபாமென்ஸும் உண்டு.
சௌகரியமான பைக்தானா பல்ஸர் 150?
இளைஞர்களைக் கவரும் தோற்றத்துடன் இருந்தாலும், 40-50 வயதினரும் பயன்படுத்தும் அளவுக்கு சௌகரியமான பைக்தான். சென்னை போன்ற பெருநகரங்களில், வளைவு நெளிவுகளில் புகுந்து செல்வதற்கும் வசதியான பைக் பல்ஸர் 150.
மைலேஜ் எவ்வளவு?
நகரம், நெடுஞ்சாலை என இரண்டுவிதமான சாலைகளில் பயணிக்கும்போது, பொதுவாக லிட்டருக்கு 52 கி.மீ மைலேஜ் தருகிறது பல்ஸர் 150.
ஸ்டைல், பர்ஃபாமென்ஸ், மைலேஜ் என மூன்றும் கொண்ட விலை குறைவான, நம்பகத்தன்மை வாய்ந்த 150 சிசி பைக், பல்ஸர் 150. சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸில் பெரிய தொகை பில்லைக் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தாத பைக்! இதில், இருவர் சௌகரியமாக உட்கார்ந்து பயணிக்க முடியும் என்பதோடு, நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்றபடியும் இருக்கிறது பல்ஸர் 150. லிட்டருக்கு 52 கி.மீ என்பது, 150 சிசி பைக்குக்கு ஓகேவான மைலேஜ்தான். யமஹாவின் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, இதன் விலையும் குறைவு. பிரீமியம் பைக் மார்க்கெட்டில் புதிதாக பைக் வாங்குபவர்களுக்கு இது முதல் பைக்காக இருக்கும்.
இந்தியாவின் பவர்ஃபுல் பைக், பஜாஜ் பல்ஸர் 220. வேகத்தை விரும்பும் இளைஞர்களுக்கு, குறைந்த விலையில் பவர்ஃபுல் பைக்கைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறது பஜாஜ்.
பல்ஸர் 220-ன் பலம் என்ன?
பார்த்துப் பார்த்துப் பழகிய தோற்றத்தில் பல்ஸர் இருந்தாலும், ஸ்டைலில் அப் டு டேட்டாக இருக்கிறது. இரட்டை ஹெட் லைட்ஸும், இரட்டை ஹாரனும் பவர்ஃபுல் பைக்குக்கு ஏற்றபடியே பவர்ஃபுல்லாக இருக்கின்றன. மேலும், வேறு எந்த பைக்கிலும் இல்லாத வசதியான ஆட்டோமேட்டிக் இண்டிகேட்டர் வசதி இதில் இருக்கிறது. இது தவிர அலாய் வீல், பட்டன் ஸ்டார்ட், டிஜிட்டல் மீட்டர், இரண்டு டிஸ்க் பிரேக் என பல்ஸரின் பலங்கள் அதிகம்!
பல்ஸரின் பர்ஃபாமென்ஸில் அப்படி என்ன இருக்கிறது?
220 சிசி ஆயில் கூல்டு இன்ஜினைக் கொண்டிருக்கிறது பல்ஸர் 220. பழைய பல்ஸரில் இருந்த ஃப்யூல் இன்ஜெக்ஷன் இதில் கிடையாது. அதற்குப் பதில் இன்ஜின் பவரை அதிகரித்திருக்கிறார்கள். 8500 ஆர்பிஎம்-ல் அதிகபட்சமாக 21.04 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 0-60 கி.மீ வேகத்தை வெறும் 3.77 விநாடிகளில் கடக்கும் பல்ஸர், 0-100 கி.மீ வேகத்தை 12.15 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 133 கி.மீ. தினமும் 50 முதல் 60 கி.மீ வரை பயணம் செய்தாலும், தூரம் தெரியாத அளவுக்கு வேகமான பயண அனுபவத்தை அளிக்கிறது பல்ஸர் 220. ஓட்டுதல் மற்றும் கையாளுமையும் ஓகே!
பல்ஸரின் மைனஸ் என்ன?
அதிக வேகத்தில் செல்லும்போது அதிர்வுகள் அதிகமாக இருப்பதுதான் பல்ஸரின் மைனஸ். குறிப்பாக, 90-100 கி.மீ வேகத்தைத் தாண்டிவிட்டால், அதிர்வுகள் உச்சகட்டத்தை அடைந்துவிடுகின்றன. ரியர் வியூ கண்ணாடிகள் ஆடும் ஆட்டத்தைப் பார்க்கும்போது, 'வேகத்தைக் குறைத்துவிட்டால் நல்லது' என்கிற எண்ணம் வந்துவிடுகிறது. பவர்ஃபுல் இன்ஜினின் மைலேஜும் நிச்சயம் குறைவாகத்தானே இருக்கும்! நகருக்குள் லிட்டருக்கு 33.3 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 35.5 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.
இந்தியாவின் வேகமான பைக் என்பதை வெறும் விளம்பரமாக மட்டும் அல்லாமல், உண்மையாகவே நிரூபித்துக் காட்டி இருக்கிறது பஜாஜ். பல்ஸர் என்ற பெயர் இன்றைய இளைஞர்களின் மனதில் கொஞ்சம் பழைய பைக் என்ற எண்ணத்தை வரவழைக்கும். ஆனால், இப்போதிருக்கும் பிரீமியம் பைக்குகளுடன் போட்டி போடும் அளவுக்கு, கிட்டத்தட்ட எல்லா வசதிகளையுமே கொண்டிருக்கிறது பல்ஸர் 220. நகருக்குள் வளைத்து நெளித்து ஓட்டவும், நெடுஞ்சாலையில் பறக்கவும் பல்ஸர் 220 நல்ல சாய்ஸ். மேலும், மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது பல்ஸர் 220.
தேவை, 'ஸ்டைலா அல்லது சௌகரியமான பயணமா' என்பதை முடிவு செய்துவிட்டால், 'ஷைன் வாங்கலாமா, வேண்டாமா' என்ற கேள்விக்கான விடை கிடைத்துவிடும்.
ஸ்டைல் வேண்டுமா?
ஸ்டைலுக்கு முக்கியத்துவம் தராமல், பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கும் பைக் ஹோண்டா ஷைன். மற்ற 125 சிசி பைக்குகளில் இருக்கும் பளபளப்பான அம்சங்கள் இதில் கிடையாது?
ஷைனில், என்ன உண்டு; என்ன இல்லை?
ஆரம்பத்தில் செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல், டிஸ்க் பிரேக் என எந்த வசதியுமே இல்லாமல் விற்பனைக்கு வந்த ஷைனில், இப்போது இந்த வசதிகள் அனைத்துமே உள்ளன. ஆனால் கவர்ச்சியான ஹெட் லைட், டேங்க் ஸ்கூப், டிஜிட்டல் மீட்டர்கள் போன்ற இளைஞர்களைக் கவரக்கூடிய எந்த அம்சங்களும் இல்லை.
பர்ஃபாமென்ஸ் எப்படி?
ஹோண்டாவின் இன்ஜின் என்றாலே ஸ்மூத்தாகத்தான் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறது ஷைன். 10.3 bhp சக்தி கொண்ட இதன் இன்ஜினின் பர்ஃபாமென்ஸ், போதுமான அளவுக்கே இருக்கிறது. வேகம் இல்லை. ஆனால், நெடுஞ்சாலையில் 60 கி.மீ வேகத்தில் அதிர்வுகள் எதுவும் இன்றி அமைதியாகப் பயணிக்க, சரியான பைக்காக இருக்கிறது ஷைன்.
மைலேஜ் அதிகம் தருமா?
மைலேஜைப் பொறுத்தவரை ஆச்சரியப்படுத்துகிறது ஷைன். ஸ்மூத்தான இதன் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் அதிக மைலேஜை உறுதிப்படுத்துகின்றன. ஷைன், பொதுவாக லிட்டருக்கு 63 கி.மீ மைலேஜ் தருகிறது!
அசரடிக்கும் ஸ்டைல், அட்டகாசமான பர்ஃபாமென்ஸ் என எதுவும் ஹோண்டா ஷைனில் கிடையாது. ஆனால் சௌகரியமான பயணம், ஸ்மூத்தான - அதிர்வுகள் அற்ற இன்ஜின், நல்ல மைலேஜ் என பயன்பாட்டுக்கான பைக்காக இருக்கிறது. விலையும் ஓகேதான். 55,000 ரூபாய் பட்ஜெட்டில், இருவர் சௌகரியமாக நீண்ட தூரம் பயணம் செய்யவும், அன்றாடம் அலுவலகத்துக்குச் சென்று வரவும் சரியான பைக் ஷைன். ஹோண்டாவின் சர்வீஸில் சில பிரச்னைகள் இருந்தாலும், ஸ்பேர் பார்ட்ஸுகளின் விலை குறைவு. அதனால், 125 சிசி செக்மென்டில் நம்பி வாங்கக்கூடிய பைக்காக இருக்கிறது ஷைன்.
ஸ்கூட்டர் மார்க்கெட்டில் நிரந்தரமான முதலிடம் பிடித்துவிட்டது ஆக்டிவா. கல்லூரிப் பெண்களைத் தாண்டி... வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என வீட்டில் உள்ள அனைவருமே பயன்படுத்தும் ஸ்கூட்டராக இருப்பதுதான் ஆக்டிவாவின் சக்ஸஸ் ஃபார்முலா!
ஸ்டைலாக இல்லையே ஆக்டிவா?
ஸ்டைலில் மிரட்டல்களோ அல்லது வசதிகளில் புதுமையோ ஆக்டிவாவில் கிடையாது. சீட்டுக்கு முன் பக்கம் பொருட்கள் வைத்துக்கொள்ளவோ, சீட்டைத் திறக்காமல் பெட்ரோல் நிரப்புவதோ இதில் முடியாது. ஆனால் ஃபிட் அண்டு ஃபினிஷ், பில்டு குவாலிட்டியில் தரமான ஸ்கூட்டராக இருக்கிறது ஆக்டிவா.
இன்ஜினில் என்ன புதுமை?
109 சிசி இன்ஜினுடன் வெளிவந்திருக்கிறது புதிய ஆக்டிவா. இதன் சக்தி 8 bhp. 0-60 கி.மீ வேகத்தை 10.16 விநாடிகளில் கடக்கிறது. ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களைப் பொறுத்தவரை இந்த பர்ஃபாமென்ஸ் திருப்திகரமானதுதான். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 88 கி.மீ. ஹோண்டாவுக்கே உரித்தான அதிர்வுகள் அற்ற ஸ்மூத்தான இன்ஜினைக் கொண்டிருக்கிறது ஆக்டிவா.
சௌகரியமாக ஓட்ட முடியுமா?
இருக்கை அகலமாகவும், வசதியாக உட்கார்ந்து ஹேண்டில் பாரைப் பிடிக்கவும் சரியாக இருக்கிறது. சஸ்பென்ஷனும் ஸ்மூத்தாக இருப்பதால், மேடு பள்ளங்களில் அலுங்கல் குலுங்கல்கள் அதிகமாக இல்லை. ஆனால், உயரம் குறைவான பெண்கள் இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு சற்று சிரமப்பட வேண்டியது இருக்கும்.
மைலேஜ் எப்படி?
போட்டி ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது இது நல்ல மைலேஜைத் தருகிறது. நகருக்குள் லிட்டருக்கு 41.9 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 46.9 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது ஆக்டிவா.
ஆண்கள், பெண்கள் என இருவருமே பயன்படுத்தக்கூடிய ஸ்கூட்டராக இருப்பது ஆக்டிவாவின் பலம். பிரச்னையில்லாத ஹோண்டாவின் இன்ஜின், சிறப்பான ஓட்டுதல் மற்றும் கையாளுமை, ஸ்ட்ராங்கான பில்டு குவாலிட்டி, திருப்திகரமான மைலேஜ் என ஒரு முழு ஸ்கூட்டராக இருக்கிறது ஹோண்டா ஆக்டிவா. ஸ்டைலிலும், வசதிகளிலும் புதுமைகள் எதுவும் கிடையாது என்பதோடு, இளம் பெண்கள் மற்றும் உயரம் குறைவான பெண்கள் ஆக்டிவாவை ஓட்டுவது சற்று சிரமம். மேலும் மற்ற ஸ்கூட்டர்களைவிட இதன் விலையும் கொஞ்சம் அதிகமே!
125 சிசி பைக்குகளில் ஸ்டைலான, இளைஞர்களை ஈர்க்கக்கூடிய ஸ்போர்ட்டி பைக் ஹோண்டா சி.பி.எஃப் ஸ்டன்னர். ஃப்யூல் இன்ஜெக்ஷன் கொண்ட இன்ஜினுடனும் கிடைக்கிறது.
உண்மையிலேயே ஸ்டைலாக இருக்கிறதா ஸ்டன்னர்?
ஒரு குட்டி ஸ்போர்ட்ஸ் பைக் போல இருப்பதால், இது இளைஞர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது. ஸ்டைலைப் பொறுத்தவரை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது இருக்கும் பிரம்மாண்டம், நேராகப் பார்க்கும்போது இல்லை. '150 சிசி பைக்கை வாங்கக் கூடாது, 125 சிசி பைக் என்றால் ஓகே' என்று பெற்றோர் கண்டிஷன் போட்டால், இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ் சி.பி.எஃப் ஸ்டன்னர்தான்.
வசதிகள் என்னென்ன?
ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றம்தான் என்றாலும், வசதிகள் எதுவும் ஸ்போர்ட்ஸ் பைக்குக்கானதாக இல்லை. டிஜிட்டல் மீட்டர்கள் இல்லை என்பதுகூட ஓகே! டேக்கோ மீட்டர், பார்க்கிங் லைட் போன்ற முக்கியமான விஷயங்கள்கூட ஸ்டன்னரில் மிஸ்ஸிங். அலாய் வீல், டிஸ்க் பிரேக் போன்ற வசதிகள் மட்டுமே உள்ளன.
பர்ஃபாமென்ஸில் கோளாறா?
124.7 சிசி இன்ஜின் கொண்ட சி.பி.எஃப் ஸ்டன்னர் கொடுப்பதோ 11 bhp சக்தி. இது 0-60 கி.மீ வேகத்தை 6.73 விநாடிகளில் கடக்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 101 கி.மீ. நகரின் டிராஃபிக் நெருக்கடிகளில் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு சுலபமாக இருக்கிறது. நெடுஞ்சாலையில் பயணிக்கும் அளவுக்கு இதன் இன்ஜின் பர்ஃபாமென்ஸ் சிறப்பாக இல்லை. ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜினுடன் கிடைக்கும் சி.பி.எஃப் ஸ்டன்னரின் பர்ஃபாமென்ஸும் சிறப்பாக இல்லை. மைலேஜிலும் பெரிய வித்தியாசம் கிடையாது.
மைலேஜ் எவ்வளவு?
கார்புரேட்டர் கொண்ட சி.பி.எஃப் ஸ்டன்னர் நகருக்குள் லிட்டருக்கு 54.2 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 57 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.
கல்லூரிக்கு பைக்கில் பறக்கும் இளைஞர்களை, ஒரே பார்வையில் கவர்ந்துவிடும் பைக்காக இருக்கிறது சி.பி.எஃப் ஸ்டன்னர். ஆனால், பர்ஃபாமென்ஸ் சுமார் ரகம்தான்.
டிஜிட்டல் மீட்டர், எல்.ஈ.டி விளக்குகள் என புதுமையான வசதிகள் எதுவும் இதில் கிடையாது. ஃப்யூல் இன்ஜெக்ஷன் இன்ஜின் கொண்ட மாடலின் விலை ஏகத்துக்கும் அதிகம் என்பதோடு பர்ஃபாமென்ஸ், மைலேஜ் என எதிலுமே பெரிய முன்னேற்றம் இல்லை. ஸ்டைலான பைக் வேண்டும்; பர்ஃபாமென்ஸும், வேகமும் முக்கியம் இல்லை என்றால், ஸ்டன்னரை வாங்கலாம்!
சுஸூகியின் தரமான 150 சிசி பைக் ஜி.எஸ்.150 ஆர். 150 சிசி செக்மென்டில் உள்ள மற்ற பைக்குகளில் இல்லாத சில சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது!
சுஸூகி பைக்கை வாங்கலாமா?
உலகெங்கும் 'நம்பிக்கையான நிறுவனம்' எனப் பெயர் பெற்றது சுஸூகி. டிவிஎஸ்ஸுடன் இருந்த உறவைத் துண்டித்து, தனியாகக் களமிறங்கிய பிறகு கொஞ்சம் கவனமாக தனது மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 100 சிசி, 125 சிசி இன்னொரு 150 சிசி பைக்குகள் என பல புதிய அறிமுகங்களைச் செய்ய இருக்கிறது சுஸூகி. சேல்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டர்களும் புதிதாகத் திறக்கப்பட உள்ளன. அதனால், சுஸூகி பைக்குகளை வாங்குவது குறித்து அதிகம் யோசிக்கத் தேவையில்லை.
சுஸூகி ஜி.எஸ் 150 ஆரில் என்ன ஸ்பெஷல்?
ஸ்ப்ளிட் சீட், 2 பீஸ் ஹேண்டில் பார், மோனோ ஷாக் என கவர்ச்சி அம்சங்கள் இதில் கிடையாது. ஆனால் பவர்ஃபுல்லான, உபயோகமான டிஜிட்டல் மீட்டர், எந்த கியரில் சென்றுகொண்டு இருக்கிறோம் என்பதைக் காட்டும் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் என புதிய அம்சங்கள் இதில் உள்ளன.
பர்ஃபாமென்ஸ் ஓகேவா?
ஹோண்டா யூனிகார்ன் போலவே பட்டர் ஸ்மூத் இன்ஜினைக் கொண்டது சுஸூகி ஜி.எஸ் 150 ஆர். 149.5 சிசி கொண்ட இன்ஜின் அதிகபட்சமாக 13.8 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. கிளட்ச் பயன்படுத்துவதற்கு மிகவும் ஈஸியாக இருப்பது ஜி.எஸ் 150 ஆரின் பலம். இது வேகமாகப் பறக்கும் பைக் இல்லை. ஆனால், சௌகரியமான பயணத்துக்கு உறுதி தருகிறது. நீண்ட தூரம் பயணம் செய்தாலும், எந்த வலியையும் ஏற்படுத்துவது இல்லை.
மைலேஜ் எவ்வளவு?
மற்ற 150 சிசி பைக்குகள் தரும் மைலேஜையே தருகிறது சுஸூகி ஜி.எஸ் 150 ஆர். இது நகருக்குள் லிட்டருக்கு 51.2 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 52 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.
150 சிசி பைக்குகளில்... எந்த பைக்கைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்குஉடனடியாக பதில் சொல்லிவிட முடியாது. ஸ்டைல், பவர், பர்ஃபாமென்ஸ், மைலேஜ் என அனைத்துமே முக்கியம் என கருதப்படும் இந்த மார்க்கெட்டில், அனைத்திலுமே கைத்தட்டல் வாங்கும் பைக் எதுவும் கிடையாது. சுஸூகி ஜி.எஸ் 150 ஆர் பைக்கைப் பொறுத்தவரை தேவையான வசதிகள், போதுமான பவர், சௌகரியமான பயணம் என நடுத்தர வயதினரைக் கவரும் அம்சங்கள் உள்ளன. 150 சிசி பைக் மார்க்கெட்டில் ஆடம்பரம் இல்லாத வித்தியாசமான பைக் வாங்க வேண்டும் என்றால், நிச்சயம் ஜி.எஸ் 150 ஆர் பைக்கை வாங்கலாம்!
டிவிஎஸ் நிறுவனத்தின் பவர்ஃபுல் ராக்கெட்! 160, 180, 160 எஃப்.ஐ என மூன்று மாடல்களுடன் வெளிவருகிறது அப்பாச்சி ஆர்.டி.ஆர். இதில் ஃப்ரெஷ்ஷான, கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொண்ட பைக் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180.
ஸ்போர்ட்ஸ் பைக்கா டிவிஎஸ் அப்பாச்சி?
ஸ்போர்ட்ஸ் பைக்குக்கும் அப்பாச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறைந்த விலையில் கிடைக்கும் பர்ஃபாமென்ஸ் பைக்தான் அப்பாச்சி. தோற்றத்தில் ஸ்டைலாகவும், பிரீமியம் செக்மென்ட் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியான அத்தனை சிறப்பம்சங்களையும் கொண்டிருக்கிறது.
அப்பாச்சியில் ஸ்பெஷல் என்ன?
டிஜிட்டல் மீட்டர், கடிகாரம், பிரேக் காலிப்பர், சஸ்பென்ஷன் ஆகியவற்றில் தங்கநிற முலாம் பூசப்பட்டு இருப்பதோடு ரேஸிங் ஸ்டைல் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. டிஜிட்டல் மீட்டரில் - டாப் ஸ்பீடு, 0-60 கி.மீ வேகம் ஆகிய தகவல்களும் வந்து விழுகின்றன. ஆனால், ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களின் அளவுக்கு இதன் பில்டு குவாலிட்டி தரமாக இல்லை.
பர்ஃபாமென்ஸ் சூப்பரா?
177.4 சிசி இன்ஜினைக் கொண்ட அப்பாச்சி 180, அதிகபட்சமாக 8500 ஆர்பிஎம்-ல் 17.3 bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 0-60 கி.மீ வேகத்தை 4.49 விநாடிகளிலேயே கடக்கிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 125 கி.மீ.
அப்பாச்சியை ஏன் வாங்க வேண்டும்?
ஆர்.டி.ஆர் 160-ஐவிட ஆர்.டி.ஆர் 180-ன் வீல்பேஸ் 40 மிமீ அதிகம். அதனால், பைக்கின் ஸ்டெபிளிட்டி அதிகரித்திருக்கிறது. கையாளுமையும் சிறப்பாக இருக்கிறது. டியூப்லெஸ் டயர்கள் நல்ல க்ரிப் தருகின்றன. குறைந்த விலைக்கு அதிக வசதிகளுடன் கிடைப்பதுதான் இந்த பவர்ஃபுல் பைக்கான அப்பாச்சியின் யூஎஸ்பி!
மைலேஜ் எவ்வளவு?
இதில் அப்பாச்சி வீக்தான். நகருக்குள் 38.4 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 40.2 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180.
ஆர்.டி.ஆர் 160-ஐவிட ஆர்.டி.ஆர் 180 அதிக பவர், அதிக க்ரிப், கூடுதல் சிறப்பம்சங்கள் என ஒரு கம்ப்ளீட் பைக்காக இருக்கிறது. இளைஞர்கள் ஒரு பைக்கில் என்னென்ன விஷயங்களை எதிர்பார்ப்பார்களோ, அவை அத்தனையும் இந்த அப்பாச்சியில் இருப்பதுதான் இதன் வெற்றிக்குக் காரணம். அப்பாச்சி 160 ஃப்யூல் இன்ஜெக்ஷன் பைக்குக்கும், அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180-க்கும் கிட்டத்தட்ட 200 ரூபாய்தான் வித்தியாசம். ஆனால், அதைவிட 180-ன் பர்ஃபாமென்ஸ் அதிகம். கையாளுமையும் சூப்பர். ஆனால், யமஹா பைக்குகளுடன் ஒப்பிடும்போது, பில்டு குவாலிட்டி என்கிற ஒரே விஷயத்தில் மட்டும் பின்தங்கிவிடுகிறது டிவிஎஸ்!
இளம் பெண்களுக்கான இன்ப வாகனம் டிவிஎஸ் ஸ்கூட்டி. இது ஸ்கூட்டி ஸ்ட்ரீக், ஸ்கூட்டி பெப். ஸ்கூட்டி டீன்ஸ் என பல மாடல்களில் கிடைக்கிறது.
ஸ்கூட்டி ஸ்ட்ரீக் பலம் என்ன?
'நம்பகத்தன்மை வாய்ந்த பிரச்னையில்லாத ஸ்கூட்டர்' என்கிற பெயர் பெற்றது ஸ்கூட்டி. அதனால், ஸ்ட்ரீக்கின் நம்பகத்தன்மை குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. சீட்டைத் திறக்காமலே பெட்ரோல் போடும் வசதி, முன் பக்கம் பொருட்கள் வைக்க இடம் இருப்பதோடு, அதைப் பூட்டிக்கொள்ளும் வசதி இருக்கிறது. மொபைல் போன் சார்ஜ் ப்ளக், பைகளை மாட்டிக்கொள்ள ஹ¨க் என பெண்களின் தேவையை நன்கு உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ள வசதிகள் அனைத்தும் ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கில் உண்டு.
பர்ஃபாமென்ஸ் அதிகம் இல்லையே?
பர்ஃபாமென்ஸைப் பொறுத்தவரை ஸ்கூட்டி பெப் மாடலுக்கும் ஸ்கூட்டி ஸ்ட்ரீக் மாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 87.8 சிசி, 5 bhp சக்திகொண்ட டீன்-ஏஜ் பெண்களுக்கான ஸ்கூட்டரில் பர்ஃபாமென்ஸை அதிகம் எதிர்பார்க்க முடியாது. காலேஜ், மார்க்கெட், பார்க் என தினமும் 20 கி.மீ-க்குள் இருக்கும் இடங்களுக்கு ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கில் சௌகரியமாகச் சென்று வரலாம்.
ஓட்டுதல் தரம் எப்படி?
ஸ்கூட்டி பெப், ஸ்கூட்டி டீன்ஸ் உள்ளிட்ட மற்ற ஸ்கூட்டிகளை ஓட்டும்போதும், ஸ்ட்ரீக்கை ஓட்டும்போதும் ஓட்டுதலில் நல்ல வித்தியாசம் தெரிகிறது. ஸ்ட்ரீக்கில் ரேக் ஆங்கிள் குறைவாக இருப்பதால், ஸ்டீயரிங் ஷார்ப்பாக இருக்கிறது. அதனால், ஹேண்டில் பாரை லைட்டாக வளைத்தாலே சர்ர்ரெனத் திரும்பிவிடுகிறது ஸ்ட்ரீக்.
மைலேஜ் எவ்வளவு?
ஸ்கூட்டி ஸ்ட்ரீக், நகருக்குள் லிட்டருக்கு 49.1 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் லிட்டருக்கு 53.8 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது!
கல்லூரிக்குச் செல்லும் மகள் வீட்டில் இருந்தால், யோசிக்காமல் ஸ்கூட்டியை வாங்கலாம்என்ற நம்பகத்தன்மையைப் பெற்றுவிட்ட ஸ்கூட்டர் இது! முன்பக்க 'லாக்கபிள் ஸ்டோரேஜ் பாக்ஸ்,' சீட்டைத் திறக்காமல் பெட்ரோல் நிரப்பும் வசதி, மொபைல் சார்ஜர் என அதிக வசதிகளுடன் மற்ற ஸ்கூட்டர்களைவிட விலை குறைவாகவும் கிடைக்கிறது ஸ்கூட்டி ஸ்ட்ரீக். பர்ஃபாமென்ஸில் குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லையென்றாலும், நகருக்குள் சின்னச் சின்னப் பயணங்கள் செல்ல ஸ்கூட்டி ஸ்ட்ரீக் சிறப்பாகவே இருக்கிறது. மைலேஜும் ஓகே. எடை அதிகமான பெண்கள், ஆண்கள் இந்த ஸ்கூட்டரை ஓட்டுவது சற்று சிரமம்!
ஒரு நொடி இந்த பைக்கைப் பார்த்தாலே போதும். உங்கள் கனவு பைக் லிஸ்ட்டில் நிச்சயம் யமஹா FZ16 இடம் பிடித்துவிடும். ஸ்டைல், ஸ்டைல், ஸ்டைல்... இதை மட்டுமே தாங்கி வந்திருக்கிறான் யமஹாவின் இந்த ஸ்டைல் மன்னன்!
சிறப்பம்சங்கள் என்னென்ன?
FZ16, திஞீஷி என இரண்டு மாடல்கள் இதில் உள்ளன. இரண்டுக்கும் விலையைத் தவிர பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. மோனோ ஷாக் சஸ்பென்ஷன், ரேடியல் டயர், டேக்கோ மீட்டர், பிரம்மாண்டமான டேங்க், சௌகரியமான இருக்கை என இதில் பல சிறப்பம்சங்கள்.
பர்ஃபாமென்ஸ் எப்படி?
ஸ்டைலில் ஈர்க்கும் FZ16-ன் பர்ஃபாமென்ஸ் கொஞ்சம் மந்தம்தான். ஆக்ஸிலரேட்டரை என்னதான் முறுக்கினாலும் 90 கி.மீ வேகத்துக்கு மேல் இன்ஜினுக்கு மூச்சுத் திணறுகிறது. 0-60 கி.மீ வேகத்தை அடைய 5.59 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 109 கி.மீ. 5-ஸ்பீட் கியர் பாக்ஸ் ஸ்மூத்தாகவும் துல்லியமாகவும் இருக்கிறது.
FZ16 பைக்கை வாங்கலாமா?
இப்போதைக்கு இந்தியாவில் 75,000 ரூபாய் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் பைக்குகளில், சந்தேகமே இல்லாமல் ஸ்டைலான பைக் யமஹா FZ16-தான். சௌகரியமான இருக்கை, வளைத்து நெளித்து ஓட்டுவதற்கேற்ற சிறப்பான கையாளுமை என நீண்ட தூரம் பயணம் செய்யும்போதும் அலுப்பை ஏற்படுத்தாத பைக்காக இருக்கிறது. ஆனால், பர்ஃபாமென்ஸில் மிகவும் பின்தங்கி இருப்பதுதான் FZ16-ன் மைனஸ். பின்பக்க டயர் அகலமாகவும், சாஃப்ட் ரப்பரையும் கொண்டிருப்பதால், அடிக்கடி பஞ்சராகி பிரச்னையைக் கொடுக்கிறது.
மைலேஜ் எவ்வளவு?
FZ16 நகருக்குள் லிட்டருக்கு 41.4 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 46.8 கி.மீ-யும் மைலேஜ் கொடுக்கிறது!
ஸ்டைலில் கல்லூரிப் பெண்களை மயக்கும் மன்மதனாக இருக்கிறது FZ16.வித்தியாசமான ஹெட் லைட், பிரமாண்டமான பெட்ரோல் டேங்க், காம்பேக்ட்டான டிஜிட்டல் மீட்டர், மெகா சைஸ் டயர் என ஸ்டைலில் மற்ற பைக்குகளைவிட பல படிகள் மேலே இருக்கிறது திஞீ. இது பயணிப்பதற்கும் சௌகரியமாக இருக்கிறது. இருக்கைகள் அலுப்பை ஏற்படுத்தவில்லை. ஹேண்டில் பார் பிடிப்பதற்கு வசதியாக இருக்கிறது. ஆனால் பர்ஃபாமென்ஸில் மிகவும் பின்தங்கி இருக்கிறது FZ16. 75,000 ரூபாய் விலைக்கு இதன் பர்ஃபாமென்ஸ் மிகவும் குறைவு!
டெக்னாலஜியில் நம்பர் ஒன் பைக் யமஹா ஆர்-15. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்குகளில், உண்மையான ரேஸிங் பைக்கும் இதுதான்.
ஆர்-15 ரேஸ் டிராக்குக்கு மட்டும்தானா?
ஆர்-15 பைக் - ரேஸ் டிராக், சாதாரண சாலை என இரண்டுவிதமான சாலைகளிலுமே பயன்படுத்தக்கூடிய பைக்தான். ஆனால், தினமும் அலுவலகத்துக்கோ அல்லது நீண்ட தூரம் பயணம் செய்வதோ அலுப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.
என்ன உண்டு? என்ன இல்லை?
ஃபுல் ஃபேரிங் கொண்ட யமஹா ஆர்-1 சூப்பர் பைக்கின் மினியேச்சர் என்றே ஆர்-15 பைக்கைச் சொல்லலாம். மோனோ ஷாக் சஸ்பென்ஷன், டிஜிட்டல் மீட்டர், ஸ்ப்ளிட் சீட், பின்பக்க டிஸ்க் பிரேக் என முழுக்க முழுக்க ஒரு ரேஸிங் பைக்காகவே இருக்கிறது. மேலும், இதன் பில்டு குவாலிட்டியுடன் மற்ற பைக்குகள் எதுவுமே போட்டி போட முடியாது. 100 கி.மீ வேகத்தைத் தாண்டினாலும் எந்த அதிர்வுகளும் தெரியவில்லை. டெல்டா பாக்ஸ் - ஃப்ரேம் இதன் சூப்பர் ஸ்டெபிளிட்டிக்குத் துணை நிற்கிறது.
பர்ஃபாமென்ஸ் எப்படி?
சூப்பர் பைக் போன்று இருக்கும் ஆர்-15 பைக்கின் பவர் மிகவும் குறைவு என்பதுதான் முதல் மைனஸ். வெறும் 17 bhp சக்தி மட்டுமே கொண்டிருக்கிறது. 6-ஸ்பீடு கியர் பாக்ஸ், ஃப்யூல் இன்ஜெக்ஷன், லிக்விட் கூல்டு இன்ஜின் என பல விஷயங்களைக் கொண்டிருந்தாலும், 0-60-ல் இதன் வேகமும் அப்பாச்சியின் வேகமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். 0-60 கி.மீ வேகத்தைக் கடக்க 5.02 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது ஆர்-15.
கையாளுமையில் நம்பர் ஒன்னா?
கையாளுமையில் நிச்சயம் நம்பர் ஒன் பைக் ஆர்-15. வளைவுகளில் வளைந்து புகுந்து செல்வதற்கும், நேரான சாலைகளில் எந்த ஆட்டமும் இல்லாமல் வேகமெடுத்துப் பறக்கவும் அற்புதமாக இருக்கிறது.
மைலேஜ் எவ்வளவு?
நகருக்குள் 43.5 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 44.3 கி.மீ-யும் தருகிறது.
விலை 1 லட்சத்தைத் தாண்டிவிடுகிறது என்பதும், விலையை நியாயப்படுத்தும் அளவுக்கு பர்ஃபாமென்ஸ் இல்லை என்பதும்தான் ஆர்-15 பைக்கின் மைனஸ். மற்றபடி பைக்கை எந்த விஷயத்திலும் குறை சொல்ல முடியாது.
லிக்விட் கூல்டு இன்ஜின், டெல்ட்டா பாக்ஸ் - ஃப்ரேம், மோனோ ஷாக் சஸ்பென்ஷன் என தொழில்நுட்பத்தில் நம்பர் ஒன் பைக்காக இருக்கிறது ஆர்-15. ஆனால், இந்த பைக்கை வாங்கி வைத்துக்கொண்டு சிட்டிக்குள் மட்டும் ஓட்டிப் பயனில்லை. அடிக்கடி ரேஸ் டிராக்கில் சீறிப் பறந்தால்தான் இந்த பைக்கை வாங்கியதற்கான முழுப் பயனை அடைய முடியும்!
No comments:
Post a Comment