''ஒவ்வொருத்தரும் சொல்லும் ரேட்டைக் கேட்கும்போது தலையேச் சுத்துகிற மாதிரி இருக்கும். ஆனால், இந்த கட்டுரையைப் படித்த பிறகுதான் நம்மிடம் கேட்கும் கட்டணம் நியாயமானதா, இல்லையா என்பதை 'டக்’கென்று தெரிந்துகொள்ள முடிகிறது'' என்று பாராட்டுவதில் ஆரம்பித்து, ''மணல், ஜல்லி போன்ற ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக என்ன செலவாகும் என்பதை விரிவாகச் சொல்லியிருக்கலாமே'' என்று ஆதங்கப்பட்டதுவரை வந்து குவிந்த கருத்துக்களை சொல்வதென்றால் அதற்கே தனியாக நாலு பக்கம் ஒதுக்க வேண்டியதிருக்கும்...
இப்படி பலவிதமான கருத்துக்களை வாசகர்கள் சொல்லியிருந்தாலும், நிறைய பேர்கள், ''அப்படியே நல்ல பில்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பதையும் சொன்னால் நன்றாக இருக்குமே'' என்று கேட்டிருக் கிறார்கள். வாசகர்களுடைய சந்தேகத்தை தீர்ப்பதைவிட வேறு என்ன வேலை நமக்கு! நல்ல பில்டர் என்பவர் யார்? அவரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? என்பது குறித்து 'பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃபிளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர் அசோசியேஷன்’ தலைவர் மணி சங்கரிடம் கேட்டோம்...
அட்ரஸ் தருகிறாரா?
''நல்ல பில்டர் என்பவர் அவரது பழைய புராஜெக்ட் களைப் பற்றி பெருமையுடன் குறிப்பிடுவார். அந்த புராஜெக்ட்களின் விவரத்தை முகவரியுடன் தந்து, அதை நேரில் பார்க்கச் சொல்லுவார். இதுவே, சவடால் பேர்வழி என்றால் 20 புராஜெக்ட்கள் முடித்துவிட்டு, 50, 100 என்று அள்ளிவிடுவார். ஆனால், புராஜெக்ட்களின் அட்ரஸை கேட்டால் தரத் தயங்குவார். உங்களுக்கு எதற்கு அதெல்லாம் என்று தட்டிக் கழிப்பார். இது மாதிரியானவர்களிடம் ரொம்பவே ஜாக்கிரதையாக இருங்கள்.
சிபிலில் பாருங்கள்!
ஃபிளாட்டை ஒன்றுக்கு இரண்டு முறை நேரில் பார்க்காமல் அட்வான்ஸ் கொடுப்பது தவறு. அதிலும் பட்டப்பகலில் ஃபிளாட்டை பார்ப்பது அவசியம். வெளித்தோற்றம் எப்படி இருக்கிறது? நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதா? உள்வடிமைப்பு எப்படி இருக்கிறது? என்பதை பார்த்து, அவர் ஏற்கெனவே விற்ற விலை நியாயமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த ஃபிளாட்டை கட்டிய பில்டர் பற்றி பில்டர்கள் வட்டாரத்தில் விசாரித்து தெரிந்து கொள்வதும் நல்லது'' என்றவர், ஒரு பில்டர் நியாயமானவர்தான் என்பதை சட்டப்படி உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறையை யும் விளக்கிச் சொன்னார்.
''பில்டர்/புரமோட்டரின் பான் கார்டு நம்பர், சேல்ஸ் டாக்ஸ் நம்பர், சர்வீஸ் டாக்ஸ் நம்பர் போன்றவற்றை வாங்கி அந்த பில்டர் உண்மையிலேயே வரிகளை எல்லாம் சரியாக கட்டி வருகிறாரா என்பதை பரிசோதித்துக் கொள்வது நல்லது. பான் நம்பர் மூலம் அந்த பில்டர் கடன் ஏதாவது வாங்கிவிட்டு, பாக்கி வைத்திருக்கிறாரா அல்லது கடனை சரியாக கட்டாதவர்களின் பட்டியலில் ('சிபில்’) அவர் பெயர் இருக்கிறதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். பில்டர் தரும் பான் நம்பர் மூலம் அவர் நடத்தும் நிறுவனம் அவரது பெயரில்தான் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். பல பில்டர்கள், வேறு ஒருவரின் பான் எண்ணை தந்துதான் தொழில் செய்து வருகிறார்கள்.
வரி வரலாறு முக்கியம்!
காசோலைதான் கரெக்ட்!
பணம் கொடுக்கும்போது முழுக்க முழுக்க ஒயிட்டிலேயே கொடுப்பது மிக, மிக அவசியம். உதாரணத்துக்கு, 50 லட்ச ரூபாய் என்றால் 30 லட்ச ரூபாயை காசோலையாகவும், மீதி 20 லட்ச ரூபாயை பிளாக்காகவும் (ரொக்கப் பணம்) கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சில வருடம் கழித்து 50 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய வீடு உள்ள இடம் வேறு ஒருவருக்குச் சொந்தமானது என வழக்குப் போடப்பட்டு, சொத்து கைமாறுகிறது என்றால் வீட்டை வாங்கியவருக்கு கோர்ட் இழப்பீடு கொடுக்கச் சொன்னால், வெள்ளையாக கொடுத்த 30 லட்ச ரூபாய்தான் கிடைக்கும். அதனால் பில்டர்/புரமோட்டருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து தொகையையும் காசோலையாகக் கொடுப்பது தான் சரி.
மேலும், காசோலை கொடுக்கும்போது பில்டரின் கம்பெனி பெயர், வங்கி பெயர் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை காசோலையில் எழுதிக் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் ஒரு காசோலையை பில்டர் அவரின் ஒரு வங்கி கணக்கிலும், இன்னொரு காசோலையை அவரது மற்றொரு வங்கிக் கணக்கிலும் போடும் பட்சத்தில் உங்களிடமிருந்து வாங்கிய முழுத் தொகையையும் கணக்கில் காட்டாமல் போக வாய்ப்பு இருக்கிறது. இதனால், பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை வந்தால் நீங்கள் கொடுத்த தொகை கணக்கிலேயே வராமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.'' என்றவர், பில்டருடன் பிரச்னை என்றால் எப்படி தீர்த்துக் கொள்வது என்பதையும் விளக்கினார்.
பிரச்னை வந்தால்...
''பெரும்பாலான பில்டர்கள், அவர்களுக்கு என்று இருக்கும் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஏமாற்றும் பில்டர்கள் பற்றி அந்த சங்கத்தில் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பார்கள். இதேபோல், சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் குறித்தும் பில்டர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தால் விசாரிப்பார்கள். அப்படியும் பிரச்னை தீரவில்லை என்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்'' என்றார்.
இவைபோக, கூடுதலாக கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி அவர் சொன்ன விஷயங்கள்..!
நல்ல பில்டர் என்பவர் விதிமுறைகளை கடைப் பிடிப்பவராக இருப்பார். அவர் குடியிருப்பைச் சுற்றி நாலாபுறமும் குறைந்தது 4-5 ஐந்து அடி இடம் விட்டிருப்பார். மேலும், அனைத்து தளங்களுக்கும் முறைப்படி அனுமதி வாங்கி இருப்பார்.
பல பில்டர்கள் ஃபிளாட் வாங்கும்போது ச.அடி இன்ன விலை என்று சொல்வார்களே தவிர, மொத்தச் செலவை சொல்ல மாட்டார்கள். சர்வீஸ் டாக்ஸ் (ஒரே இடத்தில் 12 குடியிருப்புகளுக்கு மேலே போகும்போது), போக மின் இணைப்பு, தண்ணீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு, முத்திரைத் தாள் மற்றும் பதிவுக் கட்டணம், கார் பார்க்கிங் கட்டணம் போன்றவை தனியாக இருக்கின்றன. இவற்றையும் சேர்த்து மொத்தமாகச் சொன்னால், பட்ஜெட்டை பார்த்துவிட்டு பலரும் ஃபிளாட் வாங்காமல் போய் விடுவார்களே என்கிற பயத்தில் பில்டர்கள் சொல்வதில்லை. அட்வான்ஸ் கொடுத்து, மீதி தொகையையும் கொடுத்து முடிக்கிற நிலையில்தான் மற்ற செலவுகளைச் சொல்வார்கள். ஆனால், நல்ல பில்டர் என்பவர் ச.அடி. விலை போக, வேறு என்னென்ன செலவுகள் எல்லாம் இருக்கிறது என்பதையும் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவார். இது, வீடு வாங்குபவரின் பட்ஜெட்டை சரியாக அமைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
நல்ல பில்டர் என்பவர் அக்ரிமென்டில் இருக்கும் பல விஷயங்கள் குறித்து வீடு வாங்குபவர்களுக்கு விளக்கிச் சொல்பவராக இருப்பார். உதாரணமாக, சிமென்ட் விலை ஏறும் பட்சத்தில் அதில் பாதியை, தானே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்வார். மோசமான பில்டர் என்பவர் விலையேற்றத்தை அப்படியே நம் மீது சுமத்திவிடுவார்.
நல்ல பில்டர் என்பவர் அக்ரிமென்டில் எல்லா விவரங்களையும் தெளிவாகச் சொல்லி இருப்பார். உதாரணத்துக்கு, குளியல் அறையின் கதவு நீள அகலம், கதவு எந்த மரத்தில் செய்யப்படும்? டைல்ஸ் என்ன உயரத்துக்கு வைத்து கட்டப்படும்? வாஷ்பேசின் என்ன கம்பெனி, என்ன மாடல் என்பதை எல்லாம் அக்ரிமென்டில் குறிப்பிடுவார். எவ்வளவுக்கு எவ்வளவு விலாவாரியாக விரிவாக விவரங்களைத் தருகிறாரோ அந்த அளவுக்கு அவர் நல்ல பில்டர். 'வீடு தரமாக கட்டி தரப்படும்’ என பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடுபவர் நல்ல பில்டர் இல்லை.
அறையின் உயரமும் மிக முக்கியம். சாதாரணமாக அறையின் உயரம் 10 அடி இருக்க வேண்டும். சில பில்டர்கள் 9 அடிதான் கட்டு கிறார்கள். எனவே, உஷார்.
மின்சார இணைப்பு, கழிவு நீர் மற்றும் குடி நீர் இணைப்புக்கான டெபாசிட் ரசீதுகளை கேட்காமலேயே கொடுப்பவர் நல்ல பில்டர். தராதபட்சத்தில் கேட்டு வாங்குவது மிக அவசியம்.
பில்டருக்கு நிரந்தர அலுவலகம் இருப்பது அவசியம். அப்போதுதான் பிரச்னை என்றால் பில்டரை தேடிப் போய் பேச முடியும். சில பில்டர்கள் புராஜெக்ட் வெளியீடு, அக்ரிமென்ட் முதற்கொண்டு அனைத்தையும் ஓட்டலிலேயே வைத்து முடிக்கிறார்கள். இப்படி செய்கிறவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மேலே தண்ணீர் தொட்டி தனித்தனியாக இருப்பது நல்லது. ஒரு நல்ல பில்டர் என்பவர் தண்ணீர் தொட்டியை தனித்தனியாகவே அமைத்து தருவார்.
கார் பார்க்கிங் வசதி இருக்கும் பட்சத்தில் அதனை பத்திரத்தில் நல்ல பில்டர் அவசியம் குறிப்பிடுவார். அதற்குரிய ஃபிளாட் எண்ணை குறிப்பிட்டு, அதன் நான்கு எல்லைகளையும் குறிப்பிடுவார். அது, கார் பார்க்கிங் செய்வதற்காகவே ஒதுக்கப்பட்ட இடம் என்பதையும் தெளிவுபடுத்துவார்.
நல்ல பில்டர், அனைவருக்கும் பிரிக்கப்படாத மனைப் பரப்பான யூ.டி.எஸ்.-ஐ பிரித்து தருவார்.
வேலை முடிய முடிய பணம் வாங்குபவர்தான் நல்ல பில்டர். மொத்த பணத்தையும் முதலிலேயே கேட்டால், கவனமாக இருக்க வேண்டும்.
முடிவாக, பில்டர்தான் நம் ஃபிளாட்டைக் கட்டினாலும், அதை எப்படி கட்டுகிறார் என்பதை அடிக்கடி நேரில் போய்ப் பார்ப்பது அவசியம். 'வீடு கட்டுற வேலையைத்தான் பில்டரிடம் கொடுத்து விட்டோமே, எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்! என்று நாம் அசால்ட்டாக இருந்தால், பிற்பாடு நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும். ஜாக்கிரதை!
No comments:
Post a Comment