Friday, 3 July 2015

பார்ட் டைம் உஷார்! மாட்டிக்கிட்டு முழுக்காதீங்க!


''எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா!'' - வடிவேலுவின் இந்த காமெடி கமென்ட் நம்மூர்க்காரர்களுக்கு சரியாகவே பொருந்தும். வேலை தருவதாகக்கூறி  ஜாப் சைட்கள் மூலம் ஏமாற்றுவது இப்போது வாடிக்கையான விஷயமாகிவிட்டது. வேலை கிடைத்தால் சரி என்ற மனநிலையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் அதை உண்மை என்று நம்பி கடைசியில் வெந்த புண்ணில் தாங்களே வேலை பாய்ச்சிக்கொள்கிறார்கள்... அப்படி ஏமாந்த இளைஞர் ஒருவர் நம்மிடம் கொட்டித் தீர்த்துவிட்டார்...
''கோவையில பிஸி யோதெரபி கடைசிவருஷம் படிச்சுக்கிட்டு இருந்தேன். பார்ட்டைம் வேலை
ஏதாவது கிடைச்சா அதையும் பார்க்கலாமேனு வெப்சைட்டு கள்ல தேடிக்கிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, அந்த வெப்சைட்டுல என்னைப் பத்தின எல்லா விவரங்களையும் பதிவு செஞ்சேன். பேங்க் அக்கவுன்ட் நம்பரும் அதுல கேட்டிருந்தாங்க. என்கிட்ட இருந்தது ஸ்டூடன்ட் அக்கவுன்ட்தான். அதுல பணம் எதுவும் கிடையாது. அதனால தைரியமா அந்த நம்பரையும் கொடுத்தேன்...
கொஞ்ச நாள் கழிச்சு ஒருத்தர் போன்ல பேசினார்...
''கங்கிராட்ஸ். நீங்க எங்க நிறுவனத்துல பகுதி நேரமா வேலை செய்யத் தேர்வாகி இருக்கீங்க''ன்னார். என்ன வேலைனு கேட்டேன். ''மார்க்கெட்டிங்தான். நாங்க எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்ல இருந்து  மருந்துப் பொருட்கள் வரைக்கும் எல்லாத்தையும் விற்கிறோம். நீங்க மெடிக்கல் ஸ்டூடன்ட்ங்கறதால மருந்துப் பொருட்களை பார்ட் டைமாவித்துக் கொடுங்க''னு சொன்னார்.
நானும் சரினு சொல்லிட்டு வியாபாரத்துக்காகக் காத்திருந்தேன். ஒரு மாசம் கழிச்சு திரும்பவும் அதே நம்பர்ல இருந்து போன் வந்துச்சு. ''உங்களோட அக்கவுன்ட்டில் வியாபார நிமித்தமா 50,000 போட்டிருக்கிறோம். அதை ஒரு வெளிநாட்டு வங்கிக் கணக்குக்கு மாத்திடுங்க''னு சொல்லி அந்த அக்கவுன்ட் நம்பரைக் கொடுத்தாங்க. நானும், அவங்க சொன்னபடியே இந்தியன் வங்கியில் இருந்து பணத்தை அனுப்பினேன். அதுக்கு 15% கமிஷனும் எடுத்துக்கிடச் சொன்னாங்க.
இப்படி மூணு தடவை என்னோட அக்கவுன்ட்டுல பணத்தைப் போட்டு, பிறகு அவங்க சொல்ற கணக்குக்கு மாற்றிவிடச்  சொன்னாங்க. அதுக்குப்  பிறகுதான் எனக்கு சந்தேகம் வந்துச்சு; நாம ஏதோ தப்பு பண்றோம்னு உறைக்க ஆரம்பிச்சுது. நாலாவது தடவையா பணம் அனுப்பி அவங்க சொல்ற நம்பருக்கு மாத்தச் சொன்னாங்க. ஆனா நான் முடியாதுனு சொல்லிட்டேன். அதுக்கு எதிர் முனையில் பேசியவர், ''பணத்தை மாற்றலைன்னா போலீஸ்ல புகார் செய்வோம்''னு  மிரட்டினார். ''நீ செய்யறது சாதாரண வேலை கிடையாது. ஒழுங்கா பணத்தை போட்டுடு. இல்லைன்னா பல விபரீதங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்''ன்னும் சொன்னார். பயந்து போன நான், அந்தப் பணத்தையும் அவங்க சொன்ன கணக்குக்கு மாத்தி விட்டேன். அவங்களும்  ''விரைவில் உங்களுக்கு வியாபாரத்துக்கு பொருட்கள் அனுப்பி வைக்கிறோம்''னு சொன்னாங்க.
ஆனால் அவங்க திரும்பவும் எனக்கு போன் பண்ணி ஆக்ஸிஸ் பேங்குல கணக்கு ஆரம்பிக்கச் சொன்னாங்க. பயந்துபோய் அதிலயும் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிச்சேன். அதுல ஒரு லட்சம் ரூபாய்கிட்ட போட்டு அதையும் ஒரு குறிப்பிட்ட அக்கவுன்டுக்கு மாற்றச் சொன்னாங்க. எனக்கு நேரம் இல்லைனு சொல்லி மாற்றாமலே இருந்தேன்.
அதுக்குள்ள திருவனந்தபுரத்துல இருக்கிற இந்தியன் வங்கி கிளையில ஒரு அக்கவுன்ட் ஹோல்டரோட அக்கவுன்ட்டில் இருந்து 2 லட்சம் நெட் பேங்க்கிங் மூலமா எடுக்கப்பட்டது தொடர்பா போலீஸ்காரங்க வந்து என்னை விசாரிச்சாங்க. உடனே நானும் நடந்ததைச் சொல்லி போலீஸ்கிட்ட ஒரு புகாரும் கொடுத்தேன். ஆனா காணாமல் போன அந்த இரண்டு லட்சம் ரூபாயைக் கட்டச் சொல்லி எனக்கு இப்போ பேங்க் சைடுல இருந்து நெருக்கடி கொடுக்கிறாங்க. அந்த மர்ம நபர்களுக்கு பணத்தை டிரான்ஸ்ஃபர் செஞ்ச வகையில  நான் கமிஷனா சுமார் 30 ஆயிரம் ரூபாயை எடுத்திருந்தேன். அந்தத் தொகையை பேங்குக்கு கொடுத்துட்டேன். பாக்கி இருக்கிற 1,70,000 ரூபாயையும் உடனே கட்டச் சொல்றாங்க. என்ன செய்றதுன்னே தெரியலை'' என்று இடிந்து போய்ச் சொன்னார் அந்த இளைஞர்.
இவருடைய கதை இப்படி என்றால்  இன்னொரு  இளைஞருக்கு நேர்ந்தது இன்னொரு விதமான மோசடி. அவருக்கு வீடியோகான் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது என்று போலியாக ஒரு மெயில் வந்திருக்கிறது. கூடவே,  ரீஃபண்டபிள் டெபாசிட்டாக 20,000 ரூபாயை பிரபல முன்னணி தனியார் வங்கியின் கணக்கில் செலுத்தச் சொல்லி தகவல் வந்திருக் கிறது. ஆனால் பணம் செலுத்திய பின் எந்த முன்னேற்றமும் இல்லை. மெயிலுக்கு பதிலும் இல்லை.
இதையடுத்து அவர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் செய்திருக்கிறார்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் துறை கமிஷனர் சைலேந்திர பாபுவிடம் பேசினோம். ''ஃபேஸ் புக், ஆர்க்குட், தகுதி இல்லாத ஜாப் சைட்களில் தங்களைப் பற்றிய சுயவிவரங்களைப் பதிவு செய்து வைப்பதால்தான் இது போல மெயில்கள் மூலமாக ஏமாற்றப்படுகிறார்கள். உதாரணத் துக்கு ஃபேஸ் புக் போன்ற இணையதளங்களில் தங்களைப் பற்றிய முழு விவரங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது ஏமாற்று பவர்களுக்கு வசதியாகிவிடுகிறது. இது போன்ற சோஷியல் நெட்வொர்க்குகளில் உங்களைப் பற்றிய தகவல்களை வெளியிடும் போது கவனம் தேவை.
முன்பின் தெரியாதவர்கள் பணம் கேட்கிறார்கள் என்றால் அவர்களைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளுங் கள். அரசு அங்கீகாரம் இருக்கிறதா என்று பாருங்கள். சந்தேகம் வந்தால் அருகில் உள்ள சைபர் கிரைம்க்கு தகவல் கொடுங்கள். மோசடி செய்பவர்கள் பெரும் பாலும் வெளிநாட்டவராக இருக்கிறார்கள். உள்ளூர்க்காரர் என்றால் உடனடியாகப் பிடித்துவிடலாம். ஆனால் வெளிநாட்டவராக இருந்தால் எதுவும் செய்ய முடியாது!'' என்றார்.
இனிமேலாவது யாருக்காவது இது மாதிரி மெயிலோ தகவலோ வந்தால் முழிச்சுக்குங்க!

No comments:

Post a Comment