இதோ வந்துவிட்டது மழைக் காலம். காலையில் வெயிலும், மாலையில் மழையும் வாடிக்கையாகிவிட்டது. பச்சைப் பசேல் என இருக்கும் சாலை ஓரங்களையும், மழைத் தூறலையும் ரசித்துக் கொண்டே கார் ஓட்டலாம். ஆனால் இந்த மழை சீஸனில், கார் வைத்திருப்பவர்கள் பார்க்கிங் செய்வதில் இருந்து டிரைவிங் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
நீங்க ரெடி - உங்க கார் ரெடியா?
காரில் முதலில் கவனிக்க வேண்டியது டயர்கள்தான். ஈரமான சாலையில் காரின் க்ரிப், டயரில் உள்ள ட்ரெட்டுகளை நம்பியே இருக்கிறது. சரி, டயரின் ட்ரெட் எந்த அளவுக்குத் தேய்ந்திருக்கலாம்? இதை நீங்களே கண்டுபிடிக்கலாம். இரண்டு அல்லது ஐந்து ரூபாய் காசை டயரின் ட்ரெட்டினுள் செலுத்துங்கள். அது குறைந்தது 3 மிமீ அளவுக்காவது உள்ளே செல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால், முதல் வேலையாக டயர்களை மாற்றி விட வேண்டும். இல்லாவிட்டால், பிரேக் அடிக்கும்போது, கார் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும். இது மிக ஆபத்தானது.
மழைக் காலம் வருவதற்கு முன்பே, மறக்காமல் காரை சர்வீஸ் செய்து விடுங்கள். உங்கள் காரில் இருக்கும் சின்னக் கீறல்கூட காரைத் துருப் பிடிக்க வைத்துவிடும். எனவே, சர்வீஸ் செய்யும்போதே காருக்கு 'ஆன்டி-ரஸ்ட் ட்ரீட்மென்ட்’ செய்யுங்கள். மழை நீர், காரின் பெயின்ட்டை அரித்துவிடும். வாக்ஸிங், பாலிஷிங் போன்ற பராமரிப்பு வேலைகளை இப்போதே செய்து விடுங்கள். இது காருக்குப் புதுப் பொலிவைக் கொடுப்பதோடு, காரின் பாடியில் நீர் தங்காமல் வழுக்கிச் செல்ல வைக்கும்.
அடுத்தது பிரேக்குகள். உங்கள் காரில் ஏபிஎஸ் வசதி இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், சாதாரண பிரேக்தான் என்றால், அது சரியாக இருக்கிறதா எனப் பரிசோதிப்பது அவசியம். பிரேக் ஒயர்கள், பிரேக் ஆயில் போன்றவை சரியான அளவில் இருக்க வேண்டும். பிரேக்கை மிக இறுக்கமாக செட் செய்தால், விரைவில் லாக் ஆகி, கார் ஸ்கிட் ஆகும் வாய்ப்புகள் அதிகம்.
காரின் வைப்பர்கள் சாஃப்ட்டாக இருக்க வேண்டும். வெயிலும், தூசியும் காரின் வைப்பர்களை இறுக்கிவிடும். இது மழை நீரைச் சரியாகச் சுத்தம் செய்யாது. சோப்பு நீரைக் கொண்டு வைப்பரைச் சுத்தம் செய்யுங்கள். கார் கண்ணாடிக்கு என உள்ள பிரத்யேக ஷாம்பூ மூலம் கண்ணாடியைச் சுத்தம் செய்வது நல்லது. வீட்டில் கவர்டு கார் பார்க்கிங் வசதி இல்லாதவர்கள், காரை வெட்ட வெளியில் நிறுத்தும்போது கவர் போட்டு மூடி வைப்பது நல்லது.
மழைக் காலங்களில் பெரும்பாலும் ஜன்னல்களை மூடித்தான் வைத்திருப்பீர்கள். தப்பித் தவறி சீட்டுகள் ஈரமாகிவிட்டால், அதை உடனடியாக காய வைப்பது நல்லது. ஜன்னலைத் திறந்துவிடலாம் அல்லது ஹேர் டிரையரைப் பயன்படுத்தலாம். இதைச் செய்யத் தவறினால், ஈரமான இடங்களில் பூஞ்சை பிடித்துவிடும். ஃப்ளோர் மேட், துணியால் இருப்பதே சிறந்தது. இது அதிக நீரை உறிஞ்சிக் கொள்வதால், காலை வைக்கும்போது நசநசவென இருக்காது. காருக்குள் தேங்கி நிற்கும் தண்ணீர் வடிவதற்கு, 'ட்ரைன் ஹோல் ப்ளக்குகள்’ சரியாகப் பொருந்தியிருக்கிறதா எனப் பார்த்துவிடுங்கள். இது திறந்திருந்தால், மழை நீர் அப்படியே காருக்குள் நுழைந்துவிடும்.
கார் ரெடி - ஓட்டத் தயாரா?
காரின் கண்ணாடிகளில் பனி படரும். இது காருக்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் தட்பவெப்ப மாறுதலால் நடப்பது. காரின் உட்பக்கம் பனி படர்ந்திருந்தால், ஏ.சியை வென்டிலேஷன் மோடில் பனி அகலும் வரை வைக்கலாம். காரின் வெளிப்பக்கம் பனி படர்ந்திருந்தால், ஜன்னலை சிறிது நேரம் திறந்து வைத்தால் போதும். மழையில் கார் ஓட்டும்போது, விபத்தில் இருந்து தப்பிக்க சிறந்த வழி, உங்கள் காரை அனைவரின் கண்களிலும் படும்படி செய்வது. அதற்கு உங்கள் காரின் ஹெட் லைட்டுகள் அல்லது ஃபாக் லேம்ப்புகளை ஒளிர விடலாம். காரின் பின் பக்கம் உள்ள டெயில் லைட்டுகள் கண்டிப்பாக ஒளிர வேண்டும். உங்கள் கார் எவ்வளவு பளீரென்று தெரிகிறதோ, நீங்கள் அவ்வளவு பாதுகாப்பாக இருப்பீர்கள்.
ஈரமான சாலையில் க்ரிப் குறைவாகவே இருக்கும் என்பதால், காரைத் திருப்பும்போது நிதானம் அவசியம். திடீரெனத் திருப்பினால், கார் கட்டுப்பாட்டை இழந்துவிடும். பிரேக் செய்யும்போதும் இதே நிதானம் தேவை. ஸ்கிட் ஆகும் வாய்ப்பு மிக அதிகம் என்பதால், மெதுவாக விட்டு விட்டு பிரேக் பிடித்தால் கார் ஸ்கிட் ஆகாமல் நிற்கும்.
முடிந்தவரைக்கும் உங்களுக்கு முன் செல்லும் வாகனத்தை இடைவெளிவிட்டுத் தொடருங்கள். நெருக்கமாகச் செல்லும்போது முன் பக்கம் செல்லும் வாகனம் வீசி அடிக்கும் சேறு உங்கள் பார்வையை மறைக்கும். இந்த இடைவெளி, பிரேக் செய்யும் போதும் உதவும். சாலையில் செல்லும்போது ஏதேனும் நீர் தேங்கி நிற்கும் பள்ளம் தென்பட்டால், அதைத் தவிர்க்க முயலுங்கள். அதன் மீது சென்றுதான் ஆக வேண்டுமென்றால், குறைந்த கியரில் இன்ஜினை அதிக ஆக்ஸிலரேஷனுடன் செயல்பட வைத்து கடந்து விடுங்கள்.
நெடுஞ்சாலையில் செல்லும்போது சாலையின் நடுவே உள்ள லேனைப் பயன்படுத்துவது நல்லது. ஓரமாக உள்ள லேன்களில் நீர் தேங்கி நிற்கும். மேலும் சாலையில் வளைந்து செல்ல அதிக இடம் இருக்கும். மிதமான வேகத்தில் செல்வது உங்களுக்கும், காருக்கும், ரோட்டில் செல்லும் பிற வாகனங்களுக்கும் நல்லது.
மழைக் காலங்களில் காரைப் பராமரிப்பது பற்றி 'மைடிவிஎஸ்’ நிறுவனத்தின் சீனியர் ஜெனரல் மேனேஜர் கே.ஸ்ரீனிவாசன் முன் சில கேள்விகளை வைத்தோம்.
''முக்கியமானவை, காரின் வைப்பர் பிளேடுகள்தான்! மழையில் காரை ஓட்டும்போது நன்றாக சாலையைப் பார்த்து ஓட்ட உதவுவதே இவைதான். முன் பக்க கண்ணாடியில் இருக்கும் பிளேடுகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு, பின் பக்க கண்ணாடியில் இருக்கும் பிளேடும் முக்கியம். பலர் அதைப் பராமரிக்க மறந்து விடுகின்றனர். அதனால், அவை அழுக்காகி இறுக்கமாகி விடும். அதேபோல், வைப்பர் வாஷர் டேங்க்கில் நீர் இல்லாவிட்டால் கண்ணாடியில் கீறல் விழ வாய்ப்பு உண்டு. எனவே, வைப்பர் வாஷர் டேங்கில் தண்ணீர் நிரப்பி விடுங்கள்!''
''ஹைட்ரோ லாக் என்றால் என்ன? அதைத் தவிர்ப்பது எப்படி?''
''காரின் இன்ஜினில் உள்ள சிலிண்டரில் நீர் புகுந்து இன்ஜினின் செயல்பாட்டை நிறுத்துவதுதான் ஹைட்ரோ லாக். சின்ன காரை நீர் நிறைந்த பள்ளத்தில் இறக்கினால், இன்டேக் வழியாக நீர் சிலிண்டருக்குள்ளே நுழைந்துவிடும். இதனால் இன்ஜின் செயலிழந்து போகும். கார் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது ஹைட்ரோ லாக் ஆனால், இன்ஜினில் உள்ள கனெக்டிங் ராடு கூட வளைந்து போகும் அளவுக்கு இது பிரச்னையைக் கொடுக்கும். இதை சரி செய்வதற்கு பெரிய செலவு ஆகலாம். அதனால், சின்ன காரோ, பெரிய காரோ முடிந்தவரை அதிக நீர் தேங்கிய பள்ளத்தில் காரை இறக்குவதைத் தவிர்க்கப் பாருங்கள்.
பிறகு எல்லாரும் மறந்துபோவது, காரில் ஸ்பேர் ஃப்யூஸ்கள் இருக்கிறதா என்பதைக் கவனிக்கத் தவறுவது. இது நீண்ட தூரப் பயணங்களின் போது மிக முக்கியம்!'' என்றார்.
No comments:
Post a Comment