டிசைன், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், விலை என எல்லாம் பார்த்துப் பார்த்துதான் கார் அல்லது பைக்கை வாங்குகிறோம். ஆனால், எப்படிப் பயன்படுத்தினால் நமக்கு லாபம் என்ற விஷயத்தைக் கவனிக்கவும் கடைப்பிடிக்கவும் தவறிவிடுகிறோம். எந்த வாகனமாக இருந்தாலும், நாம் பயன்படுத்துவதில்தான் சூட்சுமமே இருக்கிறது. இதில், மைலேஜ் என்பது மிக முக்கியம். ஏனென்றால், நம் பர்ஸில் இருக்கும் காசை கரைத்துக் கொண்டே இருப்பதில், இதற்குத்தான் முதல் இடம். சரி, எப்படியெல்லாம் எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த முடியும்?
அணுகுமுறை முக்கியம்!
நீங்கள் கார் அல்லது பைக் ஒன்றை வாங்கிவிட்டீர்கள் என்றால், உங்களுக்குத் திருமணம் நடந்தது மாதிரிதான். வாகனத்துக்கும் உங்களுக்கும் ஒரு பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டுவிடும். எல்லோரும் அட்வைஸ் செய்வார்கள். 'முதல் 2,000 கி.மீ வரை காரை அளவாக ஆக்ஸிலரேஷன் செய்யுங்கள். அப்போதான் இன்ஜின் செட் ஆகும்’ என்பார்கள். ஏன் இவ்வாறு சொல்கிறார்கள்?
ஏனென்றால், முதல் 2,000 கி.மீ-க்கு நீங்கள் எவ்வாறு இன்ஜினைக் கையாள்கிறீர்களோ, அதைப் பொறுத்துதான் பின்னாளில் உங்கள் வாகனத்தின் பெர்ஃபாமென்ஸும் மைலேஜும் அமையும். இதைத்தான் வாகனத் துக்கும் உங்களுக்குமான உறவு என்பார்கள். ஏனென்றால், எல்லா டிரைவர்களும் ஒரே விதத்தில் வாகனத்தை அணுகமாட்டார்கள். எனவே, ஒவ்வொரு ஓட்டுனரின் அணுகுமுறைக்கு ஏற்ப வாகனம் பின்னாளில் அவர்களுக்கான செலவுகளை தீர்மானிக்கும்.
புத்தம் புதிய வாகனத்தில் இருக்கும் இன்ஜினில் பிஸ்டன், சிலிண்டர், பிஸ்டன் ரிங்ஸுகள், பேரிங்குகள் என அசையும் பாகங்கள் அனைத்துமே புதியவை; உராய்ந்து கொண்டே இருப்பவை. இங்கே எது முக்கியம் என்றால், அவை உராயும் விதம். இந்த உராய்தல் சமமாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டும். புதிய வாகனத்தைக் கண்டபடி ஆக்ஸிலரேஷன் செய்தால், செட் ஆகியிருக்காத பிஸ்டன் ரிங்ஸுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு விடும். இதனால், எரிபொருள் கலவை எரியும் இடமான கம்பஷன் சேம்பரில் சரியான அழுத்தம் கிடைக்காது. அதனால் எரிபொருள், விரயமாகும்.
எனவே, புதிய வாகனத்தில் வீணாக ஆக்ஸிலரேஷன் செய்து விளையாடாமல், நிதானமாகவே ஓட்டுங்கள். கொஞ்ச நாள் பொறுமையுடன் ஓட்டி, வாகனத்தை உங்களுக்குப் பழக்கப்படுத்துங்கள். நீங்கள் ஓட்டுகையில் மைலேஜ் கூடுதலாகவோ, குறைவாகவோ தருகிறதா என்று சோதியுங்கள். அதைப் பொறுத்து, நீங்கள் ஓட்டும் விதத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்!
ஓட்டும் விதத்தைப் பொறுத்தே பர்ஸ் காலியாகும்!
சிலர், ஜாலியாக ஓட்டுகிறேன் எனத் தேவையில்லாமல் டவுன் ஷிஃப்ட் செய்து ஓட்டுவார்கள். அவசியம் இல்லாமல் குறைந்த கியரில் ஓட்டினால், இன்ஜின் அதிகமாக எரிபொருளைக் குடிக்கும். சரியான வேகத்தில் சரியான கியர் என்பதுதான் எப்போதும் சரி.
எந்த மனநிலையிலும் வாகனத்தை நிதானமாக இயக்குங்கள். திடீர் திடீரென்று வேகமெடுத்து ஓட்டக் கூடாது. சிலர், பிக்-அப் கிடைக்கும் என நினைத்துக்கொண்டு சும்மாவே கிளட்சை அழுத்துவார்கள். இதனால், தேவையில்லாமல் இன்ஜின் அதிகமாக ஆக்ஸிலரேஷன் ஆவதுடன், பழைய ஆர்பிஎம்முக்கே திரும்பிவிடும். பிக்-அப் ஒருபோதும் அதிகரிக்காது.
காரில், மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு மேல் நெடுஞ்சாலையில் ஓட்டப் போகிறீர்கள் என்றால், ஜன்னல்களை ஏற்றிவிட்டு ஏ.சியுடன் பயணிப்பதுதான் சரி. ஏ.சி மைலேஜைக் குறைக்கும் என நினைத்து, நெடுஞ்சாலையில் ஜன்னகளைத் திறந்துவிட்டு ஓட்டினீர்கள் என்றால், காற்றால் ஏரோடைனமிக்ஸ் பாதிக்கப்பட்டு, காரை அலைக்கழிக்கும். இதனால், மைலேஜ் பாதிக்கப்படும்
சீரான வேகம்! இதுவும் நல்ல மைலேஜுக்கு வழி வகுக்கும். மணிக்கு 100 கி.மீ வேகத்துக்குக் கீழே சீராக ஓட்டுவது நல்லது. அதேபோல், பைக் என்றால், 40 - 60 கி.மீ வேகத்தில் ஓட்டினால் சிறந்த மைலேஜ் கிடைக்கும்.
சிக்னலை நெருங்குகிறீர்களா? திரும்பப் போகிறீர்களா? வேகத்தடை முன்னே இருக்கிறதா? - ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்துவிடுங்கள். அருகே சென்று பிரேக் செய்வதால், இரண்டு மடங்கு கூடுதலாக எரிபொருள் வீணாகும்!
மைலேஜ் நிறையக் கிடைக்கும் என சரிவான சாலையிலோ, காலியான ரோட்டிலோ காரை நியூட்ரலில் ஓட்டாதீர்கள். திடீரென பிரேக் செய்ய வேண்டிய சமயத்தில், 'இன்ஜின் பிரேக்கிங்’ இல்லாமல் விபத்துக்கு வழி வகுத்துவிடும்.
நாலு தெரு தள்ளி இருக்கும் கடைக்கோ, கோவிலுக்கோ வாகனம் பயன்படுத்துவதைத் தவிர்த்து ஒரு குட்டி நடை போட்டு வாருங்கள். வாகனத்துக்கும் நல்லது; உடலுக்கும் நல்லது.
இன்னும் இருக்கு!
டயர்களில் இருக்கும் காற்றின் அளவும் மைலேஜைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்போதும் டயர்களில் வாகன நிறுவனம் பரிந்துரைத்த அளவில் காற்றை நிரப்பி வைத்திருங்கள். குறைவான காற்றழுத்தம் டயரின் சுழலும் திறனைக் குறைத்துவிடும். இதனால், மைலேஜ் மிகக் குறைவாகவே கிடைக்கும். அதிகமான காற்றழுத்தத்தில் இருக்கும் டயர்கள் சமமாக தரையில் பதியாது. எனவே, காற்றழுத்தம் எப்போதும் சரியான அளவிலேயே இருக்க வேண்டும்!
இன்னொரு முக்கியமான விஷயம், காரில் இருக்கும் தேவையில்லாத கூடுதல் எடை. எப்போதும் தேவைப்படும் அத்தியாவசியமான லக்கேஜை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.
எப்படி நம் உடலுக்கும் அவ்வப்போது முழு செக்-அப் தேவைப்படுகிறதோ, அது போலத்தான் காருக்கும். கார் நிறுவனம் சொன்ன கி.மீ கணக்கில் வாகனத்தைக் கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும்.
இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான விஷயம், எரிபொருள் நிரப்பும் பங்க். நம் ஊரில் உள்ள பங்க்குகளில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். முடிந்த வரை ஒரு நல்ல பங்க்கை தேர்ந்தெடுத்து, அதிலேயே தொடர்ந்து எரிபொருள் நிரப்புங்கள். எந்த பங்க்கில் நாள் முழுக்க கூட்டம் குழுமுகிறதோ, அது நிச்சயம் நல்ல பங்க்காகத்தான் இருக்கும்.
நகரத்தில் கார் வைத்திருப்பவர்கள் டிராஃபிக்கைத் தவிர்க்க முடியாது. நகரத்தில் பயன்படுத்தும் கார்களில், ஓடும் நேரத்தில் செலவாகும் எரிபொருளைவிட சிக்னலிலும், டிராஃபிக் நெருக்கடியிலும்தான் அதிகம் எரிபொருளைக் குடிக்கும். காரணம், குறைந்த கியர்களில்தான் இந்த சமயங்களில் இன்ஜின் இயங்க வேண்டி இருக்கும். அதனால், இன்ஜின் ஆர்பிஎம்கள் இந்த சமயங்களில் அதிக அளவில்தான் இருக் கும். அப்படியானால் மைலேஜும் குறையும்தானே? இதைத் தடுக்க, முடிந்தவரை பீக் ஹவரில் காரை எடுத்துக்கொண்டு செல்லாமல், அரைமணி நேரம் முன்னதாகக் கிளம்புங்கள். சிக்னல்கள் அதிகம் இருக்கும் சாலையைத் தேர்ந்தெடுக்காமல், சுற்றி வந்தாலும் நிதானமாக ஒரே வேகத்தில் செல்லக் கூடிய சாலையாகப் பார்த்து ஓட்டுங்கள்!
இறுதியாக, இனிவரும் காலங்களில் எந்த எரிபொருள் விலையும் குறைய வாய்ப்பு இல்லை. எனவே, எரிபொருளைச் சேமித்தீர்கள் என்றால், உங்கள் காசை சேமிக்கிறீர்கள் என்றே பொருள். இந்தச் சேமிப்பை குடும்பத்துக்காக வேறு எதிலாவது சின்ன அளவில் முதலீடு செய்யலாம்.
No comments:
Post a Comment