ஹெல்மெட், தலை காக்கும் கவசம் மட்டுமல்ல... பல குடும்பங்கள் சிதையாமல் காக்கவும் அவசியமான ஒன்று என்பதை மீண்டும் உணர்ந்திருக்கிறது தமிழக அரசு.
டெல்லி, கர்நாடகம், ஆந்திரா எனப் பல மாநிலங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக இருக்க, தமிழகத்தில் மட்டும் ஏன் இந்தச் சட்டம் அமலில் இல்லை என்பது பலதரப்பட்ட மக்களின் கேள்வி.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இப்போது விடை கிடைத்து, வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளிலும், ஜூலை ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாகிறது.
ஹெல்மெட் மீண்டும் வருகிறது என்றதும் சந்துபொந்துகளில் எல்லாம் கூவிக் கூவி ஹெல்மெட் விற்கத் துவங்கிவிட்டனர். 150 ரூபாய் முதலே ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. ஆனால், என்ன பலன்? இது மாதிரியான போலி ஹெல்மெட்டுகளினால் விபத்துகளில் இருந்து தப்பிக்க முடியாது. மாறாக இது ஏற்படுத்தும் பிரச்னைகள்தான் அதிகம். போலி ஹெல்மெட்டுகள் தலையின் முக்கியமான இடங்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும்போது தலைவலி, கழுத்துவலி போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படும். விபத்து நேர்ந்தால், ஹெல்மெட்டுடன் சேர்ந்து தலையும் நொறுங்கும்.
எனவே, நல்ல ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். உங்களுடைய தலைக்கு எது சரியாகப் பொருந்துகிற ஹெல்மெட் எனப் பாருங்கள். ஹெல்மெட் நம் தலையுடன் நல்ல இறுக்கமாகவும் அதே சமயம் வசதியாகவும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஹெல்மெட்டின் ஸ்ட்ராப்பை கீழ் பக்கமாகப் பிடித்துக்கொண்டுதான் ஹெல்மெட்டைத் தலையில் அணிய வேண்டும். கன்னத்தை தொடும்படியாக இருக்கும் பேட் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதே நல்லது. பின்பு, ஸ்டராப்பை போட்டுவிட்டு ஹெல்மெட் அணிந்து பாருங்கள். தலையை ஆட்டும்போது ஹெல்மெட் ஆடாமலோ அல்லது அதிக இறுக்கமாகவோ இருந்தால், அது உங்கள் தலைக்கு ஏற்ற ஹெல்மெட் இல்லை என்று அர்த்தம். ஹெல்மெட்டை முதல் முறையாக அணியும்போது கழுத்தில் கொஞ்சம் வலி இருக்கும். இது போகப்போக சரியாகிவிடும். ஆனால், வலி அதிகமாக இருந்தால், எடை குறைவான ஹெல்மெட் பயன்படுத்துவதே நல்லது.
ஹெல்மெட்டைக் கழற்றிய பிறகு, எந்த இடத்தில் வலி இருக்கிறது என்று பாருங்கள். தலையில் அதிக இறுக்கமாக இருந்தால், அது தலைவலியை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அந்த ஹெல்மெட் அணிவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
உங்கள் தலைக்கு சரியாகப் பொருந்துகிற ஹெல்மெட் எது என்று தேர்ந்தெடுத்துவிட்டீர்களா, உடனே வண்ணம் மற்றும் டிஸைனில் கவனம் செலுத்துங்கள். கலர் ஃபுல்லான ஹெல்மெட்டுகளை வாங்குவது நல்லது. குறிப்பாக ‘ரிஃப்ளெக்ட்’ ஆகக்கூடிய நிறங்களுடைய ஹெல்மெட்டுகளைப் பயன்படுத்தும்போது, இரவு நேரங்களில் வசதியாக இருக்கும்.
ஹெல்மெட்டில் உள்ள வசதிகளைப் பாருங்கள். குறிப்பாக வென்டிலேட்டர் உள்ள ஹெல்மெட்டுகளைப் பயன்படுத்தும்போது வெயில் நேரங்களில் உதவியாக இருக்கும். போலிஹெல்மெட்டுகளில் ஆங்காங்கே எதற்கும் உதவாத வென்ட்டுகளை வைத்திருப்பார்கள். இதில் காற்று வருவதற்கு இடமும் இருக்காது. குளுமையும் கிடைக்காது.
ஹெல்மெட்டை வாங்கிய பிறகு, வேலை முடிந்து விட்டது என்று அதைப் பராமரிக்காமல் விட்டு விடக் கூடாது. ஹெல்மெட்டை அடிக்கடி சோப் அல்லது மிருதுவான துணி வைத்துத் துடைப்பது நல்லது. குறிப்பாக வைசரை (கண்ணாடி) ஒரு நாளுக்கு இரண்டு முறையாவது துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.
ஏதாவது விபத்தில் ஹெல்மெட் சிக்கினால், உடனே ஹெல்மெட்டை மாற்றிவிடுவது நல்லது. மேலும், ஹெல்மெட் என்பது தாத்தா காலம் முதல் பேரன் காலம் வரை பயன்படுத்தக்கூடிய பொருள் அல்ல. அதன் ஆயுள் இரண்டு அல்லது மூன்று வருடங்கள்தான். நல்ல தரமான ஹெல்மெட்டாக இருந்தாலும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் அதைப் பயன்படுத்தக் கூடாது.
ஐஎஸ்ஐ தரச் சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகள் 500 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கிடைக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் Shoei ñ ற்றும் Araiஹெல்மெட்டுகள் 25,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. உங்கள் வசதி பார்த்து வாங்குங்கள், உடனே!
உயிர் முக்கியமா? முடி முக்கியமா?
கடந்த பிப்ரவரி இதழில் நமக்குப் பேட்டியளித்த பிரபல நரம்பியல் மருத்துவர் கணபதி, ஹெல்மெட் தொடர்பாக டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் நேரடியாகக் கலந்துகொண்டு உயர் நீதிமன்றத்தில் ஹெல்மெட் அணிவதன் கட்டாயம் குறித்து வாதாடினார். ஹெல்மெட் அணிவதால் நரம்பியல் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன என்பது பொய் என்பதைப் பல ஆதாரங்களுடன் விளக்கினார்.
‘‘ஹெல்மெட் அணிவதால் முடி கொட்டும், தலை வலிக்கும், கழுத்து வலிக்கும் என்பது போன்ற அனைத்தும் ஹெல்மெட் போட சோம்பேறித்தனப்படுபவர்களின் பொய்ப் பிரசாரங்கள். ஹெல்மெட்டுக்கும் முடி கொட்டுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பத்து வருடங்களாக ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாருமே முடி உதிர்வதாகப் புகார் கூறவே இல்லை. கழுத்து வலிக்கிறது என்று கூறுவதில்லை. ஹெல்மெட்டே அணியாதவர்கள்தான் இதுபோன்ற நொண்டிச் சாக்குகளைச் சொல்லி வருகிறார்கள்’’ என்கிறார் கணபதி ஆவேசமாக.
‘‘கடந்த வாரம் சென்னையில் நடந்த சாலை விபத்து ஒன்றில், 45 வயது ஆண் ஒருவர் அடிபட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். தலையில் பலத்த அடி. இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு அவரது உயிர் பிரிந்துவிட்டது. மனைவி, பள்ளியில் படிக்கும் இரண்டு மகள்கள் என்று அவர் குடும்பமே அநாதையாக நின்றது. ‘என்றுமே ஹெல்மெட் அணிந்துகொண்டுதான் செல்வார். அன்று பார்த்து ஹெல்மெட் போடாமல் சென்றுவிட்டார்’ என்று சொல்லி அவர் மனைவி கதறி அழுதார். ஹெல்மெட் மட்டும் அவர் போட்டிருந்தால் அவரது உயிர் பிழைத்திருக்கும்.
சென்னையில் உள்ள பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர், டைடல் பார்க் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்குள்ளானார். தலையில் பலத்த அடி. உயிர் பிழைப்பதே கடினம் என்கிற நிலையில் அவரைப் பிழைக்கவைத்தோம்.
ஆனால், அவர் தற்போது உயிரோடு இருப்பதால், அவரது குடும்பத்துக்கும் அவர் வேலை பார்த்த அலுவலகத்துக்கும் எந்த உபயோகமும் இல்லை. மாதம் 40,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்தவர் தற்போது படுத்தபடுக்கையாக சுய நினைவே இல்லாமல் இருக்கிறார். ஒன்பது மாதங்களாக அவர்கள் குடும்பத்தினர் செலவழித்திருக்கும் தொகை மட்டும் ஆறு லட்ச ரூபாய். அவருக்கு மீண்டும் சுய நினைவு திரும்புவது என்பது சந்தேகமே. உயிர் போய்விடுவதைவிட இப்படி நடைபிணமாய் வாழ்வது கொடுமையிலும் கொடுமை.
ஹெல்மெட் அணியாமல் இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் மனதில் கொள்ள வேண்டியது, நாளைக்கு இதுபோன்ற விபத்து நடந்தால் நம் மனைவி, குழந்தைகள், அப்பா, அம்மா என்று நாம் உயிருக்கு உயிராக நேசிப்பவர்களின் நிலை என்னவாகும் என்பதுதான். என் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை என் கையில் என்பதை உணர்பவர் எவரும் ஹெல்மெட் அணியாமல் இருக்க மாட்டார்கள்’’ என்றார் டாக்டர் கணபதி உருக்கமாக.
|
இருந்தால் இயங்கும்... மறுத்தால் அணையும்!
சென்னை ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் ஆட்டோமொபைல் பொறியியல் இறுதியாண்டு படித்து வரும் பிரபு, ‘ரெட்ரோ ரிஃப்ளெக்டிவ் சென்ஸார்’ என்ற கருவியை உருவாக்கியுள்ளார்.
‘‘இந்த சென்ஸாரை பைக்கில் பொருத்திவிட்டால் போதும், பைக் ஸ்டார்ட் செய்த 20 நொடிகளுக்குள் ஹெல்மெட் அணியாவிட்டால், இன்ஜின் தானாக அணைந்துவிடும். பைக்கின் எலெக்ட்ரிகல் காயிலில் இதற்கான கன்ட்ரோல் இணைக்கப்பட்டுள்ளது. பைக்கின் ஸ்பீடோ மீட்டர் அருகே பொருத்தப்பட்டுள்ள ‘ரெட்ரோ ரிஃப்ளெக்டிவ் சென்ஸா’ரிலிருந்து அனுப்பப்படும் ஒளி ஹெல்மெட்டில் பட்டு ரிசீவருக்குத் திரும்ப வேண்டும். திரும்பவில்லை என்றால் இன்ஜினுக்குச் செல்லும் மின் தொடர்பைத் துண்டித்து விடுகிறது. உடனே பைக்கும் அணைந்துவிடும். இந்த ஏற்பாட்டை அனைத்து வகை பைக்குகளிலும் பயன்படுத்தலாம்’’ என்கிறார் பிரபு.
ஹெல்மெட் போடாமல் சென்றதால், விபத்துக்குள்ளாகி இறந்த தன் நண்பன்தான் இந்தக் கருவியை உருவாக்கக் காரணம்’’ என்கிறார் பிரபு!
-ப.சுயம்புகனி
|
ஹெல்மெட்டின் உள்ளே...
ஹெல்மெட்டின் தடிமனான கடினப் பகுதி பாலிகார்பனேட் மற்றும் ஃபைபர் கண்ணாடிக் கலவையால் செய்யப்பட்டிருக்கும். இது கடினமான பொருளின் மீது தலை முட்டும்போது அதன் வேகத்தையும், அதன் தீவிரத்தையும் குறைக்கும். இந்த கடினப் பகுதிக்கு அடுத்தபடியாக பாலியஸ்டரினால் செய்யப்பட்ட அடுக்கு ஒன்று காணப்படும். இது குறைக்கப்பட்ட வேகத்தை தன்னுள் உறிஞ்சிக் கொள்ளும். இந்த பாலியஸ்டரின் அடுக்கு ஃபேப்ரிக் துணியால் மூடப்பட்டிருக்கும். இதற்கு அடுத்தபடியாக கண்களில் தூசு விழாமல் இருப்பதற்குமான வைசர் (கண்ணாடி) பொருத்தப்பட்டிருக்கும். பாலிகார்பனேட், பாலியஸ்டரின், ஃபேப்ரிக், வைசர் என இவை அனைத்தும் சேர்ந்ததுதான் ஹெல்மெட்!
|
எது போலி?
ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட ஹெல்மெட்டுகளை வாங்குவதே சிறந்தது. ‘‘ஹெல்மெட் தயாரிக்கப்படும் மூலப்பொருள், எடை மற்றும் தரம் ஆகியவற்றைப் பூனாவில் உள்ள கிஸிகிமி ஆய்வுக்கூடத்தில் சோதித்த பிறகுதான் அதற்கு ஐஎஸ்ஐ முத்திரை வழங்குகிறோம்’’ என்கிறார் இந்தியத் தரக்கட்டுபாட்டு வாரியத்தின் தமிழகக் கிளையின் ஹெல்மெட் பிரிவுகள் துறைத் தலைவர் மோகனன்.
’’ஐஎஸ்ஐ முத்திரையின் மேல் பக்கத்தில் 4151 ஒன்று என்கிற ஹெல்மெட் குறியீட்டு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். முத்திரைக்குக் கீழே, ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிம எண் குறிப்பிடப்பட்டிருக்கும். எங்களுடைய இணைய தளமான new.bis.org.in என்கிற முகவரியில் சென்று 4151 என்கிற குறியீட்டு எண்ணைத் தட்டினால் போதும், இந்தியா முழுக்க உள்ள ஐஎஸ்ஐ தரச் சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயர்கள் வந்துவிடும். நீங்கள் கடையில் பார்த்த ஹெல்மெட் தயாரிப்பாளர் உண்மையிலேயே லைசென்ஸ் பெற்றவரா என்பதை சுலபமாகக் கண்டுபிடித்துவிட முடியும்’’ என்கிறார் மோகனன்.
|
No comments:
Post a Comment