ஒரு காலத்தில் இந்தியச் சாலைகளை ஆட்சி செய்தவை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாஸடர் கார்கள். பல ஆண்டுகளாக வீதியெங்கும் நீக்கமற நிறைந்திருந்த இதுதான்
முதல் இந்திய கார். இதைத் தயாரித்தவர்கள் என்ற பெருமை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸை சேரும். பிரதமர் முதல் சாமான்ய மனிதன் வரை அனைவருமே பயன்படுத்தும் கார் என்றால், அது அம்பாஸடர் மட்டும்தான். ஆனால், இன்று இது அரசு அதிகாரிகளும், டிராவல்ஸ் ஆப்ரேட்டர்களும் மட்டுமே பயன்படுத்தும் காராக ஆகிவிட்டது.
உறுதியான கட்டுமானம், தாராளமான இடவசதி, எத்தனை பேர் அமர்ந்தாலும் ஈடு கொடுக்கும் இன்ஜின், எப்படிப்பட்ட சாலையாக இருந்தாலும் கவலைப்படாமல் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்த கார் அம்பாஸடர். இந்த காரை ரேஸ§க்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இதன் சிறப்பம்சம் எது என்று கூறினால், குறைந்த பராமரிப்புச் செலவு, எங்கும் கிடைக்கும் உதிரி பாகங்கள், எந்த மெக்கானிக்காலும் சர்வீஸ் செய்ய முடிகிற சுலபமான மெக்கானிசம் என இதன் சிறப்புகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இப்போது இருக்கிற அம்பாஸடர் காரின் தோற்றம், இதன் அடிப்படை மாடலில் இருந்து படிப்படியாக வளர்ந்து இந்தத் தோற்றத்தை எட்டி இருக்கிறது. இதன் பரிணாம வளர்ச்சி எப்படி?
1942
இங்கிலாந்தில் பிரபலமாக விற்பனையாகிக் கொண்டு இருந்த 'மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு' என்ற காரின் உதிரி பாகங்களை வரவழைத்து, இந்தியாவில் அதை அசெம்பிள் செய்து, விற்பனை செய்தது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்.
1954
மோரிஸ் ஆக்ஸ்ஃபோர்டு சீரிஸ் 2 மாடலின் அசெம்பிளி லைனையே விலைக்கு வாங்கி வந்து, மேற்கு வங்கத்தில் உள்ள உத்தர்புராவில் தொழிற்சாலையை நிறுவியது ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ். இங்குதான் முழுமையாக கார்களைத் தயாரித்தது. இதில், மோரிஸ் ஆக்ஸ்போஃர்டு சீரிஸ் 2 மாடல் காரின் வடிவத்தில் சிறிது மாற்றங்கள் செய்து, 'ஹிந்துஸ்தான் லேண்ட் மாஸ்டர்' என்ற பெயரைச் சூட்டினர். இதுதான் முழுமையான முதல் இந்திய கார்.
1957
தயாரிப்பு துவங்கிய ஓர் ஆண்டிலேயே ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், லேண்ட் மாஸ்டர் மாடலை முழுமையாக இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி வடிவமைத்தது. இதில், வெளிப்புற வடிவம், ஹெட் லைட்களுக்கு கவுல், புதிய டேஷ் போர்டு, புதிய ஸ்டீயரிங் மற்றும் பின்பக்க டெயில் லைட்டுக்கு பறவையின் இறக்கை போன்ற வடிவத்தையும் கொடுத்தனர். இந்தப் புதிய காருக்குத்தான் 'அம்பாஸடர்' என்று பெயர் சூட்டப்பட்டது.
1963
காரின் முன் பக்க வடிவத்தை லேசாக மாற்றி, புதிய க்ரில் பொருத்தப்பட்டு, 'அம்பாஸடர் மார்க் 2' என்று புதிய மாடலை அறிமுகம் செய்தனர்.
1975
மீண்டும் முன் பக்க க்ரில் மட்டுமே மாற்றப்பட்டு, அம்பாஸடர் மார்க் 3 என்ற மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளிலேயே மீண்டும் முன்புற க்ரில் மட்டுமே மாற்றப்பட்டு, அம்பாஸடர் மார்க் 4 என்ற மாடல் அறிமுகமானது.
1990
நோவா என்ற மாடல் அறிமுகமானது. இதில் டிஸ்க் பிரேக் அறிமுகப்படுத்தப்பட்டது.
1993
ஜப்பான் இஸ§ஸ¨ நிறுவனத்துடன் இணைந்து புதிய பெட்ரோல் மற்றும் டீசல்இன்ஜின்களை அம்பாஸடர் மற்றும் கான்டஸா கார்களுக்காகத் தயாரித்தனர். இதில் 5 ஸ்பீடு ஃப்ளோர் ஷிஃப்ட் கியர் பாக்ஸ், பக்கெட் சீட் ஆகியவை இந்தச் சமயத்தில்தான் அறிமுகமானது. இதன் 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், அப்போது இருந்த கார்களில் இதுதான் அதிக திறன் கொண்டதாக இருந்தது. இத்துடன் அறிமுகமான 2 லிட்டர் டீசல் இன்ஜின் சக்தி வாய்ந்தது என்றாலும், பெரிதாகப் பிரபலமடையவில்லை என்பதால் தயாரிப்பை நிறுத்தி விட்டனர்.
1995
சி.என்.ஜி, எல்.பி.ஜி கேஸில் ஓடக்கூடிய இன்ஜின்கள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வந்தன.
2003
அம்பாஸடர் கிராண்ட் என்ற புதிய கார் அறிமுகமானது. இதில், 137 மாற்றங்கள் செய்யப்பட்டது. இதில்தான் முதன்முதலாக அழகிய தோற்றம் கொண்ட பிளாஸ்டிக் பம்பர் பொருத்தப்பட்டது. மேலும், பவர் ஸ்டீயரிங், பவர் விண்டோஸ், லெதர் சீட், ஏ.ஸி என்று காலத்துக்கு ஏற்ப அம்பாஸடர் நவீனமானது.
2004
அவிகோ என்ற மாடல் அறிமுகமானது. இதில், பழைமையும் புதுமையும் கலந்த ஒருகிளாஸிக் காரின் வடிவத்தைப் பெற்றது அம்பாஸடர். இதில், டேஷ் போர்டின் நடுவே இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், புது ஹெட் லைட், டெயில் லைட் மற்றும் பம்பர் டிசைன் இடம் பெற்றது. இதில் மிக முக்கியமாக பேனட்டின் வடிவம்... கார் தயாரிக்கத் துவங்கிய 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முற்றிலும் புதிய ஒரு பானெட் அம்பாஸடருக்குப் பொருத்தப்பட்டது.
அம்பாஸடரில் காரைத் தவிர ஸ்டேஷன் வேகன், லைட் லோட் வேகன் மற்றும் ஜீப் வடிவில் டிரக்கர் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது. இங்கிலாந்தில் இன்றளவும் கிளாஸிக் கார் என்ற அடைமொழியுடன் அம்பாஸடர் விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. நீண்ட நாள் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இன்னும் தயாரிப்பில் இருக்கும் கார் என்றால் அது அம்பாஸடர்தான்.
எம்.பி.எஃப்.ஐ தொழில்நுட்பத்துடன் 1800 சிசி இன்ஜினோடு அம்பாஸடர் இப்போது விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. அறிமுகமாகும் எந்த புதியத் தொழில்நுட்பத்தையும் தனதாக்கிக் கொண்டு அம்பாஸடர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் வரை அதன் விற்பனை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
ஆரம்ப காலங்களில், அம்பாஸடர் காரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன என்றாலும், 2002-ல் அம்பாஸடரில் ஒரு சில மாற்றங்களைச் செய்து அது இங்கிலாந்து நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, இன்றுவரை விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது. இந்த காரை பலர் பலவிதமாக ரீ-மாடல் செய்திருக்கிறார்கள். ஏன், இதை லிமோஸின் காராககூட ரீ-மாடல் செய்திருக்கிறார்கள்! |
No comments:
Post a Comment