Friday, 3 July 2015

புதுமணத் தம்பதிகளுக்கான 'பொக்கிஷ' வழிகாட்டி!

திருமணமாகாத பேச்சுலர்கள் எப்படி நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்பதைக் கடந்த இதழில் விரிவாகப் பார்த்தோம். இந்த இதழில், திருமணம் ஆன இளைஞர்கள் எப்படி நிதித் திட்டமிடல் செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். புதிதாக திருமணமான இளம் தம்பதியர்களுக்கான நிதித் திட்டமிடலை வழங்குகிறார் நிதி ஆலோசகர் ஹரிணி.
பெரும்பாலும், 27 வயதிலிருந்து அதிகபட்சமாக 32 வயதிற்குள் திருமணம் செய்வது இப்போது வழக்கமாகி விட்டது. தங்களுக்குத் தகுந்த வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து திருமணத்தை முடிப்பதுபோல், வருங்காலத்திற்கும் சிறந்த திட்டங்களைத் தேர்ந்தெடுத்து சேமித்தால் உங்கள் வாழ்க்கை மேலும் மகிழ்ச்சியாகும்.
பட்ஜெட் போடுங்கள்!
இதுவரை தனக்கும், தனது பெற்றோருக்குமான தேவையைப் பூர்த்தி செய்து வந்த வாழ்க்கை, இனி புதிய திசையை நோக்கி நகரும் காலகட்டமிது. சரியான திட்டமிடல் இருந்தால்தான் இந்த காலகட்டத்தில் வாழ்க்கை சுமூகமாகச் செல்லும். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறவர்களாக இருந்தால், இருவரும் உட்கார்ந்து மாத வருமானம் எவ்வளவு? எவ்வளவு செலவாகும்? எதிர்காலத் தேவை என்ன? என்பதை எல்லாம் பேசி, குடும்பத்திற்கான திட்டத்தை தீட்ட வேண்டும்.
முதலில், பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தப் பழகிக் கொள்ள வேண்டும். புதுசாக கல்யாணம் ஆன சோக்கில் தாம்தூமென்று செலவு செய்யாமல், பட்ஜெட் போட்டு செலவு செய்தால்தான் வரவு என்ன, செலவு என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். இருவருக்கும் தனித்தனி வங்கிக் கணக்கு இருந்தாலும், குடும்பச் செலவை சமாளிக்க ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் எடுத்துக் கொள்வது நல்லது. கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை சரியான முறையில் கையாள வேண்டும். வெளிநாடு செல்ல கடன், புது மனைவிக்கு புது கார் வாங்க கடன் என இப்போதே இறங்கிவிட வேண்டாம்.
அவசரத் தேவைக்கு..!
இப்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரிவது அதிகரித்து வருகிறது.  கூடவே, ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு தாவுவதும் வழக்கமாகி விட்டது. அதனால், திடீரென வேலையை விடும்படி வந்துவிட்டால் அடுத்த வேலை கிடைக்கும் வரையில் குடும்பத்தை நடத்த பணம் தேவைப்படும். தவிர, திடீர் செலவுகளையும் சமாளிக்க வேண்டியதிருக்கும். அதற்காக மாதத்தில் 15% வரை சேமிக்க வேண்டும். இதனை லிக்விட் ஃபண்டுகளில் போட்டு வந்தால், இதுபோன்ற அவசரத் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
இன்ஷூரன்ஸ்!
தகுந்த ஆலோசனை இல்லாமல் யூலிப் போன்ற திட்டங்களில் பணத்தை வீணடிக்காதீர்கள். ஏனெனில் முதலீடும், காப்பீடும் தனித்தனி யாக இருக்க வேண்டுமே தவிர, இரண்டும் ஒரே திட்டத்தில் இருப்பது சரியாகாது. எனவே, யூலிப் போன்ற திட்டங்களில் அதிக வருமானம் கிடைக்கும் என்பதை நம்பி பணத்தைப் போட வேண்டாம். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தாலும், எடுத்திருக்கா விட்டாலும் தனியாக ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். தவிர, உங்கள் வருமானத்தைப் போல பத்து மடங்கிற்கு கவரேஜ் கிடைக்கிற மாதிரி ஒரு டேர்ம் பாலிசி எடுப்பது  அவசியம். இது உங்களுக்குப் பிறகு குடும்பத்திற்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கும்.
பங்கு முதலீடு!
பங்கில் முதலீடு செய்ய சரியான தருணம் இது. மாதம் 50,000 ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் எனில் 5,000 ரூபாய்க்கு பங்கில் முதலீடு செய்யலாம். நீங்கள் செய்யும் முதலீடு நீண்ட காலத்திற்கானது என்பதால் இன்ஃபோசிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ. போன்ற நல்ல பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம். இதேபோல் எஸ்.ஐ.பி. முறையில் மியூச்சுவல் ஃபண்டிலும் குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் கட்டி வரலாம்.  

ரியல் எஸ்டேட்!
சென்ற வாரம் சொன்னது போல, வீடு வாங்குவதில் அவசரம் காட்டத் தேவை யில்லை. திருமணம் முடிந்து இரண்டு, மூன்று வருடங்கள் டெப்ட் ஃபண்டில் சேமித்த பிறகு வீடு வாங்க அல்லது இடம் வாங்கி வீடு கட்டும் வேலையில் இறங்கலாம். கையில் ஓரளவுக்குப் பணமிருந்தால் வங்கிக் கடன் எளிதாக கிடைக்க வாய்ப்புண்டு.  இதற்காக முழுப் பணத்தையும் சேர்த்த பிறகே வீடு வாங்குவேன் என்று காத்திருக்கத் தேவையில்லை.
இந்த சமயத்தில் கொஞ்சம் முதலீட்டை தங்கத்தில் போட்டு வைப்பது நல்லது. நகையாகவோ காயினாகவோ வாங்காமல் கோல்டு இ.டி.எஃப். மற்றும் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.
குழந்தைகளுக்கான சேமிப்பு!
ஒரு குழந்தையோ, இரு குழந்தையோ முடிந்த வரை சீக்கிரமாகவே பெற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக் காகவும் இப்போதிருந்தே சேமிக்க ஆரம்பியுங்கள். குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு தேசிய சேமிப்பு பத்திரம், பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். கணவன் - மனைவி என இருவரும் முடிந்த தொகையை வருடத்திற்கு பி.பி.எஃப்.-பில் முதலீடு செய்யலாம்.
ஒய்வுகாலத் திட்டம்!
இளமைக் காலத்தில் சம்பாதித்த பணம் முதுமையிலும் கை கொடுக்க இப்போதிருந்தே திட்டமிடுவது அவசியம். 30 முதல் 58 வயது வரை சேமிக்கும் சேமிப்பு அதன்பிறகு வாழும் முதுமைக் காலம் முழுமைக்கும் உதவியாக இருக்கும். ஓய்வுகால சேமிப்பிற்குப் பங்கு முதலீடு மற்றும் டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு 50,000 ரூபாய் வரை இந்த இரண்டிலும் முதலீடு செய்தால் முதுமைக் காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும்.
உங்கள் முதலீட்டை தபால் நிலைய ஆர்.டி., வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஈக்விட்டி, மியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ், தங்கம் என பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்யும்போது எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment