Saturday, 11 July 2015

எக்ஸ்ட்ரா சர்வீஸ்... உஷார் டிப்ஸ்!

பல லட்ச ரூபாய் கொடுத்து காரை வாங்கும்போது இருக்கும் சந்தோஷம், சர்வீஸ§க்கு விடும்போது நம்மில் பலருக்கு இருப்பது இல்லை. என்னவெல்லாம் மாற்ற வேண்டியது இருக்குமோ, எவ்வளவு பில் போடுவார்களோ? என பயந்து கொண்டேதான் சர்வீஸ் சென்டருக்குள் நுழைவோம்.
காரில் நாம் சொல்லும் பிரச்னைகள் மற்றும் ரெகுலர் சர்வீஸைத் தவிர, சர்வீஸ் அட்வைசர் நம்மிடம் சில டெக்னிக்கல் பெயர்களைச் சொல்லி, ''இதைச் செய்தால் உங்கள் கார் புத்தம் புதிதாக மாறிவிடும். மைலேஜ் அதிகமாகக் கிடைக்கும். பிக்-அப் சூப்பராகிவிடும்' என்றெல்லாம் சொல்வார். இவர் சொல்வதை நம்பலாமா, அப்படிச் சொன்னதைச் சரியாக செய்து இருக்கிறார்களா, அதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பதற்காகவே இந்த உஷார் டிப்ஸ்...
இன்டீரியர் கிளீனிங் (Interior Cleaning)
என்ன செய்வார்கள்? காரின் உள்பகுதி முழுவதையும் சுத்தம் செய்வதுதான் இன்டீரியர் கிளீனிங். முதலில், ப்ளோயர் உதவியோடு காரின் உள்ளே படிந்திருக்கும் தூசு தும்புகளைச் சுத்தம் செய்வார்கள். பின்னர், கார் சீட், கூரை, கதவுகளின் உட்புறம் துவங்கி டோர் பேட், டேஷ் போர்டு, விண்ட் ஷீல்ட் மற்றும் கதவுக் கண்ணாடிகள், பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர் மேட்ஸ்... ஆகியவற்றை கெமிக்கல் கிளீனிங் செய்வார்கள். இதனால், காரின் உட்பகுதியின் பொலிவு கூடுவதோடு, அங்கே இருந்த கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் அழிந்துவிடும். காரின் சீட்டில் இருக்கும் காபிக் கறையைக்கூட ரசாயன திரவம் கொண்டு அகற்றிவிடுவார்கள். ஆனால், பேனா மை கறையை அகற்றுவது கொஞ்சம் சிரமம்.
எப்படி செக் செய்வது? காருக்கு உள்ளே சென்றதும் நீங்கள் ஏற்கெனவே கறைப் படுத்தி வைத்திருந்த இடங்களைப் பாருங்கள். சீட் கவர்கள் ஏதாவது கிழிந்து இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள்.
எவ்வளவு செலவாகும்? இன்டீரியர் கிளீனிங் செய்ய 600 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை செலவாகும்.
அண்டர் சேஸி கோட்டிங்
(Under Chassis Coating)
என்ன செய்வார்கள்? கார் புதியதோ பழையதோ, அண்டர் சேஸி கோட்டிங் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரின் அடிப்பாகத்தில் சைலன்சர், கியர் பாக்ஸ் மற்றும் இன்ஜினைத் தவிர்த்து, முன்பக்க பம்பர் முதல் பின்பக்க பம்பர் வரை உள்ள மற்ற பாகங்களில் ரப்பர் கோட்டிங் அடிப்பதே அண்டர் சேஸி கோட்டிங்.
இது வெயில், மழை, மேடு பள்ளமான சாலைகளில் இருந்து காரின் சேஸிக்கு பாதுகாப்பைத் தருகிறது.
எப்படி செக் செய்வது? காரை டெலிவரி எடுக்கும்போது, காரை ''ரேம்ப்'பில் ஏற்றச் சொல்லி சரியாக கோட்டிங் செய்துள்ளார்களா என்பதை செக் செய்யுங்கள்.
எவ்வளவு செலவாகும்? ஒரு வருட வாரன்டியுடன் 2,000 ரூபாயிலிருந்து 4,000 ரூபாய் வரை செலவாகும்.
டஃப்ளான் கோட்டிங் (Tufflon Coating)
என்ன செய்வார்கள்? காரின் வெளிதோற்றத்தை பளபளவென மாற்றுவதுதான் டஃப்ளான் கோட்டிங். புதிதாக காரை வாங்கும்போதே டஃப்ளான் கோட்டிங் செய்தால், கார் ஷைன் அடிக்கும்!
எப்படி செக் செய்வது? டஃப்ளான் கோட்டிங் செய்தால் இரவில் காரை டெலிவரி எடுப்பதைத் தவிர்க்கவும். பகல் நேரங்களில் டெலிவரி எடுக்கும்போது, ஒன்றுக்கு இரண்டு முறை காரை நன்றாகச் சுற்றிப் பாருங்கள். முன் பம்பர் முதல் பின் பம்பர் வரை காரின் அனைத்து பாகங்களும் முழுமையாக கோட்டிங் செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
எவ்வளவு செலவாகும்? காரின் வடிவத்துக்கு ஏற்றவாறு 2,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை செலவாகும்.
ரப்பிங் மற்றும் வேக்ஸ் பாலிஷ் (Rubbing and wax polish)
என்ன செய்வார்கள்? காரின் பெயின்ட் மங்கிவிடாமல் காப்பதற்காகவே ரப்பிங் மற்றும் வேக்ஸ் பாலீஷ். பழைய கார்கள் பளபளக்க இது மிகவும் உதவியாக இருக்கும். காரில் படிந்திருக்கும் அழுக்குகள், சிறிய பெயின்ட் புள்ளிகள் போன்றவற்றை ரப்பிங் முலம் சரி செய்யலாம்.
எப்படி செக் செய்வது? காரை ஒரு முறை சுற்றிப் பார்த்தாலே வேக்ஸ் பாலீஷ் செய்திருக்கிறார்களா, இல்லையா என்பது தெரிந்துவிடும்.
எவ்வளவு செலவாகும்? 750 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் வரை செலவாகும்.
இன்ஜின் டிகார்பனைசிங் (Engine Decarbonising)
என்ன செய்வார்கள்? காரின் பயன்பாட்டைப் பொறுத்து 40,000 கி.மீ-க்கு மேல் இருந்தே இன்ஜின் டிகார்பனைசிங் செய்யலாம். இன்ஜினுக்கு உள்ளே படியும் கார்பன் படிவங்களை அகற்றுவதுதான் இன்ஜின் டிகார்பனைசிங். இதனால் இன்ஜின் மிகவும் ஸ்மூத்தாக இருக்கும்.
எப்படி செக் செய்வது? இன்ஜின் டிகார்பனைசிங் செய்தவுடன் காரை ஒரு முறை டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள். இன்ஜின் சத்தம் மற்றும் பிக்-அப்பில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா என்பதைக் கவனியுங்கள். டீசல் இன்ஜின் என்றால் சைலன்சரில் இருந்து புகை குறைவாக வருகிறதா என்று பாருங்கள். அப்படி வந்தால் இன்ஜின் டிகார்பனைசிங் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
எவ்வளவு செலவாகும்? இன்ஜின் டிகார்பனைசிங் செய்ய கிட்டதட்ட 2,000 ரூபாய் வரை செலவாகும்.
இன்டெர்னல் பேனல் புரோடெக்ஷன் (Internal Panel Protection)
என்ன செய்வார்கள்? மழைக் காலங்களில் அல்லது வாட்டர் வாஷ் செய்யும்போது பானெட், ஃபென்டர், டோர் பேட் வழியாக தண்ணீர் உள்ளே வரும். இதனால் பானெட் கேப், டோர் பேடு ஆகியவை துருப் பிடிக்கும். இதைத் தவிர்ப்பதற்காகவே இன்டெர்னல் பேனல் ப்ரொடெக்ஷன்.
எப்படி செக் செய்வது? இதை செக் செய்வது சிரமம். இன்டெர்னல் பேனல் ப்ரொடெக்ஷன் செய்யும்போது உடன் இருந்து பார்ப்பதுதான் ஒரே வழி.
எவ்வளவு செலவாகும்? 1,000 ரூபாய் வரை செலவாகும்!

No comments:

Post a Comment