'இந்தியர்கள் ரொம்பவே மாறிவிட்டார்கள். முன்பெல்லாம் 1,000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களைத் தூக்கி வர இரண்டு திடகாத்திரமான ஆட்கள் தேவைப்பட்டார்கள். இப்போது அதே மதிப்புள்ள மளிகைப் பொருட்களைத் தூக்கிவர ஒரு சிறுவனே போதும்...'
-நகைச்சுவைத் துணுக்கு போலத் தோன்றும் இந்த வாக்கியம், உண்மையில் இந்தியப் பொருளாதாரத்தின் நாடித்துடிப்பைப் பிடித்துப் பார்க்கிறது. இந்தியர்கள் பலசாலிகளாக மாறிவிட்டார்கள் என்பதல்ல அதன் பொருள்... இந்திய சந்தையில் மளிகைப் பொருட்களின் விலை எந்த அளவுக்குத் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது என்பதே மேற்கண்ட துணுக்கு உணர்த்தும் செய்தி.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு கூடிப்போயிருக்கிறது. கிலோ 6 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இப்போது கிட்டத்தட்ட 24 ரூபாய்க்கு விற்கிறது. கிலோ பீன்ஸின் விலை 80 ரூபாய். மார்ச் கடைசி வாரத்தில் மட்டும் நாடு முழுக்கவும் காய்கறிகளின் விலை 4.1% ஏறியிருக்கிறது. காய்கறிகள்தான் என்றில்லை. எண்ணெய், அரிசி, கோதுமை, பருப்பு என வீட்டின் சமையலறைப் பொருட்கள் முதல், கட்டுமானப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் உச்சத்தில்தான் இருக்கிறது. காரணம்..? பணவீக்கம்! பிரதமர் உள்பட எல்லோராலும் சுட்டிக்காட்டப்படும் மையக் காரணம் இதுதான்.
நாட்டின் பணவீக்கம் கடந்த 40 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.41 என்ற உச்ச சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த 2004, நவம்பர் 6-ல் பணவீக்க விகிதம் 7.76 சதவிகிதமாக இருந்தது. அதன்பிறகு குறைந்துகொண்டே வந்து, இப்போது மறுபடியும் உயரத்துக்குச் சென்றிருக்கிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களுக்குள் பணவீக்கம் கிட்டத்தட்ட 50% அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், அரிசி (பாசுமதியைத் தவிர) போன்றவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
ஒவ்வொரு குடும்பமும் தன் வீட்டு பட்-ஜெட்டில் வழக்கமாகத் துண்டு விழும் தொகையைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், 'எப்-போது உணவுப் பொருட்களின் விலை குறை-யும்..?' என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்-கிறது. இந்தக் கேள்விக்கு விடைகேட்டு, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் இயக்குநர் பி.கே.ஸ்ரீவத்சவாவைச் சந்தித்தோம்.
''இந்த திடீர் விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம், பல ஆண்டுகளாக நாட்டின் அத்தியா-வசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து-கொண்டே வந்ததுதான். அதிலும் குறிப்-பாக, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்காத சூழ்நிலையில், பற்றாக்குறையைச் சமாளிக்க நாட்டின் சேமிப்புக் கிடங்குகளில் (Buffer Stocks) உள்ளவற்றைத்தான் எடுத்துப் பயன்படுத்தி வந்தோம். தற்போது அவை தீர்ந்து-போகிற நிலை வந்துவிட்டதால், அவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெளிநாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. இறக்குமதிக்கு அதிக விலை கொடுக்க-வேண்டிய சூழ்-நிலையும், உள்நாட்டில் அப்பொருட்களின் தேவை அதிகரிப்பும் ஒன்றிணைந்ததால் விலைவாசி உயர்ந்துவிட்டது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8-9% என்ற அளவில் நல்லவிதமாகத்தான் இருக்கிறது. ஆனா-லும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் உண்டு. கடந்த சில ஆண்டு-களாக அறுவடைக் காலங்களில் நாடு முழுவதும் மழைபெய்ததால், உணவு உற்பத்தி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் போன்றவற்றின் உற்பத்தி குறைந்தது. பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகவும், கிடைக்கும் பொருட்களின் அளவு குறைவாகவும் இருந்த-தால் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே போனது.
இது ஒவ்வொரு ஆண்டும் மெள்ள, மெள்ள நடந்ததால் பெரிய அளவுக்கு வெளியே தெரியவில்லை. தொழில்துறை, சேவைத்துறை போன்றவை பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்படுவதில்லை என்பதால், இதே காலகட்டத்தில் அத்துறைகளின் வளர்ச்சி தடையின்றி முன்னோக்கி இருந்தது. இதனால்தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எவ்விதப் பின்னடைவும் ஏற்படவில்லை.
அதேநேரம் இந்த பணவீக்க உயர்வும், அதனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சியும் இந்தியா-வுக்கு மட்டுமான பிரச்னை இல்லை. ரஷ்யா 11.9%, சீனா 8.7%, துருக்கி 8.1%, அர்ஜென்டினா 7.3% என்ற மற்ற நாட்டு பணவீக்க விகிதங்களும் மிக அதிகமாகத்தான் இருக்கின்றன.
இந்தியாவின் உணவுப்பொருள் உற்பத்தி குறைந்தது ஒரு காரணமென்றால், மற்ற நாடுகளின் பொருளாதாரத் தேக்கநிலையும் இன்னொரு காரணம். இதனால் இது உடனடியாக முடிவுக்கு வரக்கூடிய விவகாரமாகத் தெரியவில்லை. மத்திய அரசு இப்போது தாமதமாக விழித்துக்கொண்டு பண-வீக்க விகிதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர சில முயற்சிகளை எடுத்து வருகிறது. இதேபோல மற்ற நாடுகளும் தத்தமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் நடைமுறைக்கு வந்து பொருட்களின் விலை குறையத் தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது ஆகும். சகஜநிலைக்குத் திரும்ப ஒரு வருடமாவது தேவைப்படும் என்பது என் கணிப்பு...'' என்றார்.
உலக அளவில் பணவீக்கம் ஏறுமுகத்தில் இருக்கும் நிலையில், கடந்த 2007 ஆகஸ்டுக்கும் இந்த 2008 மார்ச்சுக்கும், இடையே பன்னாட்டுச் சந்தையில் வேளாண் பொருட்களின் விலை 73%, உணவுப் பொருட்களின் விலை 88%, கோதுமை விலை 74%, அரிசி விலை 72%, எண்ணெய் விலை 71%, சர்க்கரை விலை 35% என உயர்ந்திருக்கிறது. இந்தியச் சந்தையில் கடந்த ஒரு வருடத்தில் சிமென்ட் மூட்டை ஒன்றின் விலை 215-220 ரூபாயிலிருந்து 255-260 ரூபாயாகவும், கட்டுமானத்துக்குப் பயன்படும் கம்பி ஒரு கிலோ 32 ரூபாயிலிருந்து 50 ரூபா-யாகவும் அதிகரித்துள்ளது.
விலை உயர்வால் பாதிக்கப்படுவது என்னவோ நடுத்தர மக்கள்தான். அவர்களால் எப்படி இதைச் சமாளிக்க முடியும்..? இதைப்பற்றி மேக்ஸ் இன்வெஸ்ட்மென்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த நிதி ஆலோசகர் என்.பன்னீர்செல்வத்திடம் பேசினோம்.
''நாட்டின் பணவீக்க விகி-தம் 7.41%-ஐ தொட்-டுள்ளது. இந்நிலையில் ஃபிக்ஸட் டெபா-சிட்டுக்குக் கிடைக்கும் வட்டியான 8% என்பது, வரிபோக நெகட்டிவ் ரிட்டர்னைத் தருவதாக இருக்கிறது. எனவே, பணவீக்க விகிதத்தையும் மீறி நல்ல வருமானம் பெற நினைப்பவர்கள், நீண்டகால அடிப்படையில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். சமீபகாலமாக பிரபலமாகி வரும் கோல்டு இ.டி.எஃப். ஃபண்டுகள் இதுபோன்ற நேரங்களில் முதலீடு செய்ய ஏற்றது'' என்று முதலீட்டு ஆலோசனை கூறினார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கையாகச் செய்யவேண்டியது ரூபாயின் மதிப்பை உயர்த்துவதுதான். அதன்மூலம் இறக்கு-மதியாகும் பொருட்களுக்குக் கொடுக்கும் பணத்தின் மதிப்பு குறையும். இதில் ஏற்றுமதி பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. கூடவே இறக்குமதியாகும் பொருட்களை உள்நாட்டில் தயாரிக்கும் நிறுவனங்-களும் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. ஆனால், உடனடியாக பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு-வர இதுதான் தீர்வாக இருக்கும்.
நீண்டகாலத் தீர்வாக யோசித்தால் உணவுப்பொருட்கள் இறக்குமதிகளைக் குறைத்து நம் தேவைகளை நாமே தீர்த்துக்கொள்ளும் வகையில் விவசாயத்தில் தன்னிறைவு அடைவதுதான். இதனால், பொருட்களை இறக்குமதி செய்யும்போது அந்த நாட்டின் பணவீக்கத்தையும் சேர்த்தே இறக்குமதி செய்யவேண்டியிருக்கிறது என்ற பிரச்னை தீரும்.
இதற்கு அரசுதான் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
சமாளிக்க சில டிப்ஸ்...
சேமிப்பை கைவிடாதீர்கள்
பட்ஜெட் இடிக்கும்போது எல்லோரும் முதலில் செய்வது மாதச் சேமிப்புக்காக ஒதுக்கி வைக்கும் தொகையில் கைவைப்பதுதான். ஆனால், ஒருபோதும் அதைச் செய்யக்கூடாது. சேமிப்பைக் குறைக்காமல் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். சேமிப்பையும் இதுபோன்ற நேரத்தில் தங்கமாகச் சேர்ப்பதுதான் சரியானதாக இருக்கும்.
பெட்ரோல் செலவை மிச்சப்படுத்துங்கள்
முடிந்தவரையில் பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள். சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும்போதும் தனித்தனியே போகாமல் நேரத்தைத் திட்டமிட்டுக் கொண்டு ஒரே வாகனத்தில் செல்வதால் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தலாம்.
ஓட்டல் பில் வேண்டாமே
மாதத்துக்கு நான்கு தடவை குடும்பத்துடன் வெளியில் ஓட்டலுக்குச் சாப்பிடச் செல்வது வழக்கம் என்றால், அதை இரண்டு தடவையாகக் குறைத்துக் கொள்ளலாம்.
வீட்டுக் கடனை மாற்றுங்கள்
வீட்டுக் கடன் வாங்கியவராக இருந்தால் உங்கள் வங்கியின் மாறுபடும் வட்டிவிகிதம் என்னவென்பதைப் பாருங்கள். 11 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் உடனடியாக 9.50% வட்டிவிகிதம் உள்ள வங்கிக்கு உடனடியாக மாறுவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். அல்லது கணிசமான தொகை கையில் இருந்தால், அதைக்கொண்டு கடனில் ஒருபகுதியை அடைத்துவிடலாம். கழுத்தை நெறிக்கும் கடன் தவணையில் இருந்து தப்பமுடியும்.
எண்ணெய் குறையுங்கள்
பொதுவாகவே சமையலில் நாம் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்து-கிறோம். இதைக் குறைப்பது ஆரோக்கியத்துக்கும் பட்ஜெட்டுக்கும் நல்லது. அதேபோல விரைவில் கெட்டுப்போகாத பருப்பு வகைகளை மொத்த விலைக்கடையில் வாங்குவது லாபகரமானது.
செல்போன் பில்லை கவனியுங்கள்
செல்போன் உபயோகம் என்பது நம்மில் பலருக்கு ஆடம்பரச் செலவாகவே இருக்கிறது. சுருக்கமாகப் பேசி முடிப்பது, தகவல்களைச் சொல்ல எஸ்.எம்.எஸ்-ஐ பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளால் செல்போன் செலவை நன்றாகவே குறைக்கமுடியும்.
மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்
அதிக மின்சாரம் குடிக்கும் பொருட்களை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரச் செலவைக் குறைக்கலாம்.
கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்துங்கள்
கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கு, குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்தும்பட்சத்தில் வட்டி எதுவும் கிடையாது. இந்த வசதியைப் புத்திசாலித்தனமாகவும், கவனமாகவும் பயன்படுத்தினால் நல்ல லாபம் உண்டு. நம் சேமிப்புப் பணத்துக்குக் கிடைக்கும் குறைந்தபட்சமான 3.5% வருமானம் லாபமான ஒன்றுதானே!
பார்ட்டைம் வேலை
இல்லத்தரசிகளும் டியூஷன் போன்ற பகுதிநேர வேலை செய்வதன் மூலம் குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்ள முடியும்.
|
காரணம் ஆன்லைன் வர்த்தகமா..?
நாட்டில் எப்போதெல்லாம் விலைவாசி உயர்வு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 'ஆன்லைன் டிரேடிங்-தான் காரணம்' என்ற குரலும் எழும். அதே குரல் இப்போதும் ஒலிக்கிறது.
இணையம் மூலமாக நடைபெறும் முன்பேர வர்த்தகத்தைதான் ஆன்லைன் டிரேடிங் என்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி, சந்தையில் அந்தப் பொருளின் தேவை இவற்றை வைத்து, இன்னும் சில மாதங்கள் கழித்து அந்தப் பொருளின் விலை இவ்வளவாக இருக்கும் என முடிவு செய்து ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்தக் குறிப்பிட்ட தேதிவரைக்கும் விற்பவர்/வாங்குபவர் இருவருமே அந்தப் பொருளைக் கண்ணால் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆனால், ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில், அந்த விலைக்குப் பொருளை டெலிவரி கொடுக்க வேண்டும். இதுதான் ஆன்லைன் டிரேடிங்.
இதில், ஆன்லைன் டிரேடிங் வியாபாரிகள் ஒரு பொருளுக்குத் தாங்கள் நிர்ணயித்த விலையைவிட சந்தை விலை குறைவாக இருக்கும்பட்சத்தில், அதன் விலையைச் செயற்கையாக ஏற்றிவிடுகிறார்கள் என்பது-தான் அவர்கள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டின் சாராம்சம். இதுபற்றி, திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ்நாடு சுற்றுச் சூழல் கழகத்தின் தலைவர் அந்தோணிசாமியிடம் கேட்டோம்.
''ஆன்லைன் வர்த்தகம் என்பது தொழில்நுட்பம் தெரிந்த-வர்கள் மட்டும் சம்பாதிக்கும் விஷயம்... அவ்வளவு-தான். சந்தையில் அதிகம் இருப்புள்ள அல்லது கிடைக்கக்கூடிய பொருட்களைத் தவிர்த்துவிட்டு, டிமாண்ட் உள்ள வேறொரு பொருளுக்குச் செயற்கையான கிராக்கியை ஏற்படுத்தி, அதன் விலையைக் கூட்டிவிடுகிறார்கள். அதே நேரத்தில் விலை குறைந்த, அதிகமாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை வாங்கி பதுக்கிவைத்துவிட்டு, பின்பு அவற்றுக்கும் விலையை உயர்த்துவார்கள்.
ஆன்லைன் வர்த்தகத்தால் விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு தாங்களே விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று சொல்வதும், நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. அங்கும் தொழில்நுட்பம் தெரிந்த வியாபாரிகள்தான் பலனடைவார்கள். இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர சுலப-மான தீர்வு, முன்பு அந்தந்தப் பகுதிகளில் நடந்துகொண்டிருந்த பாரம்பரியமான வாரச்சந்தைகளுக்கு புத்துயிர் கொடுப்பதுதான். உற்பத்திப் பொருட்கள் உள்ளூர் சந்தைக்கு வருவதால் போக்குவரத்துச் செலவு, இடைத்தரகர்கள் கமிஷன் எதுவுமின்றி குறைந்த விலையில் நுகர்வோருக்குப் பொருட்கள் கிடைக்கும்'' என்றார்.
ஆனால், ஆன்லைன் வர்த்தகத்துக்கு ஆதரவான குரல்களும் இல்லாமல் இல்லை. இதைப்பற்றி, மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (சுருக்கமாக எம்.சி.எக்ஸ்.) நிறுவனத்தின் சீஃப் எக்கனாமிஸ்ட் சண்முகத்திடம் பேசினோம்.
''ஒரு பொருளை விற்-பவரும், வாங்குபவரும் பரிமாறிக்கொள்வதுதான் எக்ஸ்சேஞ்ச். ஆன்லைன் டிரேடிங் செய்யும்போது, பொருளுக்குப் பதி-லாக ஒப்பந்தத்தைப் பரிமாறிக்கொள்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்க எங்களைப் போன்ற நிறுவனங்களும், எங்களைக் கண்காணிக்க மத்-திய அரசின் முன் பேர வர்த்தக சந்தை- ஆணையமும் (Forward market commission) இருக்கிறது.
ஆன்லைனில் நடக்கும் அனைத்து வியாபாரங்களும் வெளிப்படையானவை. யார் வேண்டுமானாலும் அதைப் பார்க்கலாம். கடந்த ஆண்டும் கூட ஆன்-லைன் வர்த்தகத்தால் விலைவாசி உயர்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. உடனே அரசு ஆன்லைன் மூலமாக துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, அரிசி, கோதுமை ஆகியவற்றை வியாபாரம் செய்ய தடை விதித்ததோடு, இதைப்பற்றி ஆய்வு செய்ய அபிஜிப்சென் (Abhijipsen) என்பவர் தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது. ஆய்வுக்கு பின், 'விலை ஏற்றத்துக்குக் காரணம் ஆன்லைன் வர்த்தகம் இல்லை' என்று அவர் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு விஷயம், மேற்சொன்ன நான்கு பொருட்களையும் ஆன்லைனில் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தபோதும், அவற்றின் விலை வெளிச்சந்தையில் தொடர்ந்து ஏறிக்கொண்டேதான் இருந்தது/இருக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா, விலை ஏற்றத்துக்கும், ஆன்லைன் வர்த்தகத்துக்கும் தொடர்பு இல்லை என்பது..?'' என்றார்.
|
No comments:
Post a Comment