Friday, 3 July 2015

மறக்கக் கூடாத செக் லிஸ்ட்!


அரை கிரவுண்ட் நிலம் வாங்குவதில் ஆரம்பித்து அதில் அழகான வீடு கட்டி முடிப்பது வரையிலும் பல்வேறு விஷயங்களைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதற்கான செக் லிஸ்ட்டைத் தயாராக கையில் வைத்து, அதன்படி நடந்தால் எக்காலத்திலும் நீங்கள் வருத்தப்பட வேண்டிய அவசியமே இருக்காது. இதோ உங்களுக்கான செக் லிஸ்ட்!
மனை வாங்கும் போது..!
சாலையின் அகலம் எத்தனை அடி என்பதைக் கவனிப்பது அவசியம். உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை,  30-40 அடி அகலமுள்ள சாலை இருந்தால் வீடு கட்டத் தாராளமாக அனுமதி கொடுக்கின்றன. 20 அடிக்கும் குறைவான சாலை உள்ள இடங்களில் வீடு கட்ட அனுமதி கிடைப்பது கஷ்டம்.
விலை சல்லிசாக இருக்கிறது என்பதற்காக புறம்போக்கு மனையை ஒருபோதும் வாங்காதீர்கள். அதை எப்போது வேண்டுமானாலும் அரசு எடுத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.
பட்டா மனைகளை வாங்குவதே எப்போதும் நல்லது. பட்டா மனையாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அதில் வீடு கட்டிக் கொள்ளலாம்.  
மனை வாங்கும் போது லே-அவுட் அனுமதி பெறப்பட்ட மனைகள்தான் பெஸ்ட்.
லே அவுட்டுக்கு நகரத் திட்டமிடல் துறையின் அனுமதி இருந்தால் நம்பி வாங்கலாம். பஞ்சாயத்து அப்ரூவல் என்றால் லே அவுட்டில் காட்டப் பட்டிருக்கும் சாலைகள் தொடர்புடைய பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்வது அவசியம்.
அப்ரூவல் இல்லாத பட்டா மனையை வாங்கும் பட்சத்தில் தொடர் புடைய உள்ளாட்சி அமைப்பிடம் அந்த இடத்தில் வீடு கட்ட அனுமதி கிடைக்குமா என்பதை உறுதி செய்து கொள்வது மிக நல்லது.
மற்றபடி மேடான இடம், தண்ணீர், பஸ் வசதி போன்றவற்றையும் கவனியுங்கள்.  

வீடு வாங்கும் போது...!
ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கும் வீடு (புதிதோ, பழையதோ) வாங்கும் போது அதில் யாருக்கு எல்லாம் உரிமை இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
பழைய வீடு என்றால் பத்திரப் பதிவின்போது முழுப் பணத்தையும் கொடுத்துவிடாதீர்கள். கொஞ்சம் பணத்தையாவது பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். மின்சாரம், தண்ணீர் இணைப்பை உங்கள் பெயருக்கு மாற்றிய பிறகு அந்தப் பணத்தைக் கொடுப்பதாகச் சொல்லுங்கள்.
சொத்து கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டிருந்தால் அந்த விவரம் வில்லங்கச் சான்றிதழில் தெரிய வாய்ப்பில்லை. எனவே மூலப் பத்திரத்தின் அசலை பார்த்த பிறகே முன்பணம் கொடுங்கள். சொத்தை அடமானம் வைத்து விட்டு, நகலை வைத்து வீட்டை விற்க முயற்சி செய்யக்கூடும்.
அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கும் போது...!
அடுக்குமாடி குடியிருப்புகளில்தான் விதிமுறை மீறல்கள் அதிகம் நடக்கிறது. அதனால், அப்ரூவல் பிளான்படி விதிமுறைகள் மீறாமல் கட்டப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்ப்பது அவசியம்.
குடியிருப்பின் சதுர அடி விகிதாசாரத்துக்கு ஏற்ப, பிரிக்கப்படாத மனைப்பரப்பு (யூ.டி.எஸ்.) பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனியுங்கள். குறைவான யூ.டி.எஸ். கொடுத்து விட்டு, உங்களின் அனுமதி இல்லாமலே பின்னால் கூடுதல் தளம் கட்ட வாய்ப்பு உள்ளது.
பொதுப் பயன்பாட்டு இடம் என்ற காமன் ஏரியா அனைவரும் பயன்படுத்தும்படி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில புரமோட்டர்கள், காமன் ஏரியா என்று ஒரு பகுதியைக் காட்டி விட்டு, அதில் அறை அல்லது கடை கட்டி விற்றுவிடுகிறார்கள்.
திறந்தவெளியில் கார் நிறுத்தும் வசதிக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. அது பொதுப் பயன்பாட்டு பகுதியில் வருகிறது.
பழைய அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குவது என்றால் குடிநீர் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் எல்லாம் பாக்கி வைக்காமல் கட்டப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இதுவரை நாம் பார்த்தது ஃப்ளாட்டோ, வீடோ நாம் வாங்குவதற்கான செக்லிஸ்ட்டைத்தான். இனிமேல் பார்க்கப் போவது நம்மிடம் இருக்கும் ஃப்ளாட்டையோ, வீட்டையோ விற்கும் போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது பற்றி.

வீடு விற்பனை
மனை மற்றும் வீட்டிற்கான என்ஜினீயரின் மதிப்பீடு, வழக்கறிஞரின் கருத்து போன்றவற்றை வாங்கி வைப்பது மூலம் விரைவாக விற்க முடியும்.  
மின்சாரம், சொத்து மற்றும் குடிநீர் வரியை முடிந்த மாதம் வரைக்கும் கட்டி ரசீதை வைத்திருங்கள்.
அண்மைக் காலம் வரையி லான வில்லங்கச் சான்றிதழ் வாங்கி வைத்துவிடுங்கள்.
கதவு, தரை போன்றவற்றை சரி செய்யுங்கள். சில மாதங்களுக்கு முன் பெயின்ட் எல்லாம் அடித்துவிடுங்கள்.
மனைக்கு தனிப் பட்டா இருந்தால் நல்ல விலை கிடைக்கும்.

காலி மனை விற்பனை
மனையில் புதர் மண்டியிருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள்!
நான்கு எல்லைக் கற்களுக்கும் பெயின்ட் அடித்து மனை எண்ணை எழுதி வையுங்கள்.
 சாலையிலிருந்து மனை பள்ளமாக இருந்தால் மணல் அடித்து உயர்த்துங்கள்.
மனையில் ஏதாவது பள்ளம் இருந்தால் அதனை நிரப்பி சீர்படுத்துங்கள்.
இவை தவிர பொதுவான சில விஷயங்களும் உண்டு. ரியல் எஸ்டேட்டில் எந்த ஒரு விஷயத்தையும் அக்ரிமென்ட் இல்லாமல் செய்யாதீர்கள். பணம் கொடுக்கும்போது 20 முத்திரைத் தாளில் எழுதி வாங்குவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். கூடுமான வரையில் காசோலையாகக் கொடுப்பது நலம். முன்பணம் என்பது எப்போதும் ஆயிரங்களில் இருக்கட்டும், லட்சங்களில் வேண்டாம். மேலும், பணத்தை சொத்தின் உரிமையாளரிடம் மட்டுமே கொடுங்கள். முடிந்தால் குடும்பத்தினர் மத்தியில் கொடுப்பது நல்லது.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டால், அடுத்தடுத்து நீங்கள் சொத்துக்களை வாங்கிக் குவிக்கலாம்...!

1 comment:

  1. வீடு கட்ட அப்ரூவல் வாங்கவில்லை என்றால் என்ன நடக்கும்

    ReplyDelete