இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் பாலிசிக்கான பிரீமிய பணத்தை ஏஜென்டுகளிடம் கொடுத்துவிட்டு அதை அவர் கட்டினாரா, இல்லையா? என டென்ஷனுடன் இருப்பார்கள். இந்த டென்ஷனைத் தவிர்த்து, பிரீமியத்திற்கான பணத்தைப் பாதுகாப்பாகவும், நாள் தவறாமலும் இருந்த இடத்தில் இருந்தபடியே கட்ட பல சுலப வழிகள் இருக்கின்றன. அந்த வழிகள் என்னென்ன என்று பார்க்கலாமா?
1. இன்ஷூரன்ஸ் கிளை அலுவலங்கள்!
இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இன்ஷூரன்ஸ் கிளை அலுவலகங்களில் ரொக்கமாகவோ காசோலை மூலமாகவோ உடனே பிரீமியத்தைக் கட்டிவிடலாம். இப்போது எல்லா இன்ஷூரன்ஸ் அலுவலகங்களும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் எந்த கிளையில் வேண்டுமானாலும் பிரீமியத்திற்கான பணத்தைக் கட்டி நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
2. இணையதளம்!
இரண்டாவது வகை, உங்களுக்கு கணக்கு இருக்கும் வங்கியின் ஆன்லைன் மூலம் பிரீமியம் கட்டுவது. இதில், குறிப்பிட்ட சதவிகிதம் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
3. இ.சி.எஸ்.!
மாதச் சம்பளக்காரர்களுக்கு ஏற்றது இந்த வசதி. மாதந்தோறும் பிரீமியம் கட்டும் பாலிசிகளுக்கு மட்டும்தான் இந்த வசதி என்பது முக்கியமான விஷயம். இந்த வசதியைப் பெற உங்களுக்கு கணக்கு இருக்கும் வங்கியின் காசோலை ஒன்றை கோடிட்டு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்தால் போதும்.
4. ஏ.டி.எம். மையங்கள்!
வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மூலமும் பிரீமியம் கட்ட முடியும். உதாரணத்துக்கு, ஆக்ஸிஸ் வங்கி, கார்ப்பரேஷன் வங்கிகளின் ஏ.டி.எம். கார்டு வைத்திருப்பவர்கள் அந்த வங்கிகளின் இணையதளத்தில் பதிவு செய்து ஒப்புதல்பெற்ற பிறகு, ஏ.டி.எம். மையங்களின் மூலம் எல்.ஐ.சி. பிரீமியத்தைக் கட்ட முடியும்.
5. டிராப் பாக்ஸ்!
இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கிளைகளில் வைக்கப்பட்டிருக்கும் 'டிராப் பாக்ஸ்’-ல் காசோலையைப் போட்டுவிட்டால் தீர்ந்தது பிரச்னை. காசோலையின் பின்புறம் பாலிசிதாரரின் பெயர் மற்றும் பாலிசி எண்களைக் குறிப்பிடுவது அவசியம். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் தாய் நிறுவனங்கள், வங்கிகளாக இருக்கும் பட்சத்தில் வங்கியின் 'டிராப் பாக்ஸ்’-ல் காசோலையைச் செலுத்தும் வசதி இருக்கிறது.
6. ஈஸி பில்!
பெரிய நகரங்களில் பல்வேறு கட்டணங்களை ஒரே இடத்தில் செலுத்தும் விதமாக ஈஸி பில் மையங்கள் இருக்கின்றன. ரசீதை மட்டும் மறக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
7. எஸ்.எம்.எஸ்.!
இன்ஷூரன்ஸ் பிரீமியத்தை நம் செல்போனிலிருந்து எஸ்.எம்.எஸ். மூலமும் செலுத்த முடியும். கிரெடிட் கார்டுகள் மூலம் இவ்விதம் பணம் கட்ட முடியும். இதற்கு எம்செக்.காம் (www.mchek.com) என்கிற இணையதளத்தில் உங்களது செல்போன் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். கார்ப்பரேஷன் வங்கி வாடிக்கையாளர்கள், எல்.ஐ.சி. பிரீமியத்தை எஸ்.எம்.எஸ். மூலம் செலுத்தலாம்.
சுலபமான வழிகளை சொல்லி விட்டோம். இதில் சேவைக் கட்டணம் ஏதாவது இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்துக் கொள்வது உங்கள் கடமை.
No comments:
Post a Comment