வேன் உண்டு... வினை இல்லை!
உலகம் கடலால் சூழப்பட்டது என்பதை அந்த ஊரின் குழந்தைகள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் சொல்வார்கள்... ‘உலகம் மலைகளால் சூழப்பட்டது’ என்று! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, தேர்தல் நேரத்தின்போது ஒட்டுமொத்தத் தமிழகத்தாலும் கவனிக்கப்படும் ஊர். அங்கே ஆண்டிபட்டி கணவாயைக் கடந்து செல்ல வேன்கள் ஓடத்தொடங்கி ஏறக்குறைய 25 ஆண்டுகளாச்சு. வேன்கள் வந்த நான்கைந்து ஆண்டுகளில், ஆண்டிபட்டியிலிருந்து வெளியூர்களுக்கும் சுற்றுலாக்களுக்குமான ஓட்டத்துக்கு இடையில், சுற்றுப்புறக் கிராமங்களுக்கு வேன் பயணம் போகிற யோசனை ஓரிருவருக்கு உதித்ததிலிருந்து வெற்றிகரமான அந்த ஓட்டம் தொடர்கிறது.
வேன்கள் போகிற அதிகபட்ச தூரமான 15 கி.மீ-க்குள் இந்தியாவின் எல்லா நூற்றாண்டுகளும் நிலவி வருவதையும் நாம் காணமுடியும்.
நாலாதிசைகளிலும் குண்டும் குழியுமான பாதைகளில் ஐம்பது பைசாவுக்கு ஏற்றிச் செல்கிற காலத்தில் அருகிலிருக்கும் கிராமங்களிடம் ஆண்டிபட்டி வேகமான தொடர்பு பெற ஆரம்பித்தது. ராஜதானி, ஜம்புலிப்புத்தூர், ஏத்தக்கோவில் என்று ‘ஜக்’கென்று ஒட்டிக்கொள்ளும் சில ஊர்ப் பெயர்கள். அப்புறம் தப்பினாற்போல சில ‘புரம்... புரம்’ என்று முடிகிற ஊர்களைத் தவிர்த்துவிட்டால், பாக்கியுள்ளவை எல்லாம் பட்டிகள். பட்டிகளை பெயர் முடிவாகக்கொண்ட ஊர்களைக் கடந்தால் விதவிதமான பெயர்களில் மலைகள்... மலைகள்.
சுற்றுலா மற்றும் கான்ட்ராக்ட்களுக்காக ஓடாமல் கிராமங்கள் நோக்கி ஓடும் வண்டிகள் ‘டிரிப் வண்டி’ அல்லது ‘டிரிப் வேன்’ என்று அழைக்கப்பெறுகின்றன. டிரிப் வண்டிகளின் பயணத்தை எம்.ஜி.ஆரின் அந்திமக் காலவாக்கில் பழனி முருகன், பச்சைக் கிளி ஆகிய வண்டிகள் தொடங்கிவைத்தன. வேன்களின் கூரை உயரக் குறைவாக தலை தட்டும் மட்டத்தில் இருப்பதால், அதில் ஏறுபவர்களும் ‘அடிமைப் பெண்’ எம்.ஜி.ஆர் மாதிரி முதுகைக் குனிந்துகொண்டு ஏறி பிறகு இடம் அமைத்துக்கொண்டு அமருகிறார்கள். வேன் ஓட்டத்தில் சுப்புலாபுரம், ஏத்தக்கோவில் ஆகியன முதலாவது பயணப் பயன் பெற்ற ஊர்களாகும். அதிலும் ‘‘பச்சைக் கிளி வண்டியில் பிரேக் அடித்தால், பின்னாடி கலர் கலராக பஞ்சவர்ணக் கிளி மாதிரி லைட் எரிவது மறக்க முடியாத பால்ய கால நினைவு’’ என்கிறார் பயணி புவனராஜன்.
திங்கட்கிழமை ஆண்டிபட்டியின் சந்தை தினமாதலால், மிக விரைவில் மூச்சுக்காற்றுகளால் நிரம்பும் ஒரு வண்டியில் ஏறி அமர்ந்து, ‘‘என்ன கணக்கில் டிரிப் அடிக்கிறீர்கள்?’’ என்று டிரைவர் பாண்டியைக் கேட்டால், ‘‘கூட்டம் சேர்ந்தால் போகவேண்டியதுதான். ஒரு நாளைக்கு எட்டு டிரிப் அடிக்கிற மாதிரியும் வரும், ஆறு டிரிப் அடிக்கிற மாதிரியும் வரும். ஆனால், மினி பஸ்ஸோ, ரூட் பஸ்ஸோ அவங்களுக்கும் எங்களுக்கும் பத்து நிமிஷ கேப்பாவது இருக்கிற மாதிரி பாத்துக்குவோம்’’ என்றவாறு பாதையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இப்படிப் போதுமான இடைவெளிவிட்டு ஓட்டுவதன் மூலம் வில்லங்கங்களைத் தவிர்த்துக்கொள்கிறார்கள்.
போதுமான இடைவெளிவிடுகிற காரியத்தை ஆண்டிபட்டியில் அரசியல் தலைவர்களின் சிலைகள் நிறுவியுள்ள அமைப்பிலும்கூடப் பார்க்க முடிகிறது.
பயணம் போவதற்கான எல்லைகளைத் தீர்மானித்துக்கொண்டு அவர்கள் வண்டி ஓட்டினாலும்கூட, அதற்கும் அப்பால் உள்ள ஊர்களுக்கு ஒரு எட்டுப் பத்து டிக்கெட்டு சேர்ந்துவிட்டால் அப்படியே கொண்டுபோய் இறக்கிவிட்டுவிட்டு வருகிறார்கள். பத்துப் பதினைந்து டிக்கெட்டுகள் காத்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் இருக்கும் இடம் வரையிலும் போய் ஏற்றிக்கொண்டு வருவதும் உண்டு. முழுக்கப் பணி தீராத சாலைகளும் அவற்றில் அடங்கும். சாலை இல்லாத ஊர் இருக்கலாம். ஆனால், ஆள் இல்லாத ஊர் இருக்க முடியாது. வெவ்வேறு கிராமத்தினைச் சேர்ந்த ஊர்க்காரர்கள் உரிமையாளர்களாக இருக்கிறபடியால், வண்டியின் ராத்தங்கலை அந்தந்த ஊரிலேயே வைத்துக்கொள்கிறார்கள். ஆகவே, அகால நேரப் பாம்புக் கடி, மருந்துக் குடி முதல் பிரசவம் வரைக்கும் அவசரகால ஊர்தியாகவும் செயல்பட்டுவருகிறார்கள்.
வரும் வேன் கண்டு
எழுவேன் விரைவேன் வழியில் இருக்கும் இறைவர் தொழுவேன் மேல்வான் மறையும் வெயிலோன் அழகை மேய்வேன் மகிழ்வேன் இல்போய்ச் சேர்வேன்! |
தென்மேற்குப் பருவக் காற்று தேனிப்பக்கம் வீசும்போது பாட்டு
பாட்டைக் கேட்டு கிறங்காம ரோட்டைப் பாத்து மேட்டைப் பாத்து ஓட்டு!
|
மலைமீது தேன் உண்டு மலையின்கீழ் வேன் உண்டு பயணங்கள் தொடர்கின்றது. வற்றாத சுனை கண்டு கற்றாழைச் செடி கண்டு அகங்காரம் அழிகின்றது! |
அனுப்பபட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, அம்மாபட்டி, ஜி.உசிலம்பட்டி, வரதராஜபுரம், க விலக்கு ஆஸ்பத்திரி ஆகிய வேன் பாதை அடைவிடங்களின் ஊடாக ஒரு நாற்பது ஊர்களாகிலும் பயன்பெறுகின்றன. இதில் எந்த ஒரு பஸ்ஸோ, மினி பஸ்ஸோ சக்கரம் பதிக்காத பதினைந்து ஊர்களும் அடக்கம். குறிப்பிட்ட அளவு வரை சுமைகள் இலவசம். குழந்தைகளுக்கு அரை டிக்கெட் என்கிற ஜோலியெல்லாம் கிடையாது. கறிகாய் மூட்டைகளை தோட்டம் வரைக்கும் போய் எடுத்துக்கொண்டு வருவது மாதிரியான சௌகரியங்களும் சம்சாரிகளுக்கு உண்டு.
அரிசி மூட்டை, நாடாக் கட்டில் போன்ற ஐட்டங்களை வண்டி டிரைவர் - கிளிகள் வசம் ஒப்படைத்து, ‘‘செல்லம்... இத முத்துப்பாண்டி கடைல இறக்கிப் போட்டுடு’’ என்று கூறியனுப்பிவிட்டு நகரத்துக்குள் மைனராட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிற செல்வாக்கும் இருக்கிறது. இந்த மாதிரியான கூரியர் வேலைகளுக்கு என்று ஸ்பெஷலாகக் காசு தர வேண்டியதுமில்லை. அதெல்லாம், ‘‘வாப்பே, ஒரு டீயக் குடிப்பம்... மத்தியானக் கஞ்சி அடிப்பம்’’ என்பது மாதிரி நட்புக்கான செயலாகும்.
எந்த வண்டிக்கும் போர்டெல்லாம் கிடையாது. ஊர்ப் பெயரில் போர்டு கிடையாதே தவிர, டிராவல்ஸ் என முடியும்விதமாக ஏதாவது பெயர் வைத்திருக்கிறார்கள். குரலெடுத்துக் கூவுவதன் மூலமாக ஆட்களை ஈர்க்க வேண்டிய விதமாகத்தான் ஏற்பாடு. அதல்லாமலும் ஆட்களுக்கு வண்டிகளை அடையாளம் தெரிந்திருக்கும். நீண்ட காலப் பரிச்சயமுள்ள ஆட்களைப் பார்ப்பதில் டிரைவர்கள் பிரேக்கை மிதிக்காமலேகூட வண்டிகள் நின்றுவிடக்கூடும் என்று நினைக்கிறேன். எப்படியும் வத்தலான உடலமைப்பும் தொத்திக்கொண்டு போவதில் பிரியமும் உள்ள பையன்கள், கூச்சல் இட்டு ஆள் சேர்க்கக் கிடைத்துவிடுவார்கள்.
‘அழகாபுரி... அழகாபுரி... அழ்ழகா புரிய்ய்யே!’
கூரைக்குள் ஆட்களோடு அவரவர்தம் சுமைகளுக்கும் இடமுண்டு. நாற்காலி, கட்டில், மூங்கில் போன்ற இனங்களைக் கொண்டுசெல்லத் தோதாக வேனின் மேற்பக்கக் கம்பிக்கட்டுகளும் தயாராகவே உள்ளன.
திருமணப் பத்திரிகைகளிலும் வேன்கள் இடம் பெறுகின்றன. நிகழ்விடத்துக்கு வேன் வசதி உண்டு என்பதன் கீழாக வண்டிகளின் பெயரையும் அவை எங்கு நிற்கும் என்பதையும் குறிப்பிட்டுவிடுவார்கள்.
முருகன் தியேட்டர் ஸ்டாண்டு, தீயணைப்பு நிலைய எதிர்ப்புற ஸ்டாண்டு, எம்.ஜி.ஆர் சிலை ஸ்டாண்டு ஆகியன வண்டி நிற்குமிடங்கள். பொன் மனச் செம்மலுக்கு இங்கே தங்க வர்ணத்தில் சிலை.
சேரும் இடம் அடைய அரை மணிதான் என்றாலும் பாட்டும் பாவமுமாகத்தான் எல்லா வண்டிகளும் டேப் ரெக்கார்டர்களுடன் இயங்குகின்றன. போதாததற்கு படம் காட்டுகிற பெட்டி வைத்த வண்டி ஒன்றும் தென்படுகிறது.
மாமூலான பயணங்கள் தவிர வண்டிக்கு மகிமை கூடுவதென்பது திருவிழாக் காலங்களில்தான். பாலக்கோம்பைக்குப் பக்கத்திலிருக்கிற மாவூத்து வேலப்பர் மலை, வீரபாண்டி, சுந்தரமகாலிங்கம் கோவில் என மக்கள் சென்று சேவிப்பதற்கு, ‘வேலுண்டு வினையில்லை... போய் வர வேனுண்டு கவலையில்லை’ என்கிற தோது இருக்கிறது. மற்றபடிக்கு ஆண்டு தவறாமல் அந்தந்த ஊருக்கென்று உள்ள தெய்வங்களின் பொங்கல் சாட்டுக்களின்போது பக்தகோடிகளாலும் விருந்தாடிகளாலும் கூட்டம் பிதுங்கி வழியும்.
மலைக் கருமையும் தாவரப் பச்சையமும் இணைந்ததான வாழ்க்கைமுறையில் அவர்களது வாகனமும் இணைந்து ஓடுகிறது. இன்னும் பல மாசிப் பச்சைகளின் காலத்துக்கு அதன் சேவை தொடரத் தேவையாயிருக்கிறது. வட்டாரம் கடந்த வாசகர்களுக்கான குறிப்பு என்னவென்றால் தமிழ்நாடு முழுக்க ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படும் ஒன்றைத்தான் இங்கே சுத்துப்பட்டு மக்கள் ‘மாசிப்பச்சை’ என அழைக்கிறார்கள்.
பங்குனியிலிருந்து தொடங்கும் கோடையில் அவர்களது பொங்கல் நாட்கள் தொடங்க இருக்கின்றன. மாறாத புராதன வழிபாடுகளும் சடங்குகளும் எல்லா நூற்றாண்டுகளும் அங்கே நிலவிக்கொண்டு இருப்பதற்கு சாட்சி பகரப் போகின்றன. ஐம்பது பைசாவை உச்ச கட்டணமாக வைத்திருந்த காலத்தில் டீசல் மூன்று ஐம்பதுக்கு விற்றது. இப்போது முப்பத்து ஆறு ரூபாய்க்கு டீசல் விற்கும் காலத்தில் கட்டணமாக ஐந்து ரூபாய் வசூலிக்கிறார்கள். அப்புறம், சுப்புலாபுரத்தில் வடை ஐம்பது காசுக்குக் கிடைக்கிறது. வைகை அணை, மாவூத்து வேலப்பரின் வற்றாச் சுனை மேற்குத் தொடர்ச்சியின் அடிவாரக் காற்று இவற்றிலிருந்து விடைபெற பேருந்து நிலையம் வந்தால்... அறிவியற்கருவிகளின் வரவு பற்றி அப்போதே பாடிவைத்த கலைவாணரின் பெயரால் பேருந்து நிலையம்.
புகழ்பெற்ற நாடகக்காரர்களும் நிஜமான மனிதர்களும் நிறையப் பேர் இருப்பதால் இப்படி ஒரு பெயர் போலும். படிவ வரிகளால் வனப்பும் வரலாறும் பேசிக்கிடக்கும் ஆண்டிபட்டிக் கணவாயை நள்ளிரவில் கடக்கிறேன்!
No comments:
Post a Comment