பத்தி கொளுத்துதல், திருநீறு அணிதல், சிலுவையிட்டுக் கொள்ளுதல், குறைந்தபட்சம் ஸ்டீயரிங்கைத் தொட்டு வணங்குதல்... இத்தகைய எளிய சடங்குகளுக்குப் பிறகு அவர்களது தோற்றமே மாறிவிடுகிறது. அலுவலகத்துக்குள் ஓனருக்கு முன்பு கைகட்டியவாறோ, தலைகுனிந்தவாறோ நின்றிருந்த முகமே அல்ல அது. நூற்றுக்கணக்கான மைல்கள், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகளை பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்க்கிற டிரைவர்கள்தான் இந்த இதழ் நாயகர்கள்!
எனது முதலாவது நீண்ட லாரி பயணம் என்பது எங்கள் ஊரிலிருந்து மதுரைக்குத் தெற்கே மேலூர் வரை வெள்ளக்கோவில் வி.பி.கே லாரி சர்வீஸ் செல்வ மச்சான், ‘‘கிளம்பு மாப்ளே!’’ என்று கூட்டிப் போனதுதான். அதற்குக் காரணமாக, நெடிய பயணத்தின்போது ஆட்களின் துணை அவ்வளவு அவசியமானது என்பது இப்போது புரிய வருகிறது.
ஆந்திரா வரையாவது லாரியில் செல்ல வேண்டும் என்று மாதவரம் டிரக் டெர்மினல் - சி.எம்.டி.ஏ வளாகத்துக்குச் சென்றபோது, அது லாரிகளின் பிரதேசமாக இருந்தது. அனைத்து மாநில ரெஜிஸ்ட்ரேஷன்களிலுமாக ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகள் நாள்தோறும் வந்து செல்கிற வழித்தடம்.
வட இந்திய லாரிவாதிகள் சிலபேர் இன்ஜினுக்கு மேல் ஸ்டவ் அடுப்பு வைத்து சப்பாத்தி சுட்டுக் கொண்டு இருந்தார்கள். அந்த மாதிரிக் காட்சியை நான் எப்போது பார்த்தாலும் ஒரு கணம் மூச்சு நின்று மறுபடி சீராகும். லாரி ஓடுவதற்கு டீசல் தேவை என்கிற உண்மையை நான் அறிவேன். ஆனால், இந்த அடுப்புகளைப் பார்க்கும்போது மட்டும் டீசல் டாங்குக்கும் ரேடியேட்டர் பகுதிக்கும் இடையே உள்ள தூர வித்தியாசம் மறந்துபோவதால்தான் இந்த மூச்சுப் பிடிப்பு. பொதுவாக நமது டிரைவர்களைவிட வட இந்திய டிரைவர்கள் சாப்பாட்டு விஷயத்தில் கட்டுப் பாடானவர்கள் அல்லது கட்டுப்பெட்டித் தனமானவர்கள்!
மாதவரம் காவல் நிலையமும் அந்த டெர்மினலுக்கு உள்ளேயே இருப்பதால், அந்தப் பகுதியில் உள்ள கடைகள் அநேகமாக இரவு பதினொரு மணிக்கு அடைத்து, காலை நான்கு மணிக்குத் திறக்கின்றன. சாப்பாட்டுக் கடைகள் நீங்கலாக பர்மா பஜார் வகைக் கடையும், கைலி, ஜட்டி, ஈரிழைத் துண்டு, செருப்பு ஆகியவை விற்கப்படும் கடைகளும் உண்டு. இதில் டிரைவர்கள் விரும்பி எடுக்கிற ஐட்டம் இரண்டு பக்கமும் பாக்கெட்டுகள் வைத்த ஜட்டிகள்தான்.காரணம், அனைவருக்கும் தெரிந்ததே!
மாதவரம் டிரக் டெர்மினலின் உரிமையாளர் சங்கத் தலைவரும் ஹெச்.பி.ஆர்.கேரியர்ஸின் உரிமையாளருமான வாசுதேவனைச் சந்தித்து, ‘‘லாரி ஓட்டுபவர்களின் பிரச்னைகள் நிமித்தம் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும்’’ என்றதும்,
‘‘ஒவ்வொரு ஹைவேக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னை உண்டு. நீங்கள் போகிற தூரத்துக்குள் எவ்வளவு சுங்க வரி கொடுக்கிறோம் என்பதைப் பற்றி மட்டும் எழுதுங்கள். லஞ்சங்களைப் பற்றி எழுத வேண்டாம். ஆர்.டி.ஓ-க்கள் ராத்திரிகளில் வண்டியைத் தடுத்து ஆகப்போவது என்ன? சட்டம் ஒழுங்கு காவலர் ஒருவர் பொழுதுபோகாமல் வண்டி முதல் வாகனச் சரக்கு வரை அவ்வளவுக்கும் ஏன் பேப்பர் கேட்க வேண்டும்? - இப்படிப் பல கேள்விகள் எங்களுக்கே உண்டு. ஆனால், டிரைவர்களைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். அவர்களுடன் போய்ப் பார்த்துவிட்டு அவர்களது பயணத்தை எழுதுங்கள்’’ என்று லாரி அலுவலகத்துக்குள் இருந்து லாரி கேபின் ஒன்றுக்கு மாற்றினார்.
கே ஏ 01- பி 3053. ஓட்டுநர் பாலன். கிளீனர் பெயர் சிவக்குமார். பயணத்தின்போது தெரிந்தது என்னவென்றால், கிளீனர்கள் முதலில் பழக வேண்டியது ஸ்டீயரிங் பிடிப்பதல்ல. தூக்கம் கெடுவது. வளர்ந்த நிலா மறையும் வரையோ, மறைந்த நிலா வட்டம் கொள்ளும் வரையோ, இன்ஜின் உறுமியிருக்கும் நேரமெல்லாம் விழிப்பு நிலையை அந்தப் பையன் நிரூபித்தால்தான் ஸ்டீயரிங் வட்டத்தைக் கையில் தருவார்கள். அப்புறம் தார்ப்பாயின் மேலாகக் கட்டுக்கள் தெறிக்காமலிருக்கிறதா என்று சோதனையிடத் தெரிய வேண்டும். தார்ச் சாலைக்கும் கீழாக நின்றுபோன வண்டியிலும் ஜாக்கி வைக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஐம்பது அறுபது வயது டிரைவர்கள் யாராவது நெற்றித் தழும்பைக் காட்டி, ‘என் வாத்தியார் ஸ்பானர்ல போட்டது... அதனாலதான் நம்ம காலம் எப்படியோ ஒருவிதமா ஓடிட்டுது’ என்று, தான் அழாமல் மற்றவர் கண்களில் நீர் வருவது மாதிரிச் சொல்வதை இந்தத் தொழிலில் பார்க்கலாம்.
பதினாறு டன் எடை ஏற்றிய பத்து டயர் வண்டி பயணித்தது. எதிரில் வரும் வண்டிகளுடன் ஹாரன் சிக்னல்கள், ஒழுங்கு மீறிப் பயணிப்போர் மீதான வசவுகள் (தமிழில் இவை ‘தகர’ வரிசைக்கு முன்னுரிமை அளிப்பவை), சாலையோரக் காகிதப் பூக்கள் (இவை அழகுக்காக மட்டுமின்றி எதிர்வரும் வாகனங்களின் வெளிச்சத் தாக்குதலிலிருந்து காப்பாற்றவும் பயன்படுகின்றனவாம்), செவ்வகப் பெட்டி வடிவத்துடன் துல்லியமாகக் காசு வசூலிக்கும் சுங்கச் சாவடிகள், வாய் கீழாகக் கவிழ்த்தப்பட்ட பிளாஸ்டிக் குடத்துக்குள் அந்தரத்தில் விளக்கெரியும் சோதனைச் சாவடிகள் (இவற்றின் வசூல் துல்லியத்துக்கு உட்பட்டதல்ல) என பலவிதக் கோலங்களைக் கடந்து இரவுப் பயணம் தொடர்ந்தது.
வாழ்வின் பதினெட்டு வயதில் ஒரு முறை ஆந்திரா சென்று ஒரு வருடம் வாழ்ந்ததை அடுத்து, மறுபடி பதினெட்டு வருடங்கள் கழித்து ஆந்திரா என்பது மெலிதான கிளர்ச்சியை உண்டுபண்ணியது. பதினெட்டு பதினெட்டு என்றாலும் இதில் சபரிமலை சம்பந்தப்படவில்லை. ‘‘ஒரே நாய்னா... அரே பாபு’’ என்று கேட்கப்போகும் சத்தங்களை எண்ணியவாறு பயணத்தைத் தொடர்ந்தேன். இரவு முழுக்கப் பயணம் என்பது சாத்தியமில்லை என்றும் இரவு மூன்று மணிவாக்கில் நாயுடு பேட்டையில் தங்கிவிட்டு, பிறகுதான் பயணம் என்றும் பாலன் கூறியிருந்தார்.
நாயுடு பேட்டைக்கு முந்தைய சோதனைச் சாவடியில் ஒரு முத்திரை குத்தித் தர மூன்று மணி நேரம் ஆனபடியால் பாலன், ‘‘இங்கிருந்தே காலைல கிளம்பிக்கலாம்’’ என்றார். தூங்குவதற்கு முன் அந்த ஊரின் பெயரை ஒரு முறை உச்சரித்துப் பார்த்துக் கொண்டேன். ‘தடா’. இனி யார் கேட்டாலும் சொல்லலாம்- ‘‘நானும் தடாவில் ஒரு ராத்திரி இருந்திருக்கிறேன்.’’
காலையில் தேநீர் அருந்தப் போகுமுன் பைத்தியர் போலவும் ஞானி போலவும் காட்சி தருகிற - அங்கு நிற்கும் வண்டிகளில் காசு வசூலித்துத் திரிகிற பாண்டிச்சேரி மணியிடம் கேட்டேன், ‘‘எத்தனை ஆண்டுகளாக இப்படி..?’’
‘‘பதினெட்டு...’’
நல்ல வேளை அந்த இடத்திலிருந்து பத்து நிமிடத்துக்குள்ளாக பாலன் வண்டியைக் கிளப்பிவிட்டார்.
ரொம்ப ரொம்பத் தூரத்துக்குப் பிறகு எங்கோ தண்ணீர் ஓடும் ஒரு இடத்தில் நிறுத்தினார். அங்குதான் விசர்ஜன விச்ராந்தி. அது ஒரு வறண்ட காலமாக இருந்திருந்தால் என்ன ஆகும்? லாரி ஓட்டுபவர்களின் அனுதினப் பிரச்னை, கழிக்கவும் குளிக்கவும் உத்தரவாதமான இடங்கள் இல்லாதது. வண்டியைப் பாதுகாப்பாக நிறுத்த இடங்கள் இல்லாதது மற்றது.
அதனால்தான், முடிந்த அளவு ஒரே இடம் போகிற வண்டிகள் வால் பிடித்துக்கொண்டு போகிற மாதிரியான ஏற்பாட்டை தங்களுக்குள்ளாகவே வடிவமைத்துக் கொண்டுள்ளார்கள். வண்டியில் பயணியாக வருபவர்கள் கத்தி காட்டுவது, அறுபது கி.மீ. வேகம் ஓடும் வண்டியில் தொத்தி ஏறி சரக்குகளைக் கைப்பற்றுவது, தங்கள் வண்டியில் போகும் சரக்கின் மதிப்பு பற்றி டம்பமடிக்கும் டிரைவர்களுக்கு உணவில் மயக்க மருந்து தருவது என டிரைவர், கிளீனர்களுக்கான சோதனைகள் என்பது எட்டுத் திக்கும் மதயானைதான்.
திரும்ப வண்டி கிளம்பியபோது சுங்க வரிகள் பற்றி பாலனிடம் கேட்கவும் ‘‘ஜாம்ஷெட்பூர் போய் வருவதற்கு மூவாயிரத்தைத் தாண்டும்’’ என்றார்.
பாலன் தெலுங்குக்காரர் என்ப தால் தொள்ளாயிரம் ரூபாய்க்கு வாங்கிய டேப்ரிக்கார்டரில் தெலுங்கும் தமிழும் கலந்துகட்டி பாட்டுக்களை ஒலிக்கவிட்டுக் கொண்டே இருந்தார். வேக முள்ளை ஐம்பதுக்குக் கீழ் அடக்கியே வைத்து டயர் தேய்மானம் முதல் கிரீஸ் வரைஅனைத்தைப் பற்றியும் கவனமுடன் இருந்தார். காலையில் உணவு சாப்பிடும் இடத்தில் மட்டும் பன்னிரண்டு ரூபாய் பேட்டரித் தண்ணீரை (டிஸ்டில்ட் வாட்டர்) இருபது ரூபாய்க்கு வாங்கினார். ‘‘என்ன தலைவா?’’ என்றால், ‘‘இதுக் கெல்லாம் நாம இங்கே சண்டை போட முடியுமுங்களா?’’ என்றார்.
பகலைக் கிழித்துக்கொண்டு பயணம் தொடர்கிறது. அடுத்ததாக சாலையோர தாபாவில் வண்டியை நிறுத்தும் முன் இப்படியான இடங்கள்தான் தங்களுக்கு தகவல் பரிமாற்ற கேந்திரங்கள் என்கிறார். வருகிறவர்களும் போகிறவர்களும் தத்தம் வழித்தடத்தில் சந்தித்த காவல் சோதனைகள், பாதையில் கண்ட விபத்துக்கள், பாதையோரத்தில் கொண்ட ‘விப... கள்’ ஆகியவற்றைப் பேசிப் பகிர்ந்துகொள்வார்கள். வழித்தடங்களில் காசு போட்டுப் பேசும் தொலைபேசிப் பெட்டியை நினைவுறுத்தும் இலவச காண்டம் வைத்த கம்பங்கள் எங்கும் காணக்கிடைக்கிறது. இதற்கு சப்போர்ட்டாக நினைவூட்டும் விதத்தில் மோட்டல்களில் வண்ணப் படங்களும் அதற்குக் கீழ் எச்சரிக்கை வாசகங்களும் தென்படுகின்றன.
பயணங்களின் அடுத்த படிநிலையைப் பற்றி முடிவெடுக்க அவை உதவும். தவிரவும் பாதைகள் என்பன, ‘எல்லாக் குணத்தவர்களுக்கும் பொதுவானவை’ என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
மதிய உணவுக்காக வண்டி நிறுத்திய பகலில் ஒரு தண்ணீர்த் தொட்டியில் குளியல். அப்படிக் காணக்கிடைக்கிற தண்ணீர்த் தொட்டிகளில் அரை லிட்டர் முதல் ஐந்து லிட்டர் வரை கொள்ளளவு காணும் பலவித பாத்திரங்கள் செயல்படும். முதலாவது அலசலில் கறுஞ்சாறாகஉமிழும் துணிகளை நன்கு துவைத்து நீர்வண்ணப் பிழிவு காணும் வரை துவைத்து, டிரைவிங் ஸீட்டில் மண்டைக்குப் பின்னால் தொங்கும் கம்பியில் காயப் போட்டுக் கொள்கிறார்கள். கட்டில் மேல் இரு குறுக்குப் பலகைகள் வைத்த ஏற்பாட்டின் மீது தாபா சாப்பாடும் சிறு ஓய்வும் கழிந்தபின் தொடுவானத்துக்கு அப்பால் உள்ள கண்ணுக்கெட்டாத பிரதேசத்தை நோக்கி வண்டியெடுக்கிறார்கள்.
நெடிய பயணத்தில், சாலையின் மருங்கில் அவர்களது வாரிசுகளை நினைவூட்டும் தோற்றத்தில் ஒருவராவது கடந்து செல்லக்கூடும். அப்போது தன் கூட்டையும் குழவிகளையும் நினைத்துக்கொள்கிறார்கள். தங்களது வாரிசுகள் ‘வட்டையை’ப் பிடித்து வறுபட்டு வண்டியோட்டி வாழ வேண்டியதில்லை என்று நினைக்கிறவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.
உத்தரவாதமான வரும்படி, அயலிடத்து மரியாதை, மற்றவர் உடுத்தி நிற்கிற காக்கி நிறத்தைக் கண்டு மிரளாமலிருத்தல் போன்ற பற்பல எதிர்கால மேம்போக்கை வேண்டி நிற்கிறது அவர்களது ஓட்டுரிமை. ஓட்டுரிமை என்பதை கட்சிச் சின்னத்துக்குப் பொத்தான் அழுத்துகிற வேலையாக யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்றே நம்புகிறேன். ஏனெனில், இது மொழியின் சுமை!
No comments:
Post a Comment