Wednesday, 1 July 2015

சொத்துப் பத்திரம் காணாமல் போனால்...

வாழ்க்கையில் எதிர்பாராதது ஒன்றுதான் எதிர்பார்க்கக் கூடியது என்பார்கள். அப்படித்-தான் டெல்லியைச் சேர்ந்த சுதிர் பாவா என்பவர் விஷயத்திலும் நடந்தது. அவர் பன்-னாட்டு வங்கி ஒன்றில் 2000-ல், 9 லட்சம் ரூபாய்
வீட்டுக் கடன் வாங்கி இருந்தார். 2002-ல் கடனை முழுமையாகச் செலுத்திவிட்டு, வீட்டுப் பத்திரத்தைக் கேட்டால், 'பத்திரம் காணாமல் போய்விட்டது' என்று வங்கி ஒரு வரியில் சொல்லிவிட்டது. அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஒன்றைத் தாக்கல் செய்துவிட்டு வங்கி எனக்கென்ன என்று விலகி விட்டது. பத்திரம் காணாமல் போனதற்கு இழப்பீடு எதுவும் தரவில்லை. ஒரிஜினல் பத்திரம் இல்லாத நிலையில், வீட்டை சுமார் 10 லட்சம் ரூபாய் நஷ்டத்துக்கு விற்றிருக்கிறார் பாவா. இந்த நஷ்டத்தைத் தவிர்க்க வேண்டுமானால் வங்கியின் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து கோர்ட்டுக்குத்தான் செல்லவேண்டும் என்பதுதான் சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
இப்படி பத்திரம் தொலைந்துபோவது என்பது வங்கிகளில் மட்டும் நடக்கக்கூடிய விஷயமல்லவே. நமது வீடுகளிலேயே கூட நடக்கலாம். ஒரிஜினல் பத்திரம் இல்லாவிட்டால் அந்தச் சொத்தின் மதிப்பைப் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. நிச்சயம் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள். இப்படி எதிர்பாராதவிதமாக பத்திரங்கள் காணாமல் போகும்போதோ சேதமடையும்போதோ என்ன செய்யவேண்டும்? இவை குறித்து அறிய சொத்து ஆலோசனை நிறுவனமான ரேங்க் அசோஸியேட்ஸின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ்.சி.ரகுராமை அணுகினோம்.
''எழுபதுகளில் அண்ணாசாலை எல்.ஐ.சி. கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான ஒரிஜினல் ஆவணங்கள் தீயில் எரிந்துவிட்டன. ஆனால், எல்.ஐ.சி. கொடுத்த சான்றிதழ்களைக் கொண்டு அனைவராலும் எரிந்த பத்திரத்துக்குரிய சொத்துக்களைப் பிரச்னை இல்லாமல் சந்தை விலையில் விற்க முடிந்தது.
இன்னொரு சம்பவம்... ஒரு பன்-னாட்டு வங்கி தனது அலுவலகத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றும்போது சில ஆவணங்களைத் தொலைத்துவிட்டது. அந்நிலையில், வங்கி கொடுத்த உறுதிமொழிப் பத்திரம் (Indemnity) மூலம் சொத்து விற்கப்பட்டன. அதனால் வங்கியோ, நிதி நிறுவனங்களோ முறையான சான்று-களைக் கொடுத்தால் விற்பனை செய்வதில் எந்தச் சிக்கலும் வரப்போவதில்லை. வங்கியில் அடமானம் வைத்த சொத்துப் பத்திரம் காணாமல் போய்விட்டது என்கிறபோது, இதற்கு வங்கியின் அஜாக்கிரதை, அலட்சியம் என்று நிரூபிக்க முடிந்தால் நஷ்டஈடு பெற வாய்ப்பு உள்ளது'' என்றவர், தனி நபர் விஷயத்தில் சொத்துப் பத்திரம் சேதமடைந்தால் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லத் தொடங்கினார்.
''சொத்து ஆவணங்கள் கிழிதல், கறையான் அரித்தல், தண்ணீர்பட்டு எழுத்துகள் அழிதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், அவற்றை அந்நிலையிலேயே பாதுகாத்து வருவது அவசியம். 'ஒரிஜினல் ஆவணம் சேதம் அடைந்துவிட்டதால்தான் மாற்று ஆவணம் பெற்றிருக்கிறேன்' என்பதை, சொத்தை வாங்குபவரிடம் எடுத்துக்-காட்ட வசதியாகத்தான் இந்த ஏற்பாடு.
சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து, ஆவணத்தின் சான்றளிக்கப்பட்ட நகலை (Certified Copy) வாங்கிக்கொள்ளலாம். சேதம் அடைந்த அசலையும் சான்றளிக்கப்பட்ட நகலையும் சேர்த்துவைத்து, சொத்தை அதன் உண்மையான சந்தை விலைக்கே விற்கலாம்'' என்றவர், சொத்துப் பத்திரம் காணாமல் போய்விட்டால், உடனடி-யாகச் செய்யவேண்டியது என்னென்ன என்பதை விளக்கினார்.
''காணாமல் போன பத்திரத்தை மற்ற-வர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்க (வங்கியில் அடகு, சொத்தை விற்க முயற்சி) முதலில் போலீஸில் புகார் கொடுக்க-வேண்டும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸ் நிலை-யத்திலிருந்து, பத்திரத்தைக் கண்டு-பிடிக்க இயலாத நிலையில் கண்டு-பிடிக்க இயலவில்லை என்ற சான்-றிதழ் (Non - Traceable Certificate) பெற்றுக்கொள்ள வேண்டும். கூடவே உள்ளூர் நாளிதழ்களில் (ஒரு ஆங்கிலம் மற்றும் ஒரு தமிழ் பத்திரிகை) காணாமல்போன பத்திரத்தின் விவரங்கள் அடங்கிய பொது அறிவிப்பை வக்கீல் மூலம் விளம்பரமாகக் கொடுக்கவேண்டும். அடுத்து சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து சான்றளிக்கப்பட்ட நகலைப் பெற்றுக்கொண்டு அத்துடன் போலீஸ் புகார் நகல், காவல் துறையின் சான்றிதழ் முதலியவற்றைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.
ஆக மொத்தத்தில் சொத்து... பத்திரம். அதைவிட அதன் பத்திரம், பத்திரம்!

 
 
                            
    

No comments:

Post a Comment