வருடக் கணக்காக கார் ஓட்டுபவர்களாக இருந்தாலும் 'நல்ல டிரைவர்' என்ற வர்ணனைக்குள் பலரால் வர முடியாது. நல்ல டிரைவர் என்பவர் யார்? அவருக்கான
தகுதிகள் என்ன என்று பட்டியல் போட்டால், இதில் முதலிடத்தில் இருப்பது பாதுகாப்பு என்ற விஷயம் மட்டும்தான். வாகனத்தை ஓட்டும் தன்னுடைய பாதுகாப்பு, தன்னை நம்பி பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு, சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களின் பாதுகாப்பு, வாகனத்தின் பாதுகாப்பு... என்று சகல கோணங்களிலும் கவனம் செலுத்துவதுதான் நல்ல டிரைவருக்கான முக்கியத் தகுதி. அந்தத் தகுதியை மேம்படுத்திக்கொள்ள இந்த 16 பக்கங்கள் நிச்சயம் பயன்படும்.
2005-ம் ஆண்டு நம் நாட்டில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,10,300. 'சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த நாம் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், 2015-ம் ஆண்டில் 1,54,600 பேர் சாலை விபத்துகளால் உயிரிழப்பார்கள்' என மத்திய அரசு அமைத்த சுந்தர் கமிட்டி கணித்து எச்சரிக்கை விடுத்துள்ளது!
காக்க... காக்க!
கார், பைக் வாங்குவதே சௌகரியத்துக்காவும் சந்தோஷத்துக்காகவும்தான். ஆனால், அந்த வாகனத்தை ஓட்டும்போது, கண்மூடித்தனமான வேகத்தையும், அலட்சியத்தையும் காட்டினால்... இதே காரும் பைக்கும் நமக்கு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்குத் துயரத்தைக் கொடுக்கக்கூடும். ஏன், உயிரையே பறிக்கும் எமனாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. உங்களுடைய பயணம் உங்களை மட்டுமல்ல... உங்களை நம்பி பயணம் செய்யும் உங்கள் குடும்பத்தினருக்கும், சாலையைப் பயன்படுத்தும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பாக அமைய வேண்டும்.
அடிக்கடி நெடுஞ்சாலையில் கார் பயணம் செய்பவர்கள், பாதுகாப்பு வசதிகள் கொண்ட காரை வாங்குவதே நல்லது. காற்றுப் பைகள், ஆன்டி லாக் பிரேக்ஸ் (ஏபிஎஸ்) ஆகியவை உங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்தும். குழந்தைகளை உங்கள் காரில் அழைத்துச் செல்வீர்கள் என்றால், 'சைல்டு சீட்' வசதி அவசியம். ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளை சைல்டு சீட்டில் உட்காரவைத்து அழைத்துச் செல்வதே பாதுகாப்பானது. மேலும், 12 வயதுக்குக் குறைவான குழந்தைகளை பின் சீட்டில் உட்கார வைப்பதுதான் நல்லது!
ஏபிஎஸ்
ஏபிஎஸ் பிரேக், சடர்ன் பிரேக் பிடிக்கும்போது கார் ஸ்கிட் ஆகாமல் தடுக்கும். அதாவது, திடீரென பிரேக் பிடிக்கும்போது, வீல் லாக் ஆகி வழுக்கிக் கொண்டே போவதோ, அல்லது சறுக்கலோ இருக்காது. ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்தில் இருக்கும் சென்ஸார்கள், கார் ஸ்கிட் ஆகும் நிலை வரப்போகிறது என்பதைக் கணித்து முன்கூட்டியே தடுத்துவிடும். ஏபிஎஸ் பிரேக்குகள் இல்லாத கார்களில், கார் ஸ்கிட் ஆகாமல் தடுக்க... பிரேக்குகளை ஒரேயடியாக அழுத்தாமல் விட்டு விட்டு (பம்ப்) பிடிக்க வேண்டும். ஆனால், விபத்து நிகழப்போகிற சமயத்தில் இதுபோன்ற விஷயங்கள் உடனே நினைவுக்கு வருமா என்பது சந்தேகம்தான். அதனால், ஏபிஎஸ் பிரேக் கொண்ட கார்களை வாங்குவது நல்லது. ஏபிஎஸ் பிரேக் உள்ள காரை பம்ப் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால், எலெக்ட்ரானிக் சென்ஸார்கள் வேலை செய்யாமல் போய்விடும்.
காற்றுப் பை (ஏர் பேக்)
காற்றுப் பைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதைத் தெரிந்து கொள்வது பாதுகாப்புக்கு அவசியம். வாகனம் எதன் மீதாவது மோதும்போது, காற்றுப் பைகள் பயங்கர வேகத்துடன் விரியும். அப்போது, உங்கள் உடல் முன் பக்கமாக மோதச் செல்லும் நிலையில், காற்றுப் பைகள் முழுமையாக விரிந்து காருக்குள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பி, அதாவது கனமான பாகங்கள் உங்கள் மேல் மோதி, பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தடுக்கும். காற்றுப் பைகள் விரிவதால் உங்கள் உடலில் சிறிய காயங்கள்கூட ஏற்படலாம். அதனால், காரை ஓட்டும்போது ஸ்டீயரிங் வீலில் இருந்து கூடுமானவரை விலகி அமர்ந்து காரை ஓட்டுவதே நல்லது. எப்போதும் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். சீட் பெல்ட் அணியவில்லை என்றால் காற்றுப் பைகள் இருந்தும் பயனற்றுப் போய்விடும்!
தவறுகளைச் சரி செய்யுங்கள்!
டைம்
எப்போதுமே நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் பயணம் செய்யப் போகும் இடத்துக்கு, டிராஃபிக் நெருக்கடியில் செல்ல எவ்வளவு நேரம் செலவாகும் என்பதைக் கணக்கிட்டு, அதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். கடைசி நேரத்தில் அவசர அவசரமாகப் பயணம் செய்யாதீர்கள்!
வாகனத்தைச் சரியாக ஓட்டக் கற்றுக் கொள்ளுங்கள்!
'நீங்கள் கொஞ்சம் பதற்றமாக காரை ஓட்டுகிறீர்கள்' என்று உடன் இருப்பவர்கள் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். யாராவது டிரைவிங்கைப் பற்றி குறை சொல்லும்போது, அதை மறுத்துப் பேசுபவர்கள்தான் மோசமான டிரைவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் டிரைவிங்கைத் தொடர்ந்து நீங்களே விமர்சனம் செய்யுங்கள்! மேம்பாலத்தில் ஓட்டும்போது, நான்கு முனைச் சந்திப்புகளில் திரும்பும்போது என எந்தெந்த இடங்களில் எப்படி ஓட்ட வேண்டும் என்பதை தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முன்னால் போகும் வாகனத்துக்கும் உங்களுக்குமான இடைவெளி சரியாக இருக்க வேண்டும். ரேஸ் டிராக்கில் ஓட்டுவது போன்று முன்னால் செல்லும் வாகனத்தை முட்டிக்கொண்டே செல்லக் கூடாது. முன்னால் செல்லும் வாகனம் திடீரென பிரேக் பிடித்தால் சமாளிப்பது சிரமம். எக்காரணத்தைக் கொண்டும் செல்போன் பேசிக் கொண்டே காரையோ, பைக்கையோ ஓட்டாதீர்கள்!
லேன் மாறுதல்...
உங்களுக்கான வழியில் காரை ஓட்டுங்கள். லேன் மாறும்போது இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிரவிட்டபடி ஸ்டீயரிங்கைத் திருப்புங்கள். சாலையை சர்க்கஸ் மைதானமாகக் கருதி அந்த மூலைக்கும், இந்த மூலைக்கும் வாகனத்தை ஓட்டாதீர்கள். சாலையில் வேறு யாராவது இப்படி டிரைவ் செய்தால், உடனடியாக அந்த வாகனத்தின் எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டு போக்குவரத்து காவல்துறைக்குத் தகவல் சொல்லுங்கள். நீங்களாகவே அந்த வாகன ஓட்டுநருடன் சண்டையில் இறங்காதீர்கள். நீங்கள் மெதுவாகத்தான் கார் ஓட்டுவீர்கள் என்றால், வேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு வலது பக்கம் வழி கொடுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் வாகனத்தின் இடது பக்கமாகச் சென்று ஓவர்டேக் செய்யாதீர்கள். பக்கவாட்டுக் கண்ணாடிகளையும், ரியர் வியூ கண்ணாடியையும் சரியாக வைத்து, பின்னால் வரும் வாகனங்களைக் கவனமாகப் பாருங்கள். பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்றால் மட்டுமே உடனடியாக லேன் மாறுவது, யூ-டர்ன் எடுப்பது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்.
ஓவர்டேக்
அதிக சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கியமான காரணம், முன்னால் செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்வதுதான் என்பது நினைவில் இருக்கட்டும். அதனால், ஓவர்டேக் செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். முதலில் எதிர்திசையில் வரும் வாகனங்களைக் கவனியுங்கள். உங்களுக்கு எதிர்திசையில் எந்த வாகனமும் வரவில்லை, முன்னால் செல்லும் வாகனத்தை ஓவர்டேக் செய்துவிட்டு, மீண்டும் உங்கள் பாதைக்கே திரும்ப முடியும் என்று முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஓவர்டேக் செய்ய வேண்டும். நீங்கள் ஓவர்டேக் செய்வதால் எதிரே வரும் வாகனத்துக்கும், முன்னால் செல்லும் வாகனத்துக்கும் பிரச்னை வரும் என்றால், ஓவர்டேக் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். பாதசாரிகள் கடக்கும் இடம், ரயில்வே கிராஸிங், இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் போன்ற இடங்களில் ஓவர்டேக் செய்யக் கூடாது. எக்காரணம் கொண்டும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், சைரன் ஒலியுடன் வரும் போலீஸ் வாகனங்கள் ஆகியவற்றை ஓவர்டேக் செய்யக் கூடாது! எப்போதுமே வலது பக்கமாக ஓவர்டேக் செய்ய வேண்டும். இடது பக்கமாக ஓவர்டேக் செய்யக் கூடாது.
ஆறாவது அறிவை உபயோகப்படுத்துங்கள்!
கார் ஓட்டுவதற்கு மிக மிக அவசியமானது... முடிவெடுக்கும் திறன். சாலையில் செல்லும்போது உடனுக்குடன் முடிவுகளை எடுக்க வேண்டும். இடது பக்கம் திரும்பலாமா? வலது பக்கம் திரும்பலாமா? சினிமாவுக்குப் போகலாமா? பீச்சுக்குப் போகலமா என சாலையின் நடுவில் கார் ஓட்டிக்கொண்டே யோசிக்கக் கூடாது. டிராஃபிக், சாலையின் மேடு பள்ளங்கள், தட்ப வெப்பநிலை, சாலையின் அகல நீளம் ஆகியவற்றுக்கு ஏற்ப காரை ஓட்டுவது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்றபடி உடனடியாக முடிவெடுத்து காரை ஓட்ட வேண்டும்!
விபத்துகளைத் தடுப்பது எப்படி?
விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் நான்கு! ஓவர் ஸ்பீடு, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, சோர்வாக இருக்கும்போது வாகனம் ஓட்டுவது, பாதுகாப்பு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் (உதாரணம் சீட் பெல்ட் அணியாமல்) வாகனம் ஓட்டுவது ஆகிய நான்கும்தான். சாலையில் விபத்தைத் தவிர்க்கும் பொறுப்பு, வாகனத்தை ஓட்டும் டிரைவர்களிடம்தான் 90 சதவிகிதம் இருக்கிறது! வாகனம் ஓட்டும் ஒவ்வொருவருமே இந்த நான்கு விஷயங்களிலும் கவனமாக இருந்தால், விபத்தை எளிதில் தவிர்க்க முடியும்!
ஓவர் ஸ்பீடு
வாகனத்தின் வேகம் எப்போதுமே ஓட்டுபவரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாடுகளை மீறினால், போலீஸிடம் மாட்டி அபராதம் கட்ட வேண்டியது இருக்கும். அல்லது மோசமான விபத்தில் சிக்க வேண்டியது இருக்கும்.
வேகமாக வாகனம் ஒட்டினால்....
அதிகபட்ச வேகத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது சிரமம்.
உங்கள் உயிருக்கும், சாலையில் செல்லும் மற்றவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.
பாதிப்பு, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மோசமானதாக இருக்கும்.
பாதசாரிகள் குறுக்கே வந்தாலோ அல்லது மற்ற வாகனங்கள் குறுக்கே வந்தாலோ, உங்களால் உடனடியாக வேகத்தைக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது!
மற்ற வாகனங்கள் உங்கள் மீது மோதாமல் தடுப்பதற்கு நீங்கள் தரும் நேரம் மிகக் குறைவு.
உங்களுக்கென வகுக்கப்பட்டு இருக்கும் வேக வரையறைக்குள் பயணம் செய்வதே பாதுகாப்பானது.
ஆல்கஹால்
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடக்கும் விபத்துகள்தான் தமிழகத்தில் அதிகம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறு. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்.
விபத்து ஏற்படப் போகிறது என்று ஒரு விநாடிக்கு முன்பு தெரிந்தால்கூட ஸ்டீயரிங்கைத் திருப்பி விபத்தைத் தடுத்துவிட முடியும். ஆனால், பெரும்பாலான விபத்துகள் ஒரு விநாடிக்கும் குறைவாக, அதாவது கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதால்தான் அவற்றைத் தடுக்க முடியாமல் போய் விடுகிறது. மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது, ஆல்கஹால் ரத்தத்துடன் கலந்து மூளையின் செயல்பாடுகளை மந்தமாக்கி விடும். இது, விபத்துக்கு வரவேற்பு(!) பண் பாடுவதாக அமையும்!
குடித்துவிட்டு ஓட்டினால்...
எதிரே வரும் வாகனத்தின் வேகத்தைச் சரியாகக் கணிக்க முடியாது.
உங்களுக்கும், முன்னால் செல்லும் வாகனத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கணிப்பது சிரமம்.
சிக்னல், பாதசாரிகள், சைக்கிள் போன்ற பல விஷயங்கள் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும்.
வாகனத்தை ஓட்டுவதில் கவனம் செலுத்த முடியாது.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில்சிக்கினால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்காது!
சீட் பெல்ட்
சீட் பெல்ட்டுகள் உயிரைக் காக்கும். காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவது அவசியம்.
சீட் பெல்ட் அணிந்துகொண்டால்...
விபத்து ஏற்படும்போது காருக்கு உள்ளேயும், வெளியேயும் நீங்கள் தூக்கி வீசப்படாமல் சீட் பெல்ட்டுகள் தடுக்கும்.
ஸ்டீயரிங்கில் அல்லது வேறு ஏதாவது ஒன்றின்மீது நீங்கள் மோதாமல் பாதுகாக்கும்.
குழந்தைகளை முன் சீட்டில் உட்கார வைக்கக் கூடாது.
பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது எவ்வளவு கட்டாயமோ, அதுபோல் கார் ஓட்டுபவர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்!
டிரைவர் சோர்வு!
நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகளில் கணிசமான விபத்துகள், வாகனத்தை ஓட்டுபவர் தூங்கிக் கொண்டே ஓட்டுவதால் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பகலைவிட இரவு நேரத்தில் விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 30 சதவிகிதம் அதிகம்.
சோர்வாக இருந்தால்...
எந்தக் காரணத்தைக் கொண்டும் இரவு பத்து மணிக்குப் பிறகு தொடர்ச்சியாக நெடுஞ்சாலையில் கார் ஓட்டாதீர்கள்.
மதிய உணவு சாப்பிட்ட உடனேயே காரை ஓட்டாதீர்கள். குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஓய்வெடுத்த பிறகு காரை ஓட்டுங்கள்.
உங்களின் காரின் ஓட்டும் வேகம், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் கூடினாலோ, குறைந்தாலோ வாகனம் ஓட்டுவதை நிறுத்திவிடுங்கள்.
உங்கள் கட்டுப்பாட்டை மீறி வாகனம் சாலையில் அங்கும் இங்கும் அலைபாய்ந்தால் உடனடியாக சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி சற்று நேரம் ஓய்வெடுங்கள்.
தூக்கம் வருவதுபோல் இருந்தால் டீ அல்லது ஜூஸ் அருந்திவிட்டு, பதினைந்து நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு பிறகு வாகனம் ஓட்டுங்கள்!
ஷிஃப்ட் முறையில் வேலை செய்பவர்கள்தான் வாகனம் ஓட்டும்போதே அதிகம் தூங்கிவிடுகிறார்கள்!
டிராஃபிக் விதிமுறை மீறல்களைப் பற்றிப் புகார் செய்ய 103 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
சென்னையில் 98400 00103 என்கிற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினாலே போதும்!
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் லிஸ்ட்டில் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை இரவு நேரத்தில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சான்றிதழ் வாங்குவது சிரமம் என்பதால், இந்தப் பெண்களிடம் அபராதம் வசூலிக்க முடியவில்லை எனப் புலம்புகிறார்கள் சில நேர்மையான காவல்துறையினர்!
கார் ஓட்டும் போது கவனம் தேவை!
விபத்து ஏற்பட்ட உடன் நாம் உடனே சொல்லும் காரணம், 'அந்த வாகனத்தை நான் பார்க்கவே இல்லை' என்பதுதான். பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமே கவனம் இல்லாமல் காரை ஓட்டுவதுதான். செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுவது, காருக்குள் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, ரேடியோ கேட்பதில் அதிகக் கவனம் செலுத்துவது அல்லது பகல் கனவு கண்டு கொண்டே காரை ஓட்டுவது... விபத்து நடக்க இப்படி பல காரணங்கள் உள்ளன!
கார் ஓட்டும்போது இதுபோன்ற விஷயங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வீட்டில் இருந்து காரையோ, பைக்கையோ எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பும்போது, 'நான் எந்த வாகனத்துக்கும், எந்த பாதசாரிக்கும், எந்த பொதுச் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்த மாட்டேன்' என்று உறுதி எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புங்கள்.
சாலையில் தாறுமாறாக காரை ஓட்டுகிறவர்களை சட்டை செய்யாதீர்கள். அவர்களுடன் சண்டை போடாதீர்கள். அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே உங்கள் மனதை விட்டு அகன்று விடும். அவர்கள் செய்கின்ற தவறை நீங்களும் செய்யாதீர்கள்.
நீங்கள் கார் ஓட்டும்போது பின்னால் வரும் வாகனங்களுக்குத் தொடர்ந்து சரியான சிக்னல்களைக் கொடுத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் திரும்பும்போது, இண்டிகேட்டர்களைப் போட்டுக் காட்ட மறக்காதீர்கள். அதேபோல், லேன் மாறும்போதும் சிக்னல் செய்யுங்கள். சாலையில் ஆட்கள் இல்லை என்றாலும் இந்தப் பழக்கத்தைப் பழகுங்கள். அப்போதுதான் இது எப்போதுமே மறக்காது. பிரேக் அடிக்கும்போது, பிரேக் லைட்டுகள் ஒளிர்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஹெட் லைட்டை எப்போது உபயோகப்படுத்த வேண்டும்?
இரவு நேரங்களில்தான் அதிமமான விபத்துகள் நடக்கின்றன. எதிரே வரும் வாகனங்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று கருதினால், ஹெட் லைட்டை பயன்படுத்தி சிக்னல் கொடுங்கள்.
காரை ஸ்டார்ட் செய்த உடன் ஓட்டத் துவங்காதீர்கள். 60-100 விநாடிகள் வரை அப்படியே ஐடிலிங்கில் வைத்திருங்கள். அதேபோல, ஒன்றிரண்டு கிலோ மீட்டர்களுக்குக் குறைவான வேகத்தில் செல்லுங்கள். அப்போதுதான் இன்ஜினில் ஆயில் பரவல், தேவையான ஹீட் கிடைக்கும்!
அவசர காலத்தில் என்ன செய்ய வேண்டும்?
பிரேக் டவுன் ஆனால்...
சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென கார் பிரேக் டவுனாகி நின்றுவிட்டால், காரை ஓரமாக நிறுத்தி 'வார்னிங் லைட்ஸ்'ஐ ஒளிரவிடுங்கள். காருக்குள் இருப்பவர்களை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்துவிட்டு, கார் தயாரிப்பாளரின் எமெர்ஜென்சி சர்வீஸ§க்கு போன் செய்யுங்கள்!
டயர் வெடித்தால்...
காரில் போய்க் கொண்டு இருக்கும்போது, திடீரென டயர் வெடித்தாலோ அல்லது பஞ்சரானாலோ, உங்கள் கார் பஞ்சரான டயரை நோக்கித் திரும்பும். அதாவது முன் வீல் வலது பக்க டயர் பஞ்சரானால், கார் வலது பக்கமாக திரும்பும். பின் வீல் பஞ்சரானால் உடனடியாக அலைபாய ஆரம்பித்து விடும்.
என்ன செய்யவேண்டும்?
காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.
கார் திரும்புகிறதே என்பதற்காக நீங்கள் ஸ்டீயரிங்கை எதிர்திசையில் திருப்பாதீர்கள்.
ஆக்ஸிலரேட்டரில் இருந்து உடனடியாக காலை எடுத்துவிடுங்கள்.
காரின் கன்ட்ரோல் உங்கள் கைக்கு வந்து விட்டதென்றால், மெதுவாக பிரேக்கை அழுத்துங்கள்.
அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து, காரை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள்.
எச்சரிக்கை விளக்குகளை ஒளிரவிட்டு, மற்ற வாகனங்களுக்கு சிக்னல் செய்யுங்கள்!
ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...
ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம்.
என்ன செய்ய வேண்டும்?
கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள்.
வீல்களை லாக் செய்யாமல் பிரேக்கை நன்றாக அழுத்துங்கள்.
அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள்.
காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.
திடீரென பிரேக் பிடிக்காமல் போனால்...
என்ன செய்ய வேண்டும்?
மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி... படிப்படியாக கியரைக் குறையுங்கள். ஃபர்ஸ்ட் கியரில் காரை குறைந்த வேகத்துக்குக் கொண்டு வாருங்கள்.
மெதுவாக ஹேண்ட் பிரேக்கைப் பிடியுங்கள்.
சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹாரன் அல்லது எச்சரிக்கை விளக்குகளைப் போட்டுக் காண்பித்து, சாலையின் ஓரத்துக்கு வந்துவிடுங்கள்.
உங்கள் எதிரே வேகமாக இன்னொரு வாகனம் வந்தால்..
வீல் ஸ்கிட் ஆகாமல் பிரேக்கை நன்றாக அழுத்திக்கொண்டே ஹாரனையும், ஃப்ளாஷ் லைட்டையும் போட்டுக் காட்டுங்கள்.
எதிரே வரும் வாகனத்துக்கு எவ்வளவு இடம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு இடம் கொடுங்கள்.
எதிரே வரும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக நெருங்கி வருகிறது என்றால், உடனடியாக சாலையின் ஓரத்துக்கு வந்துவிடுங்கள்.
சாலையைவிட்டு வெளியே வந்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் உடனடியாகச் சாலைக்கு வர முயற்சிக்காதீர்கள். ஸ்டீயரிங்கை க்ரிப்பாக பிடித்துக் கொண்டு பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொண்ட பிறகு, மீண்டும் சாலைக்குள் செல்லுங்கள்.
கார், தீப்பிடித்து எரிந்தால்...
கார் தீப்பிடித்து எரிகிறது என்றால், 90 சதவிகிதம் எலெக்ட்ரிகல் ஒயர்களில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட்தான் காரணமாக இருக்க முடியும்.
என்ன செய்ய வேண்டும்?
மெதுவாக காரை நிறுத்தி இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.
உடனடியாக காரை விட்டு வெளியே வந்துவிடுங்கள்.
உடனடியாக மற்றவர்களின் உதவியை நாடி, மண், நீர் பயன்படுத்தி தீயை அணைக்கப் பாருங்கள்.
கார் முழுவதுமாக எரிய ஆரம்பித்துவிட்டால் காரைவிட்டு பல அடி தூரத்துக்கு வந்துவிடுங்கள். எரிபொருள் இருப்பதால், வெடிக்கும் அபாயமும் இருக்கிறது.
பாதுகாப்புப் படை!
சென்னையில் மட்டும் போக்குவரத்து காவல்துறை, கூடுதல் ஆணையாளர் தலைமையில் இயங்கி வருகிறது. இவருக்குக் கீழ் 3 துணை ஆணையர்கள், ஒரு கூடுதல் துணை ஆணையர், 4 உதவி ஆணையர்கள், 42 காவல்துறை ஆய்வாளர்கள், 224 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 2161 காவலர்கள் சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பணியாற்றி வருகின்றனர்.சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஹ¨ண்டாய் நிறுவனம் 100 மாணவர்களையும் ஈடுபடுத்தியுள்ளது. இது தவிர போலீஸ் நண்பர்கள் குழுவும் போக்குவரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றே காரணங்கள்!
தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைப்பதற்காக காவல்துறையில் 'டிராஃபிக் ப்ளானிங்' எனும் தனித் துறை இயங்கி வருகிறது. இது தமிழகம் முழுக்க எங்கெங்கு விபத்துகள் நடக்கின்றன? விபத்து நடந்ததற்கான காரணங்கள் என்னென்ன? இனிமேல் விபத்து நடக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல தகவல்களைத் திரட்டி, அதை தமிழக அரசுக்கு அனுப்பும். இந்தத் துறைக்கு தற்போது டி.ராதாகிருஷ்ணன் ஐ.பி.எஸ் தலைவராக இருக்கிறார். தமிழகத்தில் சாலை விபத்துகளைக் குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி ராதாகிருஷ்ணன் பேசினார். ''சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கியமான மூன்று காரணங்கள்தான் இருக்கின்றன. குண்டும் குழியுமான மோசமான சாலைகளால் விபத்துகள் நடக்கலாம்; வாகனத்தில் ஏற்படும் கோளாறினால் விபத்துகள் நடக்கலாம்; சாலையைப் பயன்படுத்துபவர்களால் விபத்துகள் நடக்கலாம். இந்த மூன்று காரணங்களில் சாலையைப் பயன்படுத்துபவர்களால்தான் அதிகமான விபத்துகள் ஏற்படுகின்றன.
எரிச்சலோடு வாகனத்தை ஓட்டுவது, சாலை விதிகளை மீறுவது, தான் போக வேண்டும்என்பதற்காக மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாகனத்தைச் செலுத்துவது என படித்தவர்களே பல தவறுகள் செய்வதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் இருந்தால், விபத்துகளை சுலபமாகத் தவிர்க்கலாம்.
விபத்துகளைத் தடுப்பதற்காக, அதிக விபத்துகள் நடக்கும் இடங்களில் ஸ்பீட் பிரேக்கர்கள் அமைப்பது, சாலைத் தடுப்புகள் (Barricade) வைப்பது, சிக்னல்களில் கேமராக்கள் பொருத்துவது என பல பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி உள்ளோம்.
இது தவிர, சென்னைப் போக்குவரத்து போலீஸாரின் வாகனத்திலேயே கேமராவையும் பொருத்த திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் விபத்து நடந்த இடத்தை அப்படியே டிராஃபிக் போலீஸார் கேமராவில் பதிவு செய்து கொள்ள முடியும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என்பதைக் கண்டறிய ப்ரீத் அனலைஸர், ஸ்பீட் கன் போன்ற கருவிகள் அதிக எண்ணிக்கையில் வாங்கவும் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வளவு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் சாலை விபத்துகளைக் குறைப்பது மக்களின் கையில்தான் உள்ளது. சாலையில் பொறுமையையும், சரியான வேகத்தையும் கடைப்பிடித்தாலே சாலை விபத்துகளைக் குறைத்துவிடலாம்'' என்கிறார்.
பயங்கர சாலைகள்!
கோவை
அதிகம் பேரை பலி வாங்கும் சாலையாக இருக்கிறது கோவை-அவிநாசி சாலை. கோவை மாநகர எல்லையைத் தாண்டிச் சென்றால், இந்தச் சாலையில் பல இடங்களில் மஞ்சள் நிற பெயின்ட்டால் அடையாளமிடப்பட்டு இருக்கும் வட்டங்களைப் பார்க்க முடியும். இந்த வட்டங்கள் அனைத்தும் சாலை விபத்தில் பலியானவர்களைப் பற்றி மற்ற வாகன ஓட்டிகளுக்கு நினைவுப்படுத்தி எச்சரிக்கையூட்டும் நினைவுச் சின்னங்களாக இருக்கின்றன. அவிநாசி சாலையில் மட்டும் ஐம்பது இடங்களை அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளாக அறிவித்திருக்கிறார்கள். அதிக வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது மற்றும் ஹெல்மெட் அணியாததது ஆகியவையே உயிரிழப்புகளுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது.
மதுரை
மதுரை, தூங்கா நகரம் மட்டுமல்ல; டிராஃபிக் நெருக்கடியால் விழி பிதுங்கிக் கொண்டு இருக்கும் நகரமாகவும் மாறிக்கொண்டு இருக்கிறது. கோரிப்பாளையம், அழகர்கோவில் மெயின் ரோடு, தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து அதிகம். இவற்றில் திடீரென சாலையைக் கடக்கும் பாதாசாரிகளால் விபத்துகள் ஏற்படுகிறது. தத்தனேரி மெயின் ரோடு, செல்லூர் போன்ற பகுதிகளில் வொர்க் ஷாப்புகள் அதிகமாக இருப்பதால், சர்வீஸ§க்கு வரும் வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி வைத்துவிடுகிறார்கள். இதனால், சாலையில் செல்லும் இதர வாகனங்கள் ஒன்றையன்று முந்த முயற்சிக்கும்போது விபத்து ஏற்படுகிறது. மேலும், ரிங் ரோட்டில் சுமையேற்றும் மினி லாரிகளின் ஆதிக்கம் அதிகம். இங்கேயும் வாகன விபத்துகள் அதிகமாக நடக்கின்றன.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த 2008-ம் ஆண்டில் நிகழந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் 448. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89. குறிப்பாக, பாளையங்கோட்டை மார்க்கெட்டிலிருந்து மாவட்ட நீதிமன்றம் வரையுள்ள பகுதியில் மட்டும் 12 விபத்துகள் நடந்துள்ளன. சாலை விதிகளைக் கடைப்பிடிக்காத இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி சாலையின் குறுக்கே பாய்ந்து கிராஸ் செய்யும் பாதசாரிகள், அதிவேகத்தில் செல்லும் பேருந்துகள்... இவையே இங்கு விபத்துகள் நடப்பதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. திருநெல்வேலி வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து என்.ஜி.ஓ காலனி மற்றும் பெருமாள்புரம் பகுதிக்குச் செல்லும் திருப்பம், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் தெற்கு பைபாஸ் சாலை, வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை ஆகிய இடங்களில் அதிமான விபத்துகள் நடக்கின்றன.
திருச்சி
சென்னை, திண்டுக்கல், மதுரை, கரூர், தஞ்சாவூர் ரோடு ஆகிய சாலைகளை இணைக்கும் மிக முக்கியமான இடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்து நடக்கும் இடம் 'உப்பாத்து பாலம்'. இந்தப் பகுதியில் ஒழுங்கான சாலை வழிகாட்டிப் பலகைகள் இல்லை என்பதால்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. கடந்த ஜூலை மாதம் மட்டும் இங்கு ஏழு விபத்துகள் நடந்துள்ளன. சமயபுரம் டோல்கேட் பகுதி, ஜி.எஃப் ரோடு, கரூர் ரோடு, மணப்பாறை-திருச்சி சாலை ஆகிய சாலைகள் விபத்துகள் அதிகம் நடக்கும் சாலைகளாக உள்ளன. திருச்சி, மதுரை சாலையில் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் இரண்டு விபத்துகளாவது நடக்கிறது. இதற்குக் காரணம் ஓவர் ஸ்பீடுதான்!
சாலைச் சந்திப்புகளில் விபத்துகள் நடக்காமல் தவிர்ப்பதற்கும், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்வதற்காகவுமே சிக்னல்கள் பொருத்தப்படுகின்றன. மேலை நாடுகளில் சிக்னல்களை வாகன ஓட்டிகள் பொதுவாக மீறுவதில்லை. ஆனால், இந்தியாவில் மட்டுமே சிக்னல்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு சிக்னல்களிலும் போலீஸ்காரர்களையும் நிறுத்தி டிராஃபிக்கை ஒழுங்குபடுத்தும் நிலை நீடிக்கிறது. போலீஸார் நிறுத்தப்பட்டும் இங்கே சாலை விதிமுறைகள் மீறப்படுவதுதான் வேடிக்கை!
இரண்டு சக்கர வாகனம் ஓட்டும்போது...
சென்னை போன்ற பெருநகரங்களில் சாலை விபத்துகள் நடப்பதற்கு முக்கியக் காரணங்கள் இரு சக்கர வாகனங்களும், பாதசாரிகளும்தான். அதேபோல், சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்கள் 30 சதவிகிதம் பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். அதனால், இரு சக்கர மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும்!
என்ன செய்ய வேண்டும்?
ஐஎஸ்ஐ முத்திரை உள்ள தலை, தாடை, முகம் முழுவதையும் மறைக்கக் கூடிய ஹெல்மெட்டுகளை அணியுங்கள்.
பின் சீட்டில் உட்காருபவர்களும் இதே போன்று தரமான ஹெல்மெட்டுகளை அணிய வேண்டும்.
எப்போதுமே டயர்களில் சரியான அளவு காற்று நிரப்பப்பட்டு இருக்கிறதா என்று செக் செய்து கொள்ளுங்கள்.
50 சதவிகித சாலை விபத்துகள் சாலையின் சந்திப்புகளில்தான் நிகழ்கின்றன. அதனால் சந்திப்புகளில் திரும்புவதற்கு முன் இண்டிகேட்டர்களைப் போட்டுக் காண்பித்த பிறகே திரும்ப வேண்டும்.
திடீரென பைக்கை நிறுத்தும்போது இரண்டு பிரேக்குகளையும் உபயோகப்படுத்துங்கள். முன் பிரேக்கை மட்டும் பயன்படுத்தினால் பைக் ஸ்கிட் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.
முன்னால் செல்லும் வாகனத்துக்கும் உங்களுக்கும் போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!
செய்யக் கூடாதது...
எந்தக் காரணத்தைக் கொண்டும் சாலையின் இந்த மூலைக்கும் அந்த மூலைக்கும் (ஜிக் ஜாக் டிரைவிங்) பைக் ஓட்டக் கூடாது.
ரோடு ரேஸிங்கில் ஈடுபடக் கூடாது.
லாரி, டிரக் போன்ற வாகனங்களின் இடது பக்கத்தில் சென்று ஓவர்டேக் செய்யக் கூடாது.
இரண்டு பேருக்கு மேல் பைக்கில் பயணிக்கக் கூடாது.
செல்போன் பேசிக் கொண்டு பைக் ஓட்டவே கூடாது.
18 வயதுக்குக் குறைவானவர்கள் பொதுச் சாலையில் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுவது சட்டப்படி தவறு!
No comments:
Post a Comment