சம்மர் டிப்ஸ்ஆதவன்
டெல்லி துவங்கி கன்னியாகுமரி வரை பாரபட்சமின்றி சுட்டெரிக்கிறது சூரியன். இந்த நேரத்தில் வெள்ளரி, தர்பூசணி, இளநீர் என நாம் நம்மைக் கூலாக்குவதுபோல், கார்களையும் கூலாக வைத்துக்கொள்வது மிக மிக அவசியம்.
டயர்கள்
டயர்கள்
கார்களின் டயர்கள், நம் கால்களின் செருப்புபோல. கண்டுகொள்ளவே மாட்டோம். ஆனால், பிரச்னை வந்தால், மொட்டை வெயிலில் நடுரோட்டில் நிறுத்திவிடும். கோடை காலத்தில், தேவைக்கும் குறைவான அழுத்தத்தில் காரின் டயர்கள் இருந்தால், டயர்களின் பக்கவாட்டுப் பகுதியான சைடு வால் பாதிப்படையும். மோசமான சாலைகளில், கொளுத்தும் வெயிலில், குறைவான காற்றழுத்தம் கொண்ட டயர்களுடன் சென்றால், வளைந்து நெளியும் சைடுவால் வலுவிழந்து, டயர் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கோடையில் டயர்களின் அழுத்தத்தை வழக்கத்தைவிட 3 முதல் 5 psi அதிகரித்துவிடுங்கள்.
சாலைத் தரம், காரில் ஏற்றப்பட இருக்கும் எடை (மனிதர்கள் சேர்த்து), தட்பவெப்பம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, கார் டயரின் காற்றழுத்தத்தை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். முழு எடையுடன் ஓட இருக்கும் காரின் டயர்களுக்கு, அதிக அழுத்தம் தேவைப்படும். அதேபோல், காற்றழுத்தத்தை அதிகாலையில் செக் செய்ய மறக்காதீர்கள். வாரம் ஒருமுறை ஏர் செக் செய்வது அவசியம். ஸ்பேர் டயரையும் சோதனை செய்துவிடுங்கள். இது எல்லாவற்றையும் தாண்டி கவனிக்க வேண்டியது, வீல் அலைன்மென்ட் மற்றும் பேலன்ஸிங். இதைச் செய்யாமல் விட்டுவிட்டு, டயர்களை மட்டும் கவனித்து உபயோகம் இல்லை.
ஏ.சி
கோடை காலத்தில் காரின் ஏ.சி.யை சோதனை செய்வது மிக முக்கியம். வெயிலால் ஏ.சி கூல் ஆக நேரம் எடுத்துக்கொள்கிறது என்று நிறைய பேர் புலம்புவதைப் பார்க்கலாம். இதற்குக் காரணம் - ஏ.சி-யின் திறன் அல்ல. காரின் உள்ளே இருக்கும் வெப்பம்தான். உச்சி வெயிலில் நின்ற கார் கூல் ஆவதற்கு, நிழலில் நின்ற காரைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
வெயிலில் நின்ற காரில் ஏறியவுடன், முதலில் ஜன்னல்களைத் திறந்துவிட்டு வெப்பத்தை வெளியேற விடுங்கள். ஏ.சியை ஆன் செய்து, ஃபேனை ஃபுல் ஸ்பீடு செட்டிங்கில் வைத்துவிட்டு சில நிமிடங்கள் காத்திருங்கள். வெப்பம் சாதாரண நிலைக்கு வரும்போது, ஜன்னல்களை ஏற்றி முடிவிடுங்கள். இதனால், காரில் ஏ.சி கூல் செய்யும் நேரம் குறையும். அதேபோல், மொட்டை வெயிலில் காரை பார்க் செய்யும்போது அரை இன்ச் அளவுக்கு இடைவெளி விட்டு ஜன்னலை மூடினால், காருக்குள் வெப்பம் அதிகரிப்பது குறையும்.
ரேடியேட்டர் - கூலன்ட்
கோடை காலத்தில் காரின் இன்ஜின் ஓவர்ஹீட் ஆகக் காரணம், கூலன்ட் மிகக் குறைவாக இருப்பது. சீஸனுக்கு முன்பே கூலன்ட் அளவைச் சோதனை செய்துவிட்டு, டாப் அப் செய்துவிடுவது நல்லது. அதேபோல், காரின் ரேடியேட்டரை ஒரு முறை சர்வீஸ் செய்துவிடுவதும் நல்லது. ஏதேனும் லீக் இருந்தால், முன்கூட்டியே கண்டுபிடித்துச் சரிசெய்துவிடலாம். சின்ன வேலைதான், ஆனால், கவனிக்காமல் விட்டால், இன்ஜினுக்கே உலை வைத்துவிடும்.
இன்ஜின், டிரான்ஸ்மிஷன் ஆயில்
கோடை காலத்தின் வெப்பம், இன்ஜின் ஆயிலை வேகமாகச் சேதப்படுத்தும். இந்த நிலையில் ஏற்கெனவே பழைய ஆயில் இன்ஜினில் இருந்தால், நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என எண்ணிப் பாருங்கள். பழைய ஆயிலை முழுக்கவும் எடுத்துவிட்டு, அதிக ஹீட் ரெஸிஸ்டன்ட் கிரேடு கொண்ட ஆயிலையும் பயன்படுத்தலாம். இதனால், இன்ஜின் ஆயில் சேதம் அடைவது குறையும். ஆனால், சர்வீஸ் சென்டரில் கேட்டுவிட்டுச் செய்யுங்கள். கூடவே பவர் ஸ்டீயரிங், பிரேக்ஸ், டிரான்ஸ்மிஷன் ஆயில்களையும் செக் செய்துவிடுங்கள்.
பெல்ட்டுகள்
ரப்பருக்கும் வெப்பத்துக்கும் ஆகவே ஆகாது. இன்ஜின் பெல்ட், ரப்பர் பைப்புகள் அதிக வெப்பத்தால் சேதமடைய வாய்ப்புகள் அதிகம். இறுகிக்கொண்டே வரும் ரப்பர் பைப்புகள், ஒரு கட்டத்தில் சேதமடைந்துவிடும். இதனால் பெல்ட்டுகளையும், பைப்புகளையும் கையால் அழுத்திச் சோதனை செய்வது அவசியம்.
பேட்டரி
கோடை காலத்தில், பேட்டரிக்குள் இருக்கும் திரவம் மிக வேகமாக ஆவியாகும். இந்த வெப்பத்தினால் பேட்டரிக்குள் இருக்கும் வேதியியல் எதிர்வினைகள் அதிகமாகி, பேட்டரி ஓவர் சார்ஜ் ஆக ஆரம்பிக்கும். எனவே, பேட்டரி சரியான வேகத்தில்தான் சார்ஜ் ஆகிறதா என்பதைச் சோதனை செய்வது அவசியம். பேட்டரியின் டெர்மினல்களில் தூசி, துரு போன்றவை இருந்தால், அவற்றைச் சுத்தம் செய்துவிடுங்கள்.
பாலிஷ்
கோடை வெப்பத்தில் காரின் பெயின்ட் இறுகி, வெடிக்க ஆரம்பிக்கும். இது கண்ணுக்குப் புலப்படாமல் நடப்பதால், கவனிக்காமல் இருப்போம். எனவே, பாலிஷ் போட்டுவைத்துவிட்டால், அது காரின் பெயின்ட் மீது படும் சூரிய வெப்பத்தின் பெரும்பாலானவற்றைத் திருப்பி அனுப்பிவிடும் என்பதோடு, பெயின்ட்டின் ஆயுள் கூடும். கோடைக்கு முன்பும், குளிர்காலத்துக்கு முன்பும் காருக்கு பாலிஷ் செய்ய வேண்டும் என்பதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment