|
இப்போது போலவே அப்போதும் கார்கள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ்தான் முன்னணியில் இருந்தது. 1929-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கும், உதிரிப் பாகங்களுக்கும் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றதுதான் டிவிஎஸ் வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை!
முட்டைக்கோஸ் புதிதாக மார்க்கெட்டுக்கு வந்தபோது, அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதை யாருமே வாங்கவில்லையாம். காய்கறிக்கே இந்த நிலை என்றால், ஆயிரக்கணக்கான ரூபாய் விலைமதிப்புடைய காருக்கு..?
குதிரையிலும், மாட்டுவண்டியிலும் பவனி வந்து கொண்டு இருந்த ஜமீன்தார்களிடம் கார்களை விற்பனை செய்ய, டி.வி.சுந்தரம் ஐயங்காரின் குமாரர் துரைசாமி செய்த யோசனை ஆச்சர்யமானது.
புது காருடன் நேரடியாகச் செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்குப் போவாராம். டிரைவரையும் காரையும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு, அந்தச் செல்வந்தர் அதுவரை பயணித்து வந்த குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுவாராம். மறுபடியும் ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் செல்வாராம்.
இடைப்பட்ட நாட்களில் காரில் பயணித்து பயணித்து, அதன் சொகுசுக்கு அடிமையாகிவிட்டிருப்பார் அந்தச் செல்வந்தர். ஊராரையும் மற்ற ஜமீன்தார்களையும் வாய்பிளக்க வேடிக்கை பார்க்கவைக்கும் அந்த காரை, திருப்பித் தர மனம் இல்லாமல் தேவையான பணத்தைக் கொடுத்து, காரை வாங்கிவிடுவார் ஜமீன்தார். இப்படி மிக எளிதாக காரை விற்றுவிட்டு, வெற்றிகரமாக வீடு திரும்புவாராம் துரைசாமி.
குதிரை வண்டியை வாங்கிக்கொண்டு, காரை விற்ற அந்தத் திட்டமே, பழையதைக் கொடுத்து புதிய பொருட்களை வாங்கிச் செல்லும் ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி!
நானும் ஒரு தொழிலாளி!
ஆறேழு பேர் பணிபுரியும் மளிகைக் கடையிலேயே தொழிலாளர் பிரச்னை தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது. அப்படியானால் பல்லாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனத்தில்?
தினம் தினம் பிரச்னையாகத்தானே விடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு ‘தொழிலாளர் போராட்டம் என்று எதுவும் நடந்ததே இல்லை’ என்கிறார்கள் டிவிஎஸ் நிர்வாகிகள்.
தொழிலாளர்கள்தான் நிறுவனத்தை இயக்குகிறார்கள் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் டிவிஎஸ் நிறுவனத்துக்குத்தான் உண்டு. காலையில் இலை போட்டுப் பரிமாறப்படும் இட்லி - சாம்பாரை சாப்பிட்டுவிட்டுத்தான் தொழிலாளர்கள் வேலைக்கே செல்வார்களாம்.
பணியாளர்களின் பசியைத் தீர்த்தது மட்டுமல்லாமல் வசிக்கக் குடியிருப்புகள், குழந்தைகளின் கல்விக்குப் பள்ளிக்கூடம், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை என்று தொழிலாளர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் டிவிஎஸ் நிறுவனத்தில் செய்து கொடுக்கப்பட்டதாலேயே, தாத்தா-அப்பா-பேரன்-கொள்ளுபேரன் என்று நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற பல குடும்பங்கள் உண்டு.
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு தொழிலாளர் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டிவிஎஸ், தம் வாரிசுகள் அனைவரையும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு செய்தார். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், காக்கி யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள்! அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டிவிஎஸ்-ஸில் ஐ.என்.டி.யு.சி எனும் ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருக்கிறது. தொழிற்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னரே அவர்களை அழைத்துப் பேசி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பார்களாம்!
ஒரு வேலையைச் செய்யும் தொழிலாளர்களால்தான் அந்த வேலையை எளிதாகச் செய்து முடிப்பதற்கான தீர்வையும் சொல்ல முடியும் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களை நிர்வாக யோசனைகளிலும் பங்கேற்க வைத்தார். கம்பெனியில் ஓர் ‘ஆலோசனைப் பெட்டி’யை வைத்து, அதில் ஆலோசனைகளை எழுதிப்போடுமாறு கேட்டுக் கொண்டார்கள். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை, தொழிலாளர்கள் எழுதிப் போட்டனர். சிறந்த யோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.
‘இது நம் நிறுவனம். இதை முன்னேற்ற வேண்டியது நம் கடமை’ என்னும் உணர்வு முதலாளிக்கு ஏற்படுவது வியப்பானதல்ல. ஆனால், அது கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கும் ஏற்பட வேண்டும். அதில்தான் அந்த நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த எண்ணத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளம்!
ஐடியாவுக்குப் பரிசு!
‘‘தொழிலாளர்கள் ஸ்க்ரு டிரைவர், ஸ்பேனர் போன்றவற்றை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கையில் ஒட்டியிருக்கும் கிரீஸும், ஆயிலும் துணியில் பட்டு நீக்க முடியாத கறையாக மாறிவிடுகிறது. அதனால் சீருடையில் பாக்கெட்டே தேவையில்லை’’ என்று ஒரு தொழிலாளர் ஆலோசனை சொன்னாராம். பல மீட்டர் துணியையும், சலவைச் செலவையும் மிச்சமாக்கி, உடைகளின் தூய்மையையும் பாதுகாத்த அந்தத் தொழிலாளரின் யோசனைதான் இன்றளவும் டிவிஎஸ்-ஸிலும் மற்ற பெரும்பாலான கம்பெனிகளிலும் நடைமுறையில் இருக்கிறது.
எதுவும் முடியும்!
‘இது என் வேலை இல்லையே..!’ என்று சொல்லாமல், எந்த வேலையைக் கொடுத்தாலும் டிவிஎஸ் தொழிலாளர்கள் செய்வார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 1960-களில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையில், ஒருமாதம் செலவழித்துப் போடப்பட்டிருந்த, மிகப் பெரிய மாநாட்டுப் பந்தல் அப்படியே சரிந்து விழுந்துவிட்டது. மறுநாள் எப்படி மாநாட்டை நடத்துவது என்று தெரியாமல் ஏற்பாட்டாளர்கள் விழிக்க, டிவிஎஸ் குமாரர் கிருஷ்ணா உதவ முன்வந்தார். ஒரு மாதமாகப் போடப்பட்ட பந்தலை ஒரே இரவில் சரிசெய்து சாதனை படைத்தார்களாம் டிவிஎஸ் தொழிலாளர்கள்.
சமீபத்திய சம்பவம் ஒன்று... மதுரை ஏர்போர்ட்டில் இறங்கிய விமானத்தின் முன் சக்கரம் உள்பக்கமாக அழுந்திக் கொள்ள, விமான நிலையத்தின் இன்ஜினீயர்கள் காலை 8 மணிமுதல்மதியம் 2 மணி வரை போராடிப்பார்த்தும் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையாம். இந்தத் தகவல் டிவிஎஸ் நிறுவனத்துக்கு வர, ஊழியர்கள் புறப்பட்டுப் போனார்களாம். ‘நாள்தோறும் விமானத்தோடு புழங்கும் இன்ஜினீயர்களாலேயே முடியவில்லை. இவர்களால் என்ன செய்ய முடியும்’ என்று விமான நிலையத்தில் வேலை பார்க்கும் சிலர் இவர்கள் காதுபடவே கருத்துச் சொல்லிஇருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இவர்களை முதலில் விமான நிலையத்தின் உள்ளேயே விட மறுத்து விட்டார்களாம். ‘இது வரை விமானத்தை அருகில் சென்று பார்த்ததே இல்லை. ரிப்பேர் செய்யும் சாக்கிலாவது அருகில் சென்று பார்த்து விட்டு வருகிறோமே’ என்று டிவிஎஸ் ஊழியர்கள் சாதுர்யமாகப் பேசி விமானத்துக்கு அருகே சென்று, தங்களை அழைத்த அதிகாரிகளைப் பார்த்திருக்கிறார்கள். அந்த அதிகாரி விமானத்தைக் காட்டி பிரச்னையை இவர்களிடம் சொன்னார். பல மணி நேரம் முயன்றும் விமான நிலைய இன்ஜினீயர்களாலேயே சரி செய்ய முடியாத வேலையை விமானிகளே வியக்கும் வண்ணம் பத்தே நிமிடத்தில் சரிசெய்து விட்டார்களாம் டிவிஎஸ் தொழிலாளர்கள். எப்படி?
டிவிஎஸ்-ஸின் தங்குதடையில்லாத சேவைக்கு உதாரணமாக விளங்கக்கூடிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. உலகப் போர் முடிந்த சமயத்தில் கடுமையான பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவியது. பொதுமக்களுக்கு ஒரு சொட்டு பெட்ரோல்கூட கிடைக்கவில்லை. இந்தச் சமயத்திலும் தனது பஸ் சர்வீஸை நிறுத்த விரும்பாத டிவிஎஸ், பேருந்துகளில் கரி இன்ஜினைப் பொருத்தி ஓட்டத் தொடங்கினார். இந்த இன்ஜினைத் தயார்படுத்தவே இரண்டு மணி நேரம் தேவையாம். கரியை எரிக்கும்போது வெளிப்படும் வெப்ப ஆவி சிலிண்டர்களில் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் பேருந்து ஓட்டப்பட்டது. இதற்காகப் பேருந்து செல்லும் வழியில் ஆங்காங்கே கரி நிரப்பும் இடங்களும் நிறுவப்பட்டன! |
டிவிஎஸ் பேருந்தின் முதல் பயணி!
பேருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 1912-ம் ஆண்டில் பேருந்தில் ஏறவே மக்கள் பயந்து நடுங்கினர். அந்த மூடநம்பிக்கையை ஒழித்து முதன் முதலில் பேருந்தில் ஏறிய தைரியசாலி பயணி இவர்! டிவிஎஸ் பேருந்தின் முதல் பயணியைப் பாராட்டும் விதமாக அவரது படம் கொண்ட தகவலை 1957-ம் ஆண்டு ஒரு விளம்பரமாகவே வெளியிட்டது டிவிஎஸ் நிறுவனம்!
|
No comments:
Post a Comment