Friday, 3 July 2015

மாதம் ஒரு வாகனம்: போலீஸ் வண்டி வருது!

ரம் போ... ஓரம் போ... போலீஸ் வண்டி வருது!
தெருக்கள், வீதிகள், சாலைகள், கவின் பாதைகள் அவ்வளவிலும் வாகனாதிகள். சாலைப் போக்குவரத்தின் மிகையைக் கருத்திற்கொண்டு சக்கரங்களை நின்று தாமதித்துப் போகுமாறு சமிக்ஞை செய்து போக்குவரத்தை நெறி செய்யும் நேசக் கரங்கள் போக்குவரத்துக் காவலர்களுடையவை. வாகனங்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அவர்களது வாகனம் இந்த மாதம்.
சைதாப்பேட்டை... தமிழ்நாட்டின் பல இடங்களிலிருந்து நுழைவதற்கு தாம்பரம் ‘தோரண வாயில்’ என்றால், சைதாப்பேட்டைதான் தலைவாசலும் முற்றமும் ஆகும்.
சைதை என்ற பெயரின் முன்னொட்டுடன் எல்லாக் காலத்திலும் யாராவது அரசியல்வாதிகளும் திகழ்ந்துகொண்டு இருப்பார்கள். சைதை போக்குவரத்துக் காவல் நிலையத்துக்குச் சென்றபோது, பயணத்தைத் தொடங்கத் தயாராக நின்றிருந்தது ஹூண்டாய் ஆக்ஸென்ட். வெள்ளை கலரில் அது பளபளப்பாக நின்றிருந்ததைக் கண்டதும் மனதுக்குள் மனோரமாவின் பழைய குரல் ஒலித்தது. ‘ஜாம் பஜார் ஜக்கு... சைதாப்பேட்ட கொக்கு.’ நிஜமாகவே அது கொக்குதான். கொண்டையில் நீலமும் சிவப்புமாக விளக்கெரியும் கொக்கு. காவல் துறையின் அடையாள ரிப்பனில் உள்ள அதே நீலச் சிவப்பு. மோதிரத்துக்கு இழைத்தது போல பளபளப்பு.
போக்குவரத்து ஆய்வாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ‘‘இங்கிருந்து செல்லும் வாகனங்கள் அடுத்து அண்ணாசாலையை அடைவதால், போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் இது பொறுப்புக் கூடிய ஒரு பகுதி’’ என்கிறார். அதிக அளவு சுற்றுப் பாதையை உள்ளடக்கிய ‘ரோந்து’ பிராந்தியமும் கூடத்தான்.
கொக்கு தமது பயணப் பாதையில் புறப்பட்டது. அமைதியான பயணத்தூடே தேவைப்படும் இடங்களில் சைரனை ஒலிக்கவிட்டால், சாலையோரங்களை மறித்துக் கொண்டு நிற்கிற ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மெள்ள நகர்ந்து அந்த இடமே பெருக்கிவிட்டாற்போலக் காட்சியளிக்கிறது.
‘இந்த ஹூண்டாய் வண்டிகள் வந்தபின், தலைநகர காவலர்களுக்கு ஒரு ஸ்காட்லாண்ட் யார்டு லுக் வந்துவிட்டது’ என்கிறார் ஆய்வாளர். உண்மைதான். இவ்வகையான கார்களை ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பார்த்தது. அந்த வகைப் படங்களில் பல மாடி ஓட்டல்களுக்கு முன் ராயல் ப்ளூ பேன்ட்டும், ஸ்கை ப்ளூ சட்டையுமாக குண்டு குண்டு போலீஸ்காரர்கள் இறங்குவார்கள். அவர்களில் ஒருவரை அழித்தால் நம்ம ஊரில் இரண்டோ மூன்றோ போலீஸ்காரர்கள் செய்யலாம்.
நமது கார்களில் பொதுமக்களை நோக்கிப் பேச மைக் வசதி (‘‘ஆட்டோ யாருது 3866 மூவ் பண்ணு...’’) வயர்லெஸ் வசதியும் செய்து வைத்திருக்கிறார்கள் (நகரம் தற்கணத்தில் எந்தெந்த ஏரியா எத்தகைய நெருக்கடியில் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும்விதமாக இருக்கிறது). இது தவிர, ‘‘இருங்க... செல்போன்ல வர்றேன்’’ என்று சொல்லத்தக்க வசதியுடனும் காவலர்கள் இருக்கிறார்கள்.
சைரன்களின் ஒலிகள் நான்கு வகை, செயல்கள் நூறு வகை.
‘கும் கும்’ எனத் தொடங்கி ‘பாவ் பாவ்’ என விடாது ஒலிப்பது முதல் வகை. ‘ஹூ ஹூ’ எனத் தொடங்கி ‘டோல் டோல்’ எனத் தொடர்ந்து ஒலிப்பது அடுத்த வகை. ஆர்மோனியத்தில் ஒற்றைக் கட்டையைத் தொடர்ந்து அழுத்துவது போல ஒரு சத்தம். அப்புறம் கடைசியாக விய்ய்ய்ய்ய்ய்ய்ய்.... இப்படி நான்கு வகை ஒலி அமைப்பை வைத்து தங்களது மூடுக்குத் தக்கவாறோ சமயாசமயத்துக்குத் தக்கவாறோ ஒலிக்கவிடுகிறார்கள்.
சைரன்களை மதிக்காத தள்ளுவண்டிகள், ஓடுவண்டிகள் மீது மூன்று வகையான சிகிச்சைகள் உண்டு. ஸீட்டுகளை எடுத்து வண்டியில் போட்டுக்கொண்டு போதல், அந்த இடத்திலேயே ஸ்பாட் ஃபைன், ஆள் இல்லாத பட்சத்தில் கவை வடிவக் கருவியை சக்கரத்தில் பொருத்தி பூட்டுப் போட்டுவிடுதல். பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் ரோந்து வண்டி மறுசுற்று வரும்வரை காத்திருக்க வேண்டும். அல்லது அருகில் நிற்கும் வெள்ளுடை வேந்தரை அணுக வேண்டும். அல்லது எண் 103-க்கு போன் செய்ய வேண்டும். இந்த வகைத் தொல்லைகளுக்கு அகப்படாமல் முறையான இடத்தில் நிறுத்துதல் உத்தமமானது. உண்மையில் சென்னையின் ஆட்தொகை, வாகனத் தொகைக்கு அதன் பரப்பளவு குறைவாக இருக்கிறது.
ஆளரவமற்ற சீரிய சாலைகளில் அபாரமான வேகத்துடன் செல்லத் தோதானதாக இந்த கார் இருப்பினும், நகரத் திணறலை அவதானித்து மெதுவாகத்தான் பயணிக்கிறது. இந்த வண்டிகள் வந்த பின் விபத்துப் பகுதிகளுக்கு விரைவிலேயே சென்றடைவதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பது முக்கியமான பயன்பாடு. உயிர் மீட்பு, விபத்தின்கண் நிகழ்ந்த போக்குவரத்துத் தடையை நிவர்த்தித்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் சாத்தியம் கருதத்தக்கது. விபத்துக்குப் பிறகு உடைந்துகிடக்கிற கற்கண்டு வைரக் கண்ணாடிகளோ, விபத்தின் மீது பரிதாபம் கொள்ளத் தூண்டுவதற்குப் பதிலாக அழகியல் உணர்ச்சியை அதிகப்படுத்துகின்றன.
‘வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும். பாதசாரிகள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்’ என்பது காவலர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. மஞ்சள் கோடுகள், வரிக்குதிரைக் குறுக்குகள் (Zeebra Cross) ஆகியவற்றை முறையாகப் பயன்படுத்தவும் சிக்னல்களை மதிக்கவும் வேண்டும். இதில் எல்லா நாட்களையும்விட சனிக்கிழமைகள் கொஞ்சம் சிக்கலானவை. அது கிழமையின் பெயர் காரணத்திலிருந்தோ அல்லது அல்ட்ரா மாடர்ன் வாழ்க்கை நிலைமையின் சில பகுதிகளிலிருந்தோ பெறப்படுவதாகும். ‘சனிக்கிழமைகளில் DD அதிகம்’ என்றார்கள். டிமாண்ட் டிராஃப்டுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரித்தால் DD என்றால் டிரங்கன் டிரைவ். சுமைகள் ஆவியாகப் போகவேண்டும் என்று குடிப்பது, சமயத்தில் ஆவியே ஆவியாகப் போகுமாறு நடந்துவிடுகிறது. ஊதினால் ஆல்கஹாலின் அளவு காட்டுகிற கருவி இருந்தாலும், மருத்துவர் எவரிடமாவது கூட்டிக்கொண்டுபோய்க் காட்டி ‘குடி’ சான்றிதழ் வாங்கிவிடுகிறார்கள்.
போக்குவரத்து ஒழுங்கு என்பது ஒரு நிழற்குடை, ஒரு காவலர், பச்சை- மஞ்சள்- சிவப்பு என மூன்று நிறங்கள் என்று மட்டுமே கற்பிதம் வைத்திருப்பது சரியல்ல. அது திட்டமிடல், அமலாக்கம், புலனாய்வு என விதவிதமான பிரிவுகளாக இயங்குகிறது.
சென்னை திடீர் திடீரென மழைவெள்ளத்தை மட்டுமல்ல, மக்கள் வெள்ளத்தையும் நேரிடும் நகரமாகும். ‘கொடிகொடியா முந்திரிக்கா கோட்ட எங்குளுது பாத்தியா’ என மெரினாவை நோக்கி கொங்கு, சேர, சோழ, பாண்டியத் தொண்டை மண்டலங்களிலிருந்து ஆட்கள் வந்து இறங்குவார்கள்.
இது தவிர, சீஸன் காலத்தில் சில தியேட்டர் வாசல்கள், விசாப் பருவத்து அமெரிக்கத் தூதரகம் ஆகியன சாலை ஒழுங்கை மாற்றிக் காட்டுகிறவை. அப்படியான சமயங்களில் இந்த கலர் கொண்டைகள் சூடிய கொக்கு, அந்தப் பகுதிகளில் அடிக்கடி பறக்கும். விடாது அறிவிப்புகள் செய்வதன் மூலம் நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
ஒரு மேம்பாலத்தில் கார் சென்றுகொண்டு இருக்கும்போது திடீரெனத் திரும்பிப் பார்த்ததில் ஒரு விளம்பர பேனரை பொத்துக்கொண்டு ஓடுவதான பிரமை ஏற்பட்டது. கட் அவுட்டுகள் முன்பு பிடித்திருந்த இடத்தை இப்போது விளம்பர வினை(ல்)கள் எடுத்துக்கொண்டுள்ளன. இவை ஏற்படுத்தும் பாதிப்பு உளவியல்ரீதியாக மறைமுகமானதாக இருக்கவேண்டும். இவற்றைப் பார்த்துக்கொண்டு போய், யாரும் விபத்துக்கு உள்ளாவதில்லை என்றாலும், முறிந்து விழுந்தாலே மூன்று ஆளைக் காலி செய்யும் எடை கூடியவைதான் இவை.
வண்டி கவர்னர் மாளிகைக்குப் போனபோது, நவீன ரக கியர் சைக்கிள்களில் இரண்டு காவலர்கள் போவதைப் பார்த்ததும் மொத்த காவல்துறையும் நவீனத்துவத்துக்கு மாறிவிட்டால் போலத் தோன்றியது. காருக்குள் ஒரு லேப் டாப் இருந்தால் அந்தக் காட்சி செவ்வனே முழுமை பெற்றிருக்கும்.
ஒவ்வொரு இடங்களில் ‘யு’ டர்ன் அடிக்கும்போதும் சிக்னல் மீறி வரும் பைக்காரர்கள் வண்டியைப் பார்த்துவிட்டு மறுபடி போய் கோட்டுக்கு உள்ளே நின்று கொண்டார்கள். ஆக, அடிக்கடி பொதுமக்களின் கண்களில் காட்சிபடும்படி இந்த வண்டி ஓடிக் கொண்டிருத்தல் அவசியம் என்று தோன்றியது.
ஒரு பஸ் ஸ்டாப்பில் ஏதோ விபத்தின் அசம்பாவிதம் தோன்றும்விதமாக ஏகப்பட்ட கூட்டம் நிறைந்திருந்தது.
அருகில் போய்ப் பார்த்தால் அயல்நாட்டு ஜோடி. ஆணைப் பெண் பனைமரம் ஏறுகிற தோரணையில் சுற்றியட்டி நின்றிருந்தது. திராட்சை நிறத்தில் அந்தப் பெண்ணின் உடை உள்ளிருக்கும் அடுத்தது காட்டும் கண்ணாடியாகத் திகழ்ந்து கொண்டிருந்தது.
இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்த அவர்களை, கணபதித் தத்துவப்படி இருந்த இடத்திலேயே கூட்டம் சுற்றிச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தது. விசாரித்தால், மாமல்லபுரம் போகிறவர்களாம். பல பேர் பஸ்களைத் தவறவிட்டு நின்றுகொண்டு இருந்தார்கள். அந்நிய மோகத்திலிருந்து மக்களை விடுவிக்க ஒரு காவலர் இருந்து அவர்களை பஸ் ஏற்றிவிட்டார். அவர்கள் பஸ் ஏறிய மறு நிமிடம் அந்த இடத்தில் பாதிக்கூட்டம் குறைந்து சீக்கிரத்தில் சகஜநிலை திரும்பியது.
அன்றைக்கு கவர்னர் ஏதோ காட்டாங்குளத்தூர் போகிற புரொக்ராம் என்று, நாலு மணி அளவுக்கு சாலையை சுத்தமாக்கித் தரும் பொறுப்பு இருந்தது. ஹோல்டா சர்க்கிளை நோக்கிய பாதையில் வரிசையாக கடை கண்ணிகளின் முன்னால் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் அறிவிப்புகள். முக்கிய சாலையை இடை வெட்டும் பகுதிகளில் உள்ள பாதைப் பகுதிகளிலும், சிக்னல் ஏரியாக்களிலும் ஒன்றிரண்டு காவலர்களுக்கான ஏற்பாடு, வயர்லெஸ் மற்றும் செல்போன் வாயிலாக.
 வெள்ளை கலர் வாகனம் வீதியெல்லாம் போகணும் தாறுமாறா நின்னிருக்கும் வண்டிகள் ஒழுங்காகணும்!
 
 வாகனக் கடலில் நீந்திடும் அன்னம் போலீஸ் காருங்கோ வேகத்தைக் குறைச்சு ரூல்ஸ்படி போக போலீஸ் காரருங்கோ!
 
 மானு வரும் ரோடப்பா மதிச்சு வண்டி ஓட்டப்பா நானு வரும் நேரம்பாத்து ஹெல்மெட் எடுத்து மாட்டப்பா!
கார், ஹோல்டா ஜங்ஷனில் ஒற்றைக் கால் கொக்கு மாதிரியாக தவத்தில் கவர்னருக்காகக் காத்திருந்தது. ஒரு பத்து நிமிடங்கள், ஒரு புதன்கிழமை மாலை அஹோ என ஆளரவமற்று விரிந்து கிடந்த சென்னை மாநகரச் சாலையைப் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.
தூரத்தில் பரிவாரங்களுடன் கவர்னரின் கார் தட்டுப்பட்டது. நாட்டுக்குக் கவர்னரும் ஆட்டுக்குத் தாடியும் எதற்கு என வினாவெழுப்பிய மாநிலத்துக்கு தாடியே வைத்த ஒருவர் கவர்னராக வந்ததையும், அவர் கடந்து சென்று கொண்டிருப்பதையும் புன்னகையுடன் பார்த்தவாறு நின்றிருந்தேன்.
கடந்து போனதும் மிகத் துரிதமாக சாலை பழைய வண்ணத்தை எட்டுகிறது. சென்னையின் டிராஃபிக் நெருக்கடி பற்றி யாராவது பஞ்சாபியில் கதை எழுதி, அதை நம் கவர்னர் படித்தால்தான் உண்டு. மான்கள் உலவும் கவர்னர் மாளிகையைக் கடந்து கிண்டிக்கு அருகில் வந்தால் சாலையோரம் ஒரு போர்டு கருத்தைக் கவர்கிறது. ‘மான்கள் உலவும் பாதை கவனமாகச் செல்லவும்.’ நகரத்தில் இப்படியரு அறிவிப்பு பெரிதும் மகிழ்ச்சி தருவதாகும். தவிரவும், மான்களுக்கு உள்ளதே மானிடர்க்கும் எனக் கொண்டால் விபத்துகள் எப்போதுமில்லை!

No comments:

Post a Comment