அயல்நாட்டுத் தொழில்நுட்பத்துக்கு 'ரைட்' விசில் ஊதப்பட்ட 1980-ம் ஆண்டு டிவிஎஸ் - இந்த் சுஸ¨கி, ஹீரோ - ஹோண்டா, எஸ்கார்ட்ஸ் - யமஹா, கவாஸாகி - பஜாஜ்,
கைனடிக் - ஹோண்டா, எல்.எம்.எல் - பியாஜியோ, என்ஃபீல்டு - ஜுன்தாபா என்று ஆட்டொமொபைல் உலகில் பல கூட்டணிகள் உருவாயின. ஆனால், இதில் இப்போது பல கூட்டணிகள் இல்லை. ஏன்? கூட்டணியில் இருந்த உறுப்பினர்களேகூட இல்லை. ஆனால் இதில், ஹீரோ ஹோண்டா மட்டும் தனித்துவம் பெற்று, 'உலகின் நம்பர் 1 மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்' என்ற உயரத்தை அடைந்ததோடு, இந்தப் பெருமையைப் பல ஆண்டுகளாகக் கட்டிக் காத்து வருகிறது.
இந்திய நிறுவனமான ஹீரோ, சைக்கிள் தயாரிப்பில் பெயர் பெற்ற முன்னணி நிறுவனம். மேலும், 'ஹீரோ மெஜஸ்டிக்' என்ற பெயரில் மொபெட்டுகளையும் தயாரித்து விற்பனை செய்துகொண்டு இருந்த காலம் அது. இந்தியாவின் நம்பர் 1 சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ நிறுவனத்தின் நிறுவனர் ப்ரிஜ்மோகன்லால் முன்ஜால், உலகின் நம்பர் 1 மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஜப்பானின் ஹோண்டா நிறுவனத்தை அணுகி, கூட்டணி அமைக்கப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்படி 1983-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
1984-ம் ஆண்டு 'ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ்' உதயமானது. தனது முதல் தொழிற்சாலையை ஹரியானாவில் உள்ள தருஹேரா (Dharuhera) என்ற இடத்தில் துவக்கியது இந்த நிறுவனம்.
சிடி 100
1985-ல் ஹீரோ ஹோண்டா முதன்முதலாக அறிமுகப்படுத்திய 'சிடி 100' பைக்தான் இந்த மாபெரும் பயணத்தின் முதல் படி. இந்த பைக் குறிப்பாக, மைலேஜ் மற்றும் சுற்றுச்சூழலை (4 ஸ்ட்ரோக்) மையமாக வைத்து, மத்திய தரக் குடும்பத்துக்கு ஏற்ற பைக்காக வடிவமைக்கப்பட்டது. அப்போது அதன் தோற்றமும், பர்ஃபாமென்ஸும் படு சுமார்தான். மைலேஜ் கிடைத்தாலும், அப்போது போட்டியில் இருந்த பைக்குகள் அனைத்தும் 2 ஸ்ட்ரோக் இன்ஜின் கொண்டவையாக இருந்தன. அதனால் பவர், பர்ஃபாமென்ஸ், பராமரிப்புச் செலவுகள் ஆகிய விஷயங்களில் சிடி 100 பின் தங்கியே இருந்தது. போட்டி பைக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல் 1987-ல் 'சிடி டீலக்ஸ்,' 1989-ல் 'ஸ்லீக்,' 1991-ல் 'சிடி 100 எஸ்.எஸ்' ஆகிய மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்தியது ஹீரோ ஹோண்டா. இந்த அனைத்து மாடல்களிலும் மைலேஜ் மற்றும் 4 ஸ்ட்ரோக் விஷயத்தை அப்படியே கடைப் பிடித்து வந்தது.
1985-ல் துவங்கப்பட்டு 1987-ல் 1 லட்சம் பைக்குகளைத் தயாரித்தது ஹீரோ ஹோண்டா. இதுவே 1991-ல் 5 லட்சம் பைக்குகளாக உயர்ந்தது. 1994-ல் இந்த எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டது.
ஸ்ப்ளெண்டர்
புதிய டபுள் கிரேடில் ஃப்ரேமில், மேம்படுத்தப்பட்ட சிடி 100 இன்ஜினைப் பொருத்தி, 'ஸ்ப்ளெண்டர்' என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது. இந்த பைக்தான் ஹீரோ ஹோண்டாவின் புகழ், உச்சாணிக் கொம்புக்குச் செல்ல காரணமாக இருக்கும் பைக் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
ஆரம்பத்தில் ஸ்ப்ளெண்டர் பைக் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகவில்லை என்பதுதான் உண்மை. ஆனாலும், குறைவாக விற்பனையான பைக்குகளின் வாடிக்கையாளர்களே, இதன் பயன்பாட்டை நன்கு உணர்ந்துகொண்டு, வாய் வழியாக பைக் பற்றி தந்த நற்சான்றிதழே இந்த பைக் படிப்படியாக விற்பனையை அதிகரிக்க உதவியது.
ஸ்ப்ளெண்டர், எல்லா வகையினருக்கும் உகந்ததாக இருந்ததே இதன் வெற்றிக்கு அடிப்படைக் காரணம். அதிகபட்ச வேகம் குறைவாக இருந்தாலும், சாலையில் ஓட்டுவதற்குப் பிரமாதமான இதன் ஹேண்ட்லிங் மற்றும் கணிசமான மைலேஜ், ஸ்டைல் என்று அந்த காலகட்டத்தில் இது அனைத்துத் தரப்பினரையும் கவரத் துவங்கியது.
ஹீரோ ஹோண்டாவின் முந்தைய தயாரிப்புகளில், பெரும்பாலான முக்கிய உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டவையாக இருந்தன. அதனால், அத்தகைய மோட்டார் சைக்கிளின் விலையும், பராமரிப்புச் செலவும் அதிகமாக இருந்தன. ஸ்ப்ளெண்டரில் பெரும்பான்மையான உதிரி பாகங்கள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டன. அதனால், பராமரிப்புச் செலவு பெருமளவு குறைந்தது. இந்த பைக்கின் மிகப் பெரிய பலம் எது என்றால், எப்படி பயன்படுத்தினாலும் மக்கர் செய்யாமல் ஓடிக்கொண்டே இருப்பதுதான். அதுதான் மக்களை ஸ்ப்ளெண்டர் பக்கம் திரும்ப வைத்தது எனலாம். இதனால், படிப்படியாக விற்பனை உயர்ந்து 'உலகின் நம்பர் ஒன் பைக்' என்ற அந்தஸ்தை அடைந்து, ஹீரோ ஹோண்டாவுக்கும் 'நம்பர் ஒன் தயாரிப்பாளர்' என்ற பெருமையும் கிடைத்தது.
ஹீரோ ஹோண்டா ஸ்ட்ரீட்
1997-ம் ஆண்டு 'ஸ்ட்ரீட்' என்ற ஸ்டெப் த்ரூ பைக்கை செல்ப் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் கிளட்ச் ஆகிய வசதிகளுடன் ஹீரோ ஹோண்டா அறிமுகப்படுத்தியது. ஸ்ப்ளெண்டர் இன்ஜினை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஸ்டெப் த்ரூ பைக் வெற்றியடையவில்லை. அதனால், இதன் உற்பத்தி நாளடைவில் கைவிடப்பட்டது. இதே ஆண்டு பைக்கின் தேவை அதிகமானதை அடுத்து, ஹரியானாவில் உள்ள கூர்கானில் இரண்டாவது தொழிற்சாலையைத் துவக்கியது. 1998-ல் ஹீரோ ஹோண்டா தயாரித்த பைக்குகளின் எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்தது.
ஹீரோ ஹோண்டா சிபிஸீ
1999-ல் 'சிபிஸீ' என்ற 156 சிசி இன்ஜின் கொண்ட 4 ஸ்ட்ரோக் ஸ்போர்ட்ஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது. இந்த பைக் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஓட்டுவதற்கு படு ஸ்போர்ட்டியாகவும், ஹேண்ட்லிங் பிரமாதமாகவும் இருந்ததால் பரபரப்பாக விற்பனையானது. அப்போது மார்க்கெட்டில் பெரிய சைஸ் டயர், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் மற்றும் முன் பக்க டிஸ்க் பிரேக் என அமர்க்களமாக இருந்தது. போதுமான மைலேஜையும் இந்த பைக் தந்தது. மேலும், இந்த சிபிஸீதான் இப்போதும் மார்க்கெட்டில் உள்ள ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு அடிப்படை எனலாம்.
உலகின் நம்பர் 1
2000-ம் ஆண்டு 40 லட்சம் பைக்குகள் தயாரித்து, 'உலகின் நம்பர் 1 பைக் தயாரிப்பாளர்' என்ற பெருமையை முதன்முதலாகப் பெற்றது ஹீரோ ஹோண்டா. இந்த ஆண்டுதான் ஹீரோ ஹோண்டா வாடிக்கையாளருடன் உள்ள தொடர்பை மேம்படுத்துவதற்காக, 'பாஸ்போர்ட் புரோக்ராம்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் மாபெரும் வெற்றியடைந்தது. அதனால், இந்தத் திட்டத்தை உலகின் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பின்பற்ற துவங்கிவிட்டன.
பேஸன் மற்றும் ஜாய்
2001-ல் 'பேஸன்' மற்றும் 'ஜாய்' என்ற பெயர்களில் ஹீரோ ஹோண்டா புதிய பைக்குகளை அறிமுகம் செய்தது. இதே ஆண்டு ஒரே ஆண்டில் 10 லட்சம் பைக்குகள் தயாரித்து மேலும் ஒரு புதிய சாதனையைப் படைத்தது.
ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், கரீஸ்மா
2002-ம் ஆண்டு 'டான்' மற்றும் 'ஆம்பிஷன்' என்ற பெயர்களில் புதிய பைக்குகளை ஹீரோ ஹோண்டா அறிமுகம் செய்தது. 2003-ல் ஹீரோ ஹோண்டாவின் ஒட்டுமொத்த தயாரிப்பின் விற்பனை எண்ணிக்கை 70 லட்சங்களைத் தொட்டது. இதே ஆண்டு ஸ்ப்ளெண்டரை மேம்படுத்தி 'ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்,' பேஸனை மேம்படுத்தி 'பேஸன் ப்ளஸ்' மற்றும் டான் பைக்கை மேம்படுத்தி 'சிடி டான்' என புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. இது மட்டுமில்லாமல், சிறிய இன்ஜின்களை மையமாகக் கொண்டு அன்றாடத் தேவைக்கு ஏற்ற பைக்குகளைத் தயாரித்து வந்த ஹீரோ ஹோண்டா, 223 சிசி அளவு கொண்ட இன்ஜினைப் பொருத்தி, 'கரீஸ்மா' என்ற பவர்ஃபுல் ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கை அறிமுகம் செய்து மார்க்கெட்டைக் கதிகலங்க வைத்தது.
2004-ம் ஆண்டு 'ஆம்பிஷன் 135' மற்றும் 'சிபிஸீ ஸ்டார்' என மேலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு ஹீரோ ஹோண்டாவின் பைக் விற்பனை எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது!
2005-ம் ஆண்டு 'சூப்பர் ஸ்ப்ளெண்டர்,' 'கிளாமர்,' 'சிடி டீலக்ஸ்,' 'அச்சீவர்' ஆகிய புதிய பைக்குகளோடு முதன்முதலாக ஹீரோ ஹோண்டா 'ப்ளஷர்' என்ற புதிய ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்தது. ப்ளஷர் ஸ்கூட்டர் பிரத்யேகமாக பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதற்கென தனி ஷோரூம் மற்றும் கிளப்புகளை எல்லாம் உருவாக்கினார்கள். 2006-ல் கிளாமர் எஃப்.ஐ இன்ஜின் அறிமுகமானது. இதுதான் இந்தியாவின் முதல் ஃப்யூல் இன்ஜெக்ஷன் பொருத்தப்பட்ட இன்ஜின். 2007-ம் ஆண்டு சிபிஸீ எக்ஸ்ட்ரீம் பைக்கை அறிமுகம் செய்தது. மேலும், அச்சீவர் பைக் அலாய் வீல்களுடன் அறிமுகமானது.
ஹங்க், ஸ்ப்ளெண்டர் என்.எக்ஸ்.ஜி
இதன் பிறகு சிபிஸீ எக்ஸ்ட்ரீம் மற்றும் அச்சீவர் ஆகிய பைக்குகளின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத காரணத்தால், இதே வரிசையில் 'ஹங்க்' என்ற புதிய பைக்கை அறிமுகம் செய்தது ஹீரோ ஹோண்டா. இதே ஆண்டு 'ஸ்ப்ளெண்டர் என்.எக்ஸ்.ஜி' என்ற புதிய பைக்கையும் அறிமுகம் செய்தது. 2009-ல் 'பேஸன் ப்ரோ' என்ற பேஸன் பைக்கை செல்ஃப் ஸ்டார்ட்டர், டிஸ்க் பிரேக், அலாய் வீல்கள் பொருத்தி அறிமுகம் செய்தது. 2009 இறுதியில் கரீஸ்மாவை மேம்படுத்தி கரீஸ்மா ஸீ.எம்.ஆர் என்ற பைக் எஃப்.ஐ பைக்கையும் அறிமுகம் செய்துள்ளது.
கூட்டணி மூலம் உருவான பல பைக் நிறுவனங்களின் உறவு முறிந்தாலும், ஹீரோ ஹோண்டாவின் உறவு சில நெருடல்களுடனே தொடர்ந்து கொண்டு இருக்கிறது. காரணம், ஜப்பான் ஹோண்டா நிறுவனமும் இந்தியச் சந்தையில் தனியே காலூன்றி இருப்பதால், இந்த உரசல்கள் ஏற்பட்டு இருப்பதாகக் கருதுகிறார்கள். முதலில் கைனடிக் - ஹோண்டாவின் பிரிவால் 'ஹோண்டா மோட்டார்ஸ் அண்டு ஸ்கூட்டர்ஸ் இந்தியா' என்ற நிறுவனத்தைத் தொடங்கி, ஸ்கூட்டர்களை மட்டும் தயாரித்து விற்பனை செய்தது ஹோண்டா. காலப்போக்கில் 150 சிசி இன்ஜின் கொண்ட 'யூனிகார்ன்' பைக்கை அறிமுகம் செய்ததில்தான் பிரச்னை தொடங்கியது. பின்பு, 125 சிசியில் 'ஷைன்' மற்றும் 'ஸ்டன்னர்' என வரிசையாக பைக்குகளை அறிமுகம் செய்து, எரியும் தீயில் எண்ணெய் வார்த்தது ஹோண்டா. ஸ்கூட்டர் மார்க்கெட்டிலும் புதுப் புது மாடல்களை அறிமுகம் செய்து அந்த மார்க்கெட்டைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ளது ஹோண்டா நிறுவனம்.
இந்தியாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய பைக் தயாரிப்பாளர் என்ற இடத்தில் பஜாஜும், டிவிஎஸ்ஸும் இருக்கும் நிலையில், ஹோண்டா நிறுவனம் இந்த இடங்களை நெருங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதே ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கருத்து. இப்படி இருக்க... ஹீரோ ஹோண்டாவின் 100 சிசி இன்ஜின்தான் இதன் இமாலய வெற்றிக்கு முக்கியக் காரணம். இந்த செக்மென்டில் 100 சிசி இன்ஜின் கொண்ட பைக்கை அறிமுகம் செய்வதாக இருந்த ஹோண்டா, ஹீரோ ஹோண்டாவின் எதிர்ப்பின் காரணமாக இன்ஜினை மாற்றி, 110 சிசி கொண்ட இன்ஜினாக 'ட்விஸ்டர்' என்ற பெயரில் பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது.
2009-ல் ஹீரோ - ஹோண்டா ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டபோது, இந்தப் பிரச்னை பலமாக எழுந்து கூட்டணி முறியும் நிலைக்கே சென்றது என்கிறார்கள். ஹீரோ நிறுவனம் ஐரோப்பிய நிறுவனத்துடன் கைகோர்க்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனாலும், ஒப்பந்தம் 2014-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் சரிந்து பாதாளத்தில் வீழ்ந்துகிடந்த நிலையிலும், ஹீரோ ஹோண்டா நிறுவனத்திடம் கடந்த ஆண்டு மட்டும் 4,000 கோடி ரூபாய் உபரித் தொகையாக கையிருப்பில் உள்ளது.
அதனால், 'தங்க முட்டையிடும் வாத்தை ஏன் அறுக்க வேண்டும்' என இருவருமே யோசிக்க ஆரம்பித்தால்... 2014-க்குப் பிறகும் இந்தக் கூட்டணி தொடரும் வாய்ப்பு உண்டு!
No comments:
Post a Comment