சென்னை போரூரிலிருந்து அண்ணா சாலைக்குப் பேருந்தில் வந்து செல்லும் நண்பர் ஒருவர் திடீரென போன் செய்து, 'திருவல்லிக்கேணியில நீங்க இருக்கிற மேன்ஷன்ல எனக்கும் ஒரு ரூம் கிடைக்குமா?’ என்று கேட்டார். சமீபத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம்தான் நண்பர் திருவல்லிக்கேணியில் ரூம் தேடி பார்க்கச் சொன்னதற்கான காரணம்.
நண்பர் தனியாள் என்பதால் நினைத்த நேரத்தில் வசிக்கும் இடத்தை மாற்றிவிடுவார். ஆனால், குழந்தை குட்டிகளோடு இருக்கும் குடும்பஸ்தர்கள் நினைத்த மாத்திரத்தில் வீட்டை மாற்றிவிட முடியுமா?
வீட்டுப் பிரச்னை இப்படி என்றால், பால் விலை உயர்வு வேறு மாதிரி. நேற்று வரை ஐந்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த டீ இப்போது ஏழு ரூபாய். காபியோ எட்டு ரூபாய் ஆக்கிவிட்டார்கள். சாதாரண டீக்கடையிலேயே இப்படி என்றால், இனி ஒரு நல்ல ஓட்டலுக்கு போய் ஒரு காபி குடிப்பது என்பது அடிக்கடி நடக்கும் விஷயமாக இருக்காது. பால் விலை உயர்ந்ததால், தயிர், மோர், இனிப்பு வகையறாக்கள் என பலவற்றின் விலையும் உயர்ந்து சாதாரண மக்களை நிலைகுலையச் செய்திருக்கிறது.
இந்த இரண்டு இடியும் போதாது என்று, கூடிய விரைவில் மின் கட்டணத்தையும் உயர்த்த தமிழக அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறதாம். ஏற்கெனவே பெட்ரோல் விலை, காய்கறி விலைகள் எகிறிக் கிடக்க, இப்போது பால், பஸ் கட்டண உயர்வுகளையும் சமாளிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு. எப்படி எல்லாம் இந்த திடீர் செலவுகளைச் சமாளிக்கலாம் என, நிதி ஆலோசகர் சுபாஷினியிடம் கேட்டோம். விலாவாரியாக எடுத்துச் சொன்னார் அவர். இதோ அந்த யோசனைகள்:
''இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ வேண்டும் என்பதுதான் நம் முன்னோர்கள் நமக்கு கற்று தந்த பாடம். ஆனால், அதிகரித்துவரும் விலைவாசியை எப்படி சமாளிப்பது என்பதை நாம்தான் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. செலவுகளைத் திட்டமிடும் முன் நாம் தெளிவாக இருக்க வேண்டிய விஷயம், எந்த சூழ்நிலையிலும் நமது சேமிப்பு பழக்கத்தைக் கைவிடக்கூடாது என்பதுதான்.
செலவுகள் அதிகரித்து வருகிறது என்பதற்காக நமது தேவைகளை குறைத்துக் கொள்வது என்பது சிறந்த வாழ்கை முறையல்ல. அதை சமாளிப்பதற்கான தெளிவான திட்டமிடலும், அதை அமல்படுத்துவதிலும்தான் நமது வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள முடியும். இதற்கு என்ன செய்யலாம்?
முடிந்த வரையில் வேறு வருமான வாய்ப்புகளை ஆராய்வது நல்லது. குழந்தைகளுக்கு தனிப் பயிற்சி, அக்கம் பக்கத்துக்காரர்களுக்குத் தேவையான சிறுசிறு சேவைகள் மூலம் சிறிய வருமானம் ஈட்ட முடியும். உங்களைச் சுற்றி இருக்கிற வாய்ப்புகளை கொஞ்சம் கண் திறந்து பாருங்கள்.
செலவுகளின் அடிப்படை என்ன என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முயற்சியுங்கள். உதாரணமாக, மின்சார சிக்கனம் என்றால் தேவையில்லாத நேரத்தில் மின் விளக்குகளை அணைப்பது மட்டுமல்ல, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதிலும் இருக்கிறது. அதன் மூலமும் மின்சார செலவை குறைக்க முடியும்.
ஒரு அபார்ட்மென்டில் இருக்கும் பத்து குடும்பங்கள் சேர்ந்து பொருட்களை மொத்தமாக வாங்கி பிரித்துக் கொள்ளலாம். அதன் மூலம் ஒற்றுமையும் இருக்கும்; செலவுகளும் குறையும். ஆனால், எல்லோருக்கும் வாங்குவதற்காக எல்லோருமே போகக்கூடாது. நம்பிக்கையாக ஒருவரே முன்னின்று செய்ய வேண்டும்.
மாத பட்ஜெட் போடுபவர்கள் சரியாக முப்பது நாட்களுக்குத் தேவையான பொருட்களை திட்டமிட்டு வாங்குகிறார்கள். இந்த பட்ஜெட்டை இனி 32 நாட்கள் அல்லது 34 நாட்களுக்கு என கொஞ்சம் நாட்களை அதிகப் படுத்தினால், நான்கைந்து மாதத்தில் குறைந்தது 15 நாட்களுக்கான தேவையைச் சமாளிக்கலாம்.
சத்து மிகுந்த பாரம்பரிய உணவுகளை இனிமேலாவது நாட வேண்டும். இது விலை குறைவாகவும் இருக்கும்; அதே சமயத்தில் ஆரோக்கியம் மட்டுல்ல, மருத்துவ செலவுகளையும் குறைக்கலாம். உதாரணமாக, ஓட்ஸ், பார்லி வாங்குபவர்கள் கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களை வாங்கலாம்.
சமையல் விஷயங்களில் பொருட்களுக்கான முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதன் மூலம் பொருட்கள் வீணாவதைத் தடுக்க முடியும்.
கூடுமானவரை பேக்கிங் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இரண்டு நபர் கொண்ட குடும்பம் என்றாலும், சமைப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
ஆடம்பரமான கொண்டாட்டங்களைத் தவிர்க்கலாம்; எளிமையாக வீட்டிலேயே மகிழ்ச்சியோடு கொண்டாடலாம்.
திட்டமிட்டுச் செலவு செய்யும் பட்சத்தில், 70 சதவிகித பிரச்னைகளை நாமே சமாளித்துக் கொள்ள முடியும்.
''இதெல்லாம் என் ஆலோசனை மட்டுமல்ல, அனுபவமும்கூட'' என முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் நிதி ஆலோசகர் சுபாஷினி. அவர் சொன்ன விஷயங்களில் பாதியை ஃபாலோ செய்தாலே போதும், திடீர் செலவை ஈஸியா சமாளிக்கலாம் போலிருக்கே!
No comments:
Post a Comment