திட்டமிடுங்கள்!
நம்மூரில் திருமணச் செலவுகள் பெரும்பாலும் மணமக்களின் பெற்றோர் தலையில்தான் விடியும். அதிலும் பெண்ணைப் பெற்றவர்கள் என்றால் செலவுக்கு கேட்கவேண்டியதேயில்லை!. தங்களது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் கரைத்து விடுவ துடன், 'கிரெடிட் கார்டைத் தேய், பெர்சனல் லோனை வாங்கு’ என்று கண்ட இடத்திலும் கடன் வாங்கிவிடுகிறார்கள். இதை பலர் அனுபவப்
பூர்வமாக உணர்ந்த போதும்கூட, கடைசி நேரத்தில்தான் காலைக் காலை உதைக்கிறார்கள்! அதற்குப் பதிலாக சிம்பிளாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ எப்படி திருமணத்தை நடத்துவதாக இருந்தாலும் சரி, திட்டமிட்டு நடத்தினால் எதிர்பார்த்ததைவிட குறைந்த செலவில் சிறப்பாக நடத்தி முடிக்க முடியும். மகனோ, மகளோ பிறந்ததும் ஜாதகம் எழுதிக்கொண்ட கையோடு அவர்களது திருமணச் செலவுகளுக்கான சேமிப்புத் திட்டங்களிலும் சேர்ந்துவிடுவது நல்லது! 'கல்யாணமே முடியலை அதுக்குள்ள பிறக்கப்போற பிள்ளைக்கு பேர் வைக்க துடித்த கதையாக இருக்கிறதே’ என்று சிலர் கேலிகூட பேசக்கூடும். ஆனால் அந்த சேமிப்பின் பலன் தெரியும்போது அப்படிப் பேசியவர்கள் நிச்சயமாக மூக்கின் மேல்தான் விரலை வைப்பார்கள்!
பட்ஜெட் போடுங்க!
திருமணம் முடிவானதும் அவசியமான விஷயங்கள் எது என்பதைக் குறித்து கொண்டு அதற்கான செலவு எவ்வளவு வரும் என்பதை முன்னரே பட்ஜெட் போட்டுக் கொள்ளுங்கள். இதற்குத் தேவையான பணத்தை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் எனில் ஏற்கெனவே சமீபத்தில் திருமணம் நடத்தியவர்களுடன் பேசி அவர்களின் அனுபவத்தைக் கேட்டு, சிக்கனமாக நடந்து கொள்ளுங்கள். உங்களது பட்ஜெட் இரண்டு லட்சம் ரூபாய் எனில் அதற்கு மேல் பத்தாயிரம் அதிகம் வரலாம். இந்த நிபந்தனையுடன் பட்ஜெட் போடுங்கள்.
எந்த மாதத்தில் கல்யாணம்?
எந்த மாதத்தில் நீங்கள் திருமணம் நடத்தப் போகிறீர்கள் என்பது முக்கியமான விஷயம். காரணம், பெரும்பாலானவர்கள் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்வதால் ஒரே நாளில் பல திருமணங்கள் நடக்கும். அதனால் திருமணத் தேதி முடிவானவுடன் திருமண மண்டபத்தை புக் செய்வதற்கு பெரிய போட்டியே நடக்கிறது. மிகச் சிலரே முதலில் திருமண மண்டபத்தில் தேதி கேட்டு விட்டு, அதன் பிறகு திருமணத்துக்கான தேதியைக் குறிக்கிறார்கள்.
மண்டபம் முக்கியம்!
நம்மூரில் 70% திருமணங்கள் மே மாதத்தில்தான் நடைபெறுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த மாதத்தில் மண்டபங்களின் வாடகை மிக அதிகமாக இருக்கும். ஆனால் சீஸன் இல்லாத நேரத்தில் கல்யாண மண்டபங்களின் வாடகை 30% குறைவாக இருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். கடைசி நேரத்தில் கல்யாண மண்டபம் வேண்டும் என்று தேடி அலைகிற போது நல்ல மண்டபங்கள் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அல்லது அதிகக் கட்டணத்தில் இருக்கும் கல்யாண மண்டபத்தை புக் பண்ண வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. கல்யாண மண்டபம் உங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பதுதான் நல்லது. இதன் மூலம் திருமணத்துக்குரிய விலையுயர்ந்த பொருட்களை வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். நெருங்கிய உறவினர்களையும் வீட்டிலேயே தங்க வைத்துவிடலாம். இதனால் லாட்ஜ் வாடகைப் பணம், போக்குவரத்துச் செலவு உள்ளிட்ட பல விஷயங்கள் கணிசமாக மிச்சமாகும்.
திருமண கான்ட்ராக்டர்கள்!
வீடு கட்டிய அனுபவம் நமக்கு இல்லை என்றால் வீடு கட்டும் கான்ட்ராக்டர்களிடம் அந்த வேலையைக் கொடுத்துவிடுகிறோம். அது மாதிரி, நம் வீட்டுத் திருமணத்துக்கான அத்தனை வேலைகளையும் நாமே இழுத்துப் போட்டுச் செய்ய முடியாவிட்டால், அதைக் கச்சிதமாகச் செய்து கொடுப்பதற்கென்றே திருமண கான்ட்ராக்டர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் உங்கள் திருமண பட்ஜெட்டை சொன்னால் போதும், மண்டபத்தில் ஆரம்பித்து சாப்பாடு வரை அத்தனை வேலைகளையும் செய்து கொடுத்து முடித்துவிடுவார்கள். நீங்கள் இருப்பது நகரமெனில் திருமண கான்ட்ராக்டர்களைக் கொண்டு சுலபமாக திருமணத்தை முடித்துவிடலாம். நீங்கள் இருப்பது சிறிய நகரம் எனில், உங்கள் உறவினர் பலரும் உங்கள் வீட்டுக் கல்யாணத்தை முன்னின்று நடத்தத் தயாராக இருப்பார்கள் என்பதால் உங்களுக்கு அந்தத் தேவை அதிகம் இருக்காது.
திருமண அழைப்பிதழ்கள்
திருமணத்துக்கான அழைப்பிதழ்களை அதிக விலையில் அச்சிடுவதைத் தவிர்க்கலாம். உங்களது திருமண அழைப்பிதழ் உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு அது சாதாரண பேப்பர்தான் என்பதை மறக்காதீர்கள். அதனால் கிராண்டாக அச்சடிக்காமல் எளிமையாக, கிரியேட் டிவ்வாக பளிச்சென்று இருக்குமாறு அடித்தாலே போதும், பாராட்டும் குவியும், செலவும் குறையும்.
சாப்பாடு விஷயத்தில் கவனம்
உங்கள் வீட்டுத் திருமணம் கொளுத்த முகூர்த்த நாளில் குறிக்கப்பட்டிருந்தால் அன்று பல திருமணங்கள் நடக்கும். அதனால் உங்கள் வீட்டுத் திருமணத்துக்கு வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வருவார்கள்; வந்தாலும் கட்டாயம் சாப்பிடுவார்கள் என்று சொல்ல முடியாது. எனவே, அதிகமான சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்வதைத் தவிர்க்கலாம். திருமணத்துக்கு 600 நபர்கள் வருவார்கள் என்று நாம் எதிர்பார்த்தால் 550 நபர்களுக்கான சாப்பாடு ஆர்டர் செய்தால் போதும். அடுத்து, அதிகப்படி யான மெனுக்களைச் சொல்லி இலையை நிறைய நிரப்புவதால் சலிப்பு ஏற்பட்டு, அந்த உணவுகள் குப்பைக்குதான் போகும். சில முக்கிய அயிட்டங்களை நல்ல சுவையுடன் செய்வதே வருபவர்களின் வயிற்றுக்கும் உங்களது பர்ஸ்க்கும் நல்லது.
அலங்காரம்
அப்போதைய சீஸனில் கிடைக்கும் பூக்களை அலங்காரத்துக்குப் பயன்படுத்துவதால் செலவு குறையும். மேலும் இப்போதெல்லாம் திருமண மண்டபங்களிலே பெரும்பாலும் மேடை அலங்காரங் களை ரெடிமேடாகச் செய்திருக்கிறார்கள். அதுவே போதுமானதாக இருக்கும்பட்சத்தில் செலவைக் குறைக்கலாமே.
அதிக நிகழ்ச்சிகளை தவிர்க்கலாமே!
வரவேற்பு, திருமணம், நிச்சயதார்த்தம் என தனித்தனி யாக நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்கலாம். கண்டிப்பாக இரண்டு நிகழ்ச்சிகளும் தேவை என்னும் பட்சத்தில் ஒரு நிகழ்ச்சியை எளிமையாகவும், மற்றொன்றை வெகுவிமர்சியாகவும் நடத்தலாம். திருமணத்துக்கு முன்தினம் நிச்சயதார்த்தம் வைத்து கொள்வது சில பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும்.
தங்க நகை
நகைகளை திருமணம் முடிவானதும் புது டிசைன் களில் வாங்கி கொள்ளலாம் என நினைப்பது தவறானது. விலை குறைவாக இருக்கும்போது நகை களை வாங்குங்கள். ஆபரணத் தங்கத்தின் விலை 2000-ல் ஒரு பவுன் 3,320க்கு விற்பனை ஆனது. அதுவே தற்போது சுமார் 15,000க்கு விற்பனை ஆகி வருகிறது. எனவே கையில் பணம் கிடைக்கும் போதெல்லாம் நகைகளை வாங்கிவைக்கலாம்.
ரிஷப்சன் அன்று மாப்பிள்ளை க்கு கோட் சூட் என்று ஆயிரக்கணக்கில் பணத்தைப் போட்டு வாங்குவது குறித்தும் மறுபரிசீலனை செய்யலாம். பெரும்பாலானவர்கள் அன்று ஒரு நாள் மட்டும் போட்டு போஸ் கொடுத்துவிட்டு அதன்பிறகு ஓரம்கட்டி வைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் நமது பாரம்பரிய உடையை எளிமையாக அணிந்து கொள்ளலாம். கோட் சூட் வாங்கும் தொகைக்குப் பதில் மணமக்களுக்கு அவசியமான ஏதாவது ஒரு பொருளை பரிசாகக் கொடுத்தால் பயனாவது இருக்கும். எல்லா விஷயத்தை விடவும் எளிமையின் பலன் குறித்து மணமக்கள் மட்டுமின்றி அவர்களைச் சார்ந்த எல்லோருடனும் பேசி, திருமணத்தைத் திட்ட மிட்டு நடத்தினால் அதற்கு நல்ல பலன் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.
- பானுமதி அருணாசலம், படங்கள்: என்.விவேக்.
திருமணத்தை சிக்கனமாக நடத்தி முடிக்க என்னென்ன விஷயங்களை அவசியம் கவனிக்க வேண்டும் என'ஸ்ரீ காமாட்சி மேரேஜ் கான்ட்ராக்டர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரனிடம் கேட்டோம். பல ஆயிரம் திருமணங்களை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த அனுபவத்திலிருந்து அவர் தரும் சில டிப்ஸ்கள்:
கூடுமானவரை திருமணத்துக்கு வருபவர்களை விமான நிலையத்திலிருந்து, ரயில் நிலையத்திலிருந்து பிக் அப் மற்றும் டிராப் செய்வதைத் தவிர்க்கலாம்.
ஆர்கெஸ்ட்ரா வைப்பது அனைத்துத் திருமணங்களிலும் இப்போது கட்டாயமாகிவிட்டது. ஆனால் வருபவர்கள் யாரும் பொறுமையாக அமர்ந்து ஆர்கெஸ்ட்ராவை ரசிப்பது கிடையாது. எனவே ஆர்கெஸ்ட்ரா வைப்பது அவசியமா என மறு பரிசீலனை செய்யலாம்.
வருவோர், போவர்களுக்கெல்லாம் திருமணத்திற்கான டிரெஸ் எடுப்பது என்பது இன்று ஒரு பேஷனாகி விட்டது. சம்பிரதாயப்படி அவசியமானவர்களுக்கு மட்டுமே டிரெஸ் எடுத்துக் கொடுக்கலாம்.
தேங்காய் கவர் கொடுப்பது ஒரு மங்களகரமான விஷயம். அதிலும் ஆடம்பரத்துக்கு இடம் கொடுக்க வேண்டாமே!
|
எல்லாவற்றுக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிற மாதிரி திருமணத்துக்கும் இன்ஷூரன்ஸ் எடுக்கிற வழக்கம் இப்போது புதிதாக உருவாகி இருக்கிறது. திருமண இன்ஷூரன்ஸ் பற்றி பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் அக்ஷய் மெகோத்ராவிடம் ஒரு மினி பேட்டி...
திருமண இன்ஷூரன்ஸுக்கான அவசியம் என்ன?
''திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும், அதற்கான செலவுகள் விண்ணைத் தாண்டினதாகவே இருக்கிறது. உங்களையும் மீறி சில தவறுகள் நடந்து, அந்தத் திருமணம் நின்று போனலோ அல்லது தள்ளிப் போனாலோ நீங்கள் செய்த செலவுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதற்குதான் திருமண இன்ஷூரன்ஸ். திருமணம் ரத்து அல்லது தள்ளிப் போதல், நெருப்பினால் விபத்து ஏற்படுதல், மணமகன், மணமகளுக்கு
விபத்து ஏற்படுதல், போன்றவற்றுக்கு கிளைம் கிடைக்கும். மணமக்களின் ரத்த சொந்தத்துக்கு திருமணத் தேதிக்குஏழு நாட்களுக்குள் விபத்து ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டால் அதற்கான செலவையும் கிளைம் செய்து கொள்ள முடியும். மேலும் பணம் தொலைந்து போவது, திருடு போவது போன்றவைகளுக்கும் இதன் மூலம் கிளைம் கிடைக்கும். இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியமும் குறைவாகத்தான் இருக்கும். எங்கள் நிறுவனத்தை எடுத்துக் கொண்டால் 20 லட்சம் கவரேஜுக்கான பிரீமியம் வெறும் 2,252 மட்டுமே!''
இந்த இன்ஷூரன்ஸ் எடுக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?
''திருமண அழைப்பிதழ், திருமண மண்டபம், இந்த இன்ஷூரன்ஸினால் பயனடைபவர்கள் பற்றிய விவரங்கள் தேவைப்படும். கிளைம் வாங்குவதற்கு திருமணச் செலவுக்கான அனைத்து ரசீதுகளையும் ஒப்படைக்க வேண்டும்.''
|
No comments:
Post a Comment