Friday, 3 July 2015

பெட்ரோல் சேமிப்பு டிப்ஸ்!

'ஒவ்வொரு துளி எரிபொருளையும் எதிர்காலத்துக்காகச் சேமியுங்கள்!
வாகனத்தை மெதுவாகவும் ஒரே சீராகவும் ஓட்டுங்கள்!
உங்கள் வாகனம் வேகமாகச் செல்லும்போது, எதிர்க் காற்றுக்கு ஈடுகொடுத்தாக வேண்டும். மணிக்கு 60 கி.மீ-க்கு மேல் வேகமாக ஓட்டினால், எரிபொருள் விரயமாகும். எனவே, மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் செல்லும்போது 40 சதவிகிதம் கூடுதல் மைலேஜ் கிடைக்கும் என்று இந்திய கார்களின் மீதான சோதனைகள் நிரூபித்துள்ளன. அநாவசியமான வேக அதிகரிப்பையும் திடீரென்ற வேகக் குறைப்பையும் தவிர்த்துவிடுங்கள். மிதமான வேகத்தில் செல்வது பயண நேரத்தைக் கணிசமாக அதிகரிப்பதில்லை என்பதைச் சோதனைகள் நிரூபித்து இருக்கின்றன.
இன்ஜினை ஆரோக்கியமாக வைத்திருங்கள்!
காரை முறையாகப் பராமரிப்பதன் மூலம் 6 சதவிகிதம் வரை எரிபொருளை மிச்சப்படுத்தலாம். இன்ஜின் கரும் புகையைக் கக்கினாலோ, குறைவான இழுவைத் திறனைக் கொண்டிருந்தாலோ அல்லது பெருமளவு ஆயிலைக் குடித்தாலோ, உடனே அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் பரிசோதியுங்கள். காலதாமதப்படுத்தினால் எரி-பொருள், ஆயில் செலவு, இன்ஜின் தேய்மானம் எனச் செலவுகள் அதிகமாகிவிடும். ஒவ்வொரு 5,000 கி.மீ ஓடிய பின்பு அல்லது வாகனத் தயாரிப்பாளர் பரித்துரைத்தபடி, உங்கள் காரை சர்வீஸ் செய்யுங்கள்.
எப்போதுமே சரியான கியரில் வாகனத்தை ஓட்டவும்!
உங்கள் காரை ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் தவறான கியர் மாற்றம், எரிபொருள் உபயோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதத்தை அதிகரித்துவிடும். சேறும் சகதியும் நிறைந்த இடத்தில் அல்லது மலைச் சாலை இறக்கத்தில் காரை ஓட்டும்போது இரண்டாவது கியரைப் பயன்படுத்தவும். நகரப் பகுதியில் ஓட்டும்போது, இன்ஜினுக்கு அதிகப் பாதிப்பு இருக்காது என்பதை நிச்சயமாக உணர்ந்தால், டாப் கியரில் வாகனத்தை ஓட்டுங்கள்.
டாப் கியரின் உபயோகத்தை அதிகப்படுத்தவும்!
நீங்கள் 40-45 கி.மீ வேகத்தை எட்டியவுடன் டாப் கியருக்கு மாறி, 45-55 கி.மீ வேகத்துக்கு உள்ளேயே காரை ஓட்டவும். நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக ஓட்டுவதற்கு மட்டுமே டாப் கியரின் உபயோகம் என்று நினைப்பது தவறு. வேகத்தைக் குறைக்கும்போது, 40 கி.மீ வரை கீழ் கியர்களுக்கு மாற்றத் தேவையில்லை. டாப் கியரைப் பயன்படுத்துவதால், எரிபொருள் செலவு கணிசமாகக் குறையும்.
ஏர் பில்டரை முறையாகச் சுத்தம் செய்யுங்கள்!
அழுக்கும் தூசும் இன்ஜினுக்குள் புகுவதை ஏர்பில்டர் தடுத்து நிறுத்துகிறது. தூசு புகுவதால் இன்ஜின் பாகங்கள் விரைவாகத் தேய்ந்துவிடுகின்றன. எரிபொருள் உபயோகமும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு சர்வீஸின்போதும் ஏர் பில்டர்களைச் சுத்தம் செய்யவும்.
பிரேக் போடும் வழக்கங்கள்!
முன்கூட்டியே திருப்பங்களையும் நிறுத்தங்களையும் எதிர்பார்ப்பதன் மூலம், தேவையில்லாமல் பிரேக் போடுவதைத் தவிர்க்கலாம். அடிக்கடி பிரேக் பிடித்துச் செல்வதால் எரிபொருள் விரயமாகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் பிரேக்கை அழுத்தும்போது, பயனுள்ள சக்தி பெருமளவில் வெப்பத்தின் மூலம் விரயமாகிறது. ஒரு நல்ல ஓட்டுநர் எப்போதுமே நிறுத்தங்களை எதிர்பார்க்கிறார்.
உங்கள் கால் கிளட்ச் மீது இருக்கக் கூடாது!
கியர்களை மாற்றும்போது மட்டுமே கிளட்ச்சை பயன்படுத்தவும். கிளட்ச்சில் கால் வைத்தவாறே காரோட்டுவதால் சக்தி இழப்பு ஏற்படுவதுடன், கிளட்ச் லைனிங்குகளும் தேய்கின்றன. ஏற்ற இறக்கங்களில் வாகனத்தை நிறுத்த வேண்டியிருந்தால், கை பிரேக்கை (ஹேண்ட் பிரேக்) பயன்படுத்தவும். மீண்டும் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது, பிரேக்கை விடுவிக்க (ரிலீஸ் செய்ய) மறவாதீர்கள். கிளட்ச்சையும் ஆக்ஸிலரேட்டரையும் அழுத்தியவாறு வைக்காதீர்கள்; இதனால் எரிபொருள் விரயமாகிறது.
உங்கள் கார் இன்ஜின் சூடேறுவதற்காகக் காத்திருக்காதீர்கள்!
அதற்குப் பதிலாக, இன்ஜின் சூடாகும் வரை கீழ் கியரில் வாகனத்தை ஓட்டவும். 5 கி.மீ அல்லது அதற்குக் குறைவான தூரம் பயணம் செய்தால் ஒரு கி.மீ-க்கான எரிபொருள் உபயோகம் இரண்டு மடங்காகிறது. எனவே, திட்டமிட்டுப் பயணம் செய்யுங்கள். குளிர்ச்சியான பகுதியாக இருந்தால், உங்கள் காரில் இன்ஜினைச் சூடாக்கும் முறையைப் பொருத்தவும். குளிர்ந்த இன்ஜினுடன் ரிவர்ஸ் எடுக்கக்கூடிய ஒரு கோணத்தில், காரை ஒருபோதும் பார்க்கிங் செய்யாதீர்கள்.
டயர்களின் காற்றழுத்தத்தைக் கவனிக்கவும்!
குறைவான அளவில் காற்று நிரப்பப்பட்ட டயர்கள், உருண்டோடும் ஆற்றலை அதிகரிக்கின்றன. இதனால், கூடுதல் எரிபொருள் செலவாகும். டயரின் காற்றழுத்தம் 25 சதவிகிதம் குறைந்தால், எரிபொருள் 5 முதல் 10 சதவிகிதம் அதிகமாவதுடன், டயரின் ஆயுட்காலத்தில் 25 சதவிகிதம் பாதிக்கும் என்பதைச் சோதனைகள் புலப்படுத்தியுள்ளன. 3 முதல் 7 சதவிகித எரிபொருள் சிக்கனத்துக்கும், டயரின் நீண்ட நாள் உழைப்புக்கும், மேலும் சுகமான பயணத்துக்கும், ரேடியல் டயர்களைப் பயன்படுத்துங்கள்.
காரை நிறுத்தியவுடன் இன்ஜினையும் நிறுத்திவிடவும்!
உங்கள் காரை எப்போதுமே ஸ்டார்ட் செய்யத் தயாராக வைத்திருக்கவும். பேட்டரி, டைனமோ, செல்ப் ஸ்டார்ட்டர், பேன் பெல்ட் ஆகியவற்றை நல்ல நிலையில் வைத்திருங்கள். இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிறுத்தவேண்டிய இடங்களில் இன்ஜினை ஆப் செய்துவிடுங்கள்.
பரிந்துரைக்கப்பட்ட இன்ஜின் ஆயிலைப் பயன்படுத்துங்கள்!
எந்த ஒரு குறிப்பிட்ட ஆயிலின் கிரேடையும் பயன்படுத்துவதற்கு முன்னர், கார் மேனுவல் (கையேடு) மற்றும் ஆயில் தயாரிப்பாளரின் பரிந்துரைகளைக் கவனித்துச் சரிபார்க்கவும். கூடுதல் பயன்களைப் பெறுவதற்கு, ஷிதிசிசி/ ஷிநிசிசி வகைக்கு சமமான மல்ட்டி கிரேடு ஆயிலைப் பயன்படுத்துங்கள். பரிந்துரைக்கப்பட்ட ஆயிலைக் காட்டிலும் மற்ற இன்ஜின் ஆயிலைப் பயன்படுத்தினால், எரிபொருள் செலவு 2 சதவிகிதம் அதிகரித்து விடும். இன்ஜின் ஆயில் மாற்றும்போது ஆயில் பில்டரையும் மாற்றுங்கள்.
உங்கள் பாதையைத் தேர்ந்தெடுங்கள்!
ஏராளமான வாகனப் போக்குவரத்து நேரம், வாகனங்களின் நெரிசல் மிக்க பாதை அல்லது அடிக்கடி நிறுத்திச் செல்ல வேண்டிய டிராபிக் போன்றவற்றால் மிதமிஞ்சிய எரிபொருள் விரயம் ஏற்படும். நிறைய வாகனங்கள் செல்லாத பாதை, சற்று நீளமாக இருந்தாலும்கூட அதைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு லிட்டருக்கும் உங்களுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும். ஏராளமான வாகனங்கள் செல்லும் நெரிசல் மிக்க பாதையில், எரிபொருள் உபயோகம் வழக்கத்தைவிட இரண்டு மடங்காகும்!.
உங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுங்கள்!
ஒரு பயணம் தொடங்குவதற்கு முன்னதாக, இரண்டு கேள்விகளுக்கு விடை காணவும் இந்தப் பயணம் உண்மையிலேயே அத்தியாவசியமானதா? இந்தப் பயணத்தை, அதே பாதையில் அமைந்த வேறு பயணங்-களோடு நான் சேர்த்திட முடியுமா?
ஏ.ஸி-யை முறையாகப் பயன்படுத்தவும்!
ஏ.ஸி சுகமான குளுமை வசதி தருகிறது என்றாலும்கூட, எரிபொருள் செலவும் அதிகரித்துவிடும். ஏ.ஸி இயங்கும்போது 20 சதவிகிதம் வரையோ அல்லது அதற்கும் அதிகமாகவோ எரிபொருள் செலவாகிறது. ஏ.ஸி-யை விவேகமான முறையில் பயன்படுத்தினால், கணிசமான எரிபொருளை மிச்சப்படுத்தலாம். எரிபொருள் சிக்கனம் மற்றும் சிறப்பான குளிர்விக்கும் வசதியைப் பெற, மறுசுழற்சி மோடில் வைத்து, ப்ளோயரை வேகமாகவைத்து, குளிர்ந்த பிறகு ப்ளோயரின் வேகத்தை ஒன்றாவது எண்ணுக்கு மாற்றிவிடவும்.
சுமைகளைக் குறைக்கவும்!
தேவையற்ற சுமைகள், எரிபொருள் உபயோகத்தை அதிகரிக்கின்றன. நகரத்தில் வாகனத்தை ஓட்டும்போது, 50 கிலோ எடை குறைப்பு, எரிபொருளில் 2 சதவிகிதம் வரை மிச்சப்படுத்தும். கார் மேலே பொருட்கள் வைப்பதற்காகப் பொருத்தப்பட்டுள்ள ஸ்டேண்ட் பிட்டிங், காற்று எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து எரிபொருள் உபயோகத்தையும் அதிகப்படுத்துகிறது.
'கார் பூல்' எனும் பயணப் பகிர்வு!
நீங்கள் செல்லும் திசையிலேயே பயணிப்பவர்களைக் கண்டறிந்து, உங்கள் காரையும் செலவுகளையும் அவர்களோடு நீங்கள் பகிர்ந்துகொள்ளலாம்.
காரைப் பராமரிக்க...
எலெக்ட்ரிகல்ஸ்
பேட்டரி டெர்மினல்கள் சுத்தமாகவும் ஒயர் இணைப்புகள் சரியாகவும் இருக்க வேண்டும்.
எலெக்ட்ரோலைட் அளவு சரியாகவும் பேட்டரி பிளேட்டுகள் அதில் முழுமையாக மூழ்கி இருக்க வேண்டும்.
எப்போதும் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகி இருக்க வேண்டும்.ஏனெனில். திறன் குறைந்த பேட்டரியால் அதிக எரிபொருள் செலவாகும் (இன்ஜின் ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் தொடர்ச்சியான கிராங்க்).
ஒயர்கள், டிஸ்ட்ரிபியூட்டருக்குச் செல்லும் கனெக்ஷன்கள், ஸ்பார்க் பிளக்குகள், கான்டாக்ட் பிரேக் பாய்ன்ட், கண்டெண்ஸர், ஸ்பார்க் பிளக் பாயின்ட் இடைவெளி என அனைத்தும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
பேன் பெல்ட் கண்டிஷனும் டென்ஷனும் சரியாக இருக்க வேண்டும்.
டைனமோவும் வோல்டேஜ் ரெகுலேட்டர்களும் சரியாக வேலை செய்கிறதா எனச் சோதிக்க வேண்டும் (பழுதடைந்த வோல்டேஜ் ரெகுலேட்டர், சார்ஜ் அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ பேட்ட-ரியைப் பழுதடையச் செய்யும்).
இன்ஜின்
ஏர் கிளீனர் சுத்தமாகவும் சரியான அளவு ஆயிலும் நிரப்பப்-பட்டிருக்க வேண்டும்.
கார்புரேட்டர் சுத்தமாகவும் சரியாகவும் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு, காற்று எரிபொருள் மிக்ஷர் சரியாக இருக்க வேண்டும்.
ஐட்லிங் வேகம் சரியாக அட்ஜஸ்ட் செய்யப்பட வேண்டும்.
ஏர் கிளீனர் பாதையில் ஏதே-னும் ஓட்டை இருந்தால் அடைக்கப்-பட்டிருக்க வேண்டும்.
ரேடியேட்டரில் கூலன்ட் அளவு சரியாக இருக்க வேண்டும்.
எக்ஸாஸ்ட் பாதையில் எந்தவித ஓட்-டையோ, அடைப்போ இருக்கக் கூடாது.
கிளட்ச் ஸ்மூத்தாகவும் சத்தம் எதுவும் இல்லாமலும் இருக்க வேண்டும்.
கியர் பாக்ஸ் ஆயில் சரியான அளவில் இருக்க வேண்டும். அதிகப்படியான சத்தமோ, கியர் மாற்று--வதில் சிக்கல்களோ இருக்கக் கூடாது.
பெட்ரோல்/ டீசல் டேங்க்
எரிபொருள் செல்லும் வழியில் ஏதேனும் ஓட்டைகள் இருக்கிறதா என்று பாருங்கள். காரில் பெட்-ரோல் வாசனை வந்தால், எங்-காவது ஒழுகுகிறதா எனச் சோதியுங்கள்.
டேங்க் மூடி வரை எரிபொருளை நிரப்பாதீர்கள்.
எரிபொருள் பம்ப்பில் பிரஷர் சரியாக இருக்கிறதா என மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சோதித்துக்கொள்ளுங்கள்.
டயர்களும் வீல்களும்
டயர்களில் எப்போதும் சரியான காற்றழுத்தம் இருக்கவேண்டும். குறைவான காற்று, மைலேஜைக் குறைக்கும்.
பட்டன்கள் இல்லாமல் தேய்ந்து-போன டயர்கள், பழுதான டயர்கள் எரிபொருள் செலவை அதிகரிக்கும். வீல் டிஸ்க்குகள் பெண்ட் இல்லாமல் சரியாக இருப்பது அவசியம்.
பிரேக்குகள்
பிரேக்குகள் இழுக்காமல்/ ஒட்டிக் கொள்ளாமல் இயங்குகிறதா என ஊர்ஜிதப்-படுத்துங்கள்.
லைனிங்குகள்/ பேட்கள், டிரம்/டிஸ்க் ஆகியவை தேய்ந்து விடவில்லை என்பதைச் சரி-பாருங்கள்.
ஸ்டீயரிங்
ஸ்டீயரிங் பாக்ஸில் உள்ள ஆயிலின் அளவை அவ்வப்போது சரிபாருங்கள்.
ஸ்டீயரிங் வீலில் அளவுக்கு அதிக-மான பிரீ பிளே இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
டை ராடு, புஷ்கள் ஆகியவை தேய்ந்திருக்கின்றனவா எனச் சோதியுங்கள்.
ரேடியேட்டர்
அடிக்கடி ரேடியேட்டரில் கூலன்ட் அளவைச் சோதிக்கவும். ரேடி-யேட்டர் அரிப்பினைத் தடுக்க, முடிந்த-வரை கூலன்ட் மற்றும் டிஸ்டில்டு வாட்டர் மட்டுமே பயன்படுத்துங்கள்.
எக்ஸ்ட்ரா... ஸ்பீடு... பவரு!
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக எரிபொருளிலும் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துவிட்டன. இப்போது வரும் பெட்ரோலில் 'லெட்' நீக்கப்பட்டு 'அன்லெட்டடு' பெட்ரோலாக மாறிவிட்டது. இதிலும் எக்ஸ்ட்ரா பிரிமியம், பவர், ஸ்பீடு என விலை கூடிய வகை பெட்ரோலும் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தலாமா, இதன் நன்மை என்ன?
அன்லெட்டடு பெட்ரோலைவிட விலைக் கூடிய பெட்ரோலில் அடிட்டீவ்ஸ் என்று கூறப்படும் ரசாயனக் கலவைக் கலக்கப்படுகிறது. இன்ஜின் உள்ளே ஏற்படும் உராய்வை பெருமளவு குறைத்து, இன்ஜின் சீராக இயங்கவும், நல்ல பிக்-அப் கிடைக்கவும் இது உதவிசெய்கிறது. இதனால் அதிக மைலேஜ் கிடைக்கவும் வழி வகுக்கிறது. இந்த அடிட்டீவ்ஸில் ப்ரிக்ஷன் மாடிபையர்ஸ், டிஸ்பர்ஸன்ட், கேரியர் திரவங்கள், கரோஷன் இன்ஹிபிட்டர்ஸ் போன்ற ரசாயனப் பொருட்-கள் அடங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறையைப் போக்க வல்லவை. இது அனைத்து பெட்ரோல் வாகனங்களுக்கும் பொருந்தும்.
ப்ரிக்ஷன் மாடிபையர்ஸ் (Friction Modifiers)
உராய்வுகளே இன்ஜினின் திறனைக் குறைக்கின்றன. அந்த உராய்வுகளில் 43 சதவிகிதம் பிஸ்டன் மற்றும் 'ரிங்ஸ்' ஏரியாவில்-தான் நிகழ்கிறது. 'ப்ரிக்ஷன் மாடிபையர்ஸ்' இந்த உராய்வைக் குறைத்து இன்ஜினின் சக்தி இழப்பைத் தடுக்கிறது.
டிஸ்பர்ஸன்ட் (Dispersant)
இது கார்பன் படிதலைத் தடுத்து இன்ஜின் பகுதிகளையும் வால்வுகளையும் சுத்தப்படுத்துகிறது. அதையும் மீறி உறையும் கார்பன் துகள்களை கேரியர் திரவங்கள்(Carrier Fluids) வெளியேற்றிவிடும். இதனால் புகையின் அளவு அப்படியே குறைந்து-விடும்.
கரோஷன் இன்ஹிபிட்டர்ஸ் (Corrosion Inhibitors)
வாகனத்தின் எரிபொருள் சிஸ்டத்தில் துருப்பிடிக்க முக்கிய காரணமான ஆக்ஸிஜனையும் ஈரப்பதத்தையும் கட்டுப்படுத்தி துருப்பிடிப்பதைத் தடுத்து நிறுத்துகிறது.
('இந்தியன் ஆயில்' நிறுவனத்தின் தயாரிப்பு 'எக்ஸ்ட்ரா பிரிமியம்' என்று அழைக்கப்படுகிறது. 'பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்தின் தயாரிப்பு 'ஸ்பீடு' என்றும், 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்' நிறுவனத்தின் தயாரிப்பு 'பவர்' என்றும் அழைக்கப்படுகின்றன.)
கல்லூரிக்குள் காக்டெயில் கேள்விகள்!
காரைக் குளிப்பாட்டலாமா?
கல்லூரி மாணவர்கள் எந்த அளவுக்கு வாகனங்களின் பயன்பாடு, பராமரிப்பு, செலவு போன்ற விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என ஒரு டெஸ்ட் வைத்தோம். நமது வலையில் சிக்கியவர்கள், சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள். பார்க்கிங் ஏரியாவில் தனது பைக்குக்கு பாலீஷ் போட்டுக்கொண்டு இருந்த பாலாஜியிடம் விஷயத்தைச் சொன்னதும் உற்சாகமாகி, ''கூட்டுங்கடா மரத்தடி பஞ்சாயத்தை!'' எனக் குரல் கொடுக்க, கூடியது கும்பல்!
தாமதமாக வந்த உஷா, இதை ஓர் 'அரட்டை அரங்க' மாக நினைத்துக்கொண்டு, ''ஐயா... இந்த பைக் ஓட்டுற பசங்க இருக்காங்களே...'' என்று பேச்சை ஆரம்பிக்க, குறுக்கே புகுந்த பாலாஜி, அவருக்கு விஷயத்தைப் புரியவைத்தார். 'சரிதான். நமக்கும் இதுல எவ்வளவு அறிவு இருக்குதுன்னு பாத்துரலாமே' என அனைவரும் ஒப்புக் கொண்டனர். பல்கலைக்கழக வளாகத்தின் மரத்தடி, தற்காலிக க்விஸ் மேடை ஆனது.
''காரில் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்லும்போது, 45-55 கி.மீ வேகத்தில் செல்வதைவிட 50 சதவிகிதம் அதிகமாகச் செலவாகும். இது சரியா? தவறா?'' என்றவுடன், எல்லோரும் கோரஸாக ''தவறு'' என்று உறுதியாகச் சொல்ல... சரவணன் மட்டும், ''சரி'' என்று சரியான பதிலைச் சொன்னார். ''மச்சான், உனக்கு மட்டும் எப்படிடா தெரிஞ்சுது?'' என பாலாஜி உருக, ''மாப்ள... என்னைத் தப்பா நெனைக்காதடா... என் பைக்கை டெலிவரி எடுக்கும்போது, 'ஸ்பீடா மீட்டர்ல பச்சைக் கலரு வரைக்கும் ரொம்ப விரட்டாம ஓட்டுனீங்கன்னா, நல்ல மைலேஜ் கிடைக்கும்'னு ஷோரூம்ல சொன்னாங்க. அதை வெச்சுதான் காருக்கும் சொன்னேன்'' என தயங்கியபடி சொல்ல... ''எப்படியோ மச்சான், நம்ம மானத்தைக் காப்பாத்திட்டே'' என்றார் மனோஜ்.
''இறக்கமான சாலைகளில் வாகனத்தை நியூட்ரலிலோ அல்லது இன்ஜின் இயக்கத்தை நிறுத்திவிட்டு இறங்கினாலோ, கணிசமான எரிபொருளை மிச்சப்படுத்தலாம். சரியா, தவறா?''எனக் கேட்டதும், ''அவசரப்பட்டு ஆமான்னு சொல்லிடாதீங்க. இதுக்குள்ள ஏதோ ட்ரிக் இருக்கு. நல்ல யோசிச்சுச் சொல்லுவோம்'' எனக் குரல் கொடுத்தார் ரொனால்டு.
''நியூட்ரலிலோ இன்ஜின் ஆப் பண்ணிட்டு வந்தாலோ, நிச்சயம் ப்யூல் சேவ் ஆகுமே. இதுல என்ன ட்ரிக் இருக்கு'' என பிரபா கூற, மொத்தக் கும்பலும் அதை யோசிக்க ஆரம்பித்தது. சிலர் ''சரி'' என்றும், சிலர் ''தவறு'' என்றும் ஆளாளுக்குக் குழப்பிவிட, ''நீங்களே சொல்லிடுங்க'' என அமுதா சரண்டரானார். ''தவறு'' என்றதும் ''எப்படி?'' என மொத்தமாகக் குரல் கொடுத்தனர்.
''இறக்கமான சாலையில் நியூட்ரலில் அல்லது இன்ஜினை ஆப் செய்துவிட்டு இறங்குவதால் எரிபொருள் மிச்சமாகலாம். ஆனால், வாகனத்தின் கன்ட்ரோல் நம் கைகளில் இருக்காது. அது ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, கட்டுப்படுத்த முடிந்த வேகத்தில் கியரிலேயே இறங்கலாம். அப்போது ஆக்ஸிலரேட்டரைப் பயன்படுத்தக் கூடாது. இதன் மூலம் எரிபொருளை சேமிக்கவும் முடியும்'' என்றதும், ''ஓ... இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?'' என வியந்தனர்.
''வாகனத்தை அடிக்கடி கழுவுவதால் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும். சரியா? தவறா?'' எனக் கும்பலில் அமைதி நாயகியாகத் திகழ்ந்த ரீட்டாவைக் கேட்டோம். அவர் அதிர்ச்சியடைந்து, ஆஷாவின் உதவியை நாடினார். ''சரி'' என ஆஷா கரெக்ட்டாகப் பதிலளிக்கவும், ''ஆஷா, உனக்கே தினசரி குளிக்கிற பழக்கம் கிடையாது. இதுக்கு மட்டும் எப்படி சரியா பதில் சொல்ற'' என அப்பாவியாக ரீட்டா கேட்கவும், ''உன்கிட்ட கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னேன் பாரு, எனக்கு இது வேணும்'' எனச் செல்லமாகக் கோபித்த ஆஷா, ''அடிக்கடி சுத்தம் பண்றதால, வாகனம் துருப்பிடிக்காம நீண்ட நாள் உழைக்கும். போதுமா?'' என்று கூறிவிட்டு, சரிதானே? என்பது போல நம்மைப் பார்த்தார்.
''பைக்கில், பை-மெட்டாலிக் ஸ்பார்க் பிளக் பயன்படுத்தினால், மைலேஜ் அதிகரிக்கும் என்பது சரியா, தவறா?'' - இந்தக் கேள்வியை பைக்கை ஸ்டார்ட் செய்து விளையாடிக்கொண்டு இருந்த பாலாஜியிடம் கேட்டோம். ''பைக்கில ஸ்பார்க் பிளக் சமாசாரம் இருக்குறது மட்டும்தான் தெரியும். அதுல உள்ள வகைகள் நமக்கு எப்படித் தெரியும்? சர்வீஸ§க்கு விடும்போது அவங்களே பாத்துப்பாங்களே'' எனத் தலையைச் சொரிந்தார்.
''எல்லாம் அவங்க பாத்துப்பாங்கன்னா உன் பைக்கை நீ பார்க்க மாட்டியா?''ன்னு ஆவேசமாகக் கேட்டார் அமுதா. ''சரி, நீங்களே சொல்லிடுங்களேன்'' என்று கேட்டுக்கொண்டார் செய்யது ரிஷ்வான். ''பழைய ஸ்பார்க் பிளக்கைவிட பை-மெட்டாலிக் பிளக் உபயோகிப்பதால், 1.5 சதவிகிதம் எரிபொருள் சேமிக்கப்படுவதுடன் வெளியேறும் புகையின் அளவும் பெருமளவு குறைகிறது'' என்றோம்.
''டேய் பாலாஜி... பைக்கை சர்ருபுர்ருன்னு ஓட்டுனா மட்டும் பத்தாது. இப்படி காசைக் கரியாக்காம இருக்க என்னென்ன பண்ணணும்னு தெரிஞ்சுக்க. அடுத்த கேள்விக்காவது உருப்படியான பதிலைச் சொல்லப் பாரு'' எனச் செல்லமாக பாலாஜியின் தலையில் குட்டினார், அமுதா.
''சூட்கேஸ், பெட்டி போன்ற லக்கேஜ்களை காரின் மேற்கூரையில் வைப்பதைவிட, பின்புறமுள்ள பூட்டில் வைப்பதே சிறந்தது. இது சரியா... தவறா?' என்றவுடன், ''சரிதான் சரியான பதில்'' என்று சொன்ன பாலாஜியை ஆச்சர்யமாகப் பார்த்தார், பிரபா.
''ஆமாங்க... லக்கேஜ் எல்லாம் காருக்கு மேல வெச்சா எதிர்க்காற்றைக் கிழிச்சுக்கிட்டு போகிற காரின் ஓட்டத்தில் தொய்வு ஏற்பட்டு, மைலேஜ் குறையும்'' என சீரியஸாகப் பதில் சொல்லிவிட்டு, ''ஏய் உஷா, இறங்கி டிக்கியில உக்காரு. லக்கேஜ் எல்லாம் மேல இருந்தா காருக்கு ஆகாதாம்'' என்ற பாலாஜியை நோக்கி, உஷா கையிலிருந்த கோலா பாட்டில் பறந்தது!

No comments:

Post a Comment