Friday, 3 July 2015

மாதம் ஒரு வாகனம்: ஜீப்

ஆ ள்,அம்பு,அரிசி,பருப்பு என ஆயுதம் முதல் காகிதம் வரையிலான அனைத்து அத்தியாவசியங்களையும் ஏற்றிச் செல்வதால் ‘ஜி.பி’. (ஜெனரல் பர்ப்பஸ்) என அழைக்கப்பட்டது. பிறகு ‘ஜீப்’ என வழங்கப்படலாயிற்று. முதலில் எல்லைக் காவலுக்கு என்று புழங்கியவை, பிறகு காவல்துறைகளில் காவலர்களையும் கைதிகளையும் ஒரே நேரம் சுமந்து சென்றன. பிறகு எல்லோரும் எப்போதும் ஏறி இறங்க ஆரம்பித்தது வரலாறு!
Click to enlarge
உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறுக்கு ஜீப்பில் எப்போது செல்லலாம் என்று பேருந்து நிலையப் பக்கங்களில் விசாரித்தபோது, மத்தியானத்தில் மூணாறு செல்லும் பன்னிரண்டரை, ஒன்றரை மணி பஸ்ஸுகள் சென்ற பிறகுதான் ஜீப்பைக் கிளப்புவது வழக்கம் என்றார்கள்.
உடுமலையில் கார், ஆட்டோக்காரர்கள் தங்கள் ஸ்டாண்டுகளில், ‘எங்க ஏரியா உள்ள வராத!’ என்று கூறுவதாலோ என்னவோ கொஞ்சம் தள்ளி ஒரு சந்தில், ஜீப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். தங்கள் வாகனம் நிற்குமிடத்தை மலைமக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
பத்துக்கும் மேற்பட்ட வண்டிகளை நிர்வகித்துக்கொண்டு இருந்த கண்ணம்மா, இப்போது நான்கைந்து வண்டிகளை மட்டுமே பார்த்துக்கொள்ள முடிகிறது என்கிறார். ஜீப்புகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதற்கு மலைவழித்தடத்தில் பேருந்துகள் அதிகரித்திருப்பதும் ஒரு காரணம்.
கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையில் ‘எல்லையில்லா பிரச்னைகளுடன்’ அவரது வண்டிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. மக்களின் தேவைகளையும் எவ்வளவோ பாக்கியுள்ள காரியங்களையும் கொண்டு ஓடுகிறது ஒவ்வொரு வண்டியும்!
உடுமலையிலிருந்து மூணாறுக்கு நேரடியாக ஜீப்புகள் இல்லை. மறையூர் வரை ஒரு ஜீப், மறையூரிலிருந்து மற்றொரு ஜீப்.
மறையூர் ஜீப்புக்கு வந்தபோது அதன் கூரையின் மேல் பைகள், சூட்கேஸ்கள், கூடைகள் ஆகியவற்றை நைலான் கயிறால் கட்டிக்கொண்டு இருந்தார்கள். மலை ஏறுவது என்றால் இருமுடி கட்டுவது தவிர்க்க முடியாதது போலும். சீக்கிரத்தில் அந்த ஜீப் ஆட்களால் நிரம்பிவிடுகிறது. நிர்மால்யத்தைப் பெயராகச் சூடிய வண்டி, எரிதிரவத்துக்காக உடுமலைப்பேட்டையின் கடைசியில் போடிப்பட்டியில் நிற்கிறது. அதைவிட்டால் அடுத்து 40 கி.மீ. தாண்டி ஜீப்பின் அடைவிடமான மறையூரில்தான் பெட்ரோல் பங்க். சுற்றுலாத் தலமாக வளர்ந்துகொண்டு இருக்கிற மறையூர் ஹில் ஸ்டேஷனை, ‘கள்’ ஸ்டேஷனாகவும் அந்த வட்டாரத்தில் பலர் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
ஜீப், மலைவனப் பகுதியைத் தொடுகிறது. மலைத் தாவரங்களை ஊடுருவி வரும் தென்றல் முகத்தில் மோதுகிறது. காடுகள், மலைகள் இறைவன் கலைகள். மங்கை மோகக் கூந்தலைப் போல வளைந்து நெளிந்து செல்லும் பாதை. கூந்தல் நிற தார்ச் சாலையில் வளைவுகளுக்கு ஹேர்பின் பெண்டுகள் என்று பெயர்.
வளைவுகளைத் தாண்டி குறுகிய மேல்நோக்கிய பாதைகளில் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் கட்டப்படாத இடங்களில் விளிம்புகளின் கீழ் பள்ளத்தாக்குகள். ‘பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்?’ என்கிற கண்ணதாசனின் வரி, பயணம் முழுக்கத் தொடர்ந்தே வருகிறது. விளிம்புகளில் தவறினால் ஸ்பரிசித்தவாறே கீழே கொண்டுபோக முள்ளும் மலரும் மரணமும் காத்திருக்கின்றன.
ஜீப், மலை மாசாணியம்மன் கோயில் பகுதியைக் கடக்கிறபோது ஓட்டுநர் நாகராஜ் மாசாணியாத்தாளுக்கு ஒரு வணக்கம் வைக்கிறார். ஆனைமலையிலிருந்து கோபித்துக்கொண்டு வந்து இந்தக் காடுறைத் தெய்வம் இங்கே செயல்படுவதாக தற்கால ஐதீகம்.
குறிச்சிக்கோட்டையையும் மானுப்பட்டியையும் கடந்தபோது ‘ஒம்பதாறு’ வருகிறது. ஒம்பதாறு என்கிற பெயரைக் கேட்டதும் மூணாறு போவதற்குள் நிச்சயமாக ‘ஆறாறு’ என்று ஒரு இடம் வரும் என்று நம்பி மற்றவர்களிடம் கேட்டபோது, ‘அப்படி ஒரு இடம் கிடையாது’ என்றார்கள். ‘என் கணிதம்’ தொடர்ந்து தோல்வியடைவதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே சின்னார் கடந்ததும் மலை உயரமும் மலையாளமும் தொடங்குகிறது.
மாநில எல்லையாதலால் காவல் சாவடி, சுங்கச் சாவடி ஆகியன உள்ளன. இது தவிர்த்து வனச் சாவடி. சோதனை மேல் சோதனை. நிறுத்திவைக்கப்பட்ட வண்டிகளின் மேற்கூரைகளின் மீது குரங்குகள் தாவி உணவுப் பொருட்களைத் தேடுகின்றன. ‘நிர்மால்ய’ வண்டியிலிருந்து திராட்சைக் குலைகள் பறிபோகின்றன. குலைகளைத் தாவிய ஒரு குரங்கு, குட்டிகளைத் தாவிய ஒரு குரங்கு, கிளைகளைத் தாவும் ஒரு குரங்கு என அந்த இடம் கிஷ்கிந்தையைப் போலக் காட்சியளிக்கிறது.
உள்காட்டுப் பகுதிகள் என எடுத்துக்கொண்டால் செந்நாய், சிறுத்தை, காட்டுப்பன்றி, மான்கள் என விலங்கினங்கள் தென்படுமாம். காடுகளில் தண்ணீர் தீர்கிறபோது அமராவதி அணையைத் தேடி இவைச் செல்லும்.
பயணப் பாதைகளில் குறிப்பாக காலை, மாலை நேரங்களில் தென்படுவன யானைகள். சாலையோரங்களுக்கு வருவதை காலை மற்றும் மாலை நேரங்களுக்கென ஒதுக்கி வைத்திருக்கும் அவை, நண்பகலில் மனிதர்களுக்கு ஆயிரத்தியெட்டு ஜோலிகள் இருக்கக்கூடும் என்று கருதுகின்றன. ஊருக்கு மேலாக ஒன்றும் ஊருக்குள் ஒன்றுமாக இரட்டைப் பாதைகள் போகிற ஊர்களில் ஏதாவது ஓர் இடத்தில் யானைகள் நின்றால், அந்த ஊர்க்காரர்களே வந்து, ‘‘அந்தப் பாதையில் போங்கள்!’’ என்று வாகனங்களை மடைமாற்றி விடுகிறார்கள்.
வண்டிகளுக்கு அருகிலோ எதிரிலோ அவை வந்துவிட்டால் ஒலி எழுப்பி வழி கேட்கிற வேலையெல்லாம் வைத்துக்கொள்ளக் கூடாது. தேவர் பிலிம்ஸ் படங்களில் முட்டை வடிவ பிரேமுக்குள் பிளிறி வந்து துதிக்கையைத் தூக்குகிற யானையைப் பார்க்க நினைக்கிறவர்கள் அந்த மாதிரியான காரியங்களைச் செய்யலாம்.
வண்டி மறையூரை அடைந்தபோது அடுத்த ஒரு ஜீப்பில் இருமுடிக்கட்டுகள் கட்டப்படுகின்றன.
தோழர் ராபர்ட் மாணிக்கம், ‘‘இதுதான் ஜீப்புகளின் சௌகரியம் பார்த்துக்கொள்ளுங்கள். பஸ்ஸை விட்டுவிட்டால் நாங்கள் அடுத்த வண்டிக்காக ஒரு நாள்கூட காத்திருக்க வேண்டிவரும். அடுத்தடுத்து நம்ம ஆட்கள் இருப்பாங்க அப்படின்னு நம்பி வந்து இப்படிப் போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்’’ என்கிறார்.
பஸ்ஸிலேயே சென்று பஸ்ஸிலேயே திரும்புவதற்கான நேரங்களையும் பாதைகளையும் இந்த மலைப் பகுதிகள் பெற்றிருக்கவில்லை என உணர்த்துகிறார்.
ஜீப்புகள் நிற்கிற ஸ்டாண்டைப் புகைப்படமெடுக்கும்போது ஒரு இளைஞர், ‘‘இந்த வாரத்துல மட்டும் ரெண்டு தடவ ஃபைன் கட்டியிருக்கிறேன்’’ என்று ரசீதுகளைக் காட்டுகிறார். கூடுதலாக, ‘‘சின்னார் தாண்டி கீழே போகவே பயமாயிருக்குதுங்க...’’ என்று தன் வாழ்வுநிலைக் கஷ்டத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.
முன் கண்ணாடியின் மேலாக உள்ளங்கை அகல பார்டர் வெட்டின் நடுவில் வெவ்வேறு பெயர்கள் எழுதிய ஜீப்புகள் மறையூருக்கும் மூணாறுக்குமாகச் சென்று வருகின்றன. கேரளத்தில் பஸ்களின் பெயரை பெண் குழந்தைகளுக்கு வைத்திருப்பார்கள். பெண் குழந்தைகளின் பெயரை பஸ்களுக்கு வைத்திருப்பார்கள் என்று அவதானித்துப் பதிவு செய்திருக்கிறார் அருந்ததிராய். அவரது இந்தப் பார்வைக்கு ஜீப்புகளும் விதிவிலக்கல்ல என்று அவற்றின் பெயர்களைப் பார்த்தால் தெரியவருகிறது.
இந்த ஜீப் பயணத்தை உல்லாசப் பயணமாக அனுபவிக்க வேண்டுமென்றால், டிரைவர் தவிர இரண்டு மூன்று பேர் மட்டும் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். இங்கே நிகழ்ந்துகொண்டு இருப்பது வாழ்வுத் தேவைகளின் அத்தியாவசியப் பயணம். மலைப் பகுதியின் ஏதோ ஓர் இடத்தில் கைகாட்டி நிற்பவரை விட்டுவிட்டுப் போய்விட முடியாது.
பனியையும் பனிக்குளிரையும் எல்லா மாதத்திலும் தக்க வைத்துக்கொண்டுள்ள அந்தப் பகுதியின் ஜீப் பயணங்கள் வெப்பம் மிகுந்ததாகவே இருக்கின்றன. பள்ளிக்கூடத்துக்கு சொல்லித் தரப்போகும் கன்யாஸ்திரீ, வெளியுலகத்துக்கு ஒரு சிசுவை அள்ளித்தரப் போகும் கர்ப்பவதி, அரசு பஸ்ஸின் பணிமனையை நோக்கி பஸ் டிரைவர், தேயிலைத் தோட்டத் தொழிலாளி, சமையற் கலைஞர் என விதவிதமானவர்களை ஏற்றிச் சென்று அவரவர் இடங்களில் சேர்க்கவேண்டியுள்ளது.
தொடர்ந்து ஜீப் ஏறுகிறவர்களைப் பற்றி ஓட்டுநர்களும் ஓட்டுநர் மற்றும் ஓனர்களைப் பற்றி பயணிகளும், குடும்ப விவகாரம் வரை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
‘’உன் சம்சாரம் பிரசவத்துக்குப் போனது வந்திருச்சா?’’ என்கிற ரீதியில் கேள்வியும் பதில்களும் அவர்களிடையே சகஜம்.
தங்களது உத்தேசமான நாற்பது கி. மீ. பாதையில் தொம்மச்சன் வீடு எங்கே இருக்கிறது என்றும் சீதரன் மாஸ்டர் வீடு எங்கே இருக்கிறது என்றும் ஜீப் ஓட்டிகள் அறிவார்கள்.
பயணத்தில் எனது அருகில் கையிற்பேரனுமாக ஒரு மூதாட்டி அமர்ந்து வந்தார். ஒரு விபத்துக்குப் பிறகு கணவரின் கால்கள் செயல் இழந்ததும் கணவர் பார்த்த விளக்குமாறு வியாபாரத்தை பதினெட்டு ஆண்டுகள் செய்தவர். ‘‘ஜீப்பில் யாரும் பீடி குடிக்கறதில்லியா?’’ என்று கேட்டால், ‘‘இப்பல்லாம் இல்ல கண்ணு’’ என்று சந்தோஷமாகச் சொல்கிறார். குடித்துவிட்டு வருகிறவர்களைப் பற்றிக் கேட்டால், ‘‘வரும் போதே குடிச்சுட்டு வந்துருவாங்க... வண்டியில யாரும் குடிக்கறதில்ல. பாவப்பட்டதுக...’’ என்றும் சந்தோஷமாகவே சொல்கிறார்.
மலையிருட்டு கட்டி மின்மினிப் பூச்சிகள் நட்சத்திரிக்கிற நேரத்தில், மூணாறு வந்தடைந்து உடன் வந்த பயணிகளைப் பிரிகிறபோது, தோழர் ராபர்ட் ‘தொழிலாளர் நலன் கருதி ஒரு வேண்டுகோள்’ என்கிறார்.
‘‘இங்கே மொத்தம் இருபத்தி நாலு எஸ்டேட். நிர்வாக வசதிக்காக ஏழு பிரிவுகளில் அடக்கியிருக்கிறார்கள். நிர்வாக வசதிக்காக சிந்திக்கிறவர்கள் வேலை பார்க்கிறவர்களுக்காகவும் ஒன்றைச் சிந்திக்கலாம். இங்குள்ள எஸ்டேட்களில் பணிபுரிகிறவர்களுக்கு சனிக்கிழமை மாலை, ஞாயிற்றுக்கிழமை என ஒன்றரை நாட்கள் மட்டுமே விடுமுறை. அதில்தான் அவர்கள் உப்பு புளி மிளகாய் வாங்க வேண்டும். அந்தக் குறுகிய நேரத்தைக் கணக்கில்கொண்டு ஊழியர்களுக்கு வாகன ஏற்பாடு ஒன்றை நிர்வாகத்தினரே செய்துகொடுத்தால், அது மகிழ்ச்சி தருகிற காரியமாயிருக்கும்.’’
தேயிலைச் செடிகள் காற்றசைவுக்குள்ளாக ஆழ்ந்த கேள்விகளைப் பொதித்து வைத்திருப்பதான தோற்றம் தர, பயணம் இப்போது சமவெளி நோக்கித் திரும்புகிறது.
சோதனைச் சாவடிகளின் சிவப்பும் வெள்ளையுமான கம்புகள் குறுக்கிடுவதும் ஆகாயத்தை நோக்கி உயர்ந்து வழிவிடுவதுமாக இருக்கின்றன. ஊடுருவிச் செல்லும் பாதைகளின் மேல் யாராவது எல்லைக் கோடுகளை வரைய முடியுமா என யோசிக்கிறேன்!

No comments:

Post a Comment