Saturday, 11 July 2015

மாருதி 800 Vs டாடா நானோ: எதை வாங்குவது லாபம்?

ஒரு தனி மனிதனின் கனவாக உருவான கார், இன்று நாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு கார் கனவுகளை விதைத்திருக்கிறது. உருவம் சிறிது என்றாலும் இந்திய கார் சந்தையை பன்மடங்கு பெரிதாக்கும் மந்திரக்கோலாக நானோ இன்று உருவெடுத்து வருகிறது!
ஷாப்பிங், ஸ்கூல், ஆபீஸ் என சிட்டிக்குள் சுழன்று சுழன்று சுற்றி வர வசதியாக சிறிய காராகவும், அதேசமயம் விலை குறைவான காராகவும் இருந்து வந்தது மாருதி 800. இப்போது இதைவிட விலை குறைவாக, அதே சமயம் மாருதி 800--ஐவிட அதிக இட வசதியுடன் வெளி-வந்திருக்கிறது டாடா நானோ. ஆனால், 25 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கை பெற்ற காரான மாருதி 800-ஐ இது வீழ்த்-தும் அளவுக்குத் தரமானதா? நம்பகத்-தன்மை வாய்ந்ததா? என்ற கேள்விக்கு இன்னமும் பலரிடம் தெளிவாக விடையில்லை. 'மாருதி 800 - டாடா நானோ' இந்த இரண்டில் எந்த காரை வாங்கலாம்? எதை வாங்குவது லாபம்?
லட்ச ரூபாய் இல்லை!
ஒரு லட்ச ரூபாய் கார் என்பதை நம் மனதில் இருந்து அழித்துவிட்டுத்தான் டாடா நானோவைப் பார்க்க வேண்டும். இது, ரத்தன் டாடா சொன்னது போல் ஒரு லட்ச ரூபாய் கார்தான் என்றாலும், ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாயை நெருங்கிவிடுகிறது. மேலும், இப்போதைய சூழ்நிலையில் ஏ.ஸி மற்றும் முக்கியமான வசதிகள் எதுவும் இல்லாத காரை வாங்குவது என்பது அர்த்தமற்றது. அதனால், இங்கே டெஸ்ட் செய்யப்பட்டு இருப்பது, டாடா நானோவின் விலை உயர்ந்த மாடலான LX மாடல். அதேபோல், மாருதி 800 காரிலும் ஏ.ஸி மாடலே இங்கே டெஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது.
ஸ்டைல் மற்றும் டிசைன்
இந்தியச் சாலைகள் இதுவரை பார்த்திராத அசத்தலான புதிய வடிவமைப்புடன் வெளிவந்திருக்கிறது நானோ. உலகிலேயே விலை குறைவான கார்தான் என்றாலும், பின்பக்க ரூஃப் ஸ்பாய்லர், போர்ஷே, ஃபெராரி கார்களில் இருப்பது போன்று இன்ஜினுக்கு பக்கவாட்டு ஏர் வென்ட்டுகள், சென்ட்ரல் எக்ஸாஸ்ட் பைப், பனி விளக்குகள் என சொகுசு கார்களில் இருக்கும் அம்சங்கள் நானோவில் இடம் பிடித்து இருக்கின்றன. மற்ற சிறிய கார்களைவிட இது உயரமாகவும் இருக்கிறது. இருப்பினும், காரின் பின்பக்கம் வழக்கமான டாடா கார்களைப் போன்றே இருக்கிறது.
டிசைனில் 25 வருடம் பழைமையான மாருதி 800, நிச்சயம் டாடா நானோவை வீழ்த்த முடியாது. மாருதி 800-ல் புதுமை என்று எதையும் சொல்வதற்கில்லை. பனி விளக்குகள் இருக்கும் இடத்தில் இண்டிகேட்டர்கள் மட்டுமே உள்ளன. மாருதி 800 காரை உருவாக்குவதற்கான 'ஷீட் மெட்டல் டை' பழையதாகி வருவதால், இப்போது வரும் மாருதி 800-ன் 'ஃபிட் அண்டு ஃபினிஷ்' சிறப்பாக இல்லை. பேனல்களுக்கு இடையே அதிக இடைவெளி இருக்கின்றன. செவ்வக வடிவில் இருக்கும் 800-ன் பின்பக்கம் பார்ப்பதற்கு வித்தியாசமாக இல்லை என்றாலும், குறை சொல்லக்கூடிய அளவுக்கு இல்லை.
இரண்டு கார்களிலுமே வலது பக்கம் மட்டுமே பக்கவாட்டுக் கண்ணாடி உள்ளது. 800-ல் முன்பக்கம் பானெட்டில் இருக்கும் இன்ஜின், டாடா நானோவில் பின்பக்க இருக்கைகளுக்குக் கீழே உள்ளது.
உள்ளே... உள்ளே..!
இரண்டுமே இந்தியாவின் மிக மிக விலை குறைவான கார்கள் என்பதால், பெரிய வசதிகள் எதையும் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும், டாடா நானோவின் விலை அதிகமான LX வேரியன்ட், மாருதி 800 ஏ.ஸி மாடலை-விட அதிக வசதிகளைக் கொண்டு இருக்கிறது. அதேசமயம், விலையும் குறைவு. கப் ஹோல்டர், பனி விளக்கு-கள், டிஜிட்டல் டிரிப் மீட்டர், முன்பக்க பவர் விண்டோஸ் வசதிகளைக் கொண்டுள்ளது நானோ. இதில், ஏ.ஸி-யைத் தவிர வேறு எந்த வசதியும் மாருதி 800-ல் கிடையாது. ஃபிட் அண்டு ஃபினிஷ் மற்றும் பிளாஸ்டிக் பாகங்களின் தரம் இரண்டிலுமே ரொம்ப சுமார்!
Click to enlarge
மாருதி 800-க்குள் வசதியாக உட்கார்ந்து ஸ்டீயரிங்கைப் பிடிப்பதற்குள் பல உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இதற்கு எதிர்மாறாக உள்ளது டாடா நானோ. இதில் டிரைவிங் பொசிஷன் சிறப்பாக இருக்கிறது. 'மாருதி 800-ஐவிட டாடா நானோ சூப்பர்' என்று சொல்லக்கூடிய இன்னொரு விஷயம், காருக்குள்ளே போய் வருவது மிகவும் சுலபம். இது வயதானவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
மாருதி 800-ன் உள்ளே உட்கார்ந்ததும் முதலில் நம்மைக் கவர்வது, சாலையைத் தெளிவாகப் பார்த்து ஓட்டக்கூடிய அளவுக்கு டிரைவர் சீட் இருப்பதுதான். ஆனால், இட நெருக்கடி மிகவும் அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் உயரமானவர்கள் இதில் உட்காருவது மிகவும் சிரமம். ஆனால், டாடா நானோவில் சாலையைத் தெளிவாகப் பார்த்து ஓட்ட முடிகிறது என்பதோடு, இட நெருக்கடியும் கிடையாது. ஆனால், நானோவில் அகலமாக இருக்கும் 'ஏ' பில்லர், வளைவுகளில் திரும்பும்போது சாலையை மறைக்கிறது. உள்பக்க அளவுகளில் 800-க்கும், நானோவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்றாலும், இருக்கும் இடத்தைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறது டாடா. சொல்லப் போனால், ஹ§ண்டாய் ஐ-10 அளவுக்கு டாடா நானோவில் இடவசதி சிறப்பாக இருக்கிறது. கால்களை நீட்டி மடக்கி உட்காரவும், ஆறடி உயரம் கொண்டவரும் தலை இடிக்காத வகையில் உட்காரும் அளவுக்கு, மாருதி 800-ஐவிட டாடா நானோவில் இடவசதி அதிகம்.
மாருதி 800-ன் 82 சிசி கம்ப்ரஸர் ஏ.ஸி, காருக்குள் ஓரளவுக்கு கூலிங்கைத் தருகிறது. ஆனால், டாடா நானோவின் ஏ.ஸி, வெறும் 60 சிசி கம்ப்ரஸரைக் கொண்டதுதான் என்பதால், பின்பக்க இருக்கைகளுக்குப் போதுமான கூலிங்கைத் தரவில்லை. மேலும், பின்பக்க இருக்கைகளுக்குக் கீழே இன்ஜின் இருப்பதால், இன்ஜின் சூடு சீட் வரை வருகிறது.
டாடா நானோவில் பின் பக்கத்தைத் திறக்க முடியாது. பின் சீட்டுக்குப் பின்னால் மூன்று பைகளை வைத்துக்கொள்ளும் அளவுக்கு (80 லிட்டர்) இடவசதி இருக்கிறது. ஆனால், மாருதி 800-ன் டிக்கி 160 லிட்டர் கொண்டது என்பதால், டாடா நானோவைவிட இரண்டு மடங்கு பொருட்களை வைத்துக்கொள்ளலாம்.
பாதுகாப்புதான் இரண்டு கார்களிலும் முக்கியமான ஒன்று. இரண்டு கார்களிலுமே ஏபிஸ் பிரேக்கோ, காற்றுப் பைகளோ கிடையாது. மாருதி 800 காரில் முன் பக்கம் டிஸ்க் பிரேக் இருக்கின்றன. மேலும், இதில் கொலாப்ஸிபிள் ஸ்டீயரிங் உள்ளது. டாடா நானோ 'க்ராஷ் டெஸ்ட்' உள்ளிட்ட பல பாதுகாப்பு சோதனை-களில் வெற்றி பெற்ற பிறகு விற்பனைக்கு வந்திருக்கிறது. மேலும், பெரிய வகை கார்களில் இருக்கும் ஒரு வசதியான, 'விபத்து ஏற்பட்டால், உடனே இன்ஜினுக்குச் செல்லும் பெட்ரோலை நிறுத்தும்' தொழில்நுட்பமும் இதில் உள்ளது. ஆனால், முன்பக்கம் பெட்ரோல் டேங்க் இருப்பது சற்று பயத்தையே ஏற்படுத்துகிறது.
இன்ஜின், கியர் பாக்ஸ் மற்றும் பர்ஃபாமென்ஸ்
3 சிலிண்டர், 6 வால்வு, முன்பக்க இன்ஜின், முன் வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது மாருதி 800. இது 796 சிசி திறனைக்கொண்டது. 5000 ஆர்பிஎம்மில் 37 bhp சக்தியும், 2500 ஆர்பிஎம்-மில் 6.01 kgm டார்க்கும் கொண்டுள்ளது. இதன் கம்ப்ரஷன் ரேஷியோ 8.81. பவர் டு வெயிட் ரேஷியோ ஒரு டன் எடைக்கு 55.63 bhp. இது நான்கு ஸ்பீட் கியர் பாக்ஸைக் கொண்டுள்ளது.
2 சிலிண்டர், 4 வால்வு, பின்பக்க இன்ஜின், பின் வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொண்டிருக்கிறது டாடா நானோ. இது 624 சிசி திறனைக்கொண்டது. பின்பக்க இன்ஜின், பின் வீல் டிரைவ் சிஸ்டத்தைக் கொண்டிருப்பதுதான் மாருதி 800-க்கும் டாடா நானோவுக்கும் இடையிலான மிகப் பெரிய வித்தியாசம். நானோவின் இன்ஜின் 5250 ஆர்பிஎம்-மில் 35 bhp சக்தியும், 4000 ஆர்பிஎம்-மில் 4.9 kgm டார்க்கையும் கொண்டுள்ளது. இதன் கம்ப்ரஷன் ரேஷியோ 9.71. பவர் டு வெயிட் ரேஷியோ ஒரு டன் எடைக்கு 58.3 bhp. டாடா நானோவில் இருப்பது நான்கு ஸ்பீட் கியர் பாக்ஸ்.
டாடா நானோவை ஸ்டார்ட் செய்தவுடன்... கார் சத்தத்துக்குப் பதில் 2 சிலிண்டர் மோட்டார் சைக்கிள் போன்ற சத்தத்தையே எழுப்புகிறது. மேலும், ஸ்டார்ட் செய்ததும் சிறிய அதிர்வுகளையும் கதவுகளில் உணர முடிகிறது.
மாருதி 800 காருடன் ஒப்பிடும்போது டாடா நானோவில் ஸ்டீயரிங் வீலும், கியர் லீவரும் உபயோகப்படுத்துவதற்குச் சிறப்பாக உள்ளன.
மாருதி 800-ஐவிட சிறிய இன்ஜின்தான் என்றாலும், டாடா நானோ, மாருதியின் பர்ஃபாமென்ஸ§டன் போட்டி போடுகிறது. 0-60 கி.மீ வேகத்தை மாருதி 8.09 விநாடிகளில் கடந்துவிடுகிறது. இதே வேகத்தை டாடா நானோ அடைய 9.13 விநாடிகள் எடுத்துக்கொள்கிறது. இது மாருதி 800-ஐவிட சுமார் ஒரு விநாடிதான் அதிகம். ஆனால், 0-100 கி.மீ வேகத்தை 25.15 விநாடிகளில் கடந்துவிடுகிறது மாருதி 800. டாடா நானோவோ 29.78 விநாடிகள் அதாவது, கிட்டத்தட்ட ஐந்து விநாடிகள் அதிகம் எடுக்கிறது. மாருதி 800-ன் அதிகபட்ச வேகம் மணிக்கு 132 கி.மீ. ஆனால், டாடா நானோ மணிக்கு 105 கி.மீ-க்கு மேல் போகாது. இந்த வேகத்தைத் தாண்டினால், பெட்ரோல் சப்ளை கட் ஆகிவிடும். ஆனால், அதுவரை மாருதி 800-ன் பர்ஃபாமென்ஸ§க்கு நன்றாகவே ஈடுகொடுக்கிறது டாடா நானோ.
கையாளுமை மற்றும் ஓட்டுதல்
'டாடா நானோ ஓட்டுவதற்கு எப்படி இருக்கிறது?' என்பதுதான் எல்லோருடைய கேள்வியும். நகருக்குள் ஓட்டுவதற்கு மிகவும் சிறப்பாகவே இருக்கிறது நானோ! ஆனால், கரடு முரடான, மிகவும் மோசமான சாலைகளில் பயணிக்கும்போது ஷாக் அப்ஸார்பரின் சத்தம் அதிகமாகக் கேட்கிறது.
நகருக்குள் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கும், நெடுஞ்சாலைகளில் வேகமாகத் திருப்புவதற்கும் டாடா நானோவே சிறப்பாக இருக்கிறது. விலை அதிகமான கார்களில் இருக்கக்கூடிய 'இண்டிபெண்டன்ட் சஸ்பென்ஷன்' டாடா நானோவில் இருப்பதே ஹேண்ட்லிங் சிறப்பாக இருப்பதற்குக் காரணம். மாருதி 800-ல் இது இல்லை. ஆனால், ஓட்டுதல் தரத்தில் 800 காரே சிறப்பாக இருக்கிறது. அதாவது, மேடு பள்ளங்களில் பயணிக்கும்போது அதிக அலுங்கல் குலுங்கல்கள் இல்லை.
யாஷ்னி, சென்னை.
காலேஜ் டு வீடு என சிட்டிக்குள் ரவுண்டு அடிக்க நானோ சூப்பர் சாய்ஸாகத் தெரிகிறது. ஸ்கூட்டருடன் ஒப்பிடும்போது கார் என்பது சேஃப்ட்டி. அதனால், ஒன்றரை லட்ச ரூபாய் என்பது பெரிய பணம் இல்லை. ஆனால், கார் வாங்க ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் ரொம்ப ஓவர். இப்போதெல்லாம் புதிதாக வாங்கும் காரை மொத்தமே மூன்று ஆண்டுகள்தான் வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அதை விற்றுவிட்டு, புதிதாக வரும் மாடலைத் தேடி போய்விடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், காருக்காகக் காத்திருப்பது என்பது, கார் வாங்கும் நோக்கத்தையே அர்த்தம் அற்றதாக்கிவிடும். வெயிட்டிங் பீரியட் மட்டும் இல்லையென்றால், நிச்சயம் நான் நானோ வாங்குவேன்!
கோவிந்தராஜ், கோயம்புத்தூர்.
மோட்டார் விகடனைப் படிச்ச பிறகுதான் நானோ வாங்குற ஐடியாவே எங்களுக்கு வந்துச்சு. ரெண்டு பெரியவங்க, ரெண்டு குழந்தைங்கன்னு அளவா இருக்கிற எங்க ஃபேமிலிக்கு, க்யூட்டான காரா நானோ இருக்கும். அதனால புக் பண்ற முடிவுக்கு உடனே வந்துட்டேன்!
கோகில ராணி, திருநெல்வேலி
நானோ காரைப் பார்த்ததும் பிடிச்சுப் போனதால், உடனே புக் பண்ணிட்டேன். எனக்கு மட்டுமில்லாம, என்னோட பொண்ணுக்கும் கணவருக்கும்கூட கார் ரொம்பப் பிடிச்சிருக்கு.
மருதாச்சலம், ஈரோடு.
நானோ கார் வருவதாக ஆரம்பத்தில் விளம்பரம் செய்ததில் இருந்தே நானோ கார் பிரியனாகிவிட்டேன். அதனால், கார் வந்தவுடன் புக் செய்துவிட்டேன். நானோவில் என்னைக் கவர்ந்த விஷயம் இட வசதிதான்!
கண்ணன், சென்னை.
எங்கள் குடும்பம் மிகவும் பெரியது. என் குடும்பத்துக்கு இது செட் ஆகாது. ஆனால், பிசினஸ் விஷயங்களுக்காக, சிட்டிக்குள் தனியாகச் சுற்றி வர இதுதான் பெஸ்ட்! நானோவில் சொல்லப்படும் குறைகள் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை. உலகின் விலை குறைவான காரில் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? நிச்சயம் நானோ வாங்குவது பயனுள்ளதாகத்தான் இருக்கும்!
உத்தமன், மதுரை.
மதுரைக்கு கார் வந்த உடனே புக் பண்ணிட்டேன். வீட்டு உபயோகத்துக்காகத்தான் நானோவை வாங்குறேன். கார் சின்னதாக இருக்கிறதால, டிராஃபிக்குல வளைச்சு நெளிச்சு ஓட்டலாம். இந்த கார்ல வேற பிரச்னை இருக்காதுன்னு டாடாவை நம்பி வாங்குறேன்!
உமா செல்வராஜ், திருநெல்வேலி.
வீட்டுல நான், வீட்டுக்காரர், அத்தை, மாமான்னு நாலு பேர் இருக்கோம். கோயிலுக்கு, உறவுக்காரங்க வீட்டுக்கு குடும்பத்தோடு போறதுக்கு ஆட்டோவில்தான் போறோம். இந்த கார் குறைஞ்ச விலையில் கிடைக்கிறதால, துணிஞ்சு வாங்கலாம்னு புக் பண்ணிட்டோம்!
நிர்மல், ஃப்ரான்சிஸ், திருச்சி.
தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு இண்டிகா போன்று இருக்கிறது. டெஸ்ட் டிரைவ் தந்தால், காரின் சஸ்பென்ஷன், இன்ஜின் சத்தம் ஆகியவற்றை டெஸ்ட் செய்து பார்த்திருக்க முடியும். குலுக்கல்முறை இல்லாமல், பணம் கட்டியதும் கார் கொடுத்தால் நன்றாக இருக்கும்!
பக்தவத்சலம், கோயம்புத்தூர்.
தோற்றம், விலை எல்லாமே 'நீட்டா' இருக்கிறதால, நானோ எங்களுக்கு டபுள் ஓகேதான். குறைந்த விலையில அதிகபட்ச வசதிகளோட புது கார் கிடைக்கிறப்ப மிஸ் பண்ண யாருக்குத்தான் மனசு வரும்?!
யுவராஜ், சென்னை.
நான் பல்ஸர் பைக் வைத்திருக்கிறேன். காரிலும் விலை உயர்ந்த காரைத்தான் வாங்குவேன். என்னுடைய தேவை. ஸ்பீடாகப் போகணும். அதனால், நானோ என்னுடைய சாய்ஸ் இல்லை!
முத்துலாஸ், திருச்சி.
எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் உள்ளோம். அனைவரும் அமர்ந்து செல்லும்படியான வடிவமைப்பு மகிழ்ச்சியாக உள்ளது. குறைந்த விலையே நாங்கள் நானோவைப் பதிவு செய்யத் தூண்டுதலாக இருந்தது! 

மாருதி 800-ல் இன்ஜினுக்-கென்று தனியாக இடம் இருப்பதால் அதிர்வுகளோ, இன்ஜின் சத்தமோ காருக்குள் அதிகம் இல்லை. ஆனால், டாடா நானோவில் சீட்டுக்குக் கீழே இருப்பதால், இன்ஜின் சத்தத்தைக் காருக்குள் கொண்டு வருகிறது.
ஸ்டீயரிங், நானோவின் மிகப் பெரிய பலம். மாருதி 800-லும் இதே 'ரேக் அண்டு பினியன்' ஸ்டீயரிங்தான் என்றாலும், நானோவில் செட்-அப் சிறப்பாக இருக்கிறது. இதனால், வேகமாகப் போகும்போதும் நல்ல ஃபீல் கிடைக்கிறது. இரண்டு கார்களிலுமே பவர் ஸ்டீயரிங் இல்லை. ஆனாலும், குறைந்த எடை காரணமாக பவர் ஸ்டீயரிங் இல்லாதது ஒரு குறையாகவே தெரியவில்லை.
மாருதி 800-ஐவிட டாடா நானோவின் பிரேக் பரவாயில்லை. நானோவில் பிரேக் பூஸ்டர் இருப்பதால், ஓரளவுக்கு ஓ.கே! மாருதி 800-ல் பூஸ்டர் இல்லை. இதனால், பிரேக் பெடல் மிகவும் கடினமாக இருக்கிறது.
மைலேஜ்
இரண்டு கார்களும் சிறிய இன்ஜினும், குறைந்த எடையும் கொண்டிருப்பதால் அதிக மைலேஜ் தருகின்றன. ஆனால், இதில் வின்னர் டாடா நானோதான்! இது நகருக்குள் லிட்டருக்கு 18 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 20 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது. மாருதி 800 நகருக்குள் 12.5 கி.மீ-யும், நெடுஞ்சாலையில் 18.3 கி.மீ-யும் மைலேஜ் தருகிறது.
திரும்பிய திசை எல்லாம் நானோ மயம். பேங்க், சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என பார்க்கும் இடமெல்லாம் நானோ புக்கிங் படிவங்கள். 'புக்கிங் தொகை 2,999 ரூபாய் மட்டுமே!' என விளம்பரங்கள். ஏன், செல்போனில்கூட நானோ விளம்பரங்கள்! தமிழகத்தின் அனைத்து டாடா ஷோரூம்களிலும் மக்கள் கூட்டம். இதுதான் லட்ச ரூபாய் காரா? இதுதான் நானோவா? ஸ்பீடாப் போகுமா? என கேள்வி மழைகள்!
'கார் வாங்க அப்ளிகேஷன் ஃபார்ம், 16 நாள் புக்கிங், 60 நாள் வெயிட்டிங், குலுக்கல் முறையில் கார் ஒதுக்கீடு' என டாடாவின் திட்டங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? டாடா சொன்னது போல், நானோ உண்மையிலேயே மக்கள் காரா. நானோ வாங்கும் ஆசை வர... யார் காரணம்? என பல கேள்விகளோடு, மக்களின் மனசைப் படித்துப் பார்க்க டாடா நானோ காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, நெல்லை, நாகர்கோயில், ஓசூர் ஆகிய நகரங்கள் மட்டுமல்லாது காருக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற சேலம், நாமக்கல், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் ஆகிய ஊர்களிலும் நூற்றுக்கணக்கான கார் பிரியர்களை நமது நிருபர்கள் சந்தித்துத் திரட்டிய கருத்துக்களை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
நானோவை புக் செய்ய அதிக ஆர்வம் காட்டியது பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள்தான். ''என்னுடைய மகன் அமெரிக்காவில் இருக்கிறான். நானோ ஷோரூமுக்கு வந்ததும் ஒரு லட்ச ரூபாய் கொடுத்து புக் செய்யச் சொல்லிவிட்டான். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு என் மனைவியோடு சென்று வர நானோ சௌகரியமாக இருக்கும்'' என்றார் சென்னை வேளச்சேரியில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கண்ணன்.
''எனக்கு மூன்று குழந்தைகள் இருக்காங்க. மழை நேரத்துல குழந்தைகளை பைக்கில் கூட்டிட்டு போறப்ப, 'நமக்கு ஒரு கார் இருந்தா வசதியா இருக்குமே'னு நினைப்பேன். ஆனால், என்னோட பட்ஜெட்டுக்கு அது கட்டுப்படி ஆகாதுங்கிற உண்மை கார் ஆசையை மறக்கடிச்சுடும். பைக் வாங்கப் போனாலே 65 ஆயிரம் ரூபாய் ஆகிடுது. நாலு பேர் வசதியா உட்கார்ந்து போறதுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் கொடுப்பதில் தவறில்லை. அதான் முதல் நாளே காரை புக் பண்ணிட்டேன்'' என்றார் பாளையங்கோட்டையில் மதபோதகராக இருக்கும் பிரவீன்குமார்.
''நான் சென்னை பாடியில் குடி யிருக்கிறேன். நகருக்குள் ஓட்டுவதற்குத்தான் நானோன்னு சொல்றாங்க. விலையும் குறைவாகத்தான் இருக்கு. ஆனால், என் வீட்டில் ஸ்கூட்டரை நிறுத்துவதற்கே இடம் இல்லை. இதில் காரை நான் எங்கே நிறுத்துவது? கடன் வாங்கி ஒன்றரை லட்ச ரூபாய்க்கு கார் வாங்கப் பிரச்னை இல்லை. அதற்குப் பிறகு, மெயின்டனன்ஸ், சர்வீஸ், பெட்ரோல் என மற்ற விஷயங்களுக்குப் பணம் வேண்டுமே. அதனால், என்னைப் போன்றவர்களுக்கு எந்த காருமே சரிபட்டு வராது'' என நொந்து கொள்கிறார் பரமசிவன் என்பவர்.
''இது ஒரு இந்திய கார். பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி கார் தயாரிக்க ஆரம்பிச்ச ஒரு கம்பெனி, இன்னைக்கு உலகத்திலேயே விலை குறைவான காரை உருவாக்கி இருக்கு. இதில் அது சரியில்லை, இது சரியில்லைனு குற்றம் சொல்ல எனக்குப் பிடிக்கவில்லை. ஐந்து லட்சம், பத்து லட்சம் கொடுத்து ஹோண்டா, டொயோட்டானு வாங்குறோமே... அந்த கார்களில் மட்டும் குறையே இல்லையா என்ன? உலகின் விலை குறைவான காரில் இதற்கு மேல் என்ன செய்ய முடியும்'' என்று டாடாவின் வக்கீலாகவே மாறி கருத்துக்களைச் சொன்னார், நாகர்கோயிலில் டாடா நானோவை புக் செய்திருக்கும் பரத்குமார்.
சர்வே முடிவுகளின்படி... டாடா நானோவுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. ஆனால், 'சாலையில் கொஞ்ச நாள் ஓடி, காரைப் பற்றி முழு விவரங்கள் வரட்டும்' எனக் காத்திருப்பதாக பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் சிலர், 'அதிர்ஷ்டத்தை நம்பி காத்திருக்க முடியாது. காசு கொடுத்ததும் கார் கிடைக்க வேண்டும். அப்போதுதான் நானோ வாங்குவேன்' என்று சொன்னார்கள்.
'மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது விலை குறைவுதான். ஆனால், லட்ச லட்ச ரூபாய் கனவு கண்டு விட்டு, இப்போது அதைவிட அதிகம் காசு கொடுக்க வேண்டும் என நினைக்கும்போது, பழைய கார் மார்க்கெட்டில் வேறு கார் வாங்கலாமே' என்று நினைக்கும் மக்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
முதலிலேயே சொன்னது போல, டாடா நானோவை ஒரு லட்ச ரூபாய் கார் என்று பார்க்காமல், மாருதி 800 காருடன் போட்டி போடும் ஒரு மைக்ரோ மினி காராகத்தான் பார்க்க வேண்டும். மாருதி 800 ஏ.ஸி மாடலைவிட டாடா நானோவின் விலை அதிகமான வேரியன்ட், கிட்டத்தட்ட 37 ஆயிரம் ரூபாய் குறைவு. இதனால், விலையில் மாருதி 800-ஐ தோற்கடித்துவிடுகிறது டாடா நானோ. டிசைன் மற்றும் ஸ்டைலும் டாடா நானோவே சிறப்பாக இருக்கிறது என்பது பார்த்ததுமே அனைவருக்கும் புரிந்துவிடும். குட்டி கார்தான் என்றாலும், இடவசதியில் மற்ற சிறிய கார்களுடன் போட்டி போடுகிறது நானோ. பிளாஸ்டிக் குவாலிட்டி மற்றும் டேஷ் போர்டு இரண்டு கார்களிலுமே குறிப்பிடும்படி இல்லை. மைலேஜைப் பொறுத்தவரை டாடா நானோதான் வின்னர். ஆனால் பர்ஃபாமென்ஸ், இன்ஜினின் நம்பகத்தன்மை, ஓட்டுதல் தரம் ஆகியவற்றில் மாருதி 800 காரே சிறப்பாக இருக்கிறது.

No comments:

Post a Comment