பணத்தை ரொக்கமாக எடுத்துச் செல்பவரா நீங்கள்? முதலில் இதைப் படியுங்கள்!!
என்னதான் செக், டி.டி., ஆன்லைன் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் எல்லாம் வந்துவிட்டாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது பணத்தை ரொக்கமாக எடுத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது. இந்த சந்தர்ப்பத்தைக் குறிவைத்து பணத்தைப் பறித்துச் சென்றுவிடுகிறார்கள் சிலர். இப்படித்தான் சமீபத்தில் பாடுபட்டுச் சேர்த்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை ஒரே செகண்ட்டில் இழந்துவிட்டு தவித்துக்கொண்டிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கோதண்டபாணி என்பவர்.
''புதிதாக ஒரு வீட்டுமனை வாங்க பணம் கேட்டாள் என் மகள். அவ்வளவு பணம் கையில் இல்லாததால், வீட்டில் இருந்த நகைகளை அண்ணாநகர் 'சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கி’யில் அடகு வைத்து மூன்று லட்ச ரூபாயைப் பெற்றேன். அதை ஒரு துணிப்பையில் சுற்றி பத்திரமாகத்தான் எடுத்து வந்தேன். எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாததால் பஸ்ஸில் ஏறினேன். கூட்டம் அதிகமாக இருந்ததால், நின்று கொண்டே வந்தேன்.
பஸ்ஸை விட்டு இறங்கிப் பார்த்தால் யாரோ என் பையை பிளேடால் கீறி பணத்தைத் திருடிவிட்டார்கள் யார் எடுத்தார்கள், எப்படி எடுத்தார்கள் என்று என்னால் ஊகிக்கக்கூட முடியவில்லை. பிறகு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தேன். நகைகளை அடகு வைத்ததற்கான ரசீது களும் பணத்துடனேயே பறிபோய்விட்டது. பணம் போன ஏக்கத்தில் என்னால் சரிவர தூங்கக்கூட முடிவதில்லை'' என்று குரல் கம்மும் கோதண்ட பாணி, வருவாய்த் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
பொது இடங்களில் பணம் கொள்ளை அடிக்கப்படும் விதங்கள் பற்றியும், பணத்தை பாதுகாப்புடன் கொண்டு செல்வது குறித்த எச்சரிக்கைத் தகவல்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள் சென்னைப் புறநகர் காவல்துறை அதிகாரிகள்.
''வங்கியில் இருந்து பணம் எடுத்துச் செல்பவர்களைக் குறிவைத்து கொள்ளை அடிப்பவர்கள் நான்கைந்து பேராக கூட்டுச் சேர்ந்துதான் அதை செய்கிறார்கள். பணம் எடுப்பவர் யார்? என்ன வயது? துணைக்கு யாரேனும் இருக்கிறார்களா? என்பதை எல்லாம் வங்கியின் உள்ளேயே இருந்து ஒருவன் கண்காணித்துச் சொல்ல, வங்கியின் வாசலில் இருக்கும் கூட்டாளி உடனே தயாராகிவிடுவான். பணத்துடன் வெளியே வரும் நபரைக் குறிவைத்து ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுகளை வேண்டுமென்றே தரையில் சிதறவிட்டு, கவனத்தை திசை திருப்புவான். இதனால் பதறிப் போகிறவர்கள், கையில் இருக்கும் மொத்தத் தொகையை மறந்துவிட்டு கீழேக் கொட்டிக் கிடக்கும் ரூபாய்களை எடுக்க முனையும் போது, சட்டென்று பணப்பையை பிடுங்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள்.
இன்னும் சிலர் மோட்டார் பைக்குகளில் உள்ள பெட்டியினுள் பணத்தை வைத்து பாதுகாப்பாகக் கொண்டு செல்வார்கள். ஆனால், அந்த வண்டியையும் பின்தொடர்ந்து சென்று சிக்னல்களில் காத்திருக்கும் ஒரு சில நிமிடங்களுக்குள் பெட்டியின் மூடியைத் திறந்து கொள்ளை அடித்துவிடுகிறார்கள். அதனால் வங்கி யில் இருந்து பணம் எடுத்து வரும்போது பின்வரும் நடைமுறை களை கடைப்பிடிப்பது நல்லது.
1) பலர் பார்க்கும்படி பணத்தை எண்ணுவதை தவிர்த்துவிடுங்கள்.
2) நம்பிக்கையான நபர்களை துணைக்கு அழைத்துச் செல்லுங்கள்.
3) பணக்கட்டுகளின் வரிசை எண்களைக் குறித்து வைத்துக் கொள்வது நல்லது.(பிரிக்கப்படாத புது நோட்டுக் கட்டாக இருந்தால்).
4) செல்போன் பேசுவது, டிரைவிங் செய்வது போன்ற பிற வேலைகளில் கவனத்தை சிதறடிக்காதீர்கள்.
5) முக்கியமான ஒரு விஷயம்.... பணத்தை கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொண்டோ, பதற்றத்துடனோ இருந்தால் எதிரிகளுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்தது போல் ஆகிவிடும். அதனால், எப்போதும் போல் இயல்பாக இருங்கள்'' என்றார்கள்.
அடுத்து 'நம் பணத்தை நொடிப் பொழுதில் கொள்ளை அடித்துச் செல்வதால் நமக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஏதேனும் இன்ஷூரன்ஸ் பாலிசி உண்டா? என 'பார்தி ஏ.எக்ஸ்.ஏ. ஜெனரல் இன்ஷூரன்ஸ் கம்பெனி’யின் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரிவின் துணைத் தலைவர் கே.என். முரளியிடம் கேட்டோம்.
''கையில் எடுத்துச் செல்லும் பணம் திருடு போனாலோ, வழிப்பறி செய்யப்பட்டாலோ இழப்பீடு வழங்க 'ஷாப்கீப்பர் பாலிசி’ என்று ஒரு பாலிசி இருக்கிறது. பிஸினஸ் செய்பவர் களுக்கு மட்டுமே அளிக்கப்படும் இந்த பாலிசியை, தனிநபர்கள் கேட்கும்பட்சத்தில் அவர்களுக்கும் கொடுக்கப்படும். இந்த பாலிசியை ஓராண்டு காலத்துக்கு நாம் எடுக்கிறோமெனில் நாம் பாலிசி எடுக்கும் தொகையில் 1% பிரீமியமாகக் கட்ட வேண்டும். உதாரணமாக, ஐந்து லட்ச ரூபாயை எடுத்துச் செல்கிறோம் என்றால் 5,000 தான் பிரீமியம். இந்த பாலிசியை ஒன்றிரண்டு வாரத்துக்குக்கூட எடுக்கலாம். அப்படி எடுத்தால் ஆண்டு பிரீமியத்தில் 10 - 15 சதவிகிதம்தான் பிரீமியமாகக் கட்ட வேண்டும். பணம் கொள்ளை போனால் உடனே காப்பீடு நிறுவனத்துக்கு நேரில் அல்லது போன் மூலம் தகவல் சொல்ல வேண்டும். மேலும் சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் தேவை. எனவே, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.'' என்றார்.
அட, அடிக்கடி ரொக்கத்துடன் பயணம் செய்பவர்கள் வழிப்பறிக் கும்பலிடமிருந்து தப்பிக்க இப்படியும் ஒரு வழி இருக்கா? ஃபாலோ செஞ்சிட வேண்டியதுதான்!
No comments:
Post a Comment