ஒரு கிரவுண்ட் கூட வேண்டாம்; அரை கிரவுண்டிலோ, அல்லது குறைந்தபட்சம் அடுக்குமாடிக் குடியிருப்பிலாவது அழகான ஒரு வீட்டை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கனவு.
இந்தக் கனவு நிறைவேற முன்பைவிட இப்போது நிறைய வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்தாலே போதும், ஓர் இடத்தை வாங்கி வீடு கட்டுவது மிகச் சுலபமாகிக்கொண்டிருக்கிறது இந்தக் காலத்தில்.
கை கொடுக்கும் வீட்டுக் கடன்!
உங்கள் கைவசம் முழுப் பணமும் இல்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது, வீட்டுக் கடன்..! மொத்தச் செலவில் 15-20% கையிலிருந்து போட வேண்டிவரும். மீதியைக் கடனாகத் தருவார்கள். இதைக் கட்டுமானம் முடிய முடிய 3-4 தடவையாகப் பிரித்துத் தருவார்கள்.
கட்டிய வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்குவதாக இருந்தால், உடனடியாக மொத்தப் பணத்தையும் கொடுப்பதாக இருந்தால் விலையில் அடித்துப் பேசலாம். இதிலும், கடன் வசதி இருக்கிறது என்பதால் வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வதில் பிரச்னை ஒன்றும் இருக்காது.
சிலர், 'நம் சம்பளம் குறைவாக இருக்கிறதே, மாதத் தவணை போக வீட்டுச் செலவை சமாளிப்பது கஷ்டமாக இருக்குமே!' என்று நினைத்து வீட்டை வாங்கும் திட்டத்தைத் தள்ளி வைத்துவிடுகிறார்கள். இவர்களின் சம்பளம் அதிகரிக்கும் போது, வீட்டின் விலையும் அதிகரித்திருக்கும். மீண்டும் வீடு வாங்கும் திட்டத்தைத் தள்ளி வைப்பார்கள். இவர்கள் இனி அப்படிச் செய்யத் தேவையில்லை. ஆரம்ப ஆண்டுகளில் (சுமார் 3 ஆண்டுகள்) குறைவான இ.எம்.ஐ.-யும், சம்பளம் அதிகரித்த பிறகு அதிகமான இ.எம்.ஐ.-யும் கட்டக்கூடிய சிறப்புத் திட்டங்களை சில வங்கிகள் இப்போது கொண்டு வந்திருக்கின்றன.
மேலும், மனைவியோ பிள்ளைகளோ வேலையில் இருந்தால் அவர்களுடைய வருமானத்தையும் சேர்த்துக் காட்டி கூடுதலாகக் கடன் பெறலாம். வீட்டுப் பத்திரத்தில் இவர்கள் பெயரைச் சேர்த்திருந்திருந்தால், அவர்கள் தங்கள் பங்குக்குச் செலுத்தும் மாதத் தவணைக்கு வரிச்சலுகையும் பெற்றுக் கொள்ளலாம்.
வீடு வாங்க சரியான நேரமிது!
''கடனில் வீடு வாங்க இதுவே சரியான நேரம்'' என்கிறார் ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கியின் பிரியாரிட்டி பேங்கிங் பிரிவு ரிலேஷன்ஷிப் மேனேஜர் என்.விஜயகுமார். கடனில் வீடு வாங்குபவர்களுக்கு லாபகரமான டிப்ஸ்களையும் அள்ளிக் கொடுத்தார் அவர்.
''8.5 - 9%-ல் வீட்டுக்கடன் என்பது அதிக வட்டி இல்லை. வீட்டுக் கடனில் அசல் மற்றும் வட்டிக்கு கிடைக்கும் வரிச் சலுகையை கணக்கில் கொண்டால் இந்த வட்டி என்பது பெரிய விஷயமே இல்லை. சொத்தில் பிரச்னை எதுவும் இல்லை, கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான தகுதி உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்னும்பட்சத்தில் வட்டியில் பேரம் பேசத் தயங்காதீர்கள்! 0.25 முதல் 0.5% வட்டி குறைக்க வாய்ப்பு இருக்கிறது!! தற்போதைய நிலையில், மாறுபடும் வட்டி விகிதமான ஃப்ளோட்டிங்கை தேர்ந்தெடுப்பதுதான் நல்லது. காரணம், நிலையான வட்டி மற்றும் மாறுபடும் வட்டிக்கும் இடையிலான வித்தியாசம் 3% வரை அதிகமாக இருக்கிறது. தவிர, இப்போது எந்த வங்கியும் கடைசி வரையில் ஒரே வட்டியில் கடன் அளிப்பதில்லை. 2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலையான வட்டியையும் மாற்றி விடுகிறது. அந்த வகையில் ஃப்ளோட்டிங்தான் லாபகரமாக இருக்கும்.
வட்டி பாதிப்பு இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், கடன் தொகையில் 50% முதல் 75% வரை மாறுபடும் வட்டி விகிதமும், 25% முதல் 50% வரை நிலையான வட்டி விகிதமும் உள்ள திட்டத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும், ஆர்.பி.ஐ. முக்கிய விகிதங்களை அதிகரித்திருப்பதால் விரைவில் கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில், இப்போதே கடனில் வீடு வாங்குவது லாபகரமாக இருக்கும்'' என்றவர் ஒரே நேரத்தில் அதிகமாக கடன் வாங்கி கஷ்டப்படாமல் இருப்பதற்கான வழியையும் சொன்னார்.
''சிலர் புது வீட்டோடு, புதுக் கட்டில், புது சோபா என அதற்கும் சேர்த்துக் கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள். அது போன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பது நல்லது. இந்த வசதிகளை வீட்டுக் கடனை கட்டத் தொடங்கிய 2-3 ஆண்டு கழித்து டாப் அப் லோன் வாங்கி ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்போது உங்களின் சம்பளம் அதிகரித்து இருக்கும் என்பதால் இ.எம்.ஐ. கட்டுவது சுலபமாக இருக்கும். ஒரு விண்ணப்பம், வருமானச் சான்று, பேங்க் ஸ்டேட்மென்ட் இருந்தாலே சுலபமாக டாப் அப் லோன் பெறலாம். கடன் பெற்றவர் தன் மனைவி, குழந்தைகளின் வருமானத்தைச் சான்றாகக் காட்டியும் டாப் அப் கடன் பெறலாம். மேலும், எடுத்த எடுப்பிலேயே வீட்டை பெரிதாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. தேவைப்படும் அறைக்கு அடிப்படை மட்டும் போட்டு விட்டு, சில ஆண்டுகள் கழித்து, பிறகு டாப் அப் அல்லது வீட்டு விரிவாக்கக் கடன் வாங்கி அதை கட்டிக் கொள்வதன் மூலம் அதிக கடன் சுமையில் இருந்து தப்பிக்கலாம்'' என்றார் விஜயகுமார்.
சலுகைத் திட்டங்கள்..!
சுலபமாக வீடு வாங்குவதில் முக்கிய அம்சமாக சலுகைக் கடன் திட்டங்கள் இருக்கின்றன. ஆர்.பி.ஐ. முக்கிய விகிதங்களை உயர்த்தி இருந்தாலும், பாரத ஸ்டேட் வங்கியின் சலுகை வீட்டுக் கடன் திட்டம் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என அதன் தலைவர் ஓ.பி.பட் அறிவித்துள்ளார். இந்தச் சலுகைத் திட்டத்தில் முதல் ஆண்டுக்கு 8%, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டில் 9%, நான்காம் ஆண்டு முதல் அடிப்படை வட்டி (தற்போது 7.5%) விகிதத்தை விட 3.5% அதிக வட்டி வசூலிக்கப்படும்.
இதே போன்ற சலுகைத் திட்டத்தை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் வைத்திருக்கிறது. 2011, மார்ச் வரை 8.25%, அதன் பிறகு 2012, மார்ச் வரை 9.25%, அதற்குப் பிறகு வட்டி, வங்கியின் அடிப்படை வட்டி (தற்போது 7.5%) விகிதத்தை விட 1.5% அதிகமாக இருக்கும்.
ஹெச்.டி.எஃப்.சி, 2011 மார்ச் வரையில் சலுகைத் திட்டத்தை வைத்திருக்கிறது. முதல் ஆண்டில் 8.25%, இரண்டாம் ஆண்டில் 9.25%, மூன்றாம் ஆண்டு முதல் அப்போதுள்ள ஃப்ளோட்டிங் வட்டி விகிதம் வசூலிக்கப்படும். எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு 9.25% வட்டி கொண்ட சிறப்புத் திட்டத்தை வைத்திருக்கிறது. இது போன்ற திட்டங்களில் உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து உங்கள் வீட்டைக் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.!
குறைவான செலவில் வீடு கட்ட..!
பட்ஜெட்டுக்கு ஏற்ப வீடுகளைக் கட்டிக் கொடுத்து வரும் சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த 'சூரியன் புரமோட்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த எம்.மணி, சொந்தமாக வீடு கட்டுபவர்களுக்குப் சுலபமான நடை முறை டிப்ஸ்களை கொடுத்தார்.
''உங்களுக்கு ஏற்கெனவே சொந்தமாக மனை இருக்கும் பட் சத்தில், அதில் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப பிளான் போட்டு வீட்டைக் கட்ட ஆரம்பிக்கலாம். வீட்டு வேலையை மேற்பார்வை பார்க்கும் அளவுக்கு உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவர்களுக்கோ விஷயம் தெரியும் பட்சத்தில் பொருட்களை வாங்கிக் கொடுத்து, என்ஜினீயர் ஒருவர் மூலம் வீட்டைக் கட்டச் சொல்லலாம். இதன் மூலம் மொத்தக் கட்டுமானச் செலவு குறைந்தபட்சம் 25% குறையும்!
'நான் ரொம்ப பிஸி, கட்டுமான வேலைகளைக் கவனிக்க வீட்டில் வேறு யாருமில்லை. தவிர, எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது' என்கிறவர்கள், நேராக கான்ட்ராக்ட் முறைக்கு போய்விடலாம். இதில் இரு வகை இருக்கிறது. முதல் வகை, கட்டுமான வேலைக்கு (லேபர்) மட்டும் கான்ட்ராக்ட் விடுவது. இதில், எத்தனை ச.அடி. கட்டுமானம் என்பதை முடிவு செய்து அதற்கு ஒரு தொகையைப் பேசி முடிவு செய்துவிடுவது. கட்டுமானப் பொருட்களை நீங்களே வாங்கிக் கொடுக்க வேண்டும். இரண்டாவது வகையில், வேலை மற்றும் கட்டுமானப் பொருட்களையும் சேர்த்து மொத்தமாக கான்ட்ராக்ட் விடுவது. இரு வகையிலும் இத்தனை மாதத்துக்குள் கட்டுமானத்தை முடித்துத் தர வேண்டும் என எழுத்து மூலம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம். இரண்டாவது, முறையில் கட்டுமானப் பொருட்களின் தரம், கதவு, ஜன்னல்களுக்கு எந்த ரக மரம் என்பது உள்ளிட்ட விவரங்களை எழுதி ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்து வீட்டின் உயரம் 9 அடிக்குக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சில பில்டர்கள் ச.அடி. கட்டுமானச் செலவை கவர்ச்சிகரமாகக் குறைத்து காட்டிவிட்டு, அறையின் உயரத்தைக் குறைத்து லாபம் பார்த்துவிடுவார்கள்! ரூஃப் போட்ட பிறகு குறைந்தது 15 நாட்களுக்கு பிறகுதான் மேற்கொண்டு கட்டுமான வேலைக்கு அனுமதிக்க வேண்டும். இந்த விஷயங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளக்கூடாது'' என்றார்.
இப்போதாவது வாங்குங்க...!
அக்ஷயா ஹோம்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டி.சிட்டி பாபு, ''இது நாள் வரை வீடு வாங்காதவர்கள் இப்போதாவது வாங்குவது நல்லது'' என்கிறார்.
''வீட்டின் விலையைப் பொறுத்த வரையில் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் விலை குறைந்து இப்போதுதான் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது என்பதால் வீடு வாங்க இது சரியான நேரமாகும். கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருந்த காலத்தில் பல திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், புதிய வீடுகள் கட்டுவது குறைந்து போனது. புது வீடுகளுக்கான டிமாண்ட் இப்போது மீண்டும் உருவாகிவிட்டதால், விரைவில் வீடுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கு முந்துவது நல்லது'' என்றார்.
விலை, வட்டி விகிதம் என எல்லா விஷயங்களும் கனிந்து வந்திருக்கும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி உங்களுக்கே உங்களுக்கென ஒரு வீட்டைச் சொந்தமாக்கிக் கொள்வது தான் புத்திசாலிதனம்..!
|
Hello world friends, this is ‘Jeeva General Information & Knowledge Repository’ about general information and knowledge from various fields. If you have the information here you need, read on, know it and get useful. “Knowledge is strength, power and energy. Progress through these in life.”
Friday, 3 July 2015
சுலபமாக வீடு வாங்க சூப்பர் வழிகள்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment