Friday, 3 July 2015

கடல் கடக்கும் கறுப்புப் பணம்! பின்பற்றக் கூடாத பகீர் கைடு

இப்போது இந்தியர்கள் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தைகள் இரண்டே இரண்டுதான். ஒன்று 2-ஜி. இன்னொன்று கறுப்புப் பணம். 2-ஜி விவகாரமாவது ஓரளவுக்கு புரிந்துவிடுகிறது. ஆனால் இந்த கறுப்புப்பண விவகாரம்தான் தலை சுற்ற வைக்கிறது. எப்படி உருவாகிறது இந்த கறுப்புப் பணம்? அது எப்படி கடல் தாண்டிச் சென்றுவிடுகிறது? கடலுக்கு அப்பால் அந்தப் பணத்தை வங்கியில் போட்டிருந்தால் அந்த வங்கி அந்தப் பணத்தை என்ன செய்யும்? லாக்கரில் வைத்திருக்குமா அல்லது எதிலாவது முதலீடு செய்யுமா? முதலீடு செய்திருந்து அதில் லாபம் வந்தால் அந்த லாபத்திலிருந்து பங்கு கொடுப்பார்களா? அந்த லாபத்தை இங்கே இருந்து பெற்றுக்கொள்ள முடியுமா? இப்படி பல கேள்விகள் சாதாரண மக்கள் மனதில். இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விளக்கமாகப் பதில் சொன்னார் பிரபல ஆடிட்டரான எம்.ஆர். வெங்கடேஷ்.
நேற்று கறுப்பு!
''கறுப்புப் பணத்தின் ரிஷிமூலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவின் வரி வரலாற்றை கொஞ்சம் பார்க்க வேண்டும். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் தொழிற் துறைகளுக்கு விதிக்கப்பட்ட வரி அதிகமாகவே இருந்தது. சில சமயங்களில் 60 முதல் 80 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டுதான் லாபம் சம்பாதித்தன. அப்படிச் சம்பாதிக்கும் லாபத்தில் பெரும்பகுதியை அரசாங்கத்துக்குக் கட்ட வேண்டும் என்றால் யார்தான் கட்டுவார்கள்? லாபத்தைக் கணக்கில் காட்டினால்தானே வரி கட்ட வேண்டும்? பாதியை மட்டும் கணக்கில் காட்டி வரியைக் கட்டிவிட்டு, மீதியை அப்படியே வெளிநாட்டுக்குக் கொண்டு போனால் என்ன? இப்படி ஒரு யோசனை 40 ஆண்டுகளுக்கு முன்பே சில பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வர, பல ஆயிரம் கோடி ரூபாயை சத்தமில்லாமல் இங்கிருந்து சுவிட்ஸர்லாந்துக்குக் கொண்டு சென்று அங்குள்ள வங்கியில் போட்டுவிட்டன!
இன்று சிவப்பு!
ஆனால், 1990-க்குப் பிறகு தாராளமயமாக்கல் வந்ததைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வரியின் அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் வரி ஏய்ப்புக்காக பணத்தை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லாமல் போனது. என்றாலும், வெளிநாட்டுக்குச் செல்லும் பணத்தின் அளவு மட்டும் குறையவில்லை. ஏன்?
தாராளமயமாக்கத்தின் விளைவாக வெளிநாட்டு முதலீடு இந்தியாவுக்கு எக்கச்சக்கமாக வர ஆரம்பித்தது. இதனால் தொழிற்துறை வளர்ச்சி புதிய வேகமெடுத்தது. இந்த தொழில் பெருக்கத்தின் காரணமாக அரசியல்வாதிகள் லஞ்சம் பெறுவதும் ஊழல் செய்வதும் அதிகரித்தது. பல விஷயங்கள் சட்டத்துக்கு உட்பட்டும் சில விஷயங்கள் சட்டத்தை ஏமாற்றியும் நடந்தன. கள்ளக்கடத்தல் பெருகியது. முக்கியமாக, போதைப் பொருட்கள் கடத்தலில் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்க ஆரம்பித்தது.
ஊழலிலும் கள்ளக் கடத்தலிலும் சேர்த்த பணத்தை அரசாங்கத்துக்கு கணக்கு காட்ட முடியாது. கணக்கில் காட்டாத பணத்தை கையில் வைத்திருக்கவும் முடியாது. பின் என்னதான் செய்வது? 40 ஆண்டுகளுக்கு முன்பு வரி ஏய்ப்பு செய்ய தொழில் நிறுவனங்கள் கடைப்பிடித்த அதே வழியை அரசியல்வாதிகளும் கடத்தல் பிரமுகர்களும் பின்பற்றினார்கள். தங்கள் பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று சுவிஸ் வங்கிகளில் போட்டார்கள். 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்குப் போனது வெறும் வரி ஏய்ப்பு  குற்றத்தை மட்டுமே செய்த பணம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் வெளிநாட்டுக்குப் போன பணம் லஞ்சம், ஊழல், போதை போன்ற பல பாவங்களைச் செய்ததன் மூலமாக உருவான பணம். அதனால்தான் அதை 'சிவப்புப் பணம்’ என்றும் 'குருதிப் பணம்’ என்றும் சொல்கிறார்கள்.

பணம் போனது எப்படி?
வெளிநாட்டுக்குப் பணம் போனது, வெளிநாட்டுக்குப் பணம் போனது என்கிறீர்களே, எப்படிப் போனது என்று நீங்கள் கேட்கலாம். இங்குள்ள ஒரு வங்கியில் 500 அல்லது 1,000 கோடி ரூபாயைக் கட்டி, அதை சுவிஸ் வங்கியில் கொண்டு போய் சேர்க்க முடியாது. அப்படிச் செய்தால் அரசாங்கத்துக்குத் தெரிந்துவிடுமே! பெட்டியில் பணத்தை நிரப்பி விமானம் மூலம் கொண்டு போனார்களா என்றால் அதுவும் இல்லை. காரணம், விமானத்தில் ஓரளவுக்கு மேல் பணத்தைக்  கொண்டு போக முடியாது. கப்பலில் போதைப் பொருட்களைக் கடத்துகிற மாதிரி பணத்தைக் கடத்தவும் முடியாது. வழியில் யாராவது கொள்ளை அடித்தால் அத்தனையும் போய்விடும். புயல் வந்தாலும் நாசமாகிவிடும். பிறகு எப்படித்தான் பணத்தைக் கொண்டு போனார்கள்?
ஹவாலா வங்கி!
இங்குதான் ஹவாலா என்கிற விஷயம் வருகிறது. ஹவாலாவைப் புரிந்து கொள்ள ஒரு வங்கி எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் இருக்கும் ஒரு வங்கியில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள். ஒரு வாரம் கழித்து டெல்லிக்குப் போய் அதே வங்கியின் கிளையில் ஒரு லட்ச ரூபாயை எடுக்கிறீர்கள். சென்னையில் நீங்கள் போட்ட பணம் வேறு; டெல்லியில் நீங்கள் எடுத்த பணம் வேறு. சென்னை வங்கியில் நீங்கள் பணத்தைப் போட்டிருக்கிறீர்கள் என்பதை வங்கிக் கணக்கு எடுத்துச் சொல்லவும், டெல்லியில் உள்ள வங்கி உங்களுக்கு மறுக்காமல் பணம் தருகிறது. ஹவாலாவும் ஏறக்குறைய இதே மாதிரிதான் செயல்படுகிறது. அரசாங்கத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பணத்தை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல ஒரே வழி ஹவாலாதான்.
இங்கும் அங்கும்!
உங்கள் கையிலிருக்கும் 100 கோடி ரூபாய் பணத்தை இங்குள்ள ஒரு ஹவாலா புள்ளியிடம் கொடுக்கிறீர்கள். அவர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு, வெளிநாட்டில் இருக்கும் தனது நண்பரிடம் சொல்லி, சுவிஸ் வங்கியில் உங்கள் பெயருக்கு ஒரு ரகசிய கணக்கை ஆரம்பித்து, அதில் போடச் சொல்வார். அவரும் 100 கோடி ரூபாயை அதில் போட்டுவிடுவார்.  
சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் இன்னொரு வருக்கு வேறுவிதமான பிரச்னை. அவர் கையில் இருக்கும் 100 கோடி ரூபாயை மறைத்து வைக்க விரும்புகிறார். அங்குள்ள ஹவாலா பேர்வழியிடம் அவர் அந்தப் பணத்தைக் கொடுக்க, அது இங்கே கச்சிதமாக வந்து சேர்ந்துவிடுகிறது. ஏறக்குறைய ஒரு வங்கி போலவே பக்காவாகச் செயல்படும் இந்த ஹவாலா நெட்வொர்க்கில் சேர உறுப்பினராக வேண்டியதில்லை; பணம்  கொடுத்தால் ரசீது கொடுக்கமாட்டார்கள். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட் எல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது இந்த ஹவாலா பிஸினஸ்.  

பணம், பணத்தை சம்பாதிக்கும்!
வெளிநாட்டில் இருக்கும் கறுப்புப் பணம் அப்படியே சும்மா கிடக்காது. செயல்படாத மனிதனாலும் பணத்தாலும் எந்தப் பயனும் இல்லை. எனவே, சுவிஸ் வங்கியிலிருக்கும் பணம் மொரீஷியஸ் போனவுடன், துணிகளைச் சலவை செய்கிற மாதிரி அதுவும் சலவை செய்யப்பட்டு, அனைத்து அழுக்குகளும் (பாவங்கள்) கழுவப்பட்டு, மீண்டும் நம் நாட்டுக்கு வெள்ளையும் சொள்ளையுமாக வந்து சேர்கிறது. பங்குச் சந்தை, தொழில் வளர்ச்சி என பல துறைகளுக்குள் முதலீடா கிறது. இப்படி முதலீடாகும் பணம் கொழுத்த லாபத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் மொரிஷீயஸ் வழியாக சுவிஸ் வங்கிக்கே போய்விடுகிறது. ஒருவேளை அந்தப் பணம் சுவிஸ் வங்கியில் அப்படியே கிடந்தாலும் அதற்கு நிச்சயம் வட்டி கிடைக்கும். 100 கோடி ரூபாய்க்கு 2% ஆண்டு வட்டி என்றாலும் மாதத்துக்கு சுமார் 16 லட்சம் வட்டி கிடைக்குமே!
70 லட்சம் கோடி!
இப்படி வெளி நாட்டு வங்கிகளில் சேர்ந்திருக்கும் பணம் எவ்வளவு என்பதற்கு சரி யான புள்ளிவிவரம் நம்மிடம் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கு சொல்கிறார்கள். ஆனால், மிக மிகக் குறைத்து மதிப்பிட்டாலும் இரண்டு லட்சம் கோடி ரூபாயாவது நிச்சயமாக இருக்கும் என்பது என் கணிப்பு. இது ஒன்றும் சாதாரண பணமல்ல. 1850 முதல் 1947 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ்காரர்கள் நம்மை சுரண்டிக் கொண்டு போன செல்வத்தின் அளவு சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர். கிட்டத்தட்ட ஒரு நூறு ஆண்டு காலம் இதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் கடந்த 60 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவின் நம் அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமாக எடுத்துச் சென்றிருக்கும் பணம் கிட்டத்தட்ட 1.4 ட்ரில்லியன் டாலர் (நம் மதிப்பில் சுமார் 70 லட்சம் கோடி ரூபாய்!).
இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் காரர்களையே விஞ்சிவிட்டோம் என்பது நமக்குக் கிடைத்த அவமானத்துக்குரிய பெருமை!

பயன்படாத பணம்!
அரசியல்வாதிகளும் கள்ளக்கடத்தல் பேர்வழிகளும் இங்கிருந்து பணத்தைக் கொண்டு போய் வெளிநாட்டில் முடக்குவதில் எந்த அர்த்தமும் இல்லை. காரணம், இப்படிச் சேர்த்த பணத்தை நாமோ, நம் வாரிசுகளோ அனுபவிக்க முடியாது. சுவிஸ் வங்கியில் ஆயிரம் கோடி ரூபாய் சேர்த்தவர், தன் வாரிசுகளிடம் அந்த விஷயத்தைச் சொல்லாமல் இறந்தால், அந்தப் பணம் அப்படியே போய்விடும். ஒருவேளை வாரிசுகளுக்குத் தெரிந்தாலும் அவர்களும் அரசின் கண்களில் சிக்காமல் அந்தப் பணத்தை பயன்படுத்துகிற அளவுக்கு செயல்படும் கில்லாடிகளாக இருக்க வேண்டும். ஆக, நமக்கும், நம் சந்ததிக்கும் பயன்படாத பணத்துக்கு மனிதர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்பதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் கிடக்கும் இந்த கறுப்பு - சிவப்புப் பணம் நம் அரசாங்கத் துக்கும் மக்களுக்கும் சேர வேண்டியது. அதை நம் நாட்டுக்கே கொண்டு வரவேண்டும் என பலரும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், நம் அரசியல்வாதிகளோ ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, அந்தப் பணத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். 'கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலைக் கொடுங்கள்’ என பொத்தாம் பொதுவாக சுவிஸ் வங்கியிடம் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். 100 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, 'இவர்களின் பணம் உங்கள் வங்கியில் இருக்கிறதா?’ என்று கேட்டால், நிச்சயம் பதில் சொல்வார்கள். அமெரிக்க அரசாங்கம் அங்கு கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை இப்படித்தான் பிடித்தது. அமெரிக்காவுக்குத் தேவையான தகவல்களை சுவிஸ் வங்கி கொடுக்கும் போது நாம் கேட்டால் கொடுக்காதா என்ன? வெளிநாடுகளில் கிடக்கும் பணத்தை இங்கு கொண்டு வர சில சட்டதிட்டங்கள் தடையாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதெல்லாம் சால்ஜாப்புதான். மக்கள் நலனுக்காக இந்தச் சட்டங்களை மாற்றுவது தவிர வேறு வழியில்லை என்றால் மாற்றிவிடவேண்டியதுதானே?
வெளிநாடுகளில் இருக்கும் பணத்தை திரும்பக் கொண்டு வந்தால் மட்டும் போதாது. இனிமேலும் ஹவாலா மூலம் நம் பணம் வெளிநாடுகளுக்குப் போகாதபடிக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் நாம் ஊழலை ஒழிக்க வேண்டும். இது நடக்கிற காரியமா என்று நீங்கள் நினைக்கலாம். மக்கள் மனம் வைத்தால் நிச்சயம் நடக்கும்.''

No comments:

Post a Comment