Wednesday, 1 July 2015

ரியல் எஸ்டேட்: ஃப்ளாட் வாங்கப் போகிறீர்களா? உஷார் டிப்ஸ்!

ஃப்ளாட் வாங்கப் போகிறீர்களா?
பெ ரிய ஹால்... காற்றோட்டமான கிச்சன்... வசதியான அலமாரிகள் என்ற கனவோடு ஃப்ளாட் வாங்கப் போனால், இடம் ஆரம்பித்து விலை வரை பல சந்தேகங்கள்...
‘‘என்னென்னவோ சொல்கிறார் பில்டர். அவர் சொல்லும் விஷயங்கள் எதுவும் புரியவில்லையே?” என்று திகைத்துப் போயிருக்கிறீர்களா... உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை!
இந்திய பில்டர்கள் சங்கத் தென்னக மையத்தின்(பி.ஏ.ஐ) கௌரவ செயலாளர் ராமசாமி சொல்வதைக் கேளுங்கள்.
‘‘கார்ப்பெட் ஏரியா ( Carpet Area ), ப்ளிந்த் ஏரியா ( Plinth Area), காமன் ஏரியா ( Common Area ), சூப்பர் பில்ட்அப் ஏரியா ( Super Buildup Area ) என்று நான்கு விதமாக இடத்தைச் சொல்கிறார்கள்.
நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதிதான் கார்ப்பெட் ஏரியா. அதாவது, பயன்படுத்தக்கூடிய கட்டுமானப்பகுதி. ப்ளிந்த் ஏரியா என்பது கட்டடத்தின் நான்கு சுவர்களோடு சேர்ந்த பகுதி. காமன் ஏரியா என்பது லிஃப்ட், மாடி படிக் கட்டு, செப்டிக் டேங்க், லிஃப்ட் மெஷின் ரூம், சுற்றுச் சுவர், நடைபாதை போன்றவை அடங்கியது. ப்ளிந்த் ஏரியா மற்றும் காமன் ஏரியா சேர்ந்ததுதான் சூப்பர் பில்ட்அப் ஏரியா.
இந்த சூப்பர் பில்ட்அப் ஏரியா அடிப்படையில்தான் ஃப்ளாட்டின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அடுக்கு மாடி குடியிருப்பில் ஃப்ளாட்டின் விலை என்பது மனையின் விலை, ஃப்ளாட் மற்றும் காமன் ஏரியாவுக் கான கட்டுமானச் செலவு, சேவை வரி (12.24%), கல்வித் தீர்வை (2%), கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்துக்கான வரி (4%), ஃபிரிஞ்ச் பெனிஃபிட் வரி (1%), பில்டர் அல்லது ப்ரமோட்டரின் லாபம் போன்றவை சேர்ந்ததாக இருக்கிறது. பொதுவாக, சதுர அடிக்கு இவ்வளவு என்று விலை நிர்ணயிக்கப்படுவதால், ஒவ்வொரு வரும் வாங்கும் சதுர அடிக்கேற்ப விலை கொடுக்க வேண்டிவரும். அதே நேரத்தில், 600 சதுர அடி ஃப்ளாட் வாங்கியவருக்கும், 1,200 சதுர அடி ஃப்ளாட் வாங்கியவருக்கும் காமன் ஏரியா ஒன்றுதான்.
விவரம் தெரிந்தவர்கள் தற்போது ஃப்ளாட்டைப் பார்க்க வரும்போதே, காமன் ஏரியா, கார்ப்பெட் ஏரியா எவ்வளவு வருகிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டு பில்டரிடம் விலை குறைக்கச் சொல்வதும் நடக்கிறது.
ஒரு ஃப்ளாட்டில் கார்ப்பெட் ஏரியா 800 சதுரஅடி என்றால், ப்ளிந்த் ஏரியா 940 சதுரஅடியாகவும், சூப்பர் பில்ட்அப் ஏரியா 1080 சதுர அடியாகவும் இருக்கும். பொதுவாக, கார்ப்பெட் ஏரியாவைவிட ப்ளிந்த் ஏரியா 15% அதிகமாக இருக்கும். அதைவிட, சூப்பர் பில்ட்அப் ஏரியா 15% அதிகமாக இருக்கும். நூலக அறை, நீச்சல் குளம், பூங்கா போன்றவை அமைக்கும்போது இது 2540 % அளவுக்கு அதிகரிக்கும்’’ என்ற ராமசாமி, கார் பார்க்கிங் விலை நிர்ணயம் பற்றிச் சொன்னார்.
‘‘கார் நிறுத்த 50 சதுரஅடி பரப்பு போதும் என்றாலும் காரை நிறுத்தி, எடுக்க இடம் தேவை என்பதால் 150 சதுரஅடி ஒதுக்கப்படும். இந்த கார் பார்க்கிங் பகுதி, அடுக்கு மாடி குடியிருப்பின் தரைதளத்தில் அமைந்திருக்கும். ஃப்ளாட் வாங்குபவர், கார் நிறுத்தும் இடத்துக்கு தனியே விலை கொடுக்கவேண்டும். பொதுவாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் பார்க்கிங் ஒதுக்கப்படும். கார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்டாயம் வாங்கவேண்டும். இந்த விலை மனையின் விலையைப் பொறுத்து மாறுபடும்.
அதேசமயம், திறந்த வெளியில் கார் நிறுத்தும் வசதியைப் பயன்படுத்த பணம் வாங்குவதில்லை. அந்தப் பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் எதுவும் போடக்கூடாது. வீட்டுக்கு வரும் விருந்தினர் நிறுத்திக் கொள்வதற்காகத்தான் திறந்த வெளி கார் நிறுத்தம் உருவாக்கப்படுகிறது. சில வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கும். அப்போது, கார் நிறுத்த கூடுதல் இடம் தேவைப்பட்டால், கார் இல்லாமல் கார் பார்க்கிங்கைப் பயன்படுத்தாமல் இருப்பவர்களிடம் பேசி, வாடகை அல்லது விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.
‘‘காமன் ஏரியா அதிகமாக இருக்கும் ஃப்ளாட்டின் விலை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ப அதிக வசதிகள் அதில் இருக்கும். பட்ஜெட் வீடுகள் கட்டப்படும் போது காமன் ஏரியா குறைக்கப்படுவதால் ஃப்ளாட் விலையும் குறைக்கப்படும்.
சாலையின் அகலம் அதிகமாக இருந்தால், வீட்டின் விலையும் கூடுதலாக இருக்கும்.பிரமாண்டமான இடத்தில் டவுன்ஷிப் போன்ற அமைப்புடன் அடுக்குமாடிக் குடி இருப்புகள் கட்டும்போது, மனையை உயர்த்த, உள்சாலை, குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடல், பூங்கா, மழை நீர் வடிகால், போன்றவற்றை அமைக்க ஆகும் செலவும் காமன் ஏரியாவுக்கான செலவில் சேர்க்கப் பட்டு ஃப்ளாட் விலையில் ஏற்றப்படும். இதுதவிர, மழைநீர் சேகரிப்பு வசதி, குடிநீர்-கழிவு நீர் குழாய் இணைப்பு, மின்சார இணைப்பு போன்றவற்றுக்கான செலவும் காமன் ஏரியாவில்தான் சேர்க்கப்படுகிறது’’ என்றார் ராமசாமி.
ஃப்ளாட் வாங்கும்போது தெளிவாகக் கிளம்புவீர்கள்தானே..!
இ ந்த சூப்பர் பில்ட்அப் ஏரியாவின் அடிப்படையில்தான் சொத்து வரி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே வீடு வாங்குபவர்கள், பில்டர்களிடம் சூப்பர் பில்ட்அப் ஏரியா பற்றிய விவரத்தை அவர்களின் லெட்டர் பேடில், அலுவலக முத்திரையுடன் வாங்கிக்கொள்ள வேண்டும். வீட்டில் இடம் பெற்றிருக்கும் டாய்லெட்களின் எண்ணிக்கை, தரை போடப்பட்டிருக்கும் விதம் (சிமென்ட், மார்பிள், மொஸைக், டைல்ஸ்), சொந்த உபயோகத்துக்கா அல்லது வாடகைக்கு விடப்படும் கட்டடமா என்பதை எல்லாம் பொறுத்தே சொத்து வரி நிர்ணயிக்கப்படும்.
கு டியிருப்போர் அனைவரும் இணைந்து சங்கம் ஏற்படுத்திக் கொள்வது நல்லது. அப்போதுதான் ஃப்ளாட்களில் பொது பயன்பாட்டுக்கான காமன் ஏரியாவைப் பயன்படுத்துவதில் பிரச்னை என்றால் விரைவில் தீர்வு காணலாம். அதேபோல், தனிநபர் பிரச்னை என்றாலும் சங்கம் மூலமாகக் குரல் கொடுத்தால் உடனே எடுபடும். மேல்நிலை தண்ணீர் தொட்டி, கார் பார்க்கிங், குழந்தைகள் விளையாடுமிடம், லிஃப்ட் போன்றவற்றை பிரச்னை இல்லாமல் பராமரிக்கவும் சங்கம் அமைப்பது அவசியம்.

No comments:

Post a Comment