போன வாரம்தான் மத்திய நிதி அமைச்சர் டி.வி-யில் பட்ஜெட் படிச்சிட்டுப் போனாரு. எவ்வளவு பெரிய நாடு, எத்தனை வியாபாரங்கள், எத்தனை கோடி மக்கள், எவ்வளவு வரவு, செலவு... ரொம்ப கஷ்டமான வேலை இந்த நிதிஅமைச்சரோட வேலைனு நினைக்கிறீங்களா? அதுதான் இல்லை! நான் மட்டும் ஃபைனான்ஸ் மினிஸ்டரா இருந்தேன்னா இதைவிட சூப்பரா பட்ஜெட் போடுவேன். அவங்களுக்கு என்ன, முதல்ல செலவு கணக்கு போட்டுக்கலாம்.
அப்பறமா அதுக்குத் தகுந்த மாதிரி யாருகிட்டயிருந்து எப்படி, எவ்வளவு வரி வசூலிக்கலாம்னு கணக்குப் போட்டு, சம்பாதிச்சுக்கலாம்! செலவுக்கு ஏத்த மாதிரி வரவுங்கிற பாக்கியம் வேற யாருக்குக் கிடைக்கும், இல்ல?
அதுவே நம்ம வீட்டு பட்ஜெட்டைப் பாருங்க... வரவு ஒரு குறிப்பிட்ட தொகைதான். மாத ஆரம்பத்துல சம்பளமா வரும். வருஷா வருஷம் ஏதோ சம்பள உயர்வு கிடைக்கும். ஆனா, மாசா மாசம் செலவு மட்டும் ஏறிக்கிட்டே போகும்! இதுல அத்தியாவசியச் செலவுகளை செஞ்சிட்டு, மீதியை மிச்சம் பிடிச்சு சேமிச்சு வெச்சு, எதிர்காலத் தேவைகளுக்கு முதலீடு பண்ணி குடும்பம் நடத்துற நாமதான் உண்மையிலேயே சூப்பர் ஃபைனான்ஸ் மினிஸ்டர்ஸ்!

மொதல்ல நல்ல விஷயத்திலிருந்து ஆரம்பிக்கலாம். அதான் வருமானத்திலிருந்து ஆரம்பிக்கலாம்... ஒரு பேப்பர்ல அதை எழுதுங்க. சம்பளம், வியாபாரம்னா அதுலேர்ந்து வர்ற பணம், வாடகை ஏதாவது வருதா, நிலத்திலிருந்து ஏதாவது வரவு இருக்கா, வங்கி வட்டி, டிவிடெண்ட் ஏதாவது வர வேண்டியது இருக்கா? எல்லாத்தையும் எழுதுங்க. மாசா மாசம் வரக்கூடிய வரவுகளைத் தனியாவும், வருஷத்துக்கு ஒரு தடவை போனஸ் மாதிரி கிடைக்கிற வருமானத்தை தனியாவும், மூணு மாசத்துக்கோ, ஆறு மாசத்துக்கோ வட்டி, டிவிடெண்ட் மாதிரி வரக்கூடிய வரவுகளைத் தனியாவும் குறிச்சு வையுங்க... எல்லாத்தையும் சேர்த்தா ஒரு வருஷத்துல நமக்கு எவ்வளவு வரவு வரும்னு கணக்குப் போடுங்க. எவ்வளவு சம்பாதிக்கறோம்னு தெரிஞ்சா கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். இருக்கா? சூப்பர்!
அடுத்து, அதே பேப்பர்ல இன்னொரு பக்கம் எவ்வளவு பணம் மாசா மாசம் கடன் கட்டுகிறோம்னு குறியுங்க... அதாவது வீட்டுக் கடன், கார் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு கடன், வேற கடன் ஏதாவது வாங்கியிருந்தோம்னா அதுக்கெல்லாம் சேர்த்து எவ்வளவு கட்டறோம்னு எழுதுங்க. அதையும் ஒரு வருஷத்துக்கு கணக்குப் போடுங்க.. இந்த தொகை உங்க வரவுல ஒரு பகுதியா இருக்கும். உதாரணத்துக்கு, உங்க வரவு எல்லாம் சேர்ந்து ஒரு வருஷத்துல ஒரு லட்ச ரூபாய்னு வையுங்க. கடன் செலவுகள் 20,000 முதல் 45,000 வரைக்கும் இருக்கலாம். உங்க வயசைப் பொறுத்து இந்த சதவிகிதம் மாறலாம். சாதாரணமா கீழ கொடுத்திருக்கற அட்டவணைப்படி உங்க கடன் விகிதம் இருந்தா நல்லது.



சரி, இப்போ இந்த பயிற்சி முடிஞ்சாச்சு. என்ன சம்பாதிக்கிறோம், என்ன செலவு பண்றோம்னு ஒரு ஐடியா வந்திருக்கும். இதை வச்சு என்ன பண்ணுறது? அதை ரெண்டு மூணு தடவை திருப்பி பார்த்தீங்கன்னா, எங்கேயாவது செலவை டிரிம் பண்ணலாமேனு தோணும். சில செலவுகள் தெரிஞ்சு செய்வோம், குழந்தைங்க ஸ்கூல், புத்தகம் அப்படின்னு சில செலவுகள் ஜாஸ்தியா இருக்கலாம். ஆனா அதை நாம குறைக்க விரும்ப மாட்டோம். சேமிப்புக்கான முதலீட்டையும் குறைக்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன். சில செலவுகளைக் குறைக்கலாம் ரொம்ப பெரிய காம்பரமைஸ் இல்லாமல். உதாரணத்துக்கு, வெளியே வாரா வாரம் சாப்பிடப் போறத்துக்குப் பதிலா மாசம் ரெண்டு தடவையா குறைச்சுக்கலாம். கடன் திரும்ப கட்டுறதுக்கான வட்டி செலவு அதிகமாகுதுன்னா குறைந்த வட்டிக் கடனுக்கு மாத்தலாம். ஆடைகளுக்கான செலவு அதிகம்னு தோணுச்சுன்னா ஆடி தள்ளுபடியில வாங்கி தீபாவளிக்கு வச்சுக்கலாம். இதையெல்லாம் யோசிச்சா உங்களுக்கே புரியும். நான் சொல்ல வேண்டியதில்லை.


அதேசமயம் ஓட்டலுக்கே இனிமே போறதில்லை, சினிமாவுக்கே போறதில்லைனு முடிவு எடுக்கக் கூடாது. ரெண்டு மூணு மாசம் கழிச்சு அப்படி எடுத்த முடிவை கடைப்பிடிக்க முடியலையேனு வெறுப்புதான் மிஞ்சும். அப்புறம், 'பட்ஜெட்லாம் சும்மா வேஸ்ட், ரொம்ப கஷ்டம்’ அப்படின்னு சொல்லி விட்டுருவோம். அதுக்குப் பதிலா 'சாப்பாட்டுச் செலவுகளை 50% குறைக்கணும்’ அப்படினு ஒரு குறிக்கோள் வச்சுக்கிட்டு அதுக்கு ஒரு மூணு மாசம் டைம் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுட்டு வந்தோம்னா சுலபமா இருக்கும். முதல் மாச இலக்கு, 1,500 ரூபாயா இருக்கிற செலவை 1,200-ஆகக் குறைப்பது. அடுத்த மாசம் 1,000 ரூபாயா ஆக்கணும். அதுக்கு அடுத்த மாசம் 750-ஆகக் குறைச்சுக்கலாம். அப்போ மூணு மாசத்துல 50% செலவு குறைஞ்சிடும்.
பட்ஜெட் அப்படிங்கிறது எல்லாம் பெரிய ராக்கெட் அறிவியல் இல்ல. 'தேவை இல்லாத செலவுகள் செஞ்சு மத்தவங்களைப் பணக்காரங்களா ஆக்குறதை விட, செலவைக் குறைச்சு என்னை நானே பணக்காரனா ஆக்குவேன்’ அப்படிங்கிற உறுதி இருந்தா போதும்... செலவுங்கிற அசூரனை அழிச்சிட்டு குபேரனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்.
இனிமேயாவது பட்ஜெட் போட்டு சந்தோஷமா இருங்க!
No comments:
Post a Comment