Saturday 11 July 2015

டூர் ஸ்பெஷல்!

கோடை வந்தாலே, கொண்டாட்டம்தான். அன்றாடப் பிரச்னைகளைத் தற்காலிகமாக மறந்து, மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் நல்ல மருந்து - சுற்றுலா!
 தமிழகத்தில் சுற்றுலா என்றால் ஊட்டி, கொடைக்கானல் நினைவுக்கு வரும். இந்த இடங்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகையால் திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பெரிய அளவில் பிரபலமாகாத, அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களை இங்கே கொடுத்திருக்கிறோம்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் இருக்கும் பல்வேறு சிறப்புகள் கொண்ட இடங்கள் இவை. புதிய இடங்களுக்குச் செல்வது; புதிய மனிதர்களைச் சந்திப்பது; புத்துணர்ச்சி தரும். வாழ்த்துகள்! 
  
 கூகுள் சர்ச் ஆப்ஷனில் 'செவன்த் ஹெவன்’ என்று நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்தால், அடுத்த வார்த்தை வால்பாறை என்றுதான் வரும். பகலில் 17 டிகிரியிலும் இரவில் 12-க்குக் கீழாகவும் இருக்கும் வால்பாறை, உண்மையிலேயே ஏழாவது சொர்க்கம்தான். ஆனைமலை வனச் சரணாலயத்தின் கீழ் வரும் இது, கடல் மட்டத்தில் இருந்து 3,400 அடி உயரத்தில் இருக்கிறது என்றால், இந்த மலைப் பிரதேசத்தின் தட்பவெப்ப நிலையை நீங்கள் யூகிக்கலாம். தென் இந்தியாவின் சிரபுஞ்சி என்றும் இதைச் சொல்கிறார்கள். பொள்ளாச்சியில் ஆழியார் அணை தாண்டி நீங்கள் வால்பாறைக்கு மலைப் பயணம் போவது அலாதியான சுகம். லேசான காலைப் பனியிலோ, கொஞ்சூண்டு மங்கிய மாலையிலே மலைப் பாதையில் பயணித்தால் நிச்சயம் யானைகள், சிங்கவால் குரங்குகள், காட்டுப் பன்றிகள், குண்டு குண்டான மலபார் அணில்கள், மான்கள் என அனைத்தையும் பார்க்கலாம். ஆனால், வால்பாறையில் சிறுத்தைகளும் யானைகளும்தான் அதிகம். இங்கு பெரும்பான்மை டீ எஸ்டேட்கள்தான். வால்பாறை எல்லையைத் தாண்டி, சோலையாறு அணை வரை தமிழ்நாட்டின் எல்லை. அதற்குப் பிறகு கேரள எல்லை ஆரம்பம். இங்கு இன்னொரு த்ரில் - அட்டைப் பூச்சிகள். வழியில் தென்படும் குட்டிக் குட்டி அருவிகளின் அழகில் மயங்கி, அட்டைப் பூச்சிகளை நம் காலில், காரில் ஏற்றிக்கொண்டு, வலியில்லாத ரத்தச் சகதியில் மிதக்க வாய்ப்பு அதிகம் - ஜாக்கிரதை! எனவே, பயணத்தின்போது அடிக்கடி காரைச் சோதனை செய்துகொள்வது நல்லது. பசுமையின் ரம்மியத்தை ரசிக்க ஆசை என்றால், இப்போதே வால்பாறைக்கு வண்டியைக் கிளப்புங்கள்.
நீங்கள் சென்னைவாசி என்றால், யோசிக்காமல் 520 கி.மீ தூரம் பயணித்து பொள்ளாச்சிக்கு வந்தாக வேண்டும். பொள்ளாச்சியில் இருந்து 64.7 கி.மீ தொலைவில், 40 கொண்டை ஊசிகளைத் தாண்டி வால்பாறைக்குச் செல்ல வேண்டும். செல்லும் வழியில் சின்னக் குற்றாலம் என்றழைக்கப்படும் குரங்கு அருவி, அட்டக்கட்டி, ரொட்டிக் கடை என்று பச்சைப் பசேல் பயணம், வயதையும் மனதையும் இளமையாக்கும்.
உணவு, உடை, உறைவிடம் என்று எதற்கும் வால்பாறையில் கவலைப்பட வேண்டாம். தடுக்கி விழுந்தால் ஹோட்டல்கள். அறை வாடகை 1,000 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கின்றன. ஏ.சி, மின் விசிறி எதுவும் தேவைப்படாத இடம். சீஸன் இரவில் கிட்டத்தட்ட 12 டிகிரி வரை குளிர் இருப்பதால், கம்பளி, ஸ்வெட்டர்கள் நிச்சயம் தேவை. இயற்கை ஆர்வலர்கள், சிற்றருவி மற்றும் ஓடைகளின் சலசலப்பினூடே உறக்கம்கொள்ள வீடு போலவே இருக்கும் தனி காட்டேஜ்களும் உண்டு. இங்கு 450 சதுர அடிகொண்ட இது போன்ற அறைக்கு நாள் வாடகை  2,500 ரூபாய். கூடுதல் படுக்கைக்கு 200 ரூபாய்.
(வால்பாறையில் இருந்து)
சோலையார் அணை - 20 கி.மீ.
சின்னக் கள்ளாறு - 15 கி.மீ
பாலாஜி கோவில் - 10 கி.மீ.
ஆழியார் அணை - 38 கி.மீ.
டாப் சிலிப் - 37 கி.மீ

எங்காவது காபிக் கொட்டைக் கடைகளைத் தாண்டும்போது, உங்கள் நாசித் துவாரங்களுக்கு ஒரு மயக்கம் கிடைக்குமே... கூர்க் எனும் குடகுமலைக்குள் நுழைந்ததுமே அந்த மயக்கத்தை அனுபவிக்கலாம். எந்நேரமும் இங்கு காபி வாசம் காற்றில் மிதந்துகொண்டே இருக்கும். கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அழகான மடிக்கேரி, குடகின் தலைநகரம். மலைக் கிராமங்கள் எல்லாவற்றிலும் காபிச் செடிகள் பதனிட முடியாது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டருக்கு மேல் 1,750 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் மலை வாச ஸ்தலங்களில் மட்டுமே காபிச் செடிகளைப் பதனிட முடியும். இங்கு எந்நேரமும் 20 டிகிரி குளிர் சில்லிட்டுக் கொண்டே இருக்கும். அடர்ந்த காட்டைப் போலவே மரங்களும், காபிச் செடிகளும், மலைகளும் நிறைந்த குடகு மலையில், விலங்குகள் பற்றிய பயம் வேண்டாம். ஆனால், அதிகாலை நேரத்தில் விதவிதமான பறவைகளை ரகசியமாகப் பார்க்கலாம். சாகசம், த்ரில்லிங் எதுவுமற்ற குடகுமலைப் பயணம், அமைதியை விரும்புபவர்களுக்கு மட்டும் அழகான சாய்ஸ். குடகுமலையில் இருந்து ஒரு மணி நேரம் பயணித்தால், 50 கி.மீ தாண்டி தலைக்காவிரி வருகிறது. இங்குள்ள காவேரியம்மன் கோயில் குளத்தில் காசு எறிந்து வேண்டினால், கேட்டது கைகூடும் என்பது ஐதீகம். இங்கிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது துபேர் யானைகள் கேம்ப். நமக்குப் பிடித்த யானையில் காட்டுக்குள் சவாரி செய்யலாம். மின்சாரம் இல்லாத துபேர் காட்டில் காட்டேஜில் தங்கலாம். சவாரிக்கு, ஆளுக்கு 1,000 ரூபாய். பக்கத்தில் இருக்கும் அபே அருவியும், இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்.

சென்னையில் இருந்து கிளம்பினாலும் சரி; கோவையில் இருந்து கிளம்பினாலும் சரி... மைசூருதான் மடிக்கேரிக்குச் செல்லும் ஒரே வழி. சென்னையில் இருந்து மைசூர் 500 கி.மீ. கோவையில் இருந்து 236 கி.மீ. மைசூரில் இருந்து மடிக்கேரி - 135 கி.மீ.
அமைதி விரும்பிகள் குடகுமலையில் தங்க மிகவும் விரும்புவார்கள். இங்கு இரண்டு விதமான தங்கும் வசதி உண்டு. ஹோட்டல்களில் ஏ.சி மற்றும் நான் ஏ.சி ரூம்கள், 1,200 ரூபாயில் இருந்து கிடைக்கின்றன. காட்டேஜ்களிலும் தங்கலாம். இதில் ஆட்களின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணம். ஒரு நபருக்கு ஓர் இரவுக்கு 1,000 முதல் 1,200 ரூபாய். இரவு உணவும், காலை டிபனும் அதிலேயே அடங்கும். வீட்டுச் சமையல் என்பது கூடுதல் ப்ளஸ். அடர்ந்த காபி எஸ்டேட்களுக்கு நடுவே, பரந்து விரிந்த மைதானத்தில், சமைக்கும்போதே 'சில்’லென்று மாறும் சப்பாத்தி - சிக்கன் கறியும்கூட இங்கு ருசியாகவே இருக்கும்.
(மடிக்கேரியில் இருந்து)
 தலைக்காவிரி - 43.4 கி.மீ.
அபே அருவி - 6 கி.மீ.
துபேர் யானைகள் கேம்ப் - 60 கி.மீ.
மல்லாலி அருவி - 57 கி.மீ
நாகர்ஹொலே நேஷனல் பார்க் - 87 கி.மீ
புஷ்பகிரி மலை - 62 கி.மீ

கர்நாடகாவில் சிக்மகளூரை, 'கர்நாடகாவின் காஷ்மீர்’ என்று அழைக்கிறார்கள். சிக்மகளூர்என்றால் 'இளைய மகளின் ஊர்’ என்று அர்த்தம். ட்ரெக்கிங்குக்கும், வனப் பகுதிகளுக்கும் பிரபலமான இந்த சிக்மகளூர் பகுதியில்தான் நம் நாட்டில் முதல் முதலாக காபி பயிரிடப்பட்டதாம். கடல் மட்டத்தில் இருந்து 1,090 மீட்டர் உயரத்தில் இருக்கும் சிக்மகளூரில் உள்ள மலைப் பகுதிகள், வெயில் காலத்திலும் குளிர்ச்சியாகவே இருக்கும் என்பதால், கோடை விடுமுறையில் இங்கு கூட்டம் அள்ளும். இந்தியாவில் இருப்பதிலேயே பன்முகம் கொண்ட சுற்றுலாத் தலங்களுள் சிக்மகளூரும் ஒன்று. மலைப் பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், கோயில்கள், வன ஆர்வலர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வரும் இடம். கர்நாடகாவின் உயர்ந்த இடமான முல்லையனகிரியும், புகழ்பெற்ற பத்ரா புலிகள் சரணாலயமும் சிக்மகளூருக்கு அருகில்தான் இருக்கின்றன.  
சிக்மகளூரிலேயே தங்குவதற்கு நல்ல இடங்கள் இருக்கின்றன. பட்ஜெட் அறைகளில் இருந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை, ரிசார்ட்டுகளில் இருந்து காட்டேஜ்கள் வரை பல சாய்ஸ் உண்டு. ஒருநாள் தங்குவதற்கு
ரூ.650 முதல் ரூ. 25,000 வரைகூட கட்டணம் வசூலிக்கும் இடங்கள் இருக்கின்றன. எல்லாமே நீங்கள் எத்தனை நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
சிக்மகளூர் ரயில் நிலையம் கடந்த ஆண்டு இறுதியில்தான் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் சிக்மகளூருக்கு இன்னும் ரயில் சேவை துவக்கப்படவில்லை. ஆனால், சிக்மகளூரில் இருந்து 50 கி.மீ தூரத்தில் இருக்கும் பிரூர் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து செல்லும் வாஸ்கோ, ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. பிரூரில் இறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக சிக்மகளூரை அடையலாம்.  கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து சிக்மகளூருக்கு சாலை மார்க்கமாகச் செல்பவர்கள் மைசூர் வழியாக செல்லலாம். சென்னையில் இருந்து செல்பவர்கள் பெங்களூரு, ஹாஸன் வழியாக சிக்மகளூருவை அடையலாம். கோவை-மைசூரு-சிக்மகளூர்-380 கி.மீ. சென்னை-பெங்களூரூ-சிக்மகளூர்  600 கி.மீ
(சிக்மகளூரில் இருந்து)
கெம்மங்குண்டி  60 கி.மீ
முல்லையனகிரி  22 கி.மீ
குதிரேமுக்  107 கி.மீ
பாபா புதன் கிரி  388 கி.மீ

எப்பொழுதுமே வறண்டுகிடக்கும் அணைகளாகவே பார்த்து சலிப்பில் இருக்கிறவர்கள் நீங்கள் என்றால், உங்களுக்குச் சரியான சாய்ஸ் நெய்யாறு அணை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அருவிகளுக்கு இணையாக 'ஹோ’வென பேரிரைச்சலுடன் எந்நேரமும் பொங்கி வரும் அணை நீரை நீங்கள் ஆனந்தமாக ரசிக்கலாம். இங்குள்ள ஏரியில் போட்டிங் செய்வது அலாதியான இன்பம். ஆனால், போட்டிங் கட்டணம் கொஞ்சம் காஸ்ட்லி. குறைந்தகட்டணமே 650 ரூபாயில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. இன்னொரு சிறப்பான விஷயம் - இங்கு படகு டிரைவர்கள் அனைவருமே பெண்கள். அணையின் பின் பக்கம், அசைவப் பிரியர்கள் அணை மீன் வறுவலை ஒருபிடி பிடிக்கலாம். போட்டிங் முடித்துவிட்டு, அணையின் வலது பக்கம் நெய்யாறு வன விலங்குச் சரணாலயம். 128 சதுர கி.மீ-க்குப் பரந்து விரிந்திருக்கும் இதில் புலி, சிறுத்தை, யானை, மான்கள், தேவாங்குகள் என்று 39 வகையான விலங்குகள் உள்ளன. ட்ரெக்கிங் விரும்பிகளுக்கென்று, காட்டுக்குள் ட்ரெக்கிங் வசதியும் உண்டு. காட்டுக்குள்ளேயே கொம்பை என்னும் இடம் வழியாக மீன்முட்டி அருவிக்கு, காட்டிலாகாவினரின் பாதுகாப்பில் நீங்கள் ட்ரெக்கிங் செல்லலாம். ஒரு ஆளுக்கு 1,000 ரூபாய் கட்டணம். நடுவில் தங்கும் இடத்துக்குத் தனிக் கட்டணம். இரவில் காட்டுக்கு நடுவில் தங்குவது செம த்ரில்லிங்கான விஷயம். ட்ரெக்கிங்கை விரும்பாதவர்கள் நெய்யாறு ஏரி வழியாக படகிலேயேகூட மீன்முட்டி அருவிக்குச் செல்லலாம். சிங்கங்கள் உலவும் பூங்காவில் பயணிக்க வேண்டுமென்றால், அது காஸ்ட்லி. நெய்யாறில் முதலைகள் புத்துணர்வு முகாம் இருக்கிறது. 2007-ல் 'முதலை வேட்டையாளர்’ ஸ்டீவ் இர்வின் நினைவாக எழுப்பப்பட்ட இந்த முதலைப் பூங்காவில், 60-க்கும் மேற்பட்ட முதலைகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. யானைகள் புத்துணர்ச்சி முகாமும் உண்டு. யானைப் பாகன்களின் உதவியுடன் நீங்கள் யானைகளைக் குளிப்பாட்டலாம்; உணவளிக்கலாம்; குட்டி யானைகளுடன் ஊர்வலம் போகலாம்!
கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு 55 கி.மீ. அங்கிருந்து, 32 கி.மீ. தூரம் பயணித்தால், நெய்யாறு அணை வருகிறது. இந்தப் பயணத்தில் நீங்கள் மோசமான சாலைகளை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும்.
நல்ல அறைகள் வேண்டுமென்றால், திருவனந்தபுரத்தில் இரவு தங்கிவிட்டு, மறுநாள் நெய்யாறு கிளம்பிப் போவதே நலம். அல்லது நெய்யாறு போகும் வழியில் நெய்யாற்றங்கரையில்தான் அடுத்து அறைகள் கிடைக்கும். அதுவும் ரொம்ப சீப்! இரண்டு பேருக்கு 500 ரூபாயிலிருந்து 750 வரை, சாதாரண மின்விசிறிகள் கொண்ட அறைகளில் மிதமான வெக்கையில் தங்க வேண்டியிருக்கும். இயற்கை விரும்பிகளுக்கு இன்னொரு சாய்ஸ் - நெய்யாறு அணையிலேயே ரூம்கள் அட்டகாசமாகக் கிடைக்கின்றன. ஆனால், இதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே நீங்கள் புக் செய்துவிட வேண்டும். நெய்யாறில் இருப்பது இந்த ஒரே ஒரு காட்டேஜ்தான். கட்டணம் - இரண்டு படுக்கை வசதிகொண்ட ஒரு ரூமுக்கு 1,000 ரூபாய்.
(நெய்யாறு அணையில் இருந்து)
கோவளம் பீச் - 34 கி.மீ.
பொன்முடி ஹில் ஸ்டேஷன்-46.2 கி.மீ
வர்க்கலை பீச் - 68.3 கி.மீ
பத்மநாபசுவாமி கோவில் - 39 கி.மீ.
திருவல்லம் அணை - 46 கி.மீ.

சந்தேகமே இல்லை. கடவுளின் தேசம் நிச்சயமாக கேரளாதான்! அதுவும் சைலன்ட் வேலியில் குடிகொண்டிருக்கும் அழகும், காட்டிலாகாவினரின் கடுமையான பாதுகாப்பும் - இதை நூறு சதவிகிதம் பறைசாற்றுகிறது. கோவையில் இருந்து 113 கி.மீ. தொலைவில், கேரள எல்லையில் உள்ள சைலன்ட் வேலிக்குச் செல்ல வேண்டுமென்றால், மனதில் 'தில்’  வேண்டும். சைலன்ட் வேலியின் நுழைவு வாயிலில் காரை பார்க் செய்துவிட்டு, ஜீப்பில்தான் பயணிக்க வேண்டும். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் அனுமதி. ஒரு ஜீப் டிரைவர், ஒரு கைடு பாதுகாப்புடன் நம்மை அழைத்துச் சென்றுவர, ஒரு ஜீப்புக்கு 1,500 ரூபாய் கட்டணம். கேரளக் காடுகளில், யானைகளின் வழித்தடத்தின் இறுதி எல்லை சைலன்ட் வேலிதான் என்பதால், செல்லும் வழியில் நிச்சயம் யானைகளைக் காணும் வாய்ப்பு உண்டு. மலபார் அணில்கள், நாகப் பாம்புகள், மலைப் பாம்புகள், சிறுத்தைகள், புலி என்று நமது அன்றைய ராசிபலனுக்கு ஏற்றபடி தரிசனம் கிடைக்கலாம். ரிசர்வ் ஃபாரஸ்ட் ஏரியா எல்லையின் முடிவில், 'கோர் ஃபாரஸ்ட்’ எனும் அடர்ந்த காட்டுப் பகுதி ஆரம்பமாகிறது. இங்கிருந்து நடந்துதான் செல்ல வேண்டும். மனதில் திடமும், கால்களில் வேகமும் உள்ளவர்களுக்கான ஏரியா இது. இங்கு ஆங்காங்கே கேமரா வைக்கப்பட்டிருப்பதால், காட்டு விலங்குகளுக்குள்ளே நடக்கும் டெரர் ஆன விஷயங்கள், அப்படியே கேமராவில் பதிவாகிவிடுகின்றன. சைலன்ட் வேலியின் அலுவலக முகப்பில், புலி ஒன்று யானையை வேட்டையாடி ரசித்து ருசித்துச் சாப்பிடுவதை அப்படியே படம் பிடித்து வைத்திருக்கிறார்கள்.
இங்கு 250 வயதான அரிய மருந்துத் தன்மைகொண்ட மரங்களும் உண்டு. இங்குள்ள 125 அடி உயர டவரில் ஏறி நின்று மொத்தமாக சைலன்ட் வேலியின் அழகை ரசிக்கலாம். 3 மணி நேரம் காட்டுக்குள் ஜீப்பில் த்ரில் பயணம், சாகச விரும்பிகளுக்கானது.
கோவைதான் சைலன்ட் வேலிக்கு சென்டர் பாயின்ட். சென்னையில் இருந்து கோவைக்கு 503 கி.மீ. கோவையில் இருந்து சைலன்ட் வேலிக்கு 114 கி.மீ. ஆனைகட்டி, அட்டப்பாடி, முக்காலி வழியாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரப் பயணம்.

சைலன்ட் வேலியில் 'எக்கோ’ டூரிஸம் காட்டேஜ்கள் நிறைய உள்ளன. ஒரு நாளைக்கு சிங்கிள் ரூம் வாடகை 1,500 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. இங்கு காஸ்ட்லியான 'ட்ரீ டாப்’ காட்டேஜ்களும் உண்டு. அதாவது, மரத்தினாலான தங்கும் வசதிகொண்ட அறைகள். இதன் நாள்  வாடகை 2,500 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது. காலை உணவு மட்டும் காம்ப்ளிமென்ட்ரி.
(சைலன்ட் வேலியில் இருந்து)
மலம்புழா அணை - 76 கி.மீ
அட்டப்பாடி - 22 கி.மீ
பாலக்காடு கோட்டை - 73.6 கி.மீ
நெல்லியம்பதி - 127 கி.மீ
மசினகுடி - 168.5 கி.மீ

 
ஹார்ஸ்லி ஹில்ஸ், ஆந்திர மாநிலத்தில் கர்நாடக எல்லை அருகே இருக்கும் இந்த இடத்தை 'ஆந்திராவின் ஊட்டி’ என்றும் அழைக்கிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 1,265 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஹார்ஸ்லி ஹில்ஸ், சென்னை, பெங்களூரு மற்றும் திருப்பதி நகரங்களில் இருந்து எளிதாகப் பயணம் செய்யக்கூடிய தூரத்தில் இருக்கிறது. பெரிய திட்டமிடல் ஏதும் இல்லாமல், வார இறுதிகளில் சென்னையில் இருந்து செல்வதற்குச் சிறந்தது. இந்த இடத்தை அடைவதற்கான சாலைகளும், சூழலும் மிக ரம்மியமாக இருக்கும். இந்தியாவில் 'ஞீஷீக்ஷீதீவீஸீரீ’ (பிளாஸ்டிங் பந்தில் நம்மை உள்ளே விட்டு உருட்டிவிடுவார்களே.. அதுதான்) விளையாட்டு உண்டு. ஆனால், முன்பதிவு கட்டாயம். பூக்களும், சந்தன மரங்களும், யூக்கலிப்டஸ் மரத்தின் வாசமும், மிதக்கும் மேகங்களும் உங்கள் மனதில் இருக்கும் அத்தனை சோர்வையும் நீக்கிவிடும். ஹார்ஸ்லி ஹில்ஸின் தட்பவெப்ப சூழ்நிலைகள் 5 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஹார்ஸ்லி ஹில்ஸில் அதிக நாட்கள் தங்கி சுற்றிப் பார்ப்பதற்கு ஏதும் இல்லை என்றாலும், ஒரு க்விக் டிரிப் அடிக்க சிறந்த இடம்.
(ஹார்ஸ்லி ஹில்ஸில் இருந்து)
கலிபண்டா  0.3 கி.மீ
கல்யாணி மரம்  0.4 கி.மீ
திம்மம்மா ஆலமரம் (உலகின் மிகப் பெரிய ஆலமரம்)  75 கி.மீ
பசுமைப் பூங்கா  0.4 கி.மீ
கௌண்டிண்ய வனவிலங்கு  சரணாலயம்  133 கி.மீ
ஹார்ஸ்லி ஹில்ஸை சாலை மார்க்கமாக அடைவதுதான் எளிது. ஹார்ஸ்லி ஹில்ஸ் அருகே இருக்கும் மதனப்பள்ளிக்கு பல இடங்களில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. ஆனால், மதனப்பள்ளியில் இருந்து ஹார்ஸ்லி ஹில்ஸின் அடிவாரத்துக்குச் செல்ல ஒரே ஒரு பேருந்துதான் உண்டு. எனவே, சொந்த வாகனத்தில் ஹார்ஸ்லி ஹில்ஸுக்குச் செல்வதே தேவையற்ற ப(ய)ண உளைச்சலைத் தடுக்கும்.
திருப்பதியில் இருந்து  120 கி.மீ
மதனப்பள்ளியில் இருந்து  40 கி.மீ
பெங்களூரூவில் இருந்து  140 கி.மீ
சென்னையில் இருந்து  270 கி.மீ
ஹார்ஸ்லி ஹில்ஸில் ஆந்திரப் பிரதேச அரசு சுற்றுலாத் துறை,  ஒரு ரிஸார்ட்டை வைத்திருக்கிறது. இங்கு தங்குவதற்கு அவர்களுடைய வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம். உணவும் நன்றாக இருக்கிறது. ஹார்ஸ்லி ஹில்ஸில் 700 ரூபாயில் இருந்து 7,000 ரூபாய் வரை தங்குவதற்கு இடங்கள் உள்ளன. வார இறுதி நாட்களில் இந்த வாடகை விலை ஏறிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். எங்கு தங்குவதாக இருந்தாலும், முன்பதிவு செய்துவிட்டு பின்னர் பயணத்தைத் துவங்குவது நலம்.

 
'எத்தனை முறைதான் குற்றாலத்துக்கே செல்வது?’ என்று அலுத்துக் கொள்கிறவர்கள் கர்நாடகாவில் இருக்கும் ஜாக் அருவிக்குச் செல்லலாம். இது இந்தியாவின் இரண்டாவது உயரமான அருவி. கிட்டத்தட்ட 335 மீட்டர் உயரத்துக்கு நீர் கொட்டுகிறது. ஷிமோகா அருகே இருக்கும் இந்த அருவிக்கு கெர்சோப்பா அருவி என்ற பெயரும் உண்டு. ஷராவதி நதியில் இருந்து உருவாகும் ஜாக் அருவி, ரோரர், ராக்கெட், ராஜா, ராணி ஆகிய நான்கு அருவிகளைக்கொண்டது. அருவிகளின் அடிப்பகுதிக்குச் செல்வதற்கு கர்நாடக சுற்றுலாத் துறை படிக்கட்டுகளை அமைத்துள்ளது. இங்கிருக்கும் வியூ பாயின்ட்டில் இருந்து பார்த்தால், முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் ஜாக் அருவியை ரசிக்கலாம். இந்த அருவிக்கு அருகில்தான் லிங்கனமக்கி அணையும் இருக்கிறது. ஜாக் அருவியில் நீர் பெருக்கெடுத்துக் கொட்டுவதைக் காண, ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதத்துக்குள் சென்று வாருங்கள்.
 (ஜாக் அருவியில் இருந்து)
கார்வார்  150 கி.மீ
லிங்கனமக்கி அணை  60 கி.மீ
இக்கேரி அகோரேஸ்வரர் கோயில்  32 கி.மீ
ஹொன்னேமரடு  20 கி.மீ
ஜாக் அருவியை சாலை மார்க்கமாக அடைவதே எளிது. தமிழகத்தில் இருந்து செல்பவர்கள் கோவை, மைசூர், ஷிமோகா, சாகர் வழியாக சென்றால், 550 கி.மீ. சென்னை, பெங்களூரூ, ஷிமோகா, சாகர் வழியாக சென்றால், 750 கி.மீ. ரயில் மூலம் செல்ல விரும்புகிறவர்கள் சாகர் அல்லது தலகுப்பா ரயில் நிலையத்தில் இறங்கி ஜாக் அருவிக்குச் செல்லலாம். தமிழகத்தில் இருந்து நேரடி ரயில்கள் கிடையாது. பெங்களூரு சென்று அங்கிருந்து ரயில் மாறிச் செல்ல வேண்டும்.
சென்னையில் இருந்து  550 கி.மீ
கோவையில் இருந்து  750 கி.மீ
பெங்களூரூவில் இருந்து  400 கி.மீ
ஷிமோகாவில் இருந்து  100 கி.மீ
ஜாக் அருவி இருக்கும் பகுதியிலே கர்நாடக சுற்றுலாத் துறையின் மயூரா ஹோட்டல் இருக்கிறது. ஆனால், இங்கிருந்து 100 கி.மீ தூரத்தில் இருக்கும் ஷிமோகாவில் இரவு தங்கிவிட்டு, அங்கிருந்து வாகனத்தில் வருவதே சிறந்தது. ஷிமோகாவில் தங்கும் இடங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதுபோல நிறைய இருக்கின்றன. 400 ரூபாயில் இருந்து ஒருநாள் தங்குவதற்கான வாடகை ரூ, 15,000 வரை இருக்கும் ஹோட்டல்கள் இருக்கின்றன. ஆனால், முன்பதிவு செய்துவிட்டுச் செல்வதே, கடைசி நேரத்தில் அறை இல்லாமல் அலைய வேண்டியதைத் தடுக்கும்.

தமிழகத்தின் பிரபல சுற்றுலாத் தலமான ஊட்டிக்கு அருகே இருக்கிறது முதுமலை. நீலகிரி மலையின் அடிவாரத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களும் முக்கோண வடிவில் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள முதுமலை, அவசியம் பார்க்க வேண்டிய இடம். தென்னிந்தியாவின் முக்கியமான வனப் பகுதியும்கூட.  யானை, புலி, கரடி போன்ற அபூர்வ விலங்குகள் அதிகம் வசிக்கும் இந்தக் காட்டுக்குள் ஒருமுறை வலம் வந்தால், கானகத்தின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்தவர்கள் ஆவோம்.
முதுமலை என்பது தமிழக வனப் பகுதியைக் குறிக்கிறது. இதில் சில கிராமங்கள் இருந்தாலும் அவை அளவில் மிகச் சின்னவை. இதில், பெரும்பாலும் பழங்குடியினர்கள் வசிக்கிறார்கள். அதில், முக்கியமான ஓர் ஊர்தான் மசினகுடி. முதுமலை வன விலங்குச் சரணாலயத்தின் ரிசப்ஷன் அமைந்திருக்கும் இடம் தெப்பக்காடு, மாயாறு மின் திட்டப் பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் இந்தப் பகுதியில் உள்ள சிற்றூர்களுக்கு மசினகுடிதான் முக்கியமான ஊர்.  
ஊட்டியைப்போல குளிரோ அல்லது சென்னையைப் போல வெயிலோ மசினகுடியில் இருக்காது. வனத்துறையின் சஃபாரியில் காட்டுக்குள் சென்று வந்தால், த்ரில் குறையாத அனுபவம் நிச்சயம். யானைகள், மான்கள், மலை அணில், சிறுத்தை, காட்டு மாடுகள், அதிர்ஷ்டம் இருந்தால் புலியைக்கூட பார்க்கலாம். காலை, மாலை வேளைகளில் ஊட்டி - மைசூரு நெடுஞ்சாலையைக் கடந்து, காட்டு யானைகள் நீர் அருந்த குடும்பம் குடும்பமாக வருவதைக் காணலாம். தெப்பக்காடு யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு காலை, மாலை உணவு அளிப்பதைப் பார்க்கலாம். காட்டுக்குள் ஓடும் ஒரு சிறு ஓடைதான் தமிழக - கர்நாடக எல்லையைப் பிரிக்கும் கோடு. அந்தப் பக்கம் பந்திப்பூர் வன விலங்குச் சரணாலயம். அங்கும் சஃபாரி, ட்ரெக்கிங் போன்றவை உண்டு. அப்படியே பந்திப்பூரைக் கடந்து குண்டக்கல் என்ற ஊரில் இடதுபுறம் செல்லும் சாலையைப் பிடித்து சில கி.மீ தூரம் சென்றால், கேரளா மாநிலத்தில் நுழைந்து வயநாடு வன விலங்குகள் சரணாலயம். அப்படியே சுல்தான்பத்தேரி என்ற ஊருக்குள் புகுந்து, இடதுபுறம் வனம் புகுந்தால், கூடலூர் வழியாக மீண்டும் மசினகுடிக்கு வந்தடையலாம்.
ஊட்டியில் இருந்து மைசூர் நெடுஞ்சாலையில் கூடலூர் வழியாகவும் செல்லலாம். அல்லது கல்லட்டி வழியாகவும் செல்லலாம். ஈரோடு - சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் வழியாக குண்டக்கல், பந்திப்பூர் வழியாக மசினகுடி வரலாம். மலை ஏறி இறங்க யோசிப்பவர்களுக்கு ஒரே வழி, பெங்களூரு - மைசூரு வழியாகச் சுற்றிக்கொண்டு வர வேண்டும்.
ஊட்டி - மசினகுடி (கல்லட்டி வழி) - 29 கி.மீ. கூடலூர் வழி - 68 கி.மீ
கோவை - மசினகுடி - 116 கி.மீ
சத்தியமங்கலம் - மசினகுடி - 150 கி.மீ
பெங்களூரு - மசினகுடி - 240 கி.மீ
தெப்பக்காடு ரிசப்ஷன் அருகே வனத்துறை விடுதிகள் இருக்கின்றன. முன்பதிவு செய்வது அவசியம். மசினகுடி ஊருக்குள்ளும் அதைச் சுற்றிலும் ஏராளமான தங்கும் விடுதிகளும், ரிசார்ட்டுகளும் இருக்கின்றன. சீஸனில் இருவர் தங்கும் அறைக்கு குறைந்தது 700 ரூபாயில் இருந்து 5,000 ரூபாய் வரை கிடைக்கும்.
(மசினகுடியில் இருந்து)
தெப்பக்காடு யானைகள் காப்பகம் - 8 கி.மீ
பந்திப்பூர் சரணாலயம் - 45 கி.மீ
கபினி அணை - 140 கி.மீ
மைசூரு - 120 கி.மீ

கோவா, உலக அளவில் ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம். இந்தியக் கலாசாரமும் போர்த்துக்கீசிய கலாசாரமும் ஒருங்கிணைந்திருப்பதால், உணவு முதல் உடை வரை சுற்றுலாவாசிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும். கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜி. கொங்கன் பகுதியில் அமைந்திருக்கும் கோவா மாநிலம்தான் பரப்பளவில் இந்தியாவின் மிகச் சிறிய மாநிலம். ஆனால் கோவா, நம் நாட்டின் செல்வச் செழிப்பு மிக்க மாநிலங்களில் ஒன்று. நம் நாட்டின் மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகையில் கோவாவின் பங்கு மட்டும் 12 சதவிகிதம்.  கோவாவின் ஒரு பக்கம் அரபிப் பெருங்கடல் வருடும் கடற்கரைகளும், மறுபக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரும் இருக்கின்றன. இதற்கு நடுவே அமைந்துள்ள கோவா மாநிலத்தை ஐந்து ஆறுகள் பாய்ந்து பசுமையாக்குகின்றன. அதனால், வன விலங்குகள், பறவைகள் சரணாலயங்களும் ஏராளம். கோவாவில் இருக்கும் ஏழு சரணாலயங்களில் மிகப் பிரபலமானது, டாக்டர் சலீம் அலி பறவைகள் சரணாலயம். கோவாவைக் கைப்பற்றிய போர்ச்சுகீசியர்கள் கோவாவின் அழகில் மயங்கி கோவாவை கோல்டன் கோவா, கிழக்கின் ரோம் என்றெல்லாம் புகழ்ந்திருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து கிளம்புபவர்கள், பெங்களூரு ரூட்டைத் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்கும். கோவையில் இருந்து செல்பவர்கள் மங்களூரு வழியாகச் செல்லலாம். ஆனால், சாலை மோசமாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
சென்னை டு பனாஜி  944 கி.மீ.
பெங்களூரு டு பனாஜி  590 கி.மீ.
கோவை டு பனாஜி  964 கி.மீ
மதுரை டு பனாஜி  1,034 கி.மீ
கோவாவில் 600 ரூபாய் முதல் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், காட்டேஜ்கள் இருக்கின்றன. ஆனால், பீச் ரிசார்ட்டுகளில் குடும்பத்துடன் தங்குவது சரியானதாக இருக்காது. இங்கு சீஸன் நேரத்தில், ரூம் வாடகை மிக அதிகமாக இருக்கும். முன்பதிவு செய்துவிட்டுப் பயணத்தைத் துவங்குவது நல்லது.
(கோவாவில் இருந்து)
அன்ஜுனா பீச்  76 கி.மீ
டாக்டர் சலீம் அலி பறவைகள் சரணாலயம்  60 கி.மீ
ஙிணீsவீறீவீநீணீ பீமீ ஙிஷீனீ யிமீsus  47 கி.மீ
தூத் சாகர் அருவி  74 கி.மீ
அகுயதா கோட்டை  18 கி.மீ

 
மேகங்கள் தவழும் மலை என்பதால், 'மேகமலை’ என்று பெயர் வந்திருக்கலாம். திடீர் மழை, தரையில் தவழும் மேகங்கள், அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியன், எப்போவாவது கேட்கும் இன்ஜின் உறுமல் சத்தம்... மாசற்ற பூமி மேகமலை. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உயர்ந்து நிற்கும் இந்த மலைத் தொடர், ஒரு பக்கம் மேற்குத் தொடர்ச்சி மலைகளாலும், இன்னொரு பக்கம் வருஷநாடு மலைத் தொடராலும் இணைந்துள்ளது. பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் இரு பக்கமும் கரை கொண்ட வாய்க்கால் போல மலைகள் உயர்ந்து நிற்க... இரு மலையின் முகடுகள் வரை மேவி நிற்கின்றன தேயிலைச் செடிகள். இந்த மலைச் சாலையில் மொத்தம் 18 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. சிங்கிள் ரோடு என்பதுடன் பக்கவாட்டுத் தடுப்புச் சுவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எதுவும் சாலையில் இல்லை. எனவே, கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைந்த காரை எடுத்துக்கொண்டு செல்வதைத் தவிர்க்கலாம்.

இரு மலைத் தொடர்களுக்கு நடுவே, ஆங்காங்கே பசுமையான தேயிலைச் செடிகள் சூழ அழகான நீர்த் தேக்கங்கள் இருக்கின்றன. இந்த நீரை ஒருங்கிணைத்து சிறிய அளவில் சுருளியாறு மின்சாரத் திட்டம் செயல்படுகிறது. மஹாராஜா மெட்டு என்ற இடத்தில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும் ரசிக்கலாம். இங்கிருந்து முல்லைப் பெரியார் நீர் தேக்கத்தையும், கண்ணகி கோவிலையும் பார்க்க முடியும். மஹாராஜா மெட்டின் மேற்குப் பகுதியில்தான் 'மூல வைகை ஆறு’ உருவாவதாகக் கூறப்படுகிறது.
ஹைவேவிஸ் குடியிருப்புப் பகுதியில் இருந்து 'தூவானம்’ என்று கூறப்படும் இடத்துக்கு இரண்டு கி.மீ. மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்த் தேக்கம் மலையின் முகட்டில் இருக்கிறது. இங்கிருந்து வெளியேறும் நீர்தான் கீழே உள்ள சுருளி அருவிக்குச் செல்கிறது. மலை முகட்டில் இருந்து வெளியேறும் நீர், பள்ளத்தாக்கில் இருந்து மேல்நோக்கி வரும் காற்றில் சிதறடிக்கப்பட்டு மேகப் பொதியாக மாறி நீர்த் துளிகள் காற்றில் மிதக்கின்றன. அதனால் இந்த இடத்துக்கு 'தூவானம்’ என்று பெயர். மேகமலையில் யானைகள் நடமாட்டமும் உண்டு.
மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மஹாராஜா மெட்டு, இரவங்கலாறு என தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளுக்கும், எஸ்டேட் டிவிஷன்களுக்குமான பெயர்களைத் தாங்கி இருக்கிறது இந்த மலைப் பகுதி.
சின்னமனூர் - மேகமலை  45 கி.மீ
மதுரை - சின்னமனூர் 100 கி.மீ
திண்டுக்கல் - சின்னமனூர்  100 கி.மீ
ஹைவேவிஸ் என்ற இடத்தில் டவுன் பஞ்சாயத்து அலுவலகமும், அத்துடன் 13 தங்கும் அறைகளும் உள்ளன.  மூவர் தங்கும் அறை 750 ரூபாய். நால்வர் தங்கும் அறை 1000 ரூபாய். இங்கு முன்பதிவு செய்துவிட்டுச் செல்வது நல்லது (04554 232225). அல்லது தேனியில் தங்கலாம். தேனியில் அனைத்துவிதமான விடுதிகளும் இருக்கின்றன.
(சின்னமனூரில் இருந்து)
சுருளி அருவி  27 கி.மீ
தேக்கடி  44 கி.மீ
தேனி - வைகை அணை  15

'கடவுளின் தேசம்’ எனச் சொல்லப்படும் கேரளாவில் இருக்கும் ஆழப்புழா, முழுக்க முழுக்க நீராலானது. சாலையின் ஒருபுறம் கூடவே வருகிறது கால்வாய். அதன் கரையில் வீடுகள் வரிசைகட்டி நிற்கின்றன. ஆங்காங்கே கால்வாயைக் கடக்க உயரமான சிறு நடை பாலங்கள், அதன் கீழே சிறு சிறு வள்ளங்கள் (படகு) சாவகாசமாகப் பயணிக்கின்றன. கேரளாவில் ஒவ்வோர் ஊருக்கும் அரசு, தனியார் என இரண்டு பஸ் நிலையங்கள் உள்ளன. ஆலப்புழாவில் உள்ள அரசுப் பேருந்து நிலையத்துக்கு எதிரேயே படகுப் போக்குவரத்து 'ஜெட்டி’ இருக்கிறது. அதாவது, நகரப் பேருந்தில் பயணம் செய்வதுபோல டிக்கெட் எடுத்து குமரகம், கோட்டயம் போன்ற நகரங்களுக்குச் சென்று வரலாம். ஒரு படகில், பஸ்ஸில் ஏற்றுவது போல சுமார் 60 பயணிகள் வரை ஏற்றுகிறார்கள். ஆலப்புழாவைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு (தீவுகள்) சாலை வசதி இல்லை. எனவே, அவர்களுடைய போக்குவரத்து வாகனம், படகுதான். வீட்டுக்கு ஒரு சின்ன வள்ளம் கட்டாயம் இருக்கும். அவசரக் காலத்துக்கு இதுதான் லைஃப் போட்!
குட்டநாடு காயல் என்று அழைக்கப்படும் இந்த நீர்ப் பகுதி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். வெளிநாட்டவரும், வெளிமாநிலத்தவரும் தினசரி ஆலப்புழாவில் குவிந்தவண்ணம் இருக்கின்றனர். காஷ்மீரை அடுத்து படகு வீடுகளுக்குப் பெயர் பெற்று விட்டது ஆலப்புழா. ஒரு காலத்தில் நெல், வாழை, தென்னை விவசாயமும், மீன் பிடித் தொழிலும், வருடம் ஒருமுறை படகுப் போட்டியும் நடந்துகொண்டு இருந்த காயலில், இப்போது திரும்பிய பக்கமெல்லாம் படகு வீடுகள் மிதக்கின்றன. மழைக்கு ஏங்கும் நம் மனசுக்கு, இங்கு சென்றால் எல்லாமே நீரிலேயே மிதக்கிறார்களே என்ற பொறாமை ஏற்படுவது நிச்சயம். 
படகு வீடுகளில் பல வகை உண்டு. சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட்ரூம், ட்ரிபிள் பெட்ரூம், ஏ.சி, ஏ.சி இல்லாதது, லக்ஸ¨ரி போட் எனத் தேர்ந்தெடுக்க ஏராளமான சாய்ஸ். மணிக்கு 500 ரூபாய் முதல் நாளன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக் கட்டணங்கள் (உணவுடன் சேர்த்து). ஒருநாள் என்பதை இரவு பகல் கணக்காகக்கொண்டு பல கி.மீ. தூரக் காயலில் வலம் வருகின்றன இந்தப் படகு வீடுகள். தவிர, ஆழப்புழாவிலும் கோட்டயம் அருகே உள்ள குமரகத்திலும் பிரபலமான ரிசார்ட் ஹோட்டல்கள் நிறைந்துள்ளன.
கோவை  240 கி.மீ
தேனி  200 கி.மீ
திருநெல்வேலி  213 கி.மீ
திரும்பிய பக்கம் எல்லாம் தென்னையும் தண்ணீராகவும் காட்சியளிக்கும் நீர்வழிப் பாதைகளில் பஸ்ஸில் பயணிப்பதுபோல ஆலப்புழா, கோட்டயம், குமரகம் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்யலாம். படகு வீட்டில் மிதந்துகொண்டே தங்கலாம். இந்தப் பகுதியில் புகழ் பெற்ற கேரள ஆயுர்வேத மசாஜ் ரிசார்ட்டுகள் நிறைய இருக்கின்றன. குமரகம் டூரிஸ்ட் காம்ப்ளக்ஸில் பறவைகள் சரணாலயம் இருக்கிறது.

ஆனைமலையில் உள்ள டாப் சிலிப் தனித்துவம் வாய்ந்த இடம். காரணம், இது ஓர் அடர்ந்த காடு. இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம்தான் டாப் சிலிப் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள வளர்ப்பு யானைகள் முகாம் பிரசித்தி பெற்றது.
மலையில் ஏறும்போதே இருபுறமும் அடர்ந்த மூங்கில்கள் சாலைக்குக் குடை பிடிக்கும். காற்றில் மூங்கில்கள் உராயும் சத்தம், சட்டென்று அடர்ந்த கானகத்தில் புகுந்த த்ரில்லை உண்டாக்குகிறது. டாப் சிலிப்பில் இருப்பது ஒரே சாலைதான். அது, கேரள எல்லைக்குள் அமைந்திருக்கும் பரம்பிக்குளம் அணை வரை செல்கிறது. அடர்ந்த காட்டுப் பகுதியையும், இயற்கையான சூழலையும் கண்கள் சலிக்கும் அளவுக்கு அனுபவிக்கலாம். வனப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை போன்ற விலங்கு இனங்களும், அபூர்வமான பறவை இனங்களும் இருக்கின்றன. இயற்கை ஆர்வலர்களுக்கும் இயற்கைச் சூழலில் தங்கிச் செல்ல விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம் இது.
முழுக்க முழுக்க தமிழக வனத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் டாப் சிலிப்பில், தனியாருக்குச் சொந்தமான நிலம் எதுவும் இல்லை. அதனால், தனியார் விடுதியோ, கடைகளோ கிடையாது. ஒரே ஒரு உணவு விடுதி, ஆரம்பச் சுகாதார நிலையம், வன விலங்கு மியூசியம், வனத் துறை பணியாளர்கள் தங்கும் குடியிருப்புகள் ஆகியவை மட்டுமே இங்கே உண்டு.
பரம்பிக்குளம்
கேரள மாநிலத்தில் இருக்கும் பரம்பிக்குளம் அணைக்குச் செல்ல, டாப் சிலிப்பில் இருந்து 23 கி.மீ. தூரம். ஆனால், கேரள வனத் துறையின் அனுமதி வாங்கிய பின்னரே அணையைக் காணச் செல்ல முடியும். நாள் ஒன்றுக்கு சுமார் 30 வாகனங்களை மட்டுமே அனுமதிப்பார்கள். இந்தியாவில் உள்ள முக்கிய சூழியல் இடங்களில் ஒன்று பரம்பிக்குளம்.
பொள்ளாச்சி - டாப்சிலிப்  35 கி.மீ.
கோவை - டாப்சிலிப்  75 கி.மீ.
வனத் துறையினர், யானை மீது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். இந்தப் பயணம் சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும். இங்குள்ள யானைகள் முகாமில் இருபதுக்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றன. சஃபாரி அழைத்துச் செல்ல இதில் சில யானைகளைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். யானையில் செல்லும்போது மிருகங்களைக் காணும் வாய்ப்பு சில சமயம் கிடைக்கும்.

ஆந்திரப் பிரதேசம் கர்நூல் மாவட்டத்தில் நல்லமல்லா மலைப் பிரதேசத்தில் இருக்கும் ஸ்ரீசைலம், புகழ்பெற்ற சிவதலம். ஆந்திராவில் தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் இது ஒன்றுதான். சிவனின் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மலை உச்சியில் கோயில், கீழே கிருஷ்ணா நதி. அபாரமான அழகுடன் இருக்கிறது ஸ்ரீசைலம். திருப்பதியைப் போல நீண்ட மலைப் பயணம் மேற்கொண்டுதான் இந்த இடத்தை அடைய வேண்டும். தேசிய வன விலங்குகள் சரணாலயத்துக்குள் நுழைந்துதான் ஸ்ரீசைலம் செல்ல வேண்டும். இந்த ஊர், வரலாற்றுச் சிறப்புமிக்கது. சுமார் 1,000 ஆண்டுகள் பழைமையான கோயில் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் மல்லிகார்ஜுனர், ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபர்பதநாதர் என்று அழைக்கப்படும் சிவன் சுயம்பு மூத்தியாகக் காட்சியளிக்கிறார். நந்திதேவர் அவதரித்த ஸ்தலம் என்ற பெருமையும் கொண்டது ஸ்ரீசைலம். மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் இருக்கும் ஸ்ரீசைலம் கோயில் 50 கி.மீ தூரம்தான் என்றாலும் மலைப் பாதையில் வளைந்து நெளிந்து ஏறிச் செல்ல, சுமார் மூன்று மணி நேரம் ஆகும். அடர்ந்த வனப் பகுதி என்பதால், மாலை 6 மணி முதல் காலை ஆறு மணி வரை தனியார் வாகனங்கள் அனுமதிஇல்லை. 
ஆந்திராவின் பெரிய அணைகளில் ஒன்று ஸ்ரீசைலம் அணை. கிருஷ்ணா நதியின் குறுக்கே, உயரமான மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் இந்த அணையில் இருந்துதான் கண்டலேறு அணைக்குத் தண்ணீர் திருப்பப்பட்டு, அங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு நீர் வருகிறது. மலை மீதிருந்து பார்த்தால், அணையின் பிரம்மாண்டம் நம்மை வியக்கவைக்கும். கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பாதையில் இறங்க இறங்க... ஆற்றின் ஆழம் மேலும் ஆச்சரியப்படுகிறது. இந்த அணையில் நீர் மின் நிலையங்களும் அமைந்திருப்பதால், மின்சாரக் கோபுரங்கள் நாம் இதுவரை பார்த்திராத வடிவத்தில் எல்லாம் இருக்கின்றன.
சென்னை  480 கி.மீ
திருப்பதி  370 கி.மீ
ஓங்கோல்  175 கி.மீ
ஸ்ரீசைலத்தில் கோயிலுக்குச் சொந்தமான விடுதிகள் உள்ளன. தனியார் விடுதிகள் குறைவே! எனவே, முன்பதிவு செய்துகொண்டு செல்வது நல்லது.
மல்லிகார்ஜுனர் கோயில்,
ஸ்ரீசைலம் அணை,

தென்னிந்திய வரலாற்றில் ஆர்வம் இருக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் ஹம்பி. ஹம்பியில் இருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கே இரண்டு நாளுக்கு மேல் தேவைப்படும். ஒரு பக்கம் துங்கபத்ரா நதியும், ஒரு பக்கம் பாறைகளும், நடுவில் புல்வெளிகளும் என வித்தியாசமான இடம் ஹம்பி. விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக இருந்த இந்த இடம், இப்போது அழிந்த நிலையில் இருந்தாலும், பண்டைய காலத்தில் இந்த இடம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்யவைக்கிறது. இங்கிருக்கும் கோயில்களும் அதன் கலை நுணுக்கத்துக்குப் புகழ் பெற்றவை. வித்லா கோயிலில் இருக்கும் புஷ்கரணி குளம் அவ்வளவு அழகு.
மிகவும் பிரசித்தி பெற்ற விருபாக்ஷா கோயிலின் வாசலில் இருந்து துவங்கும் ஹம்பி பஜார் வீதியையும், வீதியின் ஓரத்தில் இருக்கும் கால் மண்டபங்களையும் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் தேர்த் திருவிழா எப்படி இருந்திருக்கும் என்பது கண் முன் தோன்றுகிறது. நவம்பர் முதல் மார்ச் வரை ஹம்பி செல்வதற்கு உகந்த மாதங்கள். ஒவ்வோர் ஆண்டின் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் 'ஹம்பி உத்சவம்’ நடக்கும். ஒலியிலும், ஒளியிலும், இசையிலும், நடனத்திலும் ஹம்பியின் இன்னொரு கோணத்தை நேரில் பார்ப்பது மிகமிக அழகாக இருக்கும். ஹம்பியில் இருக்கும் இடங்கள் ஒவ்வொன்றும் தொலைவாக இருக்கும். அதனால், ஒரு சைக்கிளையோ, டூவீலரையோ இங்கு வாடகைக்கு எடுத்துச் சென்று சுற்றிப் பார்த்து வரலாம். இங்கு இருக்கும் அனைத்து இடங்களும் இப்போது யுனேஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரூவில் இருந்து ஹம்பி 350 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பெங்களூரூவில் இருந்து சித்ரதுர்கா சென்று, அங்கு வலதுபக்கம் திரும்பி ஹாஸ்பேட் வழிகாகச் செல்ல வேண்டும். சித்ரதுர்கா வரைதான் சாலை நன்றாக இருக்கும். சென்னையில் இருந்து சென்றால் சித்தூர், அனந்தபூர், பெல்லாரி வழியாக ஹம்பி செல்லலாம். மொத்தம் 600 கி.மீ தூரம்.
கமலாபுரம் மியூஸியம்
மாதங்கா மலை (சூரிய அஸ்தமனம்)
விருபாக்ஷா கோயில்
ஹம்பி பஜார்
லக்ஷ்மி நரசிம்மர் கோயில்
விதலா கோயில் (பாறைப் பல்லக்கு)
ஆஞ்சநேயர் மலை
ஹம்பியில் கெஸ்ட் ஹவுஸ்கள்தான் இருக்கின்றன. ஏடிஎம்கள் ஹம்பியில் கிடையாது. அதனால், ஹம்பியில் இருந்து 12 கிமீ தூரத்தில் இருக்கும் ஹோஸ்பேட் அல்லது 4 கி.மீ தூரத்தில் இருக்கும் கமலாபூர் நகரங்களில் தங்கலாம். சின்ன லாட்ஜ்களில் இருந்து சூப்பர் ஸ்டார் ஹோட்டல்கள் வரை இங்கு இருக்கின்றன.

No comments:

Post a Comment