Friday 3 July 2015

ஆறறிவு இன்ஜின்! - ஆறறிவு இன்ஜின்!

வே ரியபிள் வால்வு டைமிங் இன்ஜினை ( V V T-i &Variable Valve Timing Engine) . ஆறறிவு கொண்ட இன்ஜின் என்று வர்ணிக்கிறார்கள்!
4 ஸ்ட்ரோக் இன்ஜினில் ஒரு சிலிண்டருக்கு இரண்டு வால்வுகள் இருக்கும். அவை இன்லெட் வால்வு, எக்ஸாஸ்ட் வால்வு. கார்புரேட்டரிலிருந்து வரும் பெட்ரோல் கலந்த காற்றுக் கலவையை இன்ஜின் சிலிண்டருக்குள் இன்லெட் வால்வு அனுமதிக்கும். அதாவது, பிஸ்டன்மேலிருந்து கீழே செல்லும்போது சிலிண்டரில் உள்ளே ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, இன்லெட் வால்வு திறந்து அதன் வழியாக பெட்ரோல் கலவை சிலிண்டருக்குள் செல்லும். பிஸ்டன் முழுவதுமாகக் கீழே சென்றடைந்ததும், இந்த இன்லெட் வால்வு மூடிக்கொள்ளும். அதன் பிறகு, பெட்ரோல் கலவை, மேல் நோக்கி வரும் பிஸ்டனால் அழுத்தப்பட்டு, ஸ்பார்க் ப்ளக்கில் ஏற்படும் தீப்பொறியின் உதவியால் வெடிக்கும். அப்போது பிஸ்டன் கீழ் நோக்கித் தள்ளப்படுகிறது. இப்படித்தான் இன்ஜினுக்குத் தேவையான சக்தி உருவாக்கப்படுகிறது.
இதெல்லாம் முடிந்தபின் கடைசியாக, அதாவது நான்காவது ஸ்ட்ரோக்கில் சிலிண்டருக்குள் இருக்கும் எரிந்த புகை, எக்ஸாஸ்ட் வால்வு வழியாக வெளியேறும்.
இந்த இரண்டு வால்வுகளையும் சரியான நேரத்துக்கு திறந்து மூடவைப்பதுதான் ‘கேம் ஷாஃப்ட்’. சிலிண்டரில் மேலும் கீழுமாக செல்லும் பிஸ்டன், கிராங்க் ஷாஃப்ட் எனப்படும் ஒரு பாகத்தைச் சுழற்றுகிறது. இதிலிருந்து கிடைக்கும் சக்தியில்தான் வாகனம் இயங்குகிறது. இந்த கிராங்க் ஷாஃப்ட்டுடன் கேம் ஷாஃப்ட்டை டைமிங் பெல்ட், கியர், செயின் ஆகியவற்றில் ஒன்றினால் இணைக்கப்பட்டு, அதன் மூலம் சுழலவைக்கப்படுகிறது. இந்த கேம் ஷாஃப்ட், சிலிண்டர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு நீளம் இருக்கும். இதில் புரொஃபைல் ( Profile)என்ற பகுதி, அதாவது உருளை வடிவில் இருக்கும் ராடில் சமமற்ற மேடு பகுதியினால் உந்தப்பட்டு வால்வுகளை திறந்து மூடும்படி செய்கிறது.
பிஸ்டனின் இயக்கத்துக்கு ஏற்ப வால்வுகளின் செயல்பாடு இருக்கும். இதைத்தான் டைமிங் (Timing) என்று சொல்வார்கள். இன்ஜின் அதிக வேகத்திலும், மிகக் குறைந்த வேகத்திலும் இயங்கும்போது இந்த டைமிங் கொஞ்சம் தவறலாம் (மிஸ்ஸிங்). மிக அதிக வேகத்தில் இயங்கும்போது அதிக எரிபொருள் தேவைப்படும். குறைவாக இயங்கும்போதோ குறைந்த எரிபொருள் போதுமானதாக இருக்கும்.
வேகமாக இயங்கும்போது இன்லெட் வால்வு தேவைக்கேற்ப எரிபொருளை அனுமதிக்க திறந்திருப்பதில்லை. இதனால் வாகனத்தின் செயல்பாடு குறையும். அது போல், மெதுவாக இயங்கும்போது, குறைந்த அளவு எரிபொருள் கலவையே போதுமானது. ஆனால், இன்லெட் வால்வு கொஞ்சம் அதிகமாக எரிபொருளை சிலிண்டருக்குள் அனுமதித்துவிடுகிறது. அதாவது, தேவைக்கு அதிகமாகத் திறக்கிறது. இதனால் எரிபொருள் பாதி எரிந்தும் எரியாமல் வெளியேறுகிறது. இதனால் எரிபொருள் வீணாகும்.
வால்வுகளை இயக்கும் கேம் ஷாஃப்ட்டின் வடிவமைப்பில் மாறுதல்கள் செய்து, இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் தொழில்நுட்பம்தான் V V T-i . கேம் சாஃப்ட்டில் உள்ள புரொஃபைல் பகுதியின் வடிவமைப்பைத் துல்லிதமாக மாற்றம் செய்யப்பட்டு, இன்ஜின் இயக்கத்துக்கு ஏற்ப எவ்வளவு எரிபொருள் தேவைப்படுகிறதோ அதை மட்டும் அனுமதித்து எரிபொருளை மிச்சப்படுத்துவதுதான் இந்தத் தொழில்நுட்பம். இன்ஜினின் தேவையை அறிந்து, அதற்கேற்ப செயல் படுவதால்தான் ‘ஆறறிவு இன்ஜின்’ என்று வர்ணிக்கிறார்கள்.
1960-களில் கியோவானி டொரோசா என்பவர் இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இதற்கு முதலில் காப்புரிமை வாங்கியது ஃபியட் நிறுவனம்தான். அதன்பின் ஜெனரல் மோட்டார்ஸ் 1975-ம் ஆண்டு இதில் மாறுதல்கள் செய்து காப்புரிமை வாங்கியது. 1980-ல் ஆல்போ ரோமியோ கார்தான் இந்தத் தொழில்நுட்பத்துடன் வந்த முதல் கார். அதன்பின் 1989-ம் ஆண்டு ஹோண்டா நிறுவனம் இதில் பல முன்னேற்றத்துடன் மாறுதல்களைச் செய்து VTECஎன்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் தற்போது இருக்கும் கார்களில் டொயோட்டா-இனோவா, கரோலா, கேம்ரி மற்றும் ஹோண்டா-சிட்டி ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்துடன் வந்துள்ள கார்கள்!

No comments:

Post a Comment