Friday 3 July 2015

பெட்ரோல் - 'குபீர்' உண்மைகள்!


எத்தனை வழிகளில் நீங்கள் ஏமாறுகிறீர்கள்!
பெட்ரோல் பங்க்குகளைப் பொறுத்தவரை அவர்களால் நம்மை மூன்று விதங்களில் ஏமாற்ற முடியும்!
ம் அலுவலகத்துக்கு வந்திருந்த வாசகர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றைச் சொன்னபோது 'குபீர்’ என்றது நமக்கு! அவர் சொல்லச் சொல்ல நாமும் கூட இப்படி ஏமாந்திருப் போமோ என்றுதான் தோன்றியது. அப்படி அந்த வாசகர் சொன்னது பெட்ரோல் பங்க் ஒன்றில் அவருக்கு கிடைத்த 'தொடர்’ அனுபவத்தைதான்.
''பெட்ரோல் போடறதுக்கு முன்னாடி, 'ஜீரோ செக் பண்ணிக்கோங்க’னு நம்மகிட்ட சொன்னதும் சொல்லி வச்சமாதிரி யாராவது வந்து, நம்மோட கவனத்தை திசை திருப்பிடறாங்க. 'பில் வேணுமா, சில்லறை இருக்குதா’ இப்படி ஏதாவது கேட்கவும் நாமும் அதற்கு பதில் சொல்வோம். ஆனா அந்த கேப்புல நமக்கு குறைவான பெட்ரோலை போட்டு கதையை முடிச்சிருப்பாங்க! எதேச்சையா எனக்கு சந்தேகம் வந்து தொடர்ச்சியா கவனிச்சப்போதான் தெரிய வந்துச்சு அந்த குறிப்பிட்ட பங்க்ல நம்மை ஏமாத்தறாங்கனு. எல்லா இடத்திலேயும் இப்படித்தான்னு நான் சொல்லலை. ஆனா நாமளும் உஷாரா இருந்துக்கிடறது நல்லதுதானே!'' என்றார் அந்த வாசகர்.
சொல்லி வைத்த மாதிரி அந்த வாசகர் வந்துசென்ற மறுநாளே நமக்கு மெயில் மூலமாக இன்னொரு வாசகரும் தனது பெட்ரோல் அனுபவத்தை எழுதி ஆதங்கப்பட்டிருந்தார். அந்த மெயிலில் இருந்த விஷயம் இதுதான்...    
''எப்போதுமே நான் ஒரே பெட்ரோல் பங்கில்தான் பெட்ரோல் போடுவேன். அதுவும் ஆயிரம் ரூபாய்க்குத்தான் போடுவேன். ஒருமுறை ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னேன். ஆனால் அவர்களோ 800 ரூபாய் அளவுக்கு மட்டுமே போட்டுவிட்டு என்னிடம் 1000 ரூபாய்க்கு போட்டுவிட்டதாகக் கூறிவிட்டார்கள். அவசரத்தில் மீட்டரை நான் பார்க்காதது அவர்களுக்கு வசதியாகப் போய் விட்டது போலும். ஆனாலும் அந்த பங்கில் எதோ தவறு நடக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டேன்.
அவர்கள் செய்யும் மோசடியைக் கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மீண்டும் அதே பங்க்குக்கு இன்னொரு நாள் போனேன். பெட்ரோல் போடச் சொல்லிவிட்டு அலட்சியமாக இருக்கிற மாதிரி நடித்தேன். ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னால் வெறும் 800 ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் போட்டார்கள். 800 ரூபாய் வரும்போது என்னிடம் கிரெடிட் கார்டு சிலிப்பைக் கொண்டுவந்து கொடுத்து கையெழுத்துக் கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு அவர்கள் செய்யும் தகிடுதத்தங்கள் புரிந்தது. 800 என்ற காட்டிய மீட்டர் டக்கென்று 1000 ரூபாயை பிளாஷ் செய்துவிட்டது. இங்கேதான் நம்மை ஏமாற்றிவிடுகிறார்கள். அது எப்படி 800 என்பது 1000-மாக மாறிவிட்டது என்பது மட்டும் இன்று வரை எனக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இதற்கு முன்பு எத்தனை முறை என்னை ஏமாற்றினார்களோ எனக்குத் தெரியாது'' என்று வேதனையோடு கடிதத்தை முடித்திருந்தார்.
பெட்ரோல் பங்க்குளைப் பொறுத்தவரை அவர்களால் நம்மை மூன்றே மூன்று விதங்களில்தான் ஏமாற்ற முடியும் என்கிறார்கள். ஒன்று கலப்படம் செய்வது மூலமாக. இரண்டாவது நம் கவனத்தை திசை திருப்புவது மூலமாக குறைவாகப் போடுவது.  மூன்றாவது மிஷினிலேயே அளவை மாற்றிவிடுவது.
1 கலப்படம்: எப்படி நடக்கிறது..?
பொதுவாக பெட்ரோலில் மண்ணெண்னெய், நாப்தா அல்லது பயன்படாத ஆயிலைக் கலந்து விற்று விடுவார்கள். பெரும்பாலும் ஊருக்கு வெளியே வனாந்திரமாக இருக்கும் பெட்ரோல் பங்க்குகளில்தான் இது போல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் கலப்பட பெட்ரோலுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே!
பாதிப்பு
இத்தகைய கலப்பட பெட்ரோல் போட்டு வாகனத்தை ஓட்டும்போது குறைவான மைலேஜே கிடைக்கும். மைலேஜ் குறைவு என்பதை விட வாகனத்தை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னை, என்ஜின் கெட்டுப்போதல் என பல வகைகளில் நம் பர்ஸைப் பதம் பார்த்துவிடும். மேலும் சுற்றுச் சூழலும் மாசுபடும்.
எப்படிக் கண்டுபிடித்து தவிர்ப்பது?
பெட்ரோல் தரத்தை வாடிக்கைய£ளர்கள் யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்க முடியும். இதற்கான உபகரணங்கள் அனைத்தும் பெட்ரோல் பங்க்கிலேயே இருக்கும். காரணம் தினமும் பெட்ரோலின் அடர்த்தியை பங்க் உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் வண்டியில் இருந்து பெட்ரோலை இறக்கும் போதே ஹைட்ரோமீட்டர் உதவியுடன் பெட்ரோலின் அடர்த்தியை குறித்து வைத்துக்கொள்வார்கள். நாம் சோதனை செய்யும்போது இரண்டு அடர்த்திக்கும் இடையே அதிக வித்தியாசம் இருந்தால், சந்தேகமே தேவையில்லை அது கலப்பட பெட்ரோல்தான்.
அடுத்தது, வடிதாள் (filter paper) மீது சில சொட்டுகள் பெட்ரோல் விட்டால் தூய்மையான பெட்ரோலாக இருந்தால் எளிதில் ஆவியாகிவிடும். கலப்பட பெட்ரோல் என்றால் சில நிமிடங்கள் ஆகும்.
2. மெஷினிலேயே அளவு குறைவது!
பெட்ரோல் பங்கில் இருக்கும் மெஷின்கள் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்து சீல் வைக்கும் பொறுப்பு மத்திய அரசின் கீழ் இயங்கும் எடை மற்றும் அளவு (வெயிட் அண்ட் மெஷர்மென்ட்ஸ்) துறையைச் சேர்ந்தது. இவர்கள் சீல் வைத்த பிறகு அந்த எடையையோ, அளவையோ மாற்றக் கூடாது. ஆனால் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் அதை மாற்றிவிடுகிறார்கள். இதனால் வெளியில் இருந்து பார்க்கும் போது நமக்கு மெஷின் சரியான அளவு காண்பிப்பது போல தெரிந்தாலும், நமக்கு கிடைப்பதென்னவோ குறைந்த அளவு பெட்ரோல்தான்.
3 கவனத்தை திசை திருப்புதல்.
ஜீரோ பார்க்கவிடாமல் 'கார்டா, கேஷா’ என்று கேட்பதில் ஆரம்பித்து பல வழிகளில் நம் கவனத்தை திசை திருப்பிவிடுகிறார்கள். அதேபோல் முக்கால்வாசி போட்டதும் நம் கவனத்தை திசை திருப்பிவிட்டு, 'போட்டாச்சு, வண்டியை முன்னே எடுங்க’ என்பார்கள். நாம் சொன்ன அளவைத்தான் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதற்கு முன்பா கவே மீண்டும் ஜீரோ ஆக்கி வைத்து விடுவார்கள்!
இப்படியும் நடக்கலாம்!
பெட்ரோல் குழாய் எப்போதும் மேல்நோக்கியே இருக்கும். காரணம் அந்த குழாயில் சிறிதளவு பெட்ரோல் இருக்கும். மதிய நேரங்களில் வாடிக்கை யாளர்கள் யாரும் வராத சமயத்தில் குழாயை கீழ் நோக்கி வைத்தால் 100 மில்லி வரை பெட்ரோல் அல்லது டீசல் கிடைக்கும். அந்த சமயத்தில் வரும் வாடிக்கையாளருக்கு 100 மில்லி வரை குறைவாகவே கிடைக்க வாய்ப்புள்ளது.
திட்டம் போட்டு நம் பர்ஸை சுரண்டுபவர்கள் எத்தனையோ அவதாரங்கள் எடுத்து வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும் விழிப்பாக இருந்துவிட்டால் போதும் அவர்களது பாச்சா எடுபடாமல் போய்விடும். அதனால் எப்போதுமே விழிப்பாக இருங்கள். அது நீங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணமல்லவா!  
- வா.கார்த்திகேயன்
படம்: ச.இரா.ஸ்ரீதர்

பெட்ரோல் போடும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?
ஆரம்பத்தில் ஜீரோ பார்ப்பது மட்டும் போதாது; பெட்ரோல் போடும் வரை கவனத்தை சிதறவிடாமல் இருப்பது நல்லது.
பெட்ரோல் போட்டு முடித்த பிறகே பணம் அல்லது கார்டை கொடுக்கவும்.
கார்டு கொடுப்பதாக இருந்தால் உங்கள் கண் பார்வை படுகிற இடத்திலேயே கார்டை ஸ்வைப் செய்யும்படி கேளுங்கள்.
காருக்கு பெட்ரோல் அல்லது டீசல் போடும் போது காருக்குள் உட்கார்ந்திருக்க வேண்டாம். வெளியே வந்து சரியாக பெட்ரோல் போடுகிறார்களா என்று பாருங்கள். கண்ணாடியை துடைக்கிறேன் என்று சொல்லி சிலர் உங்கள் கவனத்தை திருப்பினாலும் மீட்டர் மீது ஒரு கண் வைத்திருங்கள்.
100, 500 என்று ரவுண்டான தொகைக்கு  பெட்ரோல் போடாமல் ஐந்து லிட்டர், பத்து லிட்டர் என்கிற கணக்கில் பெட்ரோல் போடுங்கள். இதனால் முழுமையான தொகை உடனே வராது. அது போன்ற சமயங்களில் ஏமாறும் வாய்ப்பும் குறைவு.
ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என குறைந்த அளவில் பெட்ரோல் போட்டால் ஏமாறும் வாய்ப்பு குறைவு. ஆனால் இது சிறிய இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ஒரே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதில் தவறில்லை. அப்போதும் அதிகக் கூட்டம் இல்லாத நேரம் பார்த்துப் போடலாம். எனினும் கவனம் தேவை!
''அளக்கச் சொல்லுங்கள்!''
த்தகைய புகார்கள் குறித்து ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் பேசியபோது, ''நீங்கள் சொல்வது போல நடப்பதில்லை. அப்படி முறைகேடு நடப்பதாக மக்கள் நினைத்தால் அங்கிருக்கும் புகார் பதிவேட்டில் பதிவு செய்யலாம். அந்த பெட்ரோல் பங்கின் மேலாளர் அல்லது சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் மேலாளரிடம் புகார் செய்யலாம். ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அந்த பெட்ரோல் பங்கிலேயே அளவு மற்றும் தரத்தை சோதிக்குமாறு கேட்கலாம். இதை சோதித்துக் காண்பிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்கின் கடமை!'' என்றார்கள்.
கோர்ட்டுக்குப் போகலாம்!
துபோன்ற மோசடிகளை மக்கள் நீதிமன்றங்களுக்கு எடுத்து செல்கிறார்களா என்று வழக்கறிஞர் சுபாஷினியிடம் கேட்டோம். ''இது போன்ற வழக்குகளை மக்கள் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல ஏனோ பெரும்பாலும் விரும்புவதில்லை. காரணம் ஏமாறும் தொகை  சிறிய அளவில்தானே என்று  நினைப்பதாக இருக்கலாம். ஆனால் சிறுகச் சிறுக எவ்வளவு ஏமாற்றப்படுகிறோம் என்று நினைப்பதில்லை. இது மாதிரியான மோசடிகளுக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்திலோ அல்லது கிரிமினல் வழக்காக நீதிமன்றத்திலோ தாக்கல் செய்யலாம். தவிர, சம்பந்தபட்ட பெட்ரோல் நிறுவனத்தின் அலுவலகத்திலும் புகார் செய்யலாம். ஆனால் எங்கு புகார் செய்தாலும் நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை தகுந்த ஆதாரத்தோடு தெரிவிக்க வேண்டும். அது புகார் செய்கிறவரின் கடமை. கிரிமினல் வழக்கு தொடர்ந்தால் வழக்குக்கு ஏற்ப தண்டனை வாங்கித் தரலாம். ஆனால் இழப்பீடு கிடைக்காது. நுகர்வோர் நீதிமன்றத்துக்குப் போகும் போது இழப்பீடு கிடைக்கும். உங்கள் நோக்கம் எது என்பதற்கேற்ப நீங்கள் முடிவெடுக்கலாம்'' என்றார்.

No comments:

Post a Comment