Friday 19 June 2015

பைக் ஆக்சஸரீஸ் அவசியமா?

பைக் வாங்க முடிவு செய்த உடனேயே... என்னென்ன ஆக்சஸரீஸ் வாங்கலாம் என்று யோசிப்போம். ஆனால், அவற்றில் பல ஆக்சஸரீஸ் தேவையே இல்லை. அப்படி என்றால், 
'எது தேவை... எதெல்லாம் தேவை இல்லை?’
ஹேண்ட் கிரிப்
ஹேண்டில் பாரில் இருக்கும் ஹேண்ட் கிரிப் விலை இருபதோ, முப்பதோதான். ஆனால், இதை வாங்கிப் பொருத்தித்தான் ஆக வேண்டுமா? பைக் தயாரிப்பு நிறுவனத்தால் பொருத்தப்படும் ஹேண்ட் கிரிப், கை எந்த அளவுக்கு கிரிப்பரைப் பிடித்து இருக்க வேண்டும்; திராட்டிலைத் திருகும்போது கை எந்த அளவுக்குத் திரும்பும் என்பதை எல்லாம் தெளிவாகச் சோதித்து, வரையறுத்துதான் பொருத்துகிறது. அதைப் பொருட்படுத்தாமல், அதன் மீதே வேறு கிரிப்பரைப் பொருத்துவதால், ஹேண்ட் கிரிப் பொசிஷன், பேலன்ஸ், ஆக்ஸிலரேஷன் என எல்லாமே பாதிக்கப்படும்.
இன்ஜின் கார்டு
சேறு அடிக்கும் என்பதற்காகப் பொருத்தப்படும் இன்ஜின் கார்டு, காற்றைத் தடுக்கிறது. சேறு அடித்தால் நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். பைக்குகளில் பெரும்பாலும் இருப்பது ஏர் கூலிங் இன்ஜின்தான். பைக் முன்னோக்கிச் செல்லும்போது, காற்றைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அந்தக் காற்று இன்ஜின் மீது மோதுவதால், இன்ஜின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, அதைத் தடுக்கும்விதமாக இன்ஜின் கார்டு பொருத்துவதைத் தவிர்க்கலாம்.
சீட் கவர்
பைக்குடன் வரும் ஒரிஜினல் சீட்டில், கை வைத்து அழுத்தித் தேய்த்துப் பாருங்கள்... கை சுலபமாக நகராது. அதுபோல், அமர்ந்திருப்பவர் எதிர்பாராதவிதமாக பிரேக் அடிக்கும்போது, சீட்டில் இருந்து நழுவிவிடாமல் இருக்க, இதுபோல கிரிப்புடன் சீட் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு கட்டப் பரிசோதனைகளுக்குப் பிறகு உருவாக்கப்படும் இந்த சீட்டை, 150 ரூபாய்க்கு கவர் வாங்கிப் போட்டு காலி செய்துவிடுகிறோம். எனவே, சீட் கவர் தேவையில்லாதது என்பதைப் புரிந்துகொள்வோம்.
டேங்க் கவர்
பைக்கின் அழகை எடுத்துக்காட்டுவது போலத்தான் டேங்க் வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், அதன் அழகை நாம் மறைத்து டேங்க் கவர் பொருத்துவோம். மேலும், லக்கேஜ் வைப்பதும் இந்த டேங்க்கின்மீதுதான். டேங்க்கின் மீது எதையும் வைக்காமல் பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது.
இண்டிகேட்டர் கார்டு
இண்டிகேட்டர்களுக்குக் கூட கம்பியால் வலை அடித்துப் பாதுகாப்பதைப் பார்த்திருப்போம். இது அவசியமா? தேவையே இல்லை. காரணம், பைக் எதன் மீதாவது உரசினால், இந்த இண்டிகேட்டர் உடையும். இதுவே, கம்பியால் வலை செய்து இருந்தால், கம்பி பொருத்தப்பட்டு இருக்கும் கவுல் சேர்ந்தே பாதிக்கப்படும்.
டெஃப்ளான்
புது பைக் டெலிவரி எடுக்கும்போது டெஃப்ளான் பாலீஷ் போட்டால் நன்றாக இருக்கும் என்று சில டீலர்கள் கூறுவது உண்டு. ஆனால், அது தேவை இல்லை. காரணம், புது பைக் பாலீஷ் போடப்பட்டுத்தான் விற்பனைக்கே வரும். அதில் மீண்டும் பாலீஷ் போடுவது தேவையற்றது. பைக்கின் பளபளப்பு குறைந்த பிறகு இதைப் பயன்படுத்தலாம்.
பிரேக் பெடல் ஷூ
பைக் பிரேக் பெடலுக்கு ஷூ பொருத்தும் வழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது அவசியமில்லாத, ஆபத்தான வேலை. ஃபுட் ரெஸ்ட்டில் கால் வைக்கும் அளவுக்கு ஏற்ப, கால் வைத்து மிதித்தால், வழுக்காமல் இருப்பதுபோல வடிவமைக்கப்படுகிறது. இதில், ஷூ மாட்டுவது இந்த அளவைப் பாதிக்கும்.
எக்ஸ்ட்ரா ஹாரன்
பைக்குடன் வரும் ஹாரனை நாம் மதிப்பது இல்லை. அது நம் சட்ட விதிமுறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்துக்கு என ஒரு வகையும், இலகு ரக வாகனங்களுக்கு என ஒருவகையும் இருக்கிறது. இதன் சத்தத்தை வைத்துத்தான் பின்னால் வருவது பைக்கா, காரா என்பதையே தெரிந்துகொள்வோம். ஆனால், எக்ஸ்ட்ரா ஹாரனைப் பொருத்தினால், நம் முன்னால் செல்கிறவர்களுக்குத் தேவையில்லாத குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.    
எது அவசியம்?
பைக்குக்குத் தேவையான ஆக்சஸரீஸ் என சில உண்டு. ஆனால், நம் நாட்டினருக்காக, நம்மால் நாமே உருவாக்கிய ஒரே ஒரு ஆக்சஸரீ - சாரி கார்டு. இதுதான் நம் நாட்டில் அவசியமாக வாங்கிப் பொருத்தப்பட வேண்டியது. அதேபோல், பில்லியன் ரைடர் ஹேண்ட் கிரிப், ஹூக் போன்றவற்றை, தேவை இருந்தால் வாங்கிப் பொருத்தலாம்.
கிராஷ் கார்டு
பம்பர் அல்லது கிராஷ் கார்டு இல்லாத பைக் இல்லை. இது, உலக நாடுகளில் வழக்கத்தில் இல்லை. காரணம், அங்கே அடிக்கடி யாரும் கீழே விழுவது இல்லை போல. நம் நாட்டில் எப்போது வேண்டுமானாலும் நாம் கீழே விழுவோம். அப்படிக் கீழே விழும்போது, கால் பைக்கில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இது உதவும். ஆனால், இதில் சில ஆபத்தும் உண்டு. விபத்துகளின்போது வேறு வாகனங்களில் இந்த கிராஷ் கார்டு சிக்கினால் சிக்கல்தான். மேலும், பைக் எதன் மீதாவது மோதினால், பம்பர் அடிவாங்கி ஃப்ரேமைப் பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.

உங்கள் பைக்கில் எவ்வளவு சுமை ஏற்றலாம்?

 'சாதாரண மொபெட் வைத்திருப்பவரே மூட்டைகளை ஏற்றிச் செல்கிறார். நான் 150 சிசி பைக் வைத்திருக்கிறேன். அதில் மூன்று பேர் அமர்ந்து சென்றால் ஒன்றும் ஆகிவிடாது' என நினைப்பவரா நீங்கள்? உங்கள் நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள்.

வாகனத்தில் இவ்வளவுதான் எடையேற்ற வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது. அதை மீறினால் வாகனம் கலகலத்துப்போவது உறுதி. கார், பைக் எதுவாயினும் அதற்கென அதிகபட்சமாக எடையேற்றப்படும் அளவை 'பே லோடு' எனக் குறிப்பிட்டு, மொத்த அளவை GVWR என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு Maximum Permissible Gross Vehicle Weight Rating என்று அர்த்தம். ஓர் வாகனத்துக்கு ட்ரை வெய்ட், கெர்ப் வெய்ட் என இரண்டு எடை அளவுகள் உள்ளன. ட்ரை வெய்ட் என்பது ஆயில், எரிபொருள், கூலன்ட் அல்லாமல் இருப்பது. இவை எல்லாம் சேர்ந்த மொத்த எடைதான் கெர்ப் வெயிட் எனக் குறிப்பிடப்படுகிறது.

இதில், 'பே லோடு' என்பது, கெர்ப் வெயிட்டுடன் அதிகபட்சமாக ஏற்றக்கூடிய சுமையைச் சேர்ந்து GVWR எனக் குறிப்பிடப்படுகிறது. கெர்ப் வெயிட் அதிகம் இருந்தால், நிறைய சுமையேற்றலாம் என நினைப்பது தவறு. அது வாகனத்தின் எடையைக் குறிக்கும் அளவு மட்டுமே. எவ்வளவு சுமையேற்றலாம் என்பதை 'பே லோடு' (Maximum payload and luggage) என ஓனர்ஸ் மேனுவலில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

பொதுவாக பெரிய மோட்டார் சைக்கிள் அல்லது கார் இருந்தால், அதிகமாக சுமையேற்றிச் செல்லக் கூடாது. ஏனெனில், ஒவ்வொரு வாகனமும் குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டவை. அதில், சுமையேற்றிச் செல்வது என்பது ஒரு பகுதிதான். 100 சிசி பைக்கில் அதிகப்படியான சுமை 130 கிலோதான். இது, இந்தியாவில் உள்ள பைக்குகளில் நடைமுறையில் இருக்கிறது.

இந்த எடை ஓட்டுநர், பின்னால் அமர்ந்திருப்பவர், உடன் எடுத்துச் செல்லும் பொருட்கள், அக்சஸரீஸ் போன்றவற்றுடன் அடங்கும். இதுவே 125, 150, 200 சிசி வரை கிட்டத்தட்ட 130 கிலோதான் பே லோடு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். அதிக சிசி இருந்தால், கூடுதல் எடை ஏற்றலாம் என்று நினைக்கிறோம். இன்ஜின் சக்தி அதிகரித்தால், இழுவைத் திறனும் அதிகரிக்குமே என நினைக்கலாம். இன்ஜினில் இருந்து கிடைக்கும் சக்தியானது, இந்த எடையேற்ற அளவைத் தவிர உபரி சக்தி - பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், ஹேண்ட்லிங் போன்றவற்றுக்கு உதவுகிறது. குறிப்பிட்ட எடைக்கு மேல் சுமையேற்றினால், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ், அதிகபட்ச வேகம், பிக்அப் ஆகியவை பாதிக்கப்படும்.


வாகனத்தின் ஒவ்வொரு பாகமும் குறிப்பிட்ட பே லோடு அளவுக்குத்தான் டிஸைன் செய்யப்பட்டது. அதிக எடையேற்றினால், வாகனத்தின் அனைத்துப் பாகங்களுக்கும் கூடுதல் சுமை ஏற்படும். ஒரு வாகனத்தில் பத்து கிலோ மட்டும் அதிகமாக சுமையேற்றி இருந்தால், அந்த வாகனம் நின்றுகொண்டு இருக்கும்போது (ஸ்டாட்டிக் லோடு) பிரச்னை இல்லை. ஆனால், பயணத்தின்போது இந்த பத்து கிலோவானது (டைனமிக் லோடு) பன்மடங்கு பெருகும். இந்த அதிகப்படியான சுமை, வாகனத்தின் எந்தெந்த பாகங்களைப் பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
சஸ்பெஷன், பாடி

ஷாக் அப்ஸார்பர், காயில் ஸ்பிரிங், சஸ்பென்ஷன் புஷ் கிட் ஆகியவற்றின் தேய்மானம் அதிகமாகும். செயலிழந்து போகும் வாய்ப்பும் உண்டு. 

பைக்குகளில், ஃப்ரன்ட் ஃபோர்க் ஆயில் அதிக சூடேறி, தனது தன்மையை இழக்கிறது. அதனால், ஆயில் சீல், ஃபோர்க் ட்யூப், ஸ்பிரிங் போன்றவை பாதிக்கப்படும். 

ஹேண்டில்பாரை சுலபமாகத் திருப்ப உதவும் பால்ரஸ் கிட், அதிகப்படியான சுமையால் பாதிக்கப்படும். இதனால், ஹேண்டில்பாரைத் திருப்புவதில் சிக்கல் ஏற்படும்.

ஷாக் அப்ஸார்பரைப் பொருத்தும் மவுண்டிங் பாயின்ட், சரியான பொஸிஷனில் இருந்து விலகி வேறுபக்கம் திரும்பிக்கொள்ளும். இதனால், வாகனம் நேர்கோட்டில் செல்லாமல், ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டு செல்லும்.

வாகனத்தின் ஃப்ரேம் (சேஸி), அதிகப்படியான அழுத்தம் காரணமாக தன் தன்மையை இழந்துவிடும். சில பைக்குகளில் சப் ஃப்ரேம் உடைவதுகூட உண்டு.

அதிக பாரம் ஏற்றுவதால், டயரின் ஆயுள் குறையும். டயரின் அழுத்தம் அதிகமாவதால், சூடேறி வெடிக்க வாய்ப்பு உள்ளது. டயர் சீராகத் தேயாமல், ஒரு பக்கமாகத் தேயும்.

வீல் பேரிங், ஸ்பிராக்கெட் பேரிங், புஷ் ரப்பர் ஆகியவை விரைவில் தேய்ந்துபோகும். ஸ்பிராக்கெட் செயின் அதிக சுமையை இழுப்பதால், விரைவில் பழுதடைந்துவிடும்.

வீல் நெளிந்துபோவது இதனால்தான். ஸ்போக் வீல் என்றால் சரிசெய்யலாம். அலாய் வீலைச் சரி செய்வது கடினம்.

டிரைவ் டிரைன்

அதிக சுமையால் கிளட்ச் இணையும்போது உதறல் ஏற்படும். அதிக சுமையை இழுப்பதால், சிலிப்பாகி சூடேறும். இதனால் கிளட்சின் ஆயுள் குறைவதுடன் செயலிழக்கவும் வாய்ப்பு உண்டு. கிளட்ச் அசெம்ப்ளி, கியர் பிரைமரி டிரைவ் தேய்ந்துபோகும்.

பிஸ்டன், ரிங்ஸ், சிலிண்டர் ஆகியவற்றில் அதிகப்படியான வெப்பம் பரவி, கோடுகள் விழுந்துவிடும். இன்ஜின் சீஸ் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஓட்டுதல் அனுபவத்தை எவ்வாறு பாதிக்கிறது?

அதிக ஆட்களையோ, பொருட்களையோ ஏற்றுவதால், சரியான பொஸிஷனில் அமர்ந்து வாகனத்தை ஓட்ட முடியாது.

வாகனத்தின் பின்னால் வரும் வாகனங்களையோ சுற்றியுள்ள பகுதிகளையோ சரிவரப் பார்க்க முடியாது.

பைக்கின் கேரியரில் சுமை ஏற்றுவதால், அதன் சமநிலை குலைகிறது.

வாகனத்துக்குப் பொருத்தமில்லாத பொருளை எடுத்துச்செல்வதால் (நீளமான, உயரமான பொருட்கள்), ஓட்டுபவருக்கும் சாலையில் செல்பவர்களுக்கும் ஆபத்து.

எனவே, அதிக பாரம் எல்லாவற்றுக்கும் ஆபத்து என்பதைப் புரிந்துகொள்வோம்!

புல்லட் பைக்கில் எவ்வளவு சுமை?

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 - 163 கிலோ.
ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் 500 - 175 கிலோ.

சம்மர் பைக் டிப்ஸ் - Summer Guide for Two Wheelers

 பைக்கை கோடை காலத்தில் பராமரிப்பது எளிதுதான். வெயிலில் பைக்கை நிறுத்தாமல், நிழலில் நிறுத்தினாலே பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். அரை மணிநேரம் உச்சி வெயிலில் நின்ற பைக்கில் அமருவது எவ்வளவு கொடுமை?!
 பைக்குகளில் பெட்ரோல் டேங்க் வெளியில் இருப்பதால், சூரிய வெளிச்சம் நேரடியாகப் படும். பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடியது என்பதால், பெட்ரோல் டேங்க் கவர் வாங்கிப் போடலாம். பெட்ரோல் டேங்க் மூடி தளர்வாக இருந்தால், அதை டைட் செய்துவிடுங்கள்.
 கோடை காலத்தில் பேட்டரிகளில் உள்ள டிஸ்டில்டு வாட்டர் மிக வேகமாகத் தீர்ந்துவிடும். அதனால், பேட்டரியை டாப்-அப் செய்துவைப்பது அவசியம். அதிக வெப்பமான சூழ்நிலையில் பேட்டரிகள் இயங்கும்போது பேட்டரி சார்ஜ் ஏறுவதும், இறங்குவதும் மிக வேகமாக நடக்கும். பேட்டரியின் ஆயுளை ஹெட்லைட்டின் வெளிச்சத்தை வைத்துக்கூடக் கண்டுபிடிக்கலாம்.
 கோடை காலத்தில் அதுவும், மதிய நேரங்களில் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்காதது போல இருக்கும். இந்த உணர்வு அதிகமாக இருந்தால் கடைசியாக இன்ஜினில் எப்போது ஆயில் மாற்றினீர்கள் என்று பாருங்கள். கோடைகாலம் துவங்குவதற்கு முன்பு ஆயில் மாற்றப்படவில்லை என்றால், இன்ஜின் ஆயிலை டாப்-அப் செய்யாமல், முழுவதையும் மாற்றிவிடுங்கள். இதனால் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்கும்.
 காலையில் முதலில் பைக்கை ஆன் செய்யும்போது, சிலர் ரெவ் செய்துகொண்டே இருப்பார்கள். இது தேவையே இல்லை. முதலில் ஆன் செய்ததும் சிறிது நேரம் ஐடிலிங்கில்தான் ஓடவிட வேண்டும். பின்னர் நிதானமாக ஓட்டினாலே போதும்; இன்ஜின் அதனுடைய ஆப்டிமம் வெப்பத்தில் இயங்க ஆரம்பித்துவிடும். அதுவும் கோடை காலத்தில் இன்னும் விரைவாக வார்ம்-அப் ஆகிவிடும்.
 கோடை காலத்தில் நம்முடைய ஹெல்மெட்டும் சூடாகும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெயிலில் ஓட்டும்போது ஹெல்மெட் சூடாகும். அதனால் அவ்வப்போது பைக்கை சாலையோரம் நிறுத்தி இளைப்பாறிச் செல்வதே நல்லது. வெயில் காலத்துக்கு என ஏர் வென்ட்டுகள் கொண்ட ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்தலாம்.
 வெயிலில் அதிக தூரம் பைக் ஓட்டுவதைத் தவிருங்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலை என்றால், பஞ்சால் ஆன உடையை அணிந்து கொண்டு ஓட்டினால் உடலில் வெப்பம் தங்காது. நாற்கர நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து அதிக தூரம் ஓட்டுவதையும் தவிர்க்கலாம். ஏனெனில், நேரடியான சூரிய வெப்பத்தில் தொடர்ந்து ஓட்ட வேண்டியிருக்கும். சுற்று வழி என்றாலும், மரங்களால் சூழப்பட்ட சாலைகளில் ஓட்டும்போது வெயில் தெரியாது. ஓட்டவும் சுகமாக இருக்கும்.  
 கோடை காலத்தில் டூவீலர் டயர்களின் காற்றழுத்தம் பெரும்பாலும் குறையாது என்றாலும், வாரத்துக்கு ஒருமுறை காற்றழுத்தத்தைச் சோதித்துவிடுவது நல்லது.

குடும்பச் செலவை சமாளிக்க சூப்பர் ஃபார்முலா

இன்றைய நிலையில் நம் வாழ்க்கை வரவு எட்டணா, செலவு பத்தணாவாகத்தான் இருக்கிறது. சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவு செய்வதினாலேயே நம்மில் பலர் நிரந்தர கடனாளிகளாக இருக்கிறோம்.
 காட்டுக்குதிரையைப் போல் தறிகெட்டு ஓடும் இந்த செலவை, கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு மந்திரம் நமக்குத் தெரிந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக் கிறீர்களா?
சிம்பிள். நம் செலவு ஒவ்வொன்றும் எந்த அளவில் இருக்கவேண்டும் என்பதற்கு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் எளிய ஃபார்முலா இருக்கிறது.  
இந்த ஃபார்முலாபடி நீங்கள் உங்கள் செலவை அமைத்துக்கொண்டால், உங்களுக்குக் கடன் பிரச்னையும் இருக்காது. கை நிறைய காசும் இருக்கும். எதிர்காலம் குறித்து எந்த பயமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம்!
நம் வீட்டின் தேவைகள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை இனி விளக்கமாகப் பார்ப்போம்.




சம்பளத்தில் ஒரு மேஜிக்!

வேலையில் சேரும்போதே உங்கள் வெற்றிக்கு உத்தரவாதம்
வேலை பார்க்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் சம்பளம் என்பது அடிப்படையான விஷயம்தான். இந்தச் சம்பளத்தை அலுவலகம் கொடுக்க நினைக்கிறபடி பெற்றுக்கொள்வது பொதுவான நடைமுறை. அப்படி இல்லாமல், வருமான வரிச் சலுகைகளை முழுவதுமாக அனுபவிக்கிறபடி நம் சம்பளத்தை மாற்றித் தரும்படி அலுவலகத்திடம் கேட்பது இன்னொரு அணுகுமுறை.
ஒரு நிறுவனம் பணியாளர்களை வேலைக்குச் சேர்க்கும்போது உங்களுக்கு இவ்வளவு சம்பளம், இதில் இது எல்லாம் அடங்கும் என்று சொல்லும். இந்த மொத்தச் சம்பளத்தை அதாவது பணியாளருக்கு நிறுவனம் செய்யும் செலவை ஆங்கிலத்தில் சி.டி.சி. - காஸ்ட் டு  கம்பெனி (Cost to Company) என்பார்கள்.   ஒருவர் வேலைக்குச் சேரும்போதே, இந்த சி.டி.சி.யிலிருந்து அதிக சம்பளத்தைப் பெறுகிற மாதிரி  நிறுவனத்திடம் கேட்டுப் பெறலாம்.  
வருமான வரிச் சலுகைகளை பயன்படுத்தி நமது சம்பளத்தை இன்னும் அதிகமாக வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போக முடியுமா?  நாம் வாங்குகிற சம்பளத்தில் எந்தெந்தவற்றுக்கு எவ்வளவு வரிச் சலுகை இருக்கிறது? நிறுவனத்திடம் வரிச் சலுகைக்கு தக்கபடி சம்பளத்தை எப்படி கேட்டுப் பெற வேண்டும்? வருமான வரியை மிச்சப்படுத்த சம்பளக் காரணிகளில் எவை எவை எவ்வளவு சதவிகிதத்தில் இருக்கவேண்டும்? வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை என்னென்ன? என்பது போன்ற பல கேள்விகளுடன் ரான்ஸ்டாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பாலாஜியிடமும் மற்றும் சாட்டர்டு அக்கவுன்டன்ட் கீதா குமாரிடமும் பேசினோம்.  அவர்கள் தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள். அந்த விளக்கம் இதோ உங்களுக்காக...
''பத்து வருடங்களுக்கு முன்பாக சம்பள படிவத்திற்கென்று யூனிஃபார்ம் ஸ்ட்ரக்சர் எதுவும் கிடையாது. ஆனால், இன்று சம்பளப் படிவங்களில் வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு பல வறைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
சம்பளத்தில் 35-50% வரை அடிப்படை சம்பளம் (Basic Salary) இருக்கலாம். இந்த பேசிக் மற்றும் பஞ்சப் படியிலிருந்து (டி.ஏ - Dearness Allowance) 12 சதவிகிதம்தான் பி.எஃப். அதே போல ஹெச்.ஆர்.ஏ. (House Rent Allowance) மற்றும் சிறப்புச் சலுகைகள் போன்றவற்றை நிறுவனங்கள் ஒத்துழைக்கும்பட்சத்தில் அவரவர்களின் தேவைக்குத் தக்கபடி கேட்டு பெறலாம்.  
முக்கியமானவை மூன்று !
ஒருவர் வாங்குகிற சம்பளத்தில் அடிப்படைச் சம்பளம், ஹெச்.ஆர்.ஏ. மற்றும் டி.ஏ. ஆகிய மூன்று காரணிகள்தான் மற்ற விஷயங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றன. இந்தக் காரணிகளில் அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பதுதான் நல்லது என்றாலும், இதை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.  ஆனால், பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் பணியாளர்களின் சம்பளத்தை அவர்களின் வரிக்குச் சாதகமாக அமைத்துத் தருகின்றன. இனிவரும் காலத்தில் வேறு துறை நிறுவனங்களும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றலாம்.  
அடிப்படைச் சம்பளம் முழுவதும் வரிக்கு உட்பட்டதுதான் என்றாலும், இந்தச் சம்பளத்திலிருந்துதான் பி.எஃப். சேமிப்பு கணக்கிடப்படுவதால் நம்மிடமிருந்து பிடிக்கப்படும் பி.எஃப். தொகை அதிகமாக இருக்கும். இதனால் நிறுவனம் தரும் பி.எஃப். சேமிப்புத் தொகையும் அதிகமாகவே இருக்கும். நீண்டகால நோக்கில், அடிப்படைச் சம்பளம் அதிகமாக இருப்பது ஜூனியர் நிலையில் இருக்கும் பணியாளர்களுக்கு லாபகரமானதாகவே இருக்கும். ஆனால், உயர்பதவியில் இருப்பவர்களுக்கு நிறுவனம் தரும் சம்பளம் அதிகமாகத்தான் இருக்கும். இதனால் அவர்கள் அடிப்படைச் சம்பளத்தை நிறுவனத்திடம் சொல்லி குறைவாக வைத்துக் கொள்வதன் மூலம் வருமான வரியைக் குறைக்கலாம். மற்றபடி மற்ற காரணிகளுக்கான தொகை விகிதம் அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். இதனால் வரிச் செலுத்துவது கட்டுப்படுத்தப்படும்.
ஜூனியர் நிலையில் வேலை செய்துகொண்டே அடிக்கடி நிறுவனம் மாறுகிறவர்களுக்கு சம்பளத்தில் நீண்டகால சேமிப்பு என்பது இல்லாமல் இருக்கும். ஆகையால் அவர்கள் குறுகியகால அடிப்படையில் மாதம் கையில் கிடைக்கும் சம்பளத்தை அதிகப்படுத்திக்கொள்வது நல்லது.
முக்கிய காரணிகளில் இரண்டாவதாக இருப்பது பஞ்சப்படி; அடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. இந்த இரண்டும் பேசிக் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் அடிப்படைச்  சம்பளம் அதிகமாக இருக்கும்போது அதிகமாகவும், குறைவாக இருக்கும்போது குறைவாகவும் கிடைக்கும்.
பஞ்சப்படி கன்ஸ்யூமர் பிரைஸ் இன்டெக்ஸைப் பொறுத்து, கூட அல்லது குறையும்படியாகவே ஒருவரின் சம்பளத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கும்.
அடுத்தது, ஹெச்.ஆர்.ஏ. இது அடிப்படைச்  சம்பளத்தில் இருந்து 40-50% வரை இருக்கலாம். ஹெச்.ஆர்.ஏ. என்பது பணியாளர்கள் வாடகை வீட்டில் குடியிருந்தால் அதற்கு வரிச் சலுகை உண்டு. கிராமமோ, நகரமோ பணியாளர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல ஹெச்.ஆர்.ஏ. விகிதம் மாறுபடும்.
நிறுவனத்திடம் கேட்டுப் பெறுங்கள் !
அலுவலகத்தில் இருந்து கிடைக்கும் சலுகை களுக்கான ரசீதுகள் காண்பிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக அதன் மீது வரி விதிக்கப்படும். எனவே, அலுவலகம் தரும் சலுகைகளை பயன்படுத்துவதோடு, அதற்கான ரசீதுகளை அலுவலகத்திடம்  சமர்ப்பிப்பது அவசியம். இந்த செலவினங்கள் வரையறையைத் தாண்டக்கூடாது. உதாரண மாக, செல்போன் கட்டணச் சலுகை, தொழில் முன்னேற்றப் படிப்புக்கான ரசீதுகளை  அலுவலகத்தில் சமர்ப்பித்து வரிச் சலுகை பெறலாம். இதுபோல, வேறு என்னென்ன இருக்கிறது?    
விடுமுறைச் சுற்றுலா:                    
உங்கள் சம்பளத்தில்  சுற்றுலாச் செல்வதற்கான எல்.டி.ஏ. கணக்கில் கொள்ளப்பட்டிருந்தால் நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவுக்குள் சுற்றுலாச் சென்று வரலாம். இதற்கான செலவினங்களை ரசீதுடன் அலுவலகத்தில் க்ளைம் செய்துகொள்ள முடியும். உங்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு சுற்றுலாச் செல்லவில்லை அல்லது முழு தொகைக்கு ரசீதுகள் தரவில்லை எனில், அத்தொகை வருமான வரிக்கு உட்பட்டதாகும்.
மருத்துவச் செலவுகள்:
ஆண்டுக்கு ரூ.15,000 வரை மருத்துவச் செலவுக்கான ரசீது தந்து வரிச் சலுகை  பெறலாம்.
போக்குவரத்துச் செலவுகள்:
மாதத்திற்கு ரூ.800,  ஊனமுற்றவர்களுக்கு ரூ.1,600-க்கு பில் தந்து கொடுக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது.
பொழுதுபோக்குச் சலுகைகள்:
வருடத்திற்கு ரூ.5,000 வரை அரசுப் பணியாளர்களுக்கு மட்டும்.  
மொபைல் அல்லது தொலைபேசி கட்டணச் சலுகை:
நிறுவனத்தின் தேவைக்கு ஏற்றபடி தொகையின் அளவை அந்தந்த நிறுவனங்களே நியமிக்கும். இந்தச் சலுகை அலுவலகப் பயன்பாடுகளுக்கு மட்டும்.
கல்விச் செலவிற்கான சலுகைகள்:
பணியாளர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளுக்குத் தரப்படும் சலுகைத் தொகை ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைகளுக்கான செலவினங்களைச் சம்பளத்தில் காட்டலாம்.
ஹாஸ்டல் செலவுக்கான சலுகைகள்:
பணியாளர்களின் குழந்தைகள் விடுதியில் தங்கி படிப்பவர்களாக இருந்தால் அதையும் தனது சம்பளத்தில் காட்டிக்கொள்ளலாம். ஒரு குழந்தைக்கு மாதம் 300 ரூபாய் வீதம் இரண்டு குழந்தைக்கான செலவினங்களைக் காட்டலாம்.
பணியாளர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் பங்குகள்:
சலுகைகளுக்கு உட்பட்டு வரி வசூலிக்கப்படும்.
போனஸ்:
பணியாளர்களுக்கு அலுவலகம் தரும் போனஸ்களுக்கு வருமான வரி உண்டு.
தங்குமிடம் சார்ந்தவை!
வேலை செய்யும் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வீடு ஒதுக்கியிருக்கும். இது வாடகை வீடாகவோ அல்லது கம்பெனியின் சொந்த இடமாகவோ இருக்கலாம். ஒரு நிறுவனம் பணியாளர்களின் தங்கும் வசதிக்காக தங்குமிடத்தைக் குத்தகையாக எடுத்திருக்கும்பட்சத்தில் பணியாளர்கள் சம்பளத்தில் 15% அல்லது வீட்டுக்கான வாடகை, இதில் எது குறைவோ அது அவர்களின் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் சேர்க்கப்படும். அதுவே, நிறுவனத்தின் சொந்த இடமாக இருக்கும்பட்சத்தில் அந்த நகரத்தின் மக்கள் தொகையைப் பொருத்து மதிப்பீடு விகிதம் மாறுபடும். நகரத்தின் மக்கள் தொகை 25 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், சம்பளத்தில் 15%, 10-25 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் 10%, அதற்கும் கீழ் மக்கள் தொகை இருந்தால் 7.5% தங்குமிடத்தின் மதிப்பீடாக எடுத்துக்கொள்ளப்படும்.
மெடிக்கல் இன்ஷூரன்ஸ்!
பொதுவாகப் பணியாளர் களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர் களுக்குமான மெடிக்கல் இன்ஷூரன்ஸ்களுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும் வரி கிடையாது. இது சில விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கின்றன.
அதேபோல, ஒரு நிறுவனம் சொந்தமாக மருத்துவமனை அமைத்து செயல்பட்டு வந்தால் அங்கு மருத்துவம் பார்த்தாலோ அல்லது அரசு சார்ந்த மருத்துவமனைகளில் மருத்துவம் செய்து கொண்டு அதற்கான செலவை கம்பெனி ஏற்றுக்கொண்டால் அந்த தொகைக்கும் வரி கிடையாது. இதற்கு எந்த விதிமுறைகளும் கிடையாது. அதேபோல வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்துகொண்டால் ஆர்.பி.ஐ. அனுமதிக்கும் தொகை வரை வரி கிடையாது. வருட வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் மருத்துவம் பார்க்க வெளிநாடுகளுக்குச் சென்று வந்த பயணத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு.
நீண்டகால அடிப்படையில் கிடைப்பவை!
* ஓய்வூதியத் திட்டம்;
இத்திட்டங்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு. பணியாளர்களே செலுத்தும் தொகைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கும்.
* பணிக்கொடை;
அரசுப் பணியாளர்களுக்கு பணிக்கொடை தொகை முழுவதற்கும் வரி கிடையாது. மற்றவர் களுக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை பணிக்கொடை தொகைக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
* என்.பி.எஸ்;
80சிசிடி பிரிவின் கீழ் வரிச் சலுகை உண்டு. முதிர்வின்போது வரியைக் கட்டவேண்டும்.
உணவு மற்றும் பரிசு பொருட்கள் சார்ந்தவை!
அலுவலக நேரங்களில் உட்கொள்ளும் உணவுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கு  வருமான வரிச் சலுகை பெறலாம். சில ஐ.டி. நிறுவனங்கள் சொடக்ஸோ (ஷிஷீபீமீஜ்ஷீ) பாஸ் போன்றவற்றை தந்து பணியாளர்களின் வரியைக் குறைக்கின்றன. அதேபோல, பணியாளர்கள் வருடம் 5,000 ரூபாய் வரை நிறுவனத்திடமிருந்து பரிசு பொருளாகவோ அல்லது பரிசு கூப்பன் களாகவோ பெற்றுக்கொண்டால் வருமான வரியைக் கட்டுப்படுத்தலாம். இதற்கான தொகை பணமாகச் சம்பளத்தோடு வரும் போது வரி கட்டுவது அவசியமாகிறது.  
வரிச் சலுகை பெற நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டியவை:
* செய்யும் வேலையின் தன்மைக்கு ஏற்ப தனது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வாங்கும்  புத்தகங்கள் மற்றும் பயிற்சி கருவிகளுக்கான பில்களை அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும்.
* வீட்டுக் கடன் வாங்கியிருந்தால் அது சார்ந்த விவரங்களை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
* வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டு உரிமையாளர்களிடம் வாடகை ரசீதை பெற்று அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* அலுவலகம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எதாவது எடுத்திருந்தாலும் அந்த விவரங்களை அல்லது பாலிசி பத்திர நகலை அலுவலகத்திடம் கொடுக்கவேண்டும்.
மேலே சொன்ன விஷயங்கள் அத்தனையையும் மனதில் நிறுத்தி வேலைக்குச் சேரும்போதே தங்களின் சம்பளத்தை சாதகமாக அமைத்துக் கொண்டால், உங்களின் வாழ்க்கையின் வெற்றிக்கு உத்தரவாதம் உறுதியே!

ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்கப்!

உங்கள் சேமிப்பும் முதலீடும் செழிப்பாக இருக்கிறதா?ஒரு செல்ஃப் டெஸ்ட்!
முன்பு இருந்த மாதிரியான நிலைமை இப்போது இல்லை. நாற்பது வயதிலேயே லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு என்று சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள் பலர். நெஞ்சு ஓகே என்றால், சுகர் பிராப்ளம் பாடாய்ப்படுத்துகிறது என்கிறார்கள் இன்னும் சிலர். அடிக்கடி பி.பி. எகிறுது என்று சொல்பவர்களையும் தினம்தினம் சந்திக்கவே செய்கிறோம்.
இதற்கெல்லாம் தினமும் மருந்து, மாத்திரை களை சாப்பிடுகிற அதேநேரத்தில், இந்த விஷயங்கள் ஒரு கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அறிய ஆறு மாதத்திற்கு ஒருமுறை யாவது ஹெல்த் செக்கப் செய்துகொள்வது அவசியம். அப்போதுதான் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.
இந்த ஹெல்த் செக்கப் உடல்நலத்திற்கு மட்டுமல்ல, நம் நிதிநலனுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும். சொந்தமாக வீடு வாங்க, குழந்தைகளைப் படிக்க வைத்து கல்யாணம் பண்ணி வைக்க, கார் வாங்க என சம்பாதிக்கிற காலத்தில் நிறைய செலவு செய்கிறோம். நம்மில் சிலர் இந்த செலவுகளுக்காக   நிறைய கடன் வாங்கக்கூட தயங்குவதில்லை. அந்தக் கடனை வட்டியோடு கட்டிமுடிக்க  படாதபாடுபடுகிறோம். இந்த செலவுகளைச் சமாளிக்க நாம் முன்கூட்டியே திட்டமிட்டு சேமித்திருந்தால், டென்ஷனே இல்லாமல் இருந்திருக்கலாம்.
இந்த சேமிப்பு/முதலீடு விஷயத்தில் நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோம்? சரியாக இருக்கிறோமா, இல்லை மோசமான நிலையில் இருக்கிறோமா? என்கிற செக்கப்பை நமக்குநாமே செய்துகொள்ள வழி இருக்கிறதா? என நிதி ஆலோசகர் வி.சங்கரிடம் கேட்டோம். ''நம் உடல் ஆரோக்கியத்துக்கான ஹெல்த் செக்கப்பை வேறு யாராவதுதான் செய்ய வேண்டும். ஆனால், நம் ஃபைனான்ஷியல் ஹெல்த் செக்கப்பை எந்த செலவும் இல்லாமல் நமக்கு நாமே சுயமாக செய்துகொள்ள முடியும். ஆண்டுக்கு ஒருமுறையாவது இந்த பரிசோதனையை நமக்குநாமே செய்து பார்ப்பது அவசியம்'' என்று சொன்ன அவர், அந்த செக்கப்பிற்கு அடிப்படையான ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
கடன்!
''கடன் வாங்காத மனிதர்களே இல்லை. வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என ஏதாவது ஒரு கடனை கட்டாயம் வாங்கி இருப்போம். இந்தக் கடனுக்கு நிச்சயம் வட்டி கட்டவேண்டும். இது நம் மாத வருமானத்தில் 30 சதவிகிதத்திற்கு மேல் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உங்களின் மாத வருமானம் 30 ஆயிரம் எனில், உங்கள் இ.எம்.ஐ. அதிகபட்சம் 9 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். இந்த அளவை மீறினால் அதிக பி.பி.யினால் அவதிப்படுகிற மாதிரி அவதிப்பட வேண்டும்.  
ஒரு கடனை அடைத்த பிறகுதான் புதிய கடனை வாங்கவேண்டும். மேலும், மொத்தமாக பணம் கிடைக்கும்போது அதிக வட்டி விகிதம் உள்ள கடனைக் கட்டிவிடுவது புத்திசாலித்தனம். உங்கள் சம்பளம் உயரும்போது உங்கள் இ.எம்.ஐ. தொகையையும் உயர்த்திக் கொள்வது நல்லது.
வரிச் சலுகைக்காக எந்தக் கடனை யும் வாங்காதீர்கள். இதனால் வருமான இழப்புதான் ஏற்படும். கடந்த வருடம் எவ்வளவு கடன் தொகை இருந்தது, இந்த வருடம் கடன் தொகை குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா என்று பார்ப்பது முக்கியம். கடன் தொகை குறைந்திருந்தால் உங்கள் நிதித் திட்டமிடல் சிறப்பாக உள்ளது என்று அர்த்தம்!
அவசரக் கால நிதி!
இன்றைய நிலையில் ஒருவருக்கு  நிதி நெருக்கடி எப்போது வரும் என்று சொல்ல முடியாது. இதுமாதிரியான சூழ்நிலையைச் சமாளிக்க அவசரக் கால நிதியைக் கட்டாயம் வைத்திருக்கவேண்டும். திடீரென வேலை பறிபோவது, வீட்டில் யாராவது ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கிக்கொள்வது என ஏதாவது ஒரு ரூபத்தில் வரும் சோதனைகளைச் சமாளிக்க குறைந்தபட்சம் ஆறு மாதச் சம்பளத்திற்கு இணையான பணம் நம்மிடம் அவசியம் இருக்கவேண்டும். இந்தப் பணத்தை வேறு எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தக் கூடாது. இந்தத் தொகையை லிக்விட் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட்டாக போட்டு வைக்கலாம். இந்த நிதியை மொத்தமாக சேர்க்க முடியாதவர்கள் வங்கியில் ஆர்.டி. கணக்கு ஆரம்பித்து சேமிக்கலாம். இந்த நிதியை நீங்கள் தேவையான அளவு வைத்திருந்தீர்கள் எனில், உங்கள் நிதிநலன் பற்றி டோன்ட் ஒர்ரி!
இன்ஷூரன்ஸ்!
இந்தக் காலத்தில் ஒரு சின்ன மருத்துவச் செலவு வந்தாலேபோதும் சேமித்து வைத்த அத்தனை பணமும் கரைந்துவிடும். இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவை ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி.  உங்களுடைய வயதிற்கேற்ற மருத்துவச் செலவுகளை கவர் செய்யும் வகையில் இன்ஷூரன்ஸ் பாலிசி கவரேஜ் தொகை இருக்கவேண்டும். அத்துடன் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவத் தேவைகளையும் கவர் செய்யும் வகையில் ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பது முக்கியம். உங்கள் தேவையைவிட பாலிசியின் கவரேஜ் தொகை குறைவாக இருக்கும்பட்சத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸை டாப்அப் செய்துகொள்வது நல்லது. இன்றையச் சூழ்நிலையில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் உள்ள பாலிசி அவசியம் தேவை.
இதேபோல, லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியும். உங்கள் ஆண்டு வருமானத்தைப்போல பத்து மடங்கு தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் அவசியம். மேலும், கடன் வாங்கி இருந்தால் அந்தத் தொகையை கவர் செய்கிற மாதிரி ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயம் எடுக்கவேண்டும். தவிர, உங்கள் வீட்டில் உள்ள வாகனங்களுக்கும் இன்ஷூரன்ஸ் தேவை. இந்த  இன்ஷூரன்ஸ்களை ஒருவர் எடுத்திருந்தால் தான் செக்கப்பில் பாஸானதாக கருத முடியும்.
சேமிப்பு!
உங்கள் சேமிப்பானது உங்கள் வருமானத்தில் 35% வரை இருப்பது அவசியம். இதற்கு குறைவாகச் சேமித்தால் எதிர்கால தேவைகளை நிறைவேற்று வதில் அதிக சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சேமிப்பை முதல் செலவாக கருதி, அந்தத் தொகையை  ஒதுக்கிவிடுவது நல்லது! ஒருவர் எவ்வளவு சேமிக்கவேண்டும் என்பதை எதிர்பக்கத்தில் பைசார்ட்-ஆக தந்திருக்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்.
முதலீடு!
நீங்கள் செய்யும் முதலீடு உங்களின் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வருமானம் தரக்கூடியதாக இருக்கவேண்டும். உங்கள் முதலீடு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12% வருமானம் தரும் வகையில் இருக்க வேண்டும். இதற்கும் குறைவாக வருமானம் தரும் முதலீட்டை ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயமாக மாற்றி அமைக்கவேண்டும்.
குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு வாங்குவதற்கு, ஓய்வுக்காலத்திற்கென தனித் தனியாகப் பிரித்து முதலீடு செய்வது சிறப்பு.  அப்போதுதான் எதில் எவ்வளவு தொகை உள்ளது, அந்தத் தொகை போதுமா, இன்னும்  தேவையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.  ஈக்விட்டி, கடன் திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட், மியூச்சுவல் ஃபண்டு என பலவாறாகப் பிரித்து முதலீடு செய்கிற மாதிரி உங்கள் அசெட் அலோகேஷனை அமைத்துக் கொள்ளுங்கள்.  
சிலர் சேமிப்பு+முதலீடு என்று நினைத்து இன்ஷூரன்ஸ் திட்டங்களில் நிறைய பணத்தைப் போடுகிறார்கள். இது தவறு. இத்திட்டங்கள் மூலம் 5-6% வருமானம் மட்டுமே கிடைக்கும்.  
கல்வி!
குழந்தைகளின் கல்விக்கான முதலீட்டை 5 வருடத்திற்கு ஒருமுறையாவது சோதனை செய்து, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். சில படிப்புகளுக்கான செலவு அதிகரிக்கலாம். சில படிப்புகள் மவுசு இழந்து, வேறு ஒரு படிப்பு பிரபலமாக இருக்கலாம். குழந்தைகள் வளர வளர அவர்களின் சாய்ஸும் மாறிக்கொண்டே இருக்கும். இதுமாதிரியான மாற்றங்களுக்கு ஈடுதருகிற மாதிரி நீங்களும் உங்கள் முதலீட்டை மாற்றி அமைக்கவேண்டும்.
திருமணம்!
இன்றைய நிலையில் கல்விதான் எல்லோருக் கும் கட்டாய தேவையாக உள்ளது. எனவே, அதற்கு மட்டும் அதிகத் தொகையை ஒதுக்கி முதலீடு செய்வது நல்லது. அதிக வசதி உள்ளவர் கள்தான் அதிக பணத்தைத் திருமணத்திற்காக செலவு செய்கிறார்கள். நடுத்தர மக்கள் திருமணத்திற்கான செலவைக் குறைக்கவே முயற்சிக்கிறார்கள். உங்கள் தேவையைப் பொறுத்து திருமணத்திற்கான சேமிப்பைத் திட்டமிடுங்கள்!    
ஓய்வுக்காலம்!
ஓய்வுக்காலத்தில் உங்களின் தேவைகளுக்காக பிள்ளைகளை எப்போதுமே சார்ந்திருக்கக் கூடாது. அதெல்லாம் எதற்கு, நம் குழந்தைகள் நம்மை கைவிட்டுவிட மாட்டார்கள் என்றெல் லாம் நினைக்காமல், பிற்காலத்தில் நமக்கென ஒரு தொகை வேண்டும் என்று நினைத்து, அதற்கான பணத்தை வேலைக்கு சேர்ந்தவுடனேயே சேர்க்கத் தொடங்கவேண்டும்.  
மார்க் போடுங்க!
உங்கள் நிதிநலன் நன்றாக இருக்கத் தேவையான விஷயங்களைச் சொல்லிவிட்டேன். இப்போது உங்கள் நிதிநலன் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் செக்கப் செய்துகொள்ள அடுத்தப் பக்கத்தில் உள்ள அட்டவணையில் உள்ள விஷயங்களுக்கு மார்க் போடுங்கள்! இந்த மார்க் உங்களுக்காகத்தான் என்பதால் கூடுதல், குறைவாக போடவேண்டிய அவசியமில்லை.
இந்த செக்கப்பில் 30-50 மார்க்கிற்கு மேல் வாங்கியவர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் நிதிநலன் நன்றாக உள்ளது. 20-30 மார்க்  வாங்கியவர்கள் பரவாயில்லை என்றாலும், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் சிக்கலில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். 20 மார்க்கிற்கு கீழ் வாங்கியவர்கள், ஸாரி, உங்கள் நிதிநலன் படுமோசம். நீங்கள் உடனடியாக ஒரு நிதி ஆலோசகரைச் சந்தித்து ஆலோசனைப் பெறவில்லை என்றால் மிகுந்த கஷ்டப்பட வேண்டியிருக்கும்!'' என்று முடித்தார் சங்கர்.
இனி நீங்கள் மார்க் போடத் தொடங்கலாம்!  

20-லிருந்து 30 வரை - இளமைத் திட்டம் ஓஹோ வாழ்க்கை!

முதல் சிரிப்பு, முதல் காலடி, முதல் முத்தம், முதல் விமானப் பயணம் மாதிரி நம்ம வாழ்க்கையில மறக்கவே முடியாத ஒரு விஷயம் நாம வாங்கின முதல் சம்பளம். அது ஆயிரமோ, லட்சமோ... படிச்சு முடிச்சு, ஒரு வேலைல சேர்ந்து கையில வாங்குகிற அந்தச் சம்பளம் இருக்கே... ஆஹா, அது ஒரு தனி சுகம்! அது கைக்கு வர்றதுக்கு முன்னாடியே அந்தப் பணத்தை வச்சு என்னெல்லாம் பண்ணலாம்னு மனசுக்குள்ள ஒரு கோட்டையே கட்டி வெச்சிருப்போம்... அம்மாவுக்கு, அப்பாவுக்கு, கூடப் பிறந்தவங்களுக்கு, நண்பர்களுக்குனு ஒரு பெரிய பட்ஜெட்டே போட்டிருப்போம்.
முதல் சம்பளக் கனவுல இருக்கிற யார்கிட்டயாவது இப்போ போய், ''அப்பா, அம்மாவுக்கு செய்றதெல்லாம் இருக்கட்டும், உங்களோட பட்ஜெட்டுல சேமிப்பு, முதலீடுகளுக்கு எல்லாம் ஏதாவது ஒரு பங்கு இருக்குமா?''னு ஒரு கேள்வி கேட்டு பார்த்தா என்ன ஆகும்?
''இதெல்லாம் ஓவரா தெரியலையா? இத்தனை நாள் கஷ்டப்பட்டாச்சு. படிக்கும்போது கிடைச்ச பாக்கெட் மணிய வச்சு ஒண்ணுமே பண்ண முடியல. இனிமேதான் நெனச்சத பண்ணலாம்னு இருக்கேன். இப்ப போய் பேங்குல போடு, சேத்து வெச்சுக்கோன்னு சொல்லி போர் அடிக்காதீங்க''னு சொல்றதுக்குதான் நிறைய வாய்ப்பு இருக்கு. காரணம் இன்றைய இளைஞர்களின் எண்ண ஓட்டம் அப்படித்தான் இருக்கு.
எனக்கு ரொம்ப தெரிஞ்ச பையன் ஒருத்தன் படிச்சு முடிச்சு வேலையில சேர்ந்து கொஞ்ச காலம் கழிச்சு எங்கிட்ட வந்தான்...
''டாக்ஸ் ரொம்ப பிடிக்கறாங்க... 'பேசாம ஒரு வீடு வாங்கு, டாக்ஸ் பெனிபிட் கிடைக்கும்’னு சொல்றாங்க, வாங்கலாமா?'' என்று என்னிடம் கேட்டான்.
''அது இருக்கட்டும், என்ஜினீயரிங் படிக்கிறதுக்காக எஜுகேஷன் லோன் வாங்கி இருந்தியே, அதைக் கட்டி முடிச்சாச்சா?'
''அதுவா, அதை அப்பா பாத்துக்கறேனு சொல்லிட்டாரு. அவருதான் ஏதோ கட்டுறாரு...''
''லோனை நீயே கட்டினா என்ன? டாக்ஸ் பெனிபிட் கிடைக்குமே?''
இப்படி நான் சொல்லவும் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தவன் அதன் பிறகு வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு சென்றான். அப்போதும் கையிலிருக்கும் பிளாக் பெரி பழசாயிடுச்சு; புது ஆன்ட்ராய்ட் போன் வாங்கணும், எந்த கிரெடிட் கார்டு வாங்கலாம்... இது மாதிரியான விஷயங்களைத்தான் பேசினான்...
அந்தப் பையனுக்கும் புதுசா இப்பதான் வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கவங்களுக்கும் மூணே மூணு விஷயத்தை மட்டும் இங்க சொல்ல விரும்பறேன்.
முதல் விஷயம்: வீடு வாங்கணும், சொத்து சேக்கணும்ங்கறது எல்லாம் நல்ல விஷயம்தான். செய்ய வேண்டியதுதான். ஆனா அதனால வரக்கூடிய கடனையும் மனசுல வெச்சுக்கணும். குறைஞ்சபட்சம் பத்துப் பதினைஞ்சு வருஷமாவது கடனை ஒழுங்கா திருப்பிச் செலுத்தினாதான் வீடு சொந்தமாகும். 20 வருஷம்ங்கிற மாதிரி நீண்ட காலக்கெடுவில் கடன் வாங்கினா, வாங்கின முதலை விட கொடுத்த வட்டி அதிகமா இருக்கும். பேங்குல கொடுக்கிறாங்க அப்படிங்கிறதுக்காக தேவைக்கு அதிகமான வீடோ, கடனோ வாங்கறது நல்லது இல்லை. கொஞ்சம் முன்பணம் ரெடி பண்ணிட்டு வாங்கினா கடன் சுமையும் குறையும், கேஷ் ஃப்ளோ கஷ்டமா இருக்காது, வேற முதலீடுகள் செய்ய வசதியா இருக்கும்.
வீட்டுக்கடனையும் வருமான வரிச் சலுகையையும் முடிச்சுப் போடறது அவ்வளவு புத்திசாலித்தனம் இல்ல. ஏன்னு கேக்கறீங்களா? வீடு வாங்கினா, கடனைத் திருப்பிச் செலுத்தும் போது கட்டற வட்டிக்கு (sec 24) வருமான வரிச் சலுகை உண்டு. 'வட்டி’ங்கறது என்ன? ஒரு செலவு. நம்மளுக்கு சந்தோஷத்தைக் கொடுக்காத, சொத்தா சேராத ஒரு தண்டச் செலவு. இல்லையா?
ஒரு சின்ன கணக்குப் போடுங்க... ''வீட்டுக்கடனுக்காக பத்து ரூபாய் வட்டியா கட்டறோம்னு வச்சுக்கோங்க. அந்த பத்து ரூபாயை வட்டியா கட்டறதுனால, மூணு ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்குது. சரியா? அப்போ, பாக்கி ஏழு ரூபாய்? தண்டச் செலவுதானே? மூணு ரூபாயைக் காப்பாத்துவதற்காக யாராவது ஏழு ரூபாய் செலவு பண்ணுவாங்களா? இது புத்திசாலித்தனமான வேலையா?
இரண்டாவது விஷயம்: ஒரு சின்ன கதை சொல்றேன்... ராமு, சோமு - ரெண்டு நண்பர்கள். ஒரே சமயத்துல படிப்பு முடிஞ்சு வேலைக்குச் சேர்றாங்க. ராமு ஆரம்பம் முதலே ஒரு சின்ன தொகையைச் சேர்த்து வச்சுக்கிட்டே வரான். அவனோட 20 வயசுல ஆரம்பிச்சு 30 வயசு வரைக்கும் மாசா மாசம் அப்படி 1,000 ரூபாய் சேர்த்துக்கிட்டே வந்தான். 30 வயசுல கல்யாணம் குட்டின்னு ஆன அப்புறம் சேமிக்கறதை நிறுத்திடறான். ஆனா சேர்த்து வச்ச பணத்தை அப்படியே வெச்சுக்கறான்.
அடுத்தது சோமு... படிச்சு முடிச்சு முதல் பத்து வருஷம் நல்லா வாழ்க்கையை அனுபவிக்கிறான். ஒரு பைசா சேர்த்து வைக்கலை. 30 வயசுல அவனுக்கும் கல்யாணம் ஆகுது. குழந்தை பிறக்குது. அப்புறம் பொறுப்பு வந்து, மாசா மாசம் 1000 ரூபாய் சேர்த்து வைக்க ஆரம்பிச்சுடறான். ரிட்டயராகும் வரைக்கும் தொடர்ந்து அந்தத் தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்கிறான்.
இப்போ இந்த ரெண்டு பேருக்கும் 60 வயசு ஆகும்போது யாரு கையில நிறைய பணம் இருக்கும்? 'இதென்ன கேள்வி? கண்டிப்பா சோமுகிட்டதான் அதிக பணம் இருக்கும். அவன்தான் கொஞ்சம் தாமதமா ஆரம்பிச்சா கூட, விடாம ஒழுக்கமா பணம் சேர்த்து வெச்சுருக்கான். அவன்தான் பணக்காரன்’ அப்படினு சொல்றீங்களா?
ஆனா அது உண்மை இல்லை! எப்படின்னு பார்க்கலாம்... ராமு மாசத்துக்கு ஆயிரம் ரூபாய் வீதம் பத்து வருஷத்துல சேர்த்த தொகை 1,20,000 ரூபாய். சோமு மாசத்துக்கு ஆயிரம் வீதம் 30 வருஷத்தில சேர்த்த தொகை 3,60,000 ரூபாய். இதுதானே நீங்க போட்ட கணக்கு?
அதுவே ரெண்டு பேரும் 8% வட்டி குடுக்கற முதலீட்டுல தங்களோட சேமிப்பை போட்டிருந்தா என்ன ஆகியிருக்கும் தெரியுமா? 60 வயசுல ராமு கையில 21.70 லட்சம் ரூபாய் இருக்கும். சோமு கையில 14.68 லட்சம் ரூபாய்தான் இருக்கும்!
ஆச்சரியமா இல்லை? இதைத்தான் Power of Compounding’ அதாவது கூட்டுவட்டியோட சக்தி அப்படின்னு சொல்றோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே இந்த பவர் ஆஃப் காம்பவுண்டிங்தான் உலகத்தின் எட்டாவது அதிசயம்னு சொன்னாராம்! நம்ம முதலீடுகளுக்கு எவ்வளவு டைம் குடுக்கறோமோ அவ்வளவு நல்லது. ராமு மட்டும் நிறுத்தாம அதே தொகையை 60 வயது வரைக்கும் சேர்த்திருந்தான்னா அவன்கிட்ட 36.39 லட்சம் ரூபாய் சேர்த்திருக்கும்! சோமுவை விட இரண்டரை மடங்கு பணக்காரனா இருந்திருப்பான்.
அதனால இனிமேலாவது ஏதோ ஒரு தொகையை மாசாமாசம் முதலீடு பண்ணுங்க. உங்களுக்கு சின்ன வயசு, நிறைய காலம் இருக்குது. அதைச் சரியா பயன்படுத்திக்கோங்க!
கடைசியா மூணாவது விஷயம்: விலைவாசி விஷம் மாதிரி ஏறிக்கிட்டிருக்கு... நாளுக்கு நாள் நாட்டோட நிலைமை மாறிக்கிட்டே இருக்கு... இதையெல்லாம் சமாளிக்கணும்னா எல்லா விதமான முதலீடுகளும் அவசியம்.
'அய்யய்யோ... ஸ்டாக் மார்க்கெட்டா? ரொம்ப ரிஸ்க்குங்க. தங்கம், வெள்ளி எல்லாம் பொம்பளைங்க சமாசாரம். நம்பளுக்கு செட் ஆகாது. ரியல் எஸ்டேட் முதலீட்டுக்கெல்லாம் கைல பணம் வேணும், நல்ல கான்டாக்ட் வேணும்... இப்படி எல்லாம் சாக்கு போக்குச் சொல்லக்கூடாது. ரசம் வைக்க ணும்னா கொஞ்சம் புளி, கொஞ்சம் மிளகு, கொஞ்சம் உப்பு, கொஞ்சம் பெருங்காயம்னு எல்லாத்தையும் போடத்தானே செய்யணும்? புளியை வச்சு மட்டும் கொதிக்க விட்டா ரசம் எப்படி இருக்கும்?
உங்கமுதலீட்டு போர்ட்ஃபோலியோவில எல்லாவிதமான முதலீடுகளும் இருக்கணும். உடனடித் தேவைகளுக்கான முதலீட்டை  பேங்கிலோ, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்லயோ போடலாம். நாலைஞ்சு வருஷம் கழிச்சுத் தேவைப்படும்னு நினைக்கற பணத்தை பேலன்ஸ்ட் ஃபண்டுகள்லயோ அல்லது கம்பெனி டெபாசிட்கள்லயோ போட்டு வைக்கலாம். அஞ்சு வருஷத்துக்குப் பிறகுதான் தேவைப்படும்னு நினைக்கிற பணத்தை பங்குச் சந்தையிலோ அல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்லயோ தங்கம், வெள்ளியிலோ, ரியல் எஸ்டேட்டிலோ பிரிச்சு முதலீடு செய்யலாம். அப்போதான் நம்மகிட்ட தேவையான நேரத்துல தேவையான அளவு பணம் இருக்கும்.
இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த முதலீடு ஒண்ணு இருக்கு! உலகத்திலேயே மிகச் சிறந்த முதலீடு நீங்களேதான்! உங்களோட அறிவு விரிவடைய, புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள, உங்கள் மேம்பாட் டுக்காக முதலீடு பண்றீங்க பாருங்க, அதுதான் சிறந்த முதலீடு. இதுவரைக்கும் எந்த ஃபண்ட் மேனேஜரும் பீட் பண்ண முடியாத வருமானம் கொடுக்கக் கூடிய முதலீடு உங்களோட அறிவுதான்.
அதனால் முதலில் உங்களுக்காக உங்களி டத்தில் முதலீடு செய்யுங்கள். செல்வந்தராக வாழ்த்துக்கள்!

சம்பாதிக்கும் இளைஞர்களுக்கு சக்சஸ் ஃபார்முலா!

''என்னப்பா கோபால், நீ ஐம்பது வயசுலயே ரிட்டையர்டு ஆயிட்டேன்னு கேள்விப்பட்டேன். அதுக்குள்ள உன் பொண்ணு கல்யாணத்தையும் தடபுடலா பண்ணி முடிச்சுட்ட; உன் பையனும் நல்லா படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டான். ஆனா, எனக்கும் உன் வயசுதான். என் பேருதான் ராஜா; ஆனா, மாடு மாதிரி ஓயாம உழைச்சுகிட்டேதான் இருக்கேன். இன்னும் பத்து வருஷம் உருப்படியா வேலைக்குப் போனாதான் என் புள்ளைங்களுக்குன்னு ஏதாவது சேர்த்து வைக்க முடியும்'' என்று புலம்பிய ராஜா, ''எப்படிப்பா இவ்ளோ சீக்கிரமா கரெக்ட்டா பிளான் பண்ணி கச்சிதமாக் காரியத்த முடிச்சுட்ட'' என்று கோபாலிடம் கேட்க, அவருக்குப் பெருமை தாங்கவில்லை.
''எதுலயும் நிதானமா யோசிச்சு முடிவெடுக்கிறவன் நான்.  என் வாழ்க்கையில மட்டும் பிளான் பண்ணாம இருப்பேனா? நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் எதிர்கால வாழ்க்கைக் காகத் திட்டமிட்டு முதலீடு செய்ய ஆரம்பிச்சேன். அந்த முதலீட்டி லிருந்து கிடைச்ச வருமானத்தை வச்சுதான் பொண்ணோட கல்யாணம், பையனோட படிப்புன்னு பிரச்னையே இல்லாம முடிச்சேன். இனிமே பேரக் குழந்தைங்ககூட நிம்மதியா வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்!'' என்று பெருமிதமாகச் சொன்னார் கோபால்.
இளமையிலிருந்தே சேமிக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம் என்பதே கோபாலின் வாழ்க்கை உணர்த்தும் பாடம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் பலர் இந்த ராஜாவைப் போல எதிர்காலத்தில் ஆகிவிடுவார்களோ என்றுதான் கவலையாக இருக்கிறது. முதல்முறையாக வேலைக்குச் செல்லும் இன்றைய இளைஞர்கள், சம்பாதிக்கின்ற பணத்தில் பெரும்பகுதியைச் செலவழிப்பதைப் பார்த்தால் பயமாகவே இருக்கிறது. அவர்கள் எப்படி செலவு செய்யவேண்டும்? பிற்காலத்தில் மகிழ்ச்சியாக  வாழ பின்பற்றவேண்டிய சக்சஸ் ஃபார்முலா என்ன என்பது குறித்து சொல்கிறார் ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனத்தின் தலைவரும், நிதி ஆலோசகருமான பா.பத்மநாபன்.    
''இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர் கள் சம்பாதிப்பதைச் செலவழிக்கும் நோக்கத்திலேயே  இருக்கிறார்கள். இவர்களது இந்த மனநிலைக்கு முக்கிய காரணம், அவர்களுடைய பெற்றோர்களே. இன்றைய தலைமுறையினரின் வீடுகள் அதிகபட்சம் ஒன்றிரண்டு பிள்ளைகள் கொண்டவை களாகவே இருக்கின்றன. இந்தக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே கேட்டதெல்லாம் கிடைக்கும் பழக்கம் இருக்க, வேலைக்குப் போனபிறகும் அந்தப் பழக்கம் தொடரவே செய்கிறது.
மேலும், வேலைவாய்ப்பு என்பது 'மெட்ரோ’ என்றழைக்கப்படும் பெரிய ஊர்களில் (நகரங்கள்) அதிகமாக இருப்பதால், அனைவரும் தங்களுடைய சொந்த ஊரைவிட்டு குடிபெயர்கிறார்கள். இதனால் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பெரிதாக எதுவும் சேமிக்க முடிவதில்லை.
குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தில் அலைபாயும் மனம் கொண்டவர் களாகவே இருப்பார்கள். ஆனால், அந்த வயதில்தான் அவர்களுக்குப் பணம் சார்ந்த சேமிப்பு வழிமுறைகளை பெற்றோர்கள் சொல்லித் தரவேண்டும்.  பெற்றவர்கள் சொல்லித் தரும் சேமிப்பு வழிமுறைகள் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதியும்போதுதான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் நலமுடன் இருக்கும்.
ஆறு தவறுகள்!
1. இன்றைக்குப் பெரும்பாலான இளைஞர்கள் தங்களுடைய நண்பர்களைப் பார்த்தே செலவு செய்கிறார்கள். ஒவ்வொருவருடைய குடும்பச் சூழ்நிலையும் பொருளாதார நிலைமையும் வெவ்வேறானவை. பணம் அதிகம் இருப்பவர்கள், நிறைய செலவு செய்யலாம். அதற்காக நாமும் அதேமாதிரி செய்யவேண்டும் என்று நினைக்கக்கூடாது.  
2. இன்று 'ஜிக்ஷீமீணீt’ என்ற கலாச்சாரம் எல்லோரிடமும் பரவிக் கிடக்கிறது.  உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் ட்ரீட் தரும் பழக்கத்தை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் வளர்த்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கில் பணம் செலவாகிறது.  
3. மொபைல் கலாச்சாரம் இன்றைய இளைஞர்களை பேய் போல பிடித்து ஆட்டி வருகிறது. போன் என்பது அவசரத்துக்குப் பேச, சிறுசிறு செய்திகளை பரிமாறிக்கொள்ளத்தான். இதற்கு  ஓரளவுக்கு லேட்டஸ்ட் மாடல் போன் வைத்திருந்தால் போதும். ஆனால், இன்றைய தலைமுறையினரோ நேற்று வந்த போனை இன்றே வாங்கத் துடிக்கிறார்கள்.  ஸ்மார்ட் போன் என்பது ஒருவருடைய தேவைகள் மற்றும் அவர்களுடைய செல்வாக்கைப் பொருத்தே இருக்கவேண்டும்.
4. எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களான ஐபேட், லேப்டாப் போன்ற வற்றை ஒரு பந்தாவுக்கு வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் நிறையவே இருக்கிறது. இந்த கேட்ஜெட் களின் வாழ்க்கை அதிகபட்சம் ஆறு மாதம்தான். இதற்காக நிறைய செலவு செய்வது வீண்தான்.
5. விதவிதமான பைக்குகளை வாங்க வேண்டும் என்பதிலும் இன்றைய இளைஞர்கள் குறியாக இருக்கிறார்கள்.  அலுவலகத்துக்கும் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவர ஒரு பைக் இருந்தால் போதுமே ஒழிய, ஊர் கவுரவத்துக்காக (முக்கியமாக, இளம் பெண்களை இம்ப்ரஸ் பண்ணவேண்டும் என்பதற்காக!) பைக்குகளை அடிக்கடி மாற்றுவது கூடாது.    
6. பெண்கள், நகைகள் மற்றும் உடைகளுக்காக அதிகம் செலவழிக்கிறார்கள். நகைகளில் செலவு செய்தால் எதிர்கால தேவை என்ற விதத்தில் நன்மையாக இருந்தாலும், ஆடம்பரத்திற்காக என்கிறபோது ஆபத்தாகவும் முடியலாம். மேலும், தங்களை அழகுப்படுத்திக்கொள்ளவும் நிறைய செலவு செய்கிறார்கள். இயற்கையான அழகுதான் நிரந்தரம் என்பதை புரிந்து கொண்டால், எக்ஸ்ட்ரா மேக்கப்களில் இருக்கும் மோகம் கலைந்துவிடும்.  
 
 
 

எவ்வளவு செலவு செய்யலாம்?
தவறுகளை இனம் கண்டுவிட்டோம். இனி எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக வாழ இன்றைக்கே என்னென்ன விஷயங்களைச் செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறேன். இதற்கு இன்றைய இளைஞர்களை இரண்டுவிதமாகப் பிரித்துக்கொள்ளலாம்.  ஒருவர், மகேஷ்; இன்னொருவர் கணேஷ். மகேஷ் பிறந்தது முதல் பெற்றோர்களின் பராமரிப்பில் வாழ்பவர். வேலையும் அவருக்குச் சொந்த ஊரில்தான் என்பதால் மகேஷின் செலவு ஓரளவுக்கு கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இருவரது மாதச் சம்பளமும் 20,000 ரூபாய் என்று எடுத்துக்கொண்டால், அவர்களது மாதச் செலவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான அட்டவணை இதோ:
கணேஷ் வெளியூர்க்காரர். இதனால் வாடகை, ஓட்டல் சாப்பாடு என பலவகையிலும் செலவாகிறது. பெற்றோர்களின் நேரடிக் கண்காணிப்பு இல்லாததால் வார இறுதியில் பார்ட்டி, சினிமா வேறு. இவரது மாதச் செலவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான  அட்டவணை இனி:  
 சக்சஸ் ஃபார்முலா!
ஆக, அதிரடிச் செலவுகளைக் குறைத்து, சிக்கனமாக இருப்பதன் மூலம் எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதைச் சொல்லிவிட்டேன். இனி இந்தப் பணத்தை எப்படி முதலீடு செய்யலாம் என்பதைச் சொல்கிறேன். முதலில் 7,000 ரூபாயை மிச்சப்படுத்துபவர்களுக்கான சக்சஸ் ஃபார்முலா:
7,000 மிச்சம் பிடிப்பவர்களுக்கு:
வருடாந்திர தேவைகளுக்காக வங்கி ஆர்.டி.யில் மாதம் 1,000 ரூபாய் சேமிக்கலாம். 3,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் ரூபாய் 2.7 லட்சம் கிடைக்கும். இதைத் திருமணச் செலவுக்காக வைத்துக்கொள்ளலாம். பெண்களாக இருந்தால் மேலே சொன்ன முதலீட்டுத் தொகை 3,000 ரூபாயில் 2,000 ரூபாயை எடுத்து மியூச்சுவல் ஃபண்டில் தனியாகவும், 1,000 ரூபாயை கோல்டு சேவிங் ஃபண்டில் தனியாகவும் முதலீடு செய்யலாம். பெண்கள் தங்களுக்காக தங்கம் வாங்க விரும்புவார்கள் என்பதற்காக தங்க முதலீட்டை சொல்கிறேனே ஒழிய, வரதட்சணை தரச் சொல்வதற்காக அல்ல.
25 வயதுள்ளவர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு 30 லட்சம் கவரேஜ் கொண்ட டேர்ம் பாலிசி (முதலீட்டு நோக்கத்தில் உள்ள பாலிசிகளை தவிர்க்கவும்!) எடுத்துக்கொண்டால், மாத பிரீமியம் 500 ரூபாயைத் தாண்டாது. அதேபோல ஐந்து லட்சம் மெடிக்ளைம் பாலிசி எடுத்துக்கொண்டால் அதற்கும் மாத பிரீமியம் 500 ரூபாயாக இருக்கும்.  மீதமிருக்கும் 2,000 ரூபாயை வாகனக் கடன் எடுத்திருப்பவர்கள் அதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அந்தப் பணத்தையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து எதிர்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நீண்டகால தேவை என்பதால்தான் முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்டை பரிந்துரைக்கிறேன்.
14,000 மிச்சம் பிடிப்பவர்களுக்கு...
வேலைக்குச் சேர்ந்தபிறகு தனது 22 வயதிலிருந்து மாதம் 10,000 ரூபாய் வீதம் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தால் 9 லட்சம் ரூபாய் கிடைக்கும். மீதி இருக்கும் 4,000 ரூபாயில் மேலே சொன்னபடி, டேர்ம் மற்றும் மெடிக்ளைம் பாலிசி பிரீமியத்திற்காக 1,000 ரூபாய், ஆர்.டி. சேமிப்பு 1,000 ரூபாய் மற்றும் 2,000 வாகனக் கடன் வைத்திருப்பவர்களுக்கான இ.எம்.ஐ. அல்லது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு.
இந்த சக்சஸ் ஃபார்முலா எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர்களின் தேவைகளை அறிந்து எந்தெந்த தேவைகளுக்கு எவ்வளவு சேமிக்கலாம் என்பதைத் திட்டமிட்டு முதலீடு செய்யலாம்.
பி.எஃப்.-ன் முக்கியத்துவம்! இன்றைய இளைய தலைமுறையினர் பி.எஃப். பணத்தை சரியாகப் புரிந்துகொள்வதில்லை. அந்தச் சேமிப்பு வீண் என்றே நினைக்கிறார்கள். ஆனால், நமக்கே தெரியாமல் நமது சம்பளத்தில் இருந்து நம் எதிர்காலத்துக்காகப் பணம் சேமிக்கப்பட்டுவருவதன் முக்கியத்துவம் நமக்கு இப்போது புரியாது; ஐம்பது வயதுக்குப் பிறகே தெரியும்.
இதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.  ஒருவருடைய சம்பளத்திலிருந்தும் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 780 ரூபாய் பி.எஃப்.-ஆக பிடிக்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அதே அளவு பணம் நிறுவனமும் நம் கணக்கில் போடும். இந்த இரண்டு தொகையும் சேர்ந்தால், ஓராண்டுக்கு 18,720 ரூபாய் கிடைக்கும். இதற்கு 8.6% கூட்டு வட்டி உண்டு. வருடத்திற்கு 8% சம்பள உயர்வு என எடுத்துக்கொண்டால், ஒருவரால் 30 ஆண்டுகளில் சுமார் 58 லட்சம் ரூபாய் சேமிக்க முடியும். இது மிகக் குறைந்த அளவே. எனவே, எக்காரணத்தைக்கொண்டும் அலுவலகம் விட்டு அலுவலகம் மாறும்போது பி.பி.எஃப். பணத்தை எடுத்து செலவு செய்யவேண்டாம். அலுவலகம் மாறும்போது பழைய பி.எஃப். கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வதே  புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே இப்படி திட்டமிட்டு பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தால், எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ராஜா போல, இல்லை கோபால் போல இருக்கலாம்!