Thursday 30 August 2018

மீம் வரலாறு - தகவல்


மீம் வரலாறு - தகவல்

   சமூக ஊடகங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, மீம்ஸ் கலாசாரம் வேர்பிடித்து வளரத் தொடங்கிவிட்டது. மீம்ஸ் எனப்படும் பகடி செய்யும் சமூகம் ஒன்று உருவாகிப் பாரபட்சம் பார்க்காமல் அனைத்தையும் அடித்துத் துவைக்கத் தொடங்கிவிட்டது. பெரும் அரசியல்வாதியாகட்டும், திரையுலகப் பிரபலமாகட்டும், விளையாட்டு வீரராகட்டும், டி.வி. நிகழ்ச்சிகளில் எப்போதோ வந்து போனவராகட்டும், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாராக இருந்தாலும் சகட்டுமேனிக்கு வைத்து ஊறப்போட்டு அடித்து, நொடிப்பொழுதில் எல்லோரையும் சிரிக்கவைப்பது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. ஒரு புகைப்பட மீம் போட்டு Tag that friend என அந்த குணாதிசயம் இருக்கும் ஒருத்தரைக் கலாய்க்கிறது நாம எல்லோருமே அன்றாடம் பார்க்கிற பகடி.

        மீம்னா என்னானு கேட்டால்,  "A meme  is an idea, behavior, or style that spreads from person to person within a culture. A meme acts as a unit for carrying cultural ideas, symbols, or practices that can be transmitted from one mind to another through writing, speech, gestures, rituals, or other imitable phenomena with a mimicked theme"னு 'நண்பன்' பட விஜய் புக்குக்கு வரையறை சொல்ற மாதிரி விக்கிபீடியாவே கடகடன்னு ஒப்பிச்சுட்டு மூச்சு வாங்கும்.

  ஆமா... மீம்னா மெய்யாலுமே என்னாபா?.  தமிழில் நாம 'உவமையணி' கேள்விப்பட்டிருக்கோம். நாம் சொல்ல நினைக்கிற பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை (அர்த்தம்) இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகுப்படுத்திக் கூறுவது. சொல்ல எடுத்துக்கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு, தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு தொடர்புபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணி. நாம் சினிமாக் காட்சிகளை வைத்துச் செய்கிற மீம்கள் இந்த வகைதான்.

   இதை 12-ம் நூற்றாண்டின் இலக்கண நூலான தண்டியலங்காரம் இப்படிக் குறிப்பிடுகிறது.
"பண்பும் தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை".
     உடனே, மீம் ஐடியாவைக் கண்டுபிடிச்சதே தமிழன்தான். மானமுள்ள தமிழராக இருந்தால் ஷேர் செய்யவும்னு கிளம்பிடாம மேலே படிங்க... சரி, கீழே படிங்க.


   எந்த விஷயத்தையும் எளிமையாக எல்லோருக்கும் புரியற மாதிரி எது மேலேயாவது ஏற்றிப் புரிய வைக்கிறதுதான் மீம். அது இணையதளப் பயன்பாட்டின் மூலமாகப் பலருக்கும் பரவும். அது ஒரு குரல் பதிவாகவோ, வீடியோவாகவோகூட இருக்கலாம். இன்னும் எளிமையா சொல்லணும்னா 'கத்தி' படத்தில் விஜய் சொன்ன 'இட்லி கம்யூனிசம்' கூட ஒரு மீம் தான். இப்போ சோசியல் மீடியாவுல மீம் போடாதவங்க யாருன்னு கேட்டா 'சுரேஷ் அப்பாவும், ரமேஷ் அப்பாவும்... ஏன்னா அவங்ககிட்டேதான் மொபைலே இல்லையே...'னு குழந்தைகளும் அசால்ட்டா சொல்லிடுவாங்க. அந்த அளவுக்கு சமூக ஊடகங்களில் பார்வையாளராக இருக்கும் எல்லோருமே மீம் உருவாக்கியோ அல்லது அவற்றை ஷேர் செய்தோ இருப்போம். ஒரு நாளில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் வழியாக தினமும் பல மீம்களைப் பார்த்துக்கிட்டு இருக்கோம்.

   மனிதர்களைக் கலாய்ச்சு மட்டும் மீம் போட்ட காலம் போய் இப்போ, குட்டி பொம்மைகள், கடவுள்கள்னு ஆரம்பிச்சு ஏலியன் லெவல், செவ்வாய்க்கிரக லெவல் மீம்கள் எல்லாம் இந்தப் பக்கம் சுத்திக்கிட்டு இருக்கு. இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோன்னு நமக்குத் தோணவைக்கும் இந்த 'மீம்'ங்கிற வினோத பண்பாடு எப்படி ஆரம்பிச்சதுனு தெரியுமா? 'Mimeme' எனும் வார்த்தையின் சுருக்கம்தான் 'meme'. கிரேக்க மொழியில் 'mimeme' என்றால் 'மாதிரி செய்தல்'னு அர்த்தமாம். 1976-ல் ரிச்சர்ட் டாக்கின்ஸ் என்கிறவர்தான் மீம் எனும் வார்த்தையை ஜீன் மரபியல் தொடர்பான 'The Selfish Gene' என்னும் புத்தகத்தில் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் இந்த வார்த்தை பரவ ஆரம்பித்தது 1998-க்குப் பிறகுதான். இதற்கு முன்பும் கார்ட்டூன் வரைந்து குறிப்பால் உணர்த்தும் முறை இருந்தன. நாம் இப்போது பார்க்கும் வகையிலான மீம்கள் கிரியேட்டிவிட்டியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றன.


    ஒரு நிகழ்வுக்குப் பொருத்தமான வேறொரு நிகழ்வைக் காட்டி நடப்பைப் புரியவைக்கக் கூடியதாகவும், நகைச்சுவையைத் தூண்டக் கூடியதாகவும் இருக்கின்றன. எல்லா நாடுகளிலும் மீம் கலாசாரம் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சிலவற்றைப் பார்த்ததுமே புன்னகைக்கத் தோன்றும். சில உன்னிப்பாகக் கவனித்தால்தான் அதில் இருக்கும் நகைச்சுவைத்தன்மை புரியும். இப்படி, ஒரு நகைச்சுவையான சம்பவத்தை ஒரே ஒரு புகைப்படத்தில் காட்டக் கூடியதாகவும் இந்த மீம்கள் இருக்கும். நாகரிக வளர்ச்சியால் எதையும் சுருங்கக் கேட்கும் பழக்கமும் இந்த மீம்களின் அசுர வளர்ச்சிக்கு ஒரு காரணம்.

  நடப்பு நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல மீம் உருவாக்குவது ஒருவகை என்றால், ஏற்கெனவே வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் விஷயங்களையும் பகடி செய்து சிரிக்கவைப்பது இன்னொரு வகை. கடவுள், ஆதாமிடம் இந்தப் பழத்தைச் சாப்பிடக் கூடாது எனச் சொன்னதையும், 'Adam had an other idea' என மீம்ஸ் போடலாம். குறிப்பிட்ட ஒரு டெம்ப்ளேட்டை எடுத்துக்கொண்டு அதற்குப் பொருந்தும் பல நிகழ்வுகளையும் மீம்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி எந்த வரையறைக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் வேற லெவலில் யோசித்து மீம் உருவாக்குபவர்களும் பெருகி வருகிறார்கள்.


   மீம் க்ரியேட்டர்கள் தங்களது ஸ்டைலை மாற்றி மீம் சமூகத்தில் வித்தியாசமான கட்டுடைப்பையும் நிகழ்த்துகிறார்கள். போஸ்ட் மார்டனிசம் வகையிலான மீம்களும் இப்போது நம் டைம்லைனைச் சுற்றுகின்றன. கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலுக்கும் இந்த ஜென் -Z தலைமுறையில் மீம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிஸன்கள். மீம் என்பதை ஒருவரைக் கலாய்ப்பதற்காக மட்டுமல்லாது ஏதேனும் ஒரு சமூகக் கருத்தைச் சொல்வதற்காகவும் பயன்படுகிறது. இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிற சாதீய, மத ரீதியிலான வேறுபாடுகளைப் பகடி செய்து, சாதி, மத உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களை நேருக்குநேர் சுட்டிக் கேள்வி எழுப்புகின்றன இந்த மீம்கள். இவை ஒருவகையில் ஆரோக்கியமான விஷயங்கள்தாம். ஜனநாயக நாட்டில் வாழும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற கருத்துச் சுதந்திரத்தைக் கொண்டு தனிநபர்களின் மீதான விமர்சனத்தையும், குழு அல்லது அரசின் மீதான விமர்சனத்தையும் எளிதாக முன்வைக்கலாம். அவற்றிற்குக் கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து அவை பரவவும் செய்கின்றன. வைகோ, விஜயகாந்த், சுப்பிரமணியன் சுவாமி, போன்றோர் இளைய தலைமுறைக்கு மீம்களின் வழியாகத்தான் தெரியப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதிலேயே அரசியல் கற்றுக்கொள்ளவும் இவை பயன்படுகின்றன என்பதை அறியலாம்.

  மீம் தயாரிப்பதற்கு பெரிய பிரம்மப் பிரயத்தனம் எல்லாம் தேவையில்லைதான். meme maker, quick meme, ட்ரோல் போன்ற தளங்களைப் பயன்படுத்தி எளிதாக உருவாக்கிவிடலாம். ஆனால், நீங்கள் உருவாக்கி வைரலாக்கும் மீம்ஸ்களால் சைபர் குற்றச் சட்டம் உங்கள் மீது பாயவும் வாய்ப்புள்ளது. ஆக, எதைப் பண்ணினாலும் பார்த்துக் கொஞ்சம் சூதானமா பண்ணுங்கப்பு..!