Saturday 11 July 2015

கார் சர்வீஸ்!


''காருக்கு இதை மாற்ற வேண்டும். அதை மாற்ற வேண்டும்'' என்று சர்வீஸ் அட்வைஸர் கூறும்போது, சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். 'உண்மையிலேயே இந்த ஃபில்டரை மாற்றித்தான் ஆக வேண்டுமா? இல்லை பணம் கறப்பதற்காக இது
இவர்கள் ஆடும் நாடகமா?' என்று சந்தேகம் தலை தூக்கும். நம் அனுமதியோடு காரில் இருக்கும் ஒரு உதிரி பாகத்தை மாற்றிவிட்டாலும், உண்மையிலேயே அது மாற்றப்பட்டுவிட்டதா என்பதை எப்படி ஊர்ஜிதம் செய்து கொள்வது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடி பல சர்வீஸ் ஸ்டேஷன்கள் ஏறி இறங்கினோம். பல அனுபவசாலிகளிடம் பேசினோம். அதிலிருந்து கிடைத்த ஒரு மகத்தான ரகசியம் என்னவென்றால்... சர்வீஸ் அட்வைஸர் காரை சோதனை செய்யும்வரை பொறுத்திருந்து, காரில் உள்ள குறைகளை அவரிடம் தெரிவித்தால்தான், நாம் சொல்வதை அவரால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.
சர்வீஸ் அட்வைஸர் 'எதையாவது மாற்ற வேண்டும்' என்று சொன்னால்... மறுபேச்சு பேசாமல் தலையாட்டிவிட்டு வந்துவிடக் கூடாது. அவர் எதையெல்லாம் மாற்ற வேண்டும், எதில் எல்லாம் வேலை இருக்கிறது என்று சொல்கிறாரோ அதற்கெல்லாம், 'ஏன்? எதற்கு? எப்படி?' என்று கேள்விகள் எழுப்ப வேண்டும். அவர் மழுப்பலான பதில் சொன்னால், நமது தலையில் பெரிய பில்லைக் கட்ட அவர் திட்டம் தீட்டுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் காருக்கு, எதை... எப்போது மாற்ற வேண்டும் என்ற தகவல் உங்களிடமிருந்தால், அதுவே உங்களுக்கு மேலும் பயனுள்ளதாக இருக்கும். அந்த தகவல்கள் இதோ...
மாருதி கார்களுக்கு 10,000 கி.மீ அல்லது 6 மாதத்துக்கு ஒருமுறை, எது முதலில் வருகிறதோ அதற்கு ஏற்றவாறு சர்வீஸ் செய்தால் போதுமானது. பத்தாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம்... என்று கி.மீ-க்கு ஏற்றவாறு சர்வீசுக்கு விட வேண்டும். மாருதியின் அனைத்து பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு இந்த சர்வீஸ் ஷெட்யூல் பொருந்தும்.
ஆண்டுக்கு ஒருமுறை ஹ¨ண்டாய் நிறுவனத்தினர் இலவச சர்வீஸ் கேம்ப் நடத்துகிறார்கள். அதாவது, காருக்கு ஜெனரல் செக் அப் செய்வதுடன் இலவசமாக பாடி வாஷ் செய்தும் தருகிறார்கள். காருக்குத் தேவையான உதிரி பாகங்களை மாற்ற வேண்டியது இருந்தால், ஸ்பேர்ஸ், லேபர் சார்ஜ் ஆகியவற்றில் தள்ளுபடியும் உண்டு. கோடை காலங்களில் சிறப்பு இலவச முகாம்களும் நடத்துகிறார்கள். அதில், காரில் உள்ள ஏ.ஸி, கூலிங் சிஸ்டம், பெல்ட் ஆகியவற்றின் கண்டிஷனைச் சோதித்து, உங்களுக்கு ரிப்போர்ட் தருவார்கள்.
செவர்லே கார்களைப் பொறுத்தவரை 2008-ம் ஆண்டிலிருந்து வரும் அனைத்துப் புதிய கார்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு சர்வீஸ் செலவே கிடையாது. கார் வாங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில் முதற்கொண்டு பேரிங், சஸ்பென்ஷன்... என்று ஏதாவது உதிரி பாகத்தை மாற்ற வேண்டியது இருந்தால், பைசா செலவில்லாமல் அவர்களே மாற்றிவிடுவார்கள். ஆனால், இந்த வசதி வேண்டுமானால் காரை வாங்கும்போதே 'சர்வீஸ் பேக்கேஜ்' வாங்கி இருக்க வேண்டும். இதற்கான கட்டணம் ஸ்பார்க்- ரூ10,000, ஏவியோ- ரூ12,500, யுவா- ரூ10,000, ஆப்ட்ரா (பெட்ரோல்)- ரூ14,500, ஆப்ட்ரா (டீசல்)- ரூ16,000. கேப்டிவா மற்றும் டவேரா மாடல் கார்களுக்கு சர்வீஸ் பேக்கேஜ் இல்லை. இந்த வசதி உங்களுக்குத் தேவையில்லை என்று நினைத்தால், வழக்கமான சர்வீஸ் சார்ஜில் காரை சர்வீஸ் செய்து கொளளலாம்.
டாடா மோட்டார்ஸின் ஒரு சில சர்வீஸ் சென்டர்களில் 24 மணி நேரமும் சர்வீஸ் செய்யப்படுகிறது. மாலை நேரத்தில் உங்கள் காரை சர்வீஸ் செய்யக் கொடுத்தால், காலையில் உங்கள் கார் ரெடியாக இருக்கும். ஆனால், ஒரு விஷயம். இரவு ஒன்பது மணிக்குள் காரை சர்வீசுக்கு விட்டுவிட வேண்டும். வாரத்தில் ஏழு நாட்களும் இந்த சர்வீஸ் சென்டர்கள் இயங்குவது பெரிய வசதி!
பொதுவாக கவனிக்க வேண்டியவை!
சஸ்பென்ஷனைப் பொறுத்தவரை சர்வீஸ் விடும் தருணத்தில் முழுமையாக செக் செய்தால் போதுமானது.
ஏ.ஸி பெல்ட், ஆல்டர்னேட்டர் பெல்ட் போன்ற டிரைவ் பெல்ட்டுகள் தளர்ந்து விட்டால், அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.
5,000 கி.மீ-க்கு ஒருமுறை டயர்களைச் சுழற்சி முறையில் மாற்றிப் பொருத்த வேண்டும். ஒவ்வொரு 10,000 கி.மீ-க்கும் வீல் அலைன்மென்ட் சரி பார்க்க வேண்டும்.
சுழற்சி முறையில் டயர்கள் மாற்றிப் பொருத்தாத கார்களாக இருப்பின், நல்ல நிலையில் இருக்கும் டயர்களை முன் வீலில் பொருத்த வேண்டும். வீல் பேலன்ஸ் செய்வதும் அவசியம்.
டயர், ட்யூப் போன்றவற்றை சர்வீஸ் சென்டரில் வாங்குவதைவிட டயர் கம்பெனி டீலரிடம் வாங்கினால் விலை குறைவாக இருக்கும்.
மாற்றிய உதிரி பாகங்களை எப்படி செக் செய்வது?
காரை சர்வீஸ் கொடுத்தவரே டெலிவரி எடுக்கச் செல்வது மிகவும் நல்லது. அப்போதுதான் அவர் சொன்ன குறைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வசதியாக இருக்கும். காரில் எதையெல்லாம் மாற்றி உள்ளார்கள் என்பதை சர்வீஸ் அட்வைஸரிடம் கேட்டு, பில்லுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பின்னர், காரில் அதையெல்லாம் மாற்றி உள்ளார்களா என்பதை பழைய உதிரி பாகங்களைப் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, இன்ஜின் ஆயில் மாற்றப்பட்டு இருந்தால் முன் பக்க பேனட்டைத் திறந்து ஆயில் ஸ்டிக்கைக் கொண்டு செக் செய்து பாருங்கள். ஆயில் மாற்றியிருந்தால் ஆயிலின் கலரைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
குறித்த காலத்தில் காரை சர்வீஸுக்கு விடவில்லை என்றால் என்ன ஆகும்?
பொதுவாக காரை சர்வீசுக்கு எடுக்கும்போது காருக்கு ஒரு ஜெனரல் செக்கப் செய்வார்கள். அதில், காருக்குத் தேவையான அனைத்தையும் செக் செய்து தேவையென்றால் இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில், கியர் ஆயில், கிளட்ச் ஆயில், கூலன்ட் போன்ற அனைத்து விஷயங்களையும் செக் செய்து டாப் அப் செய்துவிடுவார்கள். நீங்கள் காரை சர்வீசுக்கு விடவில்லை என்றால், இது காருக்கு முதல் இழப்பு!
அடுத்ததாக, சஸ்பென்ஷன், பேட்டரியின் கண்டிஷன், முன் பின் பிரேக்குகள், எலெக்ட்ரிக்கல் பாகங்கள், ஏ.ஸி, கூலிங் சிஸ்டம் என எல்லாவற்றையுமே சர்வீஸ் விடும்போதுதான் முழுமையாகச் சோதிப்பார்கள். இவையெல்லாம் சரிவரச் செய்யப்பட்டு இருந்தால்தான் காரைப் பற்றி எந்த பயமும் இல்லாமல் ஓட்ட முடியும். இல்லையெனில் கார் திடுதிப்பென்று நடுவழியில் நின்று விடும் ஆபத்து இருக்கிறது.
உதாரணத்துக்கு, மாருதி கார்களாக இருந்தால் 40,000 கி.மீ-க்கு ஏர் ஃபில்டர் மாற்ற வேண்டும். அதை மாற்றவில்லை என்றால் காரின் பிக்-அப் பாதிக்கும், மைலேஜ் குறையும், மிஸ் ஃபயர் ஆகும், கரும்புகை அதிகமாக வெளியேறும். இதையெல்லாம் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment