Saturday 11 July 2015

ஆக்சஸரீஸ் அவசியமா?

பைக் வாங்க முடிவு செய்த உடனேயே... என்னென்ன ஆக்சஸரீஸ் வாங்கலாம் என்று யோசிப்போம். ஆனால், அவற்றில் பல ஆக்சஸரீஸ் தேவையே இல்லை. அப்படி என்றால், 
'எது தேவை... எதெல்லாம் தேவை இல்லை?’
ஹேண்ட் கிரிப்
ஹேண்டில் பாரில் இருக்கும் ஹேண்ட் கிரிப் விலை இருபதோ, முப்பதோதான். ஆனால், இதை வாங்கிப் பொருத்தித்தான் ஆக வேண்டுமா? பைக் தயாரிப்பு நிறுவனத்தால் பொருத்தப்படும் ஹேண்ட் கிரிப், கை எந்த அளவுக்கு கிரிப்பரைப் பிடித்து இருக்க வேண்டும்; திராட்டிலைத் திருகும்போது கை எந்த அளவுக்குத் திரும்பும் என்பதை எல்லாம் தெளிவாகச் சோதித்து, வரையறுத்துதான் பொருத்துகிறது. அதைப் பொருட்படுத்தாமல், அதன் மீதே வேறு கிரிப்பரைப் பொருத்துவதால், ஹேண்ட் கிரிப் பொசிஷன், பேலன்ஸ், ஆக்ஸிலரேஷன் என எல்லாமே பாதிக்கப்படும்.
இன்ஜின் கார்டு
சேறு அடிக்கும் என்பதற்காகப் பொருத்தப்படும் இன்ஜின் கார்டு, காற்றைத் தடுக்கிறது. சேறு அடித்தால் நாம்தான் சுத்தம் செய்ய வேண்டும். பைக்குகளில் பெரும்பாலும் இருப்பது ஏர் கூலிங் இன்ஜின்தான். பைக் முன்னோக்கிச் செல்லும்போது, காற்றைக் கிழித்துக்கொண்டு முன்னேறுகிறது. அந்தக் காற்று இன்ஜின் மீது மோதுவதால், இன்ஜின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, அதைத் தடுக்கும்விதமாக இன்ஜின் கார்டு பொருத்துவதைத் தவிர்க்கலாம்.
சீட் கவர்
பைக்குடன் வரும் ஒரிஜினல் சீட்டில், கை வைத்து அழுத்தித் தேய்த்துப் பாருங்கள்... கை சுலபமாக நகராது. அதுபோல், அமர்ந்திருப்பவர் எதிர்பாராதவிதமாக பிரேக் அடிக்கும்போது, சீட்டில் இருந்து நழுவிவிடாமல் இருக்க, இதுபோல கிரிப்புடன் சீட் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு கட்டப் பரிசோதனைகளுக்குப் பிறகு உருவாக்கப்படும் இந்த சீட்டை, 150 ரூபாய்க்கு கவர் வாங்கிப் போட்டு காலி செய்துவிடுகிறோம். எனவே, சீட் கவர் தேவையில்லாதது என்பதைப் புரிந்துகொள்வோம்.
டேங்க் கவர்
பைக்கின் அழகை எடுத்துக்காட்டுவது போலத்தான் டேங்க் வடிவமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், அதன் அழகை நாம் மறைத்து டேங்க் கவர் பொருத்துவோம். மேலும், லக்கேஜ் வைப்பதும் இந்த டேங்க்கின்மீதுதான். டேங்க்கின் மீது எதையும் வைக்காமல் பயணம் செய்வதுதான் பாதுகாப்பானது.
இண்டிகேட்டர் கார்டு
இண்டிகேட்டர்களுக்குக் கூட கம்பியால் வலை அடித்துப் பாதுகாப்பதைப் பார்த்திருப்போம். இது அவசியமா? தேவையே இல்லை. காரணம், பைக் எதன் மீதாவது உரசினால், இந்த இண்டிகேட்டர் உடையும். இதுவே, கம்பியால் வலை செய்து இருந்தால், கம்பி பொருத்தப்பட்டு இருக்கும் கவுல் சேர்ந்தே பாதிக்கப்படும்.
டெஃப்ளான்
புது பைக் டெலிவரி எடுக்கும்போது டெஃப்ளான் பாலீஷ் போட்டால் நன்றாக இருக்கும் என்று சில டீலர்கள் கூறுவது உண்டு. ஆனால், அது தேவை இல்லை. காரணம், புது பைக் பாலீஷ் போடப்பட்டுத்தான் விற்பனைக்கே வரும். அதில் மீண்டும் பாலீஷ் போடுவது தேவையற்றது. பைக்கின் பளபளப்பு குறைந்த பிறகு இதைப் பயன்படுத்தலாம்.
பிரேக் பெடல் ஷூ
பைக் பிரேக் பெடலுக்கு ஷூ பொருத்தும் வழக்கம் சிலருக்கு இருக்கிறது. இது அவசியமில்லாத, ஆபத்தான வேலை. ஃபுட் ரெஸ்ட்டில் கால் வைக்கும் அளவுக்கு ஏற்ப, கால் வைத்து மிதித்தால், வழுக்காமல் இருப்பதுபோல வடிவமைக்கப்படுகிறது. இதில், ஷூ மாட்டுவது இந்த அளவைப் பாதிக்கும்.
எக்ஸ்ட்ரா ஹாரன்
பைக்குடன் வரும் ஹாரனை நாம் மதிப்பது இல்லை. அது நம் சட்ட விதிமுறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது. இரு சக்கர வாகனத்துக்கு என ஒரு வகையும், இலகு ரக வாகனங்களுக்கு என ஒருவகையும் இருக்கிறது. இதன் சத்தத்தை வைத்துத்தான் பின்னால் வருவது பைக்கா, காரா என்பதையே தெரிந்துகொள்வோம். ஆனால், எக்ஸ்ட்ரா ஹாரனைப் பொருத்தினால், நம் முன்னால் செல்கிறவர்களுக்குத் தேவையில்லாத குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும்.    
எது அவசியம்?
பைக்குக்குத் தேவையான ஆக்சஸரீஸ் என சில உண்டு. ஆனால், நம் நாட்டினருக்காக, நம்மால் நாமே உருவாக்கிய ஒரே ஒரு ஆக்சஸரீ - சாரி கார்டு. இதுதான் நம் நாட்டில் அவசியமாக வாங்கிப் பொருத்தப்பட வேண்டியது. அதேபோல், பில்லியன் ரைடர் ஹேண்ட் கிரிப், ஹூக் போன்றவற்றை, தேவை இருந்தால் வாங்கிப் பொருத்தலாம்.
கிராஷ் கார்டு
பம்பர் அல்லது கிராஷ் கார்டு இல்லாத பைக் இல்லை. இது, உலக நாடுகளில் வழக்கத்தில் இல்லை. காரணம், அங்கே அடிக்கடி யாரும் கீழே விழுவது இல்லை போல. நம் நாட்டில் எப்போது வேண்டுமானாலும் நாம் கீழே விழுவோம். அப்படிக் கீழே விழும்போது, கால் பைக்கில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இது உதவும். ஆனால், இதில் சில ஆபத்தும் உண்டு. விபத்துகளின்போது வேறு வாகனங்களில் இந்த கிராஷ் கார்டு சிக்கினால் சிக்கல்தான். மேலும், பைக் எதன் மீதாவது மோதினால், பம்பர் அடிவாங்கி ஃப்ரேமைப் பாதிக்கும் வாய்ப்பும் உண்டு.

No comments:

Post a Comment