Friday 3 July 2015

காரைப் பராமரிப்பது எப்படி?

அழுக்குத் துணியால் அவசரமாய் துடைப்பதும், ஆயுத பூஜைக்கு சந்தனம் தெளித்துப் பொட்டு வைப்பதும் மட்டுமே போதாது. காரைப் பராமரிப்பதும் ஓவியம் வரைவது மாதிரி ஒரு கலை! சரியான பொருட்களை, முறையாகப் பயன்படுத்தாமல் அந்தக் கலையில் வெற்றி பெற முடியாது. காரின் வெளிப்புறத்தைச் சுத்தப்படுத்துவது ஒருவகை என்றால் அதன் உள்புறத்தைச் சுத்தப்படுத்துவது வேறு வகை. மண்ணும் புகையும் படிந்திருக்கும் அடிப்பகுதியைச் சுத்தப்படுத்துவது மூன்றாவது வகை.
முதலில் ‘ஆல் பர்ப்பஸ் க்ரீம்’ என்னும் கறையை அகற்றும் திரவத்தை ஒன்றரை லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற அளவில் கலந்து காரின் ஸீட்டுகள், மேற்கூரை, டேஷ்போர்டு, கண்ணாடி என அனைத்து உள்பாகங்களிலும் ஸ்ப்ரே செய்கிறார்கள். இந்தத் திரவம், படிந் திருக்கும் அழுக்குகளை ஊறவைத்து கரைத்து விடுகிறது. சிறிது நேரம் கழித்து பிரஷைப் போட்டுத் தேய்க்க, உள்ளிருக்கும் கறைகளும் அழுக்குகளும் வெளியேறுகின்றன. அவற்றை மென்பஞ்சில் சுத்தமாகத் துடைத்துவிட்டு, ‘இன்டீரியர் டிரஸ்ஸிங்’ என்னும் இன்னொரு திரவத்தை ஸ்ப்ரே செய்கிறார்கள். இந்தத் திரவம் காரின் உட்பாகங்கள்மீது ஒரு மெழுகு போல் படிந்து விடுவதால் அழுக்குகள் இதனை ஊடுருவி உள்ளே செல்ல முடியாது. இறுதியாக வேக்குவம் க்ளீனர் போடு கிறார்கள். இந்த ஸ்பெஷல் வேக்குவம் மிச்சம் மீதியாக ஒட்டிக்கொண்டு இருக்கும் தூசுகளையும், காரின் இருக்கையில் படிந்திருக்கும் ஈரத்தையும் உறிஞ்சி விடுவதால் ஷோரூமிலிருந்து புதிதாய் இறக்கியதுபோல காரின் உட்புறம் பளிச்சிடும்.
காரில் கீறல் இருக்கும் இடங்களில் மென்மையாக்கப்பட்ட உப்புத்தாளை (மைக்ரோஃபைன் ஷீட்) வைத்துத் தேய்க் கிறார்கள். பிறகு, ‘ரப்பிங் காம்பவுண்ட்’ என்கிற க்ரீமைப் பூசி, பாலிஷிங் இயந்திரம் கொண்டு அதை நன்றாகத் தேய்க்கிறார்கள். உப்புத்தாள் கொண்டு தேய்க்கும்போது கலர் சற்றே மங்கலாவது போல தோன்றுகிறது. ரப்பிங் காம்பவுண்ட் பூசி தேய்க்கும்போது கீறல்கள் நீங்கி பளபளவென மெருகேறி காரின் பழைய வண்ணம் மீண்டும் வந்துவிடுகிறது. தகடு வெளியில் தெரியும்படியான ஆழமான கீறலை இம்முறையில் சரிசெய்ய முடியாது. சிறுசிறு கீறல்களை மட்டுமே சரிசெய்ய முடியும்.
கார் தொடர்ந்து வெயிலில் நின்று கொண்டு இருந்தால் சூரிய ஒளி பட்டு பெயின்டின் நிறம் மங்கி விடும். அதனைத் தடுக்க ‘பர்ஃபெக்ட் கிட்’ என்கிற க்ரீமை காரின் மேல் தடவி பாலிஷ் செய்கிறார்கள். இந்த க்ரீம் மெல்லிய படலமாக காரின் மேல் படிவதால் சூரிய ஒளி நேரடியாகப் பட்டாலும் நிறம் மங்காது. பறவைகளின் எச்சத்தில் இருக்கும் வேதிப்பொருட்களால் எச்சம்படும் இடங்களில் கார் பெயின்ட் நிறம் குறைந்துவிடும். காய்ந்து ஒட்டிக் கொண்டுள்ள எச்சங்களைச் சுரண்டும்போது காரில் கீறல் விழவும் வாய்ப்பு உண்டு. இந்த க்ரீம் போட்ட பிறகு பறவைகளின் எச்சம் திக்காக ஒட்டாது. துடைத்தாலே போய்விடும்.
இறுதியாக ‘ஷோ கார் பேஸ்ட் வாக்ஸ்’ என்னும் மெழுகைப் பூசி காய்ந்த பிறகு காட்டன் துணியை வைத்து சுத்தமாகத் துடைக்க, கார் மேக்கப் போட்ட நடிகை போல ஜொலிக்கிறது.
காரின் அடிப்பாகம் துருப்பிடிக்காமலும், தேய்மானம் இல்லாமலும் இருப்பதற்காக ஒருவித ரப்பர் கலவையைப் பூசுகிறார்கள்.
முதலில் காரின் கீழ்ப்பகுதியில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து நன்றாகக் கழுவுகிறார்கள். ஒட்டிக்கொண்டிருக்கும் மண், தூசு போன்றவை கரைந்து வெளியேறிய பின்னர் பஞ்சுத்துணி கொண்டு துடைத்துவிட்டு, காற்றைச் செலுத்தி நன்றாகக் காய வைக்கிறார்கள். அண்டர் சீல் (Under seal ), பாடி ஷூட் ( Body suit ) என இரண்டு விதமான கலவைகளை வைத்திருக்கிறார்கள். சிறிய வகை கார்களுக்கு 2 லிட்டரும், பெரியவகை கார்களுக்கு 3-லிருந்து 4 லிட்டரும் கலவை தேவைப்படுகிறது. கலவையுடன் சரிபாதி பெட்ரோலைக் கலந்து கரைத்துக் கொண்டு பெயின்ட் அடிப்பது போல ஸ்ப்ரேயர் மூலம் பூசுகிறார்கள். காய்ந்து விட்டால் அழுத்தமாக ஒட்டிக்கொண்டுவிடும் என்பதால் சைலன்சர் மீதும், இன்ஜின் கம்பார்ட்மென்ட் மீதும், கழற்றி மாட்டக்கூடிய பகுதிகளிலும் கலவை படாதபடி கவனமாகப் பூசுகிறார்கள்.
அழுக்குப் படியாமல் இருக்க...
ஸீட் கவர்களில் படியும் அழுக்குகளை எளிதில் அகற்றிவிடலாம். ஆனால் பிளாஸ்டிக், வினைல் பாகங்களில் படியும் அழுக்குகளை அகற்றுவது மிகவும் சிரமம். அதனால் அவற்றில் கறைபடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காரின் டேஷ் போர்டின் மேல்பாகத்தில் சாமிப் படங்களை வைத்துக் கொள்வது பலரின் பழக்கமாக இருக்கிறது. அதில் மஞ்சள் குங்குமம் போன்ற பொருட்களை கொட்டிவைக்கக் கூடாது. அவை அழுத்தமான கறையாகப் படிந்துவிடக்கூடியவை. அவற்றை அகற்றுவதும் சிரமம். கிண்ணத்திலோ, காகிதத்திலோ தனியாக வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர நேரடியாக காரின் மேல் கொட்டி வைக்க வேண்டாம்.
காரினுள் பயணிக்கும்போது கறை ஏற்படுத்தாத தின்பண்டங்களை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். சாக்லெட், ஐஸ்க்ரீம், காபி, டீ போன்ற கறை ஏற்படுத்தக்கூடிய தின்பண்டங்களை காரினுள் அமர்ந்தபடி உண்ணக் கூடாது. கதவைத் திறந்து வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு கையைத் துடைத்த பிறகுதான் காரினுள் அமர வேண்டும்.
காற்றுக்காக கண்ணாடிகளை அடிக்கடி திறப்பதால் ஏ.ஸி. காரைவிட ஏ.ஸி. இல்லாத கார்களில் சீக்கிரம் அழுக்குப் படிந்துவிடும். அதனால் முடிந்தவரை கார் கண்ணாடிகளை மூடியே வைப்பது நல்லது.
லெதர் ஸீட்தானே அழுக்கானால் என்ன என்று நினைக்கக் கூடாது. கறை அழுத்தமாகப் படிந்துவிட்டால் அதை அகற்றுவது சிரமம். அப்படியே அகற்றினாலும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு நிறத்தில் தெரியும்.
காரின் உட்புறங்களைத் துடைக்க மட்டமான சோப் வாஷ்களைப் பயன்படுத்தக் கூடாது. அவை நிறத்தை மங்கச் செய்துவிடும். மென்மையான துணியைத் தண்ணீரில் நனைத்துத் துடைத்தாலே போதுமானது.
 
துருப்பிடிக்காமல் இருக்க...
காரின் கீழ்ப்புறத்தில் சாதாரண பெயின்ட்களைப் பூசினால் வெப்பத்தைத் தாங்காமல் உருகி உதிர்ந்துவிடும். அந்த இடங்கள் துருப்பிடித்து, தேய்ந்துபோகக்கூடும். ரப்பர் கலந்த கலவையைப் பூசினால் உருகாமலும் உதிராமலும் மிகவும் உறுதியாக இருக்கும். மேலும் உள்ளிருக்கும் ஏ.ஸி-யின் குளுமை வெளியில் செல்லாமலும், வெளியிலிருக்கும் வெப்பம் உள்ளே வராமலும் இந்தக் கலவை பாதுகாக்கும். பொதுவாக ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது காரின் கீழ்ப்பகுதியையும் செக்செய்துகொள்வது நல்லது.

No comments:

Post a Comment