Friday 3 July 2015

மாதம் ஒரு வாகனம்: மினி பஸ்

வீடு வரை மினிபஸ்...
இன்னும் நிறம் மாறாமல் இருக்கின்றன மினி பஸ்கள். கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் மஞ்சளாக இருந்தன. ஜெயலலிதா ஆட்சியில் பச்சை. இப்போது பஸ்ஸுக்கு மையத்தில் ரிப்பன் கட்டியது போல மஞ்சள் கோடு இருப்பதால், இரண்டு கழகங்களும் ‘இப்படியே ஓடட்டும்’ என விட்டுவிட்டார்களோ!
பனியூறி நின்ற மேகங்கள் எத்தருணத்திலும் மழை தரக் காத்திருந்த நேரத்தில், பொள்ளாச்சிப் பக்கத்தில் ஒரு மினிப் பேருந்துக்காக நின்றேன். மினிப் பேருந்து என்று சொல்வது ஏதோ, ‘சின்னப் பெரியவர்’ என்று சொல்வது போல இருக்கிறது. மினி பஸ் வந்தது. தென்னந்தோப்புகளை வகிர்ந்து கொண்டு ஓடுகிற தார்ச்சாலை ஒன்றில் அது வருவது, தென்னங்கீற்றுகளெல்லாம் சேர்ந்து கம்பரிசிப் பொன்வண்டு ஒன்றைப் பிரசவித்து அனுப்பியதுபோல இருக்கிறது.கொங்கு வட்டாரத்தில் ஒப்பிட்டுப் பேசும்போது பெரிய ஐட்டங்களை ‘மூத்தகுடிப் புள்ளை’ என்று குறிப்பிடுவார்கள். இது ஸ்கூல் வேனுக்கு மூத்த குடி பிள்ளையாகத்தான் தோன்றுகிறது. ஏறும்போது, படிகள், பாதத்தின் நீளத்தைவிடக் குறைவாக இருப்பது தெரிகிறது.
நான் பஸ் ஏறியதும் முதலில் சந்தித்தது குறி சொல்பவரை. குறி சொல்பவர்கள் பிறர் இழந்ததைக் கண்டுபிடிக்கிறார்களோ இல்லையோ, மற்றவர்கள் அவர்களை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். துல்லியமாக வெளித்தெரியும் இரு உதாரணங்கள், உடை மற்றும் குடை. அவர்கள் அதை விரிப்பதும்கூட அபூர்வமே, அநேகமாக நாய் விரட்டப் பயன்படுத்து வார்கள், அவ்வளவுதான்.
மினி பஸ் பற்றி நினைத்ததும் திருப்பூர், கரூர், கோவில்பட்டி போன்ற நகரங்களில் ஓடுகிற பல மினி பஸ்களும், கிராமங்களில் சின்ன தாராபுரத்திலிருந்து வைரமடைக்கும், மூலனூரிலிருந்து மணலூருக்கும் ஓடுகிற வண்டிகளும் மனதிலோடின. நெரிசல் என்றால் கரூரும் திருப்பூரும்தான்.
மினி பஸ் ஓட்டுநர்களுக்கு இரண்டு சவால்கள். ஒன்று, பயணத் தடத்தில் ஓட்டுவது. பிறிதொன்று, நிலையத்தில் அதே பயண வழிப் பேருந்து டிரைவர் கண்டக்டர்களின் சண்டையைத் தவிர்த்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து வண்டியை எடுப்பதற்கு நேரத்தை இழுப்பது.
‘‘ஏ... போப்பா சீக்கிரம்’’ என்று எதிரி டிரைவர் கோபமாகச் சொன்னால், ‘‘பொறுண்ணா... பொறுண்ணா போயிர்றேன். நீயுந்தான பாத்தே... மதுரை பஸ்ஸு குறுக்கால வந்திருச்சு’’ என்று புன்னகைத்தவாறே சொல்ல வேண்டும். இவ்வகை உரையாடல்கள் நித்தமுமே அலுக்காத நாடகம்தான்... இரு தரப்புக்கும். என்றைக்காவது இது போரடிக்கையில் சிறிய கைகலப்புகளில் முடிவதுண்டு. அவர்களது மொழியில் சொன்னால், ‘மோட்டார்ல இதெல்லாம் சகஜமப்பா!’
புறப்படும்போது ஓரிரு பயணிகளே தென்படுகிற மினி, திடீரென நிரம்பி வழியும். சாலைகளை மட்டும் நம்பியிராமல் தெருக்கள், வீதிகள், முந்தா நேத்து முளைத்த காலனிகள் வழியாகச் செல்வது மினி பஸ்ஸின் சிறப்பு. இதன் வருகையை நம்பி இருப்பது பகுதிவாசிகளின் இருப்பு. முழுக்க அதையே நம்பி இல்லாவிட்டாலும் வீட்டுக்குப் பக்கத்தில் வண்டி என்பது ஒரு வசதிதான். வெளுத்த துணிகள் முதல் பழுத்த கனிகள்வரை இயலுமான அளவு ஏற்றிக் கொள்கிறார்கள்.
பொள்ளாச்சியில், சாய்ராம், சித்ரா, ஜோதி நகர் வண்டி இப்படிச் சிலவற்றில் பயணித்தேன். கடப்பாரையின் முனையில் வேல்கத்தி இணைந்த ஈட்டிகளுமாக சங்ககால வீரர்களைப் போல ஏழெட்டுப் பேர் ஏறினார்கள். நொச்சி, உழிஞை மாதிரியான பூக்களைத் தலையில் சூடியிருக்கிறார்களா என்று பார்த்தேன், இல்லை. அந்தக் கருவியின் பெயர் ‘வசி’. அவை தேங்காய்களை மட்டையுரித்து வெளி உலகத்துக்கு சட்னிக்கும், தேங்காய் எண்ணெய்க்கும் இன்னபிற உபயோகங்களுக்கும் காட்டியவை.
யாருக்கும் காயம் உண்டாக்கிவிடாத கவனத்துடன் வசியைத் தூக்கிக்கொண்டு, வண்டியில் ஸீட் பெயர்த்திருந்ததால் உண்டான இடைவெளியில் போய் நின்று கொண்டார்கள். இரண்டு ரூபாய் டிக்கெட் எடுப்பதற்குள், ‘‘நீ எடுத்துரு... நேத்து நான் எடுத்தேனில்ல. அவன எடுக்கச் சொல்லு, நீ எப்பவும் இப்படித்தான பண்ணுவே, சரி அடுத்த டிரிப்பு நானெடுக்கிறேன்’’ என்கிறரீதியில் ஏராளமான வாக்கியங்கள் கேட்டன. மேற்குத் தொடர்ச்சியில் செக்கர் படர்ந்து கதிர் ஓய அந்தியில் கை களைத்துத் திரும்பும் இவர்களிற் சிலரேனும் புறநானூற்றின் ஒரு நூற்றெண்பதையாவது ஏதோ ஒரு பானத்தின் வழியாகப் பெற்று... ‘என்னப்பா... இப்புடிக் கேட்டுப்புட்டே... காசு என்ன காசு, உனக்காக உயிரயே குடுப்பேன்’ என்று நெக்குருகக் கூடும்.
ஜோதி நகர் பஸ்ஸின் ஓட்டுநரைக் கேட்டேன், ‘‘குடித்துவிட்டுப் பயணிக்கிறவர்களை என்னதான் செய்வீர்கள், இறக்கிவிட்டு விடுவீர்களா?”
‘‘ஆமா...டோர் டெலிவரி!”
முப்பது நிமிடம், நாற்பத்தைந்து நிமிடம் என குறைவான பயண நேரம்தான் மினி பஸ்ஸுக்கு. சரிதான் நீளத்தில் பாதி குறைந்தால், தூரம் - நேரம் எல்லாவற்றிலும் பாதி குறைய வேண்டியதுதான். என்னளவில் சார்பியல் தத்துவத்தை சீக்கிரம் புரிந்து கொள்ளலாம் என நம்பினேன். சீக்கிரத்தில் அடி விழுந்தது. இந்த வண்டிகள் சம்பாதிப்பது பேருந்துகளின் வசூலின் பாதிகூட அல்ல, அதற்கும் குறைவாகத்தான்.
வண்டி போய் நிற்கிற இடத்தில் டிரைவர் கண்டக்டருடன் ஒரு தேநீர் அருந்துவது எளிய லட்சியமாக இருந்தது. ஒரு ட்ரிப்பில் நெரிசலால் போவதற்குத் தாமதமாகி இன்ஜின் அணைக்காமல் வண்டியைத் திருப்பினார்கள். இன்னொரு ட்ரிப்பில் தேநீர் ஆசையின் குறுக்கே லெவல் கிராஸிங்கில் ரயில் வந்தது. ‘‘உங்ககூட டீ குடிக்கணும்னா ஒரு ஃபிளாஸ்க்கிலயே கொண்டுவந்துற வேண்டியதுதான்’’ என்று ஒரு நடத்துநரிடம் சொல்கிறேன்.
‘‘நீங்க ஒண்ணுங்க... ‘அங்கே கொண்டுபோய் இதக் குடு’னு சோறு, லெட்டர் எல்லாம் குடுத்து விடுவாங்க... இப்படி கூரியர் சர்வீஸும் பண்றோம்!’’
‘‘சார்ஜு?’’
‘‘சார்ஜ் என்னங்க சார்ஜ்... கிடா வெட்டுனாலும் கல்யாணம்னாலும் உடனே கூப்புட்டுருவாங்கள்ல.”
இதில் பணிபுரிகிறவர்களுக்கு மற்ற இடத்தில் மரியாதை எப்படி இருக்கிறது?
‘‘வண்டி ஓட்டிக்கிட்டுப் போகும்போது சைக்கிள்காரங்ககூட ஒதுங்க மாட்டாங்க... மத்த பெரிய பஸ்லயெல்லாம் எங்களுக்கு டிக்கெட் போடறதில்ல... வண்டி போற வரையிலும் வாழ்க்கை போகத்தானுங்க செய்யும்.’’
இருபத்தைந்து கொள்ளளவுள்ள இதில் சமயத்தில் எழுபது பேர் பயணிக்குமாறு வைபவக் காலங்கள் வந்துவிடும். நெரிசல் நேரத்தில் இதன் அமைப்பின் அடிப்படையில் எரிச்சலே எழும் என்றாலும், பயணம் சீக்கிரம் முடிவது ஆசுவாசம்.
பொள்ளாச்சி பக்கங்களில் பயணம் போவதன் சுவாரஸ்யங்களில் ஒன்று, சில ஷூட்டிங் ஸ்பாட்டுகள். ‘பண்ணாடி’ வீடுகளைப் பார்க்கலாம். தவிர, தொப்புளில், தோப்புகளில் பதினாயிரம் வாட் வெளிச்சக் காதல்கள்.
நிஜமான காதல்கள் சுவையானவை. பள்ளிப் பெண் முதல் பலவிதப் பெண்களுக்கும் காதல் வருவதுண்டு. காதலில் சம்பந்தப்பட்ட ஆண்கள் பயணியராக மட்டுமில்லாமல், டிரைவர், கண்டக்டராகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. யாரும் டிரைவர், கண்டக்டராக ஓட வேண்டும் என்று அவதரிப்பது இல்லை. பஸ்கள் தோன்றுமுன்னரே காதலுணர்வு தோன்றிவிட்டது. கல்லும் காவிரியும், புல்லும் பூமியும், சந்திர சூரியரும் உள்ளளவு நிலைபெறப் போகிற சங்கதி அது.
ஒரு பயணிகூட இல்லாத நிலையில் சில சமயம் அடைவிடம் வரை செல்லாமல் பாதியில் வண்டி திரும்புவதுண்டு. அப்போது சில ஜன்னலோர விழிகள் ஏமாறும்.
ரேடியேட்டரின் அருகிலுள்ள காற்றின் வெப்பப்புலத்தை சமையலறையின் தோற்றத்துக்குக் கொண்டுவரும் பெண்களுக்காக வண்டியோடு பாட்டும் நிற்கும்.
பொள்ளாச்சியின் பள்ளிப் பெண்களில் அறுபது சதவிகிதத்துக்கு ஒரு தனி குணம் உண்டு. மூன்று மூன்று பேராகத்தான் போவார்கள். (இது என் ஐந்தாண்டு கால ஆராய்ச்சியில் தெளிந்த உண்மை.) இந்த மூவருக்காகவும் மற்றுமுள்ள முப்பத்து முக்கோடி தேவிகளில் யாரோ ஒருவருக்காக ஏதேனும் ஒரு பாட்டு அவர்கள் வண்டி ஏறியதும் ஒலிக்கவிடப்படும்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அது, ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே...’; பத்தாண்டுகளுக்கு முன்னால், ‘உயிரே... உயிரே... வந்து என்னோடு கலந்து விடு...’; இப்போது, ‘பார்த்த முதல் நாளே...!’
ஒரு குடையின் கீழ்தான் பேருந்தும் மினி பஸ்ஸும் சகலவித வாகனாதிகளும் ஓடுகின்றன. குடை எடுத்துப் போகிற குறிசொல்லி, உலகத்தாருக்குச் சொல்கிற உண்மை இதுதான். ‘எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம், மாற்றங்களும் வரலாம்.’
பயணத்தை முடிக்கும் நேரம், ஒரு மூதாட்டி, வாழ்வின் எளிய தேவைகளுக்கே உண்டான எளிய வன்மத்துடன் ஒரு நடத்துநரிடம் சண்டைக்குப் போனாள். ‘‘பாதிப் பஸ்ஸுக்கு மூணு ரூபாக் காசு கேக்கிறியே?’’
‘‘பாதிப் பஸ்ஸுன்னாலும் இது 
பாத்தவுடன் நின்னு 
வீட்டுப்படி வரைக்கும் கொண்டு 
விட்டுட்டுப் போற பஸ்ஸு. 
பாட்டீ நீ பதறாம ஊடு போய்ச் சேரு! 
பாதம் நோக நடந்த பழைய கதை 
ஒண்ணை - உம் பேத்திக்கு 
பால் சோறு கலந்து சொல்லு!’’
மினி பஸ்ஸில் மினிமம் 2 ரூபாய் கட்டணம். இதில் 25 பேர் வரை அமர்ந்து செல்லலாம் (25+2). பெர்மிட் என்பது 20 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. அதில் 4 கி.மீ. ஏற்கெனவே பேருந்து ஓடும் சாலைகளில் பயணித்துக் கொள்ளலாம். மீதம் 16 கி.மீ. பிற பேருந்துகள் ஓடாத பாதையாகத்தான் இருக்க வேண்டும்.
 
அரசின் கவனத்துக்கு...
மினி பஸ் திட்டம் ஆரம்பித்தபின்னும்கூட ஆயிரக்கணக்கான தமிழகக் கிராமங்கள் இன்னும் பேருந்து சக்கரத்தைப் பார்க்காமல்தான் உள்ளன. எனவே இதுவரை பேருந்து செல்லாத ஊர்களுக்கு பெர்மிட் வழங்க வேண்டும். அந்த பெர்மிட்களையும் தூரத்தை வைத்து வரையறுக்காமல் ஊர்களை வைத்தே வரையறுக்க வேண்டும். அப்போதுதான் எல்லா ஊர் மக்களும் பயனடைய முடியும். 20 கி.மீ. மட்டும்தான் செல்ல வேண்டும் என்று கட்டாயமாக வரையறுத்து விடுவதால், கொஞ்சம் தள்ளியிருக்கும் ஊர் மக்களுக்கு பேருந்துச் சேவை கிடைப்பதில்லை. அதே போல 4 கி.மீ. மட்டும்தான் மெயின் ரோட்டில் செல்லலாம் என்று சட்டம் கட்டுப்படுத்துவதால் பொதுமக்களை பேருந்து நிலையம் வரை அழைத்துச் செல்ல முடிவதில்லை. வெளியிலேயே இறக்கிவிட்டு விடுகிறார்கள். எனவே 4 கி.மீ. என்று கணக்கிடாமல் பேருந்து நிலையம்வரை என்று கணக்கிட்டால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

No comments:

Post a Comment