Saturday 11 July 2015

கார் பராமரிப்பு ரகசியங்கள்!

'லட்சங்கள் செலவழித்து கார் வாங்குவது எவ்வளவு பெரிய விஷயமோ... அதே அளவுக்கு காரின் பராமரிப்பிலும் கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும். 'நடுவழியில் இந்த கார் நம் காலை வாரி விட்டுவிட்டதே?' என்று தனியாகக் கிடந்து புலம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
நடு வழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மைலேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்னையால் திக்குமுக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருக்கும்.
இதெல்லாம் காரால் வரும் பிரச்னைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்னைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். சாதாரண காலங்களிலும், சங்கடமான காலங்களிலும் உங்கள் காரைப் பராமரிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொண்டால், பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறலாம். அடுத்துவரும் பக்கங்கள்... உங்களுக்கு இந்த வகையில் உறுதுணையாக இருக்கும்.
உங்கள் காருக்கு நீங்கள்தான் டாக்டர். காரை அழகாக வைப்பது மட்டுமல்ல... காருக்கு சின்னச் சின்னப் பிரச்னைகள் என்றால், அதை உடனடியாக நீங்களே களைந்து, சர்வீஸ் சென்டரின் 'பெரிய பில்' வராமல் தடுத்துவிட முடியும்.
உங்கள் காரை சரியாகப் பராமரிக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை போதும்! ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் செலவழித்தால், கார் எப்போதும் புத்தம் புதுசாக ஜொலிக்கும்!
முதலில், கார் வாங்கும்போதே நிரூபணமான, சிறந்த காராகப் பார்த்து வாங்க வேண்டியது முக்கியம். கார் பராமரிப்புக்கு என்று குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்குங்கள். சரியான இடைவெளியில் காரை சர்வீஸ் செய்ய மறக்காதீர்கள்.
அனைத்து கார்களிலுமே, ஒரு குறிப்பிட்ட கி.மீ-க்கு சில பாகங்களை மாற்ற வேண்டும் என்பது கட்டாயம். எந்தெந்த பாகங்களை மாற்ற வேண்டுமோ, அதை முதலில் மாற்றிவிடுங்கள்.
எப்போதுமே அலர்ட்டாக இருங்கள். காருக்குள் ஏதாவது தேவையில்லாத சத்தம் வருகிறதா? அல்லது ஏதாவது ஒயர்கள் எரிவது போன்ற நாற்றம் வருகிறதா என்று கவனியுங்கள். இது போன்ற பிரச்னைகள் ஏதாவது இருப்பின், உடனடியாக சர்வீஸ் சென்டரை அணுகுங்கள்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உங்கள் நண்பர்களிடம் காரைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காரில் நீங்கள் உணராத பிரச்னைகள் இருக்கிறதா என்பது தெரிய வரும்.
உடைந்த ஹெட் லைட், வேலை செய்யாத மியூஸிக் சிஸ்டம் என பிரச்னையில் இருக்கும் விஷயங்களை உடனடியாகச் சரி செய்துவிடுங்கள். காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.
இப்போது வரும் நவீன கார்களின் இன்ஜின், முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது. அதனால், ட்யூனிங், இன்ஜின் சார்ந்த விஷயங்களை நாமே செய்ய முடியாது. அதனால், இன்ஜினில் எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படாமல், காரை நல்ல முறையில் ஓட்ட வேண்டும். மேலும், இன்ஜினைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வாரத்துக்கு ஒருமுறை பானெட்டைத் திறந்து இன்ஜின் மற்றும் அதன் பாகங்களை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்.
ஹெட் லைட்டுகள் ஒழுங்காக ஒளிர்கின்றனவா என்று பாருங்கள். ஹெட் லைட் ஒளிரவில்லை என்றால், நீங்களே ஃப்யூஸ் போன பல்பை அகற்றிவிட்டு, புதியதைப் பொருத்திவிட முடியும்.
விண்ட் ஸ்கிரீன் வாஷர், பவர் ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில் ஆகியவை சரியான அளவு இருக்கின்றனவா என்று பாருங்கள். இல்லையென்ற£ல், நீங்களே இவற்றை நிரப்பிவிடலாம். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வரை காத்திருக்க வேண்டாம்.
சமதளத்தில் காரை நிறுத்தி இன்ஜின் ஆயில் சரியான அளவுக்கு இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். இதற்கு 'டிப் ஸ்டிக்'கைப் பயன்படுத்துங்கள்.
வைப்பர்
வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதை தினமும் சுத்தப்படுத்துங்கள். இல்லையென்றால், அவை விண்ட் ஸ்கிரீனில் கோடுகள் போட்டு பதம் பார்த்துவிடும்.
வாஷர் ஜெட்டுகள், சரியாக கண்ணாடியில்தான் தெளிக்கிறதா என்று கவனிக்கவும். இல்லையென்றால், அதை அட்ஜஸ்ட் செய்யுங்கள்.
இன்ஜின்
காரை நீண்ட நேரம் ஐடிலிங்கில் நிறுத்தி வைக்காதீர்கள். இதனால் காரின் ஆயுட்காலம் குறையும்.
சூடாக இருக்கும் இன்ஜினைச் சுற்றி எந்தச் சமயத்திலும் ஈரமான துணியை வைத்துத் துடைக்காதீர்கள். இதனால், ஆபத்து நிகழ வாய்ப்பு இருக்கிறது.
ஆயில் மாற்றும்போது ஆயில் ஃபில்டரையும் சேர்த்து மாற்றிவிடுங்கள். இதனால்,இன்ஜின் ஸ்மூத்தாகச் செயல்படும். இல்லையென்றால், ஃபில்டரில் தங்கி இருக்கும் பிசிறுகளால் இன்ஜின் கெட்டுப்போகும் சூழ்நிலை ஏற்படும்.
பேட்டரி
பேட்டரி சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். பேட்டரியின் ஆயுள் குறைந்தாலோ, ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ பேட்டரியைச் சரி பாருங்கள். டிஸ்டில்டு வாட்டர் அளவைக் கவனித்து அதை நிரப்புங்கள். கேபிள், விளக்குகள் ஏதாவது பழுதாகி இருந்தால் மாற்றி விடுங்கள். பேட்டரியில் லீக் இருந்தால், பேட்டரியையே மாற்றிவிடுங்கள்.
கியர் பாக்ஸ்
கியர் பாக்ஸ் மிகமிக முக்கியமான பாகம். டிரான்ஸ்மிஷன் ஆயில் சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள். கிளட்ச், கியர் ஷிஃப்ட் ஆகியவற்றை மிகவும் கவனமாக உபயோகப்படுத்த வேண்டும்.
ஏ.ஸி
கார் ஏ.ஸி-யை ரெகுலராக கவனிக்க வேண்டும். காரில் இருந்து சரியான அளவுக்கு குளிர்ந்த காற்று வரவில்லை என்றால், உடனடியாக அதை சர்வீஸ் சென்டரில் சரி செய்யச் சொல்லுங்கள். ஏ.ஸி காற்று ஒழுங்காக வராததற்கு கேஸ் லீக், பெல்ட் டென்ஷன், கம்ப்ரஷர் வீக் ஆகியவை காரணமாக இருக்கலாம்.
பிரேக்
மிகவும் சாஃப்டான பிரேக் பெடல், பிரேக் லைட் எரியாமல் போவது, பிரேக்கில் இருந்து விதவிதமான சத்தங்கள் எழும்புவது... இதெல்லாம் பிரேக்கில் பிரச்னை இருக்கிறது என்பதற்கான அடையாளங்கள். பிரேக்கின் பாகங்களை மாற்றியோ அல்லது பிரேக் ஆயிலை மாற்றியோ இந்தப் பிரச்னைகளைச் சரி செய்துவிட முடியும். ஆன்டி-லாக் பிரேக் என்றால், கூடுதல் பராமரிப்பு தேவை.
ரேடியேட்டர்
ரேடியேட்டரில் இருக்கும் கூலன்ட் அளவை அடிக்கடி செக் செய்யுங்கள். ரேடியேட்டரில் பிரச்னை என்றால், அது இன்ஜினின் கூலிங் சிஸ்டத்தை பாதிக்கும். ரேடியேட்டரில் இருந்து காற்றை இழுக்கும் ஃப்ளோயர் சரியாக வேலை செய்கிறதா என்றும் பாருங்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை, வாகனங்களின் எண்ணிக்கை பெருகிய அளவுக்கு சாலைகளின் தரத்தில் மாற்றம் இல்லை. அதனால், சக்தி மிகுந்த நவீன தொழில்நுட்பம் கொண்ட காராக இருந்தாலும், நம்மூர் சாலைகளில் 1000 கி.மீ தூரம் பயணம் போய்விட்டு வந்தாலே பிரச்னைகள் ஏற்பட ஆரம்பித்துவிடும். ஆகையால், காரை குறிப்பிட்ட கால இடைவெளியில் 'உள்ளே - வெளியே' பராமரிப்பது அவசியம்.
உள்ளே..
காருக்குள் இருக்கும் தூசு, மண், குப்பைகளைச் சுத்தம் செய்யுங்கள்! தேவையில்லாத பேப்பர், டோல் டிக்கெட், சிடி என அனைத்தையும் வெளியே எடுங்கள். இப்போது காரின் உள்பக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்று பாருங்கள். வெறும் தூசு மட்டும்தானா அல்லது அழுக்குக் கறை, துரு ஆகியவை படிந்து மோசமான நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள்.
கார் வைத்திருக்கும் பல குடும்பங்களுக்கு... கார்தான் சிப்ஸ், சிடி, டிஃபன் பாக்ஸ் போன்ற பொருட்களை வைத்துக்கொள்ளும் இடம்! உணவுப் பொருட்கள் மற்றும் தேவையில்லாத பொருட்களை வைக்கும்போது, காருக்குள் தேவையில்லாத அழுக்குகள் சேர்ந்துவிடும் என்பதோடு, காருக்குள் நாற்றமும் அடிக்க ஆரம்பித்துவிடும்.
வெளியே
கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம்... கார் வாஷிங்தான்! காரைத் துடைத்துச் சுத்தமாக வைப்பதுதான் அடிப்படை பராமரிப்பு! வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யுங்கள்.
எப்போதுமே காரை நிழலான இடத்தில் வைத்துச் சுத்தம் செய்யுங்கள். காட்டன் டவல்களையே காரைத் துடைப்பதற்குப் பயன்படுத்துங்கள். காரின் உள்பக்கத்தைக் குலைத்துவிடாத வகையில் தரமான பாலீஷ்களை உபயோகப்படுத்துவது அவசியம். உதாரணத்துக்கு, லெதர் சீட்டை பிளாஸ்டிக் பாலீஷ் கொண்டு சுத்தம் செய்தால் காரியமே கெட்டுவிடும்!
முதலில் சாஃப்ட் வேக்யூமை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்ஸோல், ஏ.ஸி வென்ட், மீட்டர் டயல்களைச் சுத்தம் செய்யுங்கள். அடுத்ததாக, காரின் மேற்கூரையைச் சுத்தம் செய்யுங்கள். வேக்யூமை வைத்துச் சுத்தம் செய்தபிறகு கொஞ்சம் நனைத்த காட்டன் டவலை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்சோல் அனைத்தையும் துடைத்தெடுங்கள். கப் ஹோல்டர், சீட்டுக்கு அடியில், காரின் கார்பெட்டுக்குக் கீழே பெரிய வேக்யூமை வைத்து காரை முழுவதுமாகச் சுத்தப்படுத்துங்கள்.
ஜாம், சாஸ் போன்ற கரைகள் சீட்டில் படிந்துவிட்டால், அவற்றை நீக்குவது மிகவும் கடினம்! எலுமிச்சைச் சாற்றில் உப்பைக் கலந்து, அதை கறை மீது தடவினால், இந்தக் கறை நீங்கிவிடும்!
காரின் பர்ஃபாமென்ஸ§க்கு மிக மிக முக்கியமான விஷயம் டயர்! காரின் எடையைத் தாங்குவதோடு மேடு பள்ளங்களில் குதித்து எழும்புவதும் டயர்களின் முக்கியமான வேலை. டயரில் பிரச்னை என்றாலும், அது இன்ஜினில் எதிரொலிக்கும். டயருக்கும், இன்ஜினுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டால், டயர்களும் - இன்ஜினும் இணைந்து இயங்கினால்தான் கார் சீராக இயங்கும்.
டயரை மாற்றுங்கள் 8,000 கி.மீ-க்கு ஒருமுறை முன் வீல்களை பின் பக்கமாகவும், பின் வீல்களை முன் பக்கமாகவும் மாற்றிப் பொருத்த வேண்டும். முன் வீல்கள் சீக்கிரத்தில் தேயும். இதுபோல் மாற்றிப் பொருத்தினால், டயர்களின் ஆயுள் நீடிக்கும்!
டயர் பிரஷர் வாரத்துக்கு ஒருமுறை டயரில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். டயரின் அளவு சரியாக இல்லையென்றால், மைலேஜ், கையாளுமை மற்றும் பயண சொகுசில் சிக்கல்கள் வரும்! வேகமாகப் போகும்போது கையில் அதிர்வுகள் அதிகமாகத் தெரிந்தால், டயர்களில் காற்று குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். உடனடியாக டயரில் இருக்கும் காற்றின் அளவை செக் செய்யுங்கள்.
ஓவர் வெயிட் காருக்குள் தேவையான பொருட்களை மட்டும் வைத்திருங்கள். தேவையில்லாத பொருட்களைப் போட்டு வைக்கும் குடோனாக காரைப் பயன்படுத்தாதீர்கள். காரின் எடை கூடக் கூட, ஓடும் காரின் டயர்கள் ஓவர் ஹீட் ஆகும். அதனால், டயர்கள் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். மைலேஜும் குறையும்.
ஸ்பீடு ஓவர் ஸ்பீடும் டயர்களின் ஆயுளைப் பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட வேகத்தைத்தான் டயர்கள் தாக்குப் பிடிக்கும். அதிகப்படியான வேகத்தால் டயர்கள் ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.
காரை சர்வீஸ் செய்யக் கொண்டு போகும் முன், அதன் ஓனர்ஸ் மேனுவலை நன்றாகப் படியுங்கள். ஓனர்ஸ் மேனுவல், காரைத் தயாரித்த இன்ஜினீயர், டெக்னீஷயன்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மேலும், எல்லோரும் புரிந்துகொள்ளும்படி இதில் டெக்னிக்கல் விஷயங்களைச் சுலபமாகவே விளக்கி இருப்பார்கள். அதனால், இதைப் படிப்பது சுலபமே!
காரை சர்வீஸ் செய்ய நீங்களே சர்வீஸ் சென்டருக்கு காரைக் கொண்டு செல்லுங்கள்! அப்போதுதான் காரில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை சர்வீஸ் அட்வைஸர்களிடம் சரியாகச் சொல்ல முடியும்! ஓனர்ஸ் மேனுவலை நீங்கள் ஒருமுறை படித்துவிட்டுப் போகும்போது, என்னென்ன விஷயங்களை மாற்ற வேண்டும்; எவற்றையெல்லாம் மாற்றத் தேவையில்லை என்பது உங்களுக்கே தெளிவாகப் புரிந்துவிடும்.
உதாரணத்துக்கு, 20,000 கி.மீ-யில் மாற்றப்பட வேண்டிய கியர் பாக்ஸ் ஆயிலை, சர்வீஸ் அட்வைசர் 10,000 கி.மீ-யிலேயே மாற்றச் சொன்னால், அவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்பதை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். கார் விற்பனை செய்வதைவிட சர்வீஸில்தான் டீலர்களுக்கு அதிக லாபம். அதனால், சர்வீஸில் சில டீலர்கள் அதிக பணத்தைக் கறக்கத்தான் முயற்சி செய்வார்கள். சர்வீஸ் அட்வைஸர்கள் சொல்வது நிச்சயமாக வேதவாக்கு அல்ல! தேவையில்லாத விஷயங்களை மாற்றச் சொன்னால் ஏன்... எதற்கு என்று கேள்வி கேளுங்கள்!
சர்வீஸ் சென்டரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
கார் சர்வீஸைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களை நாடுவதே நல்லது. அதற்காக, நீங்கள் எங்கே கார் வாங்கினீர்களோ அங்குதான் காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. உங்கள் காரின் அங்கீகரிக்கப்பட்ட டீலர், உங்கள் நகரத்தில் எங்கே இருந்தாலும் அங்கே சர்வீஸ் செய்ய முடியும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் டீலரிடம் இவையெல்லாம் இருக்கிறதா...
நேர்மையான, துரிதமான சர்வீஸ்.
சரியான விலை.
சொன்ன வேலையைச் சரியாக செய்து முடித்தல்.
நாம் சொல்லும் பிரச்னைகளை சரியாகப் புரிந்துகொண்டு, அந்தப் பிரச்னை எதனால் வந்தது என்பதைத் தெளிவுபடுத்தும் அளவுக்கு விஷய ஞானம் உள்ள சர்வீஸ் சென்டர் பிரதிநிதிகள்.
சர்வீஸ் முடிந்ததும் காரில் ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா அல்லது சர்வீஸின் நிறை குறைகளைப் பற்றிய ஃபாலோ-அப்!
ஸ்பார்க் ப்ளக்கை மாற்றுவது எப்படி?
பெட்ரோல் இன்ஜினில் மட்டும்தான் ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். டீசல் கார்களில் இருக்காது. ஸ்பார்க் ப்ளக்கினுள் தூசு, அழுக்குகள் சேர்ந்தாலோ, தனது ஆயுளின் இறுதிக் கட்டத்தில் இருந்தாலோ, கார் ஒழுங்காக ஸ்டார்ட் ஆகாமல் மிஸ் ஃபயர் ஆகும். அதனால், மைலேஜும் குறையும்; அதிகப்படியான புகையும் வெளியேறும். 15,000 - 20,000 கி.மீ-யில் ஸ்பார்க் ப்ளக்குகளை மாற்றிவிடுவது நல்லது!
4 சிலிண்டர்கள் கொண்ட இன்ஜின் என்றால், நான்கு ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். ஸ்பார்க் பிளக்குகளை அகற்றும்போதே அதில் 1, 2, 3 என குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்பார்க் ப்ளக்கை அகற்றிவிட்டு நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். இதனால், அழுக்குகள் எதுவும் இன்ஜின் சிலிண்டருக்குள் நுழையாது.
பழுப்பு நிறம் படிந்த ஸ்பார்க் பிளக்குகள் என்றால், பிரச்னை இல்லை என்று அர்த்தம். அதுவே ஆயில் அதிகமாகப் படிந்தது என்றால், பிஸ்டனில் இருக்கும் ஆயில் கன்ட்ரோல் ரிங்ஸில் ஏதோ பிரச்னை என்று அர்த்தம். உடனடியாக இதை சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி செய்து தரச் சொல்லுங்கள்.
ஸ்பார்க் ப்ளக் அதிக அழுக்காக இருந்தாலோ, கீறல் இருந்தாலோ உடனடியாக அதை மாற்றிவிடுவது நல்லது.
நீங்கள் புதிதாக வாங்கிப் பொருத்தும் ஸ்பார்க் ப்ளக்கின் அளவு, பழைய ஸ்பார்க் ப்ளாக்கோடு பொருந்தி இருக்கிறதா என்று ஒருமுறை செக் செய்து கொள்ளுங்கள்.
மீண்டும் ஸ்பார்க் ப்ளைக்கை அதற்குரிய டூல்ஸ் கொண்டு மேனுவலில் குறிப்பிட்டுள்ளது போல திருகுங்கள்.
ஆயில் மாற்றுவது எப்படி?
எரிபொருள் - கார் இயங்குவதற்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குவதற்கு இன்ஜின் ஆயில் மிக மிக முக்கியம். அதனால், மேனுவலில் சொல்லி இருப்பதைப் போல, குறிப்பிட்ட கி.மீ-க்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்ற மறக்காதீர்கள்.
முதலில் டேங்குக்குள் இருக்கும் ஆயிலை வெளியேற்றுவதற்காக, காரை ஸ்டார்ட் செய்து இன்ஜினைச் சூடாக்குங்கள். இதன் மூலம் ஆயில் சூடேறி இளகிவிடும். இதனால், ஆயிலை வெளியேற்றுவது சுலபம்.
காரின் இன்ஜினை ஆஃப் செய்து, ஆக்ஸில் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துவிட்டு, 'ட்ரைன் நட்'டை அகற்றி ஆயிலை வெளியேற்றுங்கள்.
ஆயில் ஃபில்டரை, 'ஆயில் ஃபில்டர் ரிமூவர்' வைத்து அகற்றுங்கள்.
புதிய ஆயில், சரியான எடை மற்றும் விஸ்காஸிட்டி கொண்டதுதானா என்று செக் செய்துகொள்ளுங்கள். கொஞ்சம் ஆயிலை ஃபில்டர் சீலின் மீது தடவுங்கள். ஓனர்ஸ் மேனுவலில் எந்த அளவுக்கு ஆயில் நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆயிலை நிரப்புங்கள்.
இன்ஜின் டிப் ஸ்டிக்கை எடுத்து, எவ்வளவு ஆயில் இருக்கிறது என்பதை செக் செய்து கொள்ளுங்கள். சரியான அளவு வரும்வரை ஆயிலை நிரப்புங்கள்.
பேட்டரியை மாற்றுவது எப்படி?
கார் பேட்டரியை மாற்றுவது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், எளிமையான வழிகளைப் பின்பற்றினால், சுலபமாக பேட்டரியை மாற்ற முடியும்.
முதலில், நெகட்டீவ் அதாவது மைனஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள கேபிளின் இணைப்பை அகற்றுங்கள். அதேபோல், ப்ளஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற கேபிளையும் அகற்றுங்கள்.
இப்போது பேட்டரியை வெளியே எடுக்கலாம். பேட்டரி கனமாக இருப்பதால் வெளியே எடுக்கும்போது கவனம் தேவை.
பேட்டரி வைத்திருந்த இடம் அழுக்காக இருந்தால், அதை நன்றாகச் சுத்தப்படுத்துங்கள்.
புதிய பேட்டரியை ஏற்கெனவே பேட்டரி இருந்த இடத்தில் வைத்துவிட்டு, டெர்மினல்களில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி, ப்ளஸ் கேபிளையும், மைனஸ் கேபிளையும் பேட்டரி டெர்மினலில் இணையுங்கள்.
'அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் உதிரி பாகங்கள் வாங்கினால், விலை அதிகமாக இருக்கிறது. அதனால், வெளிமார்க்கெட்டில் வாங்கிப் பொருத்தலாமா?' என்பதுதான் பலரிடமும் இருக்கும் கேள்வி. எங்கே உதிரி பாகங்கள் வாங்குவது லாபம்? வெளியில் வாங்குபவை தரமற்றவையா?
இரண்டிலுமே லாபமும் இருக்கிறது. நஷ்டமும் இருக்கிறது என்பதுதான் உண்மை!
வெளி மார்க்கெட்
வெளி மார்க்கெட் உதிரி பாகம் என்றாலே, அது காரின் தயாரிப்பாளர் தயாரிக்கும் பாகம் இல்லை என்பதுதான் அர்த்தம். அதனால், கார் வாரன்டி காலத்துக்குள் இருக்கும்போது, வெளி மார்க்கெட் பாகங்களை வாங்கிப் பொருத்தினால், வாரன்டி கேன்சலாகிவிடும். வாரன்டி காலம் முடியும் வரை மார்க்கெட் பாகங்களை வாங்கிப் பொருத்துவது நல்லதல்ல.
ப்ளஸ் கார் தயாரிப்பாளரின் உதிரி பாகங்களின் விலையைவிட வெளி மார்க்கெட்டில் கிடைப்பவை விலை குறைவாக இருக்கும் என்பதுதான் இவற்றின் மிகப் பெரிய ப்ளஸ். கார் தயாரிப்பாளர் சொல்லும் விலைக்கும், மார்க்கெட்டின் விலைக்கும் எவ்வளவு விலை வித்தியாசம் இருக்கிறது என்று பாருங்கள். விலை குறைவாக இருப்பின், அதன் குவாலிட்டி பற்றி விசாரியுங்கள்.
தரம் மார்க்கெட் பாகங்களின் தரம், கார் தயாரிப்பாளரின் பாகத்தைவிட சிறப்பாகவும், அதற்கு நிகராகவும் சில பாகங்கள் இருக்கும். உதாரணத்துக்கு, வெளிமார்க்கெட்டில் இருக்கும் பிரேக் அசெம்ப்ளியின் தரம், கம்பெனி பாகத்தைவிட நன்றாகவே இருக்கும். ஆனால், கம்பெனி தயாரிக்கும் பிரேக், காரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டு இருக்கும். அதாவது காரின் விலை, நீடிப்புத்தன்மை, பர்ஃபாமென்ஸ், பிரேக் சத்தம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சத்தம் கொஞ்சம் அதிகமாக வந்தாலும் பரவாயில்லை, பிரேக் பிடித்தவுடன் சட்டென்று கார் நிற்க வேண்டும் என்று நினைப்பவர்கள், மார்க்கெட் பிரேக்குகளையே வாங்கலாம்.
ஒரிஜினல் உதிரி பாகத் தயாரிப்பாளர்
OEM என்பது ஒரிஜினல் எக்யூப்மென்ட் மேனுபேக்ஸரர். அதாவது, நீங்கள் வாங்கிய காரில், டிவிஎஸ் நிறுவனத்தின் எலெட்ரிக்கல் பாகங்கள் இருந்தால், அதுவே மார்க்கெட்டிலும் கிடைக்கும். இதைத்தான் ளிணிவி என்று கூறுவார்கள். இது போன்ற பாகங்களை நம்பி வாங்கலாம். வாரன்டியும் கிடைக்கும்.
வெரைட்டி வெளிமார்க்கெட்டில் வெரைட்டியான பாகங்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு... ஹாரன், டயர், அலாய் வீல், டிஸ்க் பிரேக், ஸ்பார்க் ப்ளக், ஷாக் அப்ஸார்பர், எக்ஸாஸ்ட் என மார்க்கெட்டில் விதவிதமாகக் கிடைக்கும். இதில்தான் பிடித்ததைத் தேர்ந்தெடுக்க முடியும்.
எங்கேயும் கிடைக்கும் வெளிமார்க்கெட் பாகங்கள் எந்த ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைக்குப் போய் கேட்டாலும் கிடைக்கும். உதிரி பாகத்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
மைனஸ் தரம் குறையும். வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து பாகங்களும் தரமானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில தரமான மார்க்கெட் பாகங்கள் கம்பெனி உதிரி பாகத்தைவிட விலை அதிகமாகவும் இருக்கும்.
கம்பெனி
மார்க்கெட் பாகங்களை வாங்கும்போது... தரமான, பெயர் பெற்ற நிறுவனங்களின் பாகங்களை வாங்குவதே நல்லது. அதற்கு, மார்க்கெட் ஆட்டோ பார்ட்ஸ் தயாரிப்பாளர்களைப் பற்றிய நல்ல அறிமுகம் உங்களுக்குத் தேவை. இல்லையென்றால், நீங்கள் ஏமாற்றப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
வாரன்டி கிடையாது சில விலை குறைவான மார்க்கெட் பாகங்களில் வாரன்டி இருக்காது. சரியாக வேலை செய்யவில்லை என்றால், மாற்றிக்கொள்ளவும் முடியாது.
சர்வீஸ் சென்டர்
உடனே வாங்கலாம் சர்வீஸ் சென்டருக்குப் போய் மாருதியின் உதிரி பாகம் வேண்டும் என்று சொன்னாலே போதும். இது சரியாக இருக்குமா? இதனால் பர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுமா என்றெல்லாம் பயப்பட வேண்டிய தேவை இல்லை. விலை, தரம் பற்றி அலசிக்கொண்டு இருப்பதற்கான அவசியமே கிடையாது.
வாரன்டி ஒரிஜினல் பாகங்கள் எப்போதுமே வாரன்டி சலுகைகளுடனேயே வெளிவரும். இதனால் தரத்தில் ஏதாவது பிரச்னை இருந்தாலும், அதை அவர்களே சரிசெய்து கொடுத்துவிடுவார்கள்.
மைனஸ் விலை அதிகம்! ஒரிஜினல் உதிரி பாகங்களின் விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
குவாலிட்டி ஒரிஜினல் என்பதற்காக, குவாலிட்டி மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!
எப்போது ஒரிஜினல் வாங்க வேண்டும்? எப்போது வெளி மார்க்கெட் பாகங்கள் வாங்கலாம்?
விபத்து ஏற்பட்டு, பாடி பாகங்கள் பாதிக்கப்பட்டால் ஒரிஜினலைப் பொருத்துவதே நல்லது. ஏனென்றால், மார்க்கெட்டில் கிடைக்கும் பாடி பேனல்கள், தரத்தில் சிறப்பாக இருக்காது என்பதோடு, விபத்து ஏற்படும்போது அதை பாதுகாப்பதற்கான தொழில்நுட்பங்களும் (க்ரம்ப்பிள் ஸோன்) இதில் இருக்காது.
மற்றபடி அலாய் வீல், மியூஸிக் சிஸ்டம், ஸ்பார்க் ப்ளக், ஹெட் லைட்ஸ் போன்ற பாகங்களை மார்க்கெட்டில் வாங்கலாம். ஆனால், ஸ்டீயரிங் வீல், டிஸ்க் பிரேக் போன்ற பாகங்களை வாங்கும்போது, அது காரில் இருக்கும் சில வசதிகளோடு இணைந்து வேலை செய்யாமல் போகும் வாய்ப்புகள் இருக்கிறது.
உதாரணத்துக்கு, உங்கள் காரின் ஸ்டீயரிங் வீலிலேயே மியூஸிக் கன்ட்ரோல் பட்டன்கள் இருந்து, நீங்கள் வேறு ஸ்டீயரிங் வீலை மாற்றினால், அதில் இந்த கன்ட்ரோல்கள் இல்லாமல் போகும் வாய்ப்புகள் அதிகம்!
சிலர், காரை வாங்கி வீட்டில் நிறுத்திவிட்டு பயன்படுத்தவே மாட்டார்கள். ஒரு மாதம், மூன்று மாதம் என மாதக் கணக்கில் காரை உபயோகப்படுத்தாமல் இருந்தால், என்ன செய்ய வேண்டும்?
முதலில் பேட்டரி கனெக்ஷனைத் துண்டித்துவிடுங்கள்.
காருக்குள் இருந்து தேவையற்ற பொருட்களை எடுத்துவிடுங்கள். காரை ஸ்டோர் ரூம் ஆக உபயோகப்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால், தேவையற்ற பொருட்கள் காருக்குள் இருக்கும்போது சீட்டுகள் அழுக்காகவும், மெட்டல் பாகங்கள் துருப்பிடிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
சரியாக சென்ட்ரல் லாக் செய்யப்பட்டுள்ளதா என்று பாருங்கள்.
வைப்பர்களை கண்ணாடியுடன் ஒட்டாமல், தூக்கி நிறுத்திவிடுங்கள்.
கொஞ்சம் காற்றோட்டமான இடத்திலேயே காரை நிறுத்தி வையுங்கள்.
நீண்ட நாட்கள் கழித்து காரை எடுக்கும்போது...
டயரில் போதுமான காற்றை நிரப்புங்கள்.
ஆயில், சரியான அளவு இருக்கிறதா என்று பாருங்கள்.
பேட்டரியை சார்ஜ் செய்து மீண்டும் இணையுங்கள்.
மூன்று மாதங்கள் கழித்து காரை எடுக்கிறீர்கள் என்றால், சர்வீஸ் சென்டரில் ஒருமுறை கொடுத்து ஜெனரல் செக்-அப் செய்த பிறகே ஓட்டுவது நல்லது.
சின்னச் சின்ன பயணங்கள் வேண்டாம்!
10 நிமிடத்துக்கும் குறைவான பயணங்களைக் கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். இப்படிச் செய்யும்போது, இன்ஜின் முழுமையாக ஹீட் ஆகாது. இன்ஜின் கம்பஷனில் எரிபொருளும், காற்றும் கலந்து எரிந்து சக்தியாகக் கிடைக்கிறது. குறிப்பிட்ட வெப்பநிலைக்கு உயர்ந்த பிறகுதான் எரிபொருள் முழுமையாக எரியும். அதற்கு வெப்பம் தேவை. எரிபொருள் எரிந்து வெளியேறும்போது, புகையாக சைலன்சர் வழியாக வெளியேறும். ஆனால், குறைந்த தூரப் பயணங்கள் செய்யும்போது, எரிபொருள் சரியாக எரியாமல், இன்ஜின் மற்றும் எக்ஸாஸ்ட்டிலேயே தங்கிவிடும். அதனால், எளிதில் துருப்பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இன்ஜினுக்குள் தங்கிவிடும் எரிபொருள், ஆயிலின் தன்மையைக் குறைத்துவிடும்.
கார் துருப்பிடிக்காமல் பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு!
கடற்கரை, காற்று புக முடியாத இடங்களில், காரை அதிக நாட்கள் நிற்க வைத்தால், துருப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.
சிறிது தூரப் பயணங்களுக்கு காரை உபயோகப்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஜிம், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு காரில் போவதைவிட டூ-வீலர் அல்லது நடந்து செல்வதே நல்லது. கார்களை நாம் அதிகப்படியாக உபயோகப்படுத்தும்போது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பதோடு, எரிபொருளும் வீணாகிக் கொண்டே இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
பெட்ரோலைச் சேமியுங்கள்!
வேகம் (15 சதவிகித சேமிப்பு)
குறைவான வேகத்தில் சென்றாலே எரிபொருளைச் சேமிக்க முடியும். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்வதைவிட 50 கி.மீ வேகத்தில் சென்றால், எரிபொருள் செலவு குறையும்.
திட்டமிடுதல் (20 சதவிகித சேமிப்பு)
எந்த இடத்துக்குச் செல்கிறோமோ அதைத் திட்டமிட்டு, அங்கு செல்ல சுலபமான (கொஞ்சம் அதிக தூரம் என்றாலும் பரவாயில்லை) வழியைத் தேர்ந்தெடுத்துச் சென்றால், 20 சதவிகித எரிபொருளைச் சேமிக்க முடியும்.
கன்ட்ரோல் (18 சதவிகித சேமிப்பு)
அடிக்கடி பிரேக், கிளட்ச் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
வெயிட் (15 சதவிகித சேமிப்பு)
காரில் எடையைக் கூட்டினால், எரிபொருள் வீணாகும். அதிக எடையுடன் காரிலோ, பைக்கிலோ செல்வதைத் தவிர்த்தால், எரிபொருளைச் சேமிக்க முடியும்.
ஏரோ டைனமிக்ஸ் (27 சதவிகித சேமிப்பு)
காரின் மேற்கூரையில் பொருட்கள் வைத்தால், அல்லது கதவுக் கண்ணாடிகளைத் திறந்து வைத்துச் சென்றால், காற்றினால் காரின் ஏரோ டைனமிக் பாதிக்கப்படும். அதனால், இன்ஜின் வேகத்தை அதிகரிக்க வேண்டியது வரும். இதனால் எரிபொருள் வீணாகும்.
பராமரிப்பு (8 சதவிகித சேமிப்பு)
வாகனத்தைச் சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்வதோடு, அடிக்கடி இன்ஜின் ஆயில் இருக்கிறதா? டயரில் காற்று இருக்கிறதா? என்று 'செக்' செய்துவிட வேண்டும்.
எரிபொருள்
(6 சதவிகிதம்)
சரியான எரிபொருளை பார்த்து நிரப்ப வேண்டும். ஒரே வகையான பெட்ரோலை நிரப்புவதே நல்லது.
எலெக்ட்ரிக்கல்ஸ்
(10 சதவிகித சேமிப்பு)
எலெக்ட்ரிக்கலைப் பொறுத்தவரை ஏ.ஸி-யால் அதிக எரிபொருள் வீணாகும். அது தவிர, மியூஸிக் சிஸ்டம் முதல் வைப்பர் வரை மின்சாரப் பொருட்களைப் பயன்படுத்தும்போது, பேட்டரியின் ஆயுள் குறையும்.
ஐடிலிங்க்
(4 சதவிகித சேமிப்பு)
டிராஃபிக் சிக்னல்களிலோ அல்லது வேறு ஏதாவது இடங்களிலோ 30 வினாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் நிற்க வேண்டியது வந்தால், இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள். ஆஃப் செய்துவிட்டு 'ஆன்' செய்யும்போது, அதிக பெட்ரோல் செலவாகாது.
கார் ஐடிலிங்கில் நிற்கும்போது, மணிக்கு ஒரு லிட்டர் எரிபொருள் வீணாவதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது!

No comments:

Post a Comment