Friday 3 July 2015

காரை அலங்கரிக்க

நாம் வாங்க நினைக்கும் காரில் நல்ல மைலேஜ், சூப்பர் பர்பாமென்ஸ், அசரடிக்கும் ஸ்டைல் என அத்தனையையும் எதிர்பார்க்கிறோம். ஆனால், நமது பட்ஜெட்டுக்கு ஒரு மாருதி ஆல்ட்டோதான் வாங்க முடிகிறது. சிலர் ஆல்ட்டோ வாங்கினாலும் கொஞ்சம் காசு வந்ததும் அதை பென்ஸ் கார் ரேஞ்சுக்கு பீல் பண்ணி அழகையும் சொகுசையும் கூட்டிவிடுகிறார்கள். இப்படி அலங்கரிக்கப்பட்ட எத்தனையோ கார்களை நாம் பார்க்கிறோம். இது எப்படி சாத்தியமாகிறது?
கார் அலங்காரம் என்பது விதவிதமாக பெயின்ட் அடிப்பதோ, கலர் பல்புகள் மாட்டி பேஷன் ஷோ மாதிரி காட்டுவதோ, வித்தியாசமாக ஒலி எழுப்பும் ஹாரன்களை மாட்டி அலறவிடுவதோ அல்ல. இது ஒரு தனிக் கலை.
கார் டெக்கார்ஸ், கார் ஜூவல்லர்ஸ் என்கிற பெயரில் கார் அலங்காரம் செய்யும் கடைகள் வந்துவிட்டன. இவர்களில் எப்படிப்பட்டவர்களிடம் காரை ஒப்படைக்கலாம்? கார் அலங்காரம் செய்ய என்னவெல்லாம் தேவை? எவ்வளவு செலவாகும் என உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கெல்லாம் இங்கே விடை காண முயற்சி செய்திருக்கிறோம். காரைச் சுத்தமாக வைத்திருப்பதுகூட ஒரு வகையில் அலங்காரம்தான். காரை எப்படித் துடைப்பது என்பதில் ஆரம்பித்து மியூஸிக் சிஸ்டம், செக்யூரிட்டி சிஸ்டம் என அத்தனை விஷயங்களையும் இங்கே தொகுத்திருக்கிறோம்!
காரை வெளிப்பக்கம், உள்பக்கம், பர்பாமென்ஸ் பாகங்கள் என மூன்று விதமாக அலங்கரிக்கலாம்.
காரை அலங்கரிக்கத் தேவையான பொருட்கள், அத்தியாவசியமான உதிரி பாகங்கள் ஆகியவை டீலரிடமும் வெளிமார்க்கெட்டிலும் ஏராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றன. காரை வாங்கியவுடன் இவற்றை வாங்கிப் பொருத்துவது நல்லது.
உள்பக்கம்
ப்ளோர் மேட்
டிக்கி மேட்
மட் பிளாப்
சன் கன்ட்-ரோல் பிலிம்
சீட் கவர்
ஆடியோ சிஸ்டம்
ஏர் பிரஷ்னர்
பாதுகாப்பு
ரிமோட் லாக்-கிங்
கியர் லாக்
ஹெட்லைட் பல்ப்
மிரர் லாக்
காரைச் சுத்தம் செய்வது எப்படி?
காரைத் துடைப்பது என்பது மிகவும் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், இதைச்சரியாகச் செய்யவில்லை என்றால், காரில் கீறல்களும் கோடுகளும் விழுந்துவிடும். காரைச் சுத்தம் செய்வதற்கென ஒரு முறை இருக்கிறது.
காரை எப்போதுமே நிழலில் நிறுத்திச் சுத்தம் செய்யுங்கள். கூடுமானவரை வெயிலில் நிறுத்திவிட்டுச் சுத்தம் செய்யாதீர்கள். தண்ணீரை பைப் மூலம் காருக்கு மேல் வேகமாக அடியுங்கள். அப்போதுதான் அதன் மேல் படிந்திருக்கும் மண், தூசு வெளியேறும்.
ஒரு பக்கெட்டுக்குள் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் கார் கிளீனிங் ஷாம்பூவைக் (மிகவும் ஸ்ட்ராங்கான ஷாம்பூவைப் பயன்படுத்தாதீர்கள்) கலக்குங்கள். பின்னர் இதை ஒரு ஸ்பான்ச்சில் நனைத்து காரைத் துடையுங்கள். மீண்டும் தண்ணீரை பைப்பின் மூலம் பீய்ச்சி அடித்துவிட்டு துடையுங்கள்.
பெயின்ட் அடிக்கும் பெரிய பிரஷ்களைக் கொண்டு வீல் களையும் ரிம்களையும் சுத்தம் செய்யுங்கள். அலாய் வீல்களைச் சுத்தம் செய்வதற்குப் பிரத்தியேகமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை அமிலத்தன்மை கொண்டவை. எனவே, இவற்றை காரின் பிளாஸ்டிக் பாகங்களின் மேல் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
காரைக் கழுவிய பிறகு லெதர் (Chammois leather) மூலம் துடையுங்கள். மூன்று மாதத்துக்கு ஒரு முறை வேக்ஸிங் செய்யுங்கள். லிக்யூட் வேக்ஸ்களைப் பயன்படுத்துவது சுலபமாக இருக்கும். பிறகு சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து எடுங்கள்.
கண்ணாடிகளில் சின்னதாகத் தூசு படிந்தால்கூட அது பார்வையை மறைக்கும். எப்போதுமே கண்ணாடிகளைக் கொஞ்சம் வெதுவெதுப்பான நீரில் வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சையைக் கலந்து துடைத்தெடுக்கலாம்!
காரின் உள்பக்கத்தை சுத்தமாக வைத்திருப்பது எப்படி?
உங்கள் காரின் பேப்ரிக் சீட்டுகளை அடிக்கடி நல்ல தரமான பேப்ரிக் பிரஷ்ஷைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். அடிக்கடி வாக்குவம் கிளீனரையும் வைத்துச் சுத்தம் செய்யலாம்.
காருக்குள் நுழையும்போது எப்போதுமே ஷ¨, செருப்புகளை வெளியே தட்டிவிட்டு உள்ளே ஏறுங்கள். இதன் மூலம் மண், அழுக்கு, சேறு போன்றவை காருக்குள் நுழையாது. முதலில் இதுபோன்ற அழுக்குகள் பெரிதாகத் தெரியாது. ஆனால், நாளாக நாளாக அழுக்குகள் ஏராளமாகப் படிந்துவிட்டால், அவற்றைச் சுத்தம் செய்வது மிகவும் சிரமம்.
காரின் எல்லா மூலை முடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்யும் வகையில் குறுகலான நுழைவைக் (நாஸில்) கொண்ட வாக்குவம் கிளீனரை பயன்படுத்துங்கள். இதனைக் கொண்டு சுத்தம் செய்யும்போது, காரின் எல்லா இடங்களிலும் உள்ள அழுக்குகளை வெளியே எடுக்க முடியும்.
காரில் கால்வைக்கும் இடம், பொருட்கள் வைக்கும் பூட் ஆகியவற்றையும் சுத்தம் செய்யாமல் விட்டுவிடாதீர்கள். முழுவதுமாகச் சுத்தம் செய்யுங்கள்.
டேஷ்போர்டைச் சுத்தம் செய்யும்போது மிகவும் தரமான கிளினீங் ஷாம்பூவையோ அல்லது சோப் தண்ணீரையோ ஒரு துணியில் கலந்து மெதுவாகத் துடைத்தெடுங்கள். ஏ.ஸி வென்ட்டுகளுக்கிடையே பெயின்ட் பிரஷ்ஷை வைத்துச் சுத்தம் செய்யுங்கள்.
உங்கள் காரில் லெதர் இருக்கைகள் இருக்கிறதென்றால், அதற்கென்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் கிளீனிங் ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். எக்காரணத்தைக் கொண்டும் லெதர் இருக்கைகளில் சிலிகான், ஆல்கஹால் ஆகியவை படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
உஷார்!
நம்மூரில் கார் திருட்டுப்போவது நாளுக்கு நாள் அதிகரித்து -வருகிறது. அதனால், காரில் எது இருக்-கிறதோ, இல்லையோ செக்யூரிட்டி சிஸ்டம் மிக மிக முக்கியம். இந்த சிஸ்டத்தைப் பொறுத்தவரை மேனுவல், எலெக்ட்ரிக் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
மேனுவல் செக்யூரிட்டி சிஸ்டம் என்பது ஸ்டீயரிங், கியர் லாக் ஆகியவற்றைக்கொண்டது. நீங்கள் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்துபவர் என்றால், நிச்சயம் உங்களுக்கு இதில் ஏதாவது ஒன்று கட்டாயம் தேவை. கியர் லாக்கை நியூட்ரல் அல்லது ஏதாவது கியரில் லாக்காகிவிடும் வகையில் பொருத்திக்கொள்ளலாம். ஸ்டீயரிங் லாக்கைப் பொருத்திவிட்டால் ஸ்டீயரிங்கைத் திருப்பவே முடியாது.
எலெக்ட்ரிக் செக்யூரிட்டி லாக்கைப் பொறுத்தவரை அலாரத்-துடன் கூடிய சென்ட்ரல் ரிமோட் லாக்கிங், மோஷன் சென்ஸார், இன்ஜின் இம்மொபலைஸர் வசதிகள் எல்லாம் விலை அதிக-மான கார்களில் இருக்கின்றன.
ஆட்டோகாப், நிப்பான், பிளாக்கேட் போன்ற நிறுவனங்கள் எலெக்ட்ரிக் செக்யூரிட்டிசிஸ்டத்தை விற்பனை செய்துவருகின்றன. இது காரை லாக் செய்வதற்கும் திறப்பதற்கும் மட்டுமல்ல, காரை யாராவது தொட்டாலோ அல்லது அதில் கை வைத்தாலோ சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்வதற்கும் உதவும்.
8,000 ரூபாய்க்குக் கிடைக்கும் சென்ட்ரல் லாக்கிங், எவ்வளவு பெரிய கார் திருடன் வந்தாலும் திருட முடியாத வகையில் அமைக்-கப்பட்டுள்ளது. 4,000 ரூபாய்க்குச் சாதாரணமாகக் கிடைக்கும் சென்ட்ரல் லாக்கிங், ரிமோட்டுடன் கிடைக்கிறது. இதில் அலாரம் கிடை-யாது. எனவே, யாராவது தொட்டால் சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்யாது.
சென்ட்ரல் லாக்கிங்கைப் பொறுத்த-வரை நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்களோ அதற்கு ஏற்ற வகையில் அதிக வசதிகளுடன் கூடிய செக்யூரிட்டி சிஸ்டம் கிடைக்கும்.
கார் செக்யூரிட்டி சிஸ்டத்துக்கு நீங்கள் அதிக பட்ஜெட் போட்டு-வீட்டீர்கள் என்றால், இன்ஜின் இம்மொபலைஸருடன் கிடைப்பதை வாங்குங்கள். அந்த அளவுக்கு பட்ஜெட் இல்லையென்றால், கியர் மற்றும் ஸ்டீயரிங் லாக்கையாவது கட்டாயம் வாங்கிப் பொருத்துங்கள். இது தவிர, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகும் செக்யூரிட்டி சிஸ்டம்களும் கிடைக்கின்றன. இவற்றில் வாரன்ட்டியும் நம்பகத் தன்மையும் இருக்-காது.
என்ன வகையான செக்யூரிட்டி சிஸ்டத்தை வாங்கப்போகிறீர்கள் என்று முடிவு செய்துவிட்டால், நம்-பகத்தன்மையுள்ள கடை-களில் வாங்குங்கள். நீங்கள் வாங்கும் பொருளுக்கு வாரன்ட்டி இருந்தால் நல்லது. மேலும், இதைப் பொருத்-துபவர்கள் இந்தத் துறையில் சிறந்து விளங்கு-பவர்களாக இருக்க- வேண்டும். இந்த எலெக்ட்ரிக் சாதனத்தை ஒழுங்காகப் பொருத்த-வில்லை என்றால், திடீரென தீப்பிடித்து எரியும் ஆபத்து இருக்கிறது.
பொதுவாக எலெக்ட்ரிக், மேனுவல் என இரண்டு செக்-யூரிட்டி சிஸ்டத்தையுமே பொருத்-துவது நல்லது!
மழை நேரங்களில்.. சொதப்புமா சென்ட்ரல் லாக்கிங்?
மூன்று வருடங்களுக்கு முன்பு மும்பையிலும் சென்னை-யிலும் வெள்ளம் ஏற்பட்டபோது, கார்கள் தண்ணீரில் மூழ்கி பல விபத்துகள் நடந்தன. சென்ட்ரல் லாக்கிங் கோளாறால் காருக்குள் மாட்டிக் கொண்டவர்கள் தப்பிக்க முடியாமல் போய்விட்டதென்று அப்போது ஏராளமான வதந்திகள் பரவின. இது முற்றிலும் உண்மையில்லை என மறுக்கிறார்கள் சென்ட்ரல் லாக்கிங் தயாரிப்பாளர்கள்.
சாலை விபத்து அல்லது தீ விபத்து ஏற்படும்போது கதவுகளைத் திறக்க முடியாது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், சென்ட்ரல் லாக்கிங்கை வேலை செய்யவைக்கும் காரணிகள் (Actuattors) மோட்டார்கள்தான். இது மேனுவல் லாக்கின் கூடவே இணைந்து வேலை செய்யும். சென்ட்ரல் லாக்கிங் மேனுவல் லாக்கின் செயல்பாட்டை எந்த வகையிலும் தடுக்காது. அதனால் பேட்டரி இல்லையென்றாலோ, விபத்தின்போதோ கையை வைத்து மேனுவலாக காரின் கதவுகளைத் திறக்க முடியும். இந்த உண்மையைக் கண்டறிய பேட்டரியைக் கழற்றிவிட்டே சோதனை செய்துபார்க்கலாம்.
ஆனால், சென்ட்ரல் லாக்கிங்கைத் தரமான, நம்பகத்-தன்மை வாய்ந்த கடைகளில் பொருத்த வேண்டும். சாதாரண மெக்கானிக்குகளிடமோ அல்-லது பயிற்சி இல்லாதவர்களிடமோ பொருத்தும் போது, ஒயர்களில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மின்சாரம் 'லீக்'காக வாய்ப்பிருக்கிறது.
சாலை விபத்தின்போதோ, தீ விபத்தின்போதோ காரின் கதவுகளை கைகளைக் கொண்டு உள்ளுக்குள் இருந்தே மேனுவலாகத் திறக்க முடியும்.
ஒவ்வொரு கதவிலும் பொருத்தப்பட்டிருக்கும் Actuator ஒரு மோட்டாரைக் கொண்டிருக்கும். இது டோர் லாக்குடன் மெக்கானிக்கலாக இணைக்கப்-பட்டிருக்கும். திடீரென சென்ட்ரல் லாக்கிங் வேலை செய்யவில்லை என்றாலும் மேனுவலாக கதவுகளைத் திறக்க முடியும்.
பெரிய விபத்துக்களில் கதவுகள் நொறுங்கி 'ஜாம்' ஆகி கதவுகளைத் திறக்க முடியாமல் போவதற்கும் சென்ட்ரல் லாக்கிங்குக்கும் சம்பந்தம் இல்லை.
சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் கொண்ட கார்களை ரிமோட் இல்லாமல் வெளியில் இருந்து திறக்க முடியாது. காருக்குள் யாராவது மாட்டிக்கொண்டால், கதவுக் கண்ணாடிகளை உடைத்துவிட்டு அவர்களை வெளியே கொண்டுவருவதைத் தவிர வேறு வழியில்லை!
தாம் தூம்!
கார் பயணத்தில் இசையை ரசிக்கிறவர்களே அதிகம். இதுதான் பயணத்தை இனிமையாக்குகிறது. 'பவர் ஸ்டீயரிங்கூட தேவை-இல்லை.
ஒரு நல்ல மியூஸிக் சிஸ்டம் வாங்க என்ன செய்ய வேண்டும்? அதைத் தேர்ந்-தெடுப்பது எப்படி?
ஹெட் யூனிட்
''சிறந்த மியூஸிக் சிஸ்டத்-தைத் தேர்ந்தெடுப்பதற்கு முதலில் ஒரு நல்ல ஹெட் யூனிட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹெட் யூனிட் என்பது டிஸ்பிளே, சிடி-யை உள்ளே செலுத்தும் பகுதியாகும். இதில்தான் சிடி, எப்.எம் ரேடியோ, கன்ட்-ரோல் வசதிகள் இருக்கும். குறைந்த விலைக்கு ஹெட் யூனிட் வேண்டும் என்றால், அதில் சிடி-க்குப் பதிலாக கேஸட் பிளேயர் மட்டும்தான் இருக்கும். ஒரு ஹெட் யூனிட்டின் குறைந்தபட்ச விலை 2,000 ரூபாய். சிடி சேஞ்சர், எப்.எம் ரேடியோ உள்ளிட்ட வசதிகள் கொண்ட மாடலின் விலை 4,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாய்க்கும் மேல் கிடைக்கிறது.
இந்த ஹெட் யூனிட்டைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. தரமான தயாரிப்பாகப் பார்த்து வாங்குவதே நல்லது. அடுத்து கவனிக்க வேண்டிய விஷயம், காரை பூட்டிவிட்டுச் செல்லும்போது ஹெட் யூனிட்டை மட்டும் தனியாக எடுக்க வசதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தரமான நிறுவனத்தின் தயாரிப்பு ஹெட் யூனிட்டுகள் என்றால், இந்த வசதி நிச்சயம் இருக்கும். இது இருந்தால்தான் ஹெட் யூனிட்டை திருட்டுப் போகாமல் காப்பாற்ற முடியும். அடுத்து, இந்த ஹெட் யூனிட் நம் காரின் டேஷ் போர்டுக்குப் பொருந்துகிறதா என்றும் பார்க்க வேண்டும்.
மேலும், உங்கள் ஹெட் யூனிட்டில் என்னென்ன வசதிகள் எல்லாம் வேண்டும் என்று தேர்ந்தெடுங்கள். வசதிகள் கூடக்கூட விலையும் கூடும். இதில் கன்ட்ரோல் பட்டன்கள் குறைவாக இருப்பது நல்லது. அதிக-மாக இருந்தால், வாகனம் ஓட்டும்-போது எதை அழுத்துவது என்ற குழப்பத்தில் கவனம் சிதறும்.
வீடியோ சிஸ்டம்
வீடியோ சிஸ்டத்தை வாங்கும் முன் அதில் டிவிடி பிளேயர், வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர், ஜிபிஎஸ் என நமக்கு என்னென்ன வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்துவிட வேண்டும்.
அதன் பிறகு, அதை காரில் எந்த இடத்தில் பொருத்த வேண்டும் என முடிவு செய்யுங்கள். பொதுவாக முன் பகுதியின் மேற்கூரையிலும், முன்பக்க இருக்கைகளின் தலைப் பகுதியின் பின் பக்கத்திலும் பொருத்துவார்கள். கூடுமானவரை முன் பக்கத்திலோ அல்லது டேஷ் போர்டிலோ வீடியோ சிஸ்டத்தைப் பொருத்துவதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், ஓட்டுநரின் கவனம் திசை திரும்பாமல் இருக்கும்.
ஸ்பீக்கர்
மியூஸிக் சிஸ்டத்தின் முக்கிய அம்சமே லவுட் ஸ்பீக்கர்கள்தான். பொதுவாக பக்கத்துக்குஒன்று என்ற அளவில் இரண்டு லவுட் ஸ்பீக்கர்களே போதுமானதாக இருக்கும். ஆனால், சத்தம் அதிகமாக வேண்டும் என்பதற்காக ஸ்பீக்கர்-களின் எண்ணிக்கையைக் கூட்டிக்-கொண்டே போகலாம். மெல்லிய சத்தம்கூட துல்லியமாகக் கேட்பதற்காக லவுட் ஸ்பீக்கர்-களோடு சப்-ஊபர்களும் பொருத்-தப்-படுகின்றன. இவைதான் மியூஸிக் சிஸ்டத்தின் மதிப்பைக் கூட்டும்.
ஸ்பீக்கர் வாங்கும்போது நீங்கள் அடிக்கடி கேட்கும் பாடல்-களின் சிடி-யையும் கையோடு எடுத்துச் செல்லுங்கள். அந்தப் பாடல்களைப் புது ஸ்பீக்கர்களில் கேட்கும்போது ஸ்பீக்கர் சரியாக இருக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்க்க உதவும். ஸ்பீக்கர்களை எந்த இடத்தில் பொருத்தப் போகிறோம் என்பது மிகவும் முக்கியம். ஏற்கெனவே காரில் இருக்கும் ஸ்பீக்கரின் அளவுக்-கேற்ப புது ஸ்பீக்கர்களை வாங்குங்கள். அளவு அதிகமான ஸ்பீக்கரை கதவுக்கிடையில் பொருத்தும்போது, கண்ணாடிகளை இயக்குவதில் பிரச்னை ஏற்படும். சப்-ஊபர்கள் பொதுவாக எட்டு இன்ச் அளவுக்கு இருப்பதால் அதிகமான ஆம்ப்ளிபயர் பவரையும் இழுக்கும். உங்கள் காருக்குள் இருக்கும் இடத்தைப் பொறுத்து எத்தனை சப்--ஊபர்கள் தேவை என்பதைத் தேர்ந்தெடுங்கள்.
-குறைவான விலையுடன் சிறிய அளவிலான கோக்ஸியல் (Coaxial) ஸ்பீக்-கர்களை காரில் பொருத்துவது சுலபம். அதேசமயம், இதில் சத்தம் அதிகமாகக் கேட்காது. ஸ்பீக்கர்-களை டேஷ் போர்டு, கதவுகள், பூட் ஆகியவற்றில் பொருத்த வேண்டும்.
ஆம்ப்ளிபயர்ஸ்
ஆம்ப்ளிபயரின் பணியே, குறைந்த அளவில் வரும் சத்தத்தை அதிக அளவாக்கி ஸ்பீக்கர்களுக்குத் தருவதுதான். 20 வாட்டில் ஆரம்-பித்து 1000 வாட் வரை ஆம்ப்ளி-பயர்கள் இருக்கின்றன. இதன் விலையும் திறனுக்-கேற்ப சில ஆயிரங்களில் இருந்து பல ஆயிரங்-களுக்கு அதிகரிக்கும். ஆம்ப்ளி-பயரின் அளவு, எடை ஆகிய-வற்றை வைத்தே அதன் தரத்தைக் கண்டுபிடித்துவிட முடியும். தரமான ஆம்ப்ளிபயர்கள் எடை அதிகமாகவும் அளவில் கொஞ்சம் பெரிதாகவும் இருக்கும்.
முக்கியமாக, இவற்றைப் பொருத்-தும்போது தரமான ஒயர்களைப் பயன்படுத்த வேண்டும். மியூஸிக் சிஸ்டம், ஸ்பீக்கர்கள் பொருத்தும்-போது, காரின் அழகு குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்-டும்.
சென்னையில் டெக்னோகிராட், மெட்டல் எபெக்ட் போன்ற பிரபலமான கடைகள் மியூஸிக் சிஸ்டம் பொருத்துவதில் சிறந்து விளங்குகின்றன!
'தல' விளக்குகள்!
காருக்கு முக்கியமானது பவர்புல் ஹெட் லைட். நம் ஊரில் விற்பனையாகும் கார்களின்ஹெட் லைட்டுகள் மிகவும் பவர்புல்லாக இருப்பதில்லை. இதனால் இரவு நேரத்தில் மலைப்பாதைகளிலோ அல்லது விளக்குகளே இல்லாத சாலைகளிலோ பயணிக்கும்போது வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.
இப்போது ஸெனான் ஹெட் லைட்டுகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இவை மிகவும் பிரகாசமாக வெளிச்சம் தருகின்றன. ஸெனான் என்பது கம்பெனி பெயரல்ல. எல்ஈடி போன்று இதுவும் ஒரு வகை விளக்குகள். ஸெனானில் இருக்கும் தொழில்நுட்பத்தை 'High Intensity Discharge ' என்று கூறுவார்கள்.
அதற்காக வெள்ளை நிறத்தில் இருக்கும் எல்லா விளக்குகளும் ஸெனான் விளக்குகள் அல்ல. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்புகள் ஸெனான் என்று போலியாக விற்பனை செய்யப்படுகின்றன, அதனால் கவனமாக இருங்கள்.
பிலிப்ஸ் நிறுவனம் ஸெனான் விளக்-கு-களைத் தயாரிக்கிறது. இது விலை அதிகமாக இருக்கிறது. இத்தகைய விளக்குகள் வெளி-மார்க்கெட்டில் விலை குறைவாகவும் கிடைக்கின்றன. இதைப் பொருத்-துவதற்கு 1,000 ரூபாய் வரைதான் செலவாகும். இந்த விளக்குகள் அதிகமான வெப்பத்தை உமிழும் என்பதால், காரில் உள்ள ரிப்ளெக்டர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது!
உறுதி... அழகு... அசத்தல்... அலாய் வீல்!
இப்போது அலாய் வீல்கள்தான் பேஷன். இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமான கார்கள் ஸ்டீல் வீல்களுடனேயே விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், வீல்களைப் பொறுத்தவரை அலாய் மற்றும் மேக் வீல்களைப் பொருத்தி, அலங்காரப்படுத்த முடியும்.
ஸ்டீல் வீல்களைவிட அலாய் வீல் எடை குறைவானது. இதனால் காரின் நிலைத்தன்மை அதிகரிக்கும் என்பதோடு, கையாளுமையும் மைலேஜும் சிறப்பாக இருக்கும். இதைவிட அலாய் வீல்களைப் பொருத்திவிட்டால், அது மாருதி 800-ஆக இருந்தாலும்கூட அதற்கு ஒரு ராயல் லுக் கிடைத்துவிடும். தரமான அலாய் வீல்கள் துருப்பிடிக்காது. இதன்மூலம் டயரின் ஆயுளும் அதிகரிக்கும்.
எதைத் தேர்ந்தெடுப்பது?
உங்கள் கார் டயரின் அளவுக்குத் தகுந்தபடி சரியான அலாய்வீல்களைத் தேர்ந்தெடுங்கள். தவறான அளவில் அலாய் வீல்களைப் பொருத்தும்போது, அதிர்வுகள் அதிகமாக ஏற்படும். மேலும் சஸ்பென்ஷனிலும் பிரச்னைகள் வரும்.
அலாய் வீல்கள் குறைவான விலைக்குக் கிடைக்காது. ஐந்து வீல்களும் சேர்த்து 12,000 ரூபாயில் இருந்து 60,000 ரூபாய் வரை விற்பனைக்குக் கிடைக்கின்றன. நம்மூரில் கிடைக்கும் அலாய் வீல்களைவிட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் அலாய் வீல்களுக்குத்தான் அதிக மவுசு இருக்கிறது. ஆனால், சிலவற்றுக்கு வாரன்ட்டி இருக்காது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஆரா (AURA), நியோ அலாய் வீல்கள் மிகப் பிரபலம். ஜெர்மனியில் தயாரிக்கப்படும் ஙிஙிஷி அலாய் வீல்கள்தான் நம்பர் ஒன். 45 ஆயிரம் ரூபாயில் இருந்து 1,20,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இது சென்னை அருகே முட்டுக்காட்டில் உள்ள 'பிஜே ஸ்பீடு ஷாப்' என்னும் கடையில் மட்டுமே கிடைக்கிறது.
அலாய் வீல்களை வாங்கிப் பொருத்திவிட்டால் மட்டும் போதாது. தொடர்ந்து ஒழுங்காகப் பராமரிக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறையாவது வெதுவெதுப்பான சோப் கலந்த நீரில் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.
விபத்து ஏற்பட்டு அலாய் வீல்கள் நசுங்கினால் அதைச் சரி செய்ய முடியாது. புதிதாகத்தான் மாற்றியாக வேண்டும்!
விதவிதமாய்...
காசு அதிகம் கொடுத்து கலர் கலராக பெயின்ட் அடிக்க முடியாதவர்களுக்கு, இருக்கவே இருக்கிறது ஸ்டிக்கர்ஸ். காருக்குள் அலங்காரம் செய்வது ஒரு வகை என்றால், காருக்கு வெளியே ஒட்டும் ஸ்டிக்கர் அலங்காரம் இப்போது இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது.
கார் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதில் சென்னையில் பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களிடம் காரில் ஒட்ட விரும்பும் படம், சைஸ், டிஸைன் ஆகியவற்றைச் சொன்னால், அதை அப்படியே அச்சு அசலாக ஸ்டிக்கராகச் செய்து காரில் ஒட்டிவிடுகிறார்கள்.
''இது முழுக்க முழுக்க வினைல் ஸ்டிக்கர்கள். ஒரு பக்கத்துக்கு எட்டு அடி நீளம் என்கிறஅளவில் பதினாறு அடிக்கு ஸ்டிக்கர் தேவைப்படும். அதை வாடிக்கையாளரின் தேவைக்-கேற்ப கட் செய்வதில்தான் என் வேலையே இருக்-கிறது. எவ்வளவுதான் கன மழை பெய்தாலும் இந்த ஸ்டிக்கர் உரிந்து போகாது'' என்கிறார் ஸ்டிக்கர் சத்யா.
''காரின் சைஸ§க்கும் டிஸைனுக்கும் ஏற்றவாறு விலை வேறுபடும். 2,000 ரூபாய் முதல் 20,000 வரை கார் ஸ்டிக்கர்களை ஒட்டமுடியும். இந்த ஸ்டிக்கர்களை காரின் பெயின்ட்டுக்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் ஈஸியாகப் பிரித்துவிட முடியும்'' என்கிறார் கார் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதில் புகழ்பெற்ற ரவி!
நொடிக்கொரு நிறம்!
''தூரத்துல ஒரு பச்சை கலர் கார் வருது பார்... ஹே... இல்ல இல்ல, அது பிங்க் கலர்... பிங்க் இல்லை, பிரவுன்... ஹே... வயலட்....'' - நீங்கள் க்ரோமோலூஷன் பெயின்ட்டிங் செய்யப்பட்ட காரை அடையாளம் காட்ட நினைத்தால், இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கும். ஆம்! கார் உங்களைக் கடந்து செல்வதற்கு முன் பல நிறங்கள் மாறிவிடும்!
இதுபோன்ற பெயின்ட்டுகளை ட்யூபான்ட் (Dupont) நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதன் சென்னை டீலரான சுரேஷிடம் வகைவகையான கார் பெயின்ட்டுகள் பற்றியும் அது தொடர்பான சந்தேகங்களையும் கேட்டோம்.
''ஒரு லிட்டர் க்ரோமோலூஷன் பெயின்ட்டின் விலை 35,000 ரூபாய். ஹோண்டா சிவிக், சிட்டி போன்ற கார்களில் இந்த பெயின்ட்டிங் செய்ய ஒரு லட்ச ரூபாய் வரை ஆகும். சான்ட்ரோ போன்ற சிறிய கார்களுக்கு இந்த மாதிரி பெயின்ட்டிங் செய்தால் 60,000 ரூபாயில் வேலை முடிந்துவிடும். இந்த வகை பெயின்ட்களை பெரும்பாலும் இளைஞர்கள் தங்களது பைக்குகளில் அடிப்பதற்கு வாங்கிச் செல்கின்றனர். ஏனென்றால், இதற்கு மிகக் குறைந்த அளவு பெயின்ட்டே போதுமானது.''
''சாதாரண பெயின்ட்டிங்கில் முழுவதுமாக ஒரு காரின் கலரை மாற்ற வேண்டும் என்றால் எவ்வளவு செலவாகும்? எத்தனை நாளாகும்?''
''கலரை மாற்ற வேண்டுமென்றால், இரண்டு கோட்டிங்குக்கு ஒரு வாரம் ஆகும். செலவைப் பொறுத்தவரை காருக்கு கார் மாறுபடும். ஏனென்றால் சைஸ் மாறுகிறது அல்லவா? தரம் குறைவான பெயின்ட்டுகளை பயன்படுத்தினால் விலை இன்னும் குறைவாக இருக்கும். ஆனால், இது நீடித்து உழைக்காது. போகப் போக கலர் டல்லாகிவிடும்.''
''டெப்லான் கோட்டிங் தேவையா?''
''காரின் மேல் படியும் தூசு, மண் போன்றவற்றால் காரின் நிறம் நாளடைவில் மங்கலாகும். அதைத் தடுக்க பெயின்ட்டுக்கு மேல் ஒரு லேமினேட் கவர் போல இருப்பதுதான் டெப்லான் கோட்டிங். இது வேக்ஸோ, பாலிஷோ அல்ல. இது பெயின்ட்டுக்கு மேல் ஒரு கவர் போல இருக்கும். காரின் நிறம் மங்காமல் பாதுகாத்துக்கொள்ளும்.''
''என் காரை இது எப்படி பராமரிக்கிறது?''
''PTFE (Polytetrafluroethylene), கலவையான இந்த டெப்லானை கார் பெயின்ட்டின் மேல் பூசும்போது காரின் மேல் அழுக்குப் படியாமல் பார்த்துக்கொள்ளும். இது வழுக்கும் தன்மையுடையது. அதனால் இதன் மேல் அழுக்கு ஒட்டாது. இதன் வேதியியல் கலவை, காரின் நிறத்தை மங்கலாக்கச் செய்யும் புற ஊதாக் கதிர்களை (Ultra Violet Rays) காரின் மேல் படாமல் தடுக்கும். மேலும் இது துருப்பிடிக்காமலும் பார்த்துக் கொள்ளும். டெப்லான் கோட்டிங் செய்ய 2,000 ரூபாயில் இருந்து 4,000 ரூபாய் வரை செலவாகும்!''
பிளாஸ்டிக் பிரமிப்பு!
உலகத்தில் எல்லாவற்றையும் நம் விருப்பத்துக்கு ஏற்றாற்போல மாற்ற வேண்டும்என்பதுதான் அனைவரது விருப்பமும். அந்த விருப்பத்துக்கு முற்றிலுமாக வளைந்து கொடுக்கும் பொருள்... பிளாஸ்டிக். காரில் பிளாஸ்டிக் பாகங்கள் அதிகம் இருக்கும் இடம் உள்பக்கம்தான். டேஷ் போர்டு துவங்கி பம்பர் வரை காரில் உள்ள அத்தனை பிளாஸ்டிக் பொருட்களையும் தயாரித்து அதை காரில் பொருத்தித் தரும் நிறுவனம், சென்னை அம்பத்தூரில் உள்ள டி.பி.பாலிமர்ஸ்.
இதன் நிறுவனர் அஜித் சொல்கிறார்-
''பொதுவாக இதுபோன்ற பாகங்களை பைபரில்தான் செய்வார்கள். ஆனால், பைபரை மறுசுழற்சி செய்ய முடியாது. அதுமட்டுமில்லாமல் அதிகமாக மாசு ஏற்படுத்தக்கூடியது. எல்லாவற்றுக்கும் மேல் சுலபமாக உடைந்துவிடும்'' என்றவர், ஸ்கார்பியோ பம்பர் ஒன்றை அப்படியே சூரைத் தேங்காய் அடிப்பது போல கீழே வீசினார். அது எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் அப்படியே இருந்தது.
''இது வெறும் பிளாஸ்டிக் இல்லை. ABS (Acrylonitrile Butadiene Styrene) எனும் பாலிமர் வகையைச் சார்ந்தது. இந்த பாலிமர் கலவை உறுதி, பலம், பிளெக்ஸிபிலிட்டி ஆகிய மூன்றையும் கொண்டது.
இதற்குத் தேவையான மூலப்பொருட்களை ரிலையன்ஸிடமிருந்து வாங்குகிறோம். பாடி ஸ்கர்ட்ஸ், டேஷ் போர்டு, வண்ண வடிவமைப்பு, இன்டீரியர் டிஸைன்ஸ் என அனைத்தையும் உற்பத்தி செய்கிறோம்.
ஹோண்டா சிவிக் காருக்கு வரும் பாடி ஸ்கர்ட்ஸை நீங்கள் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தால், ரூ.1,25,000 ஆகும். எங்கள் தயாரிப்பு என்றால், ரூ.7,500. அதோடு தரமும் அதற்கு நிகராக இருக்கும்'' என்கிறார் அஜித்!
பர... பர... பர்பாமென்ஸ்!
காருக்கு உள்ளேயும் வெளியேயும் அழகுபடுத்துவது போல் இன்ஜினையும் அழகுபடுத்தலாம். இன்ஜின் சீறுவது, சைலன்சர் உறுமுவது என அனைத்து வித்தைகளையுமே செய்ய முடியும். இன்ஜினின் சக்தி 75 bhp என்றால், அதை 100 bhp ஆக மாற்ற முடியும்.
சென்னை வடபழனியில் உள்ள 'ஹை ரெவ்' எனும் கடையில் ஒரு காரைக் கொடுத்தால், ஒட்டுமொத்தமாக காரின் பர்பாமென்ஸை தலைகீழாக மாற்றிவிடுகிறார்கள். இந்த நிறுவனத்தின் உரிமையாளரும் ரேஸ் வீரருமான பாலவிஜய், காருக்குத் தேவையான பர்பாமென்ஸ் பாகங்கள் பற்றி நம்மிடம் விவரித்ததை இங்கே தொகுத்திருக்கிறோம்.
ஏர் பில்டர்
ஏர் பில்டரைப் பொறுத்தவரை இன்ஜினில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. காரிலுள்ள ஏர் பில்டரை எடுத்துவிட்டு, இதைப் பொருத்தினால் போதும். இது போன்ற பர்பாமென்ஸ் ஏர் பில்டர்களின் விலை 2000 ரூபாயில் இருந்து 7000 ரூபாய் வரை ஆகும். இதைப் பொருத்துவதன் மூலம் இன்ஜினின் செயல்பாடு அதிகரிக்கும்.
எக்ஸாஸ்ட் சிஸ்டம்
காருக்குள் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதற்குக் காரணமே எக்ஸாஸ்ட்தான். இந்த எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் பல வகைகள் உள்ளன. இது 7,500 ரூபாயில் இருந்து 40,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுவும் இன்ஜினின் பர்பாமென்ஸை அதிகரிக்கச் செய்யும்.
பர்பாமென்ஸ் சஸ்பென்ஷன் கிட்
பர்பாமென்ஸை அதிகரிக்கும்போது காரின் கிரிப்புக்காக சஸ்பென்ஷன் சிஸ்டத்திலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்ய வேண்டும். காயில் ஸ்பிரிங், காயில் ஓவர் ஸ்பிரிங், டேம்பர்ஸ் என பலதரப்பட்ட ஷாக் அப்ஸார்பர் பாகங்கள் தனித்தனியாகக் கிடைக்கின்றன. இவை 10,000 ரூபாயில் இருந்து 1,00,000 வரை விற்பனைக்குக் கிடைக்கின்றன.
பிரேக் சிஸ்டம்
பர்பாமென்ஸ் அதிகரிக்கும்போது வேகமும் அதிகமாகும். அதனால், காரில் ஏற்கெனவே இருக்கும் பழைய பிரேக்குகள் பயனற்றுப்போகும். வென்டிலேட்டட் டிஸ்க் ரோட்டர், பிரேக் பேட், பர்பாமென்ஸ் காலிப்பர் ஆகியவற்றை மாற்ற வேண்டி வரும். இதற்கு 25,000 ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகும்.
டர்போ சார்ஜர்
இப்போது டர்போ சார்ஜருக்கு வரவேற்பு மிகவும் பலமாக இருக்கிறது. இவை டீசல் கார்களில் கட்டாயமாகிவிட்டது. இதன் மூலம் டீசல் இன்ஜினின் பர்பாமென்ஸ் பெட்ரோல் இன்ஜின் அளவுக்கு இருக்கும். அதே போல், இதை பெட்ரோல் இன்ஜினில் பொருத்தும்போது, அதன் பர்பாமென்ஸ் இன்னும் அதிகமாக இருக்கும்.
டர்போ சார்ஜர்களைப் பொருத்துவதற்கு குறைந்தபட்சம் 75,000 ரூபாயில் இருந்து இரண்டரை லட்ச ரூபாய் வரை செலவாகும்!
சொகுசு சீட்!
காரில் மியூஸிக் சிஸ்டம், டிவிடி பிளேயர், ஏ.ஸி என எத்தனை சொகுசு வசதிகள் இருந்தாலும் நல்ல சீட் இல்லையென்றால், கார் பயணம் அலுப்பாகிவிடும். மாருதி 800 ஆக இருந்தாலும் ஸ்கோடா ஆக்டேவியாவாக இருந்தாலும் காரில் லெதர் சீட்டுகளைப் பொருத்துவதுதான் இப்போதைய டிரெண்ட்.
சென்னையில் லெதர் சீட்டுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் விற்பனை செய்து வருகிறார்கள். ஸ்டான்லி, ஓவியான், ஹை-டன் போன்ற நிறுவனங்கள் லெதர் சீட்டுகள் தயாரிப்பில் சிறந்து விளங்குகின்றன. இதில் ஹை-டன் நிறுவனத்தின் குமாரிடம் லெதர் சீட்டுகள் குறித்துப் பேசினோம்.
''லெதர் சீட்டுகளை காருக்குள் பொருத்தி விட்டால் களைகட்டிவிடும். பென்ஸ்,பிஎம்டபிள்யூ போன்று நம்மூர் கார்களும் சொகுசு கார்களாக மாறிவிடும். இந்த சீட்டுகளை துடைப்பதும் சுத்தம் செய்வதும் சுலபம். தண்ணீர், காபி போன்றவை கொட்டிவிட்டாலும் சீட்டுக்கு எந்தச் சேதமும் ஏற்படாது. நீடித்து உழைக்கும்'' என்றவரிடம்,
''லெதர் சூடு என்பதால் கார் கொஞ்ச நேரம் வெயிலில் நின்றாலும், சீட்டுகள் சூடாகிவிடும் என்கிறார்களே'' என்று கேட்டோம்.
''இது உண்மைதான். நாம் எந்த மாதிரியான லெதர் சீட்டுகளை வாங்குகிறோம் என்பதுதான் முக்கியம். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தோல் நன்றாகப் பதப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டவை. நாப்பா லெதர்தான் மிகவும் தரமானது. இந்த லெதர் சீட்டுகள் வெயிலை உறிஞ்சாது. இவை 12,000 முதல் 55,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன'' என்கிறார் குமார்!

No comments:

Post a Comment