இந்த ஆண்டு கோடை காலம், வழக்கத்தைவிட முன்பே துவங்கி, வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது பள்ளி/கல்லூரிகளுக்கும் விடுமுறை நாட்கள். விடுமுறைக்குச் சொந்த ஊருக்குச் செல்வது, சுற்றுலா செல்வது என பயணத் திட்டங்களை வகுத்திருப்பீர்கள். கோடை காலத்தில் தங்களது வாகனங்களை அவசியம் சிரத்தை எடுத்துக் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், நடுவழியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு, மொட்டை வெயிலில் மெக்கானிக்கைத் தேடி அலையவைத்துவிடும். வாகனத்தில் செய்ய வேண்டிய சின்னச் சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிட்டால், நடுரோட்டில் குடும்பத்தோடு மண்டை காய நிற்க வேண்டியிருக்காது. எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை விரிவாகச் சொல்லியிருக்கிறோம். அதேபோல், பாலீஷ் செய்வது தொடர்பான விஷயங்களும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

கூலிங் சிஸ்டம்
கோ டை காலத்தில் காரின் இன்ஜின் சீக்கிரத்தில் சூடாகிவிடும். காரணம், அனல் காற்றுதான். குளிர் காலத்தில், இன்ஜின் வெப்பத்தை இதன் மீதுபடும் குளிர் காற்று எளிதாக எடுத்துக்கொள்ளும். ஆனால், கோடை காலத்தில் காற்றே சூடாக இருக்கும் என்பதால், இந்த வெப்பப் பரிமாற்றம் மிக மெதுவாகவே நடக்கும். அதனால், காரின் கூலிங் சிஸ்டம் அதிகமாக உழைத்துத்தான் வெப்பத்தைக் குறைக்கும். இங்கு முக்கியமானது, காரின் கூலன்ட் அளவு. பெரும்பாலான கார்களில் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளிகளிலோ கூலன்ட் மாற்ற வேண்டும்.
கார் நின்றிருந்த இடத்துக்குக் கீழே பச்சை நிற திரவம் வழிந்திருந்தது என்றால், அது கூலன்ட் லீக் பிரச்னைதான். உடனடியாக எங்கிருந்து லீக் வருகிறது என்பதைக் கண்டுபிடித்துச் சரிசெய்துவிடுங்கள்.

கூலன்ட் மாற்றி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், கோடை காலப் பயணங்களைத் துவக்குவதற்கு முன்பே கூலன்ட்டை மாற்றிவிடுங்கள். பெரும்பாலும் கூலன்ட் ஆயில் 50 சதவிகிதம், தண்ணீர் 50 சதவிகிதம் என்ற அளவில்தான் இருக்கும். இன்ஜின் சூடாக இருக்கும்போது கூலன்ட் மாற்ற முயற்சிக்கக் கூடாது. காரின் ரேடியேட்டரில் ஏதாவது அடைப்பு இருக்கிறதா என்பதையும் பார்த்துவிடுங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரத்யேக மெக்கானிக் அல்லது சர்வீஸ் சென்டரில், ரேடியட்டரை முழுவதும் 'ஃப்ளஷ்’ செய்யச் சொல்லலாம். இதனால், உள்ளே தங்கியிருக்கும் அழுக்குகள், துகள்கள் போன்றவை வெளியே வந்துவிடும். லீக் ஏதாவது இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். ரேடியேட்டரை 'ஃப்ளஷ் / ட்ரைன்’ செய்யும்போது, அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர்களில் செய்வதே நல்லது.
காரின் கூலிங் சிஸ்டத்தில் இருக்கும் ஹோஸ் பைப்புகளை சோதனையிடுவது அவசியம். ஏனெனில், இன்ஜின் வெப்பத்தினாலும், தொடர்ச்சியான அதிர்வுகளாலும், இந்த பைப்புகளை இணைத்திருக்கும் கிளாம்ப் உருகியிருக்கும் வாய்ப்பு உண்டு.
டயர்
கோடையில் பெரும்பாலும் நெடுஞ்சாலைப் பயணங்களைத்தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்போது மரங்களையும் வெட்டிவிட்டார்கள். அதனால், தார்ச்சாலை வெயிலில் காய்ந்துகொண்டிருக்கும். இதில், நம் காரின் டயர்கள் படும்போது அதிகமாகத் தேயும் என்பதுடன், தொடர்ந்து அதிக வெப்பத்தில் இயங்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல், நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து அதிக வேகங்களில் கார் இயங்க வேண்டியிருக்கும் என்பதால், டயர்களில் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு மேலும் அதிகமாகும்.

வெப்பத்தினால் டயர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது என்றாலும், அந்த பாதிப்புகளால் ஏற்படும் டயர் வெடிப்பு, தேய்தல் போன்றவற்றைத் தடுக்கலாம். இதற்குத் தேவை முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். கடைசியாக டயர்களை இடம் மாற்றிப் பொருத்தி 10,000 கி.மீ தாண்டியிருந்தால், உடனடியாக டயர்களை மாற்றிப் பொருத்துங்கள்.
வெயில் காலத்தில் டயர்களின் காற்றழுத்தத்தை அதிகாலையில் சோதிப்பதுதான் நல்லது. காரணம், பகலில் வெளியில் உள்ள வெப்பம் காரின் டயரில் உள்ள அழுத்தத்தை அதிகரிக்கும். வெளியில் இருக்கும் வெப்பம் 10 டிகிரி அதிகரித்தால், டயரின் அழுத்தம் 1 முதல் 2 றிஷிமி அதிகரிப்பதாக அமெரிக்காவின் ரப்பர் தயாரிப்பாளர்கள் குழு சொல்கிறது.
இதனால், டயர் சாதாரண நிலையில் இருக்கும்போது அழுத்தத்தைச் சோதிப்பதே சரியாக இருக்கும். டயர்களில் காற்றழுத்தம் மிகச் சரியானதாக இருக்க வேண்டும். குறைந்த காற்றழுத்தம் இருந்தால், டயரின் பக்கவாட்டுப் பகுதிகளும் வளைந்து சாலையில் உரசும். இதனால், மிகவும் அதிகமான வெப்பம் உருவாவதோடு மட்டுமல்லாமல், தேய்மானம் அதிகரித்துவிடும். தேவைக்கு அதிகமான காற்றழுத்தம் இருந்தால், டயரின் நடுப் பகுதி மட்டும் சாலையில் உரசும். இதனால், மிக வேகமாக ட்ரெட்டுகள் தேய்ந்து க்ரிப் குறைந்துவிடும்.
முக்கியமாக, ஸ்பேர் டயரையும் சரியான காற்றழுத்தத்தில் உள்ளதா என்று சோதித்துவிடுங்கள். மோசமான நிலையில் இருந்தால், ஸ்பேர் டயர் இருந்தும் உபயோகம் இல்லை.
அனைத்து டயர்களின் ட்ரெட்டுகளும் சீராக இருக்க வேண்டும். அதேபோல், வீல்களின் அலைன்மென்ட்டையும், பேலன்ஸையும் செக் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால், ஏதாவது ஒரு டயர் மட்டும் மிக அதிகமாகத் தேய்ந்துவிடும்.
பேட்டரி
பேட்டரியை எதற்குத் தனியாகக் கவனிக்க வேண்டும்? என்று அசட்டையாக இருக்கக் கூடாது. கோடையில் சாதாரணமாகவே காற்றில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனுடன் இன்ஜின் கம்பார்ட்மென்டில் இருக்கும் வெப்பமும் சேர்ந்து பேட்டரியைக் காலி செய்துவிடும். மழைக் காலத்தில்தான் பேட்டரி ரிப்பேர் ஆகிறது என நினைக்கிறோம். ஆனால், இதற்குக் காரணமே கோடை காலத்தில் பேட்டரியைச் சரியாகக் கவனிக்காமல் இருப்பதுதான் என்கிறார்கள் ஆட்டோமொபைல் வல்லுநர்கள்.
பேட்டரி மட்டும் இல்லாமல், சார்ஜிங் சிஸ்டத்தில் பிரச்னை இருந்தாலும் சிக்கல்தான். வோல்டேஜ் ரெகுலேட்டரில் பிரச்னை இருந்தால்கூட, அதிகமாக சார்ஜ் ஏறி பேட்டரி முழுவதும் காலியாகிவிடும்.

பேட்டரி கூடுதல் வெப்பத்தில் இயங்க வேண்டியிருப்பதால், பேட்டரிக்குள் இருக்கும் திரவம் ஆவியாகிக்கொண்டே இருக்கும். பேட்டரியில் டிஸ்டில்டு வாட்டர் அளவு குறைந்து இருந்தால், உடனடியாக 'டாப்-அப்’ செய்துவிட வேண்டும். வெயில் காலத்தில் பேட்டரிக்குள் நடக்கும் வேதியியல் வினைகள் அதிகமாக இருக்கும். எனவே, பேட்டரி வேகமாக சார்ஜ் ஆகும். அதனால், பேட்டரி சாதாரணமாக சார்ஜ் ஆகிறதா அல்லது விரைவாக சார்ஜ் ஆகிறதா என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது, பின்னால் வரப்போகும் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றும்.
பல சமயம் நாம், பேட்டரி மீது படிந்திருக்கும் தூசியை அப்படியே விட்டுவிடுவோம். தூசி ஓரளவுக்கு மேல் படிந்தபிறகு மின்சாரத்தைக் கடத்த ஆரம்பித்துவிடும். இதனால், சார்ஜ் வீணாகும். எனவே, தூசியைச் சுத்தம் செய்வது அவசியம். பேட்டரி டெர்மினல்களில் துருப்பிடித்திருந்தால், அவை 'இன்சுலேட்டர்’ ஆக மாறிவிடும். இதனால், மின்சாரம் கடத்தப்படும் திறன் குறைந்துவிடும். எனவே, இதையும் சுத்தம் செய்துவிடுங்கள்.
கார் பேட்டரியைச் சுத்தம் செய்வதற்கு முன்பு கையில் வாட்ச், மோதிரம் போன்றவற்றை அகற்றிவிடுங்கள். ஃபுல் ஸ்லீவ் சர்ட் அல்லது க்ளோவ்ஸ் அணிந்துகொண்டு செய்யலாம். கார் பேட்டரியில் கை வைப்பதற்குப் பயமாக இருந்தால், சர்வீஸ் சென்டரில் எப்படிச் செய்கிறார்கள் எனப் பார்த்துக் கற்றுக்கொண்டு, நீங்களே செய்யலாம்.
ஏ.சி.
வெளியே கடுமையாக வெயில் அடித்தாலும் காருக்குள் ஏ.சி இருப்பதால், கோடை காலப் பயணம் இனிதாக இருக்கிறது. ஆனால், இந்த மாதிரியான சமயத்தில் ஏ.சி திடீரென செயலிழந்து போனால், என்ன ஆகும் என நினைத்துப் பாருங்கள். ஜன்னலை மூடிவைத்தும் ஓட்ட முடியாது; ஜன்னலைத் திறந்து வைத்தாலும் அனல் காற்று அடிக்கும். எனவே, கோடையில் பயணத்தைத் துவக்குவதற்கு முன்பு, காரின் ஏ.சி சிஸ்டத்தை முழுமையாக 'செக்-அப்’ செய்துவிடுவது நல்லது.
கார் ஏ.சி மோசமாக வேலை செய்கிறது என்பதற்கான அறிகுறி, வெளியே இருக்கும் தட்ப வெப்பநிலையைவிட, 10 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பநிலையை காருக்குள் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் இருப்பதுதான். காரின் ஏ.சி வேலை செய்கிறதா, இல்லையா என்ற விஷயத்தை மட்டுமே பயன்படுத்தும் நம்மால் செய்ய முடியும். ஏனென்றால், காரின் ஏ.சி சிஸ்டம் என்பது கொஞ்சம் சிக்கலான தொழில்நுட்பம். உள்ளே பெரிய பிரச்னையே இருந்தாலும், வெளியே ஒன்றையும் கண்டுபிடிக்க முடியாது.

சில கார்களில் ஏ.சியில் இருக்கும் பெல்ட்தான், இன்ஜின் கூலிங் சிஸ்டத்தில் இருக்கும் வாட்டர் பம்ப்பையும் இயக்குகிறது. இந்த பெல்ட் நல்ல நிலையில் இருக்கிறதா? ஏ.சி ரெஃப்ரிஜெரன்ட் திரவம் தீர்ந்துவிட்டதா? எங்காவது கசிவு இருக்கிறதா? ரப்பர் ரிங்குகள் நல்ல நிலைமையில் இருக்கிறதா என்பதையெல்லாம் நாமாகச் செய்ய முடியாது. எனவே, பிரத்யேக கார் ஏ.சி மெக்கானிக்கிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்வதே நல்லது.
இன்டீரியர்
என்னதான் எல்லா காரிலும் ஏ.சி இருந்தும், கோடை காலத்தில் காருக்குள் ஏறி உட்கார்ந்து ஏ.சி முழு வேகத்தில் இயங்க ஆரம்பிப்பதற்கு முன்பே, நமக்கு வியர்த்துக் கொட்டிவிடும். மேலும், கடும் வெயிலில் கார் நிற்கும்போது, எந்தக் காரணத்தைக் கொண்டும் காருக்குள் குழந்தையையோ, செல்லப் பிராணியையோ, முதியவரையோ விட்டுச் செல்லக் கூடாது. நம் உடலைவிட இவர்களுடைய உடல் மிக வேகமாக சூடாகும். அதனால், மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடும். உதாரணத்துக்கு, கோடை காலம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில், காரின் டேஷ்போர்டு மிக அதிக வெப்பத்துடன் இருக்கும்.
தொடர்ச்சியாக அதிக நேரம் வெயிலில் நின்ற காரின் ஸ்டீயரிங் வீலைத் தொடுவது எவ்வளவு பெரிய தண்டனை என்பது உங்களுக்குத் தெரியும். சரி, கோடை காலத்தில் காருக்குள் வரும் வெப்பத்தைக் எப்படிக் கட்டுப்படுத்துவது?

முதலில், காருக்குள் ஊடுருவும் சூரிய வெளிச்சத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு, காரை நிழலில் நிறுத்தலாம். ஆனால், எல்லா இடங்களிலும் நிழல் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதனால், வெயிலில் நிறுத்தும்போது விண்ட் ஷீல்டு கவரை காரின் உள்பக்கம் பொருத்தலாம். இல்லை என்றால், துணியால் காரின் ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டு போன்றவற்றை மூடி வைக்கலாம். இதுபோன்று செய்யும்போது வெப்பத்தைக் குறைப்பதோடு அல்லாமல், அதிக வெப்பத்தினால் இந்த பிளாஸ்டிக்ஸ் உருகுவதையும் குறைக்க முடியும். உருகிய பிளாஸ்டிக்ஸ் வாசனைதான் சிலருக்குக் காரில் ஏறியதும் தலைசுற்றுவதற்குக் காரணம். சிலருக்கு இந்த வாசனையே அலர்ஜி!
இப்போது சன் ஸ்க்ரீன் ஒட்ட முடியாது என்பதால், விண்டோ ஷேட் வாங்கிப் பொருத்தலாம். ஆனால், வெளியே என்ன நடக்கிறது என்பதை மறைக்கும் அளவுக்கு இருக்கும் ஷேடுகளைப் பயன்படுத்த வேண்டாம்.
அதிக நேரம் வெயிலில் நின்ற காரைத் திறந்தவுடன் ஏறி அமர்ந்துகொள்ளக் கூடாது. சிறிது நேரம் உள்ளே இருக்கும் அனல் காற்றை வெளியேறவிட்டு, அமரலாம். அப்போதும் காரினுள் அனல் பறக்கத்தான் செய்யும். இது மாதிரியான சமயங்களில் ஏ.சி-ஐ முழுவதுமாக செட் செய்துவிட்டு ஜன்னல்களை மூடிவிடுவோம். இதனால் எந்த உபயோகமும் இல்லை. காரில் ஏறியதும் எல்லா ஜன்னல்களையும் திறந்துவைத்துவிட்டு, இன்ஜினை ஆன் செய்து ஏ.சி ஃபேனை மட்டும் அதிகபட்ச வேகத்தில் வைத்தால், ஒருசில நிமிடங்களில் காருக்குள் இருக்கும் வெப்பம் குறைந்துவிடும். இப்போது ஜன்னல்களை மூடிவிட்டு ஏ.சி-ஐ ஆன் செய்தால், உடனடி பலன் கிடைக்கும். பிறகு, பயணத்தைத் தொடரலாம்.
கலரைக் காப்பாற்றுவோம்!
கார், பைக்கின் அப்பீலே வண்ணம்தான். அது மங்கினால், மிகப் பழைய வாகனம் போலத் தோற்றம் அளிக்கும். காரின் வண்ணத்துக்கு எதிரி, வெயில் மற்றும் பறவைகளின் எச்சம். இந்த இரண்டில் இருந்தும் பாதுகாத்துவிட்டால், காரின் அழகு குலையாது. மெட்டாலிக் பெயின்ட் பூசப்பட்ட வாகனங்களின் பளபளப்பு குறைந்தால், வாகனத்தின் மதிப்பு குறையும்.

அதேபோல், பயணத்தின்போது போக்குவரத்து நெரிசலால் அல்லது வேறு காரணங்களால் காரில் ஏதாவது கீறல்கள் விழுந்தால், அதை அப்படியே நீண்ட நாட்களுக்கு விட்டுவிடக் கூடாது. ஏனெனில், பெயின்டின் லேயர்கள் கடந்து தகடுவரை கீறல் பாய்ந்திருந்தால், காற்றின் ஈரப் பதத்தால், அந்த இடத்தில் துருப்பிடித்து, அது அப்படியே பரவ ஆரம்பிக்கும். அதனால், காரின் வண்ணத்துக்கு ஏற்ற நெயில் பாலீஷ் காரில் இருப்பது நல்லது. கீறல் விழுந்த இடத்தில் நெயில் பாலீஷைத் தற்காலிகமாகப் பயன்படுத்துவது, துருப்பிடிப்பதில் இருந்து காக்கும்.
மேலும், காரை வெயிலில் வாட்டர் வாஷ் செய்யக் கூடாது. நிழலில் வைத்துச் சுத்தம் செய்வதுதான் சரியான முறை. அதேபோல், வெயிலில் பயணித்த காரின் மேற்பரப்பு மிகச் சூடாக இருக்கும். அந்தச் சமயத்தில் குளிர்ந்த நீரை மேலே ஊற்றினால், அது பெயின்டைப் பாதிக்கும்.
பிரேக் டவுன்

.jpg)







ஒயரிங்
காரில் தீ விபத்து ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், மின் கசிவு. இது, ஒயரிங் சரியாக இன்ஷ§லேஷன் செய்யப்படாமல் இருந்தால் அல்லது தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், வெப்பத்தில் இளகி மின் கசிவு ஏற்பட்டு பெரும்பாலான விபத்துகள் நடப்பதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, எலெக்ட்ரிக்கல் விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அதுவும் வெயில் காலங்களில், பிளாஸ்டிக் பாகங்கள் வெப்பதால் உருகுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், கூடுதல் கவனம் அவசியம். பொதுவாக, கம்பெனி ஃபிட்டிங்கில் இருந்தாலும் சரி; அல்லது தனியாரிடம் கொடுத்து ஒயரிங் பணிகள் செய்திருந்தாலும் சரி. வெயில் காலத்துக்கு முன்பே ஒருமுறை, அனைத்து எலெக்ட்ரிகல் பாகங்களையும் சர்வீஸ் சென்டரில் கொடுத்து செக் செய்துவிடுவது நல்லது. தனியாரிடம் கொடுத்து ஆடியோ சிஸ்டம், எக்ஸ்ட்ரா லைட்ஸ் போன்றவை பொருத்தியிருந்தால், முழுமையாக ஒருமுறை சோதனை செய்துவிடுங்கள்.

காரின் வண்ணம் என்பது - பிரைமர், பிரைமர் கோட், பெயின்ட், கிளியர் கோட் ஆகிய நான்கு லேயர்களைக்கொண்டது. காரின் வண்ணம் வெயில், மழை, புழுதி, சேறு மற்றும் பறவை எச்சங்களால் அதன் உண்மைத் தன்மை மறைந்து, மங்கலாகக் காட்சி அளிக்கும். இதை சீராக்கத்தான், பாலீஷ் செய்யப்படுகிறது. கார் பாலீஷிங் எப்படிச் செய்யப்படுகிறது? அதை, கோவையில் ப்ளூ ரெயின் டீட்டெயிலிங் சென்டர் வைத்துள்ள பிரபுவிடம் கேட்டபோது, செய்முறையிலேயே விளக்கினார்.
காருக்கு பாலீஷ் எப்படிச் செய்கிறார்கள்?
பாடி வாஷ்
.jpg)
பாலீஷிங் வேலைக்கு வந்துள்ள காரை, முதலில் 'கம்ப்ரஸர் ஏர் பிரஷர்’ மூலம் காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறம் உள்ள மண் மற்றும் தூசுகளை அகற்றுகிறார்கள். பிறகு, கம்ப்ரஸர் பிரஷரில் தண்ணீரைக்கொண்டு, காரின் வெளிப்புறம் மற்றும் இன்ஜின் பகுதிகளைச் சுத்தப்படுத்துகிறார்கள். அதன் பிறகு, ஃபோம் ஆயில் மற்றும் தண்ணீரைச் சரியான அளவில் கலந்து, காரின் வெளிப்புறம் மற்றும் இன்ஜின் பகுதிகளில் தெளித்து, துணியால் காரை நன்றாகச் சுத்தம் செய்கிறார்கள். மீண்டும் தண்ணீரைத் தெளித்து ஃபோம்-ஐ அகற்றி விடுகிறார்கள். இறுதியாக ஈரத்தை ஏர் பிரஷர் மூலம் உலரவைக்கிறார்கள். பிறகு, உலர்ந்த துணியால் ஈரம் இல்லாமல் சுத்தம் செய்ததும், பாடி வாஷ் ஓவர்.
சாண்டிங்
காரை பாடி வாஷ் செய்த பின்புதான், பாலீஷிங்கின் முதல் கட்டம். பாலீஷிங் செய்ய எமரி 2000 க்ரிட் பேப்பர் மற்றும் தண்ணீர் கலந்த கார் ஷாம்பூ முக்கியப் பொருட்களாக இருக்கின்றன. கார் ஷாம்பூவை காரின் மேற்பரப்பில் ஸ்பிரே செய்து, எமரி பேப்பர் கொண்டு அழுத்தம் கொடுக்காமல் மெள்ளத் துடைக்கிறார்கள். இப்படிச் செய்யும்போது, காரில் ஒட்டியுள்ள சிறு துகள்கள், தூசிகள், சின்ன சிராய்ப்புகள் எல்லாம் மறைந்துவிடுமாம். ஆனால், காரின் வண்ணம் சற்றும் மங்கலாகக் காட்சி தருகிறது. இதன் பின்பு, அடுத்த கட்டத்துக்குச் செல்கிறது கார்.

ரப்பிங் பாலீஷ்
வெள்ளை நிறத்தில் இருக்கும் ரப்பிங் காம்பொனென்ட் சொலிஷன் மற்றும் 'உல்லன் பேடு’ பொருத்திய கார் பாலீஷர் கொண்டு மிதமான சூட்டில் 'பாஃப்பிங்’ செய்யப்படுகிறது. இந்த ரப்பிங் காம்பொனென்டை காரின் மேற்பரப்பில் தெளித்துவிட்டு, உல்லன் பேடு பொருத்திய பாலீஷர் மிஷினைக் கொண்டு, மெதுவாக கோணம் மாறாமல் பாலீஷ் செய்கிறார்கள். இப்படிச் செய்யும்போது, காரின் கிளியர் கோட் மேற்பரப்பில் உள்ள சிராய்ப்புகள் நீங்கி, சற்று பளபளப்புத் தன்மைக்கு கார் மாறுகிறது.
க்ளேஸ் பாலீஷ்
இதற்கு சாம்பல் நிறத்தில் இருக்கும் பாலீஷிங் சொல்யூஷன் மற்றும் 'ஃபோம் பேடு’ களத்துக்கு வருகிறது. ஆனால், இதில் ஃபோம் பேடு சற்று தடிமனாக இருப்பதால், சிறிதளவில் அழுத்தம் கொடுத்து, பேடு பொருத்திய பாலீஷர் மிஷினைக் கொண்டு மெதுவாக கோணம் மாறாமல் சற்று வெப்பத்தைக் கூட்டி பாலிஷ் செய்கிறார்கள். இதில், காரின் மேற்பரப்பு வழவழப்பான நிலைக்கு மாறுகிறது. அதாவது, காரின் மீது கை வைத்தால் வழுக்குகிறது.
சீலன்ட் பாலீஷ்
பாலீஷிங்கில் விலை அதிகமான பொருள், இந்த சீலென்ட். மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சொல்யூஷன், காரின் பெயின்டுக்குப் பாதுகாப்புக் கவசமாக, காரின் வெளிப்புறத்தில் மேலும் ஒரு லேயரை உருவாக்குகிறது. மீண்டும் ஃபோம் பேடு உதவியைக் கொண்டு பாலீஷிங் செய்யப்படுகிறது. இதன் மூலம் கார் பெயின்ட்டின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. காரின் பெயின்ட்டை சூரிய வெப்ப கதிர்களில் இருந்து காக்கிறது. பறவை எச்சங்கள் காரின் பெயின்ட்டை அரிக்காமலும் பாதுகாக்குமாம்.

வேக்ஸ் பாலீஷ்
காரின் கலர் ஷைனிங்காகக் காட்சி தர, இந்த வேக்ஸ் பாலீஷிங் மேற்கொள்ளப்படுகிறது. ஒருவர் வேக்ஸ் கொண்ட சின்ன துணியால் காரின் மேற்பரப்பில் வட்ட வடிவில் தேய்க்க... மற்றொருவர் மைக்ரோ ஃபைபர் துணியால் துடைத்துக்கொண்டு வருகிறார். இது முடிந்ததும் கார் மின்னுகிறது.
வினைல் பிளாஸ்டிக் டிரெஸ்ஸிங்
காரின் வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் வினைல் பாலிஷை கொண்டு பளபளப்பு ஆக்கப்படுகிறது. காரின் கண்ணாடிகளையும் பிரத்யேக கிளீனரைக் கொண்டு சுத்தப்படுத்துகின்றனர். இந்த பாலீஷிங் முறையாகச் செய்தால், காரின் பளபளப்புத் தன்மை குறைந்தது ஒரு வருட காலம் இருக்குமாம்.
இன்டீரியர் பாலீஷிங்
காரின் உட்பகுதியில் இருக்கும் டேஷ் போர்டு மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்களை 'கம்ப்ரஷர் ஏர் பிரஷர்’ கொண்டு மண் மற்றும் தூசியை அகற்றுகிறார்கள். பின்பு, ஒரு கிளீனிங் சொல்யூஷன் மற்றும் சற்று தடினமான பிரஷ்ஷைக் கொண்டு துடைத்து அழுக்கை அகற்றி, துணியால் துடைக்கும்போது, காரின் பிளாஸ்டிக் பொருட்கள் சுத்தமாகின்றன. இத்தனை செயல்பாடுகளும் நடந்து முடிய, சுமார் ஆறு மணி நேரம் ஆகிறது.
கார் பராமரிப்பில் செய்யக் கூடாதவை
வீட்டில் பயன்படுத்தும் சோப் பவுடரையோ, சோப் கட்டிககளைக் கொண்டோ காரைச் சுத்தப்படுத்தக் கூடாது. டர்க்கி டவல் கொண்டு காரைச் சுத்தம் செய்யக் கூடாது. உப்புத் தன்மைகொண்ட நீரை காரைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தக் கூடாது.
எவ்வளவு செலவு/நேரம்?
டெஃப்லான் கோட்டிங்
ஸ்கூட்டர்
350 (1 மணி நேரம்)

பைக்ஸ்
400 (2 மணி நேரம்)

ஹேட்ச்பேக் கார்
2,800 (5 மணி நேரம்)

எஸ்யூவி
3,800 (6 மணி நேரம்)

சீலன்ட் கோட்டிங்
ஹேட்ச்பேக் கார்
3,500 (6 மணி நேரம்)

எஸ்யூவி கார்
4,500 (8 மணி நேரம்)

ஹீட் அப்ஸார்பிங் விண்ட்ஷீல்டு
பெரும்பாலான விலை உயர்ந்த கார்கள் இப்போது, 'ஹீட் அப்ஸார்பிங் விண்ட் ஷீல்டு’ எனும் விஷேச கண்ணாடியைக் கொண்டிருக்கின்றன. சூரிய வெப்பம் காருக்குள் ஊடுருவாமல் தடுப்பதில் சன் கன்ட்ரோல் ஃபிலிம் அளவுக்கு இது சிறப்பாகச் செயல்படாது என்றாலும், கோடை காலத்தில் ஓரளவுக்கு நன்மையைத் தரும். இந்த வகை ஸ்பெஷல் விண்ட் ஷீல்டுகளால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

முதலில் காருக்குள் வரும் சோலார் வெப்பம் குறைகிறது. இதனால் ஏ.சி பயன்பாடு குறையும் என்பதால், சக்தியை மிச்சப்படுத்தலாம். மைலேஜும் கொஞ்சம் அதிகரிக்கும். காருக்குள் வரும் அல்ட்ரா-வயலெட் மற்றும் இன்ஃப்ரா ரெட் கதிர்களும் ஓரளவுக்கு இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வகை விண்ட் ஷீல்டு பயன்படுத்தும்போது, கண்கள் கூசுவதும் குறைகிறது. 1960-களில் இருந்தே இந்த வகைக் கண்ணாடி பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கார்களில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. சட்டப்படி இது சன் கன்ட்ரோல் ஃபிலிம் கிடையாது என்பதால், கார்களில் இந்த வகை கண்ணாடி இருப்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும், குளிர்காலத்தில் காருக்குள் இருக்கும் வெப்பத்தையும் இது வெளியே கடத்தாது. எனவே, இது ஆண்டு முழுவதும் பயன்படும். நம் நாட்டில், ஹோண்டா அமேஸிலும், சில உயர் ரக கார்களிலும் இந்த ஹீட் அப்ஸார்பிங் விண்ட் ஷீல்டு பொருத்தப்பட்டு விற்பனையாகிறது.
கார் டீட்டெய்லிங்... கவனிக்க...
கோடை காலத்துக்கு என்று காரில் தனியாக டீட்டெயிலிங் வேலைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் போலவே வேக்ஸ், பாலீஷ் போட்டு வந்தாலே போதும். உங்களுடையது புத்தம் புதிய கார் என்றால், இன்னும் பெயின்ட் ப்ரொடெக்ஷன் கோட்டிங் கொடுத்திருக்க மாட்டார்கள். எனவே, கோடை காலம் துவங்குவதற்கு முன்பே காருக்கு பெயின்ட் ப்ரொடெக்ஷன் கோட்டிங் கொடுத்துவிடுங்கள். பழைய காராக இருந்தாலும் இதுநாள் வரை இந்த கோட்டிங் கொடுக்கவில்லை என்றால், உடனே செய்துவிடுங்கள். வெயில் காலத்தில் காரின் பெயின்ட் வண்ணம் மங்குவதை இது பெரிதும் தடுக்கும். காருக்கு பெயின்ட் ப்ரொட்டெக்ஷன் கோட்டிங் செய்ய 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாய் வரை ஆகும்.









சம்மர் பைக் டிப்ஸ்









No comments:
Post a Comment